ஸிஹ்ர் ஓர் ஆய்வு9

ஸிஹ்ர் ஓர் ஆய்வு

சூனியத்தின் மூலம் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்த முடியும் என்பதை ஒரு வாதத்துக்கு ஒப்புக் கொண்டாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைத்திருக்க முடியாது. அப்படிக் கூறும் ஹதீஸ்கள் எந்த நூலில் இடம் பெற்றிருந்தாலும் அது பொய்யான செய்தி தான் என்பதற்கு நாம் எடுத்து வைத்த ஆதாரங்கள் வருமாறு:

முதல் வாதம்

மனிதர்களை நல்வழிப்படுத்துவதற்காக மனிதர்களில் இருந்தே அல்லாஹ் தூதர்களை அனுப்புகிறான். அவர்கள் எல்லா வகையிலும் மனிதர்களாக இருந்ததால் இறைவனின் தூதர்கள் என்று மக்கள் நம்பவில்லை. மக்கள் நம்புவதற்காக மனிதனால் சாத்தியமாகாத சில அற்புதங்களை இறைவனின் தூதர்கள் என்பதற்கு உரிய சான்றுகளாக இறைவன் கொடுத்தனுப்பினான்.

மனிதர்கள் செய்ய முடியாத இந்தக் காரியங்களைச் செய்து காட்டுவதைத் தான் இறைத்தூதர் என்பதற்குச் சான்றாக அல்லாஹ் வழங்கினான் என்று இறைத் தூதர்கள் வாதிட்டனர்.

மனிதனுக்குச் செய்ய முடியாத ஒரு காரியத்தை சூனியக்காரர்களும் செய்தால் இறைத் தூதர்களின் அற்புதம் அர்த்தமற்றுப் போய்விடும். அற்புதம் செய்த உம்மையே அதிசயமான முறையில் மனநோயாளியாக்கி விட்டார்களே என்ற விமர்சனம் நபிமார்களை நோக்கி எழும்.

இந்தக் காரணத்தினால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்திருக்க முடியாது.

இரண்டாவது வாதம்

தாம் செய்ததை இல்லை என்று மறுக்கும் அளவுக்கு நபிகள் நாயகத்தின் மனநிலை பாதிப்பு இருந்தது என்று சூனியம் பற்றிய ஹதீஸ்கள் கூறுகின்றன.

இப்படி இருந்தால் மனநிலை பாதிக்கப்பட்டவர் இறைத் தூதர் என்று கூறுவதை மக்கள் ஏற்க மாட்டார்கள். மன நிலை பாதிப்பின் காரணமாக தன்னை இறைத் தூதர் என்கிறார். இவராக எதையோ சொல்லி விட்டு இறை வேதம் என்கிறார் என்ற எண்ணம் தான் மக்களிடம் ஏற்படும்.

இதனால் இஸ்லாத்தின் வளர்ச்சி அப்போதே தடைப்பட்டிருக்கும். ஆனால் அப்படி ஏது நடக்கவில்லை என்பதில் இருந்தே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எல்லா நேரத்திலும் மிகத் தெளிவான சிந்தனையுடன் இருந்துள்ளனர் என்பது உறுதியாகிறது.

இறைத் தூதர் என்று நிரூபிப்பதற்காக அற்புதங்களை வழங்கி அருள் புரிந்த இறைவன் இறைத் தூதரின் மனநிலையைப் பாதிக்கச் செய்து இஸ்லாத்தின் பால் வராமல் மக்களை விரட்டியடிக்க மாட்டான்.

எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டிருக்க முடியாது என்பது உறுதி.

மூன்றாவது வாதம்

இறை வேதத்தை இறை வேதம் என்று மக்கள் நம்புவதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை எழுதப்படிக்கத் தெரியாதவர்களாக்கி அவர்கள் மூலம் மிக உயர்ந்த இலக்கியத் தரத்தில் வேதத்தை வழங்கினான். (பார்க்க திருக்குர்ஆன் 29:48) அப்படி இருக்கும் போது வேதத்தில் சந்தேகம் ஏற்படுத்தும் வகையில் அவர்களின் மன நலம் பாதிக்கும் எந்த நிலையையும் ஏற்படுத்த மாட்டான் என்பதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டதை நாம் மறுக்கிறோம்.

நான்காவது வாதம்

நபிகள் நாயகத்தின் உள்ளத்தைப் பலப்படுத்திடவே குர்ஆனை சிறிது சிறிதாக அருளினோம் என்று அல்லாஹ் கூறுகிறான் (திருக்குர்ஆன் 25:32)

ஒட்டு மொத்தமாக குர்ஆன் அரூளப்பட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்த போதும் அதை இறைவன் நிராகரிக்கிறான். ஒட்டு மொத்தமாக அருளினால் உள்ளத்தில் பலமாகப் பதியாது என்பதையே காரணமாகக் கூறுகிறான். இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உள்ளத்தைப் பலப்படுத்துவதன் மூலமே குர்ஆன் பாதுகாக்கப்பட்டதாக அல்லாஹ் கூறுவதற்கு முரணாக மேற்கண்ட ஹதீஸ்கள் அமைந்துள்ளன. எங்கோ ஒருவன் இருந்து கொண்டு ஆட்டிப் படைத்து இல்லாததை இருப்பதாகக் கருதும் அளவுக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உள்ளம் பலவீனமாக இருந்தது என்று இந்த ஹதீஸ்கள் கூறுகின்றன. எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்படவே முடியாது.

ஐந்தாவது வாதம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைத் தூதர் அல்ல என்று விமர்சனம் செய்த எதிரிகள் அவர்களைப் பைத்தியம் என்றும் சூனியம் வைக்கப்பட்ட்வர் என்றும் கூறினார்கள். ஆனால் இவ்வாறு கூறுவோர் அநியாயக்காரர்கள் என்று அல்லாஹ் மறுக்கிறான். சூனியம் செய்யப்பட்டவர் என்று எதிரிகள் விமர்சனம் செய்த போது அல்லாஹ் அதைக் கண்டித்திருக்கிறான் என்றால் அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட் முடியாது என்பது விளங்கவில்லையா? குர்ஆனுடன் நேரடியாக மோதுவதால் நபிகள் நாயகத்துக்குச் சூனியம் செய்யப்பட்டதாகக் கூறும் ஹதீஸ்கள் பொய்யானவை என்பது உறுதி.

ஆறாவது வாதம்

திருக்குர்ஆனை அல்லாஹ் பாதுகாப்பதாகக் கூறுகிறான். எதிரிகள் சந்தேகம் கொள்ள இடமில்லாத வகையில் பல ஏற்பாடுகளையும் அல்லாஹ் செய்திருக்கிறான்.

இந்த நிலையில் நபிகள் நாயகத்துக்கு மன நோய் ஏற்பட்டால அந்தப் பாதுகாப்பு உடைந்து விடுகிறது. அவர்களின் உள்ளம் தெளிவற்றதாக ஆகிவிடுகிறது. பாத்திரம் ஓட்டையாகி விட்டால் ஒழுகத் தான் செய்யும் என்று தான் மக்கள் கருதுவார்கள். அந்த நிலையை இறைவன் ஏற்படுத்த மாட்டான் என்பதால் இது பொய்யான செய்தியாகும்

இப்படி ஆதாரங்களை எடுத்துக் காட்டியே சூனியம் பற்றிய ஹதீஸ்களை நாம் மறுத்துள்ளோம். இவற்றை மீண்டும் முழுமையாக வாசிக்க இந்த விளக்கத்தைப் பார்க்கவும்.

இந்த வாதங்களில் சிலவற்றுக்கு மறுப்பு என்ற பெயரில் இஸ்மாயீல் சலபி தெரிவித்த அனைத்துமே அபத்தமாக அமைந்துள்ளதையும் இத்தொடரில் நாம் நிரூபித்துள்ளோம்.

சூனியம் பற்றிய ஹதீஸ்களை நாம் விமர்சனம் செய்த போது அது பற்றிய ஹதீஸ்கள் முரண்பட்ட தகவல்களைக் கூறுகின்றன. எனவே அதில் சந்தேகம் அதிகரிக்கிறது என்றும் சுட்டிக்காட்டி அந்த அறிவிப்புக்களுக்கு மத்தியில் முரண்பாடுகள் இருப்பதையும் நாம் சுட்டிக் காட்டி இருந்தோம்.

அந்த் அறிவிப்புக்களில் எந்த முரண்பாடும் இல்லாவிட்டாலும் அந்த ஹதீஸ்கள் குர்ஆனுடன் நேரடியாக மோதுவதால் அவற்றை ஏற்க முடியாது. சுற்றி வளைத்து சமாளித்தாலும், அவற்றுக்கிடையே எந்த முரண்பாடும் இல்லாவிட்டாலும் அவை ஏற்கத்தக்கதாக ஆகாது. மேலே நாம் சுட்டிக்காட்டிய அனைத்து ஆதாரங்களுடனும் இவை மோதுவது தான் முக்கியக் காரணம்.

மேலதிக விளக்கத்துக்காக நாம் சுட்டிக் காட்டிய முரண்பாடுகளுக்கும் அவர் பதிலளிக்கும் போது பின்வருமாறு மறுக்கிறார்.

சலபியின் வாதம்

 இந்த அறிவிப்பில் காணப்படும் முரண்பாடுகள் என்ன என்பதை அவர் விவரிக்கும் போது அப்புறப்படுத்தல என்ற தலைப்பில் பின்வருமாறு கூறுகின்றார்.

அப்புறப்படுத்தல்

எந்தப் பொருட்களில் சூனியம் வைக்கப்பட்டதோ அந்தப் பொருட்களை அக்கிணற்றிலிருந்து அப்புறப்படுத்தி விட்டீர்களா என்று ஆயிஷா (ரலி) கேட்ட போது அப்புறப்படுத்தவில்லை, அதனால் மக்களிடையே கேடுகள் ஏற்படும என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக புகாரியின் 3268, 5763, 5766 ஆகிய ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உடனடியாக அக்கிணற்றுக்குச் சென்று அப்பொருளை அப்புறப்படுத்தினார்கள என்று புகாரியின் 5765, 6063 வது ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.

அப்பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டதாகக் கூறும் அறிவிப்பிலும் முரண்பாடு காணப்படுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்தக் கிணற்றுக்குச் சென்று அப்பொருளை அப்புறப்படுத்தியதாக, அப்புறப்படுத்தக் கட்டளையிட்டதாக புகாரியின் 5765, 6063 ஆகிய ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் நஸயீயின் 4012 வது ஹதீஸில் ஆட்களை அனுப்பி வைத்து அதை அப்புறப்படுத்தியதாகவும், அப்புறப்படுத்திய பொருட்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்ததாகவும் உடனே அவர்கள் குணமடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. அஹ்மத் 18467 வது ஹதீஸிலும் இந்தக் கருத்து பதிவு செய்யப்பட்டுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அருகில் இரண்டு வானவர்கள் அமர்ந்து தமக்கிடையே பேசிக் கொண்டதாகவும் அதன் மூலம் தனக்குச் சூனியம் செய்யப்பட்டதை அறிந்து கொண்டதாகவும் நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக புகாரி 6391வது ஹதீஸ் கூறுகிறது.

நஸயீயின் 4012வது ஹதீஸில் ஜிப்ரீல் (அலை) வந்து உமக்கு யு+தன் ஒருவன் சூனியம் வைத்துள்ளான என்று நேரடியாகக் கூறியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

(பிஜே தர்ஜமா - பக்:1310)

மேற்படி விளக்கத்தில் ஹதீஸில் இடம் பெற்றுள்ளதாக சகோதரர் பிஜே கூறும் முரண்பாடுகளை ஒரு முறை தொகுத்துப் புரிந்து கொண்டதன் பின்னர் அவற்றிற்கான விளக்கத்திற்குச் செல்வது நல்லது எனக் கருதுகின்றேன்.

(1) சூனியம் வைக்கப்பட்ட பொருட்களைக் கிணற்றிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டதாகவும், அப்புறப்படுத்தப்படவில்லை என்றும் ஹதீஸ் கூறுகின்றது. இது ஒரு முரண்பாடு. (என்பது அவர் வாதம்.)

(2) சூனியம் செய்யப்பட்ட செய்தியை இரண்டு வானவர்கள் வந்து தமக்குள் பேசியதன் மூலமாக நபியவர்கள் அறிந்து கொண்டதாகவும், ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து, ஒரு யூதன் உமக்குச் சூனியம் செய்துள்ளான என்று கூறியதாகவும் வருகின்றது.

(3) நபி(ஸல்) அவர்கள் தமது தோழர்களுடன் கிணற்றிற்குச் சென்று அந்தப் பொருட்களை எடுத்ததாகவும், நபியவர்கள் ஆள் அனுப்பி, அவர்கள் அப்பொருளை நபியவர்களிடம் எடுத்து வந்ததாகவும் இரு விதமான கருத்துக்கள் கூறப்படுகின்றன.

இந்த முரண்பாடுகளுக்குள் இணக்கம் காண்பது எப்படி?

கூறப்பட்ட அனைத்து முரண்பாடுகளும் ஆதாரபூர்வமானவை தாமா? என்பதை ஆராய்வதற்கு முன்னர் இப்படி ஆய்வு செய்து ஹதீஸ்களை நிராகரிப்பது சரியான ஆய்வு அனுகுமுறை அல்ல என்பதை நாம் புரிந்துகொள்வது அவசியமாகும்.

பிழையான ஆய்வு:

ஹதீஸ்களை அறிவிக்கும் அறிவிப்பாளர்கள் சில போது தாம் கேட்டவற்றில் முக்கிய பகுதியை மட்டும் கூறினார்கள். சிலர் தாம் கேட்ட அதே வாசகத்தை அறிவிக்காமல் அந்தக் கருத்தைத் தனது வாசகத்தின் மூலம் அறிவிப்பர். இவ்வாறு அறிவிக்கும் போது சின்னச் சின்ன வார்த்தை வேறுபாடுகள் பெரும்பாலான, அதிலும் குறிப்பாக பெரிய ஹதீஸ்களில் இடம்பெறும் வாய்ப்புக்கள் உள்ளன. இந்த முரண்பாடுகள் ஹதீஸை மறுப்பதற்கான காரணமாக அமையக் கூடாது. அப்படியாயின் ஏராளமான ஹதீஸ்களை மறுக்க நேரிடும். இந்த சூனியம் குறித்த ஹதீஸை ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து உர்வா அவரிடமிருந்து ஹிஸாம் அவரிடமிருந்து 12 மாணவர்கள் செவிமடுத்து அறிவிக்கின்றனர். இந்தப் பன்னிரெண்டு பேரின் வார்த்தைப் பிரயோகத்தில் ஏற்படும் வித்தியாசங்கள் நியாயமானவை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அடுத்து ஏற்கனவே நாம் குறிப்பிட்ட முரண்பாடுகளைச் சுட்டிக் காட்டி ஒன்றுக்கொன்று முரண்பட்டால் இரண்டுமே (ஆதாரமாக எடுக்க முடியாமல்) விழுந்து விடும் எனக் கூறி இரண்டையும் ஏற்கக் கூடாது என சகோதரர் வாதிக்கின்றார். இந்த வாதமும் தவறாகும்.

ஏனெனில் அனைத்து ஹதீஸ்களும் நபி (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டது என்றே கூறுகின்றன. அதில் முரண்பாடு இல்லை. இவரின் வாதப்படி சூனியம் செய்யப்பட்ட பொருட்கள் எடுக்கப்பட்டதா? இல்லையா? எப்படி எடுக்கப்பட்டது? என்பதில் தானே முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இதை வைத்து முரண்பாடே ஏற்படாத சூனியம் செய்யப்பட்டது என்ற தகவலை எப்படி நிராகரிக்க முடியும்? சூனியம் செய்யப்பட்டது என்பது உறுதி. ஆனால், அது எடுக்கப்பட்டதா? இல்லையா? என்பதைத் தான் உறுதியாகக் கூற முடியாது என்றல்லவா முடிவு செய்ய வேண்டும்?

இவரின் இந்த அனுகுமுறை மூலம் தவறான வழியில் ஆய்வு செய்து பிழையான முடிவை நோக்கிச் சென்றிருப்பது தெளிவாகின்றது.

குர்ஆனில் முரண்பாடா?

இது போன்ற முரண்பாடுகள் தோன்றும் போது உடன்பாடு காண முயற்சிக்க வேண்டும். எதிலும் குறை காணும் குணத்துடன் செயல்பட்டால் எல்லாமே பிழையாகத் தான் தென்படும். குர்ஆனில் முரண்பாடு இருப்பதாகத் தோன்றும். இதற்கு இவர் இந்த ஆய்வுக்குப் பயன்படுத்தியிருக்கும் சில வசனங்களையே உதாரணமாகத் தர விரும்புகின்றேன்.

அ(தற்க)வன், நீர் அத்தாட்சியைக் கொண்டு வந்திருப்ப(தாகக் கூறுவ)தில் உண்மையாளர்களில் உள்ளவராக இருந்தால் அதைக் கொண்டு வாரும் என்றான்.

அப்போது மூஸா தனது கைத்தடியைப் போட்டார். உடனே அது தெளிவான பெரியதொரு பாம்பாகி விட்டது.

மேலும், தனது கையை (சட்டைப் பையிலிருந்து) வெளியில் எடுத்தார். உடனே அது பார்ப்பவர்களுக்கு (பளிச்சிடும்) வெண்மையாக இருந்தது.

பிர்அவ்னின் சமூகத்திலுள்ள பிரமுகர்கள், நிச்சயமாக இவர் கற்றறிந்த சூனியக்காரர் என்று கூறினர்.

உங்களை, உங்களது நாட்டை விட்டும் வெளியேற்ற இவர் விரும்புகிறார். எனவே, நீங்கள் எதை ஆலோசனையாகக் கூறுகின்றீர்கள்? (என பிர்அவ்ன் கேட்டான்.) (7:106-110)

மேற்படி வசனங்கள் மூஸா நபி அற்புதங்களைச் செய்த போது இவர் கைதேர்ந்த சூனியக்காரர். இந்தச் சூனியத்தின் மூலம் உங்களது பூமியை விட்டும் உங்களை வெளியேற்ற இவர் விரும்புகிறார் என பிர்அவ்னின் சமுகத்தின் பிரமுகர்கள் கூறியதாகக் கூறுகின்றது.

அ(தற்க)வன், நீர் உண்மையாளர்களில் இருந்தால் அதைக் கொண்டுவாரும் எனக் கூறினான்.

அப்போது அவர் தனது கைத்தடியைப் போட்டார். உடனே அது தெளிவான பெரியதோர் பாம்பாகி விட்டது.

மேலும், தனது கையை (சட்டையிலிருந்து) வெளியில் எடுத்தார். உடனே அது பார்ப்பவர்களுக்குப் பளிச்சிடும் வெண்மையாக இருந்தது.

அ(தற்க)வன், தன்னைச் சூழ இருந்த பிரமுகர்களிடம், நிச்சயமாக இவர் கற்றறிந்த ஒரு சூனியக்காரர் என்று கூறினான்.

தனது சூனியத்தின் மூலம் உங்களை உங்களது நாட்டை விட்டும் வெளியேற்ற இவர் விரும்புகின்றார். எனவே, நீங்கள் எதை ஆலோசனையாகக் கூறுகின்றீர்கள்? (என்றும் கேட்டான்.) (26:31-35)

மேற்படி வசனங்களில் இவர் சூனியக்காரர்; உங்களை உங்கள் பூமியிலிருந்து வெளியேற்ற விரும்புகின்றார் என்ன கட்டடையிடுகின்றீர்கள் என பிர்அவ்ன் கூறியதாகக் கூறுகின்றன.

இந்த வாசகங்களை பிர்அவ்ன் கூறினானா? பிர்அவ்னினது சமூகப் பிரமுகர்கள் கூறினார்களா? என்று கேள்வி எழுப்பி இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றது என்று கூறுவதா? அல்லது உடன்பாடு காணும் முயற்சியில் ஈடுபடுவதா? எது இஸ்லாமிய ஆய்வாக இருக்கும்? அல்லாஹ்வின் மீது நம்பிக்கையில்லாத குர்ஆனை நிராகரிக்கும் குணம் கொண்டவர்கள் இதை முரண்பாடாகப் பார்க்கலாம். முஃமின்கள் முரண்பாடாகப் பார்க்க மாட்டார்கள். அதே போன்று ஆதாரபூர்வமான ஹதீஸ்களை மறுக்கும் குணம் கொண்டவர்கள் தான் வார்த்தை வித்தியாசங்களை வைத்து ஹதீஸை மறுக்கும் மனோநிலைக்கு வருகின்றனர்.

அ(தற்க)வர், இல்லை, நீங்கள் போடுங்கள் என்றார். அப்போது அவர்களது கயிறுகளும், அவர்களது தடிகளும் அவர்களுடைய சூனியத்தின் காரணமாக ஊர்ந்து வருவதைப் போல அவருக்குத் தோற்றமளித்தன.

அப்போது மூஸா தனக்குள் அச்சத்தை உணர்ந்தார்.

அச்சம் கொள்ளாதீர். நிச்சயமாக நீர்தான் மேலோங்கி நிற்பீர் என நாம் கூறினோம்.(20:66-68)

மேற்படி வசனங்கள் சூனியக்காரர்கள் கயிற்றையும், தடியையும் போட்டபோது அவை பாம்புகள் போன்று தென்பட்டன. அதைப் பார்த்து மூஸா அவர்கள் போட்ட போது, நீங்கள் கொண்டு வந்தது சூனியமே! நிச்சயமாக அல்லாஹ் அதை அழித்து விடுவான். நிச்சயமாக அல்லாஹ் குழப்பம் விளைவிப்போரின் செயலைச் சீர்செய்ய மாட்டான என்று மூஸா கூறினார்.

நபி பயந்தார் என்று கூறுகின்றன.

குற்றவாளிகள் வெறுத்த போதும் அல்லாஹ் தன் வார்த்தைகளைக் கொண்டு சத்தியத்தை நிலை நாட்டியே தீருவான். (10:81-82)

அவர்கள் மேற்படி வசனங்கள் கயிறுகளையும், தடிகளையும் சூனியக்காரர்கள் போட்ட போது மூஸா நபி துணிச்சலுடன், இது சூனியம்; அல்லாஹ் இதை அழிப்பான என்று கூறியதாகக் கூறுகின்றன.

சூனியக்காரர்கள் கயிறுகளையும், தடிகளையும் போட்ட போது மூஸா நபி பயந்தாரா? துணிச்சலுடன் பேசினாரா? என்ற கேள்விகளை எழுப்பி இந்த வசனங்களுக்கிடையில் முரண்பாடு கண்டால் குர்ஆனின் நிலை என்னவாகும்? என்று சிந்திக்க வேண்டும். எனவே, இந்தக் கோணத்தில் ஆய்வு செய்வது தவறு என்பதை நாம் அறிய முடிகின்றது. உடன்பாடு காணும் எண்ணமும், அதற்கான முயற்சியும் இருக்க வேண்டுமே தவிர முரண்பாடுகளைத் தேடி நிராகரிப்பதற்கான வழிகளைத் தேட முடியாது! நிராகரிப்பு நிலையிலிருந்து பார்த்தால் இது சரியாகத் தென்பட்டாலும், ஈமானிய மனநிலையிலிருந்து பார்க்கும் போது இது தவறாகத் தெரியும்.

தொடர்ந்து அவர் கூறும் முரண்பாடுகளின் உண்மை நிலை குறித்து ஆராய்வோம்!

சூனியம் செய்யப்பட்ட பொருட்கள் எடுக்கப்பட்டதா? இல்லையா?

கடந்த கால அறிஞர்கள் பலரும் இந்த முரண்பாட்டிற்கு(?) உடன்பாடு காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக ஸஹீஹுல் புகாரிக்கு விளக்கவுரை எழுதிய இமாம் இப்னு ஹஜர் அவர்கள் இது குறித்து எழுதியுள்ளார்கள்! அவர் அளித்த விளக்கத்தை நிச்சயமாக பிஜே அவர்கள் பார்த்திருப்பார்கள் என்றே எண்ணுகின்றேன். எனினும் ஹதீஸில் இல்லாத, ஆயிஷா(ரலி) அவர்கள் பயன்படுத்தாத வாசகங்களை இணைத்து, பிஜே எழுதி உடன்பாடு காண முடியாத வகையில் ஹதீஸின் மொழிபெயர்ப்பை அமைத்துள்ளார். இது தான் பிரச்சினையைப் பூதாகரமாக்கியுள்ளது.

எந்தப் பொருட்களில் சூனியம் வைக்கப்பட்டதோ, அந்தப் பொருட்களை அக்கிணற்றிலிருந்து அப்புறப்படுத்தி விட்டீர்களா? என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கேட்ட போது, அப்புறப்படுத்தவில்லை; அதனால் மக்களிடையே கேடுகள் ஏற்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக புகாரியின் 3268, 5763, 5766 ஆகிய ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது எனக் குறிப்பிடுகின்றார்.

ஆயிஷா(ரலி) அவர்களின் கேள்வியில் கிணற்றிலிருந்து அப்புறப்படுத்தி விட்டீர்களா? என்ற வாசகம் இடம்பெறவில்லை. ஆனால், உடன்பாடு காண முடியாத சிக்கலையுண்டாக்குவதற்காகவே கிணற்றிலிருந்து என்ற இல்லாத வாசகத்தை வேண்டுமென்றே இணைத்துள்ளார்.

இந்த வாசகம் ஹதீஸில் இல்லாத வாசகம் என்பதற்கு வேறு ஆதாரம் தேவையில்லை. அவரே இந்த ஹதீஸை இதே பகுதியின் முற்பகுதியில் மொழிபெயர்க்கும் போது

அதை அப்புறப்படுத்தி விட்டீர்களா?’ என நான் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இல்லை. எனக்கு அல்லாஹ் நிவாரணம் அளித்து விட்டான். மக்கள் மத்தியில் தீமையைப் பரப்பக் கூடாது என்று நான் அஞ்சுகிறேன  என்று கூறினார்கள். பின்னர் அந்தக் கிணறு மூடப்பட்டது.

அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி), நூல்: புகாரி 3268, (தர்ஜமா பக்கம் 1295)

அவரே செய்த இந்த மொழிபெயர்ப்பில் கிணற்றிலிருந்து அப்புறப்படுத்தி விட்டீர்களா? என்ற வாசகம் இல்லை என்பதைக் கவனத்தில் கொள்ளவும். ஹதீஸில் இல்லாத அவர் மேலதிகமாகச் சேர்த்த கிணற்றிலிருந்து என்ற வாசகத்தை நீக்கி விட்டு நாம் இந்த முரண்பாட்டுக்கு உடன்பாடு காணும் முயற்சியில் இறங்குவோம்.

நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களுடன் சென்று சூனியம் செய்யப்பட்ட பொருட்களை எடுத்துப் பார்க்கின்றார்கள். பின்னர் ஆயிஷா (ரலி) அவர்களிடம் வந்து, தாம் கண்ட காட்சியை விபரிக்கின்றார்கள். நீங்கள் அதை வெளிப்படுத்தவில்லையா? எனக் கேட்ட போது, இல்லை. அல்லாஹ் எனக்கு சுகமளித்து விட்டான். மக்கள் மத்தியில் தீமை பரவுவதை நான் அஞ்சுகின்றேன என்கின்றார்கள்.

நீங்கள் அதை வெளிப்படுத்தவில்லையா? என ஆயிஷா (ரலி) அவர்கள் கேட்டது, கிணற்றிலிருந்து வெளியே எடுக்கவில்லையா? என்ற அர்த்தத்தில் கேட்கவில்லை. இதை மக்கள் மத்தியில் வெளிப்படுத்தவில்லையா? என்பதே அந்தக் கேள்வியின் அர்த்தமாகும்.

ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸிலேயே

கிணற்றுக்குச் சென்று அதை வெளியில் எடுத்தார்கள் என்று கூறி விட்டு, நீங்கள் வெளிப்படுத்தவில்லையா? எனக் கேட்கின்றார்கள் என்றால், கிணற்றிலிருந்து வெளியில் எடுக்கவில்லையா? என்று கேட்க முடியாது. காரணம், எடுத்ததாக அவர்களே கூறுகின்றார்கள்.

அஹ்மதில் இடம்பெற்ற அறிவிப்பில்,

நீங்கள் அதை மனிதர்களுக்காக வெளிப்படுத்த வேண்டாமா? என்று கேட்டதாக இடம்பெற்றுள்ளது. எனவே, வெளிப்படுத்தினார்கள என்று வருவது கிணற்றிலிருந்து வெளியில் எடுத்ததைக் கூறுகின்றது; வெளிப்படுத்தவில்லை என்பது மக்களுக்கு வெளிப்படுத்தவில்லை என்பதைக் கூறுகின்றது. இரண்டும் வேறு வேறு அம்சங்களாகும். இந்த வேறுபாடு குறித்து அறிஞர்கள் பேசியுள்ளனர். இதை அறிந்ததனால் இந்த வேறுபாட்டை மக்கள் புரிந்து உண்மையை உணர்ந்து கொள்ள இடமளிக்காத வகையில் ஆயிஷா (ரலி) அவர்களின் கேள்வியில் கிணற்றிலிருந்து என்ற இல்லாத வாசகத்தை நுழைத்துள்ளார். இதன் மூலம் எடுக்கப்பட்டது; எடுக்கப்படவில்லை என்ற இரு செய்தியும் கிணற்றிலிருந்து எடுக்கப்பட்டது; கிணற்றிலிருந்து எடுக்கப்படவில்லை என ஹதீஸ் கூறுவதாகச் சித்தரித்துள்ளார். முரண்பாட்டைத் தானாக உண்டுபண்ணியுள்ளார்.

எந்தப் பொருட்களில் சூனியம் செய்யப்பட்டதோ, அந்தப் பொருட்களைக் கிணற்றிலிருந்து அப்புறப்படுத்தி விட்டீர்களா? என்று ஆயிஷா (ரலி) கேட்காத வாசகத்தை அவர்களது ஹதீஸில் நுழைத்தது பகிரங்க மோசடியாகும். இந்த இவரது மோசடியை நீக்கி விட்டால் ஹதீஸில் முரண்பாடு இல்லை என்பது புரிந்து விடும்.

அல்குர்ஆனின் 22:47, 32:5 ஆகிய வசனங்கள் அல்லாஹ்விடத்தில் ஒரு நாள் எமது கணிப்பின் படி ஆயிரம் வருடங்களுக்குச் சமனானது என்று கூறுகின்றது. 70:4 ஆம் வசனம் 50 ஆயிரம் வருடங்களுக்குச் சமனானது என்கின்றது. இது குறித்து பிஜே விரிவாக விளக்கமளிக்கும் போது விளக்கக் குறிப்பு 293 இல்;

ஆயிரமும், ஐம்பதாயிரமும் ஒன்றுக்கொன்று முரண்பட்டது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், இரண்டும் வேறு வேறு செய்திகளைக் கூறும் வசனங்கள் என்பதை விளங்கிக்கொண்டால் இதில் எந்த முரண்பாடும் இல்லை (பக்கம் 1249) என்று குறிப்பிடுகின்றார்.

இதே போன்று வெளிப்படுத்தப்பட்டது என்பதும், வெளிப்படுத்தப்படவில்லை என்பதும் முரண்பட்டது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், வெளிப்படுத்தப் பட்டது என்பது கிணற்றிலிருந்து வெளிப்படுத்தப்பட்டது என்பதைக் கூறுகின்றது; வெளிப்படுத்தப்படவில்லை என்பது அதை மக்கள் மத்தியில் வெளிப்படுத்தப்படவில்லை என்பதைக் கூறுகின்றது என்பதை விளங்கிக்கொண்டால் இதில் எந்த முரண்பாடும் இல்லை என்பது தெளிவாகி விடும். 

நமது மறுப்பு

 நாம் எழுதியதைச் சுட்டிக்காட்டி மேற்கண்ட விளக்கத்தைக் கூறுகிறார்.

அறிவிப்பாளர்களின் வார்த்தைகளில் வேறுபாடு வரலாம். ஆனால் கருத்து ஒன்றுக்கொன்று நேர்முரணாக இருக்கக் கூடாது. இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாமல் குழப்புகிறார்.

இந்த முரண்பாடுகள் காரணமாக மேற்கண்ட ஹதீஸ்களை மறுப்பதாகவும் இவர் வாதிடுகிறார். குர்ஆனுக்கு முரண்படுவதால் தான் மறுக்கிறோம். முரண்பாடுகளும் அதனுடன் சேர்ந்து இருப்பது இது சரியான செய்தி அல்ல என்பதை உறுதிப்படுத்துகிறது என்று தான் நாம் கூறுகிறோம்.

சூனியம் செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட பொருள் கிணற்றில் இருந்து வெளியே எடுக்கப்பட்டதா இல்லையா என்பதைக் குறித்து அந்த ஹதீஸ்கள் கூறுவது என்ன என்பதை அந்த ஹதீஸ்களின் வாசகத்தை வைத்துத் தான் முடிவு செய்ய வேண்டும்.

ஒரு சொல்லுக்கு நம் இஷ்டத்துக்கு ஏற்ப அர்த்தம் கொடுத்து விட்டு முரண்பாடு இல்லை என்று கூறக் கூடாது. ஆனால் இவர் ஒரு சொல்லுக்கு ஒரு இடத்தில் ஒரு அர்த்தமும் இன்னொரு அறிவிப்பில் உள்ள அதே சொல்லுக்கு வேறு அர்த்தமும் கொடுத்து விட்டு முரண்பாடு இல்லை என்கிறார்.

இது குறித்து புகாரியில் இடம் பெற்ற நாம் சுட்டிக்காட்டிய அந்த ஹதீஸ்களைப் பார்ப்போம்.

இது புஹாரியில் 5765வது ஹதீஸ். இதற்கு நாம் பொருள் செய்தால் அதற்கு சலபி நோக்கம் கற்பித்து விடுவார். எனவே ரஹ்மத் ட்ரஸ்ட் தமிழாக்கத்தையே எடுத்துக் காட்டுகிறோம்.

5765- حدثني عبد الله بن محمد قال : سمعت ابن عيينة يقول أول من ، حدثنا به ابن جريج يقول ، حدثني آل عروة ، عن عروة فسألت هشاما عنه فحدثنا ، عن أبيه ، عن عائشة ، رضي الله عنها ، قالت كان رسول الله صلى الله عليه وسلم سحر حتى كان يرى أنه يأتي النساء ، ولا يأتيهن قال سفيان وهذا أشد ما يكون من السحر إذا كان كذا فقال يا عائشة أعلمت أن الله قد أفتاني فيما استفتيته فيه أتاني رجلان فقعد أحدهما عند رأسي والآخر عند رجلي فقال الذي عند رأسي للآخر ما بال الرجل قال مطبوب قال ، ومن طبه قال لبيد بن أعصم رجل من بني زريق حليف ليهود كان منافقا قال وفيم قال في مشط ومشاقة قال وأين قال في جف طلعة ذكر تحت رعوفة في بئر ذروان قالت فأتى النبي صلى الله عليه وسلم البئر حتى استخرجه فقال هذه البئر التي أريتها وكأن ماءها نقاعة الحناء وكأن نخلها رؤوس الشياطين قال فاستخرج قالت فقلت أفلا أي تنشرت فقال أما والله فقد شفاني وأكره أن أثير على أحد من الناس شرا.

5765 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டது. அதையடுத்து அவர்கள் தம் துணைவியரிடம் செல்லாமலேயே அவர்களிடம் சென்று வருவதாக நினைக்கலானார்கள்.

-அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: அவ்வாறிருந்தால் அது சூனியத்திலேயே கடுமையானதாகும்.-

(ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆயிஷா! (விஷயம்) தெரியுமா? நான் எந்த விஷயத்தில் அல்லாஹ்விடம் தெளிவைத் தரும்படி கேட்டுக் கொண்டிருந்தேனோ, அந்த விஷயத்தில் அல்லாஹ் எனக்குத் தெளிவை வழங்கி விட்டான். (கனவில் வானவர்கள்) இரண்டு பேர் என்னிடம் வந்து, ஒருவர் என் தலைமாட்டிலும் இன்னொருவர் என் கால்மாட்டிலும் அமர்ந்து கொண்டனர். என் தலைமாட்டில் இருந்தவர் மற்றொருவரிடம், இந்த மனிதரின் நிலையென்ன? என்று கேட்டார். மற்றவர் சூனியம் செய்யப்பட்டுள்ளார் என்று சொன்னார். அதற்கு அவர், யார் அவருக்குச் சூனியம் வைத்தார்? என்று கேட்டார். மற்றவர், யூதர்களின் நட்புக் குலமான பனூ ஸுரைக் குலத்தைச் சேர்ந்த லபீத் பின் அஃஸம் என்பவர். இவர் நயவஞ்சகராக இருந்தார் என்று பதிலளித்தார். அவர், எதில் (சூனியம் வைக்கப்பட்டுள்ளது)? என்று கேட்க, மற்றவர், சீப்பிலும் சிக்கு முடியிலும் என்று பதிலளித்தார். அவர், எங்கே (சூனியம் வைக்கப்பட்டுள்ளது)? என்று கேட்க, மற்றவர், ஆண் பேரீச்சம் பாளையின் உறையில் தர்வான் குலத்தாரின் கிணற்றிலுள்ள கல் ஒன்றின் அடியில் வைக்கப்பட்டுள்ளது என்று பதிலளித்தார். பிறகு நபி (ஸல்) அவர்கள் அந்தக் கிணற்றுக்குச் சென்று அ(ந்தப் பாளை உறை)தனை வெளியே எடுத்தார்கள். பிறகு (என்னிடம் திரும்பி வந்த) நபி (ஸல்) அவர்கள், இது தான் எனக்குக் (கனவில்) காட்டப்பட்ட கிணறு. இதன் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போன்று (கலங்கலாக) உள்ளது. இதன் பேரீச்ச மரங்கள் ஷைத்தான்களின் தலைகளைப் போன்று உள்ளன என்று சொல்லி விட்டுப் பிறகு அந்தப் பேரீச்சம் பாளை உறை வெளியே எடுக்கப்பட்டது என்றும் கூறினார்கள். நான், தாங்கள் (பாளை உறையை) ஏன் உடைத்துக் காட்டக் கூடாது? எனக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் எனக்கு (இந்தச் சூனியத்திலிருந்து) நிவாரணம் அளித்து விட்டான். (சூனியப் பொருளைத் திறந்து காட்டி) மக்களில் எவரையும் குழப்பத்தில் ஆழ்த்த நான் விரும்பவில்லை என்று சொல்லி விட்டார்கள்.

மேற்கண்ட ஹதீஸின் அரபு மூலத்தில் இஸ்தக்ரஜ என்ற சொல் இரண்டு இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் நேரடிப் பொருள் வெளியேற்றுதல் என்பதாகும். இந்த இரண்டு இடங்களிலும் சூனியம் வைப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட பொருளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வெளியே எடுத்தார்கள் என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

அதாவது சூனியம் வைக்கப்பட்ட பொருள் கிணற்றில் இருந்து வெளியே எடுக்கப்பட்டது என்றும் ஆனால் அதைத் திறந்து காட்டவில்லை என்றும் இந்த அறிவிப்பு கூறுகிறது. திறந்து காட்டவில்லை என்பதற்கு தனஷ்ஷர்த்த என்ற சொல் மூலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதைக் கவனத்தில் வைத்துக் கொண்டு பின்வரும் ஹதீஸைப் பாருங்கள்.

3268- حدثنا إبراهيم بن موسى ، أخبرنا عيسى عن هشام ، عن أبيه ، عن عائشة ، رضي الله عنها ،- قالت سحر النبي صلى الله عليه وسلم وقال الليث كتب إلي هشام أنه سمعه ووعاه ، عن أبيه ، عن عائشة ، قالت : سحر النبي صلى الله عليه وسلم حتى كان يخيل إليه أنه يفعل الشيء وما يفعله حتى كان ذات يوم دعا ودعا ثم قال أشعرت أن الله أفتاني فيما فيه شفائي أتاني رجلان فقعد أحدهما عند رأسي والآخر عند رجلي فقال أحدهما للآخر ما وجع الرجل قال مطبوب قال ، ومن طبه قال لبيد بن الأعصم قال في ماذا قال في مشط ومشاقة وجف طلعة ذكر قال فأين هو قال في بئر ذروان فخرج إليها النبي صلى الله عليه وسلم ثم رجع فقال لعائشة حين رجع نخلها كأنها رؤوس الشياطين فقلت استخرجته فقال : لا أما أنا فقد شفاني الله وخشيت أن يثير ذلك على الناس شرا ثم دفنت البئر.

3268 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டது. எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஒரு செயலைச் செய்யாமலிருக்க, அதைச் செய்தது போன்று அவர்களுக்குப் பிரமையூட்டப்பட்டது. இறுதியில் ஒரு நாள், அவர்கள் பிரார்த்தனை செய்த வண்ணமிருந்தார்கள். பிறகு சொன்னார்கள்: என் (மீது செய்யப்பட்டுள்ள சூனியத்திற்கான) நிவாரணம் எதில் உள்ளதோ அதை எனக்கு அல்லாஹ் அறிவித்து விட்டதை நீ அறிவாயா? என்னிடம் (கனவில்) இரண்டு பேர் (இரு வானவர்களான ஜிப்ரீலும், மீக்காயிலும்) வந்தனர். அவர்களில் ஒருவர் (ஜிப்ரீல்) என் தலைமாட்டில் அமர்ந்தார். மற்றொருவர் (மீக்காயீல்) எனது கால்மாட்டில் அமர்ந்தார். ஒருவர் மற்றொருவரிடம் (மீக்காயீல் ஜிப்ரீலிடம்), இந்த மனிதரைப் பீடித்துள்ள நோய் என்ன? என்று கேட்டார். மற்றொருவர் (ஜிப்ரீல்), இவருக்கு சூனியம் வைக்கப்பட்டுள்ளது என்று பதிலளித்தார். அதற்கு அவர், இவருக்கு சூனியம் வைத்தது யார்? என்று கேட்க, (ஜிப்ரீல்) அவர்கள், லபீத் பின் அஃஸம் (என்னும் யூதன்) என்று பதிலளித்தார். (அவன் சூனியம் வைத்தது) எதில்? என்று அவர் (மீக்காயீல்) கேட்க அதற்கு, சீப்பிலும், (இவரது) முடியிலும், ஆண் (பேரீச்சம்) பாளையின் உறையிலும் என்று (ஜிப்ரீல்) பதிலளித்தார். அதற்கு அவர், அது எங்கே இருக்கிறது என்று கேட்க, (பனூ ஸுரைக் குலத்தாரின் தோட்டத்திலுள்ள) தர்வான் எனும் கிணற்றில் என்று பதிலளித்தார்.

(இதைச் சொல்லி முடித்த) பிறகு, நபி (ஸல்) அவர்கள் அந்தக் கிணற்றை நோக்கிப் புறப்பட்டார்கள்; பிறகு திரும்பி வந்தார்கள். திரும்பி வந்த போது என்னிடம், அந்தக் கிணற்றிலிருக்கும் பேரீச்ச மரங்கள் ஷைத்தான்களின் தலைகளைப் போல் உள்ளன என்று கூறினார்கள். நான், அதைத் தாங்கள் வெளியே எடுத்தீர்களா என்று கேட்டேன். அதற்கு அவர்கள், இல்லை. என்னை அல்லாஹ் குணப்படுத்தி விட்டான். (அதை வெளியே எடுத்தால்) அது மக்களிடையே (சூனியக் கலை பரவக் காரணமாகி) குழப்பத்தைக் கிளப்பி விடும் என்று நான் அஞ்சினேன் என்று பதிலளித்தார்கள். பிறகு, அந்தக் கிணறு தூர்க்கப்பட்டு விட்டது.64

இந்த ஹதீஸிலும் அதே இஸ்தக்ரஜ என்ற சொல் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இங்கே எதிர்மறையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது அதை வெளியே எடுத்தீர்களா என்று கேட்ட போது இல்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக உள்ளது. மேலும் வெளியே எடுக்காமலே கிணறு தூர்க்கப்பட்டு விட்டது என்றும் கூறப்பட்டுள்ளது.

அதாவது முதல் ஹதீஸ் அப்பொருளை வெளியே எடுத்தார்கள் என்று சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் கூறுகிறது. அதைத் திறந்து மக்களுக்குக் காட்டவில்லையே தவிர பொருளை வெளியே எடுத்தது உறுதி என்பது முதல் ஹதீஸில் இருந்து தெரிகிறது.

ஆனால் இரண்டாம் ஹதீஸில் அப்பொருளை வெளியே எடுக்காமலே கிணறு துர்க்கப்பட்டு விட்டது என்று கூறப்படுகிறது.

இது இரண்டும் முரணா இல்லையா என்பதை மேற்கண்ட ஹதீஸின் வாசகத்தை வைத்துக் கூற வேண்டும். ஆனால் வெளியேற்றுதல் என்ற அர்த்தம் உடைய இஸ்தக்ரஜ என்ற சொல்லுக்கு ஒரு இடத்தில் செய்தியை மக்களிடம் பரப்புதல் என்றும் இன்னொரு இடத்தில் வெளியேற்றுதல் என்றும் தன்னிஷ்டத்துக்கு அர்த்தம் செய்து விட்டு முரண்பாடு இல்லை என்கிறார் சலபி.

மேலும் இந்த இரண்டாவது ஹதீஸில் கிணறைத் தூர்த்தார்கள் என்று கூறப்பட்டு இஸ்மாயீல் சலபி பொய் சொல்கிறார் என்பதைக் காட்டிக் கொடுத்து விடுகிறது.

பொருளை வெளியே எடுத்து விட்டால் கிணறைத் தூர்க்க வேண்டியதில்லை.

அப்பொருளை கிணற்றில் வைத்து கிணறு மூடப்பட்டது என்ற கருத்தும்

அப்பொருள் வெளியே எடுக்கப்பட்டது ஆனால் உடைத்துக் காட்டவில்லை என்ற கருத்தும் ஒன்றுக்கொன்று முரணாக உள்ளதா இல்லையா?

இது வார்த்தையில் ஏற்பட்ட வித்தியாசமா? கருத்தில் உள்ள முரண்பாடா?

கிணற்றில் என்று நாம் இடைச் செருகல் செய்ததால் தான் குழப்பமாகத் தெரிகிறதாம். இல்லாவிட்டால் குழப்பமே இல்லையாம். இப்படி உளறுகிறார்.

வெளியேற்றுவது என்று கூறப்பட்டால் எதை வெளியேற்ற முடியுமோ எதில் இருந்து வெளியேற்ற முடியுமோ அதைத் தான் கூறுகிறது என்பது சாதாரணமாக எவருக்கும் தெரியும் உண்மை தான். கிணற்றில் இருந்து அப்பொருளை வெளியேற்றுவதைப் பற்றித் தான அது கூறுகிறது என்பது கூட விளங்காமல் இப்படி வார்த்தை ஜாலம் காட்டுகிறார். கிணற்றில் இருந்து என்ற வார்த்தை இல்லாமலே அவர் விளக்கட்டுமே?

இஸ்தக்ரஜ என்பதற்கு பரப்பினார்கள் என்று இல்லாத அர்த்தம் செய்யாமல் வெளியேற்றினார்கள் என்று சரியான அர்த்தம் செய்யட்டும். அதன் பின் எதில் இருந்து வெளியேற்றினார்கள் என்பதை சலபி விளக்கட்டுமே?

ரஹ்மத் ட்ரஸ்ட் செய்தது போல் சரியாக அர்த்தம் செய்தால் கிணற்றில் இருந்து என்ற கருத்தைத் தவிர வேறு கருத்து வராது.

அவர் விருப்பப்படி கிணற்றில் என்று குறிப்பிடாமல் பார்த்தாலும் முரண்பாடு இருப்பது உறுதியாகிறது..

பின்வரும் ஹதீஸும் இதே கருத்தில் அமைந்திருப்பதைக் காணலாம்.

5763 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு பனூஸுரைக் குலத்தைச் சேர்ந்த லபீத் பின் அஃஸம் என்பான் சூனியம் செய்தான். இதையடுத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாம் செய்திராத ஒன்றைத் தாம் செய்து கொண்டிருந்ததாகப் பிரமையூட்டப் பட்டார்கள். இறுதியில், அவர்கள் ஒரு நாள் அல்லது ஓரிரவு என்னிடம் வந்தார்கள். ஆயினும், அவர்கள் (என் மீது கவனம் செலுத்தாமல்) தொடர்ந்து பிரார்த்தனை செய்து கொண்டேயிருந்தார்கள்.

பிறகு (என்னிடம் கூறினார்கள்:) ஆயிஷா! (விஷயம்) தெரியுமா? எந்த(ச் சூனியம்) விஷயத்தில் தெளிவைத் தரும்படி இறைவனி டம் நான் கேட்டுக் கொண்டிருந்தேனோ அந்த விஷயத்தில் அவன் எனக்குத் தெளிவை அளித்து விட்டான். (கனவில்) என்னிடம் (வானவர்கள்) இரண்டு பேர் வந்தனர். அவ்விருவரில் ஒருவர் என் தலைமாட்டிலும் இன்னொருவர் என் கால்மாட்டிலும் அமர்ந்து கொண்டனர். அவ்விருவரில் ஒருவர் தம் தோழரிடம், இந்த மனிதரின் நோய் என்ன? என்று கேட்டார். அத்தோழர், இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டுள்ளது என்று சொல்ல, முதலாமவர் இவருக்குச் சூனியம் வைத்தவர் யார்? என்று கேட்டார். தோழர், லபீத் பின் அஃஸம் (எனும் யூதன்) என்று பதிலளித்தார். அவர், எதில் வைத்திருக்கிறான்? என்று கேட்க, சீப்பிலும், சிக்கு முடியிலும், ஆண் பேரீச்சம் பாளையின் உறையிலும் என்று பதிலளித்தார். அவர், அது எங்கே இருக்கிறது? என்று கேட்க, மற்றவர், (பனூ ஸுரைக் குலத்தாரின் தோட்டத்திலுள்ள) தர்வான் எனும் கிணற்றில் என்று பதிலளித்தார். இதைச் சொல்லி முடித்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலருடன் அந்தக் கிணற்றுக்குச் சென்று (பாளை உறையை வெளியே எடுத்துவிட்டுத் திரும்பி) வந்து, ஆயிஷா! அதன் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போல் உள்ளது; அதன் பேரீச்ச மரங்களின் தலைகள் ஷைத்தானின் தலைகளைப் போன்று உள்ளன என்று சொன்னார்கள்.

நான், அல்லாஹ்வின் தூதரே! அ(ந்தப் பாளை உறைக்குள் இருப்ப)தைத் தாங்கள் வெளியே எடுக்கவில்லையா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், அல்லாஹ் எனக்கு (அதன் பாதிப்பிலிருந்து) குணமளித்துக் காப்பாற்றி விட்டான். அதை வெளியே எடுப்பதன் மூலம் மக்களிடையே (சூனியக் கலை பரவக் காரணமாகி) குழப்பத்தைக் கிளப்பி விடுவதை நான் வெறுத்தேன் (எனவே தான் அதை நான் வெளியே எடுக்கவில்லை) என்று சொன்னார்கள். பிறகு அந்தக் கிணற்றைத் தூர்த்துவிடும்படி அவர்கள் கட்டளையிட அவ்வாறே அது தூர்க்கப் பட்டது.89

இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

அறிவிப்பாளர் ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்களின் ஓர் அறிவிப்பில், (சீப்பிலும் சிக்கு முடியிலும் என்பதற்கு பதிலாக) சீப்பிலும் சணல் நாரிலும் என்று காணப்படுகிறது. தலையை வாரும் போது கழியும் முடிக்கே முஷாதத் (சிக்கு முடி) எனப்படும். சணலை நூற்கும் போது வெளிவரும் நாருக்கே முஷாகத் (சணல் நார்) எனப்படும்.

இதோடு முரண்பாடு முடியவில்லை.

இஸ்தக்ரஜ என்ற சொல் இல்லாமல் அக்ரஜ என்ற சொல்லமைப்பைப் பயன்படுத்தியும் சில அறிவிப்புக்கள் உள்ளன.

6391- حدثنا إبراهيم بن منذر ، حدثنا أنس بن عياض عن هشام ، عن أبيه ، عن عائشة ، رضي الله عنها ، أن رسول الله صلى الله عليه وسلم طب حتى إنه ليخيل إليه قد صنع الشيء وما صنعه وإنه دعا ربه ثم قال أشعرت أن الله قد أفتاني فيما استفتيته فيه فقالت عائشة فما ذاك يا رسول الله قال جاءني رجلان فجلس أحدهما عند رأسي والآخر عند رجلي فقال أحدهما لصاحبه ما وجع الرجل قال مطبوب قال من طبهقال لبيد بن الأعصم قال فيما ذا قال في مشط ومشاطة وجف طلعة قال فأين هو قال في ذروان وذروان بئر في بني زريق قالت فأتاها رسول الله صلى الله عليه وسلم ثم رجع إلى عائشة فقال والله لكأن ماءها نقاعة الحناء ولكأن نخلها رؤوس الشياطين قالت فأتى رسول الله صلى الله عليه وسلم فأخبرها ، عن البئر ، فقلت : يا رسول الله فهلا أخرجته قال أما أنا فقد شفاني الله وكرهت أن أثير على الناس شرا.

6391 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது. இதையடுத்து தாம் செய்யாத ஒன்றைத் தாம் செய்துவிட்டதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பிரமையூட்டப்பட்டது.

நபி (ஸல்) அவர்கள் (ஒரு நாள்) தம் இறைவனிடம் பிரார்த்தித்த பிறகு (என்னிடம்), (ஆயிஷா!) தெரியுமா? எந்த விஷயத்தில் தெளிவைத் தரும்படி நான் இறைவனிடம் கேட்டுக் கொண்டிருந்தேனோ அந்த விஷயத்தில் அவன் எனக்குத் தெளிவை அளித்துவிட்டான் என்று கூறினார்கள். அதற்கு நான், அது என்ன? அல்லாஹ்வின் தூதரே! என்று கேட்டேன். அப்போது (பின்வருமாறு) கூறினார்கள்:

(கனவில்) என்னிடம் (வானவர்கள்) இரண்டு பேர் வந்தனர். அவர்களில் ஒருவர் என் தலைமாட்டிலும், மற்றொருவர் என் கால்மாட்டிலும் அமர்ந்து கொண்டனர். அவர்களில் ஒருவர் தம் தோழரிடம், இந்த மனிதரின் நோய் என்ன? என்று கேட்டார். அதற்கு அவருடைய தோழர், இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டுள்ளது என்று பதிலளிக்க, முதலாமவர், இவருக்குச் சூனியம் வைத்தது யார்? என்று வினவினார். அதற்கு லபீத் பின் அஃஸம் என்று தோழர் பதிலளித்தார். அவன் எதில் (சூனியம் வைத்தான்)? என்று கேட்க, சீப்பிலும், சிக்கு முடியிலும், பேரீச்சம் பாளையின் உறையிலும் என்று பதிலளித்தார். அவர், அது எங்கே உள்ளது? என்று கேட்க, மற்றவர், தர்வானில் உள்ளது என்றார்.

-தர்வான் என்பது பனூஸுரைக் குலத்தாரிடையேயிருந்த ஒரு கிணறாகும்.-

பிறகு அங்கு சென்று (பார்வையிட்டு) விட்டு என்னிடம் வந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் மீதாணை யாக! அக்கிணற்றின் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போன்றுள்ளது. அதன் பேரீச்சம் மரங்கள் சாத்தானின் தலையைப் போன்று இருந்தன என்று குறிப்பிட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து என்னிடம் அக்கிணற்றைப் பற்றித் தெரிவித்த போது நான், அல்லாஹ்வின் தூதரே! அ(ந்தப் பாளை உறைக்குள்ள இருப்ப)தைத் தாங்கள் வெளியில் எடுக்கவில்லையா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், எனக்கோ அல்லாஹ் (அதன் பாதிப்பிலிருந்து) நிவாரணமளித்து விட்டான். (அதை வெளியே எடுப்பதன் மூலம்) மக்களிடையே (சூனியக் கலை பரவக் காரணமாகி) குழப்பத்தைக் கிளப்பிவிடுவதை நான் வெறுத்தேன் (ஆகவே தான் அதை வெளியே எடுக்கவில்லை) என்று சொன்னார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் வழியாக வரும் ஓர் அறிவிப்பில், நபி (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டது; நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள்; பிரார்த்தித்தார்கள். (திரும்பத் திரும்பப் பிரார்த்தித்தார்கள்) என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.72

அந்தப் பொருளை வெளியே எடுக்கவில்லை என்று தெளிவாக இந்த் அறிவிப்பு கூறுகிறது. வெளியே எடுத்தார்கள் என்ற அறிவிப்பு அதாவது பொருளை வெளியே எடுத்தார்கள் ஆனால் அதைத் திறந்து காட்டவில்லை என்ற அறிவிப்புடன் இது நேரடியாக மோதி சந்தேகத்தை அதிகமாக்குகிறதா இல்லையா? வெளியே எடுத்தார்கள் என்பதைத் தெளிவாகக் கூறும் முஸ்லிம் அறிவிப்பில் அதை நீங்கள் தீயில் போட்டு எரிக்கவில்லையா என்று கேட்டதாக உள்ளது.

5833 - حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ عَنْ هِشَامٍ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ قَالَتْ سُحِرَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم-. وَسَاقَ أَبُو كُرَيْبٍ الْحَدِيثَ بِقِصَّتِهِ نَحْوَ حَدِيثِ ابْنِ نُمَيْرٍ وَقَالَ فِيهِ فَذَهَبَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- إِلَى الْبِئْرِ فَنَظَرَ إِلَيْهَا وَعَلَيْهَا نَخْلٌ. وَقَالَتْ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ فَأَخْرِجْهُ. وَلَمْ يَقُلْ أَفَلاَ أَحْرَقْتَهُ وَلَمْ يَذْكُرْ فَأَمَرْتُ بِهَا فَدُفِنَتْ .

அறிவிப்புகளுக்கிடையில் முரண்பாடு இருப்பது பற்றி நாம் மேலோட்டமாகவே குறிப்பிட்டோம். முரண்பாடு இல்லாமல் ஒரே விதமாக அறிவிக்கப்பட்டாலும் குர்ஆனுக்கு முரண்படும் ஒரே காரணத்துக்காகவே அந்த ஹதீஸ் நிராகரிக்கப்படும் என்பதை மறந்து விட வேண்டாம்..

ஹதீஸில் கூறப்பட்டுள்ள வார்த்தைகளுக்கு சரியான அர்த்தம் செய்து காட்டி அந்த அர்த்தங்களுக்கு இடையில் முரண்பாடு இல்லை என்று நிரூபிக்காமல் இல்லாத அர்த்தத்தைக் கொடுத்து முரண்பாடு இல்லை என்று கூறுகிறார் என்பது தெளிவாகிறது.

போகிற போக்கில் குர்ஆனில் முரண்பாடு என்று இவர் உளறி இருப்பதற்குப் பதில் சொல்லத் தேவை இல்லை. குர்ஆனுக்கு ஹதீஸ்கள் முரண்பட்டாலும் ஏற்க வேண்டும் என்று மன முரண்டாக யார் வாதிடுகிறார்களோ அவர்கள் அனைவரின் உள்ளத்திலும் குர்ஆனைப் பற்றிய மதிப்பை அல்லாஹ் நீக்கி விடுவதை நாம் காண்கிறோம். அதன் வெளிப்பாடு தான். இது.

அடுத்து சூனியம் செய்யப்பட்ட பொருள் எடுக்கப்பட்டது குறித்து நஸயீ, அஹ்மத் ஹதீஸ்களைக் குறிப்பிட்டிருந்தோம். அது பலவீனமானது என்றும் அஃமஷ் அவர்கள் ஹதீஸில் மோசடி செய்பவர் என்றெல்லாம் அவர் எழுதி தன் அறியாமையைப் பின் வருமாறு வெளிப்படுத்தியுள்ளார்.

சலபியின் வாதம்

அடுத்து, நஸஈ அஹ்மதில் இடம் பெற்றுள்ள ஒரு அறிவிப்பு நேரடியாக இந்த ஹதீஸுடன் முரண்படுகின்றது.

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ், இரண்டு மலக்குகள் வந்து உரையாடிய உரையாடல் மூலம் சூனியம் பற்றி நபி (ஸல்) அவர்கள் அறிந்ததாகக் கூற, ஸைத் இப்னு அர்கம் (ரலி) அவர்களது அறிவிப்பு, ஜிப்ரீல் வந்து நேரடியாகக் கூறியதாகக் கூறுகின்றது. அடுத்தது, ஏனைய ஹதீஸ்கள் நபி(ஸல்) அவர்கள் கிணற்றுக்குச் சென்று அப்பொருட்களை எடுத்ததாகக் கூற, நஸஈ அறிவிப்பு நபி(ஸல்) அவர்கள் ஆள் அனுப்பி அந்தப் பொருட்கள் அவரிடம் எடுத்து வரப்பட்டதாகக் கூறுகின்றது.

இவை முரண்பாடுகள் தான். இப்படி முரண்பட்டால் இரண்டில் எது உறுதியான அறிவிப்பு என்று ஆய்வு செய்ய வேண்டும். ஹதீஸ் துறையில் அறிவும், அனுபவமுமுள்ள சகோதரர் அதைச் செய்யாமல் இரண்டு ஹதீஸ்களையும் மோத விட்டு இரண்டையும் நிராகரிப்பது விசித்திரமானதாகும்.

பலவீனமான ஹதீஸை எடுத்து, பலமான அறிவிப்புடன் மோத விட்டு, பலமான ஹதீஸை மறுக்க முற்பட்டது அதை விட ஆச்சரியமாகும்.

அவர் குறிப்பிட்டுள்ள நஸஈ, அஹ்மத் அறிவிப்பில் இரண்டு குறைகள் உள்ளன.

(1) அல் அஃமஸ என்ற அறிவிப்பாளர் இதில் இடம்பெறுகின்றார். இவர் ஹதீஸ்களை அறிவிக்கும் போது அறிவிப்பாளர்களில் இருட்டடிப்புச் செய்யக் கூடிய முதல்லிஸ் ஆவார். இவர், இன்னாரிடம் நான் கேட்டேன என்று தெளிவாக அறிவிக்காமல் அன் அனா என்று கூறப்படக் கூடிய விதத்தில் அவர் மூலம என அறிவித்தால் அவர் நேரடியாகக் கேட்காமலேயே அறிவித்திருக்க வாய்ப்பு உள்ளது. இந்த அடிப்படையில் அறிவிப்பாளரில் ஒருவரோ, இருவரோ விடுபட்டிருக்க வாய்ப்பு உள்ளது. இந்த அறிவிப்பில் இது ஒரு குறைபாடாகும். இவர் அறிவிப்பாளர் தொடரில் மோசடி செய்பவர் என்றாலும் மிக மோசமான அறிவிப்பாளர்களிடம் செய்தியைக் கேட்டு மோசடி செய்யும் குணம் கொண்டவரல்ல என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். அஃமஸ மூலம் அபூ முஆவியா அறிவிக்கும் ஹதீஸ்கள் ஏற்கப்படும். எனினும் இதில் மற்றுமொரு குறைபாடும் உள்ளது.

(2) அடுத்ததாக, யசீத் இப்னு ஹய்யான் என்பவர் இடம்பெறுகின்றார். இவர் தவறு விடக் கூடியவர்; முரண்பாடாக அறிவிக்கக் கூடியவர் என இப்னு ஹிப்பான் (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

இந்த இரண்டு குறைபாடுகளால் இந்த ஹதீஸ் பலவீனமாகின்றது.

அது போக, சூனியம் பற்றிய ஹதீஸுடன் ஆயிஷா(ரலி) அவர்கள் நேரடியாகச் சம்பந்தப்பட்டவர்கள். ஆனால், இதன் அறிவிப்பாளர் யஸீத் இப்னு அர்கம் அவர்கள் அதனுடன் நேரடியாகச் சம்பந்தப்படாதவர்.

அடுத்ததாக நஸஈ, அஹ்மத் ஹதீஸ் ஆதாரபபூர்வமான அறிவிப்பாளர்களின் ஹதீஸிற்கு முரணாக அமைந்துள்ளது. இப்படி இருக்க, பலவீனமான ஹதீஸின் கருத்தை முன்வைத்து சூனியம் ஹதீஸில் முரண்பாடு உள்ளது என சகோதரர் பிஜே வாதிப்பது எந்த வகையிலும் நியாயமற்றதாகும். இந்த ஹதீஸ் பலவீனமானது என்பதை அறியாமல் பிஜே இந்த வாதத்தை முன்வைத்திருக்கலாம் எனப் பிஜே மீது நல்லெண்ணம் வைக்கலாம். ஏனெனில், எத்தகைய அறிஞர்களுக்கும் தவறு நேரலாம். அல்லாஹ்வின் தூதரைத் தவிர மற்ற எவரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களல்ல. அந்த அடிப்படையில் நல்லெண்ணம் வைப்பதற்குக் கூடப் பிஜே செய்துள்ள திருவிளையாடல இடந்தராமல் போகின்றது.

113, 114 வது அத்தியாயங்கள என்ற தலைப்பில் சூறதுன்னாஸ்-பலக் அத்தியாயங்கள் நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்ட போது அருளப்பட்டன என்ற கருத்தில் அமைந்த பலவீனமான அறிவிப்பை விமர்சனம் செய்யும் போது;

ஹதீஸை விமர்சனம் செய்வதற்கு அறிவிப்பாளர் தொடர் பற்றிப் பேசாமல், அப்துல் ஹமீத் பாகவி-நிஜாமுதீன் மன்பயீ இருவருக்கும் இடையிலுள்ள முரண்பாட்டை ஏன் கூறுகின்றார்? என்று ஆய்வு செய்த போது ஒரு உண்மை புலப்பட்டது.

ஹதீஸ்களுக்கிடையில் அதிக முரண்பாடுகள் இருக்கின்றன எனக் காட்டுவதற்காகப் பிஜே எடுத்து வைத்த நஸஈ-அஹ்மத் அறிப்பாளர் தொடரும், நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்ட போது இவ்விரு சூறாக்களும் அருளப்பட்டன எனக் கூறும் ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரும் ஒரே தொடராகும்.

அபூ முஆவியா, அஃமஸ், யசீதிப்னு ஹய்யான், ஸைத் இப்னு அர்கம் - இந்தத் தொடரில் தான் இரண்டு ஹதீஸ்களும் அறிவிக்கப்படுகின்றன. (ஒரேயொரு அறிவிப்பாளர் மட்டும் வேறுபடுகின்றார்.)

இதில் ஒன்றை ஏற்று பார;த்தீர்களா? ஹதீஸிற்கிடையில் முரண்பாடு இருக்கிறது. எனவே இரண்டு ஹதீஸ்களையும் ஏற்க முடியாது என வாதிட்டவர; அதே அறிவிப்பாளர் தொடரில் வந்த நாஸ்-பலக் அத்தியாயங்கள் அருளப்பட்டன என்ற ஹதீஸை மறுக்கின்றார். இரண்டுமே பலவீனமான அறிவிப்புகளாகும். தனது வாதத்துக்கு வலு சேர்க்க வேண்டுமென்றால் பலவீனமான ஹதீஸையும் எடுப்பேன் என்ற நிலைப்பாட்டை இதில் முன்வைக்கின்றார்;. தேவைப்பட்டால் ஹதீஸில் இல்லாததைச் சேர்த்து மக்கள் மனதில் ஐயத்தை ஏற்படுத்துவேன். தேவைப்பட்டால் குர்ஆனில் கூடச் சில வார்த்தைகளுக்கு அர்த்தம் செய்யாமல் விடுவேன் என்ற அவரது நிலைப்பாடும் உறுதி செய்யப்பட்டு விட்டது. இவர் சொல்லும் கருத்தை விட இவர் செல்லும் இந்தப் போக்குத்தான் ஆபத்தானது என்பதைப் பொது மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்த இவரது போக்கு சமூகத்தை எங்கே கொண்டு போய் நிறுத்தப் போகின்றதோ என்ற அச்சம் கலந்த ஐயம்தான் இது குறித்து எழுதும் எண்ணத்தை ஏற்படுத்தியது.

நமது மறுப்பு

நம்மைப் பொருத்தவரை இவர் சுட்டிக்காட்டும் இந்த ஹதீஸ்கள் மட்டுமின்றி நபிகள் நாயகத்துக்குச் சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறும் அனைத்து ஹதீஸ்களுமே மட்டும் இட்டுக் கட்டப்பட்டவை என்பது தான் ந்மது நிலை.

இந்த நிலையில் அவர் பலவீனமானது என்று ஒப்புக் கொள்ளும் ஒரு ஹதீஸை நாம் பலமானது என்று கூறும் அவசியம் நமக்கு இல்லை. அவரது ஆதாரத்தில் ஒன்று குறைந்து விட்டதால் நமக்கு நல்லது தான். எனவே அவர் பலவீனமானது என்று தள்ளி விட்ட ஹதீஸை நாமும் விட்டு விடுகிறோம். அவர் பலமானது என்று கருதும் மேற்கண்ட அறிவிப்புகளில் காணப்படும் முரண்பாட்டுக்கு உரிய முறையில் விளக்கம் தரட்டும். அல்லது குர்ஆனுக்கு முரண்படுவதால் அவற்றை நாமும் நிராகரிக்கிறோம் என்று கூறட்டும்.

113, 114 ஆகிய அத்தியாயங்கள் சூனியம் குறித்து அருளப்பட்டது என்ற கருத்தில் உள்ள ஹதீஸும் நம்மைப் பொருத்தவரை இட்டுக் கட்டப்பட்டவை தான். குர்ஆனுடன் மோதும் காரணத்துக்காக அது பலவீனமாது எனும் போது அறிவிப்பாளர் குறித்து அலசும் அவசியம் நமக்கு இல்லை.

அறிவிப்பாளர் பலமாக இருந்தாலும் குர்ஆனுடன் மோதினால் ஏற்க மாட்டோம் என்ற ந்மது நிலைபாடு அவருக்கு இன்னும் புரியவில்லை. அவரைப் போலவே நாமும் கருத்து கொண்டிருப்பதாக் எண்ணி நிழலுடன் சண்டை போடுகிறார். தள்ளுபடி செய்ய வேண்டிய செய்திகளில் அறிவிப்பாளர் வரிசையைப் பார்க்க வேண்டியதில்லை.

மொத்தத்தில் பயனற்ற வாதங்களை எடுத்து வைத்து நேரத்தைப் போக்கி இருக்கிறாரே தவிர நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதை மறுத்து நாம் எடுத்து வைத்த எந்த் ஆதாரத்துக்கும் உருப்படியான பதில் தரவைல்லை.

முடிவுரை

 தன்னுடைய ஏழாவது தொடரை முடிக்கும் போது

இன்ஷா அல்லாஹ்! முடிவுரையுடன் இந்தத் தொடர்; முற்றுப் பெறுகின்றது. தர;ஜமாவில் அவர் குறிப்பிட்டுள்ள ஏனைய சில ஹதீஸ்களுக்கான விளக்கங்களையும் சுருக்கமாக முன்வைப்போம். இன்ஷா அல்லாஹ்!

என்று குறிப்பிட்ட அவர் எட்டாவது அதாவது இறுதித் தொடரில் அவர் இந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை.

கட்டுரையின் தலைப்பே மறுக்கப்படும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் என்பது தான். ஸிஹ்ர் பற்றி சில சமாளிப்புகளோடு முடித்துக் கொண்டு தலைப்பையே வாபஸ் பெற்று விட்டார்.

எந்தெந்த ஹதீஸ்கள் குர் ஆனுக்கும் முர்ண்படுகின்றன என்று நாம் பட்டியல் போட்டு விளக்கினோமோ அவற்றுக்கு எல்லாம் பதில் தரப்படும் என்று கூறி விட்டு அதை அம்போ என்று விட்டு விட்டு ஓட்டம் பிடித்து விட்டார். இதன் பின் மீண்டும் அந்த ஹதீஸ்களைச் சுட்டிக்காட்டி மறுப்பு எழுதிய பின்பும் பால் குடி உள்ளிட்ட பல ஹதீஸ்களுக்கு இன்னும் பதிலைக் காணோம்.

மாதங்கள் முடிந்து வருடத்தை நெருங்கிய பின்பும் அந்த ஹதீஸ்கள் பற்றி வாய் திறக்க முடியவில்லை என்பதில் இருந்தே குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள் மார்க்க ஆதாரமாகாது என்பது உறுதியாகிறது.

நபிகள் நாயகம் ஸல் அவர்களுக்கு சூனியம் செய்ய முடியாது என்பது குறித்து அவர் செய்த அனைத்து விமர்சனங்களுக்கும் ஒன்று விடாமல் பதில் அளித்துள்ளோம். இப்பகுதியை இத்துடன் நிறைவு செய்கிறோம்.

அடுத்ததாக ஸிஹ்ர் என்றால் என்ன? ஸிஹ்ர் மூலம் நபிமார்கள் அல்லாத மற்றவர்களுக்கு பாரதூரமான விளைவை ஏற்படுத்த முடியுமா என்ற தலைப்புக்குள் செல்வோம்.

அவர் எடுத்து வைத்த அனைத்து வாதங்களுக்கும் மறுப்பாக மட்டுமின்றி சூனியம் குறித்த் எல்லா ஐயங்களூம் தீரும் வகையில் இத்தொடர் அமையும் இன்ஷா அல்லாஹ்.ஆய்வுகள்ஸிஹ்ர்நபிமார்கள் அல்லாத மற்றவர்பாரதூரமான விளைவைசூனியம்

Published on: January 12, 2010, 6:32 AM Views: 2565

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top