402. பெண்களின் விவாகரத்து உரிமை

402. பெண்களின் விவாகரத்து உரிமை

மனைவியைக் கணவன் விவாகரத்துச் செய்யும்போது நியாயமான முறையில் அவனது சக்திக்கு ஏற்ப அந்தப் பெண்ணுக்கு வசதிகள் செய்து கொடுத்து விட்டுத்தான் விவாகரத்துச் செய்ய வேண்டும் என்பது இஸ்லாத்தின் கட்டளை. (பார்க்க: 74வது குறிப்பு)

"கணவனைப் பிடிக்காத மனைவி கொடுக்க வேண்டியதைக் கொடுத்து விவாகரத்து பெற்றுக் கொள்ளலாம்' என்று இவ்வசனத்தில் (2:229) கூறப்பட்டுள்ளது.

ஆண்களுக்கு விவாகரத்து உரிமை உள்ளது போலவே, பிடிக்காத கணவனை விட்டு முறைப்படிப் பிரிந்து கொள்ளும் உரிமை இஸ்லாத்தில் பெண்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. அந்த உரிமையைத்தான் இவ்வசனம் கூறுகிறது.

இவ்வசனத்தைத் தவறாகப் புரிந்து கொண்ட சில அறிஞர்கள், கணவன் கேட்கும் இழப்பீட்டுத் தொகையைக் கொடுத்து விட்டுத்தான் மனைவி விவாகரத்துப் பெற முடியும் என்று கூறுகின்றனர்.

'அவர் இழப்பீடு கொடுத்துப் பிரிந்து கொள்வது குற்றமில்லை' என்ற இந்த வசனத்தின் சொற்றொடரை இதற்குச் சான்றாகக் கொள்கின்றனர்.

கணவன், எவ்வளவு கேட்கிறானோ அதைக் கொடுக்க வேண்டும் என்பது இதன் பொருள் அல்ல! மாறாக, கணவனிடமிருந்து மஹராக மனைவி எதைப் பெற்றாளோ அதைத்தான் அவள் கொடுக்கக் கடமைப்பட்டவளாவாள். இவ்வசனத்தின் துவக்கத்திலிருந்து பார்த்தால் இதை விளங்க முடியும்.

'நீங்கள் (ஆண்கள்) விவாகரத்துச் செய்தால் நீங்கள் கொடுத்த எதனையும் திரும்பக் கேட்க அனுமதியில்லை' என்பது இவ்வசனத்தின் முற்பகுதியாகும்.

பெண்ணிடமிருந்து விவாகரத்துக் கோரிக்கை வரும்போது, எது இவ்வசனத்தின் முற்பகுதியில் தடுக்கப்பட்டதோ அதை வாங்கிக் கொள்வது குற்றமில்லை என்று இவ்வசனத்தின் பிற்பகுதி அனுமதிக்கின்றது.

அதாவது, ஆண் விவாகரத்துச் செய்யும்போது, அவன் கொடுத்த மஹரைத் திருப்பிக் கேட்கக் கூடாது.

பெண் தரப்பில் விவாகரத்துக் கோரிக்கை வரும்போது, கொடுத்த மஹரை ஆண் திருப்பிக் கேட்கலாம் என்பதுதான் இதன் கருத்தாகும். கொடுத்த மஹரை விட அதிகமாக ஆண் கேட்கலாம் என்பது இதன் கருத்தல்ல.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் இவ்வாறே தீர்ப்பளித்துள்ளனர். (பார்க்க: புகாரீ 5273)

மேலும் விபரத்திற்கு 66வது குறிப்பையும் காண்க!

விவாகரத்து தொடர்பாக மேலும் அறிய 66, 69, 70, 74, 386, 424 ஆகிய குறிப்புகளைக் காண்க!திருக்குர்ஆன்கணவன்மனைவிவிவாகரத்துமஹர்

Published on: November 20, 2013, 12:37 PM Views: 3343

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top