அத்தியாயம் : 20

அத்தியாயம் : 20
தா ஹா - அரபு மொழியின் 16 மற்றும் 26வது எழுத்துக்கள்.

மொத்த வசனங்கள் : 135
தா, ஹா எனும் இரண்டு எழுத்துக்கள் இந்த அத்தியாயத்தின் முதல் வசனமாக இடம் பெறுவதால் இந்த அத்தியாயத்திற்கு இவ்வாறு பெயரிட்டுள்ளனர்.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்... .

1. தா, ஹா.2

2. (முஹம்மதே!) நீர் துர்பாக்கியசாலியாக ஆவதற்காக உமக்கு இக்குர்ஆனை நாம் அருளவில்லை.

3. (நம்மை) அஞ்சுபவருக்கு அறிவுரையாகவே (அருளினோம்.)

4. உயர்வான வானங்களையும்,507 பூமியையும் படைத்தவனிடமிருந்து (இது) அருளப்பட்டது.

5. அளவற்ற அருளாளன் அர்ஷின்488 மீது அமர்ந்தான்.

6. வானங்களில்507 உள்ளவையும், பூமியில் உள்ளவையும், அவ்விரண்டுக்கும் இடையே உள்ளவையும், பூமிக்கு அடியில் உள்ளவையும் அவனுக்கே உரியன.

7. சொல்லை நீர் உரத்துச் சொன்னால் (அதை அறிவதுடன்) இரகசியத்தையும், அதை விட இரகசியத்தையும் அவன் அறிகிறான்.

8. அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அவனுக்கு அழகிய பெயர்கள் உள்ளன.

9. மூஸாவைப் பற்றிய செய்தி உமக்குத் தெரியுமா?

10. அவர் ஒரு நெருப்பைக் கண்டபோது தமது குடும்பத்தினரிடம் "இருங்கள்! நான் ஒரு நெருப்பைக் கண்டேன். அதில் உங்களுக்கு ஒரு தீப்பந்தத்தைக் கொண்டு வருவேன். அல்லது நெருப்புக்கு ஏதேனும் ஒரு வழியைக் கண்டு வருவேன்'' என்றார்.

11. அங்கே அவர் வந்தபோது மூஸாவே என்று அழைக்கப்பட்டார்.

12. "நானே உமது இறைவன். எனவே உமது செருப்புகளைக் கழற்றுவீராக! நீர் துவா எனும் தூய்மையான பள்ளத்தாக்கில் இருக்கிறீர்.

13. நான் உம்மைத் தேர்ந்தெடுத்து விட்டேன். எனவே அறிவிக்கப்படும் தூதுச் செய்தியைச் செவிமடுப்பீராக!

14. நான் தான் அல்லாஹ். என்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. எனவே என்னை வணங்குவீராக! என்னை நினைப்பதற்காக தொழுகையை நிலைநாட்டுவீராக!

15. யுகமுடிவு நேரம்1 வந்தேதீரும். ஒவ்வொருவரும் தமது உழைப்புக்கேற்ப கூலி கொடுக்கப்படுவதற்காக அதை மறைத்து வைத்துள்ளேன்.

16. அதை நம்பாது, தனது மனோ இச்சையைப் பின்பற்றியவன் அதை விட்டும் உம்மைத் தடுத்திட வேண்டாம். (அவ்வாறாயின்) நீர் அழிந்து விடுவீர்!

17. "மூஸாவே! உமது வலது கையில் இருப்பது என்ன?'' என்று இறைவன் கேட்டான்.

18. "இது எனது கைத்தடி. இதன் மீது ஊன்றிக் கொள்வேன். இதன் மூலம் எனது ஆடுகளுக்கு இலை பறிப்பேன். எனக்கு வேறு பல தேவைகளும் இதில் உள்ளன'' என்று அவர் கூறினார்.

19. "மூஸாவே! அதைப் போடுவீராக!'' என்று அவன் கூறினான்.

20. அதை அவர் போட்டபோது உடனே அது சீறும் பாம்பாக ஆனது.

21. "அஞ்சாமல் அதைப் பிடிப்பீராக! அதனுடைய முந்தைய நிலைக்கு அதை மாற்றுவோம்'' என்று அவன் கூறினான்.

22. உமது கையை உமது விலாப்புறத்துடன் சேர்ப்பீராக! தீங்கற்ற வெண்மையாக அது வெளிப்படும். இது மற்றொரு சான்றாகும்.

23. நமது மகத்தான சான்றுகளில் சிலவற்றை உமக்குக் காட்டுகிறோம்.

24. நீர் ஃபிர்அவ்னிடம் செல்வீராக! அவன் வரம்பு மீறி விட்டான் (என்று இறைவன் கூறினான்)

25. "என் இறைவா! எனது உள்ளத்தை எனக்கு விரிவுபடுத்து!'' என்றார்.

26. எனது பணியை எனக்கு எளிதாக்கு!

27. எனது நாவில் உள்ள முடிச்சை அவிழ்த்து விடு!

28. (அப்போது தான்) எனது சொல்லை அவர்கள் புரிந்து கொள்வார்கள்.

29, 30. எனது குடும்பத்திலிருந்து என் சகோதரர் ஹாரூனை எனக்கு உதவியாளராக ஏற்படுத்து!26

31. அவர் மூலம் என்னைப் பலப்படுத்து!

32. எனது பணியில் அவரையும் கூட்டாக்கு!

33. நாங்கள் உன்னை அதிகமாகத் துதிப்பதற்காக.

34. உன்னை அதிகமாக நாங்கள் நினைப்பதற்காக.

35. நீ எங்களைப் பார்ப்பவனாக488 இருக்கிறாய் (என்றார்.)

36. "மூஸாவே! உமது கோரிக்கை ஏற்கப்பட்டது'' என்று அவன் கூறினான்.

37. இன்னொரு தடவை உமக்கு அருள் புரிந்துள்ளோம்.

38. அறிவிக்கப்பட வேண்டியதை உமது தாயாருக்கு நாம் அறிவித்ததை எண்ணிப் பார்ப்பீராக!

39. "இவரை (இக்குழந்தையை) பெட்டிக்குள் வைத்து அதைக் கடலில் போடுவாயாக! கடல் அவரைக் கரையில் சேர்க்கும். எனக்கும், இவருக்கும் எதிரியானவன் இவரை எடுத்துக் கொள்வான்'' (என்று உமது தாயாருக்கு அறிவித்தோம்). எனது கண்காணிப்பில் நீர் வளர்க்கப்படுவதற்காக உம்மீது என் அன்பையும் செலுத்தினேன். 

40. உமது சகோதரி நடந்து சென்று, "இக்குழந்தையைப் பொறுப்பேற்பவரைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?'' என்று கேட்டார். எனவே உமது தாயின் கண் குளிர்வதற்காகவும், அவர் கவலைப்படாமல் இருப்பதற்காகவும் அவரிடம் உம்மைத் திரும்பச் சேர்த்தோம்.484 நீர் ஓர் உயிரைக் கொன்றிருந்தீர்.375 உம்மைக் கவலையிலிருந்து காப்பாற்றினோம். உம்மைப் பல வழிகளில் சோதித்தோம். மத்யன்வாசிகளிடம் பல வருடங்கள் வசித்தீர். மூஸாவே! பின்னர் (நமது) திட்டப்படி வந்து சேர்ந்தீர்.

41. எனக்காக உம்மைத் தேர்ந்தெடுத்து விட்டேன்.

42. நீரும், உமது சகோதரரும் எனது சான்றுகளுடன் செல்லுங்கள்! என்னை நினைப்பதில் சோர்வடையாதீர்கள்!

43. இருவரும் ஃபிர்அவ்னிடம் செல்லுங்கள்! அவன் வரம்பு மீறி விட்டான்.

44. "அவனிடம் மென்மையான சொல்லையே இருவரும் சொல்லுங்கள்! அவன் படிப்பினை பெறலாம். அல்லது (என்னை) அஞ்சலாம்'' (என்றும் கூறினான்.)

45. "எங்கள் இறைவா! அவன் எங்களுக்குத் தீங்கிழைப்பான்; அல்லது அவன் எங்கள் மீது வரம்பு மீறுவான்; என அஞ்சுகிறோம்'' என்று இருவரும் கூறினர்.

46. "அஞ்சாதீர்கள்! நான் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் உங்களுடன்49 இருக்கிறேன்'' என்று அவன் கூறினான்.

47, 48. இருவரும் அவனிடம் சென்று ''நாங்கள் உனது இறைவனின் தூதர்கள். எனவே இஸ்ராயீலின் மக்களை எங்களுடன் அனுப்பி விடு!181 அவர்களைத் துன்புறுத்தாதே! உனது இறைவனிடமிருந்து உன்னிடம் சான்றைக் கொண்டு வந்துள்ளோம். நேர்வழியைப் பின்பற்றியோர் மீது நிம்மதி உண்டாகட்டும். பொய்யெனக் கருதிப் புறக்கணித்தவருக்கு வேதனை உண்டு என எங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது'' என்று கூறுங்கள்!26

49. "மூஸாவே! உங்களிருவரின் இறைவன் யார்?'' என்று அவன் கேட்டான்.

50. "ஒவ்வொரு பொருளுக்கும் அதற்குரிய தோற்றத்தை வழங்கி பின்னர் வழி காட்டியவனே எங்கள் இறைவன்'' என்று அவர் கூறினார்.

51. "முந்தைய தலைமுறையினரின் நிலை என்ன?'' என்று அவன் கேட்டான்.

52. "அது பற்றிய ஞானம் எனது இறைவனிடம் (உள்ள) பதிவேட்டில்157 இருக்கிறது. என் இறைவன் தவறிட மாட்டான். மறக்கவும் மாட்டான்'' என்று அவர் கூறினார்.

53. அவனே பூமியை உங்களுக்குத் தொட்டிலாக அமைத்தான்.284 உங்களுக்காக அதில் பாதைகளை எளிதாக்கினான். வானத்திலிருந்து507 தண்ணீரை இறக்கி, அதன் மூலம் பல தரப்பட்ட தாவரங்களை ஜோடிகளாக242 வெளிப்படுத்தினோம்.

54. உண்ணுங்கள்! உங்கள் கால்நடைகளை மேய விடுங்கள்! அறிவுடையோருக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.

55. இதிலிருந்தே உங்களைப் படைத்தோம். இதிலேயே உங்களை மீளச் செய்வோம். மற்றொரு தடவை இதிலிருந்தே உங்களை வெளிப்படுத்துவோம்.

56. அவனுக்கு (ஃபிர்அவ்னுக்கு) நமது சான்றுகள் அனைத்தையும் காட்டினோம். அவன் பொய்யெனக் கருதி மறுத்து விட்டான்.

57. "மூஸாவே! உமது சூனியத்தால்285 எங்கள் பூமியிலிருந்து எங்களை வெளியேற்ற எங்களிடம் வந்துள்ளீரா?'' என்று அவன் கேட்டான்.

58. "இது போன்ற ஒரு சூனியத்தை நாமும் உம்மிடம் செய்து காட்டுவோம். எமக்கும் உமக்குமிடையே (போட்டி நடத்திட) பொதுவான இடத்தில் ஒரு நேரத்தை நிர்ணயிப்பீராக! அதை நாமும் நீரூம் மீறாதிருப்போம்'' (என்றும் கூறினான்.)

59. "பண்டிகை நாளே உங்களுக்குரிய நேரம். முற்பகலில் மக்கள் ஒன்று திரட்டப்படட்டும்'' என்று அவர் கூறினார்.

60. ஃபிர்அவ்ன் திரும்பிச் சென்று தனது சூழ்ச்சியை ஒருமுகப்படுத்தினான். பின்னர் வந்தான்.

61. "உங்களுக்குக் கேடு தான் ஏற்படும். அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டாதீர்கள்! அவன் உங்களை வேதனையால் அழிப்பான். இட்டுக்கட்டியவன் நட்டமடைந்து விட்டான்'' என்று அவர்களிடம் மூஸா கூறினார்.

62. அவர்கள் தமது காரியத்தில் தமக்கிடையே விவாதம் செய்தனர். அதை இரகசியமாகச் செய்தனர்.

63. "இவ்விருவரும் சூனியக்காரர்கள்.285 தமது சூனியத்தின் மூலம் உங்களை உங்களது பூமியிலிருந்து வெளியேற்ற எண்ணுகின்றனர். சிறந்த உங்கள் வழிமுறையை அழிக்கவும் நினைக்கின்றனர்'' எனக் கூறினர்.357

64. "உங்கள் சூழ்ச்சியை ஒருமுகப்படுத்துங்கள்! பின்னர் அணிவகுத்து வாருங்கள்! போட்டியில் வெல்பவரே இன்று வெற்றி பெற்றவர்'' (என்றனர்)

65. "மூஸாவே! நீர் போடுகிறீரா? நாங்கள் முதலில் போடட்டுமா?'' என்று (சூனியக்காரர்கள்) கேட்டனர்.

66. "இல்லை! நீங்களே போடுங்கள்!'' என்று அவர் கூறினார். உடனே அவர்களின் கயிறுகளும், கைத்தடிகளும் அவர்களது சூனியத்தினால் சீறுவதைப் போல்285 அவருக்குத் தோற்றமளித்தது.357

67. மூஸா தமக்குள் அச்சத்தை உணர்ந்தார்.

68. "அஞ்சாதீர்! நீர் தான் வெல்பவர்'' என்று நாம் கூறினோம்.

69. "உமது வலது கையில் உள்ளதைப் போடுவீராக! அவர்கள் செய்தவற்றை அது விழுங்கி விடும். அவர்கள் செய்திருப்பது சூனியக்காரனின் சூழ்ச்சி.285 (போட்டிக்கு) வரும்போது சூனியக்காரன் வெற்றி பெற மாட்டான்'' (என்றும் கூறினோம்.)357

70. உடனே சூனியக்காரர்கள் ஸஜ்தாவில் விழுந்து, "மூஸா மற்றும் ஹாரூனின் இறைவனை நம்பினோம்'' என்றனர்.357

71. "நான் உங்களுக்கு அனுமதியளிப்பதற்கு முன் அவரை நம்பி விட்டீர்களா? அவரே உங்களுக்குச் சூனியத்தைக் கற்றுத் தந்த உங்களது குருவாவார்.285 எனவே உங்களை மாறுகால் மாறுகை வெட்டி, உங்களைப் பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்தில் சிலுவையில் அறைவேன். நம்மில் கடுமையாகத் தண்டிப்பவரும், நிலையானவரும் யார் என்பதை (அப்போது) அறிந்து கொள்வீர்கள்'' என்று அவன் கூறினான்.

72. "எங்களிடம் வந்த தெளிவான சான்றுகளையும், எங்களைப் படைத்தவனையும் விட நாங்கள் உன்னைத் தேர்ந்தெடுக்கப் போவதில்லை. நீ கூற வேண்டிய தீர்ப்பைக் கூறிக் கொள்! இவ்வுலக வாழ்க்கையில் தான் நீ தீர்ப்பு வழங்குவாய்'' என்று அவர்கள் கூறினார்கள்.

73. "எங்கள் குற்றங்களையும், நீ எங்களைக் கட்டாயப்படுத்தி செய்ய வைத்த சூனியத்தையும்357 எங்கள் இறைவன் மன்னிப்பதற்காக எங்கள் இறைவனை நாங்கள் நம்பி விட்டோம். அல்லாஹ்வே சிறந்தவன்; நிலையானவன்'' (என்றும் கூறினர்.)

74. தனது இறைவனிடம் குற்றவாளியாக வருபவனுக்கு நரகமே உள்ளது. அதில் அவன் சாகவும் மாட்டான். வாழவும் மாட்டான்.

75. நல்லறங்கள் புரிந்து நம்பிக்கை கொண்டவராக அவனிடம் வருவோர்க்கே உயர்வான பதவிகள் உள்ளன.

76. நிலையான சொர்க்கச் சோலைகள் உள்ளன. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே பரிசுத்தமாக வாழ்ந்தோரின் கூலி.

77. "எனது அடியார்களை அழைத்துச் செல்வீராக! கடலில் அவர்களுக்காக ஈரமில்லாத ஒரு வழியை ஏற்படுத்திக் கொடுப்பீராக! பிடிக்கப்பட்டு விடுவதைப் பற்றிப் பயப்படாதீர்! (வேறெதற்கும்) அஞ்சாதீர்!'' என்று மூஸாவுக்கு அறிவித்தோம்.

78. ஃபிர்அவ்ன் தனது படையினருடன் அவர்களைப் பின்தொடர்ந்தான். கடலில் மூட வேண்டியது அவர்களை மூடிக் கொண்டது.

79. ஃபிர்அவ்ன் தனது சமுதாயத்தை வழிகெடுத்தான். நேர்வழி காட்டவில்லை.

80. இஸ்ராயீலின் மக்களே! உங்கள் எதிரியிடமிருந்து உங்களைக் காப்பாற்றினோம். தூர் மலையின் வலப்பகுதியை உங்களுக்கு வாக்களித்தோம். உங்களுக்கு மன்னு, ஸல்வா442 (எனும் உண)வை இறக்கினோம்.

81. நாம் உங்களுக்கு வழங்கியவற்றில் தூய்மையானதை உண்ணுங்கள்! இங்கே வரம்பு மீறாதீர்கள்! (அவ்வாறு செய்தால்) எனது கோபம் உங்கள் மீது இறங்கும். எவன் மீது எனது கோபம் இறங்கி விட்டதோ அவன் வீழ்ந்து விட்டான்.

82. திருந்தி, நம்பிக்கை கொண்டு, நல்லறம் செய்து, பின்னர் நேர்வழி பெற்றவரை நான் மன்னிப்பேன்.

83. "மூஸாவே! உமது சமுதாயத்தை விட்டு விட்டு அவசரமாக வந்தது ஏன்?'' (என்று இறைவன் கேட்டான்.)

84. "அவர்கள் இதோ எனக்குப் பின்னால் வருகின்றனர். என் இறைவா! நீ திருப்திப்படுவதற்காக உன்னிடம் விரைந்து வந்தேன்'' என்று அவர் கூறினார்.

85. "உமக்குப் பின் உமது சமுதாயத்தை நாம் சோதித்தோம்.484 அவர்களை ஸாமிரி வழிகெடுத்து விட்டான்'' என்று (இறைவன்) கூறினான்.

86. "உடனே மூஸா தமது சமுதாயத்திடம் கோபமாகவும், கவலைப்பட்டவராகவும் திரும்பினார். "என் சமுதாயமே! உங்கள் இறைவன் உங்களுக்கு அழகான வாக்குறுதியை அளிக்கவில்லையா? அல்லது (நான் புறப்பட்டுப் போய்) அதிக காலம் ஆகி விட்டதா? அல்லது உங்கள் இறைவனிடமிருந்து உங்கள் மீது கோபம் இறங்க வேண்டும் என விரும்பி என்னிடம் கொடுத்த வாக்கை மீறினீர்களா?'' என்று கேட்டார்.

87. "நாங்கள் உம்மிடம் கொடுத்த வாக்குறுதிக்கு திட்டமிட்டு மாறுசெய்யவில்லை. மாறாக அந்தச் சமுதாயத்தின் அணிகலன்கள் எங்கள் மீது சுமத்தப்பட்டன. அதை வீசினோம். இவ்வாறே ஸாமிரியும் வீசினான்.

88. அவர்களுக்காக உடலுடன் கூடிய காளைக் கன்றை (அவன்) வெளிப்படுத்தினான். அது சப்தமும் போட்டது. உடனே அவர்க(ளில் அறிவீனர்க)ள் "இதுவே உங்கள் இறைவன். மூஸாவின் இறைவன். அவர் வழிமாறிச் சென்று விட்டார்'' என்றனர்.19

89. "அது எந்தச் சொல்லுக்கும் பதிலளிக்காது என்பதையும், அவர்களுக்குத் தீங்கு செய்யவும், நன்மை செய்யவும் அது அதிகாரம் பெற்றிருக்கவில்லை'' என்பதையும் அவர்கள் கவனிக்க வேண்டாமா?

90. "என் சமுதாயமே! இதன் மூலம் சோதிக்கப்பட்டுள்ளீர்கள்!484 அளவற்ற அருளாளன் தான் உங்கள் இறைவன். எனவே என்னைப் பின்பற்றுங்கள்! எனது கட்டளைக்குக் கட்டுப்படுங்கள்!'' என்று இதற்கு முன் அவர்களிடம் ஹாரூன் கூறியிருந்தார்.

91. "மூஸா, எங்களிடம் திரும்பி வரும் வரை இதிலேயே நீடிப்போம்'' என்று அவர்கள் கூறினர்.

92, 93. "ஹாரூனே! அவர்கள் வழிகெட்டதை நீர் பார்த்தபோது என்னை நீர் பின்பற்றாதிருக்க உமக்கு என்ன தடை? எனது கட்டளையை மீறி விட்டீரே!'' என்று (மூஸா) கேட்டார்.26

94. "என் தாயின் மகனே! எனது தாடியையும், எனது தலையையும் பிடிக்காதீர்! எனது வார்த்தைக்காக காத்திராமல் இஸ்ராயீலின் மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தி விட்டீர் என்று கூறுவீரோ என அஞ்சினேன்'' என்று (ஹாரூன்) கூறினார்.

95. "ஸாமிரியே! உனது விஷயமென்ன?'' என்று (மூஸா) கேட்டார்.

96. "அவர்கள் காணாததைக் கண்டேன். இத்தூதரின் காலடியில் ஒரு பிடி அள்ளினேன். அதை எறிந்தேன். என் மனம் இவ்வாறு என்னைத் தூண்டியது'' என்றான்.19

97. "நீ சென்று விடு! உனது வாழ்க்கையில் 'தீண்டாதே' என நீ கூறும் நிலையே இருக்கும். மாற்றப்பட முடியாத வாக்களிக்கப்பட்ட நேரமும் உனக்கு உள்ளது. நீ வணங்கிய உனது கடவுளைப் பார்! அதை நெருப்பில் எரித்து பின்னர் அதைக் கடலில் தூவுவோம்'' என்று (மூஸா) கூறினார்.19

98. உங்கள் இறைவன் அல்லாஹ்வே. அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. ஒவ்வொரு பொருளையும் விரிவாக அவன் அறிந்து வைத்திருக்கிறான்.

99. (முஹம்மதே!) இவ்வாறே முன் சென்ற செய்திகளை உமக்குக் கூறுகிறோம். நம் அறிவுரையையும் உமக்கு வழங்கியுள்ளோம்.

100. இதைப் புறக்கணிப்போர் கியாமத் நாளில்1 பாவத்தைச் சுமப்பார்கள்.

101. அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். கியாமத் நாளில்1 அவர்களுக்கு அது மிகவும் கெட்ட சுமை.

102. ஸூர் ஊதப்படும் நாளில் குற்றவாளிகளை நீல நிறக் கண்களுடையோராக எழுப்புவோம்.

103. "நீங்கள் பத்து நாட்கள் தவிர (உலகில்) வசிக்கவில்லை'' என்று தமக்கிடையே அவர்கள் இரகசியமாகப் பேசிக் கொள்வார்கள்.

104. "நீங்கள் ஒரு நாள் தவிர (உலகில்) வசிக்கவில்லை'' என்று அவர்களில் அறிவுமிக்கவர்கள் கூறும்போது அவர்கள் கூறுவதை நாம் நன்கறிவோம்.

105. (முஹம்மதே!) மலைகளைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். "என் இறைவன் அவற்றைத் தூள் தூளாக்குவான்'' என்று கூறுவீராக!

106. பின்னர் அதை வெட்டவெளிப் பொட்டலாக ஆக்குவான். 

107. அதில் மேடு பள்ளத்தைக் காணமாட்டீர்!

108. எவ்வித மறுப்புமின்றி அந்நாளில்1 அழைப்பாளரைப் பின்தொடர்வார்கள். அளவற்ற அருளாளனிடம் ஓசைகள் யாவும் ஒடுங்கி விடும். காலடிச் சப்தம் தவிர வேறெதனையும் நீர் செவியுற மாட்டீர்!

109. அந்நாளில் அளவற்ற அருளாளன் யாருக்கு அனுமதியளித்து அவரது சொல்லையும் பொருந்திக் கொண்டானோ அவரைத் தவிர எவரது பரிந்துரையும்17 பயனளிக்காது.

110. அவர்களுக்கு முன்னே உள்ளதையும், அவர்களுக்குப் பின்னே உள்ளதையும் அவன் அறிகிறான். அவனை அவர்கள் முழுமையாக அறிந்து கொள்ள மாட்டார்கள்.

111. என்றென்றும் உயிருடனிருப்பவன் முன்னே முகங்கள் கவிழ்ந்து விடும். அநியாயத்தைச் சுமந்தவன் நட்டமடைந்து விட்டான்.

112. நம்பிக்கை கொண்ட நிலையில் நல்லறங்களைச் செய்பவர், அநீதி இழைக்கப்படும் என்றோ குறைவாக வழங்கப்படும் என்றோ அஞ்ச மாட்டார்.

113. இவ்வாறே அவர்கள் (இறைவனை) அஞ்சுவதற்காகவும், அல்லது அவர்களுக்குப் படிப்பினை உண்டாக்கவும் குர்ஆனை அரபு489 மொழியில் அருளினோம்.227 இதில் தெளிவாக எச்சரித்துள்ளோம்.

114. உண்மையான அரசனாகிய அல்லாஹ் உயர்ந்து விட்டான். (முஹம்மதே!) அவனது தூதுச்செய்தி உமக்கு முழுமையாகக் கூறப்படுவதற்கு முன்152 குர்ஆன் விஷயத்தில் அவசரப்படாதீர்! "என் இறைவா! எனக்குக் கல்வியை அதிகப்படுத்து'' எனக் கூறுவீராக!447

115. இதற்கு முன் ஆதமிடம் உறுதிமொழி எடுத்தோம். அவர் மறந்து விட்டார். அவரிடம் உறுதியை நாம் காணவில்லை.

116. "ஆதமுக்குப் பணியுங்கள்!''11 என்று வானவர்களிடம் நாம் கூறியபோது இப்லீஸைத் தவிர அனைவரும் பணிந்தனர். அவன் மறுத்து விட்டான்.

117. ஆதமே! இவன் உமக்கும், உமது மனைவிக்கும் எதிரியாவான். இவன் உங்களைச் சொர்க்கத்திலிருந்து12 வெளியேற்றிட வேண்டாம். அப்போது நீர் துர்பாக்கியசாலியாவீர்! என்று கூறினோம்.

118. இங்கே நீர் பசியோடு இருக்க மாட்டீர்! நிர்வாணமாக மாட்டீர்!

119. இங்கே நீர் தாகத்துடனும் இருக்க மாட்டீர்! உம்மீது வெயிலும் படாது! (என்று கூறினோம்).

120. அவரிடம் ஷைத்தான் தீய எண்ணத்தை ஏற்படுத்தினான். ஆதமே! நிலையான (வாழ்வளிக்கும்) மரத்தைப்13 பற்றியும், அழிவில்லா ஆட்சியைப் பற்றியும் நான் உமக்கு அறிவிக்கட்டுமா? (என்றான்.)

121. அவ்விருவரும் அதிலிருந்து சாப்பிட்டனர். அவ்விருவருக்கும் தங்களது வெட்கத்தலங்கள் பற்றித் தெரிந்தது.174 அவ்விருவரும் சொர்க்கத்தின்12 இலையால் தங்களை மறைத்துக் கொள்ள முற்பட்டனர். ஆதம் தமது இறைவனுக்கு மாறுசெய்தார். எனவே அவர் வழிதவறினார்.

122. பின்னர் அவரை அவரது இறைவன் தேர்ந்தெடுத்தான். அவரை மன்னித்து நேர்வழி காட்டினான்.

123. இருவரும் ஒட்டுமொத்தமாக இங்கிருந்து இறங்குங்கள்! உங்களில் சிலருக்கு சிலர் பகைவர்களாவீர்கள். என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வரும். அப்போது எனது நேர்வழியைப் பின்பற்றுபவர் வழிதவற மாட்டார். துர்பாக்கியசாலியாகவும் மாட்டார் என்று கூறினான்.

124. எனது போதனையைப் புறக்கணிப்பவனுக்கு நெருக்கடியான வாழ்க்கை உண்டு. அவனை கியாமத் நாளில் குருடனாக எழுப்புவோம்.

125. "என் இறைவா! நான் பார்வையுடையவனாக இருந்தேனே? ஏன் என்னைக் குருடனாக எழுப்பினாய்?'' என்று அவன் கேட்பான்.

126. "'அப்படித்தான். நம்முடைய வசனங்கள் உன்னிடம் வந்தன. அதை நீ மறந்தாய். அவ்வாறே இன்று மறக்கப்படுகிறாய்'' என்று (இறைவன்) கூறுவான்.

127. தனது இறைவனின் வசனங்களை நம்பாமல் வரம்பு மீறி நடப்பவனுக்கு இவ்வாறே கூலி கொடுப்போம். மறுமையின் வேதனை கடுமையானது; நிலையானது.

128. அவர்களுக்கு முன்னர் எத்தனையோ தலைமுறையினரை அழித்துள்ளோம் என்பது அவர்களுக்கு நேர்வழியைக் காட்டவில்லையா? அவர்கள் குடியிருந்த இடங்களில் இவர்கள் நடக்கின்றனர். அறிவுடையோருக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.

129. உமது இறைவனிடமிருந்து குறிப்பிட்ட காலக்கெடுவும், விதியும் முந்தியிருக்காவிட்டால் (அழிவு) நிச்சயமாகி இருக்கும்.

130. (முஹம்மதே!) அவர்கள் கூறுவதைச் சகித்துக் கொள்வீராக! சூரியன் உதிப்பதற்கு முன்பும், அது மறைவதற்கு முன்பும், இரவு நேரங்களிலும் உமது இறைவனைப் போற்றிப் புகழ்வீராக! பகலின் ஓரங்களிலும் துதிப்பீராக! இதனால் (கிடைக்கும் கூலியில்) நீர் திருப்தியடையலாம்.

131. (முஹம்மதே!) சோதிப்பதற்காக484 அவர்களில் சிலருக்கு நாம் வழங்கிய இவ்வுலக வாழ்க்கையின் கவர்ச்சியை நோக்கி உமது கண்களை நீட்டாதீர்! உமது இறைவனின் செல்வம் சிறந்ததும், நிலையானதுமாகும்.

132. (முஹம்மதே!) தொழுமாறு உமது குடும்பத்தினரை ஏவுவீராக! அதில் (ஏற்படும் சிரமங்களை) சகித்துக் கொள்வீராக! உம்மிடம் நாம் செல்வத்தைக் கேட்கவில்லை. நாமே உமக்குச் செல்வத்தை அளிக்கிறோம். (இறை) அச்சத்திற்கே (நல்ல) முடிவு உண்டு.

133. "இவர் தமது இறைவனிடமிருந்து சான்றை நம்மிடம் கொண்டு வர வேண்டாமா?'' என்று அவர்கள் கேட்கின்றனர். முந்தைய வேதங்களில் உள்ள சான்று அவர்களை வந்தடையவில்லையா?

134. முன்னரே வேதனையின் மூலம் நாம் அவர்களை அழித்திருந்தால் "எங்கள் இறைவா! எங்களிடம் ஒரு தூதரை நீ அனுப்பியிருக்கக் கூடாதா? நாங்கள் இழிவையும், அவமானத்தையும் அடையுமுன் உனது வசனங்களைப் பின்பற்றியிருப்போமே'' என்று கூறியிருப்பார்கள்.

135. "அனைவரும் எதிர்பார்க்கின்றனர். நீங்களும் எதிர்பாருங்கள்! நேரான வழிக்கு உரியவர் யார்? நேர்வழி பெற்றவர் யார் என்பதை அறிந்து கொள்வீர்கள்'' என்று கூறுவீராக!

To read this Chapter in English click here.

(14வது பதிப்பின்படி திருத்தி அமைக்கப்பட்டது)

July 8, 2009, 9:47 PM

அத்தியாயம் : 21

அத்தியாயம் : 21
அல் அன்பியா - நபிமார்கள்

மொத்த வசனங்கள் : 112
மூஸா, ஹாரூன், இப்ராஹீம், லூத், இஸ்ஹாக், யாகூப், நூஹ், தாவூத், ஸுலைமான், அய்யூப், இஸ்மாயீல், இத்ரீஸ், துல் கிஃப்ல், யூனுஸ், ஸகரிய்யா ஆகிய நபிமார்கள் குறித்து பேசப்படுவதால் இந்த அத்தியாயம் நபிமார்கள் என்று பெயர் சூட்டப்பட்டது.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்... .

1. மனிதர்களுக்கு அவர்களின் விசாரணை நெருங்கி விட்டது. அவர்களோ புறக்கணித்து, கவனமின்றி உள்ளனர்.

2. தங்களின் இறைவனிடமிருந்து புதிதாக ஒரு செய்தி அவர்களிடம் வரும்போதெல்லாம் விளையாட்டாகவே அதைச் செவிமடுக்கின்றனர்.

3. அவர்களின் உள்ளங்கள் அலட்சியம் செய்கின்றன. "இவர் உங்களைப் போன்ற மனிதர் தவிர யார்? பார்த்துக் கொண்டே இந்த சூனியத்திடம்285 செல்கிறீர்களா?'' என்று அநீதி இழைத்தோர் மிகவும் இரகசியமாகப் பேசுகின்றனர்.357

4. "என் இறைவன் வானத்திலும்,507 பூமியிலும் உள்ள சொல்லை அறிகிறான். அவன் செவியுறுபவன்;488 அறிபவன்'' என்று (தூதர்) கூறினார்.

5. அதற்கவர்கள் "இ(வர் கூறுவ)து அர்த்தமற்ற கனவு! இல்லை! இதை இவராக இட்டுக்கட்டினார்! இல்லை! இவர் ஒரு கவிஞர்! முன்னோர்களுக்குக் கொடுக்கப்பட்டது போன்ற சான்றை அவர் நம்மிடம் கொண்டு வரட்டும்'' என்று கூறுகின்றனர்.

6. இவர்களுக்கு முன்னர் நாம் அழித்த எந்த ஊரும் நம்பிக்கை கொள்ளவில்லை. இவர்கள் நம்பிக்கை கொள்வார்களா?

7. (முஹம்மதே!) உமக்கு முன் ஆண்களையே தூதர்களாக அனுப்பினோம்.239 அவர்களுக்கு தூதுச்செய்தி அறிவித்தோம். நீங்கள் அறியாதிருந்தால் அறிவுடையோரிடம் கேளுங்கள்!

8. உணவு உட்கொள்ளாத உடலாக அவர்களை நாம் ஆக்கவில்லை. அவர்கள் நிரந்தரமாகவும் இருக்கவில்லை.

9. அவர்களுக்கு (அளித்த) வாக்குறுதியைப் பின்னர் உண்மையாக்கி அவர்களையும், நாம் நாடியோரையும் காப்பாற்றினோம். வரம்பு மீறியோரை அழித்தோம்.

10. உங்களிடம் ஒரு வேதத்தை அருளினோம். அதில் உங்களுக்கு அறிவுரை இருக்கிறது. நீங்கள் விளங்க வேண்டாமா?

11. அநீதி இழைத்துக் கொண்டிருந்த எத்தனையோ ஊர்களை வேரறுத்தோம். அதற்குப் பின் மற்றொரு சமுதாயத்தை உருவாக்கினோம்.

12. நமது வேதனையை அவர்கள் உணர்ந்தபோது உடனே அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

13. ஓட்டம் பிடிக்காதீர்கள்! நீங்கள் அனுபவித்தவற்றுக்கும், உங்கள் குடியிருப்புக்களுக்கும் திரும்புங்கள்! நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். (என்று கூறப்பட்டது)

14. "எங்களுக்குக் கேடு தான். நாங்கள் அநீதி இழைத்து விட்டோம்'' என்று அவர்கள் கூறினர்.

15. அறுவடை செய்யப்பட்டு எரிக்கப்பட்டது போல் அவர்களை நாம் ஆக்கும் வரை இதுவே அவர்களின் கூப்பாடாக இருந்தது.

16. வானத்தையும்,507 பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டவற்றையும் விளையாட்டாக நாம் படைக்கவில்லை.

17. வேடிக்கையை (விளையாட்டை) ஏற்படுத்திக் கொள்வதாக இருந்தால் நம்மிடமிருந்தே அதை ஏற்படுத்தியிருப்போம். நாம் (எதையும்) செய்வோரே.

18. உண்மையைப் பொய்யின் மேல் வீசுகிறோம். அது பொய்யை நொறுக்குகிறது. உடனே பொய் அழிந்து விடுகிறது. (இறைவனைப் பற்றி) நீங்கள் (தவறாக) வர்ணிப்பதால் உங்களுக்குக் கேடு தான்.

19. வானங்களிலும்,507 பூமியிலும் உள்ளவை அவனுக்கே உரியன. அவனிடத்தில் இருப்போர் அவனது வணக்கத்தை விட்டும் பெருமையடிக்க மாட்டார்கள். சோர்வடையவும் மாட்டார்கள்.

20. இரவிலும், பகலிலும் துதிப்பார்கள். சலிப்படைய மாட்டார்கள்.

21. கடவுள்களைப் பூமியிலிருந்து இவர்கள் தயாரிக்கிறார்களா? அவர்கள் உயிர் கொடுத்து எழுப்புவார்களா?

22. அவ்விரண்டிலும் (வானங்களிலும், பூமியிலும்) அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள்கள் இருந்திருந்தால் இரண்டும் சீரழிந்திருக்கும். அவர்கள் கூறுவதை விட்டும் அர்ஷின்488 அதிபதியாகிய அல்லாஹ் தூயவன்.10

23. அவன் செய்வது பற்றி விசாரிக்கப்பட மாட்டான். அவர்களே விசாரிக்கப்படுவார்கள்.

24. அவனையன்றி கடவுள்களை ஏற்படுத்திக் கொண்டார்களா? "உங்கள் சான்றுகளைக் கொண்டு வாருங்கள்! இதுவே என்னுடனிருப்போரின் அறிவுரையும், எனக்கு முன் சென்றோரின் அறிவுரையுமாகும்'' என்று (முஹம்மதே!) கூறுவீராக! எனினும் அவர்களில் பெரும்பாலோர் உண்மையை அறிய மாட்டார்கள். அவர்கள் புறக்கணிப்பவர்கள்.

25. "என்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை; எனவே என்னையே வணங்குங்கள்!'' என்பதை அறிவிக்காமல் உமக்கு முன் எந்தத் தூதரையும் நாம் அனுப்பியதில்லை.

26. "அளவற்ற அருளாளன் சந்ததியை ஏற்படுத்திக் கொண்டான்'' எனக் கூறுகின்றனர். அவன் தூயவன்.10 மாறாக அவர்கள் (வானவர்கள்) மரியாதைக்குரிய அடியார்கள்.

27. அவர்கள் அவனை முந்திப் பேச மாட்டார்கள். அவனது கட்டளைப்படியே செயல்படுவார்கள்.

28. அவர்களுக்கு முன்னும், பின்னும் உள்ளதை அவன் அறிவான். அவன் பொருந்திக் கொண்டோருக்காகவே தவிர (மற்றவருக்கு) அவர்கள் பரிந்துரை17 செய்ய மாட்டார்கள். அவர்கள் அவனது அச்சத்தால் நடுங்குவார்கள்.

29. "அவனன்றி நான் தான் வணக்கத்திற்குரியவன்'' என்று கூறுபவனுக்கு நரகத்தையே கூலியாக வழங்குவோம். அநீதி இழைத்தோருக்கு இவ்வாறே கூலி வழங்குவோம்.

30. வானங்களும்,507 பூமியும் இணைந்திருந்தன என்பதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம்287 என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து506 அமைத்தோம் என்பதையும் (நம்மை) மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா?

31. பூமி அவர்களைச் சாய்த்து விடாதிருப்பதற்காக முளைகளை248 ஏற்படுத்தினோம். அவர்கள் வழி காண்பதற்காக பல நீண்ட பாதைகளையும் அதில் ஏற்படுத்தினோம்.

32. வானத்தைப்507 பாதுகாக்கப்பட்ட முகடாக்கினோம்.288 அவர்களோ அதில் உள்ள சான்றுகளைப் புறக்கணிக்கின்றனர்.

33. அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் படைத்தான். ஒவ்வொன்றும் வான்வெளியில் நீந்துகின்றன.241

34. (முஹம்மதே!) உமக்கு முன் எந்த மனிதருக்கும் நாம் நிரந்தரத்தை ஏற்படுத்தவில்லை. நீர் மரணித்து விட்டால் அவர்கள் நிலையாக இருப்பவர்களா?

35. ஒவ்வொருவரும் மரணத்தைச் சுவைப்பவரே. நன்மை, தீமையின் மூலம் பரீட்சித்துப் பார்ப்பதற்காக உங்களைச் சோதிப்போம்.484 நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!

36. (முஹம்மதே! ஏகஇறைவனை) மறுப்போர் உம்மைக் காணும்போது உம்மைக் கேலிப் பொருளாகவே கருதுகின்றனர். இவர் தான் உங்கள் கடவுள்களைப் பற்றி விமர்சிப்பவரா? (எனக் கூறுகின்றனர்.) அவர்கள் அளவற்ற அருளாளனை நினைவு கூர மறுப்பவர்கள்.

37. மனிதன் அவசரக்காரனாகப் படைக்கப்பட்டுள்ளான்.368 பின்னர் எனது சான்றுகளை உங்களுக்குக் காட்டுவேன். என்னிடம் அவசரப்படாதீர்கள்!

38. "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இந்த எச்சரிக்கை எப்போது (நிகழும்?)'' என்று கேட்கின்றனர்.

39. நரகத்திலிருந்து தமது முகங்களையும், முதுகுகளையும் தடுக்க முடியாத நேரத்தை (ஏகஇறைவனை) மறுப்போர் அறிய வேண்டாமா? அவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள்.

40. மாறாக, அது அவர்களிடம் திடீரென்று வந்து அவர்களைத் திகைக்க வைக்கும். அதைத் தடுக்க அவர்களுக்கு இயலாது. அவர்கள் அவகாசம் அளிக்கப்படவும் மாட்டார்கள்.

41. (முஹம்மதே!) உமக்கு முன் பல தூதர்கள் கேலி செய்யப்பட்டனர். எதைக் கேலி செய்தார்களோ அதுவே கேலி செய்தோரைச் சுற்றி வளைத்தது.

42. "இரவிலும், பகலிலும் அளவற்ற அருளாளனிடமிருந்து உங்களைக் காப்பாற்றுபவன் யார்?'' என்று கேட்பீராக! எனினும் அவர்கள் தமது இறைவனை நினைப்பதைப் புறக்கணிக்கின்றனர்.

43. நம்மை விட்டும் அவர்களைக் காப்பாற்றும் கடவுள்கள் அவர்களுக்கு உள்ளனரா? அவர்கள் தமக்கே உதவிட இயலாது. அவர்கள் நம்மிடமிருந்து காக்கப்படவும் மாட்டார்கள்.

44. அவர்களுக்கு ஆயுளை அதிகமாக்கி அவர்களுக்கும், அவர்களின் முன்னோர்களுக்கும் வாழ்க்கை வசதியைக் கொடுத்தோம். "பூமியை அதன் ஓரப் பகுதிகளில் குறைத்து வருகிறோம்'' என்பதை அவர்கள் சிந்திக்க வேண்டாமா?243 அவர்களா (நம்மை) வெல்பவர்கள்?

45. "தூதுச் செய்தியைக் கொண்டே உங்களை எச்சரிக்கிறேன்'' என்று (முஹம்மதே!) கூறுவீராக! எச்சரிக்கப்படும்போது அழைப்பை, செவிடன் செவியுற மாட்டான்.

46. உமது இறைவனின் வேதனையில் சிறிதளவு அவர்களுக்கு ஏற்பட்டால் "எங்களுக்குக் கேடு தான். நாங்கள் அநீதி இழைத்தோம்'' எனக் கூறுவார்கள்.

47. கியாமத் நாளுக்காக1 நீதியான தராசுகளை நிறுவுவோம். எவருக்கும் சிறிதளவும் அநீதி இழைக்கப்படாது. ஒரு கடுகு விதை அளவே இருந்தபோதும் அதையும் கொண்டு வருவோம். கணக்கெடுக்க நாமே போதும்.

48. வேறுபடுத்திக் காட்டுவதையும், ஒளியையும், (நம்மை) அஞ்சுவோருக்கு அறிவுரையையும் மூஸாவுக்கும், ஹாரூனுக்கும் அளித்தோம்.

49. அவர்கள் தனிமையில் தமது இறைவனை அஞ்சுவார்கள். யுகமுடிவு நேரம்1 பற்றியும் அஞ்சுவார்கள்.

50. இது பாக்கியம் நிறைந்த அறிவுரை. இதை நாமே அருளினோம். இதையா நீங்கள் மறுக்கிறீர்கள்?

51. இதற்கு முன் இப்ராஹீமுக்கு அவரது நேர்வழியைக் கொடுத்தோம். அவரைப் பற்றி அறிந்தவராக இருந்தோம்.

52, 53. "நீங்கள் வணங்கும் இந்தச் சிலைகள் என்ன?'' என்று அவர் தமது தந்தையிடமும், தமது சமுதாயத்திடமும் கேட்டபோது, "எங்கள் முன்னோர்கள் இவற்றை வணங்கக் கண்டோம்'' என்று அவர்கள் கூறினர்.26

54. "நீங்களும், உங்களின் முன்னோர்களும் தெளிவான வழிகேட்டிலேயே இருக்கிறீர்கள்'' என்று அவர் கூறினார்.

55. "நீர் உண்மையைத்தான் கூறுகிறீரா? அல்லது விளையாடுகிறீரா?'' என்று அவர்கள் கேட்டனர்.

56. "அவ்வாறில்லை. வானங்களையும்,507 பூமியையும் படைத்த இறைவனே உங்கள் இறைவனாவான். நான் இதற்குச் சாட்சி கூறுபவன்'' என்று அவர் கூறினார்.

57. "அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் திரும்பிச் சென்ற பின் உங்கள் சிலைகளை உடைப்பேன்'' (என்றும் கூறினார்)473

58. அவர்கள் பெரிய சிலையிடம் திரும்ப வர வேண்டும் என்பதற்காக, அவற்றில் அதைத் தவிர மற்றவற்றை அவர் துண்டு துண்டாக்கினார்.473

59. "நமது கடவுள்களை இவ்வாறு செய்தவன் யார்? அவன் அநீதி இழைத்தவன்'' என்று அவர்கள் கூறினர்.

60. "ஓர் இளைஞர் அவற்றை விமர்சிப்பதைச் செவியுற்றுள்ளோம். அவர் இப்ராஹீம் என்று குறிப்பிடப்படுவார்'' எனக் கூறினர்.

61. "அவரை மக்கள் பார்வைக்ககுக் கொண்டு வாருங்கள்! அவர்கள் சாட்சி கூறட்டும்'' என்றனர்.

62. "இப்ராஹீமே! எங்கள் கடவுள்களை நீர் தான் இவ்வாறு செய்தீரா?'' என்று அவர்கள் கேட்டனர்.

63. அதற்கவர், "இல்லை! அவற்றில் பெரிய சிலையே இதைச் செய்தது.432 அவை பேசுபவையாக இருந்தால் (உடைக்கப்பட்ட) அவற்றிடமே விசாரித்துக் கொள்ளுங்கள்!'' என்று அவர் கூறினார்.

64. உடனே விழிப்படைந்து "நீங்கள் தாம் (இவற்றை வணங்கியதன் மூலம்) அநீதி இழைத்தீர்கள்'' என்று தமக்குள் பேசிக்கொண்டனர்.

65. பின்னர் தலைகீழாக அவர்கள் மாறி, "இவை பேசாது என்பதை நீர் அறிவீரே!'' என்றனர்.

66. "அல்லாஹ்வை விடுத்து உங்களுக்கு எந்தப் பயனும், தீங்கும் தராதவற்றை வணங்குகின்றீர்களா?'' என்று கேட்டார்.

67. "அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குபவற்றுக்கும், உங்களுக்கும் கேவலமே! விளங்க மாட்டீர்களா?'' (என்றும் கேட்டார்.)

68. "நீங்கள் (ஏதேனும்) செய்வதாக இருந்தால் இவரைத் தீயில் பொசுக்கி உங்கள் கடவுள்களுக்கு உதவுங்கள்!'' என்றனர்.

69. "நெருப்பே! இப்ராஹீமின் மீது குளிராகவும், பாதுகாப்பாகவும் ஆகி விடு'' என்று கூறினோம்.

70. அவருக்கு எதிராக அவர்கள் சூழ்ச்சி செய்தனர். அவர்களை நட்டமடைந்தோராக ஆக்கினோம்.

71. அவரையும், லூத்தையும் நாம் அகிலத்தாருக்குப் பாக்கியமாக ஆக்கிய பூமியில் காப்பாற்றினோம்.

72. அவருக்கு இஸ்ஹாக்கையும், கூடுதலாக யாகூபையும் அன்பளிப்புச் செய்தோம். அனைவரையும் நல்லோராக ஆக்கினோம்.

73. நமது கட்டளைப்படி நேர்வழி காட்டும் தலைவர்களாக அவர்களை ஆக்கினோம். நல்லவற்றைச் செய்யுமாறும், தொழுகையை நிலைநாட்டுமாறும், ஸகாத் கொடுக்குமாறும் அவர்களுக்கு அறிவித்தோம். அவர்கள் நம்மையே வணங்குவோராக இருந்தனர்.

74. லூத்துக்கு அதிகாரத்தையும்,164 கல்வியையும் அளித்தோம். வெட்கக்கேடான காரியங்களைச் செய்து வந்த கிராமத்திலிருந்து அவரைக் காப்பாற்றினோம். அவர்கள் கெட்ட கூட்டமாகவும், குற்றம் புரிவோராகவும் இருந்தனர்.

75. அவரை நமது அருளில் நுழைத்தோம். அவர் நல்லோர்களில் ஒருவர்.

76. நூஹ், இதற்கு முன் (நம்மிடம்) பிரார்த்தித்தபோது, அவருக்காக (அதை) ஏற்றுக் கொண்டோம். அவரையும், அவரது குடும்பத்தினரையும் பெரும் கஷ்டத்திலிருந்து காப்பாற்றினோம்.

77. நமது வசனங்களைப் பொய்யெனக் கருதிய கூட்டத்திலிருந்து (காப்பாற்றி) அவருக்கு உதவினோம். அவர்கள் கெட்ட கூட்டமாக இருந்தனர். எனவே அவர்கள் அனைவரையும் மூழ்கடித்தோம்.

78. ஒரு சமுதாயத்தின் ஆடு (இன்னொரு சமுதாயத்தின்) விளைநிலத்தில் மேய்ந்தபோது தாவூதும், ஸுலைமானும் தீர்ப்பளித்ததை நினைவூட்டுவீராக! அவர்களின் தீர்ப்புக்கு நாம் சாட்சியாக இருந்தோம்.

79. அதை ஸுலைமானுக்கு விளங்க வைத்தோம். இருவருக்குமே அதிகாரத்தையும், கல்வியையும் வழங்கினோம். பறவைகளையும், மலைகளையும் தாவூதுக்கு வசப்படுத்திக் கொடுத்தோம். அவை (இறைவனைத்) துதித்தன. நாம் (எதையும்) செய்பவராவோம்.

80. உங்கள் போரின்போது உங்களைக் காக்கும் உங்களுக்குரிய கவச ஆடை செய்வதை அவருக்குக் கற்றுக் கொடுத்தோம். நீங்கள் நன்றி செலுத்துவோராக இருக்கிறீர்களா?

81. வேகமாக வீசும் காற்றை ஸுலைமானுக்கு வசப்படுத்திக் கொடுத்தோம். அது நாம் பாக்கியம் செய்த பூமிக்கு அவரது கட்டளைப்படி சென்றது. நாம் ஒவ்வொரு பொருளையும் அறிவோராக இருக்கிறோம்.

82. ஷைத்தான்களில் அவருக்காக முத்துக்குளிப்போரையும், அது தவிர வேறு பணியைச் செய்வோரையும் (வசப்படுத்திக்) கொடுத்தோம். நாம் அவர்களைக் கண்காணிப்போராக இருந்தோம்.

83, 84. "எனக்குத் துன்பம் நேர்ந்து விட்டது. நீ கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளன்'' என அய்யூப் தமது இறைவனை அழைத்தபோது, அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம். அவருக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கினோம். அவரது குடும்பத்தாரையும் அவர்களுடன் அவர்களைப் போன்றோரையும் நம் அருளாக அவருக்கு வழங்கினோம். வணக்கசாலிகளுக்கு இது அறிவுரை.26

85. இஸ்மாயீல், இத்ரீஸ், துல்ஃகிப்ல் அனைவரும் பொறுமையாளர்கள்.

86. அவர்களை நமது அருளில் நுழையச் செய்தோம். அவர்கள் நல்லவர்கள்.

87. மீனுடையவர்508 (யூனுஸ்) கோபித்துக் கொண்டு சென்றார். "அவர் மீது நாம் சக்தி பெற மாட்டோம்'' என்று நினைத்தார். "உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. நீ தூயவன்.10 நான் அநீதி இழைத்தோரில் ஆகி விட்டேன்'' என்று இருள்களிலிருந்து303 அவர் அழைத்தார்.

88. அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம். கவலையிலிருந்து அவரைக் காப்பாற்றினோம். இவ்வாறே நம்பிக்கை கொண்டோரைக் காப்பாற்றுவோம்.

89, 90. "என் இறைவா! என்னைத் தனியாளாக விட்டு விடாதே! நீ மிகச் சிறந்த உரிமையாளன்'' என்று ஸக்கரிய்யா தமது இறைவனை அழைத்தபோது, அவருக்காக (அவரது பிரார்த்தனையை) ஏற்றோம். அவருக்கு யஹ்யாவை அன்பளிப்பாக அளித்தோம். அவரது மனைவியை அவருக்காக (குழந்தை பெறும்) தகுதியுடையவராக ஆக்கினோம். அவர்கள் நன்மைகளை நோக்கி விரைந்து செல்வோராகவும், ஆர்வத்துடனும் அச்சத்துடனும் நம்மிடம் பிரார்த்திப்போராகவும் இருந்தனர். நமக்குப் பணிவோராகவும் இருந்தனர்.

91. தனது கற்பைக் காத்துக் கொண்ட பெண்ணிடம் நமது உயிரை ஊதினோம்.90 அவரையும், அவரது புதல்வரையும் அகிலத்தாருக்குச் சான்றாக்கினோம்.415

92. உங்கள் இந்தச் சமுதாயம் ஒரே சமுதாயமே. நானே உங்களின் இறைவன். என்னையே வணங்குங்கள்!

93. அவர்களோ தமது காரியத்தில் தமக்கிடையே பிளவுபட்டுள்ளனர். அனைவரும் நம்மிடம் திரும்பி வருவோரே.

94. நம்பிக்கை கொண்டு நல்லறங்களைச் செய்வோரின் உழைப்புக்கு எந்த மறுப்பும் இல்லை. அதை நாம் பதிவு செய்கிறோம்

95. நாம் அழித்து விட்ட ஊராருக்கு (மீண்டு வருவது) தடுக்கப்பட்டு விட்டது. அவர்கள் திரும்ப வர மாட்டார்கள்.

96. முடிவில் யஃஜூஜ் மஃஜூஜ்451 (கூட்டத்தினர்) திறந்து விடப்பட்டு அவர்கள் ஒவ்வொரு மேட்டிலிருந்தும் விரைவார்கள்.

97. உண்மையான வாக்குறுதி நெருங்கி விட்டது. அப்போது (ஏகஇறைவனை) மறுத்தோரின் பார்வைகள் நிலை குத்தியதாக இருக்கும். "எங்களுக்குக் கேடுதான். நாங்கள் இது பற்றிக் கவனமற்று இருந்து விட்டோம். இல்லை! நாங்கள் அநீதி இழைத்தோம்'' (என்று கூறுவார்கள்).

98. நீங்களும், அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குபவைகளும் நரகத்தின் எரிபொருளாவீர்!370 அங்கே நீங்கள் வந்து சேர்பவர்களே!

99. அவர்கள் கடவுள்களாக இருந்திருந்தால் இங்கே வந்திருக்க மாட்டார்கள். அனைவரும் இதில் நிரந்தரமாக இருப்பார்கள்.

100. அங்கே அவர்களுக்கு விம்மியழுதலே உண்டு. அவர்கள் அங்கே எதையும் செவியுற மாட்டார்கள்.

101. யாரைப் பற்றி நமது நல்லுதவி முந்தி விட்டதோ அவர்கள் அதை விட்டும் தூரமாக்கப்பட்டவர்கள்.370

102. அவர்கள் அதன் இரைச்சலைச் செவியுற மாட்டார்கள். தமது உள்ளங்கள் ஆசைப்படுவதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.

103. மாபெரும் திடுக்கம் அவர்களைக் கவலையில் ஆழ்த்தாது. வானவர்கள் அவர்களை எதிர்கொள்வார்கள். "இதுவே உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட நாள்1'' (எனக் கூறுவார்கள்).

104. எழுதப்பட்ட ஏடுகளைச் சுருட்டுவது போல் வானத்தை507 நாம் சுருட்டும் நாளில்1 முதல் படைப்பை நாம் துவக்கியது போல் அதை மீண்டும் நிறுவுவோம்.225 & 453 இது நமது வாக்குறுதி. நாம் (எதையும்) செய்வோராவோம்.

105. ஸபூர் வேதத்தில் அறிவுரைக்குப் பின் "பூமியை எனது நல்லடியார்கள் வாரிசாக அடைவார்கள்'' என்று எழுதியிருந்தோம். 

106. வணங்கும் சமுதாயத்துக்கு இதில் போதுமானது உள்ளது.

107. (முஹம்மதே!) அகிலத்தாருக்கு281 அருளாகவே உம்மை அனுப்பியுள்ளோம்.187

108. "உங்கள் இறைவன் ஒரே இறைவன் என்பதே எனக்கு அறிவிக்கப்படுகிறது. நீங்கள் (இதை) ஏற்கிறீர்களா?'' என்று கேட்பீராக!

109. அவர்கள் புறக்கணித்தால் "உங்கள் அனைவருக்கும் சமமாக அறிவித்து விட்டேன்.182 உங்களுக்கு எச்சரிக்கப்படுவது அருகில் உள்ளதா? தூரத்தில் உள்ளதா? என்பதை அறிய மாட்டேன்'' என்று கூறுவீராக!

110. அவன் உரத்த சொல்லையும் அறிகிறான். நீங்கள் மறைப்பவற்றையும் அறிகிறான்.

111. இது (உலக வாழ்க்கை) உங்களுக்குச் சோதனையாகவும்,484 குறிப்பிட்ட காலம் வரை வாழ்க்கை வசதியாகவும் இருக்குமா? என்பதை அறிய மாட்டேன்.

112. என் இறைவா! நீ உண்மையான தீர்ப்பை வழங்குவாயாக! "நீங்கள் கூறுவதற்கு எதிராக எங்கள் இறைவனாகிய அளவற்ற அருளாளனே உதவி தேடப்படுபவன்'' என (தூதர்) கூறினார்.

To read this Chapter in English click here.

(14வது பதிப்பின்படி திருத்தி அமைக்கப்பட்டது)

July 8, 2009, 9:50 PM

அத்தியாயம் : 22

அத்தியாயம் : 22
அல் ஹஜ் - கடமையான ஒரு வணக்கம்

மொத்த வசனங்கள் : 78
இந்த அத்தியாயத்தின் 27 முதல் 37 வரை உள்ள வசனங்களில் ஹஜ் பற்றியும், அதன் ஒழுங்குகள் பற்றியும் கூறப்படுவதால் இந்த அத்தியாயத்திற்கு இவ்வாறு பெயர் சூட்டியுள்ளனர்.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்... .

1. மனிதர்களே! உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அந்த நேரத்தின்1 திடுக்கம் கடுமையான விஷயமாகும்.

2. நீங்கள் அதைக் காணும் நாளில் பாலூட்டும் ஒவ்வொருத்தியும், தான் பாலூட்டியதை (குழந்தையை) மறந்து விடுவாள். ஒவ்வொரு கர்ப்பிணியும், தன் கருவில் சுமந்ததை ஈன்று விடுவாள். போதை வயப்பட்டோராக மனிதர்களைக் காண்பீர்! அவர்கள் போதை வயப்பட்டோர் அல்லர். மாறாக அல்லாஹ்வின் வேதனை கடுமையானது.

3. அல்லாஹ்வின் விஷயத்தில் அறிவின்றி தர்க்கம் செய்வோரும், வழிகெடுக்கும் ஒவ்வொரு ஷைத்தானைப் பின்பற்றுவோரும் மனிதர்களில் உள்ளனர்.

4. "தன்னைப் பொறுப்பாளனாக ஆக்கிக் கொண்டவனை அவன் வழிகெடுத்து விடுவான். நரகத்தின் வேதனைக்கு வழிகாட்டுவான்'' என்று அவனுக்கு எதிராக எழுதப்பட்டு விட்டது.

5. மனிதர்களே! மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவதில் நீங்கள் சந்தேகத்தில் இருந்தால் (உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறோம்.) உங்களை மண்ணாலும்,368 பின்னர் விந்துத் துளியாலும், பின்னர் கருவுற்ற சினைமுட்டையாலும்,365&506 பின்னர் முழுமைப்படுத்தப்பட்டதும் முழுமைப்படுத்தப்படாததுமான தசைக்கட்டியாலும் படைத்தோம்.368 நாம் நாடியதைக் கருவறைகளில் குறிப்பிட்ட காலம் வரை நிலைபெறச் செய்கிறோம்.144 பின்னர் உங்களைக் குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்னர் நீங்கள் பருவத்தை அடைகின்றீர்கள். உங்களில் கைப்பற்றப்படுவோரும் உள்ளனர். அறிந்த பின் எதையும் அறியாமல் போவதற்காக தள்ளாத வயது வரை கொண்டு செல்லப்படுவோரும் உங்களில் உள்ளனர்.333 பூமியை வறண்டதாகக் காண்கிறீர். அதன் மீது நாம் தண்ணீரை இறக்கும்போது, அது செழித்து வளர்ந்து அழகான ஒவ்வொரு வகையையும் முளைக்கச் செய்கிறது.

6. அல்லாஹ்வே உண்மையானவன் என்பதும், அவன் இறந்தோரை உயிர்ப்பிப்பான் என்பதும், அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன் என்பதுமே இதற்குக் காரணம்.

7. யுகமுடிவு நேரம்1 வந்தேதீரும்! அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. மண்ணறைகளில் உள்ளவர்களை அல்லாஹ் உயிர்ப்பிப்பான்.

8. அறிவும், நேர்வழியும், ஒளிவீசும் வேதமும் இன்றி அல்லாஹ்வின் விஷயத்தில் தர்க்கம் செய்பவனும் மனிதர்களில் இருக்கிறான்.

9. அல்லாஹ்வின் பாதையை விட்டும் வழிகெடுப்பதற்காக தனது கழுத்தைத் திருப்பிக் கொள்கிறான். அவனுக்கு இவ்வுலகில் இழிவு உண்டு. கியாமத் நாளில்1 சுட்டெரிக்கும் வேதனையை அவனுக்குச் சுவைக்கச் செய்வோம்.

10. நீ செய்த வினையின் காரணமாகவே இந்த நிலை. அல்லாஹ் அடியார்களுக்கு அநீதி இழைப்பவனாக இல்லை (எனக் கூறுவோம்.)

11. விளிம்பில் இருந்து கொண்டு அல்லாஹ்வை வணங்குபவனும் மனிதர்களில் இருக்கிறான். அவனுக்கு நன்மை ஏற்பட்டால் அதில் நிம்மதியடைகிறான். அவனுக்குச் சோதனை ஏற்பட்டால்484 தலைகீழாக மாறி விடுகிறான். இவ்வுலகிலும், மறுமையிலும் அவன் நட்டமடைந்து விட்டான். இதுவே தெளிவான நட்டம்.

12. அல்லாஹ்வையன்றி தனக்குத் தீங்கிழைக்காததையும், பயன் தராததையும் பிரார்த்திக்கிறான். இதுவே தூரமான வழிகேடாகும்.

13. எவனது நன்மையை விட தீமை மிகவும் அருகில் உள்ளதோ அவனை இவன் அழைக்கிறான். அவன் கெட்ட நண்பன்; கெட்ட பொறுப்பாளன்.

14. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோரை சொர்க்கச் சோலைகளில் அல்லாஹ் நுழையச் செய்கிறான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அல்லாஹ், நாடியதைச் செய்கிறான்.

15. இவ்வுலகிலும், மறுமையிலும் இவருக்கு (முஹம்மதுக்கு) அல்லாஹ் உதவவே மாட்டான்' என்று எண்ணுபவன் வானத்தை507 நோக்கி ஒரு கயிற்றை நீட்டி பின்னர் (அவருக்கு இறைவன் செய்யும் உதவியை) வெட்டி விடட்டும்! இந்தச் சூழ்ச்சியாவது அவனது வெறுப்பை நீக்கி விடுமா என்று அவன் பார்க்கட்டும்.

16. இவ்வாறே தெளிவான வசனங்களாக இதை அருளினோம். தான் நாடியோருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுகிறான்.

17. நம்பிக்கை கொண்டோரும், யூதர்களும், ஸாபியீன்களும்,443 கிறித்தவர்களும், நெருப்பை வணங்குவோரும், இணைகற்பித்தோரும் ஆகிய அவர்களிடையே அல்லாஹ் கியாமத் நாளில்1 தீர்ப்பு வழங்குவான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் பார்த்துக் கொண்டிருப்பவன்.

18. "வானங்களில் உள்ளோரும், பூமியில் உள்ளோரும், சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும், மலைகளும், மரங்களும், உயிரினங்களும், மனிதர்களில் அதிகமானோரும் அல்லாஹ்வுக்குப் பணிகின்றனர்'' என்பதை நீர் அறியவில்லையா?396 இன்னும் அதிகமானோர் மீது வேதனை உறுதியாகி விட்டது. அல்லாஹ் இழிவுபடுத்தி விட்டவனுக்கு மதிப்பை ஏற்படுத்துபவன் இல்லை. அல்லாஹ் நாடியதைச் செய்வான்.

19. தமது இறைவனைப் பற்றி தர்க்கித்துக் கொண்டிருந்த இரண்டு வழக்காளிகள் இதோ உள்ளனர். (ஏகஇறைவனை) மறுத்தோருக்காக நெருப்பால் ஆன ஆடை தயாரிக்கப்பட்டுள்ளது. அவர்களின் தலைகள் மீது கொதிக்கும் நீர் ஊற்றப்படும்.

20. அதைக் கொண்டு அவர்களின் வயிறுகளில் உள்ளவைகளும், தோல்களும் உருக்கப்படும்.

21. அவர்களுக்காக இரும்புச் சம்மட்டிகளும் உள்ளன.

22. கவலைப்பட்டு அங்கிருந்து அவர்கள் வெளியேற எண்ணும் போதெல்லாம் மீண்டும் அதில் தள்ளப்படுவார்கள். சுட்டெரிக்கும் வேதனையைச் சுவையுங்கள்! (எனக் கூறப்படும்).

23. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோரை அல்லாஹ் சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். தங்கக் காப்புகளும், முத்தும் அவர்களுக்கு அணிவிக்கப்படும். அங்கே அவர்களின் ஆடை பட்டாகும்.

24. அவர்கள் தூய்மையான கொள்கைக்கு வழிகாட்டப்பட்டனர். புகழுக்குரிய (இறை)வனின் பாதைக்கு வழிகாட்டப்பட்டனர்.

25. (ஏகஇறைவனை) மறுத்தோருக்கும், அல்லாஹ்வின் பாதையையும் மஸ்ஜிதுல் ஹராமையும் விட்டுத் தடுத்தோருக்கும், அங்கே அநீதியின் மூலம் குற்றம் புரிய நாடுவோருக்கும் துன்புறுத்தும் வேதனையைச் சுவைக்கச் செய்வோம். மஸ்ஜிதுல் ஹராமை (அதன்) அருகில் வசிப்போருக்கும் தூரத்தில் வசிப்போருக்கும் சமமாக ஆக்கினோம்.290

26. "எனக்கு எதையும் இணைகற்பிக்காதீர்! தவாஃப் செய்வோருக்காகவும், நின்று வணங்குவோருக்காகவும், ருகூவு செய்து ஸஜ்தா செய்வோருக்காகவும் எனது ஆலயத்தைத் தூய்மைப்படுத்துவீராக!'' என்று (கூறி) அந்த ஆலயத்தின்33 இடத்தை இப்ராஹீமுக்கு நாம் நிர்ணயித்ததை நினைவூட்டுவீராக!

27. "மக்களுக்கு ஹஜ்ஜைப் பற்றி அறிவிப்பீராக! அவர்கள் உம்மிடம் நடந்தும், ஒவ்வொரு மெலிந்த ஒட்டகத்தின் மீதும் வருவார்கள். அவை அவர்களைத் தொலைவிலுள்ள ஒவ்வொரு பாதையிலிருந்தும் கொண்டு வந்து சேர்க்கும்'' (என்றும் கூறினோம்.)

28. அவர்கள் தங்களுடைய பயன்களை அடைவதற்காகவும், சாதுவான கால்நடைகளை அவர்களுக்கு அளித்ததற்காகக் குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வின் பெயரைக் கூறுவதற்காகவும் (வருவார்கள்.) அதை நீங்களும் உண்ணுங்கள்!171 கஷ்டப்படும் ஏழைகளுக்கும் கொடுங்கள்!

29. பின்னர் அவர்கள் தம்மிடம் உள்ள அழுக்குகளை நீக்கட்டும்! தமது நேர்ச்சைகளை நிறைவேற்றட்டும்! பழமையான அந்த ஆலயத்தை33 தவாஃப் செய்யட்டும்.

30. இதுவே (அல்லாஹ்வின் கட்டளை.) அல்லாஹ் புனிதமாக்கியவற்றைக் கண்ணியப்படுத்துபவருக்கு அது இறைவனிடம் அவருக்குச் சிறந்தது. உங்களுக்குக் கூறப்படவுள்ளவற்றைத் தவிர ஏனைய கால்நடைகள் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. சிலைகள் எனும் அசுத்தத்திலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! பொய் பேசுவதிலிருந்தும் விலகிக் கொள்ளுங்கள்!

31. அல்லாஹ்வுக்கு அர்ப்பணித்து, அவனுக்கு இணை கற்பிக்காதோராக (ஆகுங்கள்!) அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவன் வானத்திலிருந்து507 விழுந்து பறவைகள் தூக்கிச் சென்றவனைப் போல்,416
அல்லது காற்று தூரமான இடத்தில் கொண்டு போய் வீசிய ஒருவனைப் போல் ஆவான்.

32. இதுவே (அல்லாஹ்வின் கட்டளை.) யார் அல்லாஹ்வின் சின்னங்களைக் கண்ணியப்படுத்துகிறாரோ அது உள்ளங்களில் உள்ள இறையச்சத்தின் வெளிப்பாடாகும்.

33. அவற்றில் (அக்கால்நடைகளில்) குறிப்பிட்ட காலம் வரை பயன்கள் உங்களுக்கு உண்டு.383 பின்னர் அது சென்றடையும் இடம் பழமையான அந்த ஆலயமாகும்.33

34. சாதுவான கால்நடைகளை அவர்களுக்கு வழங்கியதற்காக அல்லாஹ்வின் பெயரை நினைப்பதற்கு ஒவ்வொரு சமுதாயத்திற்கும் வழிபாட்டு முறையை ஏற்படுத்தியுள்ளோம். உங்கள் இறைவன் ஒரே இறைவனே. அவனுக்கே கட்டுப்படுங்கள்! பணிந்தோருக்கு நற்செய்தி கூறுவீராக!

35. அல்லாஹ்வைப் பற்றிக் கூறப்பட்டால் அவர்களது உள்ளங்கள் நடுங்கி விடும். தங்களுக்கு ஏற்பட்டதைச் சகித்துக் கொள்வர். தொழுகையை நிலைநாட்டுவர். நாம் அவர்களுக்கு வழங்கியதிலிருந்து (நல்வழியில்) செலவிடுவர்.

36. (பலியிடப்படும்) ஒட்டகங்களை உங்களுக்காக அல்லாஹ்வின் (மார்க்கச்) சின்னங்களில் ஒன்றாக ஆக்கியுள்ளோம். அவற்றில் உங்களுக்கு நன்மையுள்ளது. நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அதன் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறுங்கள்! அது விலாப்புறமாக விழுந்ததும் அதை உண்ணுங்கள்! யாசிப்பவருக்கும், யாசிக்காதவருக்கும் உண்ணக் கொடுங்கள்!171 நீங்கள் நன்றி செலுத்திட இவ்வாறே அதை உங்களுக்குப் பயன்படச் செய்தான்.

37. அவற்றின் மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள (இறை) அச்சமே அவனைச் சென்றடையும்.292 அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்திட இவ்வாறே அதை அவன் உங்களுக்குப் பயன்படச் செய்தான். நன்மை செய்வோருக்கு நற்செய்தி கூறுவீராக!

38. நம்பிக்கை கொண்டோரை விட்டும் (துரோகத்தை) அல்லாஹ் தடுத்து நிறுத்துகிறான். துரோகம் செய்வோரையும், நன்றி கெட்டவர்களையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்.

39. "போர் தொடுக்கப்பட்டோர் அநீதி இழைக்கப்பட்டுள்ளனர்'' என்ற காரணத்தால் அவர்களுக்கு (எதிர்த்துப் போரிட) அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அல்லாஹ் அவர்களுக்கு உதவிட ஆற்றலுடையவன்.53

40. "எங்கள் இறைவன் அல்லாஹ்வே'' என்று அவர்கள் கூறியதற்காகவே நியாயமின்றி அவர்களின் இல்லங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை அல்லாஹ் தடுத்திருக்காவிட்டால் மடங்களும், ஆலயங்களும், வழிபாட்டுத்தலங்களும், அல்லாஹ்வின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும்.433 தனக்கு உதவி செய்வோருக்கு அல்லாஹ்வும் உதவுகிறான். அல்லாஹ் வலிமையுள்ளவன்; மிகைத்தவன்.

41. அவர்களுக்கு பூமியில் நாம் வாய்ப்பளித்தால் தொழுகையை நிலைநாட்டுவார்கள். ஸகாத்தும் கொடுப்பார்கள். நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள். காரியங்களின் முடிவு அல்லாஹ்வுக்கே உரியது.

42, 43, 44. (முஹம்மதே!) இவர்கள் உம்மைப் பொய்யரெனக் கருதினால் அவர்களுக்கு முன் நூஹுடைய சமுதாயமும், ஆது மற்றும் ஸமூது சமுதாயமும், இப்ராஹீமின் சமுதாயமும், லூத்தின் சமுதாயமும், மத்யன்வாசிகளும் பொய்யெனக் கருதியுள்ளனர். மூஸாவும் பொய்யரெனக் கருதப்பட்டார். எனவே (என்னை) மறுத்தோருக்கு அவகாசம் அளித்தேன். பின்னர் அவர்களைப் பிடித்தேன். எனது வேதனை எவ்வாறு இருந்தது?26

45. எத்தனையோ ஊர்கள் அநீதி இழைத்து வந்த நிலையில் அவற்றை அழித்துள்ளோம். அவை முகடுகளுடன் சேர்ந்து விழுந்து கிடக்கின்றன. கேட்பாரற்ற கிணறுகள்! பாழடைந்த கோட்டைகள்!

46. அவர்கள் பூமியில் பயணம் செய்யவில்லையா? (அவ்வாறு செய்தால்) விளங்குகிற உள்ளங்களும், கேட்கும் செவிகளும் அவர்களுக்கு இருந்திருக்கும். பார்வைகள் குருடாகவில்லை. மாறாக உள்ளங்களில் உள்ள சிந்தனைகளே குருடாகி விட்டன.

47. (முஹம்மதே!) அவர்கள் வேதனையை உம்மிடம் அவசரமாகத் தேடுகின்றனர். அல்லாஹ் தனது வாக்கை மீறவே மாட்டான். உமது இறைவனிடம் ஒரு நாள் என்பது நீங்கள் கணக்கிடும் வருடங்களில் ஆயிரம் வருடங்கள் போன்றது.293

48. எத்தனையோ ஊர்களுக்கு அவை அநீதி இழைத்த நிலையில் அவகாசம் அளித்தேன். பின்னர் அதைத் தண்டித்தேன். என்னிடமே திரும்பி வருதல் உண்டு.

49. "மனிதர்களே! நான் உங்களுக்குத் தெளிவாக எச்சரிப்பவன்'' என்று (முஹம்மதே!) கூறுவீராக!187

50. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோருக்கு மன்னிப்பும், மரியாதையான உணவும் உண்டு.

51. நம்முடைய வசனங்களை வெல்ல முயற்சிப்போரே நரகவாசிகள்.

52, 53. (முஹம்மதே!) உமக்கு முன் நாம் அனுப்பிய எந்த நபியானாலும், தூதரானாலும்398 அவர் ஓதும்போது அவர் ஓதிக் காட்டியதில் ஷைத்தான் (தவறான குழப்பத்தைப்) போடாமல் இருந்ததில்லை.294 எவரது உள்ளங்களில் நோய் இருக்கிறதோ அவர்களுக்கும், கடினசித்தம் கொண்டோருக்கும் ஷைத்தான் போட்டதைச் சோதனையாக ஆக்குவதற்காக அதை அல்லாஹ் மாற்றுகிறான். பின்னர் தனது வசனங்களை உறுதிப்படுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன். அநீதி இழைத்தோர் தூரமான பிளவில் உள்ளனர்.26

54. (முஹம்மதே!) கல்வி கொடுக்கப்பட்டோர் இது உமது இறைவனிடமிருந்து வந்த உண்மை என அறிந்து அதை நம்புவதற்காகவும், அவர்களது உள்ளங்கள் அவனுக்குப் பணிவதற்காகவும் (இவ்வாறு செய்கிறான்). நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் நேரான பாதையைக் காட்டுகிறான்.

55. அவர்களிடம் யுகமுடிவு நேரம்1 திடீரென வரும் வரை, அல்லது பயனளிக்காத நாளின் வேதனை அவர்களுக்கு வரும் வரை (ஏகஇறைவனை) மறுப்போர் அதில் சந்தேகத்திலேயே இருந்து வருவார்கள்.

56. அந்நாளில் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் அவர்களிடையே தீர்ப்பு வழங்குவான். நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோர் நிலையான சொர்க்கச் சோலைகளில் இருப்பார்கள்.

57. (நம்மை) மறுத்து நமது வசனங்களைப் பொய்யெனக் கருதியோருக்கு இழிவு தரும் வேதனை உள்ளது.

58. அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத்460 செய்து பின்னர் கொல்லப்படுவோர், அல்லது மரணிப்போருக்கு அல்லாஹ் அழகிய உணவை வழங்குவான். அல்லாஹ் உணவளிப்போரில் சிறந்தவன்.463

59. அவர்கள் திருப்தியடையும் நுழைவிடத்தில் அவர்களை நுழையச் செய்வான். அல்லாஹ் அறிந்தவன்; சகிப்புத் தன்மையுள்ளவன்.

60. இதுவே (அல்லாஹ்வின் கட்டளை.) யாரேனும் தாம் துன்புறுத்தப்பட்டது போல் (அதற்குக் காரணமானவர்களைத்) துன்புறுத்தும்போது அதற்காக அவர் மீது மீண்டும் அநீதி இழைக்கப்பட்டால் அல்லாஹ் அவருக்கு உதவுவான். அல்லாஹ் மன்னிப்பவன்; பிழை பொறுப்பவன்.

61. அல்லாஹ் பகலில் இரவை நுழைக்கிறான். இரவில் பகலை நுழைக்கிறான். அல்லாஹ் செவியுறுபவன்;488 பார்ப்பவன்488 என்பதே இதற்குக் காரணம்.

62. அல்லாஹ்வே உண்மையானவன். அவனையன்றி அவர்கள் பிரார்த்திப்பவை பொய்யானவை. அல்லாஹ் உயர்ந்தவன்; பெரியவன் என்பதும் இதற்குக் காரணம்.

63. வானிலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்குவதையும், (அதனால்) பூமி பசுமையடைவதையும் நீர் அறியவில்லையா? அல்லாஹ் நுட்பமானவன்; நன்கறிந்தவன்.

64. வானங்களில்507 உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அல்லாஹ் புகழுக்குரியவன்; தேவைகளற்றவன்.485

65. (முஹம்மதே!) பூமியில் உள்ளதையும், அவனது கட்டளைப்படி கடலில் செல்லும் கப்பலையும் அல்லாஹ் உங்களுக்காக பயன்படச் செய்திருப்பதை நீர் அறியவில்லையா? தான் கட்டளையிட்டால் தவிர பூமியின் மேல் வானம்507 விழாதவாறு தடுத்து வைத்துள்ளான்.240 அல்லாஹ் மனிதர்கள் மீது இரக்கமுள்ளவன்; நிகரற்ற அன்புடையோன்.

66. அவனே உங்களுக்கு உயிர் கொடுத்தான். பின்னர் உங்களை மரணிக்கச் செய்வான். பின்னர் உங்களை உயிர்ப்பிப்பான். மனிதன் நன்றி கெட்டவனாக இருக்கிறான்.

67. (முஹம்மதே!) ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு வழிபாட்டு முறையை ஏற்படுத்தியிருந்தோம். அதை அவர்கள் கடைப்பிடித்தனர். இது விஷயத்தில் அவர்கள் உம்முடன் தர்க்கம் செய்ய வேண்டாம். உமது இறைவனை நோக்கி அழைப்பீராக! நீர் நேரான வழியில் இருக்கிறீர்.

68. அவர்கள் உம்மிடம் தர்க்கம் செய்தால் "நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிபவன்'' என (முஹம்மதே!) கூறுவீராக!

69. நீங்கள் முரண்பட்ட விஷயத்தில் அல்லாஹ் உங்களுக்கிடையே கியாமத் நாளில்1 தீர்ப்பளிப்பான்.

70. (முஹம்மதே!) வானத்திலும்,507 பூமியிலும் உள்ளதை அல்லாஹ் அறிகிறான் என்பதை நீர் அறியவில்லையா? இது பதிவேட்டில்157 உள்ளது. இது அல்லாஹ்வுக்கு எளிதானது.

71. அல்லாஹ்வை விட்டு விட்டு எதைக் குறித்து எந்தச் சான்றையும் அவன் அருளவில்லையோ அதையும், எதைப் பற்றிய அறிவு அவர்களுக்கு இல்லையோ அதையும் அவர்கள் வணங்குகின்றனர். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளனும் இல்லை.

72. நமது தெளிவான வசனங்கள் அவர்களுக்குக் கூறப்பட்டால் (நம்மை) மறுப்போரின் முகங்களில் வெறுப்பைக் காண்கிறீர். நமது வசனங்களை அவர்களிடம் கூறுவோரைத் தாக்கவும் முற்படுவர். "இதை விட கெட்டதை உங்களுக்கு நான் கூறட்டுமா?'' என (முஹம்மதே!) கேட்பீராக! அதுதான் நரகம். மறுத்தோருக்கு அதையே அல்லாஹ் வாக்களித்துள்ளான். அது சென்றடையும் இடங்களில் மிகவும் கெட்டது.

73. மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது. அதைக் கவனமாகக் கேளுங்கள்! அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்கவும் முடியாது. தேடுவோனும், தேடப்படுவோனும் பலவீனமாக இருக்கிறார்கள்.

74. அவர்கள் அல்லாஹ்வைக் கண்ணியப்படுத்த வேண்டிய அளவுக்கு கண்ணியப்படுத்தவில்லை. அல்லாஹ் வலிமை மிக்கவன்; மிகைத்தவன்;

75. வானவர்களிலும்,507 மனிதர்களிலும் அல்லாஹ் தூதர்களைத் தேர்வு செய்கிறான்.161 அல்லாஹ் செவியுறுபவன்;488 பார்ப்பவன்.488

76. அவர்களுக்கு முன்னும் பின்னும் உள்ளதை அவன் அறிகிறான். காரியங்கள் அல்லாஹ்விடமே கொண்டு செல்லப்படும்.

77. நம்பிக்கை கொண்டோரே! ருகூவு செய்யுங்கள்! ஸஜ்தாச் செய்யுங்கள்!396 உங்கள் இறைவனை வணங்குங்கள்! நன்மையைச் செய்யுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.

78. அல்லாஹ்வுக்காக அறப்போர் செய்ய வேண்டிய விதத்தில் அறப்போர் செய்யுங்கள்! இந்தத் தூதர் (முஹம்மத்) உங்களுக்கு எடுத்துச் சொல்பவராகத் திகழவும், நீங்கள் ஏனைய மக்களுக்கு எடுத்துச் சொல்வோராகத் திகழவும் அவன் உங்களைத் தேர்ந்தெடுத்தான். உங்கள் தந்தை இப்ராஹீமின் மார்க்கமான இம்மார்க்கத்தில் அவன் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை.68 இதற்கு முன்னரும் இதிலும் அவனே உங்களுக்கு முஸ்லிம்கள்295 எனப் பெயரிட்டான். எனவே தொழுகையை நிலைநாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்! அல்லாஹ்வைப் பற்றிப் பிடியுங்கள்! அவனே உங்கள் பாதுகாவலன். அவன் சிறந்த பாதுகாவலன்; சிறந்த உதவியாளன்.

To read this Chapter in English click here.

14வது பதிப்பின்பின்படி திருத்தி அமைக்கப்பட்டது)

July 8, 2009, 9:52 PM

அத்தியாயம் : 23

அத்தியாயம் : 23
அல் முஃமினூன் - நம்பிக்கை கொண்டோர்

மொத்த வசனங்கள் : 118
இந்த அத்தியாயத்தின் 1 முதல் 11 வரை உள்ள வசனங்களில் வெற்றி பெறும் நம்பிக்கையாளர்கள் பற்றி கூறப்படுவதால் இந்த அத்தியாயத்துக்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டது.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்... .

1. நம்பிக்கை கொண்டோர் வெற்றி பெற்று விட்டனர்.

2. (அவர்கள்) தமது தொழுகையில் பணிவைப் பேணுவார்கள்.

3. வீணானதைப் புறக்கணிப்பார்கள்.

4. ஸகாத்தையும் நிறைவேற்றுவார்கள்.

5, 6. தமது மனைவியர் அல்லது தமது அடிமைப் பெண்களிடம் தவிர107, தமது கற்பைக் காத்துக் கொள்வார்கள். அவர்கள் பழிக்கப்பட்டோர் அல்லர்.26

7. இதற்கு அப்பால் (வேறு வழியை) தேடியவர்களே வரம்பு மீறியவர்கள்.

8. தமது அமானிதங்களையும், உடன்படிக்கையையும் அவர்கள் பேணுவார்கள்.

9. மேலும் அவர்கள் தமது தொழுகைகளைப் பேணிக் கொள்வார்கள்.

10, 11. பிர்தவ்ஸ் எனும் சொர்க்கத்திற்கு அவர்களே உரிமையாளர்கள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். 26

12. களிமண்ணின்503 சத்திலிருந்து506 மனிதனைப் படைத்தோம்.368

13. பின்னர் அவனைப் பாதுகாப்பான இடத்தில் விந்துத் துளியாக ஆக்கினோம்.506

14. பின்னர் விந்துத் துளியை கருவுற்ற சினைமுட்டையாக்கினோம்.365&506 பின்னர் கருவுற்ற சினைமுட்டையைச் சதைத்துண்டாக ஆக்கினோம். சதைத் துண்டை எலும்பாக ஆக்கி எலும்புக்கு இறைச்சியையும் அணிவித்தோம். பின்னர் அதை வேறு படைப்பாக296 ஆக்கினோம்.486 அழகிய படைப்பாளனாகிய அல்லாஹ் பாக்கியசாலியாவான்.

15. இதன் பிறகு நீங்கள் மரணிப்பவர்கள்.

16. பின்னர் கியாமத் நாளில்1 உயிர்ப்பிக்கப்படுவீர்கள்.

17. உங்களுக்கு மேலே ஏழு வழிகளைப் படைத்துள்ளோம். இப்படைப்பு பற்றி நாம் கவனமற்று இருக்கவில்லை.

18. வானத்திலிருந்து507 அளவோடு தண்ணீரை இறக்கினோம். அதைப் பூமியில் தங்க வைத்தோம்.297 அதைப் போக்கி விடுவதற்கும் நாம் ஆற்றலுடையவர்கள்.

19. அதன் மூலம் பேரீச்சை, மற்றும் திராட்சைத் தோட்டங்களை உங்களுக்காக உருவாக்கினோம். அவற்றில் ஏராளமான கனிகள் உங்களுக்கு உள்ளன. அவற்றை உண்ணுகின்றீர்கள்.

20. தூர் ஸினாயிலிருந்து வெளிப்படும் ஒரு மரத்தையும் (படைத்தோம்.) அது எண்ணெயையும், உண்பவருக்கு குழம்பையும் உற்பத்தி செய்கிறது.

21. கால்நடைகளில் உங்களுக்குப் படிப்பினை உள்ளது. அதன் வயிற்றில் உள்ளதிலிருந்து உங்களுக்குப் பருகத் தருகிறோம். அவற்றில் உங்களுக்கு ஏராளமான பயன்களும் உள்ளன. அவற்றை உண்ணுகின்றீர்கள்!171

22. அவற்றின் மீதும், கப்பலிலும் சுமக்கப்படுகிறீர்கள்.

23. நூஹை அவரது சமுதாயத்திடம் அனுப்பினோம். "என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. நீங்கள் அஞ்ச வேண்டாமா?'' என்று கேட்டார்.

24. அவரது சமுதாயத்தில் (ஏகஇறைவனை) மறுத்த பிரமுகர்கள் "இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதரைத் தவிர வேறில்லை. உங்களை விட சிறப்படைய இவர் விரும்புகிறார். அல்லாஹ் நினைத்திருந்தால் வானவர்களை அனுப்பியிருப்பான்.154 முந்தைய நமது முன்னோர்களிடமிருந்து இதை நாம் கேள்விப்பட்டதுமில்லை'' என்றனர்.

25. "இவர் ஒரு பைத்தியக்காரர் தவிர வேறில்லை. சிறிது காலம் வரை இவருக்கு அவகாசம் கொடுங்கள்!'' (என்றனர்.)

26. "என் இறைவா! அவர்கள் என்னைப் பொய்யரெனக் கருதியதால் எனக்கு உதவுவாயாக!'' என்று அவர் கூறினார்.

27. "நமது மேற்பார்வையிலும் நமது அறிவிப்பின்படியும், கப்பலைச் செய்வீராக! நமது உத்தரவு வந்து தண்ணீர் பொங்க ஆரம்பித்தால்221 ஒவ்வொன்றிலும் ஒரு ஜோடியையும், யாருக்கு எதிராகக் கட்டளை முந்தி விட்டதோ அவர்களைத் தவிர ஏனைய உமது குடும்பத்தாரையும் அதில் ஏற்றிக் கொள்வீராக! அநீதி இழைத்தோர் பற்றி என்னிடம் பேசாதீர்! அவர்கள் மூழ்கடிக்கப்படுபவர்கள்'' என்று அவருக்கு அறிவித்தோம்.

28. நீரும், உம்முடன் உள்ளோரும் கப்பலில் அமர்ந்ததும் "அநீதி இழைத்த கூட்டத்தை விட்டும் நம்மைக் காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்'' எனக் கூறுவீராக!

29. "என் இறைவா! பாக்கியம் பெற்ற இடத்தில் என்னைத் தங்க வைப்பாயாக! தங்க வைப்போரில் நீ மிகச் சிறந்தவன்'' என்று கூறுவீராக!

30. இதில் பல சான்றுகள் உள்ளன.222 நாம் சோதிப்பவர்களாவோம்.484

31. அவர்களுக்குப் பின் மற்றொரு தலைமுறையை உருவாக்கினோம்.

32. "அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. நீங்கள் அஞ்ச வேண்டாமா?'' என்று (எச்சரிக்க) அவர்களிலிருந்தே அவர்களுக்குத் தூதரை அனுப்பினோம்.

33. "இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதர் தவிர வேறில்லை. நீங்கள் உண்பதையே இவரும் உண்ணுகிறார். நீங்கள் அருந்துவதையே இவரும் அருந்துகிறார்'' என்று அவரது சமுதாயத்தில் யார் (ஏகஇறைவனை) மறுத்து, மறுமையின் சந்திப்பைப் பொய்யெனக் கருதினார்களோ, இவ்வுலக வாழ்வில் யாருக்கு சொகுசான வாழ்வை வழங்கினோமோ அந்தப் பிரமுகர்கள் கூறினர்.

34. "உங்களைப் போன்ற ஒரு மனிதருக்கு நீங்கள் கட்டுப்பட்டால் நீங்கள் நட்டமடைந்தவர்கள்''

35. "நீங்கள் மரணித்து மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆகிவிடும்போது உயிர்ப்பிக்கப்படுவீர்கள் என்று இவர் உங்களுக்கு எச்சரிக்கிறாரா?''

36. "நடக்காது! உங்களுக்கு எச்சரிக்கப்படுவது நடக்காது''

37. "நமது இவ்வுலக வாழ்க்கை தவிர வேறு இல்லை. மரணிக்கிறோம்; வாழ்கிறோம்; நாம் உயிர்ப்பிக்கப்படுவோர் அல்லர்''

38. "இவர் அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிய மனிதரைத் தவிர வேறு இல்லை. நாங்கள் இவரை நம்புவோராக இல்லை'' (என்று அந்தப் பிரமுகர்கள் கூறினர்.)

39. "என் இறைவா! அவர்கள் என்னைப் பொய்யரெனக் கருதியதால் எனக்கு உதவுவாயாக!'' என்று அவர் கூறினார்.

40. "சிறிது காலத்தில் அவர்கள் கவலைப்படுவோராக ஆவார்கள்'' என்று (இறைவன்) கூறினான்.

41. உண்மையாகவே அவர்களைப் பெரும் சப்தம் தாக்கியது. உடனே அவர்களைக் கூளங்களாக ஆக்கினோம். அநீதி இழைத்த கூட்டத்தினருக்கு (இறையருள்) தூரமே!

42. அவர்களுக்குப் பின்னர் வேறு பல தலைமுறையினரை உருவாக்கினோம்.

43. எந்தச் சமுதாயமும் தன்னுடைய காலக் கெடுவை முந்தவும் மாட்டார்கள். பிந்தவும் மாட்டார்கள்.

44. பின்னர் நமது தூதர்களைத் தொடர்ச்சியாக அனுப்பினோம். ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அதன் தூதர் வந்தபோது அவரைப் பொய்யரெனக் கருதினர். ஆகவே அவர்களில் சிலருக்குப் பின் வேறு சிலரைத் தொடரச் செய்தோம். அவர்களைப் பழங்கதைகளாக ஆக்கினோம். நம்பிக்கை கொள்ளாத கூட்டத்திற்கு (இறையருள்) தூரமே!

45, 46. பின்னர் ஃபிர்அவ்னிடமும், அவனது சமுதாயத்திடமும் மூஸாவையும், அவரது சகோதரர் ஹாரூனையும் நமது அத்தாட்சிகளுடனும், தெளிவான சான்றுடனும் அனுப்பினோம். அவர்கள் பெருமையடித்தனர். அவர்கள் ஆதிக்கம் செலுத்தும் கூட்டமாக இருந்தனர்.26

47. "இவ்விருவரின் சமுதாயத்தினர் நமக்கு அடிமைகளாக இருக்கும் நிலையில் நம்மைப் போன்ற இரு மனிதர்களை நாம் நம்புவோமா?'' என்றனர்.

48. அவ்விருவரையும் பொய்யரெனக் கருதினர். எனவே அவர்கள் அழிக்கப்பட்டோர் ஆயினர்.

49. அவர்கள் நேர்வழி பெறுவதற்காக மூஸாவுக்கு வேதத்தை வழங்கினோம்.

50. மர்யமின் மகனையும், அவரது தாயாரையும் சான்றாக ஆக்கினோம்.415 செழிப்பும், நிலையான தன்மையும் கொண்ட உயரமான இடத்தில் அவ்விருவரையும் தங்க வைத்தோம்.

51. தூதர்களே! தூய்மையானவற்றை உண்ணுங்கள்! நல்லறம் செய்யுங்கள்! நீங்கள் செய்வதை நான் அறிந்தவன்.

52. உங்களின் இந்தச் சமுதாயம் ஒரே சமுதாயமே. நான் உங்கள் இறைவன். எனக்கே அஞ்சுங்கள்!

53. அவர்கள் தமது காரியத்தைத் தமக்கிடையே பல பிரிவுகளாகப் பிரித்து விட்டனர். ஒவ்வொரு கூட்டத்தினரும் தம்மிடம் உள்ளது பற்றி மகிழ்ச்சியடைகின்றனர்.

54. சிறிது காலம் வரை அவர்களை அவர்களின் வழிகேட்டிலேயே விட்டு விடுவீராக!

55, 56. அவர்களுக்கு நாம் செல்வத்தையும், பிள்ளைகளையும் வழங்கியிருப்பது குறித்து "நல்லவற்றை விரைந்து வழங்குகிறோம்'' என்று எண்ணுகிறார்களா? அவ்வாறில்லை! அவர்கள் உணர மாட்டார்கள்.26

57, 58, 59 60, 61. தமது இறைவனின் அச்சத்தால் நடுங்குவோரும், தமது இறைவனின் வசனங்களை நம்புவோரும், தமது இறைவனுக்கு இணை கற்பிக்காதோரும், தமது இறைவனிடம் திரும்பிச் செல்லவிருப்பதை உள்ளத்தால் அஞ்சி, வழங்குவதை வழங்குவோரும் ஆகிய இவர்களே நன்மைகளை விரைந்து அடைகின்றனர். அவர்களே அவற்றுக்கு முந்துபவர்கள்.26

62. எவரையும் அவரது சக்திக்கு மேல் சிரமப்படுத்த மாட்டோம்.68 நம்மிடம் உண்மையைப் பேசும் ஏடு157 உள்ளது. அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.

63. எனினும் அவர்களின் உள்ளங்கள் இதைப் பற்றி கவனமற்று இருக்கின்றன. இது அல்லாத ஏனைய செயல்கள் அவர்களுக்கு உள்ளன. அவற்றை அவர்கள் செய்கின்றனர்.

64. முடிவில் அவர்களில் சொகுசாக வாழ்ந்தோரை வேதனையால் நாம் பிடிக்கும்போது அபயக் குரல் எழுப்புகின்றனர்.

65. இன்று அபயக் குரல் எழுப்பாதீர்கள்! நீங்கள் நம்மிடமிருந்து உதவி செய்யப்பட மாட்டீர்கள்.

66. எனது வசனங்கள் உங்களுக்குக் கூறப்பட்டு வந்தன. அப்பொழுது புறங்காட்டிச் சென்று கொண்டிருந்தீர்கள்.

67. ஆணவம் கொண்டு இரவு நேரங்களில் அதைக் குறை கூறிக் கொண்டு இருந்தீர்கள்.

68. இச்சொல்லை அவர்கள் சிந்தித்துப் பார்க்கவில்லையா? அல்லது அவர்களின் முந்தைய முன்னோர்களிடம் வராத ஒன்று அவர்களிடம் வந்துள்ளதா?

69. அல்லது தமது தூதரைப் பற்றி அறியாமல் இருந்து அவரை அவர்கள் நிராகரிக்கிறார்களா?

70. அல்லது அவருக்குப் பைத்தியம் உள்ளது எனக் கூறுகிறார்களா?468 மாறாக அவர்களிடம் உண்மையையே கொண்டு வந்தார். அவர்களில் பெரும்பாலோர் உண்மையை வெறுப்போராகவே உள்ளனர்.

71. உண்மை, அவர்களின் மனோ இச்சைகளைப் பின்பற்றிச் சென்றிருந்தால் வானங்களும்,507 பூமியும் அவற்றில் உள்ளோரும் சீரழிந்திருப்பார்கள். மாறாக அவர்களுக்கு அவர்களின் அறிவுரையையே வழங்கியுள்ளோம். அவர்கள் தமது அறிவுரையைப் புறக்கணிக்கின்றனர்.

72. அல்லது அவர்களிடம் (முஹம்மதே!) நீர் கூலியைக் கேட்கிறீரா? உமது இறைவனின் கூலியே சிறந்தது. அவனே கொடுப்போரில் சிறந்தவன்.

73. நீர் அவர்களை நேரான வழியை நோக்கி அழைக்கிறீர்!

74. மறுமையை நம்பாதோர் அவ்வழியை விட்டும் விலகியவர்கள்.

75. நாம் அவர்களுக்கு அருள் புரிந்து, அவர்களிடம் உள்ள துன்பத்தை நீக்கியிருந்தால் தமது அத்துமீறலில் தடுமாறி மூழ்கிக் கிடப்பார்கள்.

76. அவர்களைக் கடுமையாகத் தண்டித்தோம். அவர்கள் தமது இறைவனுக்குப் பணியவுமில்லை; மன்றாடவும் இல்லை.

77. முடிவில் கடுமையான வேதனையுடைய வாசலை அவர்களுக்கு எதிராக நாம் திறந்து விடும்போது அவர்கள் நம்பிக்கையிழந்தோராகி விடுகின்றனர்.

78. அவனே உங்களுக்குச் செவியையும், பார்வைகளையும், உள்ளங்களையும் ஏற்படுத்தினான். குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள்.

79. அவனே உங்களைப் பூமியில் பரவச் செய்தான். அவனிடமே ஒன்று திரட்டப்படுவீர்கள்.

80. அவனே உயிர்ப்பிக்கிறான்; மரணிக்கச் செய்கிறான். இரவு பகல் மாறுவது அவனுக்கே உரியது. விளங்க மாட்டீர்களா?

81. மாறாக முன் சென்றோர் கூறியது போலவே இவர்களும் கூறுகின்றனர்.

82. "நாங்கள் மரணித்து மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆன பின் உயிர்ப்பிக்கப்படுவோமா?'' என்று கேட்கின்றனர்.

83. இதற்கு முன்பே எங்களுக்கும், எங்கள் முன்னோர்களுக்கும் இவ்வாறே எச்சரிக்கப்பட்டது. இது முன்னோர்களின் கட்டுக்கதைகள் தவிர வேறில்லை (என்றும் கூறினர்).

84. "பூமியும், அதில் உள்ளோரும் யாருக்குச் சொந்தம்? நீங்கள் அறிந்தால் (பதிலளியுங்கள்!)'' என்று (முஹம்மதே!) கேட்பீராக!

85. 'அல்லாஹ்வுக்கே' என்று அவர்கள் கூறுவார்கள். "சிந்திக்க மாட்டீர்களா?'' என்று கேட்பீராக!

86. "ஏழு வானங்களுக்கும்507 அதிபதி, மகத்தான அர்ஷின்488 அதிபதி யார்?'' எனக் கேட்பீராக!

87. "அல்லாஹ்வே'' என்று கூறுவார்கள். "அஞ்ச மாட்டீர்களா?'' என்று கேட்பீராக!

88. "பாதுகாப்பவனும், (பிறரால்) பாதுகாக்கப்படாதவனும், தன் கைவசம் ஒவ்வொரு பொருளின் அதிகாரத்தை வைத்திருப்பவனும் யார்? நீங்கள் அறிந்தால் (பதில் கூறுங்கள்!)'' என்று கேட்பீராக!

89. 'அல்லாஹ்வே' என்று கூறுவார்கள். "எவ்வாறு மதி மயக்கப்படுகிறீர்கள்?'' என்று கேட்பீராக!

90. அவர்களிடம் உண்மையையே கொண்டு வந்தோம். அவர்கள் பொய்யர்கள்.

91. அல்லாஹ் பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அவனுடன் எந்தக் கடவுளும் இல்லை. அவ்வாறிருந்தால் தான் படைத்தவற்றுடன் ஒவ்வொரு கடவுளும் (தனியாகப்) போயிருப்பார்கள். ஒருவரையொருவர் மிகைத்திருப்பார்கள். அவர்கள் கூறுவதை விட்டும் அல்லாஹ் தூயவன்.10

92. அவன் மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிபவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் அவன் உயர்ந்தவன்.

93, 94. "என் இறைவா! அவர்களுக்கு எச்சரிக்கப்படுவதை (வேதனையை) எனக்குக் காட்டினால் என் இறைவா! என்னை அநீதி இழைத்த கூட்டத்தில் ஆக்கி விடாதே!'' என்று (முஹம்மதே!) கூறுவீராக!26

95. அவர்களுக்கு நாம் எச்சரிப்பதை உமக்குக் காட்டுவதற்கு நாம் ஆற்றலுடையவர்கள்.

96. நல்லதைக் கொண்டு கெடுதியைத் தடுப்பீராக! அவர்கள் கூறுவதை நாம் நன்கு அறிவோம்.

97. "என் இறைவா! ஷைத்தான்களின் தூண்டுதல்களை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்'' என்று கூறுவீராக!

98. "என் இறைவா! என்னிடம் அவர்கள் வருவதை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்'' (என்றும் கூறுவீராக!)

99, 100. முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும்போது "என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!'' என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை298 உள்ளது.26

101. ஸூர் ஊதப்படும்போது அவர்களிடையே அந்நாளில் எந்த உறவுகளும் இருக்காது. ஒருவரையொருவர் விசாரித்துக் கொள்ளவும் மாட்டார்கள்.

102. எவரது எடைகள் கனமாகி விட்டனவோ அவர்களே வெற்றி பெற்றோர்.

103. எவரது எடைகள் இலேசாகி விட்டனவோ அவர்கள் தமக்குத் தாமே நட்டத்தை ஏற்படுத்தினர். நரகத்தில் நிரந்தரமாக இருப்பார்கள். 

104. அவர்களது முகங்களை நெருப்பு பொசுக்கும். அதில் அவர்கள் விகாரமான தோற்றத்துடன் இருப்பார்கள்.

105. "எனது வசனங்கள் உங்களுக்குக் கூறப்படவில்லையா? அதை நீங்கள் பொய்யெனக் கருதிக் கொண்டு இருக்கவில்லையா?'' (என்று கூறப்படும்).

106. "எங்கள் இறைவா! எங்கள் துர்பாக்கியம் எங்களை மிகைத்து விட்டது. நாங்கள் வழி தவறிய கூட்டமாக இருந்தோம்'' என்று கூறுவார்கள்.

107. "எங்கள் இறைவா! இங்கிருந்து எங்களை வெளியேற்றி விடு! நாங்கள் பழைய நிலைக்குத் திரும்பினால் நாங்கள் அநீதி இழைத்தவர்கள்'' (என்றும் கூறுவார்கள்).

108. "இங்கேயே சிறுமையடையுங்கள்! என்னிடம் பேசாதீர்கள்!'' என்று அவன் கூறுவான்.

109. "எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எங்களை மன்னித்து அருள் புரிவாயாக! நீ கருணையாளர்களில் சிறந்தவன்'' என்று எனது அடியார்களில் ஒரு சாரார் கூறி வந்தனர்.

110. "எனது நினைவை விட்டும் உங்களை மறக்கச் செய்யும் அளவுக்கு அவர்களைக் கேலிப் பொருளாகக் கருதினீர்கள். அவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டுமிருந்தீர்கள்'' (என்று இறைவன் கூறுவான்.)

111. "அவர்கள் சகித்துக் கொண்டதால் இன்று அவர்களுக்கு நான் பரிசளித்தேன். அவர்களே வெற்றி பெற்றோர்'' (என்றும் இறைவன் கூறுவான்.)

112. "ஆண்டுகளின் எண்ணிக்கையில் எவ்வளவு காலம் பூமியில் வாழ்ந்தீர்கள்?'' என்று (இறைவன்) கேட்பான்.

113. "ஒரு நாள், அல்லது ஒரு நாளில் சிறிது நேரம் வாழ்ந்தோம். கணக்கிடுவோரிடம் விசாரிப்பாயாக!'' என்று அவர்கள் கூறுவார்கள்.

114. "குறைவாகவே வாழ்ந்தீர்கள். இதை அறிந்தவர்களாக நீங்கள் இருந்திருக்கக் கூடாதா?'' என்று அவன் கூறுவான்.

115. உங்களை வீணாகப் படைத்துள்ளோம் என்றும் நம்மிடம் திரும்பக் கொண்டு வரப்படமாட்டீர்கள் என்றும் நினைத்து விட்டீர்களா?

116. உண்மையான அரசனாகிய அல்லாஹ் உயர்ந்தவன். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. (அவன்) கண்ணியமிக்க அர்ஷின்488 அதிபதி.

117. அல்லாஹ்வுடன் வேறு கடவுளை யாரேனும் அழைத்தால் அவனிடம் அது குறித்து எந்தச் சான்றும் இல்லை. அவனை விசாரிப்பது அவனது இறைவனிடமே உள்ளது. (ஏகஇறைவனை) மறுப்போர் வெற்றி பெற மாட்டார்கள்.

118. என் இறைவா! மன்னித்து அருள்புரிவாயாக!493 நீ அருள்புரிவோரில் சிறந்தவன்'' என கூறுவீராக!

To read this Chapter in English click here.

(14வது பதிப்பின்படி திருத்தி அமைக்கப்பட்டது)

July 8, 2009, 9:55 PM

அத்தியாயம் : 24

அத்தியாயம் : 24
அந்நூர் - அந்த ஒளி

மொத்த வசனங்கள் : 64
இந்த அத்தியாயத்தின் 35வது வசனத்தில் இறைவன் தனது நேர்வழிக்கு ஒளியை உதாரணமாகக் கூறுவதால் அந்நூர் (அந்த ஒளி) என்று பெயர் சூட்டப்பட்டது.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்... .

1. (இது) நாம் அருளி விதியாக்கிய அத்தியாயமாகும். நீங்கள் படிப்பினை பெறுவதற்காக தெளிவான வசனங்களை இதில் அருளினோம்.

2. விபச்சாரம் செய்யும் பெண்ணையும், விபச்சாரம் செய்யும் ஆணையும் அவர்கள் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்!115 அல்லாஹ்வையும், இறுதி நாளையும்1 நீங்கள் நம்பினால் அல்லாஹ்வின் சட்டத்தில் அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம்.43 அவ்விருவரும் தண்டிக்கப்படுவதை நம்பிக்கை கொண்டோரில் ஒரு கூட்டம் பார்த்துக் கொண்டிருக்கட்டும்.299

3. விபச்சாரம் செய்தவன், விபச்சாரம் செய்தவளையோ இணை கற்பிப்பவளையோ தவிர மற்றவர்களை மணந்து கொள்ள மாட்டான். விபச்சாரம் செய்தவளை, விபச்சாரம் செய்தவனோ இணை கற்பிப்பவனோ தவிர மற்றவர்கள் மணந்து கொள்ள மாட்டார்கள். இது நம்பிக்கை கொண்டோர் மீது தடை செய்யப்பட்டுள்ளது.

4. ஒழுக்கமுள்ள பெண்கள் மீது பழி சுமத்தி, பின்னர் நான்கு சாட்சிகளைக் கொண்டு வராதவர்களை எண்பது கசையடி அடியுங்கள்!112 அவர்களின் சாட்சியத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாதீர்கள்! அவர்களே குற்றம் புரிபவர்கள்.43

5. இதன் பின்னர் மன்னிப்புக் கேட்டு திருந்திக் கொண்டோரைத் தவிர. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

6. தங்களைத் தவிர வேறு சாட்சிகள் இல்லாத நிலையில் தமது மனைவியர் மீது பழி சுமத்துவோர், தாங்கள் உண்மையாளர்கள் என்று அல்லாஹ்வின் மீது நான்கு தடவை (சத்தியம் செய்து) சாட்சியமளிக்க வேண்டும்.454

7. தான் பொய்யனாக இருந்தால் தன் மீது அல்லாஹ்வின் சாபம்6 ஏற்படட்டும் என்பது ஐந்தாவதாகும்.454

8. "அவனே பொய்யன்'' என்று அல்லாஹ்வின் மீது நான்கு தடவை (சத்தியம் செய்து) அப்பெண் சாட்சியமளிப்பது454 தண்டனையிலிருந்து அவளைக் காக்கும்.

9. "அவன் உண்மையாளனாக இருந்தால் என்மீது அல்லாஹ்வின் கோபம் ஏற்படட்டும்'' என்பது ஐந்தாவதாகும்.454

10. அல்லாஹ்வின் அருளும், அன்பும் உங்களுக்கு இல்லாமலும், அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவனாகவும், ஞானமிக்கவனாகவும் இல்லாமலும் இருந்தால் (உங்களுக்கு அழிவு ஏற்பட்டிருக்கும்)

11. அவதூறு கூறியோர் உங்களில் ஒரு பகுதியினரே. அதை உங்களுக்குத் தீங்காக நினைக்காதீர்கள்! மாறாக அது உங்களுக்கு நல்லது. அவர்களில் ஒவ்வொருவருக்கும் அவர் செய்த பாவம் உள்ளது. அவர்களில் இந்த விஷயத்தில் பெரும் பங்கு எடுத்தவனுக்குக் கடும் வேதனை உண்டு.

12. இதைச் செவியுற்றபோது நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் தமக்குள் நல்லதையே எண்ணியிருக்கக் கூடாதா? "இது தெளிவான அவதூறு'' என்று கூறியிருக்கக் கூடாதா?

13. இதற்கு நான்கு சாட்சிகளை112 அவர்கள் கொண்டு வந்திருக்கக் கூடாதா? சாட்சிகளை அவர்கள் கொண்டு வரவில்லையானால் அல்லாஹ்விடம் அவர்களே பொய்யர்கள்.

14. இவ்வுலகிலும், மறுமையிலும் அல்லாஹ்வின் அன்பும், அருளும் உங்களுக்கு இல்லாதிருந்தால் நீங்கள் எதில் ஈடுபட்டீர்களோ அதற்காக உங்களுக்குக் கடும் வேதனை ஏற்பட்டிருக்கும்.

15. உங்கள் நாவுகளால் அதைப் பரப்பியதை எண்ணிப் பாருங்கள்! உங்களுக்கு அறிவு இல்லாததை உங்கள் வாய்களால் கூறினீர்கள். அதை இலேசானதாகவும் எண்ணிக் கொண்டீர்கள். அதுவோ அல்லாஹ்விடம் பயங்கரமானதாக இருக்கிறது.

16. இதைக் கேள்விப்பட்டபோது "இதைப் பற்றிப் பேசுவது எங்களுக்குத் தகாது. (இறைவா) நீயே தூயவன்.10 இது பயங்கரமான அவதூறு'' என்று நீங்கள் கூறியிருக்கக் கூடாதா?

17. நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் ஒருபோதும் இது போன்று மீண்டும் செய்யாதிருக்குமாறு அல்லாஹ் உங்களுக்கு அறிவுரை கூறுகிறான்.

18. வசனங்களை அல்லாஹ் உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.

19. வெட்கக்கேடான செயல் நம்பிக்கை கொண்டோரிடம் பரவ வேண்டும் என விரும்புவோருக்கு இவ்வுலகிலும், மறுமையிலும் துன்புறுத்தும் வேதனை உண்டு. அல்லாஹ்வே அறிகிறான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.

20. அல்லாஹ்வின் அருளும், அன்பும் உங்களுக்கு இல்லாமலும், அல்லாஹ் இரக்கமுடையவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும், இல்லாமலும் இருந்தால் (உங்களுக்கு அழிவு ஏற்பட்டிருக்கும்)

21. நம்பிக்கை கொண்டோரே! ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்! யார் ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறாரோ (அவர் வழிகெடுவார்). ஏனெனில் அவன் வெட்கக்கேடானவற்றையும், தீமையையும் தூண்டுகிறான். அல்லாஹ்வின் அருளும், அன்பும் உங்களுக்கு இல்லாதிருந்தால் ஒருபோதும் உங்களில் எவரையும் அவன் பரிசுத்தமாக்கியிருக்க மாட்டான். எனினும் தான் நாடியோரை அல்லாஹ் பரிசுத்தமாக்குகிறான். அல்லாஹ் செவியுறுபவன்;488 அறிந்தவன்.

22. "உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும், அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத்460 செய்தோருக்கும் உதவ மாட்டோம்'' என்று செல்வமும், வசதியும் உடையோர் சத்தியம் செய்ய வேண்டாம். மன்னித்து அலட்சியம் செய்யட்டும். "அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும்'' என்று விரும்ப மாட்டீர்களா? அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.364

23. நம்பிக்கை கொண்ட வெகுளிகளான ஒழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறுவோர் இவ்வுலகிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டனர். அவர்களுக்குக் கடும் வேதனை உண்டு.

24. அந்நாளில்1 அவர்களின் நாவுகளும், கைகளும், கால்களும் அவர்களுக்கு எதிராக அவர்கள் செய்தவை குறித்து சாட்சியமளிக்கும்.

25. அன்று அவர்களது உண்மையான கூலியை அவர்களுக்கு அல்லாஹ் கொடுப்பான். அல்லாஹ் உண்மையானவன்; தெளிவுபடுத்துபவன் என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள்.

26. கெட்ட பெண்கள், கெட்ட ஆண்களுக்கும் கெட்ட ஆண்கள், கெட்ட பெண்களுக்கும் (உரியோர்). நல்ல பெண்கள், நல்ல ஆண்களுக்கும் நல்ல ஆண்கள், நல்ல பெண்களுக்கும் (தகுதியானோர்). அவர்கள் (நயவஞ்சகர்கள்) கூறுவதை விட்டும் இவர்கள் (நல்லோர்) நீங்கியவர்கள். இவர்களுக்கு மன்னிப்பும், மரியாதையான உணவும் உண்டு.

27. நம்பிக்கை கொண்டோரே! உங்கள் வீடுகள் அல்லாத வேறு வீடுகளில் அவர்களின் அனுமதி பெறாமலும் அவ்வீட்டாருக்கு ஸலாம்159 கூறாமலும் நுழையாதீர்கள்! இதுவே உங்களுக்குச் சிறந்தது. இதனால் பண்படுவீர்கள்.

28. அங்கே எவரையும் நீங்கள் காணாவிட்டால் உங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் வரை அங்கே நுழையாதீர்கள்! "திரும்பி விடுங்கள்!'' என்று உங்களுக்குக் கூறப்பட்டால் திரும்பி விடுங்கள்! அதுவே உங்களுக்குப் பரிசுத்தமானது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிந்தவன்.

29. யாரும் குடியிருக்காத வீட்டில் உங்களின் பொருள் இருந்தால் அங்கே நுழைவது உங்கள் மீது குற்றமில்லை. நீங்கள் வெளிப்படுத்துவதையும், மறைப்பதையும் அல்லாஹ் அறிகிறான்.

30. (முஹம்மதே!) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

31. தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில்458 வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும்.472 தமது கணவர்கள், தந்தையர், கணவர்களுடைய தந்தையர், புதல்வர்கள், கணவர்களின் புதல்வர்கள், சகோதரர்கள், சகோதரர்களின் புதல்வர்கள், சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள்,107 ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை458 அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம்458 அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.300

32. உங்களில் வாழ்க்கைத் துணையற்றவர்களுக்கும், நல்லோரான உங்களின் ஆண் அடிமைகளுக்கும், பெண் அடிமைகளுக்கும் திருமணம் செய்து வையுங்கள்!435 அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் தனது அருளால் அவர்களைத் தன்னிறைவு பெற்றோராக ஆக்குவான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.

33. திருமணம் செய்ய வசதியற்றவர்களை அல்லாஹ் தனது அருளால் தன்னிறைவு பெற்றோராக ஆக்கும் வரை அவர்கள் கற்பொழுக்கம் பேணட்டும்.435 உங்கள் அடிமைகளில் விடுதலைப் பத்திரம் எழுதிக் கேட்போரிடம் நல்லதை நீங்கள் அறிந்தால் அவர்களுக்கு விடுதலைப் பத்திரம் எழுதிக் கொடுங்கள்!301 அல்லாஹ் உங்களுக்கு அளித்துள்ள செல்வத்திலிருந்து அவர்களுக்கு வழங்குங்கள்! கற்பொழுக்கம் நாடும் உங்கள் பெண்களை இவ்வுலக வாழ்க்கையின் சாதனங்களைப் பெறுவதற்காக விபச்சாரத்திற்கு நிர்பந்திக்காதீர்கள்! யாரேனும் அவர்களை நிர்பந்தித்தால் நிர்பந்திக்கப்பட்ட அப்பெண்களை அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

34. உங்களிடம் தெளிவான வசனங்களையும், உங்களுக்கு முன் சென்றோரின் முன்னுதாரணத்தையும், (நம்மை) அஞ்சுவோருக்கு அறிவுரையையும் அருளியுள்ளோம்.

35. அல்லாஹ், வானங்களுக்கும்507 பூமிக்கும் ஒளியாவான். அவனது ஒளிக்கு உவமை ஒரு மாடம். அதில் ஒரு விளக்கு உள்ளது. அவ்விளக்கு ஒரு கண்ணாடிக்குள் உள்ளது. அக்கண்ணாடி ஒளி வீசும் நட்சத்திரம் போன்றுள்ளது. பாக்கியம் பொருந்திய ஸைத்தூன் (ஒலிவ) மரத்திலிருந்து அது எரிக்கப்படுகிறது. அது கீழ்த்திசையைச் சேர்ந்ததுமன்று. மேல் திசையைச் சேர்ந்ததுமன்று. நெருப்பு படாவிட்டாலும் அதன் எண்ணெய்யும் ஒளி வீசுகிறது. (இப்படி) ஒளிக்கு மேல் ஒளியாகவுள்ளது. தான் நாடியோருக்கு அல்லாஹ் தனது ஒளியை நோக்கி வழி காட்டுகிறான். மனிதர்களுக்காக உதாரணங்களை அல்லாஹ் கூறுகிறான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்.302

36, 37. (இறை) இல்லங்கள் உயர்த்தப்படவும், அதில் தனது பெயர் நினைக்கப்படவும் அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்.417 அதில் காலையிலும், மாலையிலும் அவனைச் சில ஆண்கள் துதிக்கின்றனர்.418 வணிகமோ, வர்த்தகமோ அவர்களை அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை நிலைநாட்டுவதை விட்டும், ஸகாத் கொடுப்பதை விட்டும் திசை திருப்பாது. பார்வைகளும், உள்ளங்களும் தடுமாறும் நாளை1 அவர்கள் அஞ்சுவார்கள்.26

38. அவர்கள் செய்த நல்லறங்களுக்காக அல்லாஹ் கூலி கொடுப்பான்; அவன் தனது அருளை அவர்களுக்கு அதிகப்படுத்துவான். தான் நாடியோருக்கு அல்லாஹ் கணக்கின்றி வழங்குவான்.

39. (ஏகஇறைவனை) மறுப்போரின் செயல்கள் பாலைவனத்தில் (தெரியும்) கானல் நீர் போன்றது. தாகம் ஏற்பட்டவன் அதைத் தண்ணீர் என நினைப்பான். முடிவில் அங்கே அவன் வரும்போது எதையும்
காண மாட்டான். அங்கே அல்லாஹ்வைத்தான் காண்பான்.61 அப்போது அவனது கணக்கை (அல்லாஹ்) நேர் செய்வான். அல்லாஹ் விரைந்து விசாரிப்பவன்.

40. அல்லது ஆழ்கடலில் உள்ள பல இருள்களைப்303 போன்றது. ஓர் அலை அதை மூடுகிறது. அதற்கு மேலே மற்றொரு அலை!429 அதன் மேலே மேகம்! ஒன்றுக்கு மேல் ஒன்றாகப் பல இருள்கள்!303 அவன் தனது கையை வெளிப்படுத்தும்போது அதை (கூட) அவனால் பார்க்க முடியாது.303 அல்லாஹ் யாருக்கு ஒளியை ஏற்படுத்தவில்லையோ அவனுக்கு எந்த ஒளியும் இல்லை.

41. வானங்களிலும்,507 பூமியிலும் உள்ளவையும், அணிவகுத்த நிலையில் பறவைகளும் அல்லாஹ்வைத் துதிப்பதை நீர் அறியவில்லையா?260 ஒவ்வொன்றும் தனது வணக்கத்தையும், துதித்தலையும் அறிந்துள்ளன. அவர்கள் செய்வதை அல்லாஹ் அறிந்தவன்.

42. வானங்கள்507 மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்விடமே திரும்பிச் செல்லுதல் உள்ளது.

43. அல்லாஹ் மேகங்களை இழுத்து அவற்றை ஒன்றாக்குவதையும், பின்னர் அதை அடுக்கடுக்காக அமைப்பதையும் நீர் அறியவில்லையா? அதன் மத்தியில் மழை வெளிப்படுவதைக் காண்கிறீர்! வானத்திலிருந்து507 அதில் உள்ள (பனி) மலைகளிலிருந்து ஆலங்கட்டியையும் இறக்குகிறான்.419 தான் நாடியோருக்கு அதைப் பெறச் செய்கிறான். தான் நாடியோரை விட்டும் திருப்பி விடுகிறான். அதன் மின்னல் ஒளி பார்வைகளைப் பறிக்கப் பார்க்கிறது.

44. அல்லாஹ் இரவையும், பகலையும் மாறி மாறி வரச் செய்கிறான். சிந்தனையுடையோருக்கு இதில் படிப்பினை உள்ளது.

45. ஒவ்வொரு உயிரினத்தையும் அல்லாஹ் நீரால் படைத்தான். அவற்றில் வயிற்றால் நடப்பவை உள்ளன. இரு கால்களால் நடப்பவையும் அவற்றில் உள்ளன. நான்கு கால்களால் நடப்பவையும் அவற்றில் உள்ளன. தான் நாடியதை அல்லாஹ் படைப்பான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்.

46. தெளிவுபடுத்தும் வசனங்களை நாம் அருளினோம். தான் நாடியோரை அல்லாஹ் நேரான பாதையில் செலுத்துகிறான்.

47. "அல்லாஹ்வையும், இத்தூதரையும் நம்பினோம்; கட்டுப்பட்டோம்'' என்று அவர்கள் கூறுகின்றனர். பின்னர் அவர்களில் ஒரு பிரிவினர் இதன் பிறகு புறக்கணிக்கின்றனர். அவர்கள் நம்பிக்கை கொண்டோர் அல்லர்.

48. அவர்களிடையே தீர்ப்பளிப்பதற்காக அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் அழைக்கப்படும்போது அவர்களில் ஒரு பிரிவினர் புறக்கணிக்கின்றனர்.234

49. உண்மை அவர்களுக்குச் சாதகமாக இருந்தால் அதற்குக் கட்டுப்பட்டு வருகின்றனர்.

50. அவர்களின் உள்ளங்களில் நோய் உள்ளதா? அல்லது சந்தேகம் கொள்கிறார்களா? அல்லது அல்லாஹ்வும், அவனது தூதரும் அவர்களுக்கு அநீதி இழைப்பார்கள் என்று அஞ்சுகிறார்களா? இல்லை! அவர்களே அநீதி இழைத்தவர்கள்.

51. அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் அழைக்கப்படும்போது "செவியுற்றோம்; கட்டுப்பட்டோம்'' என்பதே நம்பிக்கை கொண்டோரின் கூற்றாக இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.234

52. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு, அல்லாஹ்வை அஞ்சி பயப்படுவோரே வெற்றி பெற்றோர்.

53. (முஹம்மதே!) அவர்களுக்கு நீர் கட்டளையிட்டால் தாங்கள் (போருக்கு) புறப்படுவதாக அல்லாஹ்வின் மீது உறுதியாக சத்தியம் செய்கின்றனர். "சத்தியம் செய்யாதீர்கள்! அழகிய முறையில் கட்டுப்படுதலே (அவசியமாகும்.) நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன்'' என்று கூறுவீராக!

54. "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்!'' எனக் கூறுவீராக! அவர்கள் புறக்கணித்தால் இவர் (முஹம்மத்) மீது சுமத்தப்பட்டது இவரைச் சேரும். உங்கள் மீது சுமத்தப்பட்டது உங்களைச் சேரும். இவருக்கு நீங்கள் கட்டுப்பட்டால் நேர்வழி பெறுவீர்கள். தெளிவாக எடுத்துச் சொல்வது தவிர இத்தூதரின் மீது வேறு (கடமை) இல்லை.81

55. அவர்களுக்கு முன் சென்றோருக்கு அதிகாரம் வழங்கியதைப் போல் அவர்களுக்கும் பூமியில் அதிகாரம் வழங்குவதாகவும், அவர்களுக்காக அவன் பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை உறுதிப்படுத்தி வைப்பதாகவும், அவர்களின் அச்சத்திற்குப் பின்னர் அச்சமின்மையை ஏற்படுத்துவதாகவும் உங்களில் நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு அல்லாஹ் வாக்களித்துள்ளான். அவர்கள் என்னையே வணங்குவார்கள். எனக்கு எதையும் இணைகற்பிக்க மாட்டார்கள். இதன் பிறகு (ஏகஇறைவனை) மறுத்தோரே குற்றம் புரிபவர்கள்.

56. தொழுகையை நிலைநாட்டுங்கள்! ஸகாத்தையும் கொடுங்கள்! இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! இதனால் அருள் செய்யப்படுவீர்கள்.

57. (ஏகஇறைவனை) மறுப்போர் பூமியில் வென்று விடுவார்கள் என்று நீர் நினைக்காதீர்! அவர்களின் புகலிடம் நரகம். அது கெட்ட தங்குமிடம்.

58. நம்பிக்கை கொண்டோரே! உங்கள் அடிமைகளும், உங்களில் பருவவயதை அடையாதோரும் ஃபஜ்ரு தொழுகைக்கு முன்னரும், நண்பகலில் (உபரியான) உங்கள் ஆடைகளைக் களைந்துள்ள நேரத்திலும், இஷா தொழுகைக்குப் பிறகும் ஆகிய முன்று நேரங்களில் (வீட்டுக்குள் நுழைவதற்கு) உங்களிடம் அனுமதி கேட்கட்டும். இம்மூன்றும் உங்களுக்குரிய அந்தரங்க (நேர)ங்கள். இவையல்லாத மற்ற நேரங்களில் (வருவது) அவர்கள் மீதோ, உங்கள் மீதோ எந்தக் குற்றமும் இல்லை. அவர்கள் உங்களைச் சுற்றி வருபவர்கள். உங்களில் ஒருவர் மற்றவரிடம் வந்து செல்பவர்கள். இவ்வாறே அல்லாஹ் வசனங்களைத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.

59. உங்களில் சிறுவர்கள் பருவ வயதை அடைந்து விட்டால் (வயதால்) அவர்களுக்கு முந்தியோர் அனுமதி கேட்பது போல் அவர்களும் அனுமதி கேட்க வேண்டும். இவ்வாறே அல்லாஹ் தனது வசனங்களை உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.

60. திருமணத்தை நினைத்துப் பார்க்காத முதிய வயதுப் பெண்கள் அலங்காரம் செய்து கொள்ளாது, தமது மேலாடைகளைக் களைந்திருப்பதில் குற்றமில்லை. அவர்கள் பேணிக் கொள்வது அவர்களுக்குச் சிறந்தது. அல்லாஹ் செவியுறுபவன்;488 அறிந்தவன்.

61. உங்கள் வீடுகளிலோ, தந்தையர் வீடுகளிலோ, அன்னையர் வீடுகளிலோ, சகோதரர்கள் வீடுகளிலோ, சகோதரிகளின் வீடுகளிலோ, தந்தையின் சகோதரர்கள் வீடுகளிலோ, தந்தையின் சகோதரிகள் வீடுகளிலோ, தாயின் சகோதரர்கள் வீடுகளிலோ, தாயின் சகோதரிகளின் வீடுகளிலோ, அல்லது எதன் சாவிகளை நீங்கள் உடமையாக வைத்துள்ளீர்களோ அங்கேயோ, அல்லது உங்கள் நண்பரிடமோ நீங்கள் சாப்பிடுவது உங்கள் மீது குற்றமில்லை. நோயாளியின் மீதும் குற்றமில்லை. ஊனமுற்றவர் மீதும் குற்றமில்லை. குருடர் மீதும் குற்றமில்லை. நீங்கள் அனைவரும் சேர்ந்தோ, தனியாகவோ சாப்பிடுவது உங்கள் மீது குற்றமில்லை. வீடுகளில் நுழையும்போது அல்லாஹ்விடமிருந்து பாக்கியமிக்க தூய்மையான காணிக்கையாக உங்கள் மீதே ஸலாம்159 கூறிக் கொள்ளுங்கள்! நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக இவ்வாறே உங்களுக்கு வசனங்களை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.376

62. அல்லாஹ்வையும், அவனது தூதரையும் நம்புவோரே நம்பிக்கை கொண்டவர்கள். அவர்கள் பொதுவான ஒரு காரியத்துக்காக இவருடன் (முஹம்மதுடன்) இருக்கும்போது அவரது அனுமதி பெறாமல் (வெளியே) போக மாட்டார்கள். உம்மிடம் அனுமதி கேட்போரே அல்லாஹ்வையும், அவனது தூதரையும் நம்புகின்றனர். அவர்களின் ஒரு காரியத்திற்காக உம்மிடம் அவர்கள் அனுமதி கேட்கும்போது அவர்களில் நீர் விரும்புகிறவருக்கு அனுமதியளிப்பீராக! அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுவீராக! அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

63. உங்களில் ஒருவர் மற்றவரை அழைப்பதைப் போல் இத்தூதரை அழைக்காதீர்கள்! உங்களில் மறைந்து நழுவி விடுவோரை அல்லாஹ் நன்கறிவான். அவருடைய கட்டளைக்கு மாறுசெய்வோர் தமக்குத் துன்பம் ஏற்படுவதையோ, துன்புறுத்தும் வேதனை ஏற்படுவதையோ அஞ்சிக் கொள்ளவும்.

64. கவனத்தில் கொள்க! வானங்களிலும்,507 பூமியிலும் உள்ளவை அல்லாஹ்வுக்கே உரியன. எதில் நீங்கள் இருக்கிறீர்களோ அதை அவன் அறிவான். அவனிடம் அவர்கள் கொண்டு செல்லப்படும் நாளில்1 அவர்கள் செய்ததை அவர்களுக்கு அவன் அறிவிப்பான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்.

To read this Chapter in English click here.

(14வது பதிப்பின்படி திருத்தி அமைக்கப்பட்டது)

July 8, 2009, 9:58 PM

அத்தியாயம் : 25

அத்தியாயம் : 25 
அல் ஃபுர்கான் - வேறுபடுத்திக் காட்டுவது

மொத்த வசனங்கள் : 77
திருக்குர்ஆனை ஃபுர்கான் என்று இந்த அத்தியாயத்தின் முதல் வசனம் கூறுவதால் இவ்வாறு பெயரிடப்பட்டது.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்... .

1. (பொய்யையும் உண்மையையும்) பிரித்துக் காட்டும் வழிமுறையை அகிலத்தாருக்கு எச்சரிக்கை செய்வதற்காக தனது அடியார் மீது அருளியவன் பாக்கியமானவன்.

2. அவனுக்கே வானங்கள்507 மற்றும் பூமியின் அதிகாரம் உள்ளது. அவன் பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அதிகாரத்தில் அவனுக்கு எந்தப் பங்காளியும் இல்லை. அவன் ஒவ்வொரு பொருளையும் படைத்தான். அதைத் திட்டமிட்டு அமைத்தான்.

3. அவனையன்றி கடவுள்களை அவர்கள் ஏற்படுத்திக் கொண்டனர். அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களே படைக்கப்படுகின்றனர். தமக்கே தீங்கும், நன்மையும் செய்ய அவர்களுக்கு இயலாது. வாழ்வதற்கோ, மரணிப்பதற்கோ, (பின்னர்) எழுப்புவதற்கோ அவர்கள் அதிகாரம் படைத்தோராக இல்லை.

4. "இது பொய்யைத் தவிர வேறு இல்லை. இதை இவரே இட்டுக்கட்டிக் கொண்டார். மற்றொரு சமுதாயத்தினரும் இதற்காக இவருக்கு உதவினார்கள்'' என்று (ஏகஇறைவனை) மறுப்போர் கூறுகின்றனர். அவர்கள் அநியாயத்தையும், பாவத்தையுமே கொண்டு வந்துள்ளனர்.

5. "இது முன்னோர்களின் கட்டுக்கதை. அதை இவர் எழுதச் செய்து152 கொண்டார்.312 காலையிலும், மாலையிலும் அது இவருக்கு வாசித்துக் காட்டப்படுகிறது'' எனவும் கூறுகின்றனர்.142

6. "வானங்களிலும், பூமியிலும் உள்ள இரகசியத்தை அறிந்தவனே அதை அருளினான்'' எனக் கூறுவீராக! அவன் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

7. "இத்தூதருக்கு என்ன நேர்ந்தது? இவர் உணவு உண்கிறார்; கடை வீதிகளில் நடமாடுகிறார்; இவரோடு ஒரு வானவர் இறக்கப்பட்டு இவருடன் (சேர்ந்து) அவர் எச்சரிப்பவராக இருக்கக் கூடாதா?'' என்று கேட்கின்றனர்.154

8. "அல்லது இவருக்கு ஒரு புதையல் வழங்கப்பட்டிருக்கக் கூடாதா? அல்லது இவருக்கு ஒரு தோட்டம் இருந்து அதிலிருந்து இவர் உண்ணக் கூடாதா?'' என்றும் "சூனியம் செய்யப்பட்ட மனிதரையே பின்பற்றுகிறீர்கள்'' என்றும் அநீதி இழைத்தோர் கேட்கின்றனர்.357

9. (முஹம்மதே!) அவர்கள் உம்மைப் பற்றி எவ்வாறு உதாரணங்களைக் கூறுகின்றனர் என்பதைக் கவனிப்பீராக! அவர்கள் வழிகெட்டு விட்டனர். அவர்கள் நேர்வழி அடைய இயலாது.

10. அவன் பாக்கியமிக்கவன். அவன் விரும்பினால் இதை விடச் சிறந்த சோலைகளை உமக்காக ஏற்படுத்துவான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். உமக்காக மாளிகைகளையும் ஏற்படுத்துவான்.

11. எனினும் அவர்கள் அந்த நேரத்தைப்1 பொய்யெனக் கருதுகின்றனர். அந்த நேரத்தைப்1 பொய்யெனக் கருதுபவருக்கு நரகத்தைத் தயாரித்துள்ளோம்.

12. நரகம் அவர்களைத் தொலைவான இடத்தில் காணும் போதே அதன் கொந்தளிப்பையும், இரைச்சலையும் அவர்கள் செவியுறுவார்கள்.

13. விலங்கிடப்பட்டு அவர்கள் அதில் நெருக்கடியான இடத்தில் போடப்பட்டதும் அவர்கள் அங்கே அழிவை அழைப்பார்கள்.

14. "ஓர் அழிவை அழைக்காதீர்கள்! அதிகமான அழிவுகளை அழையுங்கள்!'' (என்று கூறப்படும்.)

15. "இது சிறந்ததா? (இறைவனை) அஞ்சுவோருக்கு வாக்களிக்கப்பட்ட நிலையான சொர்க்கமா?'' என்று கேட்பீராக! அது அவர்களுக்குக் கூலியாகவும், தங்குமிடமாகவும் அமையும்.

16. அவர்கள் நினைத்தவை அவர்களுக்கு அங்கே உண்டு. நிரந்தரமாக இருப்பார்கள். இது உமது இறைவனால் நிறைவேற்றப்படும் வாக்குறுதியாக ஆகி விட்டது.

17. அவர்களையும், அல்லாஹ்வையன்றி அவர்கள் வணங்கியவற்றையும் அவன் ஒன்று திரட்டும் நாளில்1 "எனது அடியார்களை நீங்கள் தான் வழிகெடுத்தீர்களா? அவர்களாக வழிகெட்டார்களா?'' என்று கேட்பான்.

18. "நீ தூயவன்.10 உன்னையன்றி உற்ற நண்பர்களை ஏற்படுத்துவது எங்களுக்குத் தகாது. நீ அவர்களுக்கும், அவர்களின் முன்னோர்களுக்கும் வசதிகளை அளித்தாய். (உன்னை) நினைக்க மறந்தனர். அழிந்து போகும் கூட்டமாக ஆகி விட்டனர்'' என்று (வணங்கப்பட்ட) அவர்கள் கூறுவார்கள்.

19. நீங்கள் கூறியதை இவர்கள் பொய்யாக்கி விட்டனர் (என்று இணைகற்பித்தவர்களிடம் கூறிவிட்டு, வணங்கப்பட்டவர்களை நோக்கி) தடுக்கவோ, உதவவோ உங்களுக்கு இயலாது. உங்களில் அநீதி இழைத்தோருக்குப் பெரிய வேதனையைச் சுவைக்கச் செய்வோம் (என்று கூறப்படும்.)

20. (முஹம்மதே!) உமக்கு முன் நாம் அனுப்பிய தூதர்களை உணவு உண்போராகவும், கடை வீதிகளில் நடமாடுவோராகவுமே அனுப்பினோம். பொறுமையைக் கடைப்பிடிக்கிறீர்களா? (என்பதைச் சோதிக்க) உங்களில் சிலரை, சிலருக்குச் சோதனையாக484 ஆக்கினோம். உமது இறைவன் பார்ப்பவனாக488 இருக்கிறான்.

21. "நம்மிடம் வானவர்கள் இறக்கப்பட வேண்டாமா? அல்லது நமது இறைவனை நாம் நேரில் பார்க்க வேண்டாமா?'' என்று நமது சந்திப்பை நம்பாதோர் கூறுகின்றனர். அவர்கள் தங்களைப் பற்றி பெருமையடிக்கின்றனர். மிகப் பெரிய அளவில் வரம்பு மீறி விட்டனர்.21

22. வானவர்களை அவர்கள் காணும் நாளில் குற்றவாளிகளுக்கு அன்று எந்த நற்செய்தியும் இருக்காது. "(எல்லா வாய்ப்புகளும்) முழுமையாகத் தடுக்கப்பட்டு விட்டன'' என்று அவர்கள் கூறுவார்கள்.

23. அவர்கள் செய்து வந்த செயல்களைக் கவனித்து அவற்றைப் பரப்பப்பட்ட புழுதியாக ஆக்குவோம்.

24. அந்நாளில் சொர்க்கவாசிகள் அழகிய தங்குமிடத்திலும், சிறந்த ஓய்விடத்திலும் இருப்பார்கள்.

25. (அது) மேகத்தால் வானம்507 பிளக்கப்பட்டு, வானவர்கள் உறுதியாக இறக்கி வைக்கப்படும் நாள்!1

26. அந்நாளில் உண்மையான ஆட்சி அளவற்ற அருளாளனுக்கே உரியது. அது (அவனை) மறுப்போருக்கு கஷ்டமான நாளாக இருக்கும்.

27. அநீதி இழைத்தவன் (கவலைப்பட்டு) தனது கைகளைக் கடிக்கும் நாளில்1 "இத்தூதருடன் நான் ஒரு தொடர்பை ஏற்படுத்தியிருக்கலாமே'' என்று கூறுவான்.

28. இன்னாரை நான் உற்ற நண்பனாக ஆக்காமல் இருந்திருக்கக் கூடாதா?

29. அறிவுரை எனக்குக் கிடைத்த பின்பும் அதை விட்டு என்னை அவன் கெடுத்து விட்டான். ஷைத்தான் மனிதனுக்குத் துரோகம் செய்பவனாகவே இருக்கிறான் (என்றும் கூறுவான்.)

30. "என் இறைவா! எனது சமுதாயத்தினர் இந்தக் குர்ஆனைப் புறக்கணிக்கப்பட்டதாக ஆக்கி விட்டனர்'' என்று இத்தூதர் கூறுவார்.

31. (முஹம்மதே!) இவ்வாறே ஒவ்வொரு நபிக்கும் குற்றம் புரிவோரிலிருந்து எதிரியை ஏற்படுத்தியிருந்தோம். உமது இறைவன் வழிகாட்டவும், உதவி செய்யவும் போதுமானவன்.

32. இவர் மீது குர்ஆன் ஒட்டு மொத்தமாக அருளப்படக் கூடாதா? என (நம்மை) மறுப்போர் கூறுகின்றனர். (முஹம்மதே!) இப்படித்தான் இதன் மூலம் உமது உள்ளத்தைப் பலப்படுத்திட சிறிது சிறிதாகவே அருளினோம்.447

33. (முஹம்மதே!) அவர்கள் எந்த உதாரணத்தைக் கூறினாலும் (அதை விட) உண்மையானதையும், அழகிய விளக்கத்தையும் உம்மிடம் கொண்டு வருவோம்.

34. முகம் குப்புற நரகத்தை நோக்கிக் கொண்டு செல்லப்படுவோர் கெட்ட இடத்தில் தங்குவோராகவும், வழிகெட்டோராகவும் இருப்பார்கள்.

35. மூஸாவுக்கு வேதத்தை வழங்கினோம். அவருடன் அவரது சகோதரர் ஹாரூனை உதவியாளராக ஏற்படுத்தினோம்.

36. "நமது வசனங்களைப் பொய்யெனக் கருதிய கூட்டத்திடம் இருவரும் செல்லுங்கள்!'' எனக் கூறினோம். அக்கூட்டத்தை அடியோடு அழித்தோம்.

37. நூஹுடைய சமுதாயம் தூதர்களைப் பொய்யர்களெனக் கூறியபோது அவர்களை மூழ்கடித்தோம். அவர்களை மனிதர்களுக்குப் படிப்பினையாக ஆக்கினோம். அநீதி இழைத்தோருக்கு துன்புறுத்தும் வேதனையைத் தயாரித்துள்ளோம்.

38. ஆது மற்றும் ஸமூது சமுதாயத்தையும், பாழடைந்த கிணற்றுக்குரியோரையும், இவர்களுக்கு இடையில் வேறு பல தலைமுறையினரையும் (அடியோடு அழித்தோம்.)

39. ஒவ்வொருவருக்கும் அறிவுரைகளைக் கூறினோம். (அவர்கள்) ஒவ்வொருவரையும் அடியோடு அழித்தோம்.

40. தீயமழை பொழியப்பட்ட ஊரை இவர்கள் கடக்கின்றனர். அதை இவர்கள் காணவில்லையா? மாறாக அவர்கள் திரும்ப எழுப்பப்படுவதை நம்பாது உள்ளனர்.

41. உம்மை அவர்கள் காணும்போது "இவரைத்தான் அல்லாஹ் தூதராக அனுப்பினானா?'' என்று (கேட்டு) உம்மைக் கேலியாகக் கருதுகின்றனர்.

42. "நாம் நமது தெய்வங்கள் மீது உறுதியாக இல்லாதிருந்தால் இவர் அவற்றை விட்டு நம்மைத் திருப்பியிருப்பார்'' (எனக் கூறுகின்றனர்). மிகவும் வழிகெட்டவன் யார் என்பதை வேதனையைக் காணும்போது பின்னர் அறிந்து கொள்வார்கள்.

43. தனது மனோ இச்சையைத் தனது கடவுளாகக் கற்பனை செய்தவனைப் பார்த்தீரா? அவனுக்கு நீர் பொறுப்பாளர் ஆவீரா?

44. அவர்களில் பெரும்பாலோர் செவியுறுகிறார்கள் என்றோ, விளங்குகிறார்கள் என்றோ நீர் நினைக்கிறீரா? அவர்கள் கால்நடைகள் போன்றே தவிர வேறில்லை. இல்லை! (அதை விடவும்) வழிகெட்டவர்கள்.

45. உமது இறைவன் எவ்வாறு நிழலை நீட்டுகிறான் என்பதை நீர் அறியவில்லையா? அவன் நினைத்திருந்தால் அதை நிலையானதாக ஆக்கியிருப்பான். சூரியனை அதற்குச் சான்றாக ஆக்கினோம்.

46. பின்னர் அதை நம்மளவில் இலேசாகக் கைப்பற்றிக் கொள்வோம்.

47. அவனே இரவை உங்களுக்கு ஆடையாகவும், உறக்கத்தை ஓய்வாகவும், பகலை இயங்குவதற்காகவும் அமைத்தான்.

48. தனது அருளுக்கு முன் நற்செய்தி கூறுவதற்காக அவனே காற்றை அனுப்புகிறான். வானத்திலிருந்து507 தூய்மையான தண்ணீரை இறக்கினோம்.

49. இறந்த ஊரை அதன் மூலம் நாம் உயிர்ப்பிப்பதற்காகவும், நாம் படைத்த கால்நடைகளுக்கும், ஏராளமான மனிதர்களுக்கும் அதை நாம் புகட்டுவதற்காகவும் (மழையை இறக்கினோம்).

50. அவர்கள் நல்லுணர்வு பெறுவதற்காக அவர்களிடையே இதைத் தெளிவுபடுத்துகிறோம். மனிதர்களில் அதிகமானோர் (நம்மை) மறுப்போராகவே உள்ளனர்.

51. நாம் நினைத்திருந்தால் ஒவ்வொரு ஊரிலும் எச்சரிக்கை செய்பவரை அனுப்பியிருப்போம்.

52. எனவே (ஏகஇறைவனை) மறுப்போருக்கு நீர் கட்டுப்படாதீர்! இதன் மூலம் (குர்ஆன் மூலம்) அவர்களுடன் கடுமையாகப் போரிடுவீராக!

53. அவனே இரண்டு கடல்களை ஒன்று சேர்த்துள்ளான். இது மதுரமாகவும், தாகம் தீர்ப்பதாகவும் உள்ளது. அது உப்பாகவும், கசப்பாகவும் உள்ளது. அவ்விரண்டுக்குமிடையே ஒரு திரையையும், வலுவான தடுப்பையும் அவன் ஏற்படுத்தியுள்ளான்.305

54. அவனே தண்ணீரால் மனிதனைப் படைத்தான்.368&506 அவனுக்கு இரத்த சம்பந்தமான உறவுகளையும், திருமண உறவுகளையும் ஏற்படுத்தினான். உமது இறைவன் ஆற்றலுடையவனாக இருக்கிறான்.

55. அல்லாஹ்வையன்றி அவர்களுக்குப் பயனும், தீங்கும் தராதவற்றை வணங்குகின்றனர். (ஏகஇறைவனை) மறுப்பவன் தனது இறைவனுக்கு எதிராக உதவுபவனாக இருக்கிறான்.

56. (முஹம்மதே!) உம்மை நற்செய்தி கூறுபவராகவும், எச்சரிக்கை செய்பவராகவுமே அனுப்பினோம்.

57. "தனது இறைவனுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள விரும்புபவரைத் தவிர வேறு எந்தக் கூலியையும் உங்களிடம் நான் கேட்கவில்லை''377 எனக் கூறுவீராக!

58. மரணிக்காது, உயிரோடு இருப்பவனையே சார்ந்திருப்பீராக! அவனைப் போற்றிப் புகழ்வீராக! தனது அடியார்களின் பாவங்களை நன்கு அறிந்திட அவன் போதுமானவன்.

59. அவனே வானங்களையும்,507 பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டவற்றையும் ஆறு நாட்களில் படைத்தான்.179 பின்னர் அர்ஷின்488 மீது அமர்ந்தான். அளவற்ற அருளாளனைப் பற்றி, அறிந்தவரிடம் கேட்பீராக!

60. "அளவற்ற அருளாளனுக்கு ஸஜ்தாச்396 செய்யுங்கள்!'' என்று அவர்களிடம் கூறப்படும்போது "அது என்ன அளவற்ற அருளாளன்? நீர் கட்டளையிடுபவருக்கு நாங்கள் ஸஜ்தாச் செய்வோமா?'' என்று கேட்கின்றனர். இது அவர்களுக்கு வெறுப்பை அதிகமாக்கியது.

61. வானத்தில்507 நட்சத்திரங்களை ஏற்படுத்தி, அதில் விளக்கையும், ஒளி சிந்தும் சந்திரனையும் ஏற்படுத்தியவன் பாக்கியமானவன்.

62. படிப்பினை பெற விரும்புபவனுக்கும், நன்றி செலுத்த விரும்புபவனுக்கும் இரவையும், பகலையும் ஒன்றன் பின் ஒன்றாக அவனே ஏற்படுத்தினான்.

63. அளவற்ற அருளாளனின் அடியார்கள் பூமியில் பணிவாக நடப்பார்கள். தம்முடன் அறிவீனர்கள் உரையாடும்போது ஸலாம்159 கூறி விடுவார்கள்.

64. அவர்கள் தமது இறைவனுக்காக ஸஜ்தாச் செய்தும், நின்றும் இரவைக் கழிப்பார்கள்.

65. "எங்கள் இறைவா! எங்களை விட்டும் நரகத்தின் வேதனையைத் தடுப்பாயாக! அதன் வேதனை நிலையானதாக இருக்கிறது'' என்று அவர்கள் கூறுகின்றனர்.

66. அது மோசமான ஓய்விடமாகவும், தங்குமிடமாகவும் இருக்கிறது.

67. அவர்கள் செலவிடும்போது விரயம் செய்ய மாட்டார்கள். கஞ்சத்தனமும் செய்ய மாட்டார்கள். அதற்கு இடைப்பட்ட நிலையாகவே அது இருக்கும்.

68. அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு கடவுள்களைப் பிரார்த்திக்க மாட்டார்கள். அல்லாஹ் தடை செய்துள்ள எந்த உயிரையும் தக்க காரணமின்றி கொல்ல மாட்டார்கள். விபச்சாரம் செய்ய மாட்டார்கள். இதைச் செய்பவன் வேதனையைச் சந்திப்பான்.

69. கியாமத் நாளில்1 வேதனை அவனுக்குப் பன்மடங்காக்கப்படும். அதில் இழிவுபடுத்தப்பட்டவனாக நிரந்தரமாகத் தங்குவான்.

70. திருந்தி, நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தவரைத் தவிர. அவர்களது தீமைகளை அல்லாஹ் நன்மைகளாக மாற்றுகிறான்.498 அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

71. திருந்தி, நல்லறம் செய்பவர் அல்லாஹ்வை நோக்கி முற்றிலும் திரும்புகிறார்.

72. அவர்கள் பொய் சாட்சி கூற மாட்டார்கள். வீணானவற்றைக் கடக்கும்போது கண்ணியமாகக் கடந்து விடுவார்கள்.

73. அவர்கள் தமது இறைவனின் வசனங்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டால் அவற்றின் மீது செவிடர்களாகவும், குருடர்களாகவும் விழ மாட்டார்கள்.

74. "எங்கள் இறைவா! எங்கள் வாழ்க்கைத் துணைகளிலிருந்தும், பிள்ளைகளிலிருந்தும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியைத் தருவாயாக! (உன்னை) அஞ்சுவோருக்கு முன்னோடியாகவும் எங்களை ஆக்குவாயாக!'' என்று அவர்கள் கூறுகின்றனர்.

75. அவர்கள் சகித்துக் கொண்ட காரணத்தால் அவர்களுக்கு மாளிகை வழங்கப்படும். ஸலாமுடன்159 வாழ்த்துக் கூறி அவர்கள் வரவேற்கப்படுவார்கள்.

76. அதில் நிரந்தரமாக இருப்பார்கள். அது அழகிய தங்குமிடமாகவும், ஓய்விடமாகவும் உள்ளது.

77. "உங்களது பிரார்த்தனை இல்லாதிருந்தால் என் இறைவன் உங்களை விட்டு வைத்திருக்க மாட்டான். நீங்கள் பொய்யெனக் கருதி விட்டீர்கள். கட்டாயம் (அதற்கான தண்டனை) பின்னர் ஏற்பட்டே தீரும்'' என்று கூறுவீராக!

To read this Chapter in English click here.

(14வது பதிப்பின்படி திருத்தி அமைக்கப்பட்டது)

July 8, 2009, 10:00 PM

அத்தியாயம் : 26

அத்தியாயம் : 26
அஷ் ஷுஅரா - கவிஞர்கள்

மொத்த வசனங்கள் : 227
இந்த அத்தியாயத்தின் 221வது வசனம் முதல் 227வது வசனம் வரை கவிஞர்கள் பின்பற்றத்தக்கவர்கள் அல்லர் எனவும், அவர்களில் நல்ல கவிஞர்களும் கெட்ட கவிஞர்களும் உள்ளனர் என்றும் கூறப்படுவதால் கவிஞர்கள் என இந்த அத்தியாயத்துக்குப் பெயரிடப்பட்டது.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்... .

1. தா, ஸீம், மீம்.2

2. இவை தெளிவான வேதத்தின் வசனங்கள்.

3. அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை என்பதற்காக உம்மையே அழித்துக் கொள்வீர் போலும்.

4. நாம் நினைத்தால் வானிலிருந்து அவர்களுக்கு அற்புதத்தை இறக்குவோம். அப்போது அவர்களின் கழுத்துக்கள் அதன் முன்னே பணிந்து விடும்.

5. அளவற்ற அருளாளனிடமிருந்து புதிதாக எந்த அறிவுரை வந்தாலும் அதை அவர்கள் புறக்கணிக்காமல் இருப்பதில்லை.

6. அவர்கள் பொய்யெனக் கருதினர். எதை அவர்கள் கேலி செய்து கொண்டிருந்தார்களோ அது பற்றிய செய்திகள் அவர்களை வந்தடையும்.

7. பூமியில் மதிப்புமிக்க ஒவ்வொரு வகையிலும் எத்தனையோ (பயிர்களை) முளைக்கச் செய்துள்ளோம் என்பதை அவர்கள் காணவில்லையா?

8. இதில் தக்க சான்று இருக்கிறது. அவர்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்வதில்லை.

9. உமது இறைவன் மிகைத்தவன்; நிகரற்ற அன்புடையோன்.

10, 11, 12. "அநீதி இழைக்கும் கூட்டமான ஃபிர்அவ்னுடைய சமுதாயத்தவரிடம் செல்வீராக! அவர்கள் அஞ்ச வேண்டாமா?'' என்று உமது இறைவன் மூஸாவை அழைத்தபோது "என் இறைவா! அவர்கள் என்னைப் பொய்யரெனக் கருதுவார்கள் என நான் அஞ்சுகிறேன்'' என்று அவர் கூறினார்.26

13. என் உள்ளம் நெருக்கடிக்கு உள்ளாகும். என் நாவும் எழாது. எனவே ஹாரூனைத் தூதராக அனுப்புவாயாக!

14. "அவர்களிடம் என் மீது ஒரு (கொலைக்) குற்றச்சாட்டு உள்ளது.375 எனவே அவர்கள் என்னைக் கொன்று விடுவார்கள் என அஞ்சுகிறேன்'' (என்றும் கூறினார்.)

15. "அவ்வாறில்லை! நமது சான்றுகளுடன் இருவரும் செல்லுங்கள்! நாம் உங்களுடன் செவியுற்றுக் கொண்டிருப்போம்'' என்று (இறைவன்) கூறினான்.

16, 17. ஃபிர்அவ்னிடம் சென்று "நாங்கள் அகிலத்தின் இறைவனுடைய தூதர்களாவோம். எங்களுடன் இஸ்ராயீலின் மக்களை அனுப்பி விடு!''181 என்று கூறுங்கள்! (என்றும் இறைவன் கூறினான்.)26

18. "குழந்தையாக இருந்த நிலையில் நாம் உம்மை எடுத்து வளர்க்கவில்லையா? உமது வாழ்நாளில் பல வருடங்கள் நம்மிடம் வாழ்ந்தீரே!'' என்று அவன் (ஃபிர்அவ்ன்) கூறினான்.

19. "நீர் செய்த உமது செயலையும் செய்து முடித்தீர். நீர் நன்றி கெட்டவர்'' (என்றும் கூறினான்.)

20. "நான் நேர்வழி பெறாதவனாக இருந்த நேரத்தில் அதைச் செய்தேன்'' என அவர் கூறினார்.

21. "உங்களுக்கு அஞ்சி உங்களை விட்டு ஓடினேன். அப்போது என் இறைவன் எனக்கு ஞானத்தை வழங்கி தூதர்களில் ஒருவராக என்னை நியமித்தான்''

22. "இஸ்ராயீலின் மக்களை நீ அடிமைப்படுத்துவதற்கு (நியாயம் கற்பிக்க) எனக்குச் செய்த அருட்கொடையை நீ சொல்லிக் காட்டுகிறாய்!''181 (என்றும் கூறினார்)

23. "அகிலத்தின் இறைவன் என்றால் என்ன?'' என்று ஃபிர்அவ்ன் கேட்டான்.

24. "நீங்கள் உறுதியாக நம்பினால் வானங்கள்,507 பூமி, மற்றும் அவ்விரண்டுக்கும் இடைப்பட்டதற்கும் அவனே இறைவன்'' என்றார்.

25. தன்னைச் சுற்றியிருந்தோரிடம் "(இதை) நீங்கள் செவிமடுக்கிறீர்களா?'' என்று அவன் கேட்டான்.

26. "அவன் உங்களுக்கும் இறைவன். உங்கள் முன்னோர்களான மூதாதையருக்கும் இறைவன்'' என்று அவர் கூறினார்.

27. "உங்களிடம் அனுப்பப்பட்டுள்ள உங்கள் தூதர் பைத்தியக்காரர் தான்'' என்று அவன் கூறினான்.


28. "நீங்கள் விளங்கிக் கொள்வோராக இருந்தால் கிழக்குக்கும், மேற்குக்கும், அவற்றுக்கு இடைப்பட்டதற்கும் அவன் இறைவன்'' என்று அவர் கூறினார்.

29. "என்னைத் தவிர வேறு கடவுளை நீர் கற்பனை செய்தால் உம்மைச் சிறைப்படுத்துவேன்'' என்று அவன் கூறினான்.

30. "தெளிவான ஒரு பொருளை நான் உன்னிடம் கொண்டு வந்தாலுமா?'' என்று அவர் கேட்டார்.

31. "நீர் உண்மையாளராக இருந்தால் அதைக் கொண்டு வாரும்'' என்று அவன் கூறினான்.

32. அவர் தமது கைத்தடியைப் போட்டார். உடனே அது பெரிய பாம்பாக ஆனது.

33. தமது கையை வெளிப்படுத்தினார். அது பார்ப்போருக்கு வெண்மையாக இருந்தது.

34. "இவர் திறமைமிக்க சூனியக்காரர்'' என்று தன்னைச் சுற்றியிருந்த சபையோரிடம் அவன் கூறினான்.357


35. "தனது சூனியத்தின்285 மூலம் உங்களை உங்கள் பூமியிலிருந்து வெளியேற்ற இவர் நினைக்கிறார். நீங்கள் என்ன உத்தரவிடுகிறீர்கள்?'' (என்றும் கேட்டான்).357

36, 37. "இவருக்கும், இவரது சகோதரருக்கும் அவகாசம் அளிப்பீராக! பல நகரங்களுக்கும் ஆள் திரட்டுவோரை அனுப்புவீராக! அவர்கள் திறமையான ஒவ்வொரு சூனியக்காரனையும் உம்மிடம் கொண்டு வருவார்கள்'' (என்றும் சபையோர் கூறினர்).26

38. குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் சூனியக்காரர்கள் ஒன்று திரட்டப்பட்டனர்.

39, 40. சூனியக்காரர்கள் வெற்றி பெற்றால் அவர்களை நாம் பின்பற்றுவதற்காக நீங்கள் ஒன்று கூடுவீர்களா? என்று மக்களுக்கும் கூறப்பட்டது.26

41. சூனியக்காரர்கள் வந்தவுடன் "நாங்கள் வெற்றி பெற்றால் எங்களுக்குப் பரிசு உண்டா?'' என்று ஃபிர்அவ்னிடம் கேட்டனர்.

42. "ஆம்! அப்போது நீங்கள் (எனக்கு) நெருக்கமானவர்கள்'' என்று அவன் கூறினான்.

43. "நீங்கள் போடவிருப்பதைப் போடுங்கள்!'' என்று அவர்களிடம் மூஸா கூறினார்.

44. அவர்கள் தமது கயிறுகளையும், கைத்தடிகளையும் போட்டனர். "ஃபிர்அவ்னின் கண்ணியத்தின் மீது சத்தியமாக!379 நாங்களே வெல்பவர்கள்'' என்றனர்.

45. உடனே மூஸா தமது கைத்தடியைப் போட்டார். அவர்கள் செய்தவற்றை அது விழுங்கி விட்டது.357

46. சூனியக்காரர்கள் (இறைவனுக்கு) ஸஜ்தாச் செய்து, விழுந்தனர்.357

47, 48. "மூஸா மற்றும் ஹாரூனின் இறைவனாகிய அகிலத்தின் இறைவனை நம்பிக்கை கொண்டோம்'' என்றனர்.26

49. "நான் உங்களுக்கு அனுமதியளிப்பதற்கு முன் அவரை நம்பி விட்டீர்களா? உங்களுக்குச் சூனியத்தைக் கற்றுக் கொடுத்த உங்களின் குரு இவரே. (இதன் விளைவை) பின்னர் அறிவீர்கள். உங்களை மாறுகால் மாறுகை வெட்டுவேன்; உங்கள் அனைவரையும் சிலுவையில் அறைவேன்'' என்று அவன் கூறினான்.

50. "கவலையில்லை. நாங்கள் எங்கள் இறைவனிடம் திரும்பிச் செல்பவர்கள்'' என்று அவர்கள் கூறினர்.

51. "நம்பிக்கை கொண்டோரில் முதன்மையானோராக நாங்கள் ஆனதற்காக எங்கள் தவறுகளை எங்கள் இறைவன் எங்களுக்கு மன்னிக்க வேண்டும் என்று நாங்கள் ஆசைப்படுகிறோம்'' (என்றும் கூறினர்).

52. "என் அடியார்களை இரவில் அழைத்துச் செல்வீராக! நீங்கள் (எதிரிகளால்) பின்தொடரப்படுவீர்கள்'' என்று மூஸாவுக்கு அறிவித்தோம்.

53. ஆள் திரட்டுவோரைப் பல நகரங்களுக்கும் ஃபிர்அவ்ன் அனுப்பினான்.

54. அவர்கள் சிறிய கூட்டத்தினரே.

55. அவர்கள் நமக்குக் கோபத்தை ஏற்படுத்துகின்றனர்.

56. நாம் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியவர்கள். (என்று ஃபிர்அவ்ன் கூறினான்)

57, 58. தோட்டங்களையும், நீரூற்றுகளையும், பொக்கிஷங்களையும், மதிப்புமிக்க தங்குமிடங்களையும் விட்டும் அவர்களை வெளியேற்றினோம்.26

59. இப்படித்தான் இஸ்ராயீலின் மக்களை அவற்றுக்கு வாரிசுகளாக்கினோம்.

60. காலையில் (ஃபிர்அவ்ன் கூட்டத்தினர்) அவர்களைப் பின்தொடர்ந்தனர்.

61. இரு கூட்டத்தினரும் நேருக்குநேர் பார்த்துக் கொண்டபோது "நாம் பிடிக்கப்பட்டு விடுவோம்'' என்று மூஸாவின் சகாக்கள் கூறினர்.

62. "அவ்வாறில்லை. என்னுடன் என் இறைவன் இருக்கிறான். அவன் எனக்கு வழிகாட்டுவான்'' என்று அவர் கூறினார்.

63. "உமது கைத்தடியால் கடலில் அடிப்பீராக'' என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது பிளந்தது. ஒவ்வொரு பிளவும் பெரும் மலை போன்று ஆனது.

64. அங்கே மற்றவர்களையும் நெருங்கச் செய்தோம்.

65. மூஸாவையும், அவருடன் இருந்த அனைவரையும் காப்பாற்றினோம்.

66. பின்னர் மற்றவர்களை மூழ்கடித்தோம்.

67. இதில் தக்க சான்று உள்ளது. அவர்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்வோராக இருக்கவில்லை.

68. உமது இறைவன் மிகைத்தவன்; நிகரற்ற அன்புடையோன்.

69. அவர்களிடம் இப்ராஹீமின் வரலாறைக் கூறுவீராக! 

70, 71. "எதை வணங்குகிறீர்கள்?'' என்று தமது தந்தையிடமும் தமது சமுதாயத்தினரிடமும் அவர் கேட்டபோது "நாங்கள் சிலைகளை வணங்குகிறோம். அவற்றை வணங்குவதில் உறுதியாக இருக்கிறோம்'' என்றனர்.26

72, 73. "நீங்கள் அழைக்கும்போது இவை செவியுறுகின்றனவா? அல்லது உங்களுக்கு நன்மையோ, தீமையோ செய்கின்றனவா?'' என்று அவர் கேட்டார்.26

74. "அவ்வாறில்லை. எங்கள் முன்னோர்கள் இவ்வாறு செய்வதைக் கண்டோம்'' என்று அவர்கள் கூறினர்.

75, 76, 77. "அகிலத்தின் இறைவனைத் தவிர நீங்களும், முந்திச் சென்ற உங்கள் முன்னோர்களும் எதை வணங்குவோராக இருக்கிறீர்கள்?'' என்பதைக் கவனித்தீர்களா? அவை எனது எதிரிகளாகும்26

78. அவனே என்னைப் படைத்தான். அவனே எனக்கு நேர்வழி காட்டுகிறான்.

79. அவனே எனக்கு உணவளித்து (தண்ணீர்) பருகத் தருகிறான்.463

80. நான் நோயுறும்போது அவனே எனக்கு நிவாரணம் தருகிறான்.

81. அவனே என்னை மரணிக்கச் செய்வான். பின்னர் எனக்கு உயிர் கொடுப்பான்.

82. "தீர்ப்பு நாளில்1 என் தவறை அவன் மன்னிக்க வேண்டும்'' என ஆசைப்படுகிறேன்.

83. என் இறைவா! எனக்கு அதிகாரத்தை அளிப்பாயாக! என்னை நல்லோருடன் சேர்ப்பாயாக!

84. பின்வரும் மக்களிடம் எனக்கு நற்பெயரை ஏற்படுத்துவாயாக!

85. இன்பமான சொர்க்கத்தின் வாரிசுகளில் என்னையும் ஆக்குவாயாக!

86. என் தந்தையை மன்னிப்பாயாக! அவர் வழி தவறியவராக இருக்கிறார்.247

87. (மக்கள்) மீண்டும் உயிர்ப்பிக்கப்படும் நாளில்1 என்னை இழிவுபடுத்தி விடாதே!

88, 89. அல்லாஹ்விடம் தூய உள்ளத்துடன் வருவதைத் தவிர, செல்வமோ, மக்களோ அந்நாளில் பயன் தராது.26

90. (இறைவனை) அஞ்சுவோருக்கு சொர்க்கம் அருகில் கொண்டு வரப்படும்.

91. வழிகெட்டவர்களுக்கு நரகம் வெளிப்படுத்தப்படும்.

92, 93. "அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்கிக் கொண்டிருந்தவை எங்கே? அவர்கள் உங்களுக்கு உதவுவார்களா? அல்லது தமக்குத் தாமே உதவிக் கொள்வார்களா?'' என்று அவர்களிடம் கேட்கப்படும்.26

94, 95. அவர்களும், வழிகெட்டவர்களும், இப்லீஸின் படையினர் அனைவரும் அதில் முகம் குப்புற தள்ளப்படுவார்கள்.26

96, 97, 98. "உங்களை அகிலத்தின் இறைவனுக்குச் சமமாக்கியபோது அல்லாஹ்வின் மீது ஆணையாக தெளிவான வழிகேட்டில் இருந்தோம்'' என்று அங்கே தர்க்கம் செய்து கொண்டே கூறுவார்கள்.26

99. இந்தக் குற்றவாளிகளே எங்களை வழிகெடுத்தனர்.

100. எங்களுக்குப் பரிந்துரை செய்வோர்17 எவருமில்லை.

101. உற்ற நண்பனும் இல்லை.

102. உலகுக்குத் திரும்பிச் செல்லுதல் எங்களுக்கு இருக்குமானால் நம்பிக்கை கொண்டோரில் ஆகியிருப்போம் (என்றும் கூறுவார்கள்).

103. இதில் தக்க சான்று உள்ளது. அவர்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்வதில்லை.

104. உமது இறைவன் மிகைத்தவன்; நிகரற்ற அன்புடையோன்.

105. நூஹுடைய சமுதாயத்தினர் தூதர்களைப் பொய்யரெனக் கருதினர்.

106. (இறைவனை) அஞ்ச மாட்டீர்களா? என்று அவர்களின் சகோதரர் நூஹு அவர்களிடம் கூறியதை நினைவூட்டுவீராக!

107. நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய தூதர்;

108. எனவே அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! எனக்குக் கட்டுப்படுங்கள்!

109. உங்களிடம் நான் எந்தக் கூலியையும் கேட்கவில்லை. எனது கூலி அகிலத்தின் இறைவனிடமே இருக்கிறது.

110. எனவே அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! எனக்குக் கட்டுப்படுங்கள்! (என்றும் கூறினார்.)

111. "மிகவும் தாழ்ந்தோர் உம்மைப் பின்பற்றியுள்ள நிலையில் உம்மை நம்புவோமா?'' என்று அவர்கள் கூறினர்.

112. "அவர்கள் செய்து கொண்டிருப்பது (பற்றிய முடிவு என்ன என்பது) எனக்குத் தெரியாது'' என்று அவர் கூறினார்.

113. "அவர்களை விசாரிப்பது எனது இறைவனின் பொறுப்பாகும். விளங்க மாட்டீர்களா?''

114. "நம்பிக்கை கொண்டோரை நான் விரட்டுபவனாக இல்லை''

115. "நான் தெளிவாக எச்சரிப்பவன் தவிர வேறில்லை'' (என்றும் கூறினார்.)

116. "நூஹே! நீர் விலகிக் கொள்ளவில்லையானால் கல்லால் எறிந்து கொல்லப்படுவீர்!'' என்று அவர்கள் கூறினர்.

117. "என் இறைவா! என் சமுதாயத்தினர் என்னைப் பொய்யரெனக் கருதுகின்றனர்'' என்று அவர் கூறினார்.

118. "எனக்கும், அவர்களுக்கும் இடையே தெளிவான தீர்ப்புக் கூறுவாயாக! என்னையும், என்னுடன் உள்ள நம்பிக்கை கொண்டோரையும் காப்பாற்றுவாயாக!'' (என்றும் கூறினார்).

119. எனவே அவரையும், அவருடன் இருந்தோரையும் நிரப்பப்பட்ட கப்பலில் காப்பாற்றினோம்.

120. பின்னர் எஞ்சியோரை மூழ்கடித்தோம்.

121. இதில் தக்க சான்று உள்ளது.222 அவர்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்வதில்லை.

122. உமது இறைவன் மிகைத்தவன்; நிகரற்ற அன்புடையோன்.

123. ஆது சமுதாயத்தினர் தூதர்களைப் பொய்யரெனக் கருதினர்.

124. "இறைவனுக்கு அஞ்ச மாட்டீர்களா'' என்று அவர்களின் சகோதரர் ஹூது, அவர்களிடம் கூறியதை நினைவூட்டுவீராக!

125. நான் உங்களுக்கு நம்பிக்கையுள்ள தூதராவேன்.

126. எனவே அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! எனக்குக் கட்டுப்படுங்கள்!

127. நான் உங்களிடம் இதற்காக எந்தக் கூலியும் கேட்கவில்லை. எனது கூலி அகிலத்தின் இறைவனிடமே உள்ளது.

128. ஒவ்வொரு உயர்ந்த இடத்திலும் வீணாக சின்னங்களை எழுப்புகிறீர்களா?

129. நிரந்தரமாக இருப்பதற்காக வலிமையான கட்டடங்களை உருவாக்குகிறீர்களா?

130. நீங்கள் பிடிக்கும்போது அடக்குமுறை செய்வோராகப் பிடிக்கிறீர்கள்.

131. எனவே அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! எனக்குக் கட்டுப்படுங்கள்!

132. உங்களுக்குத் தெரிந்தவற்றின் மூலம் உங்களுக்கு உதவியவனை அஞ்சுங்கள்!

133, 134. கால்நடைகள், மக்கள், நீரூற்றுகள் மற்றும் தோட்டங்கள் மூலம் அவன் உங்களுக்கு உதவினான்.26

135. "மகத்தான நாளின்1 வேதனையை உங்கள் விஷயத்தில் நான் அஞ்சுகிறேன்'' (என்றும் கூறினார்.)

136. "நீர் அறிவுரை கூறுவதும், கூறாமல் இருப்பதும் எங்களுக்குச் சமமானதே'' என்று அவர்கள் கூறினர்.

137. இது முன்னோர்களின் கட்டுக்கதைகள் தவிர வேறில்லை.

138. நாங்கள் தண்டிக்கப்படுவோரும் அல்லர் (என்றும் கூறினர்.)

139. அவரை அவர்கள் பொய்யரெனக் கருதினர். எனவே அவர்களை அழித்தோம். இதில் தக்க சான்று இருக்கிறது. அவர்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்வதில்லை.

140. உமது இறைவன் மிகைத்தவன்; நிகரற்ற அன்புடையோன்.

141. ஸமூது சமுதாயத்தினர் தூதர்களைப் பொய்யரெனக் கருதினர்.

142. அஞ்ச மாட்டீர்களா? என்று அவர்களிடம் அவர்களின் சகோதரர் ஸாலிஹ் கூறியதை நினைவூட்டுவீராக!

143. நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய தூதராவேன்.

144. எனவே அல்லாஹ்வை அஞ்சுங்கள்! எனக்குக் கட்டுப்படுங்கள்!

145. இதற்காக உங்களிடம் எந்தக் கூலியையும் நான் கேட்கவில்லை. எனது கூலி அகிலத்தின் இறைவனிடமே இருக்கிறது.

146, 147, 148. இங்கே நீங்கள் தோட்டங்களிலும், நீரூற்றுகளிலும், விளைநிலங்களிலும், குலை தள்ளிய பேரீச்சை மரங்களிலும், அச்சமற்றோராக விட்டு வைக்கப்படுவீர்களா?26

149. மிகத் திறமையுடன் மலைகளை வீடுகளாகக் குடைகிறீர்கள்!

150. எனவே அல்லாஹ்வை அஞ்சுங்கள்! எனக்குக் கட்டுப்படுங்கள்!

151. வரம்பு மீறியோரின் கட்டளைகளுக்குக் கட்டுப்படாதீர்கள்!

152. அவர்கள் பூமியில் குழப்பம் விளைவிப்பார்கள். சீர் செய்ய மாட்டார்கள் (என்றும் கூறினார்).

153. "நீர் சூனியம் செய்யப்பட்டவராகவே இருக்கிறீர்''285 என்று அவர்கள் கூறினர்.357

154. "நீர் எங்களைப் போன்ற மனிதர் தவிர வேறு இல்லை. நீர் உண்மையாளராக இருந்தால் சான்றைக் கொண்டு வருவீராக!'' (என்றும் கூறினர்)

155. "இதோ ஒட்டகம்! நிர்ணயிக்கப்பட்ட ஒரு நாள் பருகுவது அதற்குரியது. இன்னொரு நாள் உங்களுக்குரியது'' என்றார்.

156. அதற்கு எந்தத் தீங்கும் செய்யாதீர்கள்! உங்களை மகத்தான நாளின்1 வேதனை பிடித்துக் கொள்ளும் (என்றும் கூறினார்).

157. அதை அவர்கள் அறுத்தனர். இதனால் கைசேதம் அடைந்தனர்.

158. உடனே அவர்களை வேதனை பிடித்துக் கொண்டது. இதில் தக்க சான்று இருக்கிறது. அவர்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்ளவில்லை.

159. உமது இறைவன் மிகைத்தவன்; நிகரற்ற அன்புடையோன்.

160. லூத்துடைய சமுதாயத்தினர் தூதர்களைப் பொய்யரெனக் கருதினர்.

161. "அஞ்ச மாட்டீர்களா'' என்று அவர்களின் சகோதரர் லூத் அவர்களிடம் கூறியதை நினைவூட்டுவீராக!

162. நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய தூதராவேன்.

163. எனவே அல்லாஹ்வை அஞ்சுங்கள்! எனக்குக் கட்டுப்படுங்கள்! 

164. இதற்காக உங்களிடம் எந்தக் கூலியையும் நான் கேட்கவில்லை. எனது கூலி அகிலத்தின் இறைவனிடமே உள்ளது.

165, 166. உலகில் உங்கள் இறைவன் உங்களுக்காகப் படைத்துள்ள உங்கள் மனைவியரை விட்டு விட்டு ஆண்களிடம் செல்கிறீர்களா? இல்லை! நீங்கள் வரம்பு கடந்த கூட்டமாக இருக்கிறீர்கள்! (என்றும் கூறினார்.)26

167. "லூத்தே நீர் விலகிக் கொள்ளாவிட்டால் வெளியேற்றப்படுவோரில் நீரும் ஒருவர்!'' என்று அவர்கள் கூறினார்கள்.

168. "உங்கள் செயலை நான் வெறுப்பவன்'' என்று அவர் கூறினார்.

169. "என் இறைவா! என்னையும், என் குடும்பத்தினரையும் இவர்கள் செய்து கொண்டிருப்பவற்றை விட்டு காப்பாற்றுவாயாக!'' (என்றும் கூறினார்)

170, 171. எனவே அவரையும், (தீயோருடன்) தங்கி விட்ட கிழவியைத் தவிர, அவரது குடும்பத்தினர் அனைவரையும் காப்பாற்றினோம்.26

172. பின்னர் ஏனையோரை அழித்தோம்.

173. அவர்கள் மீது (கல்) மழை பொழியச் செய்தோம்.412 எச்சரிக்கப்பட்டோரின் இந்த மழை மிகவும் கெட்டதாக இருந்தது.

174. இதில் தக்க சான்று இருக்கிறது. அவர்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்வோராக இல்லை.

175. உமது இறைவன் மிகைத்தவன்; நிகரற்ற அன்புடையோன்.

176. தோப்பு (மத்யன்)வாசிகளும் தூதர்களைப் பொய்யர்களெனக் கருதினர்.

177. "அஞ்ச மாட்டீர்களா?'' என்று அவர்களிடம் ஷுஐபு கூறியதை நினைவூட்டுவீராக!

178. நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய தூதராவேன்.

179. அல்லாஹ்வை அஞ்சுங்கள்! எனக்குக் கட்டுப்படுங்கள்!

180. இதற்காக உங்களிடம் நான் எந்தக் கூலியும் கேட்கவில்லை. எனது கூலி அகிலத்தின் இறைவனிடமே உள்ளது.

181. அளவை முழுமைப்படுத்துங்கள்! குறைத்து விடாதீர்கள்!

182. நேர்மையான தராசு மூலம் நிறுத்துக் கொடுங்கள்!

183. மக்களுக்கு அவர்களின் பொருட்களைக் குறைத்து விடாதீர்கள்! பூமியில் குழப்பம் விளைவித்துத் திரியாதீர்கள்!

184. உங்களையும், முந்தைய படைப்புகளையும் படைத்தவனுக்கு அஞ்சுங்கள்! (என்றார்)

185. "நீர் சூனியம் செய்யப்பட்டவர் தான்''285 என்று அவர்கள் கூறினர்.367

186. "நீர் எங்களைப் போன்ற ஒரு மனிதர் தவிர வேறில்லை. உம்மைப் பொய்யராகவே கருதுகிறோம்.''

187. "நீர் உண்மையாளராக இருந்தால் வானத்தின்507 ஒரு துண்டை எங்கள் மீது விழச் செய்வீராக!'' (என்றும் கூறினர்)

188. "நீங்கள் செய்பவற்றை என் இறைவன் நன்கறிபவன்'' என்று அவர் கூறினார்.

189. அவரைப் பொய்யரெனக் கருதினர். எனவே (மேகத்தால்) நிழலிடப்பட்ட நாளின் வேதனை அவர்களைத் தாக்கியது. அது மகத்தான நாளின் வேதனையாக இருந்தது.

190. இதில் தக்க சான்று இருக்கிறது. அவர்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்வோராக இல்லை.

191. (முஹம்மதே!) உமது இறைவன் மிகைத்தவன்; நிகரற்ற அன்புடையோன்.

192. இது அகிலத்தின் இறைவனால் அருளப்பட்டது.

193, 194, 195. எச்சரிக்கை செய்வோரில் (முஹம்மதே) நீர் ஆவதற்காக, உமது உள்ளத்தில்152 தெளிவான அரபு489 மொழியில்227 நம்பிக்கைக்குரிய ரூஹ்444 இதை இறக்கினார்.26&492

196. இது முன்னோரின் வேதங்களிலும் உள்ளது.

197. இஸ்ராயீலின் மக்களில் உள்ள அறிஞர்கள் இதை அறிந்து (ஏற்று) இருப்பது இவர்களுக்குச் சான்றாக இல்லையா?

198, 199. இதை அரபியர் அல்லாத ஒருவருக்கு அருளி, அவர் இவர்களுக்கு அதை ஓதிக் காட்டியிருந்தாலும், அதை நம்பியிருக்க மாட்டார்கள்.26

200. இவ்வாறே குற்றவாளிகளின் உள்ளங்களில் இதைப் புகுத்தி விட்டோம்.

201. துன்புறுத்தும் வேதனையை அவர்கள் காணாத வரை அதை நம்ப மாட்டார்கள்.

202. அவர்கள் அறியாத நிலையில் திடீரென்று அவர்களிடம் அது வந்து விடும்.

203. "எங்களுக்கு அவகாசம் அளிக்கப்படுமா?'' என்று (அப்போது) அவர்கள் கேட்பார்கள்.

204. நமது வேதனையையா அவர்கள் அவசரமாகத் தேடுகின்றனர்?

205, 206, 207. அவர்களைப் பல வருடங்கள் நாம் சுகம் அனுபவிக்கச் செய்து, பின்னர் அவர்களுக்கு எச்சரிக்கப்பட்டது அவர்களிடம் வருமானால் அவர்கள் அனுபவித்துக் கொண்டிருந்தவை
அவர்களைக் காப்பாற்றாது என்பதை அறிவீரா?26

208. எச்சரிக்கை செய்வோரில்லாமல் எந்த ஊரையும் நாம் அழித்ததில்லை.

209. (இது) அறிவுரை! நாம் அநீதி இழைத்ததில்லை.

210. இதை ஷைத்தான்கள் இறக்கிடவில்லை.

211. அது அவர்களுக்குத் தகுதியானதும் அல்ல. அதற்கு அவர்களால் இயலாது.

212. அவர்கள் செவியேற்பதை விட்டும் தடுக்கப்பட்டவராவர்.307

213. அல்லாஹ்வுடன் மற்றொரு கடவுளை நீர் அழைக்காதீர்! அப்போது நீர் தண்டிக்கப்படுபவராக ஆகி விடுவீர்!

214. (முஹம்மதே!) உமது நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்வீராக!281

215. உம்மைப் பின்பற்றிய நம்பிக்கை கொண்டோருக்கு உமது சிறகைத் தாழ்த்துவீராக!251

216. "அவர்கள் உமக்கு மாறுசெய்தால் நீங்கள் செய்பவற்றை விட்டு நான் விலகியவன்'' என்று கூறுவீராக!

217. மிகைத்தவனையும், நிகரற்ற அன்புடையோனையுமே சார்ந்திருப்பீராக!

218, 219. நீர் நிற்கும் நேரத்திலும், ஸஜ்தாச் செய்வோருடன் நீர் இயங்கும்போதும் அவன் உம்மைப் பார்க்கிறான்.26

220. அவனே செவியுறுபவன்;488 அறிந்தவன்.

221. ஷைத்தான்கள் யார் மீது இறங்குவார்கள் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?

222. இட்டுக்கட்டும் ஒவ்வொரு பாவியின் மீதும் இறங்குகின்றனர்.

223. அவர்கள் ஒட்டுக் கேட்கின்றனர். அவர்களில் அதிகமானோர் பொய்யர்கள்.

224. கவிஞர்களை வீணர்களே பின்பற்றுவார்கள்.

225. அவர்கள் ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் தட்டழிந்து திரிவதை நீர் அறியவில்லையா?

226. அவர்கள் செய்யாததைக் கூறுகின்றனர்.

227. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்து அல்லாஹ்வை அதிகம் நினைத்து, அநீதி இழைக்கப்பட்ட பின் பழிதீர்த்துக் கொண்ட(புல)வர்களைத் தவிர. எந்த இடத்திற்குத் தாங்கள் செல்லவிருக்கிறோம் என்பதை அநீதி இழைத்தோர் பின்னர் அறிந்து கொள்வார்கள்.

To read this Chapter in English click here.

(14வது பதிப்பின்படி திருத்தி அமைக்கப்பட்டது)

July 8, 2009, 10:03 PM

அத்தியாயம் : 27

அத்தியாயம் : 27
அந்நம்ல்- எறும்பு

மொத்த வசனங்கள் : 93
இந்த அத்தியாயத்தின் 18, 19 வசனங்களில் எறும்பு பற்றிய ஒரு செய்தி இடம் பெற்றுள்ளதால் இப்பெயரிடப்பட்டது.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்... .

1. தா, ஸீன்.2 இது குர்ஆனின், தெளிவான வேதத்தின் வசனங்கள்.

2. (இது) நம்பிக்கை கொண்டோருக்கு நேர்வழியும், நற்செய்தியுமாகும்.

3. அவர்கள் தொழுகையை நிலைநாட்டுவார்கள். ஸகாத்தை வழங்குவார்கள். மறுமையை1 அவர்களே உறுதியாக நம்புவார்கள்.

4. மறுமையை நம்பாமல் இருப்போரின் செயல்களை அவர்களுக்கு அழகாக்கிக் காட்டுகிறோம். எனவே அவர்கள் தட்டழிகின்றனர்.

5. அவர்களுக்கே தீய வேதனை உண்டு. அவர்களே மறுமையில் நட்டமடைந்தவர்கள்.

6. (முஹம்மதே!) நன்கறிந்த ஞானமிக்கோனிடமிருந்து இக்குர்ஆன் உமக்குக் கொடுக்கப்படுகிறது.

7. "நான் ஒரு நெருப்பைக் காண்கிறேன். அங்கிருந்து உங்களுக்கு செய்தி கொண்டு வருகிறேன். அல்லது நீங்கள் குளிர் காய்வதற்கு ஒரு தீப்பந்தத்தை உங்களிடம் கொண்டு வருகிறேன்'' என்று மூஸா தமது குடும்பத்தாரிடம் கூறியதை நினைவூட்டுவீராக!

8. அங்கே அவர் வந்தபோது "நெருப்பில் இருப்பவரும், அதைச் சுற்றியுள்ளோரும் பாக்கியமளிக்கப்பட்டவர்கள்; அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ் தூயவன்''10 என்று அறிவிக்கப்பட்டார். 

9. மூஸாவே! நான் தான் மிகைத்தவனும், ஞானமிக்கவனுமாகிய அல்லாஹ்.

10. உமது கைத்தடியைப் போடுவீராக! (என்றும் அறிவிக்கப்பட்டார்.) அவர் அதைப் போட்டதும் அது ஒரு பாம்பைப் போல் நெளிந்ததைக் கண்டு, பின்வாங்கி திரும்பிப் பார்க்காது ஓடினார். "மூஸாவே! பயப்படாதீர்! தூதர்கள் என்னிடம் பயப்பட மாட்டார்கள்''

11. "எனினும் அநீதி இழைத்து தீமைக்குப் பின் நன்மையாக மாற்றிக் கொண்டவரை நான் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்''

12. "உமது கையை உமது சட்டைப் பையில் நுழைப்பீராக! அது எவ்விதத் தீங்குமின்றி வெண்மையாக வெளிப்படும். ஃபிர்அவ்னிடமும், அவனது சமுதாயத்திடமும் ஒன்பது சான்றுகளுடன் (செல்வீராக!) அவர்கள் குற்றம் புரியும் கூட்டமாகவுள்ளனர்'' (என்று இறைவன் கூறினான்).

13. பார்க்கும் வகையில் நமது சான்றுகள் அவர்களிடம் வந்தபோது "இது தெளிவான சூனியம்''285 என்று அவர்கள் கூறினர்.

14. அவர்கள் அதை உறுதியாக நம்பியிருந்தும் அநியாயமாகவும், ஆணவமாகவும் மறுத்தனர். "குழப்பம் செய்தோரின் முடிவு எவ்வாறு இருந்தது?'' என்று கவனிப்பீராக!

15. தாவூதுக்கும், ஸுலைமானுக்கும் கல்வியை அளித்தோம். "நம்பிக்கை கொண்ட தனது ஏராளமான அடியார்களை விட எங்களைச் சிறப்பித்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்'' என்று அவ்விருவரும் கூறினர்.

16. தாவூதுக்கு ஸுலைமான் வாரிசானார். "மக்களே! பறவையின் மொழி எங்களுக்குக் கற்றுத் தரப்பட்டுள்ளது. அனைத்துப் பொருட்களும் எங்களுக்குத் தரப்பட்டுள்ளன. இதுவே தெளிவான அருட்கொடையாகும்'' என்று அவர் கூறினார்.

17. ஜின்கள், மனிதர்கள், பறவைகள் ஆகியவற்றின் படைகள் ஸுலைமானுக்காகத் திரட்டப்பட்டு, அவர்கள் அணி வகுக்கப்பட்டனர்.

18. அவர்கள் எறும்புப் புற்றின் அருகே வந்தபோது "எறும்புகளே! உங்கள் குடியிருப்புகளுக்குள் நுழையுங்கள்! ஸுலைமானும், அவரது படையினரும் அறியாத நிலையில் உங்களை மிதித்திடக் கூடாது'' என்று ஓர் எறும்பு கூறியது.470

19. அதன் கூற்றினால் (ஸுலைமான்) புன்னகை சிந்தி சிரித்தார். "என் இறைவா! என் மீதும், எனது பெற்றோர் மீதும் நீ செய்த அருட்கொடைக்கு நான் நன்றி செலுத்தவும், நீ திருப்தியடையும் நல்லறத்தைச் செய்யவும் எனக்கு உதவுவாயாக! உனது அருளால் உனது நல்லடியார்களில் என்னையும் சேர்ப்பாயாக!'' என்றார்.

20. பறவைகளை அவர் ஆய்வு செய்தார். ஹுத்ஹுத்' பறவையை நான் காணவில்லையே! அது ஓடி ஒளிந்து விட்டதா? என்றார்.

21. அதைக் கடுமையான முறையில் தண்டிப்பேன்; அல்லது அதை அறுத்து விடுவேன். அல்லது அது என்னிடம் தெளிவான சான்றைக் கொண்டு வர வேண்டும் (என்றும் கூறினார்).

22. (அப்பறவை) சிறிது நேரமே தாமதித்தது. "உமக்குத் தெரியாத ஒன்றைத் தெரிந்து, ஸபா எனும் ஊரிலிருந்து உறுதியான ஒரு செய்தியை உம்மிடம் கொண்டு வந்துள்ளேன்'' என்று கூறியது.

23. "நான் ஒரு பெண்ணைக் கண்டேன். அவள் அவர்களை ஆட்சி செய்கிறாள். அவளுக்கு ஒவ்வொரு பொருளும் கொடுக்கப்பட்டுள்ளது. அவளுக்கு மகத்தான சிம்மாசனமும் உள்ளது''

24. "அவளும், அவளது சமுதாயமும் அல்லாஹ்வுக்கன்றி சூரியனுக்கு ஸஜ்தா செய்யக் கண்டேன். அவர்களின் செயல்களை ஷைத்தான் அவர்களுக்கு அழகாக்கிக் காட்டி, அவர்களை (நல்)வழியை விட்டும் தடுத்துள்ளான். எனவே அவர்கள் நேர்வழி பெற மாட்டார்கள்'' (என்றும் கூறியது.) 

25. வானங்களிலும்,507 பூமியிலும் மறைந்திருப்பவற்றை வெளிப்படுத்தும் அல்லாஹ்வுக்கு ஸஜ்தாச் செய்ய மாட்டார்களா?396 நீங்கள் மறைப்பதையும், வெளிப்படுத்துவதையும் அவன் அறிவான். 

26. அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அவன் மகத்தான அர்ஷின்488 அதிபதி என்றும் கூறியது.

27. "நீ உண்மை சொல்கிறாயா? பொய்யர்களில் ஆகி விட்டாயா? என ஆராய்வோம்'' என்று அவர் கூறினார்.

28. "எனது இந்தக் கடிதத்தை நீ கொண்டு சென்று அவர்களிடம் இதைப் போடு! பின்னர் அவர்களை விட்டும் விலகி என்ன பதில் தருகிறார்கள் என்று கவனி!'' (என்றும் கூறினார்).

29. "பிரமுகர்களே! என்னிடம் மகத்துவமிக்க கடிதம் போடப்பட்டுள்ளது'' என்று அவள் கூறினாள்.

30, 31. அது ஸுலைமானிடமிருந்து வந்துள்ளது. அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். என்னை மிகைக்க நினைக்காதீர்கள். கட்டுப்பட்டவர்களாக என்னிடம் வாருங்கள்! (என்று அதில் உள்ளது.)26

32. "சபையோர்களே! என் விஷயமாக முடிவு கூறுங்கள்! நீங்கள் ஆலோசனை கூறாத வரையில் நான் எந்தக் காரியத்தையும் முடிவு செய்பவளாக இல்லை" என்று அவள் கூறினாள்.

33. "நாம் வலிமை மிக்கோராகவும், கடுமையாகப் போரிடும் திறன் உடையோராகவும் இருக்கிறோம். அதிகாரம் உம்மிடமே உள்ளது. எனவே என்ன கட்டளையிடுவது என்பதை யோசித்து முடிவெடுப்பீராக!'' என்று (சபையோர்) கூறினர்.

34, 35. "மன்னர்கள் ஓர் ஊரில் நுழைந்தால் அதைப் பாழாக்குவார்கள். அவ்வூராரில் மதிப்பு மிக்கவர்களை இழிந்தோராக ஆக்குவார்கள். இப்படித்தான் செய்வார்கள். நான் அவர்களிடம் ஒரு அன்பளிப்பை அனுப்புகிறேன். அனுப்பப்பட்டோர் என்ன முடிவுடன் திரும்புகிறார்கள் என கவனிக்கப் போகிறேன்'' என்றும் கூறினாள்.26

36. ஸுலைமானிடம் (தூதுவர்) வந்தபோது "செல்வத்தால் எனக்கு உதவுகிறீர்களா? அல்லாஹ் உங்களுக்கு வழங்கியதை விட எனக்கு வழங்கியது சிறந்தது. மாறாக உங்கள் அன்பளிப்பில் நீங்களே மகிழ்ச்சியடையுங்கள்!'' என்றார்.

37. "அவர்களிடம் திரும்பிச் செல்வீராக! அவர்கள் எதிர்க்க முடியாத படைகளுடன் அவர்களிடம் வருவோம். சிறுமைப்பட்டு, இழிந்தோராக அங்கிருந்து அவர்களை வெளியேற்றுவோம்'' (என்றும் கூறினார்).

38. "பிரமுகர்களே! அவர்கள் கட்டுப்பட்டு என்னிடம் வருவதற்கு முன்னால் அவளது சிம்மாசனத்தை என்னிடம் கொண்டு வருபவர் உங்களில் யார்?'' என்று (ஸுலைமான்) கேட்டார்.

39. "உங்கள் இடத்திலிருந்து நீங்கள் எழுவதற்கு முன்னால் அதை உங்களிடம் நான் கொண்டு வருகிறேன். நான் நம்பிக்கைக்குரியவன்; வலிமையுள்ளவன்'' என்று இப்ரீத் என்ற ஜின் கூறியது.183

40. கண் மூடித் திறப்பதற்குள் அதை நான் உம்மிடம் கொண்டு வருகிறேன் என்று வேதத்தைப் பற்றிய ஞானம் பெற்றது (ஜின்) கூறியது.183 தன் முன்னே அது வந்திருக்க அவர் கண்டதும் நான் நன்றி செலுத்துகிறேனா? அல்லது நன்றி மறக்கிறேனா? என்று என்னைச் சோதிப்பதற்காக484 இது எனது இறைவனின் அருட்கொடை. நன்றி செலுத்துபவர் தமக்காகவே நன்றி செலுத்துகிறார். யார் நன்றி மறக்கிறாரோ (தமக்காகவே நன்றி மறக்கிறார்.) என் இறைவன் தேவைகளற்றவன்;485 கண்ணியமிக்கவன்.

41. "அவளது சிம்மாசனத்தை அடையாளம் தெரியாமல் மாற்றுங்கள்! அவள் கண்டுபிடிக்கிறாளா? கண்டுபிடிக்க முடியாமல் இருக்கிறாளா எனப் பார்ப்போம்'' என்றார்.

42. அவள் வந்தபோது "உனது சிம்மாசனம் இப்படித்தான் இருக்குமா?'' என்று கேட்கப்பட்டது. "அதுபோல் தான் இருக்கிறது'' என்று அவள் கூறினாள். "இவளுக்கு முன்பே நாங்கள் அறிவு வழங்கப்பட்டுள்ளோம். நாங்கள் முஸ்லிம்களாகவும்295 இருக்கிறோம்'' (என்று ஸுலைமான் கூறினார்).

43. அவள் (ஏகஇறைவனை) மறுக்கும் கூட்டத்தில் ஒருத்தியாக இருந்து அல்லாஹ்வையன்றி அவள் வணங்கிக் கொண்டிருந்தது (ஒரேஇறைவனை நம்புவதை விட்டும்) அவளைத் தடுத்தது.

44. "இம்மாளிகையில் நுழைவாயாக!'' என்று அவளிடம் கூறப்பட்டது. அதை அவள் கண்டபோது தண்ணீர்த் தடாகம் என நினைத்து, தனது கீழாடையைக் கரண்டைக்கு மேல் உயர்த்தினாள். "அது பளிங்குகளால் பளபளப்பாக்கப்பட்ட மாளிகை'' என்று அவர் கூறினார். "என் இறைவா நான் எனக்கே தீங்கிழைத்து விட்டேன். ஸுலைமானுடன் சேர்ந்து அகிலத்தின் இறைவனுக்குக் கட்டுப்பட்டு விட்டேன்'' என்று அவள் கூறினாள்.

45. அல்லாஹ்வை வணங்குங்கள்! என்று ஸமூது சமுதாயத்திடம் அவர்களின் சகோதரர் ஸாலிஹை அனுப்பினோம். உடனே அவர்கள் இரு பிரிவுகளாக தர்க்கம் செய்யலானார்கள்.

46. "என் சமுதாயமே! நன்மைக்கு முன்னால் தீமையை ஏன் அவசரமாகத் தேடுகிறீர்கள்? அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேட மாட்டீர்களா? நீங்கள் அருள் செய்யப்படுவீர்கள் '' என்று அவர் கூறினார்.

47. உம்மையும், உம்முடன் இருப்போரையும் கெட்ட சகுனமாகக் கருதுகிறோம் என்று அவர்கள் கூறினர். உங்கள் கெட்ட சகுனம் அல்லாஹ்விடமே உள்ளது. மாறாக நீங்கள் சோதிக்கப்படும்484 கூட்டமாக உள்ளீர்கள் என்று அவர் கூறினார்.

48. அந்நகரத்தில் ஒன்பது கூட்டத்தினர் இருந்தனர். அவர்கள் பூமியில் சீரழிவை ஏற்படுத்தினர். சீர்திருத்துவோராக இல்லை.

49. "அவரையும், அவரது குடும்பத்தாரையும் இரவில் அழித்து விடுவோம். பின்னர் "அவரது குடும்பத்தினர் அழிக்கப்பட்டதை நாங்கள் பார்க்கவில்லை; நாங்கள் உண்மையே கூறுகிறோம் என்று அவரது உறவினரிடம் தெரிவித்து விடுவோம்'' என்று அல்லாஹ்வின் மீது ஒருவருக்கொருவர் சத்தியம் செய்து கூறினர்.

50. அவர்கள் பெரும் சூழ்ச்சி செய்தனர். அவர்கள் அறியாதவாறு நாமும் பெரும் சூழ்ச்சி செய்தோம்6.

51. அவர்களது சூழ்ச்சியின் முடிவு என்னவானது என்று கவனிப்பீராக! அவர்களையும், அவர்களது சமுதாயத்தினர் அனைவரையும் அடியோடு அழித்து விட்டோம்.

52. அவர்கள் அநீதி இழைத்ததால் இதோ அவர்களின் வீடுகள் பாழடைந்து கிடக்கின்றன! அறியும் சமுதாயத்திற்கு இதில் படிப்பினை உள்ளது.

53. நம்பிக்கை கொண்டு (நம்மை) அஞ்சியோரைக் காப்பாற்றினோம்.

54, 55. "தெரிந்து கொண்டே வெட்கக்கேடான காரியத்தைச் செய்கிறீர்களா? பெண்களை விட்டு விட்டு இச்சையுடன் ஆண்களிடம் செல்கிறீர்கள்! நீங்கள் மூடர் கூட்டமாகவே இருக்கிறீர்கள்'' என்று லூத் தமது சமுதாயத்திடம் கூறினார்.26

56. "லூத்துடைய குடும்பத்தினரை உங்கள் ஊரை விட்டும் வெளியேற்றுங்கள்! அவர்கள் தூய்மையான மக்களாகவுள்ளனர்'' என்பதே அவரது சமுதாயத்தினரின் பதிலாக இருந்தது.

57. அவரையும், அவரது மனைவியைத் தவிர ஏனைய அவரது குடும்பத்தையும் காப்பாற்றினோம். அவளை (அழிவோருடன்) தங்கி விடுபவள் என நிர்ணயித்து விட்டோம்.

58. அவர்கள் மீது (கல்) மழையைப் பொழிந்தோம்.412 எச்சரிக்கப்பட்டோரின் மழை கெட்டதாக இருந்தது.

59. "அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். அவன் தேர்ந்தெடுத்துக் கொண்ட அவனது அடியார்கள் மீது ஸலாம்159 உண்டாகட்டும். அல்லாஹ் சிறந்தவனா? அவர்கள் இணை கற்பிப்பவையா?'' என்று கேட்பீராக!

60. (நீங்கள் இணைகற்பித்தவை சிறந்தவையா? அல்லது) வானங்களையும்,507 பூமியையும் படைத்து வானத்திலிருந்து507 தண்ணீரை உங்களுக்காக இறக்கி வைத்தவனா? அதன் மூலம் செழிப்பான தோட்டங்களை முளைக்கச் செய்கிறோம். அதில் ஒரு மரத்தைக் கூட உங்களால் முளைக்கச் செய்ய இயலாது. அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? இல்லை. அவர்கள் (இறைவனுக்கு மற்றவர்களை) சமமாக்கும் கூட்டமாகவே உள்ளனர்.

61. (நீங்கள் இணைகற்பித்தவை சிறந்தவையா? அல்லது) பூமியை வசிப்பிடமாக்கி, அவற்றுக்கிடையே ஆறுகளை உருவாக்கி, அவற்றுக்கு முளைகளையும்248 அமைத்து இரண்டு கடல்களுக்கிடையே தடுப்பையும் ஏற்படுத்தியவனா?305 அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? இல்லை! அவர்களில் அதிகமானோர் அறிவதில்லை.

62. (நீங்கள் இணைகற்பித்தவை சிறந்தவையா? அல்லது) நெருக்கடியைச் சந்திப்பவன் பிரார்த்திக்கும்போது அதற்குப் பதிலளித்து துன்பத்தைப் போக்கி உங்களைப் பூமியில் வழித்தோன்றல்களாக46 ஆக்கியவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? குறைவாகவே சிந்திக்கிறீர்கள்!

63. (நீங்கள் இணைகற்பித்தவை சிறந்தவையா? அல்லது) தரையிலும், கடலிலும் உள்ள இருள்களில்303 உங்களுக்கு வழிகாட்டியவனா? தனது அருளுக்கு முன் நற்செய்தி கூறிட காற்றை அனுப்பியவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? அவர்கள் இணைகற்பிப்பதை விட்டும் அல்லாஹ் உயர்ந்தவன்.

64. (நீங்கள் இணைகற்பித்தவை சிறந்தவையா? அல்லது) படைப்பினங்களை முதலில் படைத்து பின்னர் மறுபடியும் படைப்பவனா? வானத்திலிருந்தும்,507 பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவனா?463 அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்கள் சான்றைக் கொண்டு வாருங்கள்!'' என்று கேட்பீராக!

65. "வானங்களிலும், பூமியிலும் மறைவானதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள். தாங்கள் எப்போது உயிர்ப்பிக்கப்படுவோம் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள்'' என்று கூறுவீராக!

66. மறுமையைப் பற்றிய அவர்களின் அறிவு சுருங்கி விட்டது. இல்லை! அது குறித்து அவர்கள் சந்தேகத்தில் உள்ளனர். இல்லை! அதைப் பொறுத்த வரை அவர்கள் குருடர்களாகவே உள்ளனர்.

67. "நாங்களும், எங்கள் முன்னோர்களும் மண்ணாக ஆகிவிட்டால் வெளிக்கொண்டு வரப்படுவோமா?'' என்று (ஏகஇறைவனை) மறுப்போர் கேட்கின்றனர்.

68. "நாங்களும், இதற்கு முன் எங்கள் முன்னோர்களும் இது குறித்து எச்சரிக்கப்பட்டிருந்தோம். இது முன்னோர்களின் கட்டுக்கதைகள் தவிர வேறில்லை'' (என்றும் கூறுகின்றனர்).

69. "பூமியில் பயணம் செய்யுங்கள்! குற்றவாளிகளின் முடிவு எப்படி அமைந்தது என்று பாருங்கள்!'' எனக் கூறுவீராக!

70. அவர்களுக்காகக் கவலைப்படாதீர்! அவர்கள் சூழ்ச்சி செய்வதால் மன நெருக்கடிக்கும் ஆளாகாதீர்!

71. "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இந்த எச்சரிக்கை எப்போது (நிறைவேறும்?)'' என்று அவர்கள் கேட்கின்றனர்.

72. "நீங்கள் அவசரமாகத் தேடுபவற்றில் ஒரு பகுதி உங்களை வந்தடையும்'' என்று கூறுவீராக!

73. உமது இறைவன் மனிதர்கள் மீது அருளுடையவன்; எனினும் அவர்களில் அதிகமானோர் நன்றி செலுத்துவதில்லை.

74. அவர்களின் உள்ளங்கள் மறைப்பதையும், அவர்கள் வெளிப்படுத்துவதையும் உமது இறைவன் அறிவான்.

75. பூமியிலோ, வானத்திலோ507 மறைவான எதுவானாலும் அது தெளிவான பதிவேட்டில்157 இருக்கிறது.

76. இஸ்ராயீலின் மக்கள் முரண்பட்டவற்றில் அதிகமானவற்றை இக்குர்ஆன் அவர்களுக்கு விவரிக்கிறது.

77. இது நம்பிக்கை கொண்டோருக்கு நேர்வழியாகவும், அருளாகவும் உள்ளது.

78. உமது இறைவன் அவர்களிடையே தனது தீர்ப்பை வழங்குவான். அவன் மிகைத்தவன்; அறிந்தவன்.

79. அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! நீர் தெளிவான உண்மையில் இருக்கிறீர்.

80. நீர் இறந்தோரைச் செவியேற்கச் செய்ய முடியாது! அழைப்பைப் புறக்கணித்து ஓடும் செவிடர்களைக் கேட்கச் செய்ய உம்மால் முடியாது.

81. குருடர்களின் வழிகேட்டை நீக்கி அவர்களுக்கு நேர்வழி காட்டுபவராகவும் நீர் இல்லை. நமது வசனங்களை நம்பி முஸ்லிம்களாக இருப்போர்க்கே நீர் கேட்கச் செய்வீர்!81

82. அவர்களுக்கு எதிரான (நமது) கட்டளை நிகழும்போது பூமியிலிருந்து ஓர் உயிரினத்தை வெளிப்படுத்துவோம். நமது வசனங்களை மனிதர்கள் உறுதி கொள்ளாமல் இருந்தது பற்றி அவர்களிடம் அது பேசும்.308

83. நமது வசனங்களைப் பொய்யெனக் கருதிய ஒவ்வொரு சமுதாயத்திலும் ஒரு கூட்டத்தினரை நாம் ஒன்று திரட்டும் நாளில்1 அவர்கள் வரிசையாக நிறுத்தப்படுவார்கள்.

84. அவர்கள் வந்ததும் "எனது வசனங்களைப் பற்றி முழுமையாக அறியாமல் அதைப் பொய்யெனக் கருதிக் கொண்டிருந்தீர்களா? அல்லது வேறு என்ன தான் செய்து கொண்டிருந்தீர்கள்?'' என்று (இறைவன்) கேட்பான்.

85. அவர்கள் அநீதி இழைத்ததால் அவர்களுக்கு எதிரான கட்டளை நிகழும். அப்போது அவர்கள் பேச மாட்டார்கள்.

86. அவர்கள் அமைதி பெறுவதற்காக இரவையும், பார்ப்பதற்கேற்றவாறு பகலையும் ஆக்கியதை அவர்கள் காணவில்லையா? நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.

87. ஸூர் ஊதப்படும் நாளில்1 வானங்களில்507 உள்ளவர்களிலும், பூமியில் உள்ளவர்களிலும் அல்லாஹ் நாடியோரைத் தவிர அனைவரும் நடுங்குவார்கள். அனைவரும் அடங்கி அவனிடம் வருவார்கள்.

88. மலைகளை நீர் காண்கிறீர். அவை திடமானவை என்று நினைக்கிறீர். அவை மேகம் நகர்வது போல (அந்நாளில்) நகரும். இது ஒவ்வொரு பொருளையும் சீராக அமைத்த அல்லாஹ்வின் தயாரிப்பாகும். நீங்கள் செய்பவற்றை அவன் நன்கறிந்தவன்.

89. ஒரு நன்மையைக் கொண்டு வந்தவருக்கு அதை விடச் சிறந்தது இருக்கிறது. அவர்கள் அந்நாளின்1 நடுக்கத்திலிருந்து அச்சமற்றவர்கள்.

90. தீமையைக் கொண்டு வந்தோர் முகம் குப்புற நரகில் தள்ளப்படுவார்கள். "நீங்கள் செய்ததைத் தவிர வேறு கூலி கொடுக்கப்படுவீர்களா?'' (என்று கூறப்படும்.) 

91, 92. அல்லாஹ் புனிதமாக்கிய இவ்வூரின் (மக்காவின்) இறைவனை வணங்குமாறு நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். ஒவ்வொரு பொருளும் அவனுக்கே உரியது. முஸ்லிமாக நான் ஆகுமாறும், குர்ஆனை ஓதுமாறும் கட்டளையிடப்பட்டுள்ளேன். "நேர்வழி பெற்றவர் தனக்காகவே நேர்வழி பெறுகிறார். யாராவது வழி தவறினால் (அதற்கு நான் பொறுப்பல்ல) நான் எச்சரிப்பவனே''81 (எனக் கூறுவீராக!)26

93. "எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே'' என்றும் கூறுவீராக! அவன் தனது சான்றுகளை உங்களுக்குக் காட்டுவான். அதை அறிந்து கொள்வீர்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் கவனிக்காதவனாக இல்லை.

To read this Chapter in English click here.

(14வது பதிப்பின்படி திருத்தி அமைக்கப்பட்டது)

July 8, 2009, 10:05 PM

அத்தியாயம் : 28

அத்தியாயம் : 28
அல் கஸஸ் - நடந்த செய்திகள்

மொத்த வசனங்கள் : 88
இந்த அத்தியாயத்தின் 25வது வசனத்தில் 'அல் கஸஸ்' என்ற சொல் இடம் பெற்றுள்ளதால் இந்தப் பெயர்.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்... .

1. தா, ஸீம், மீம்.2

2. இவை தெளிவான வேதத்தின் வசனங்கள்.

3. மூஸா மற்றும் ஃபிர்அவ்ன் பற்றிய உண்மையான செய்தியை நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்காக உமக்குக் கூறுகிறோம்.

4. ஃபிர்அவ்ன் பூமியில் ஆணவம் கொண்டிருந்தான். அதில் உள்ளவர்களைப் பல பிரிவுகளாக்கி அவர்களில் ஒரு பிரிவினரைப் பலவீனர்களாக ஆக்கினான். அவர்களில் ஆண் மக்களைக் கொன்றான். பெண்(மக்)களை உயிருடன் விட்டான். அவன் குழப்பம் செய்பவனாக இருந்தான்.

5, 6. அப்பூமியில் பலவீனர்களாகக் கருதப்பட்டோர் மீது அருள் புரியவும், அவர்களைத் தலைவர்களாக்கவும், அப்பூமிக்கு உரிமையாளர்களாக்கவும், அப்பூமியில் அவர்களுக்கு ஆதிக்கத்தை ஏற்படுத்தவும், ஃபிர்அவ்னும், ஹாமானும் அவ்விருவரின் படையினரும் எதை அஞ்சினார்களோ அதை அவர்களுக்குக் காட்டவும் நாடினோம்.26

7. "இவருக்குப் பாலூட்டு! இவரைப் பற்றி நீ பயந்தால் இவரைக் கடலில் போடு! பயப்படாதே! கவலையும் படாதே! அவரை உன்னிடம் நாம் திரும்ப ஒப்படைத்து, அவரைத் தூதராக ஆக்குவோம்'' என்று மூஸாவின் தாயாருக்கு அறிவித்தோம்.

8. தங்களுக்கு எதிரியாகவும், கவலையாகவும் ஆவதற்காக ஃபிர்அவ்னின் குடும்பத்தார் அவரை எடுத்துக் கொண்டனர். ஃபிர்அவ்னும், ஹாமானும் அவ்விருவரின் படையினரும் தப்புக் கணக்குப் போட்டு விட்டனர்.

9. "எனக்கும், உமக்கும் இவர் கண்குளிர்ச்சியாக இருக்கட்டும்! இவரைக் கொல்லாதீர்கள்! இவர் நமக்குப் பயன்படலாம். அல்லது இவரை மகனாக்கிக் கொள்ளலாம்'' என்று ஃபிர்அவ்னின் மனைவி கூறினார். அவர்கள் (விளைவை) அறியாதிருந்தனர்.

10. மூஸாவின் தாயாரின் உள்ளம் வெறுமையானது. அவரது உள்ளத்தை நாம் பலப்படுத்தியிருக்காவிட்டால் அவர் (உண்மையை) வெளிப்படுத்தியிருப்பார். அவர் நம்பிக்கை கொண்டோரில் ஒருவராக ஆவதற்கு இவ்வாறு செய்தோம்.

11. "நீ அவரைப் பின்தொடர்ந்து செல்!'' என்று மூஸாவின் சகோதரியிடம் (அவரது தாயார்) கூறினார். அவர்கள் அறியாத வகையில் தொலைவிலிருந்து அவள் பார்த்துக் கொண்டிருந்தாள்.

12. பாலூட்டும் பெண்களை முன்பே அவருக்கு (மூஸாவுக்கு) தடுத்திருந்தோம். "உங்களுக்காக இக்குழந்தையைப் பொறுப்பேற்று வளர்க்கும் ஒரு குடும்பத்தினரைப் பற்றி நான் உங்களுக்குக் கூறட்டுமா? அவர்கள் இவரது நலனை நாடுபவர்கள்'' என்று அவள் கூறினாள்.

13. அவரது தாயார் கவலைப்படாமல் மனம் குளிர்வதற்காகவும், அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மை என்பதை அவர் அறிவதற்காகவும் அவரை (மூஸாவை) அவரிடம் திரும்பச் சேர்த்தோம். எனினும் அவர்களில் அதிகமானோர் (இதை) அறிய மாட்டார்கள்.

14. அவர் பருவமடைந்து சீரான நிலையை அடைந்தபோது அவருக்கு அதிகாரத்தையும்164 கல்வியையும் அளித்தோம். நன்மை செய்வோருக்கு இவ்வாறே கூலி வழங்குவோம்.

15. அவ்வூரார் கவனமற்று இருந்த நேரத்தில் அவர் அங்கே சென்றார். அங்கே இரண்டு மனிதர்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்ததைக் கண்டார். ஒருவர் இவரது சமுதாயத்தைச் சேர்ந்தவர். இன்னொருவர் இவரது எதிரியின் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இவரது சமுதாயத்தைச் சேர்ந்தவர் எதிரிச் சமுதாயத்தைச் சேர்ந்தவருக்கு எதிராக இவரிடம் உதவி தேடினார். உடனே மூஸா ஒரு குத்து விட்டார். உடனே அவன் கதை முடிந்து விட்டது. "இது ஷைத்தானின் வேலை. அவன் வழிகெடுக்கும் தெளிவான எதிரி'' என்றார்.375

16. "என் இறைவா! எனக்கே நான் தீங்கிழைத்து விட்டேன். எனவே என்னை மன்னிப்பாயாக!'' என்றார். அவன் அவரை மன்னித்தான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.375

17. "என் இறைவா! நீ எனக்கு அருள் புரிந்ததால் குற்றவாளிகளுக்கு உதவுபவனாக இனிமேல் இருக்க மாட்டேன்'' என்றார்.

18. அந்நகரத்தில் பயந்தவராக (நிலைமையை) காலையில் கவனித்துக் கொண்டிருந்தார். அப்போது முதல் நாள் அவரிடம் உதவி தேடியவன் (மறுபடியும்) உதவி தேடி அழைத்தான். "நீ பகிரங்கமான வழிகேடனாக இருக்கிறாய்'' என்று அவனிடம் மூஸா கூறினார்.

19. பின்னர் இருவருக்கும் எதிரியாக இருந்தவனை அவர் பிடிக்க முயன்றபோது "மூஸாவே! நேற்று ஒருவரை நீர் கொலை செய்தது போல் என்னைக் கொல்ல நினைக்கிறீரா? இப்பூமியில் ஆதிக்கம் செலுத்துபவராக ஆக வேண்டும் என்றே நீர் விரும்புகிறீர். சீர்திருத்தம் செய்பவராக ஆக நீர் விரும்பவில்லை'' என்று அவன் கூறினான்.375

20. அந்நகரத்தின் கடைக்கோடியிலிருந்து ஒரு மனிதர் விரைந்து வந்து "மூஸாவே! பிரமுகர்கள் உம்மைக் கொல்ல ஆலோசித்துக் கொண்டிருக்கின்றனர். எனவே வெளியேறி விடுவீராக! நான் உமது நலம் நாடுபவன்'' என்றார்.

21. பயந்தவராக கவனத்துடன் அங்கிருந்து வெளியேறினார். "என் இறைவா! அநீதி இழைக்கும் கூட்டத்தை விட்டும் என்னைக் காப்பாற்றுவாயாக!'' என்றார்.

22. அவர் மத்யன் நகருக்கு வந்தபோது "என் இறைவன் எனக்கு நேர்வழி காட்டக்கூடும்'' என்றார்.

23. மத்யன் நகரின் நீர்த்துறைக்கு அவர் வந்தபோது மக்களில் ஒரு கூட்டத்தினர் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்ததைக் கண்டார். அவர்களை விட்டு இரண்டு பெண்கள் ஒதுங்கி நிற்பதையும் கண்டு "உங்கள் விஷயம் என்ன?'' என்று கேட்டார். "மேய்ப்பவர்கள் விலகும் வரை நாங்கள் தண்ணீர் இறைக்க முடியாது. எங்கள் தந்தை வயதான முதியவர்'' என்று அவர்கள் கூறினர்.

24. அவர்களுக்காக அவர் தண்ணீர் இறைத்துக் கொடுத்தார். பின்னர் நிழலை நோக்கிச் சென்று, "என் இறைவா! எனக்கு நீ வழங்கும் நன்மையில் தேவையுள்ளவனாக இருக்கிறேன்'' என்றார்.

25. அவர்களில் ஒருத்தி வெட்கத்துடன் நடந்து அவரிடம் வந்து, "நீர் எங்களுக்குத் தண்ணீர் இறைத்துத் தந்ததற்குரிய கூலியை உமக்குத் தருவதற்காக என் தந்தை உம்மை அழைக்கிறார்'' என்றாள். அவரிடம் வந்து (தன்னைப் பற்றிய) செய்திகளைக் கூறினார். "நீர் பயப்படாதீர்! அநீதி இழைக்கும் கூட்டத்திடமிருந்து நீர் தப்பித்து விட்டீர்'' என்று அவர் கூறினார்.

26. "என் தந்தையே! இவரைப் பணியில் சேர்த்துக் கொள்ளுங்கள்! ஏனெனில் வலிமையான நம்பகமானவரே நீங்கள் பணியில் சேர்ப்பதற்கு ஏற்றவர்'' என்று அவர்களில் ஒருத்தி கூறினாள்.

27. "எட்டு ஆண்டுகள் நீர் எனக்குக் கூலி வேலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் எனது இந்த இரு புதல்விகளில் ஒருத்தியை உமக்கு மணமுடித்துத் தருகிறேன். பத்து ஆண்டுகளாக முழுமையாக்கினால் (அது) உம்மைச் சேர்ந்தது. நான் உமக்குச் சிரமம் தர விரும்பவில்லை. அல்லாஹ் நாடினால் என்னை நல்லவராகக் காண்பீர்'' என்று அவர் கூறினார்.309

28. "இதுவே எனக்கும், உமக்கும் இடையே உள்ள ஒப்பந்தம். இரண்டு காலக் கெடுகளில் எதை நான் நிறைவேற்றினாலும் என் மீது குற்றமில்லை. நாம் பேசிக் கொண்டதற்கு அல்லாஹ்வே பொறுப்பாளன்'' என்று (மூஸா) கூறினார்.

29. மூஸா அந்தக் காலக்கெடுவை முடித்து, தமது குடும்பத்தாருடன் இரவில் பயணம் மேற்கொண்டபோது தூர் மலையின் திசையில் ஒரு நெருப்பைக் கண்டார். "இருங்கள்! நான் ஒரு நெருப்பைக் கண்டேன். அது பற்றிய செய்தியையோ, அல்லது நீங்கள் குளிர் காய்வதற்காக அதில் பந்தத்தையோ கொண்டு வருகிறேன்'' என்று தமது குடும்பத்தாரிடம் கூறினார்.

30. அவர் அங்கே வந்தபோது பாக்கியம் பெற்ற இடத்தில், வலப்புறத்தில் இருக்கும் ஓடையில் உள்ள மரத்திலிருந்து "மூஸாவே! நான் தான் அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்'' என்று அழைக்கப்பட்டார்.

31. உமது கைத்தடியைப் போடுவீராக! (என்றான்) அதைச் சீறும் பாம்பாகக் கண்டபோது திரும்பிப் பார்க்காது பின்வாங்கி ஓடினார். "மூஸாவே! முன்னே வாரும்! அஞ்சாதீர்! நீர் அச்சமற்றவராவீர்.''

32. உமது கையை உமது சட்டைப் பைக்குள் நுழைப்பீராக! எவ்விதத் தீங்குமின்றி வெண்மையாக அது வெளிப்படும். பயத்தின்போது உமது விலாப்புறத்தை ஒடுக்கிக் கொள்வீராக!367 இவ்விரண்டும் உம் இறைவனிடமிருந்து ஃபிர்அவ்னுக்காகவும், அவனது சபையோருக்காகவும் உள்ள இரண்டு சான்றுகளாகும். அவர்கள் குற்றம் புரியும் கூட்டமாக உள்ளனர்.

33. "என் இறைவா! அவர்களில் ஓர் உயிரைக் கொன்று விட்டேன்.375 எனவே அவர்கள் என்னைக் கொன்று விடுவார்கள் என அஞ்சுகிறேன்'' என்று அவர் கூறினார்.

34. "என் சகோதரர் ஹாரூன் என்னை விட தெளிவாகப் பேசுபவர். எனவே அவரை என்னுடன் உதவியாக அனுப்பிவை! அவர் என்னை உண்மைப்படுத்துவார். என்னை அவர்கள் பொய்யெரெனக் கருதுவார்கள் என்று அஞ்சுகிறேன்'' (என்றும் கூறினார்).

35. "உம் சகோதரர் மூலம் உமது தோளைப் பலப்படுத்துவோம். உங்களுக்கு தக்க சான்றைத் தருவோம். அவர்கள் உங்களை நெருங்க மாட்டார்கள். நமது சான்றுகளுடன் (செல்லுங்கள்!) நீங்கள் இருவரும் உங்களைப் பின்பற்றியோருமே வெற்றி பெறுபவர்கள்'' என்று அவன் கூறினான்.

36. மூஸா அவர்களிடம் நமது தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தபோது இது இட்டுக்கட்டப்பட்ட சூனியம்285 தவிர வேறில்லை.357 இது பற்றி முன்னோர்களான எங்களது மூதாதையரிடம் நாங்கள் கேள்விப்படவில்லை என்றனர்.

37. "தன்னிடமிருந்து நேர்வழியைக் கொண்டு வந்தவன் யார் என்பதையும், யாருக்கு நல்ல முடிவு ஏற்படும் என்பதையும் என் இறைவன் நன்கறிந்தவன். அநீதி இழைத்தோர் வெற்றிபெற மாட்டார்கள்'' என்று மூஸா கூறினார்.

38. "பிரமுகர்களே! என்னைத் தவிர உங்களுக்கு வேறு கடவுளை நான் அறியவில்லை'' என்று ஃபிர்அவ்ன் கூறினான். "ஹாமானே! எனக்காக களிமண்ணைச் சுட்டு எனக்கொரு மாளிகையைக் கட்டு! (அதன் மீது ஏறி) மூஸாவின் இறைவனைப் பார்க்க வேண்டும். அவர் பொய்யர் என்றே நான் நினைக்கிறேன்'' என்றான்.

39. அவனும், அவனது படையினரும் நியாயமின்றி பூமியில் பெருமையடித்தனர். நம்மிடம் அவர்கள் திரும்பக் கொண்டு வரப்பட மாட்டார்கள் எனவும் நினைத்தனர்.

40. எனவே அவனையும், அவனது படையினரையும் தண்டித்தோம். அவர்களைக் கடலில் எறிந்தோம். "அநீதி இழைத்தோரின் முடிவு எப்படி இருந்தது?'' என்று கவனிப்பீராக!

41. அவர்களை நரகிற்கு அழைக்கும் தலைவர்களாக்கினோம். கியாமத் நாளில்1 அவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள்.

42. இவ்வுலகில் அவர்களுக்கு சாபத்தைத் தொடரச் செய்தோம். கியாமத் நாளில்1 அவர்கள் இழிந்தோரில் இருப்பார்கள்.

43. முந்தைய தலைமுறையினரை அழித்த பின், இவர்கள் படிப்பினை பெறுவதற்காக மூஸாவுக்கு வேதத்தைக் கொடுத்தோம். அது மனிதர்களுக்குப் பாடமாகவும், அருளாகவும், நேர்வழியாகவும் இருக்கிறது.

44. மூஸாவுக்கு நாம் கட்டளை பிறப்பித்தபோது அந்த மேற்குத் திசையில் நீர் இருக்கவுமில்லை. நீர் பார்க்கவுமில்லை. 

45. எனினும் பல சமுதாயத்தினரை உருவாக்கினோம். ஆண்டுகள் பல அவர்களைக் கடந்து விட்டன. மத்யன்வாசிகளிடம் நமது வசனங்களை ஓதிக்கொண்டு, அவர்களுடன் நீர் வசிக்கவுமில்லை. மாறாக நாம் தூதர்களை அனுப்பிக் கொண்டே இருந்தோம்.

46. நாம் அழைத்தபோது தூர் மலையின் அருகிலும் நீர் இருக்கவில்லை. மாறாக உமது இறைவனின் அருளால், இதற்கு முன் எச்சரிக்கை செய்பவர் வராத ஒரு சமுதாயத்துக்கு நீர் எச்சரிக்கை செய்வதற்காகவும், அவர்கள் படிப்பினை பெறுவதற்காகவும் (இது கூறப்படுகிறது)

47. அவர்கள் செய்த வினை காரணமாக அவர்களுக்கு ஒரு துன்பம் ஏற்படும்போது "எங்கள் இறைவா! எங்களுக்கு ஒரு தூதரை நீ அனுப்பியிருக்கக் கூடாதா? உனது வசனங்களைப் பின்பற்றியிருப்போமே; நம்பிக்கை கொண்டிருப்போமே'' எனக் கூறுவார்கள் என்பது இல்லையானால் (உம்மைத் தூதராக அனுப்பியிருக்க மாட்டோம்.)

48. நம்மிடமிருந்து அவர்களிடம் உண்மை வந்தபோது "மூஸாவுக்குக் கொடுக்கப்பட்டது போன்றது இவருக்கும் கொடுக்கப்பட்டிருக்கக் கூடாதா?'' எனக் கூறுகின்றனர். இதற்கு முன் மூஸாவுக்கு கொடுக்கப்பட்டதை அவர்கள் மறுக்கவில்லையா? "இரண்டும் ஒன்றை ஒன்று மிஞ்சும் சூனியங்களே''285 என்று கூறுகின்றனர். "அனைத்தையும் நாங்கள் மறுக்கிறோம்'' எனவும் கூறுகின்றனர்.357

49. "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவ்விரண்டை விட நேர்வழி காட்டும் வேதத்தை அல்லாஹ்விடமிருந்து கொண்டு வாருங்கள்! அதைப் பின்பற்றுகிறேன்'' என்று கூறுவீராக!7

50. அவர்கள் உமக்குப் பதிலளிக்காவிட்டால் அவர்கள் தமது மனோஇச்சைகளையே பின்பற்றுகின்றனர் என்பதை அறிந்து கொள்வீராக! அல்லாஹ்விடமிருந்து கிடைத்த நேர்வழியின்றி தனது மனோஇச்சையைப் பின்பற்றியவனை விட வழிகெட்டவன் யார்? அநீதி இழைக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.

51. அவர்கள் படிப்பினை பெறுவதற்காக இச்செய்தியை அவர்களுக்குக் கிடைக்கச் செய்தோம்.

52. இதற்கு முன் நாம் யாருக்கு வேதத்தை வழங்கினோமோ அவர்களே இதை நம்புகின்றனர்.

53. அவர்களுக்கு ஓதிக்காட்டப்படும்போது "இதை நம்பினோம். இது நமது இறைவனிடமிருந்து வந்த உண்மை. இதற்கு முன்னரே நாங்கள் முஸ்லிம்களாக இருந்தோம்'' என்று கூறுகின்றனர்.

54. அவர்கள் சகித்துக் கொண்டதாலும், நன்மையின் மூலம் தீமையைத் தடுத்ததாலும், அவர்களுக்கு நாம் வழங்கியதை (நல்வழியில்) செலவிட்டதாலும் அவர்களுக்கு இரண்டு தடவை அவர்களின் கூலிகள் வழங்கப்படும்.

55. வீணானவற்றை அவர்கள் செவியுறும்போது அதை அலட்சியம் செய்கின்றனர். "எங்கள் செயல்கள் எங்களுக்கு. உங்கள் செயல்கள் உங்களுக்கு. உங்கள் மீது ஸலாம்159 உண்டாகட்டும். அறிவீனர்களை நாங்கள் விரும்ப மாட்டோம்'' எனவும் கூறுகின்றனர்.

56. (முஹம்மதே!) நீர் விரும்பியோரை உம்மால் நேர்வழியில் செலுத்த முடியாது! மாறாக, தான் நாடியோருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுகிறான். அவன் நேர்வழி பெற்றோரை நன்கறிந்தவன்.81

57. "நாங்கள் உம்முடன் சேர்ந்து நேர்வழியைப் பின்பற்றினால் எங்களின் பூமியிலிருந்து வாரிச் செல்லப்பட்டு விடுவோம்'' என்று அவர்கள் கூறுகின்றனர். அபயம் அளிக்கும் புனிதத் தலத்தை அவர்களுக்கு வசிப்பிடமாக நாம் ஆக்கவில்லையா?34 ஒவ்வொரு கனி வர்க்கமும் நம்மிடமிருந்து உணவாக அதை நோக்கிக் கொண்டு வரப்படுகிறது. எனினும் அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.310

58. வாழ்க்கையை சொகுசாக அமைத்துக் கொண்ட எத்தனையோ ஊர்களை அழித்துள்ளோம். இதோ அவர்களின் குடியிருப்புகள்! அவர்களுக்குப் பின் குறைவாகவே தவிர அங்கே யாரும் குடியிருக்கவில்லை. நாமே (அதற்கு) வாரிசுகளாகி விட்டோம்.

59. ஊர்களின் தாய் நகரத்துக்குத் தூதரை அனுப்பாத வரை உமது இறைவன் அழிப்பவனாக இல்லை. அவர்களுக்கு அவர் நமது வசனங்களைக் கூறுவார். ஊரிலுள்ளவர்கள் அநீதி இழைத்தால் அன்றி எந்த ஊரையும் நாம் அழித்ததில்லை.

60. உங்களுக்கு எந்தப் பொருள் வழங்கப்பட்டாலும் அது இவ்வுலக வாழ்க்கையின் வசதியும், அலங்காரமுமாகும். அல்லாஹ்விடம் இருப்பதே சிறந்தது; நிலையானது. விளங்க மாட்டீர்களா?

61. நாம் அழகிய வாக்குறுதி அளித்து அதை மறுமையில் அடையவிருப்பவர், இவ்வுலக வாழ்க்கையின் வசதிகளை நாம் யாருக்கு வழங்கினோமோ அவனைப் போன்றவரா? அவன் கியாமத் நாளில்1 (இறைவன்) முன் நிறுத்தப்படுபவன்.

62. அவன், அவர்களை அழைக்கும் நாளில்1 "எனக்கு இணையாக நீங்கள் கருதியோர் எங்கே?'' என்று கேட்பான்.

63. "எங்கள் இறைவா! இவர்களையே வழிகெடுத்தோம். நாங்கள் வழிகெட்டது போலவே இவர்களையும் வழிகெடுத்தோம். அதிலிருந்து விலகி உன்னை நோக்கித் திரும்புகிறோம். இவர்கள் எங்களை வணங்கவில்லை'' என்று யாருக்கு எதிராக வாக்கு உறுதியாகி விட்டதோ அவர்கள் கூறுவார்கள்.

64. "உங்கள் தெய்வங்களை அழையுங்கள்!'' என்று கூறப்படும். அவர்களை அழைப்பார்கள். ஆனால் அவர்கள் இவர்களுக்குப் பதிலளிக்க மாட்டார்கள். வேதனையையும் காண்பார்கள். இவர்கள் நேர்வழி சென்றிருக்கக் கூடாதா?

65. அவன் அவர்களை அழைக்கும் நாளில்1 "தூதர்களுக்கு என்ன பதில் கூறினீர்கள்?'' என்று கேட்பான்.

66. செய்திகள் அந்நாளில் அவர்களுக்கு மறந்து விடும். எனவே அவர்கள் ஒருவரையொருவர் விசாரித்துக் கொள்ள மாட்டார்கள்.

67. திருந்தி நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்வோரே வெற்றி பெற்றோர் ஆவர்.

68. தான் நாடியதை உமது இறைவன் படைப்பான்; தேர்வு செய்வான். அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. அல்லாஹ் தூயவன்.10 அவர்கள் இணை கற்பிப்பவற்றை விட்டும் அவன் உயர்ந்தவன்.

69. அவர்களின் உள்ளங்கள் மறைப்பதையும், அவர்கள் வெளிப்படுத்துவதையும் உமது இறைவன் அறிகிறான்.

70. அவனே அல்லாஹ். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. இவ்வுலகிலும், மறுமையிலும் புகழ் அவனுக்கே உரியது. அதிகாரமும் அவனுக்கே. அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!

71. "கியாமத் நாள்1 வரை இரவை உங்களுக்கு அல்லாஹ் நிரந்தரமாக்கி விட்டால் அல்லாஹ்வையன்றி உங்களுக்கு ஒளியைக் கொண்டு வரும் இறைவன் யார் என்பதற்குப் பதில் சொல்லுங்கள்! செவியுற மாட்டீர்களா?'' என்று கேட்பீராக!

72. "கியாமத் நாள்1 வரை பகலை உங்களுக்கு அல்லாஹ் நிரந்தரமாக்கி விட்டால் அல்லாஹ்வையன்றி நீங்கள் அமைதி பெறும் இரவை உங்களுக்குக் கொண்டு வரும் இறைவன் யார் என்பதற்குப் பதில் சொல்லுங்கள்! சிந்திக்க மாட்டீர்களா?'' என்று கேட்பீராக!

73. நீங்கள் அமைதி பெறவும், அவனது அருளைத் தேடவும், நீங்கள் நன்றி செலுத்தவும் இரவு, பகலை ஏற்படுத்தியிருப்பது அவனது அருளில் உள்ளது.

74. அவர்களை அவன் அழைக்கும் நாளில்1 "எனக்கு இணையாக நீங்கள் கருதியோர் எங்கே?'' என்று கேட்பான்.

75. ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் ஒரு சாட்சியைப் பிரித்தெடுப்போம். "உங்கள் சான்றுகளைக் கொண்டு வாருங்கள்!'' என்று கூறுவோம். உண்மை அல்லாஹ்விற்கே உரியது என்பதை அப்போது அறிந்து கொள்வார்கள். அவர்கள் இட்டுக்கட்டியவை அவர்களை விட்டு மறைந்து விடும்.

76. காரூன், மூஸாவின் சமுதாயத்தில் ஒருவனாக இருந்தான். அவர்களுக்கு அநீதி இழைத்தான். அவனுக்குக் கருவூலங்களை வழங்கினோம். அவற்றின் சாவிகளைச் சுமப்பது வலிமைமிக்க கூட்டத்தினருக்குச் சிரமமாக இருக்கும். "மமதை கொள்ளாதே! மமதை கொள்வோரை அல்லாஹ் விரும்ப மாட்டான்'' என்று அவனிடம் அவனது சமுதாயத்தினர் கூறியதை நினைவூட்டுவீராக!

77. அல்லாஹ் உனக்குத் தந்தவற்றில் மறுமை வாழ்வைத் தேடு! இவ்வுலகில் உன் கடமையை மறந்து விடாதே! அல்லாஹ் உனக்கு நல்லுதவி செய்தது போல் நீயும் நல்லுதவி செய்! பூமியில் குழப்பத்தைத் தேடாதே! குழப்பம் செய்வோரை அல்லாஹ் விரும்ப மாட்டான் (என்றும் கூறினர்).

78. "என்னிடம் உள்ள அறிவின் காரணமாகவே இது எனக்குத் தரப்பட்டுள்ளது'' என்று அவன் கூறினான். "இவனை விட அதிக வலிமையும், ஆள் பலமும் கொண்ட பல தலைமுறையினரை இவனுக்கு முன்பு அல்லாஹ் அழித்திருக்கிறான்'' என்பதை இவன் அறியவில்லையா? அவர்களின் பாவங்கள் பற்றி இக்குற்றவாளிகள் விசாரிக்கப்பட மாட்டார்கள்.

79. தனது அலங்காரத்துடன் அவன் தனது சமுதாயத்திடம் சென்றான். "காரூனுக்குக் கொடுக்கப்பட்டது போன்று நமக்கும் கொடுக்கப்பட்டிருக்கக் கூடாதா? அவன் பெரும் பாக்கியமுடையவனாக இருக்கிறான்'' என்று இவ்வுலக வாழ்க்கையை விரும்புவோர் கூறினர்.

80. "உங்களுக்குக் கேடு தான். நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்தவருக்கு அல்லாஹ்வின் கூலி தான் சிறந்தது. பொறுமையாளர்கள் தவிர மற்றவர்களுக்கு அது வழங்கப்படாது'' என்று கல்வி வழங்கப்பட்டோர் கூறினர்.

81. அவனை அவனது வீட்டோடு சேர்த்து பூமிக்குள் புதையச் செய்தோம். அல்லாஹ்வையன்றி அவனுக்கு உதவி செய்யும் ஒரு கூட்டத்தினரும் இருக்கவில்லை. அவன் உதவி பெறுபவனாகவும் இல்லை.

82. "அந்தோ! தனது அடியார்களில் தான் நாடியோருக்குச் செல்வத்தை அல்லாஹ் தாராளமாகவும் வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான். அல்லாஹ் நம்மீது அருள் புரிந்திருக்காவிட்டால் நம்மையும் பூமியில் புதையச் செய்திருப்பான். "அந்தோ! (ஏகஇறைவனை) மறுப்போர் வெற்றி பெற மாட்டார்கள்'' என்று முதல் நாள் அவனது நிலைமைக்கு ஆசைப்பட்டோர் அன்று காலையில் கூறலானார்கள்.

83. பூமியில் ஆணவத்தையும், குழப்பத்தையும் விரும்பாதவர்களுக்காக அந்த மறுமை வாழ்வை ஏற்படுத்தியுள்ளோம். நல்ல முடிவு (இறைவனை) அஞ்சுவோர்க்கே.

84. நன்மையைக் கொண்டு வருவோருக்கு அதை விடச் சிறந்தது உண்டு. தீமையைக் கொண்டு வருவோருக்கு அவர்கள் செய்ததைத் தவிர வேறு எதுவும் கூலி கொடுக்கப்படாது.

85. (முஹம்மதே!) உமக்கு இந்தக் குர்ஆனை விதித்தவன் உம்மை வந்த இடத்திலேயே மீண்டும் சேர்ப்பவன்.311 "நேர்வழியைக் கொண்டு வந்தவன் யார்? தெளிவான வழிகேட்டில் உள்ளவன் யார்? என்பதை என் இறைவன் நன்கறிந்தவன்'' என்று கூறுவீராக!

86. இவ்வேதம் உமக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்த்தவராக நீர் இருக்கவில்லை. உமது இறைவனிடமிருந்து அருளாகவே தவிர (இது அருளப்படவில்லை).344 எனவே (ஏகஇறைவனை) மறுப்போருக்கு உதவுபவராக நீர் ஆகிவிடாதீர்!

87. அல்லாஹ்வின் வசனங்கள் உமக்கு அருளப்பட்ட பின்னர் அதை விட்டும் உம்மை (எதுவும்) தடுத்திட வேண்டாம்! உமது இறைவனை நோக்கி அழைப்பீராக! இணை கற்பிப்பவராக நீர் ஆகாதீர்!

88. அல்லாஹ்வுடன் வேறு கடவுளை நீர் பிரார்த்திக்காதீர்! அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அவனது முகத்தைத் தவிர ஒவ்வொரு பொருளும் அழியும். அவனுக்கே அதிகாரம் உள்ளது. அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!

To read this Chapter in English click here.

(14வது பதிப்பின்படி திருத்தி அமைக்கப்பட்டது)

July 8, 2009, 10:07 PM

அத்தியாயம் : 29

அத்தியாயம் : 29
அல் அன்கபூத் - சிலந்தி

மொத்த வசனங்கள் : 69
இந்த அத்தியாயத்தின் 41வது வசனத்தில் தவறான கடவுள் கொள்கை உடையவர்களின் உதாரணமாக சிலந்தி வலை கூறப்படுவதால் இந்த அத்தியாயத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டது.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்... .

1. அலிஃப், லாம், மீம்.2

2. "நம்பிக்கை கொண்டோம்'' என்று கூறியதன் காரணமாக சோதிக்கப்படாமல் விடப்படுவார்கள் என மனிதர்கள் நினைத்து விட்டார்களா?

3. அவர்களுக்கு முன் சென்றோரையும் சோதித்தோம்.484 உண்மை பேசுவோரை அல்லாஹ் அறிவான். பொய்யர்களையும் அறிவான்.

4. தீமைகளைச் செய்தோர் நம்மை மிஞ்சி விடலாம் என்று நினைத்து விட்டார்களா? அவர்கள் அளிக்கும் தீர்ப்பு மிகவும் கெட்டது.

5. யார் அல்லாஹ்வின் சந்திப்பை488 எதிர்பார்க்கிறாரோ அதற்கான அல்லாஹ்வின் காலக்கெடு வந்தே தீரும். அவன் செவியுறுபவன்;488 அறிந்தவன்.

6. உழைப்பவர் தமக்காகவே உழைக்கிறார். அகிலத்தாரை விட்டும் அல்லாஹ் தேவைகளற்றவன்.485

7. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரின் தீமைகளை அவர்களை விட்டும் அழித்து விடுவோம்.498 அவர்கள் செய்து கொண்டிருந்த நல்லவற்றுக்குக் கூலி வழங்குவோம்.

8. தனது பெற்றோருக்கு நல்லுதவி செய்யுமாறு மனிதனுக்கு வலியுறுத்தியுள்ளோம். உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணைகற்பிக்குமாறு அவ்விருவரும் உன்னை வற்புறுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்படாதே! உங்களின் மீளுதல் என்னிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்தது பற்றி உங்களுக்கு அறிவிப்பேன்.

9. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரை நல்லோருடன் சேர்ப்போம்.

10. "அல்லாஹ்வை நம்பினோம்'' என்று கூறுவோரும் மனிதர்களில் உள்ளனர். அல்லாஹ்வின் விஷயத்தில் அவர்களுக்குத் தொல்லையளிக்கப்பட்டால் மனிதர்களின் தொந்தரவை அல்லாஹ்வின் வேதனையைப் போல் அவர்கள் கருதுகின்றனர். உமது இறைவனிடமிருந்து உதவி வந்தால் "நாங்கள் உங்களுடன் இருந்தோம்'' எனக் கூறுகின்றனர். அகிலத்தாரின் உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ் அறிந்தவன் இல்லையா?

11. நம்பிக்கை கொண்டோரையும் அல்லாஹ் அறிவான். நயவஞ்சகர்களையும் அறிவான்.

12. "எங்கள் வழியைப் பின்பற்றுங்கள்! உங்கள் தவறுகளை நாங்கள் சுமந்து கொள்கிறோம்'' என்று (ஏகஇறைவனை) மறுப்போர் நம்பிக்கை கொண்டோரிடம் கூறுகின்றனர். அவர்களின் குற்றங்களில் எதையும் இவர்கள் சுமப்போராக இல்லை. அவர்கள் பொய்யர்கள்.

13. அவர்கள் தமது சுமைகளையும், தமது சுமைகளுடன் வேறு சில சுமைகளையும் சுமப்பார்கள்.254 அவர்கள் இட்டுக்கட்டியது பற்றி கியாமத் நாளில்1 விசாரிக்கப்படுவார்கள்.

14. நூஹை அவரது சமுதாயத்திடம் அனுப்பினோம். அவர்களுடன் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஐம்பது ஆண்டுகள் குறைவாக483 வசித்தார். அவர்கள் அநீதி இழைத்த நிலையில் அவர்களைப் பெருவெள்ளம் பிடித்துக் கொண்டது.

15. அவரையும், கப்பலில் இருந்தோரையும் காப்பாற்றினோம். இதை அகிலத்தாருக்குச் சான்றாக்கினோம்.222

16. "அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கே அஞ்சுங்கள்! நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்குச் சிறந்தது'' என்று இப்ராஹீம் தமது சமுதாயத்திடம் கூறியதை நினைவூட்டுவீராக!

17. அல்லாஹ்வையன்றி நீங்கள் கற்பனையாகப் படைத்த சிலைகளையே வணங்குகிறீர்கள். அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை வணங்குகிறீர்களோ அவர்கள் உங்களுக்குச் செல்வம் வழங்க இயலாது. எனவே அல்லாஹ்விடமே செல்வத்தைத் தேடுங்கள்! அவனையே வணங்குங்கள்! அவனுக்கு நன்றி செலுத்துங்கள்! அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!

18. நீங்கள் பொய்யெனக் கருதினால் உங்களுக்கு முன் பல சமுதாயத்தினர் பொய்யெனக் கருதியுள்ளனர். தெளிவாக எடுத்துச் சொல்வது தவிர தூதர் மீது வேறு (கடமை) இல்லை.81

19. அல்லாஹ் முதலில் எவ்வாறு படைக்கிறான் என்பதை அவர்கள் அறியவில்லையா? பின்னர் மீண்டும் அதை உருவாக்குவான். இது அல்லாஹ்வுக்கு எளிதானது.

20. பூமியில் பயணம் செய்யுங்கள்! "அல்லாஹ் எவ்வாறு முதலில் படைத்தான்'' என்பதைக் கவனியுங்கள்! என்று கூறுவீராக! பின்னர் அல்லாஹ் மற்றொரு தடவை உற்பத்தி செய்வான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்.

21. தான் நாடியோரை அவன் தண்டிப்பான். தான் நாடியோருக்கு அருள் புரிவான். அவனிடமே நீங்கள் கொண்டு செல்லப்படுவீர்கள்!

22. பூமியிலும், வானத்திலும்507 நீங்கள் (இறைவனை) வெல்வோர் அல்லர். அல்லாஹ்வையன்றி உங்களுக்குப் பொறுப்பாளரோ, உதவுபவரோ இல்லை.

23. அல்லாஹ்வின் வசனங்களையும், அவனது சந்திப்பையும்488 மறுப்போர் (அல்லாஹ்வாகிய) எனது அருளில் நம்பிக்கையிழந்து விட்டனர்.471 அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.

24. "இவரைக் கொல்லுங்கள்! அல்லது தீயிட்டுப் பொசுக்குங்கள்!'' என்று கூறியதைத் தவிர வேறு எதுவும் அவரது சமுதாயத்தின் பதிலாக இருக்கவில்லை. அவரை அல்லாஹ் நெருப்பிலிருந்து காப்பாற்றினான். நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.

25. இவ்வுலக வாழ்வில் உங்களுக்கிடையே உள்ள நேசத்தின் காரணமாகவே அல்லாஹ்வையன்றி நீங்கள் சிலைகளை ஏற்படுத்தி இருக்கிறீர்கள். பின்னர் கியாமத் நாளில்1 உங்களில் ஒருவர் மற்றவரை மறுப்பார். உங்களில் ஒருவர் மற்றவரைச் சபிப்பார். உங்கள் தங்குமிடம் நரகமாகும். உங்களுக்கு உதவி செய்வோர் யாருமில்லை என்று அவர் கூறினார்.

26. அவரை லூத் நம்பினார். "நான் இறைவனை நோக்கி ஹிஜ்ரத்460 செய்யப் போகிறேன். அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன்'' என்று (இப்ராஹீம்) கூறினார்.

27. அவருக்கு இஸ்ஹாக்கையும், யாகூபையும் வழங்கினோம். அவரது வழித்தோன்றல்களில் நபி எனும் தகுதியையும், வேதத்தையும் வழங்கினோம். அவருக்கு அவரது கூலியை இவ்வுலகில் கொடுத்தோம். அவர் மறுமையிலும் நல்லோர்களில் இருப்பார்.

28. லூத்தையும் (அனுப்பினோம்). "நீங்கள் வெட்கக்கேடான செயலைச் செய்கிறீர்கள்! அகிலத்தாரில் உங்களுக்கு முன் யாரும் இதைச் செய்ததில்லை'' 

29. "சரியான வழியைத் துண்டித்து விட்டு ஆண்களிடம் செல்கிறீர்களா? உங்கள் சபையில் அந்த வெறுக்கத்தக்க செயலைச் செய்கிறீர்களா?'' என்று அவர் தமது சமுதாயத்துக்குக் கூறியபோது, "நீர் உண்மையாளராக இருந்தால் அல்லாஹ்வின் வேதனையைக் கொண்டு வருவீராக'' என்று கூறியதைத் தவிர வேறு எதுவும் அவரது சமுதாயத்தின் பதிலாக இருக்கவில்லை.

30. "என் இறைவா! சீரழிக்கும் இந்தச் சமுதாயத்துக்கு எதிராக எனக்கு உதவுவாயாக!'' என்று அவர் கூறினார்.

31. நமது தூதர்கள்161 இப்ராஹீமிடம் நற்செய்தியைக் கொண்டு வந்தபோது "அவ்வூரார் அநியாயக்காரர்களாக உள்ளனர்; அவ்வூராரை நாங்கள் அழிக்கப் போகிறோம்'' என்றனர்.

32. "அங்கே லூத் இருக்கிறாரே'' என்று அவர் கேட்டார். "அங்குள்ளவர்களை நாங்கள் நன்றாக அறிவோம். அவரையும், அவரது குடும்பத்தாரையும் காப்பாற்றுவோம். அவரது மனைவியைத் தவிர. அவள் (அழிவோருடன்) தங்கி விடுவாள்'' என்றனர்.

33. நமது தூதர்கள்161 லூத்திடம் வந்தபோது அவர்களால் கவலைக்கும், மனநெருக்கடிக்கும் உள்ளானார். அதற்கவர்கள் "நீர் பயப்படாதீர்! கவலைப்படாதீர்! உம்மையும், உமது குடும்பத்தினரையும், நாங்கள் காப்பாற்றுவோம். உமது மனைவியைத் தவிர. (அழிவோருடன்) அவள் தங்கி விடுவாள்'' என்றனர்.

34. "அவர்கள் குற்றம் புரிந்ததால் அவ்வூரார் மீது வானிலிருந்து வேதனையை நாங்கள் இறக்கப் போகிறோம்'' (என்றும் கூறினர்)

35. விளங்கும் சமுதாயத்திற்கு அங்கே தெளிவான சான்றை விட்டு வைத்துள்ளோம்.

36. மத்யன் நகருக்கு அவர்களின் சகோதரர் ஷுஐபை (அனுப்பினோம்) "என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! இறுதி நாளை1 நம்புங்கள்! பூமியில் குழப்பம் விளைவித்துத் திரியாதீர்கள்!'' என்று அவர் கூறினார்.

37. அவரைப் பொய்யரெனக் கருதினர். அவர்களைப் பூகம்பம் தாக்கியது. காலையில் தமது வீடுகளில் வீழ்ந்து கிடந்தனர். 

38. ஆது மற்றும் ஸமூது சமுதாயத்தினரையும் (அழித்தோம்). அவர்களின் குடியிருப்புக்களிலிருந்து இது உங்களுக்குத் தெளிவாகத் தெரிகிறது. அவர்களது செயல்களை ஷைத்தான் அவர்களுக்கு அழகாக்கிக் காட்டினான். அவர்கள் அறிவுடையோராக இருந்தபோதும் (நல்)வழியை விட்டும் அவர்களைத் தடுத்தான். 

39. காரூன், ஃபிர்அவ்ன், ஹாமான் ஆகியோரையும் அழித்தோம். அவர்களிடம் மூஸா தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தார். அவர்கள் பூமியில் அகந்தை கொண்டனர். அவர்கள் வெல்வோராக இருக்கவில்லை.

40. ஒவ்வொருவரையும் அவரவரின் பாவத்துக்காகத் தண்டித்தோம். அவர்களில் சிலர் மீது கல் மழையை அனுப்பினோம். அவர்களில் வேறு சிலரைப் பெரும் சப்தம் தாக்கியது. அவர்களில் சிலரைப் பூமிக்குள் உயிருடன் புதையச் செய்தோம். அவர்களில் சிலரை மூழ்கடித்தோம். அல்லாஹ் அவர்களுக்குத் தீங்கிழைப்பவனாக இல்லை. மாறாக அவர்கள் தமக்குத் தாமே தீங்கிழைத்தனர்.

41. அல்லாஹ்வையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோரின் உதாரணம் சிலந்திப் பூச்சியைப் போன்றது. அது ஒரு வீட்டை அமைத்துக் கொண்டது. வீடுகளிலேயே சிலந்தியின் வீடு தான் மிகவும் பலவீனமானது. (இதை) அவர்கள் அறியக் கூடாதா?

42. அல்லாஹ்வையன்றி அவர்கள் பிரார்த்திப்பவற்றை அல்லாஹ் அறிவான். அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.

43. இந்த முன்னுதாரணங்களை மக்களுக்காகக் கூறுகிறோம். அறிவுடையோரைத் தவிர மற்றவர்கள் இதை விளங்க மாட்டார்கள்.

44. வானங்களையும்,507 பூமியையும் தக்க காரணத்துடன் அல்லாஹ் படைத்தான். நம்பிக்கை கொண்டோருக்கு இதில் தக்க சான்று இருக்கிறது.

45. (முஹம்மதே!) வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதைக் கூறுவீராக! தொழுகையை நிலைநாட்டுவீராக! தொழுகை வெட்கக்கேடான காரியங்களை விட்டும், தீமையை விட்டும் தடுக்கும். அல்லாஹ்வை நினைப்பதே மிகப் பெரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிவான்.

46. வேதமுடையோரில் அநீதி இழைத்தோரைத் தவிர மற்றவர்களிடம்27 அழகிய முறையில் தவிர வாதம் செய்யாதீர்கள்! "எங்களுக்கு அருளப்பட்டதையும், உங்களுக்கு அருளப்பட்டதையும் நம்புகிறோம். எங்கள் இறைவனும், உங்கள் இறைவனும் ஒருவனே! நாங்கள் அவனுக்கே கட்டுப்பட்டவர்கள்'' என்று கூறுங்கள்!

47. இவ்வாறே உமக்கு இவ்வேதத்தை அருளினோம். நாம் யாருக்கு வேதத்தை வழங்கினோமோ அவர்கள் இதை நம்புகின்றனர். (வேதம் கொடுக்கப்படாத) இவர்களிலும் இதை நம்புவோர் உள்ளனர். (நம்மை) மறுப்போரைத் தவிர வேறு எவரும் நமது வசனங்களை நிராகரிப்பதில்லை.

48. (முஹம்மதே!) இதற்கு முன் எந்த வேதத்திலிருந்தும்4 நீர் வாசிப்பவராக இருந்தில்லை. (இனியும்) உமது வலது கையால் அதை எழுதவும் மாட்டீர்!152& 312 அவ்வாறு இருந்திருந்தால் வீணர்கள் சந்தேகம் கொண்டிருப்பார்கள்.

49. மாறாக, இவை தெளிவான வசனங்கள். கல்வி வழங்கப்பட்டோரின் உள்ளங்களில் இருக்கின்றன.420 அநீதி இழைத்தோரைத் தவிர வேறு எவரும் நமது வசனங்களை மறுக்க மாட்டார்கள்.

50. "இவருக்கு இவரது இறைவனிடமிருந்து அற்புதங்கள் அருளப்படக் கூடாதா?'' என்று கேட்கின்றனர். "அற்புதங்கள் அல்லாஹ்விடமே உள்ளன.269 நான் தெளிவாக எச்சரிக்கை செய்பவன் மட்டுமே'' என்று (முஹம்மதே!) கூறுவீராக!

51. உமக்கு இவ்வேதத்தை நாம் அருளி, அது அவர்களுக்குக் கூறப்படுவது அவர்களுக்குப் போதவில்லையா? நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு இதில் அருளும், அறிவுரையும் உள்ளது.

52. எனக்கும், உங்களுக்குமிடையே அல்லாஹ் கண்காணிக்கப் போதுமானவன். அவன் வானங்களிலும்,507 பூமியிலும் உள்ளதை அறிகிறான். வீணானதை நம்பி அல்லாஹ்வை மறுப்போரே நட்டமடைந்தவர்கள் என்று கூறுவீராக!

53. வேதனையை உம்மிடத்தில் அவசரமாகத் தேடுகின்றனர். நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு இல்லாதிருந்தால் வேதனை அவர்களுக்கு வந்திருக்கும். அவர்கள் உணராத நிலையில் திடீரென அது அவர்களிடம் வரும்.

54. உம்மிடம் வேதனையை அவசரமாகத் தேடுகின்றனர். (ஏகஇறைவனை) மறுப்போரை நரகம் சுற்றி வளைக்கும்.

55. அவர்களின் மேற்புறத்திலிருந்தும், கால்களுக்குக் கீழே இருந்தும் அவர்களை வேதனை மூடிக் கொள்ளும் நாளில்1 "நீங்கள் செய்து கொண்டிருந்ததைச் சுவையுங்கள்!'' என்று (இறைவன்) கூறுவான்.

56. நம்பிக்கை கொண்ட எனது அடியார்களே! எனது பூமி விசாலமானது. என்னையே வணங்குங்கள்!

57. ஒவ்வொருவரும் மரணத்தைச் சுவைப்பவரே. பின்னர் நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!

58. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரை சொர்க்கத்தில் உள்ள மாளிகையில் குடியமர்த்துவோம். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். உழைத்தோரின் கூலி அழகானது.

59. அவர்கள் பொறுமையைக் கடைப்பிடிப்பார்கள். தமது இறைவனையே சார்ந்திருப்பார்கள்.

60. எத்தனையோ உயிரினங்கள் தமது உணவைச் சுமந்து செல்வதில்லை. அல்லாஹ்வே அவற்றுக்கும், உங்களுக்கும் உணவளிக்கிறான்.463 அவன் செவியுறுபவன்;488 அறிந்தவன்.

61. "வானங்களையும், பூமியையும் படைத்தவனும், சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவனும் யார்?'' என்று அவர்களிடம் நீர் கேட்டால் "அல்லாஹ்'' என்று கூறுவார்கள். அப்படியாயின் "எவ்வாறு அவர்கள் திசை திருப்பப்படுகிறார்கள்?''

62. அல்லாஹ் தனது அடியார்களில், தான் நாடியோருக்கு செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். தான் நாடியோருக்கு அளவுடனும் வழங்குகிறான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்.

63. "வானத்திலிருந்து தண்ணீரை இறக்கி பூமி செத்த பின் அதன் மூலம் அதற்கு உயிரூட்டுபவன் யார்?'' என்று அவர்களிடம் நீர் கேட்டால் 'அல்லாஹ்' என்றே கூறுவார்கள். "அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்'' என்று கூறுவீராக! மாறாக அவர்களில் அதிகமானோர் விளங்கிக் கொள்வதில்லை.

64. இவ்வுலக வாழ்க்கை வீணும், விளையாட்டும் தவிர வேறில்லை. மறுமை வாழ்வு தான் வாழ்வாகும். அவர்கள் அறியக் கூடாதா?

65. அவர்கள் கப்பலில் ஏறிச் செல்லும்போது பிரார்த்தனையை அவனுக்கே உளத்தூய்மையுடன் உரித்தாக்கி அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றனர். அவர்களைக் காப்பாற்றி தரையில் சேர்த்ததும் அவர்கள் இணைகற்பிக்கின்றனர்.

66. நாம் அவர்களுக்கு வழங்கியதை அவர்கள் மறுக்கட்டும்! அனுபவிக்கட்டும்! பின்னர் அறிந்து கொள்வார்கள்.

67. இவர்களைச் சுற்றியுள்ள மனிதர்கள் வாரிச் செல்லப்படும் நிலையில் (இவர்களுக்கு) அபயமளிக்கும் புனிதத் தலத்தை நாம் ஏற்படுத்தியிருப்பதை அவர்கள் கவனிக்கவில்லையா?34 வீணானதை நம்பி, அல்லாஹ்வின் அருளுக்கு நன்றி மறக்கிறார்களா?

68. அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுபவனை விட அல்லது தன்னிடம் வந்த உண்மையைப் பொய்யெனக் கருதியவனை விட அநீதி இழைத்தவன் யார்? (ஏகஇறைவனை) மறுப்போருக்கு நரகத்தில் தங்குமிடம் இல்லையா?

69. நம் விஷயத்தில் உழைப்போருக்கு நமது வழிகளைக் காட்டுவோம். நன்மை செய்வோருடன் அல்லாஹ் இருக்கிறான்.

To read this Chapter in English click here.

(14வது பதிப்பின்படி திருத்தி அமைக்கப்பட்டது)

July 8, 2009, 10:10 PM

அத்தியாயம் : 30

அத்தியாயம் : 30
அர்ரூம் - ரோமப் பேரரசு

மொத்த வசனங்கள் : 60
ரோமாபுரி சாம்ராஜ்யம் தோற்றது பற்றியும் பின்னர் அது மீண்டும் வெற்றி பெறும் என்பது பற்றியும் 2, 3, 4 வசனங்களில் கூறப்படுவதால் இவ்வாறு இந்த அத்தியாயத்துக்கு பெயரிடப்பட்டுள்ளது.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்... .

1. அலிஃப், லாம், மீம்.2

2, 3, 4, 5. ரோமப் பேரரசு அருகில் உள்ள பூமியில் வெற்றி கொள்ளப்பட்டு விட்டது. அவர்கள் தோல்விக்குப் பிறகு சில வருடங்களில் அல்லாஹ்வின் உதவியால் வெற்றி பெறுவார்கள்.313 முன்னரும், பின்னரும் அதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியது. நம்பிக்கை கொண்டோர் அந்நாளில் மகிழ்ச்சியடைவார்கள். தான் நாடியோருக்கு அவன் உதவி செய்கிறான். அவன் மிகைத்தவன்; நிகரற்ற அன்புடையோன்.26

6. (இது) அல்லாஹ்வின் வாக்குறுதி. அல்லாஹ் தனது வாக்குறுதியை மீற மாட்டான். எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.

7. இவ்வுலக வாழ்க்கையில் வெளிப்படையாகத் தெரிபவற்றை அவர்கள் அறிவார்கள். அவர்கள் மறுமையைப் பற்றி கவனமற்றுள்ளனர்.

8. அவர்கள் தங்களுக்குள்ளே சிந்தித்துப் பார்க்கவில்லையா? வானங்களையும்,507 பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டவற்றையும் தக்க காரணத்துடனும், குறிப்பிட்ட காலக்கெடுவுடனும் அல்லாஹ் படைத்திருக்கிறான். மனிதர்களில் அதிகமானோர் தமது இறைவனின் சந்திப்பை488 மறுப்பவர்கள்.

9. அவர்கள் பூமியில் பயணம் செய்து தமக்கு முன் சென்றோரின் முடிவு எப்படி இருந்தது என்பதைக் கவனிக்க வேண்டாமா? இவர்களை விட வலிமையுடன் அவர்கள் இருந்தனர். பூமியைப் பண்படுத்தி இவர்கள் பயிரிட்டதை விட அதிகம் பயிரிட்டனர். அவர்களிடம் அவர்களது தூதர்கள் தெளிவான சான்றுகளுடன் வந்தனர். அல்லாஹ் அவர்களுக்குத் தீங்கிழைப்பவனாக இல்லை. மாறாக அவர்கள் தமக்குத் தாமே தீங்கிழைத்தனர்.

10. அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்யெனக் கருதி அவற்றைக் கேலி செய்ததால் தீமை செய்தோரின் முடிவு தீமையாகவே அமைந்தது.

11. அல்லாஹ்வே முதலில் படைத்தான். மீண்டும் அவன் படைப்பான். பின்னர் அவனிடம் நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!

12. யுகமுடிவு1 ஏற்படும் நாளில் குற்றவாளிகள் நம்பிக்கையிழப்பார்கள்.

13. அவர்களின் தெய்வங்களில் அவர்களுக்காகப் பரிந்து பேசுவோர் இருக்க மாட்டார்கள். அவர்கள் தம் தெய்வங்களையும் மறுப்பார்கள்.

14. யுகமுடிவு1 ஏற்படும் நாள்! அந்நாளில் அவர்கள் பிரிந்து விடுவார்கள்.

15. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோர், சோலையில் மகிழ்விக்கப்படுவார்கள்.

16. (நம்மை) மறுத்து நமது வசனங்களையும் மறுமைச்1 சந்திப்பையும் பொய்யெனக் கருதியோர் வேதனையின் முன்னே நிறுத்தப்படுவார்கள்.

17, 18. நீங்கள் மாலைப் பொழுதை அடையும்போதும், காலைப் பொழுதை அடையும்போதும், அந்தி நேரத்திலும், நண்பகலிலும் அல்லாஹ்வைத் துதியுங்கள்! வானங்களிலும்,507 பூமியிலும் அவனுக்கே புகழனைத்தும்.26

19. அவன் உயிரற்றதிலிருந்து உயிருள்ளதை வெளிப்படுத்துகிறான். உயிருள்ளதிலிருந்து உயிரற்றதை வெளிப்படுத்துகிறான். பூமி செத்த பிறகு அதற்கு உயிரூட்டுகிறான். இவ்வாறே நீங்கள் வெளிப்படுத்தப்படுவீர்கள்.

20. மண்ணால் உங்களைப் படைத்து506 பின்னர் நீங்கள் மனிதர்களாகப் பரவி இருப்பது அவனது சான்றுகளில் உள்ளவை.368

21. நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.

22. வானங்களையும்,507 பூமியையும் படைத்திருப்பதும், உங்களது மொழிகளும், நிறங்களும் வேறுபட்டிருப்பதும் அவனது அத்தாட்சிகளில் உள்ளவை. அறிவுடையோருக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.

23. இரவிலும், பகலிலும் நீங்கள் உறங்குவதும், அவனது அருளைத் தேடுவதும் அவனது சான்றுகளில் உள்ளவை. செவியுறும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.

24. மின்னலை அச்சமூட்டுவதாகவும், நம்பிக்கையூட்டுவதாகவும் உங்களுக்கு அவன் காட்டுவதும், வானத்திலிருந்து507 தண்ணீரை இறக்கி, பூமி செத்த பிறகு அதன் மூலம் அதற்கு உயிரூட்டுவதும் அவனது சான்றுகளில் உள்ளவை. விளங்கும் சமுதாயத்துக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.

25. அவனது கட்டளைப்படி வானமும்,507 பூமியும் நிலைபெற்றிருப்பதும் அவனது சான்றுகளில் உள்ளவை. பின்னர் அவன் உங்களை ஒரே தடவை அழைப்பான். அப்போது பூமியிலிருந்து வெளிப்படுவீர்கள்.175

26. வானங்களிலும்,507 பூமியிலும் இருப்போர் அவனுக்கே உரியவர்கள். அனைத்தும் அவனுக்கே கட்டுப்படுபவை.

27. அவனே முதலில் படைத்தான். பின்னர் மீண்டும் படைப்பான். இது அவனுக்கு மிகவும் எளிதானது. வானங்களிலும்,507 பூமியிலும் அவனுக்கே உயர்ந்த பண்பு உள்ளது. அவன் மிகைத்தவன்; ஞானமுடையவன்.

28. உங்களிலிருந்தே அவன் உங்களுக்கு ஓர் உதாரணத்தைக் கூறுகிறான். உங்களுக்கு நாம் வழங்கியவற்றில் பங்காளிகளாக உங்களது அடிமைகளில் எவரும் உள்ளனரா? அதில் நீங்களும் (அவர்களும்) சமமாக இருப்பீர்களா? உங்களுக்கிடையே நீங்கள் அஞ்சுவது போல் அவர்களுக்கு அஞ்சுவீர்களா? விளங்கும் சமுதாயத்துக்கு இவ்வாறே வசனங்களைத் தெளிவுபடுத்துகிறோம்.

29. மாறாக, அநீதி இழைத்தோர் அறிவின்றி தமது மனோ இச்சைகளைப் பின்பற்றுகின்றனர். அல்லாஹ் யாரை வழிகேட்டில் விட்டு விடுகிறானோ அவருக்கு வழி காட்டுபவன் யார்? அவர்களுக்கு உதவியாளர்கள் யாருமில்லை

30. (முஹம்மதே!) உண்மை வழியில் நின்று உமது முகத்தை இம்மார்க்கத்தை நோக்கி நிலைப்படுத்துவீராக! இது அல்லாஹ்வின் இயற்கையான மார்க்கம். இதன் மீதே மனிதர்களை அல்லாஹ் அமைத்துள்ளான். அல்லாஹ்வின் படைப்பை மாற்றியமைக்கக் கூடாது. இதுவே நேரான மார்க்கம். எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.

31, 32. அவனை நோக்கியே திரும்புங்கள்! அவனை அஞ்சுங்கள்! தொழுகையை நிலைநாட்டுங்கள்! தங்களது மார்க்கத்தைப் பிரித்து பல பிரிவுகளாகி விட்ட இணைகற்பித்தோரில் ஆகி விடாதீர்கள்! ஒவ்வொரு கூட்டத்தினரும் தம்மிடம் உள்ளதில் மகிழ்ச்சியடைகின்றனர்.26

33, 34. மனிதர்களுக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும்போது தமது இறைவனிடம் திரும்பி அவனிடம் பிரார்த்திக்கின்றனர். பின்னர் அவர்களுக்குத் தன் அருளை அவன் சுவைக்கச் செய்தால் நாம் அவர்களுக்கு வழங்கியதற்கு நன்றி மறந்து தமது இறைவனுக்கு அவர்களில் ஒரு பகுதியினர் இணை கற்பிக்கின்றனர். அனுபவியுங்கள்! பின்னர் அறிந்து கொள்வீர்கள்.26

35. அவர்கள் எதை இணை கற்பிக்கிறார்களோ அது குறித்துப் பேசுகின்ற சான்றை அவர்களுக்கு நாம் அருளியுள்ளோமா?

36. மனிதர்களுக்கு அருளை நாம் சுவைக்கச் செய்யும்போது அதில் மகிழ்ச்சியடைகின்றனர். அவர்கள் செய்த வினை காரணமாக அவர்களுக்கு ஒரு தீங்கு ஏற்பட்டால் உடனே அவர்கள் நம்பிக்கையிழந்து விடுகின்றனர்.

37. தான் நாடியோருக்குச் செல்வத்தை அல்லாஹ் தாராளமாகவும், குறைத்தும் வழங்குகிறான் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்துக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.345

38. உறவினருக்கும், ஏழைக்கும், நாடோடிக்கும்206 அவர்களின் உரிமையை வழங்குவீராக! அல்லாஹ்வின் முகத்தை நாடுவோருக்கு இதுவே சிறந்தது. அவர்களே வெற்றி பெற்றோர்.

39. மனிதர்களின் செல்வங்களைப் பெருக்கிக் கொள்வதற்காக நீங்கள் வட்டிக்கு கொடுப்பது அல்லாஹ்விடம் பெருகுவதில்லை. அல்லாஹ்வின் முகத்தை நாடி ஸகாத் கொடுப்பீர்களானால் இத்தகையோரே பெருக்கிக் கொண்டவர்கள்.

40. அல்லாஹ்வே உங்களைப் படைத்தான். பின்னர் உங்களுக்கு உணவளித்தான்.463 பின்னர் உங்களை மரணிக்கச் செய்வான். பிறகு உங்களை உயிர்ப்பிப்பான். உங்கள் தெய்வங்களில் இவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்வோர் உள்ளனரா? அவன் தூயவன்.10 அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்.

41. மனிதர்களின் கைகள் செய்தவற்றின் காரணமாக கடலிலும், தரையிலும் சீரழிவு மேலோங்கி விட்டது. அவர்கள் திருந்துவதற்காக அவர்கள் செய்தவற்றில் சிலவற்றை அவர்களுக்குச் சுவைக்கச் செய்வான்.

42. "பூமியில் பயணம் செய்து முன் சென்றோரின் முடிவு எவ்வாறு இருந்தது என்பதைக் கவனியுங்கள்!'' என்று கூறுவீராக! அவர்களில் அதிகமானோர் இணைகற்பிப்போராக இருந்தனர். 

43. தடுத்து நிறுத்த முடியாத ஒரு நாள்1 அல்லாஹ்விடமிருந்து வருவதற்கு முன் உமது முகத்தை நிலையான மார்க்கத்தை நோக்கி நிலைநிறுத்துவீராக! அந்நாளில் அவர்கள் பிரிந்து விடுவார்கள்.

44. (ஏகஇறைவனை) மறுப்போரின் நிராகரிப்பு அவரையே சேர்ந்தது. நல்லறம் செய்வோர் தமக்காகவே தயாரித்துக் கொள்கின்றனர்.

45. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு அவனது அருளிலிருந்து அவன் கூலி வழங்குவான். (தன்னை) மறுப்போரை அவன் விரும்ப மாட்டான்.

46. தனது அருளை உங்களுக்குச் சுவைக்கச் செய்வதற்காகவும், கப்பல்கள் அவன் கட்டளைப்படி செல்வதற்காகவும், அவனது அருளை நீங்கள் தேடுவதற்காகவும், நீங்கள் நன்றி செலுத்திடவும் நற்செய்தி கூறும் காற்றுகளை அனுப்பி வைப்பது அவனது சான்றுகளில் உள்ளவை.

47. (முஹம்மதே!) உமக்கு முன் பல தூதர்களை அவர்களது சமுதாயத்திற்கு அனுப்பினோம். அவர்களிடம் தெளிவான சான்றுகளை அவர்கள் கொண்டு வந்தனர். குற்றம் செய்தோரைத் தண்டித்தோம். நம்பிக்கை கொண்டோருக்கு உதவுவது நம் மீது கடமையாக ஆகி விட்டது.

48. அல்லாஹ்வே காற்றை அனுப்புகிறான். அது மேகத்தைக் கலைக்கின்றது. அவன் விரும்பியவாறு அதை வானில் பரவச் செய்கிறான். அதைப் பல துண்டுகளாக ஆக்குகிறான். அதற்கிடையில் மழை வெளியேறுவதைக் காண்கிறீர்.419 தனது அடியார்களில் தான் நாடியோருக்கு அதை சுவைக்கச் செய்யும்போது அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.

49. இதற்கு முன் (அதாவது) அவர்களுக்கு அது அருளப்படுவதற்கு முன் நம்பிக்கையிழந்திருந்தனர்.

50. பூமி இறந்த பின் அதை எவ்வாறு அல்லாஹ் உயிர்ப்பிக்கிறான் என்று அவனது அருளின் அறிகுறிகளைப் பார்ப்பீராக! அவன்தான் இறந்தோரை உயிர்ப்பிப்பவன். அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.

51. நாம் காற்றை அனுப்பி அதை (பயிர்களை) மஞ்சள் நிறமாக அவர்கள் கண்டால் அதன் பிறகு அவனை மறுப்போராக ஆகி விடுகின்றனர்.

52. இறந்தோரைச் செவியுறச் செய்ய உம்மால் முடியாது! செவிடர்கள் பின்வாங்கி ஓடினால் அழைப்பை அவர்களுக்குச் செவியேற்கச் செய்ய உம்மால் முடியாது.

53. குருடர்களுக்கு அவர்களின் வழிகேட்டிலிருந்து நல்வழி காட்டுபவராக நீர் இல்லை. நம் வசனங்களை நம்பி கட்டுப்பட்டு நடப்போரைத்தான் உம்மால் கேட்கச் செய்ய முடியும்.81

54. பலவீனமான நிலையில் உங்களை அல்லாஹ் படைத்தான். பின்னர் பலவீனத்திற்குப் பின் பலத்தை ஏற்படுத்தினான். பின்னர் பலத்துக்குப் பின் பலவீனத்தையும், நரையையும் ஏற்படுத்தினான். அவன் நாடியதைப் படைப்பான். அவன் அறிந்தவன்; ஆற்றலுடையவன்.

55. யுகமுடிவு1 ஏற்படும் நாளில் சிறிது நேரம் தவிர தாம் வாழவில்லை என்று குற்றவாளிகள் சத்தியம் செய்து கூறுவார்கள். இவ்வாறே அவர்கள் திசை திருப்பப்பட்டு வந்தனர்.

56. "அல்லாஹ்வின் ஏட்டில்157 உள்ளபடி உயிர்ப்பிக்கப்படும் நாள்1 வரை பூமியில் நீங்கள் வசித்தீர்கள். இதுவே உயிர்ப்பிக்கப்படும் நாள்1. எனினும் அறியாதிருந்தீர்கள்'' என்று அறிவும், நம்பிக்கையும் வழங்கப்பட்டோர் கூறுவார்கள்.

57. அந்நாளில்1 அநீதி இழைத்தோரின் சமாளிப்பு அவர்களுக்குப் பயன் தராது. அவர்கள் (உலகுக்கு மீண்டும் அனுப்பப்பட்டு) வணக்கங்கள் செய்ய வற்புறுத்தப்பட மாட்டார்கள்.

58. இக்குர்ஆனில் மனிதர்களுக்காக ஒவ்வொரு முன்னுதாரணத்தையும் தெளிவுபடுத்தியுள்ளோம். (முஹம்மதே!) அவர்களிடம் நீர் சான்றைக் கொண்டு வந்தால் "நீங்கள் வீணர்களேயன்றி வேறில்லை'' என்று (நம்மை) மறுப்போர் கூறுவார்கள்.

59. இவ்வாறே அறியாதவர்களின் உள்ளங்கள் மீது அல்லாஹ் முத்திரையிடுகிறான்.

60. பொறுமையாக இருப்பீராக! அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது. உறுதியாக நம்பாதோர் உம்மை இலேசாகக் கருதிட வேண்டாம்.

To read this Chapter in English click here.

(12வது பதிப்பின்படி திருத்தி அமைக்கப்பட்டது)

July 8, 2009, 10:12 PM

அத்தியாயம் : 31

அத்தியாயம் : 31
லுக்மான் - ஒரு நல்ல மனிதரின் பெயர்

மொத்த வசனங்கள் : 34
லுக்மான் என்ற நல்லடியார் தமது மகனுக்குக் கூறும் அறிவுரை 13வது வசனம் முதல் 19வது வசனம் வரை கூறப்படுவதால் இந்த அத்தியாயத்துக்கு இவ்வாறு பெயரிடப்பட்டது.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்... .

1. அலிஃப், லாம், மீம்.2

2. இவை ஞானமிக்க வேதத்தின் வசனங்கள்.

3. நன்மை செய்வோருக்கு (இது) நேர்வழியும், அருளுமாகும்.

4. அவர்கள் தொழுகையை நிலைநாட்டுவார்கள். ஸகாத்தையும் கொடுப்பார்கள். அவர்களே மறுமையை1 உறுதியாக நம்புவார்கள்.

5. அவர்களே தமது இறைவனிடமிருந்து (பெற்ற) நேர்வழியில் உள்ளனர். அவர்களே வெற்றி பெற்றோர்.

6. அல்லாஹ்வின் பாதையைக் கேலியாகக் கருதி அதை விட்டும் மக்களை அறிவின்றி வழிகெடுப்பதற்காக வீணான செய்திகளை விலைக்கு வாங்குவோர் மனிதர்களில் உள்ளனர். அவர்களுக்கே இழிவுபடுத்தும் வேதனை உள்ளது.

7. அவனிடம் நமது வசனங்கள் கூறப்பட்டால் அகந்தை கொண்டவனாகவும், அதைச் செவியுறாதவனைப் போலவும், தனது காதுகளில் அடைப்பு உள்ளது போலவும் புறக்கணிக்கிறான். அவனுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு என எச்சரிப்பீராக! 

8. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோருக்கு இன்பம் நிறைந்த சொர்க்கச் சோலைகள் உள்ளன.

9. அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது. அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.

10. நீங்கள் பார்க்கின்ற தூண்கள் இன்றி240 வானங்களைப்507 படைத்தான். உங்களைச் சாய்த்து விடாதிருக்க பூமியில் முளைகளைப் போட்டான்.248 அதில் ஒவ்வொரு உயிரினத்தையும் பரவச் செய்தான். வானிலிருந்து தண்ணீரை இறக்கினோம். அதில் மதிப்புமிக்க ஒவ்வொரு (தாவர) வகையையும் முளைக்கச் செய்தோம்.

11. இது அல்லாஹ் படைத்தது! அவனன்றி மற்றவர்கள் படைத்தவற்றை எனக்குக் காட்டுங்கள்! எனினும் அநீதி இழைத்தோர் தெளிவான வழிகேட்டில் உள்ளனர்.

12. "அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவீராக! நன்றி செலுத்துகிறவர் தமக்கே நன்றி செலுத்திக் கொள்கிறார். யார் (ஏகஇறைவனை) மறுக்கிறாரோ அல்லாஹ் தேவைகளற்றவன்;485 புகழுக்குரியவன்'' என்று (கூறி) லுக்மானுக்கு ஞானத்தை வழங்கினோம்.

13. லுக்மான் தமது மகனுக்கு அறிவுரை கூறும்போது "என் அருமை மகனே! அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்காதே! இணை கற்பித்தல் மகத்தான அநீதியாகும்'' என்று குறிப்பிட்டதை நினைவூட்டுவீராக!

14. மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள்.314 எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு.

15. உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணைகற்பிக்க அவ்விருவரும் உன்னைக் கட்டாயப்படுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்படாதே! இவ்வுலகில் அவர்களிடம் அழகிய முறையில் தோழமை கொள்! என்னை நோக்கித் திரும்பியோரின் வழியைப் பின்பற்று! பின்னர் உங்கள் மீளுதல் என்னிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி உங்களுக்கு அறிவிப்பேன்.

16. என் அருமை மகனே! கடுகு விதை அளவு (ஒரு பொருள்) இருந்து அது பாறைக்குள்ளேயோ, வானங்களிலோ,507 பூமியிலோ இருந்தாலும் அதை அல்லாஹ் கொண்டு வருவான். அல்லாஹ் நுட்பமானவன்; நன்கறிந்தவன்.

17. என் அருமை மகனே! தொழுகையை நிலைநாட்டு! நன்மையை ஏவு! தீமையைத் தடு! உனக்கு ஏற்படுவதைச் சகித்துக் கொள்! அது உறுதிமிக்க காரியமாகும்.

18. மனிதர்களை விட்டும் உனது முகத்தைத் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் கர்வமாக நடக்காதே! கர்வம் கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்.

19. "நீ நடக்கும்போது நடுத்தரத்தைக் கடைப்பிடி! உனது குரலைத் தாழ்த்திக் கொள்! குரல்களில் வெறுக்கத்தக்கது கழுதையின் குரலாகும்'' (என்றும் அறிவுரை கூறினார்).

20. வானங்களில்507 உள்ளதையும், பூமியில் உள்ளதையும் உங்களுக்காக அல்லாஹ் பயன்படச் செய்ததையும், தனது அருட்கொடைகளை வெளிப்படையாகவும், அந்தரங்கமாகவும் வாரி வழங்கியிருப்பதையும் நீங்கள் காணவில்லையா? அறிவு, நேர்வழி, ஒளிவீசும் வேதம் எதுவும் இன்றி அல்லாஹ்வைப் பற்றி தர்க்கம் செய்வோரும் மனிதர்களில் உள்ளனர்.

21. "அல்லாஹ் அருளியதைப் பின்பற்றுங்கள்!'' என்று அவர்களிடம் கூறப்படும்போது "எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதையே நாங்கள் பின்பற்றுவோம்'' என்று கூறுகின்றனர். ஷைத்தான் நரகத்தின் வேதனையை நோக்கி அவர்களை அழைத்தாலுமா?

22. நன்மை செய்த நிலையில் தமது முகத்தை அல்லாஹ்வை நோக்கித் திருப்புபவர் பலமான கயிற்றைப் பிடித்துக் கொண்டார். காரியங்களின் முடிவு அல்லாஹ்விடமே உள்ளது.

23. (நம்மை) மறுத்தோரின் மறுப்பு உம்மைக் கவலையில் ஆழ்த்த வேண்டாம். அவர்களின் மீளுதல் நம்மிடமே உள்ளது. அவர்கள் செய்ததை அவர்களுக்கு நாம் அறிவிப்போம். உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ் அறிந்தவன்.

24. அவர்களைச் சிறிது காலம் அனுபவிக்கச் செய்வோம். பின்னர் கடுமையான வேதனையில் அவர்களைத் தள்ளுவோம்.

25. "வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?'' என்று அவர்களிடம் நீர் கேட்டால் 'அல்லாஹ்' என்று அவர்கள் கூறுவார்கள். "அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்'' என்று கூறுவீராக! எனினும் அவர்களில் அதிமானோர் அறிய மாட்டார்கள்.

26. வானங்களிலும்,507 பூமியிலும் உள்ளவை அல்லாஹ்வுக்கே உரியன. அல்லாஹ் தேவைகளற்றவன்;485 புகழுக்குரியவன்.

27. பூமியில் உள்ள மரங்கள் யாவும் எழுது கோல்களாக இருந்து, கடலுடன் மேலும் ஏழு கடல்கள் (மையாக) துணை சேர்ந்தாலும் அல்லாஹ்வின் கட்டளைகள்155 எழுதி முடியாது. அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.

28. உங்களைப் படைத்ததும் உயிர்ப்பிப்பதும் ஓர் உயிரைப் (படைப்பது) போன்றதே. அல்லாஹ் செவியுறுபவன்;488 பார்ப்பவன்.488

29. அல்லாஹ் இரவைப் பகலில் நுழைப்பதையும், பகலை இரவில் நுழைப்பதையும், சூரியனையும் சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதையும் நீர் அறியவில்லையா? ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலக்கெடு வரை சென்று கொண்டிருக்கும்.241 நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

30. அல்லாஹ்வே உண்மையானவன். அவனையன்றி அவர்கள் அழைப்பவை பொய்யானவை என்பதும் அல்லாஹ் உயர்ந்தவன்; பெரியவன் என்பதும் தான் இதற்குக் காரணம். 

31. உங்களுக்கு அல்லாஹ் தனது சான்றுகளைக் காட்டுவதற்காக அவனது அருளால் கடலில் கப்பல்கள் செல்வதை நீர் அறியவில்லையா? சகிப்புத் தன்மையும் நன்றியுணர்வுமுடைய ஒவ்வொருவருக்கும் இதில் பல சான்றுகள் உள்ளன.

32. முகடுகளைப் போல் அலைகள் அவர்களை மூடும்போது உளத்தூய்மையுடன் வணக்கத்தை உரித்தாக்கி அவனைப் பிரார்த்திக்கின்றனர். அவர்களைக் காப்பாற்றித் தரையில் சேர்த்ததும் அவர்களில் நேர்மையாக நடப்பவரும் உள்ளனர். நன்றி கெட்ட சதிகாரர்களைத் தவிர வேறு எவரும் நமது சான்றுகளை நிராகரிப்பதில்லை.

33. மனிதர்களே! உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! தந்தை மகனைக் காக்க முடியாத, மகன் தந்தையைச் சிறிதும் காப்பாற்ற இயலாத நாளை1 அஞ்சுங்கள்! அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது. இவ்வுலக வாழ்க்கை உங்களை ஏமாற்றி விட வேண்டாம்! ஏமாற்றுபவனும் அல்லாஹ்வைப் பற்றி உங்களை ஏமாற்றி விட வேண்டாம்.

34. யுகமுடிவு நேரம்1 பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவன் மழையை இறக்குகிறான். கருவறைகளில் உள்ளதை அவன் அறிகிறான். தான், நாளை சம்பாதிக்கவுள்ளதை எவரும் அறிய மாட்டார். தாம், எங்கே மரணிப்போம் என்பதையும் எந்த உயிரினமும் அறியாது. அல்லாஹ் நன்கறிந்தவன்; நுட்பமானவன்.

To read this Chapter in English click here.

(14வது பதிப்பின்படி திருத்தி அமைக்கபட்டது)

July 8, 2009, 10:26 PM

அத்தியாயம் : 32

அத்தியாயம் : 32
அஸ்ஸஜ்தா - சிரம் பணிதல்

மொத்த வசனங்கள் : 30
இறைவனுக்காக ஸஜ்தாச் செய்வோர் பற்றியும் அவர்களுக்குக் கிடைக்கும் பரிசுகள் பற்றியும் 15 முதல் 17 வரை உள்ள வசனங்களில் கூறப்படுவதால் இந்த அத்தியாயத்துக்கு இவ்வாறு பெயரிடப்பட்டது.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்... .

1. அலிஃப், லாம், மீம்.2

2. (இது) அகிலத்தின் இறைவனிடமிருந்து அருளப்பட்ட வேதம். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

3. "இதை இவர் இட்டுக்கட்டி விட்டார்'' என்று அவர்கள் கூறுகிறார்களா? அவ்வாறில்லை! உமக்கு முன்னர் எச்சரிப்பவர் வராத சமுதாயத்தை (முஹம்மதே!) நீர் எச்சரிப்பதற்காகவும், அவர்கள் நேர்வழி பெறுவதற்காகவும் (இது) உம் இறைவனிடமிருந்து உமக்கு வந்த உண்மை.

4. வானங்களையும்,507 பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டவற்றையும் அல்லாஹ்வே ஆறு நாட்களில் படைத்தான்.179 பின்னர் அர்ஷின்488 மீது அமர்ந்தான். உங்களுக்கு அவனன்றி பொறுப்பாளரோ, பரிந்துரைப்பவரோ17 இல்லை. நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?

5. வானத்திலிருந்து507 பூமி வரை காரியங்களை அவனே நிர்வகிக்கிறான். அது ஒரு நாளில் அவனிடம் மேலேறிச் செல்லும். அது நீங்கள் கணக்கிடும் ஆயிரம் வருடங்கள் அளவுடையது.293

6. அவன் மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிபவன்; மிகைத்தவன்; நிகரற்ற அன்புடையோன்.

7. அவன் ஒவ்வொரு பொருளின் படைப்பையும் அழகுபடுத்தினான். மனிதனின் படைப்பைக்368 களிமண்ணிலிருந்து503 துவக்கினான்.506

8. பிறகு அவனது சந்ததிகளை அற்பமான நீரின்506 சத்திலிருந்து உருவாக்கினான்.

9. பின்னர் அவனைச் சீரமைத்து தனது உயிரை அவனிடம் ஊதினான். உங்களுக்குச் செவியையும், பார்வைகளையும், உள்ளங்களையும் ஏற்படுத்தினான். நீங்கள் குறைவாகவே நன்றி செலுத்துகின்றீர்கள்.

10. "பூமிக்குள் மறைந்த பின் புதுப்படைப்பை நாங்கள் பெறுவோமா?'' என்று அவர்கள் கேட்கின்றனர். உண்மையில் அவர்கள் தமது இறைவனின் சந்திப்பை488 மறுக்கின்றனர்.

11. "உங்களுக்கென நியமிக்கப்பட்ட மரணத்திற்குரிய வானவர் உங்களைக் கைப்பற்றுவார்.165 பின்னர் உங்கள் இறைவனிடம் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்'' என்று கூறுவீராக!

12. குற்றவாளிகள் தம் இறைவன் முன் தலை குனிந்து, "எங்கள் இறைவா! பார்த்து விட்டோம். கேட்டு விட்டோம். எனவே எங்களைத் திருப்பி அனுப்பு! நல்லறம் செய்கிறோம். நாங்கள் உறுதியாக நம்பிக்கை கொள்வோம்'' என்று கூறுவதை நீர் காண வேண்டுமே!

13. நாம் நினைத்திருந்தால் ஒவ்வொருவருக்கும் அவரவருக்கான நேர்வழியைக் கொடுத்திருப்போம். மாறாக "அனைத்து (கெட்ட) மனிதர்களாலும், ஜின்களாலும் நரகத்தை நிரப்புவேன்'' என்று என்னிடமிருந்து சொல் முந்தி விட்டது.

14. "இந்த நாளின்1 சந்திப்பை நீங்கள் மறந்ததால் அனுபவியுங்கள்! நாமும் உங்களை மறந்து விட்டோம்.6 எனவே நீங்கள் செய்து கொண்டிருந்ததன் காரணமாக நிரந்தரமான வேதனையைச் சுவையுங்கள்!'' (என்று கூறப்படும்.)

15. நமது வசனங்கள் மூலம் அறிவுரை கூறப்படும்போது ஸஜ்தாவில்396 விழுவோரும், தமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவோரும், பெருமையடிக்காமல் இருப்போருமே அவற்றை நம்புபவர்கள்.

16. அச்சத்துடனும், எதிர்பார்ப்புடனும் தமது இறைவனைப் பிரார்த்திக்க அவர்களின் விலாப்புறங்கள் படுக்கைகளிலிருந்து விலகும். நாம் வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுவார்கள்.

17. அவர்கள் செய்து கொண்டிருந்ததற்குப் பரிசாக அவர்களுக்காக கண்குளிரும் வகையில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதை எவரும் அறிய மாட்டார்.

18. நம்பிக்கை கொண்டவர் குற்றம் செய்தவரைப் போல் ஆவாரா? அவர்கள் சமமாக மாட்டார்கள்.

19. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோருக்கு அவர்கள் (நன்மை) செய்து கொண்டிருந்ததால் தங்குமிடமாக சொர்க்கச் சோலைகள் பரிசாகவுள்ளன.

20. குற்றம் புரிந்தோரின் தங்குமிடம் நரகம். அங்கிருந்து அவர்கள் வெளியேற நினைக்கும் போதெல்லாம் மீண்டும் அதில் போடப்படுவார்கள். "நீங்கள் பொய்யெனக் கருதிக் கொண்டிருந்த நரகத்தின் வேதனையைச் சுவையுங்கள்!'' என்று அவர்களுக்குக் கூறப்படும்.

21. அவர்கள் திருந்துவதற்காக இப்பெரிய வேதனைக்கு முன்னர் (இவ்வுலகில்) சிறிய வேதனையை அவர்களுக்குச் சுவைக்கச் செய்கிறோம்.

22. தமது இறைவனின் வசனங்கள் மூலம் அறிவுரை கூறப்பட்டு அதைப் புறக்கணித்தவனை விட அநீதி இழைத்தவன் யார்? நாம் குற்றவாளிகளைத் தண்டிப்போம்.

23. மூஸாவுக்கு வேதத்தை வழங்கினோம். (முஹம்மதே!) அவரைச் சந்தித்ததில்267 நீர் சந்தேகம் கொள்ளாதீர்.315 அவரை இஸ்ராயீலின் மக்களுக்கு வழி காட்டியாக்கினோம்.

24. அவர்கள் பொறுமையைக் கடைப்பிடித்து நமது வசனங்களை உறுதியாக நம்பியபோது நமது கட்டளைப்படி வழிகாட்டும் தலைவர்களை அவர்களிலிருந்து ஏற்படுத்தினோம்.

25. அவர்கள் முரண்பட்ட விஷயத்தில் கியாமத் நாளில்1 உமது இறைவன் அவர்களிடையே தீர்ப்பு வழங்குவான்.

26. இவர்களுக்கு முன் பல தலைமுறையினரை நாம் அழித்திருப்பது இவர்களுக்கு நேர்வழி காட்டவில்லையா? அவர்களின் குடியிருப்புக்களில் இவர்கள் நடந்து செல்கின்றனர். இதில் பல சான்றுகள் உள்ளன. அவர்கள் செவியுற மாட்டார்களா?

27. "வறண்ட பூமியை நோக்கி தண்ணீரை நாமே ஓட்டிச் செல்கிறோம்'' என்பதை அவர்கள் காணவில்லையா? அதன் மூலம் பயிர்களை வெளிப்படுத்துகிறோம். அதிலிருந்து அவர்களும், அவர்களது கால்நடைகளும் சாப்பிடுகின்றனர். அவர்கள் சிந்திக்க மாட்டார்களா?

28. "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அந்தத் தீர்ப்பு எப்போது?'' என்று அவர்கள் கேட்கின்றனர்.

29. "தீர்ப்பு நாளில்1 (ஏகஇறைவனை) மறுத்தோருக்கு அவர்கள் நம்பிக்கை கொள்வது பயன் தராது. அவர்கள் அவகாசம் அளிக்கப்பட மாட்டார்கள்'' என்று கூறுவீராக!

30. அவர்களைப் புறக்கணிப்பீராக! எதிர்பார்ப்பீராக! அவர்களும் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.

To read this Chapter in English click here.

(14வது பதிப்பின்படி திருத்தி அமைக்கப்பட்டது)

July 8, 2009, 10:28 PM

அத்தியாயம் : 33

அத்தியாயம் : 33
அல் அஹ்ஸாப் - கூட்டுப் படையினர்

மொத்த வசனங்கள் : 73
பல்வேறு எதிரிகள் கூட்டாகப் படைதிரட்டி தாக்க வந்த நிகழ்ச்சி பற்றியும், அப்போது இறைவன் புறத்திலிருந்து கிடைத்த பேருதவி பற்றியும் 9வது வசனம் முதல் 27வது வசனம் வரை கூறப்படுவதால் இந்த அத்தியாயத்துக்கு இவ்வாறு பெயரிடப்பட்டது.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்... .

1. நபியே! அல்லாஹ்வை அஞ்சுவீராக! (ஏகஇறைவனை) மறுப்போருக்கும், நயவஞ்சகர்களுக்கும் கட்டுப்படாதீர்! அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.

2. (முஹம்மதே!) உமது இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதைப் பின்பற்றுவீராக! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான்.

3. அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! அல்லாஹ் பொறுப்பேற்கப் போதுமானவன்.

4. எந்த மனிதருக்குள்ளும் இரண்டு உள்ளங்களை502 அல்லாஹ் ஏற்படுத்தவில்லை. உங்களின் மனைவியரில் யாரைத் தாயுடன் ஒப்பிட்டீர்களோ அவர்களை உங்கள் தாயார்களாக அவன் ஆக்கவில்லை.316 உங்களால் வளர்க்கப்படும் பிள்ளைகளை உங்கள் பிள்ளைகளாக அல்லாஹ் ஆக்கவில்லை.317 இது உங்கள் வாய்களால் கூறும் வார்த்தை. அல்லாஹ் உண்மையே கூறுகிறான். அவனே நேர்வழி காட்டுகிறான்.

5. அவர்களை அவர்களின் தந்தையருடனே சேர்த்து அழையுங்கள்! அதுவே அல்லாஹ்விடம் நீதியானது. அவர்களின் தந்தையரை நீங்கள் அறியாவிட்டால் அவர்கள் உங்களின் கொள்கைச் சகோதரர்களும், உங்கள் நண்பர்களுமாவர். தவறுதலாக நீங்கள் கூறுவதில் உங்கள் மீது குற்றம் இல்லை. மாறாக உங்கள் உள்ளங்களால் தீர்மானித்துக் கூறுவதே (குற்றமாகும்). அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

6. நம்பிக்கை கொண்டோருக்கு தங்களை விட இந்த நபி (முஹம்மத்) தான் முன்னுரிமை பெற்றவர். அவரது மனைவியர் அவர்களுக்கு அன்னையர்.322 நம்பிக்கை கொண்டோரையும், ஹிஜ்ரத்460 செய்தோரையும் விட உறவினர்களே ஒருவருக்கு மற்றவர் முன்னுரிமை பெற்றவர்.385 நீங்களாக உங்கள் நண்பர்களுக்கு உபகாரம் செய்தாலே தவிர. இது அல்லாஹ்வின் வேதத்தில் உள்ளது. இது பதிவேட்டில்157 எழுதப்பட்டதாக இருக்கிறது.

7, 8. நபிமார்களிடம் (குறிப்பாக) உம்மிடமும், நூஹ், இப்ராஹீம், மூஸா, மர்யமின் மகன் ஈஸா ஆகியோரிடமும் அவர்களது உறுதிமொழியை95 நாம் எடுத்ததை நினைவூட்டுவீராக! உண்மையாளர்களை அவர்களது உண்மை பற்றி விசாரிப்பதற்காக அவர்களிடம் கடுமையான உடன்படிக்கையை எடுத்தோம். (தன்னை) மறுப்போருக்கு அவன் துன்புறுத்தும் வேதனையைத் தயாரித்துள்ளான்.26

9. நம்பிக்கை கொண்டோரே! உங்களிடம் கூட்டுப் படையினர் வந்தபோது அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருட்கொடையை எண்ணிப் பாருங்கள்! அவர்களுக்கு எதிராகக் காற்றையும், நீங்கள் காணாத படையினரையும் அனுப்பினோம். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவனாக488 இருக்கிறான்.

10, 11. அவர்கள் உங்கள் மேற்புறத்திலிருந்தும், உங்கள் கீழ்ப்புறத்திலிருந்தும் வந்தபோது, பார்வைகள் நிலை குத்தி, இதயங்கள் தொண்டைக் குழிகளை அடைத்து, அல்லாஹ்வைப் பற்றி நீங்கள் பலவிதமான எண்ணங்களைக் கொண்டபோது, அங்கு தான் நம்பிக்கை கொண்டோர் சோதிக்கப்பட்டனர்.484 அவர்கள் கடுமையாக ஆட்டுவிக்கப்பட்டார்கள்.26

12. "அல்லாஹ்வும், அவனது தூதரும் ஏமாற்றும் வாக்குறுதியையே அளித்தனர்'' என்று நயவஞ்சகர்களும், உள்ளங்களில் நோய் உள்ளோரும் கூறியபோதும் (சோதிக்கப்பட்டனர்).

13. "யஸ்ரிப் (மதீனா)வாசிகளே! உங்களால் (எதிர்த்து) நிற்க முடியாது. எனவே திரும்பிச் செல்லுங்கள்!'' என்று அவர்களில் ஒரு சாரார் கூறியபோதும் (சோதிக்கப்பட்டனர்). பாதுகாப்பானவையாக இருந்தும் "எங்கள் வீடுகள் பாதுகாப்பற்றவையாக உள்ளன'' எனக் கூறி நபியிடம் அவர்களில் ஒரு பிரிவினர் அனுமதி கோரினார்கள். அவர்கள் வெருண்டோடுவதைத் தவிர வேறெதனையும் விரும்பவில்லை.

14. அவர்களுக்கு எதிராக அதன் பல பாகங்களிலிருந்தும் படையெடுக்கப்பட்டு பின்னர் குழப்பம் விளைவிக்குமாறு அவர்களிடம் கேட்கப்பட்டிருந்தால் அதைச் செய்திருப்பார்கள். சிறிதளவே தவிர இதில் தாமதிக்க மாட்டார்கள்.

15. புறங்காட்டி ஓடுவதில்லை என்று முன்னர் அல்லாஹ்விடம் உறுதிமொழி எடுத்திருந்தனர். அல்லாஹ்விடம் எடுத்த உறுதிமொழி விசாரிக்கப்படுவதாக இருக்கிறது.

16. "நீங்கள் வெருண்டு ஓடினால் வெருண்டோடுவது மரணத்தையோ, கொல்லப்படுவதையோ தடுக்காது. அப்போது குறைவாகவே நீங்கள் சுகவாழ்வளிக்கப்படுவீர்கள்'' என்று கூறுவீராக!

17. "அல்லாஹ் உங்களுக்குத் தீங்கை நாடினால் அவனிடமிருந்து உங்களைக் காப்பவன் யார்?'' அல்லது உங்களுக்கு அருளை நாடினால் (அதைத் தடுப்பவன் யார்) என்று கேட்பீராக! அல்லாஹ்வையன்றி பொறுப்பாளனையோ, உதவியாளனையோ அவர்கள் காண மாட்டார்கள்.

18. உங்களில் தடை செய்வோரையும், "எங்களிடம் வந்து விடுங்கள்!'' என்று தமது சகோதரர்களுக்குக் கூறியோரையும் அல்லாஹ் அறிவான். அவர்கள் குறைவாகவே தவிர போர்க்களத்திற்கு வர மாட்டார்கள்.

19. உங்களுக்கு எதிராக அவர்கள் கஞ்சத்தனம் செய்கின்றனர். அச்சம் வரும்போது மரண (பய)த்தினால் மூர்ச்சை அடைந்தவனைப் போல் கண்கள் சுழல அவர்கள் உம்மைப் பார்ப்பதை நீர் காண்பீர். பயம் தெளிந்ததும் (போரில் கிடைத்த) பொருட்களில் பேராசை கொண்டு கூர்மையான நாவுகளால் உங்களைத் துன்புறுத்துகின்றனர். அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. அவர்களின் செயல்களை அல்லாஹ் அழித்து விட்டான். இது அல்லாஹ்வுக்கு எளிதானதாகவே இருக்கிறது.

20. கூட்டுப் படையினர் இன்னும் செல்லவில்லை என்று நினைக்கின்றனர். கூட்டுப் படையினர் வந்து விட்டால் கிராமப்புறத்தாருடன் இருந்து கொண்டு உங்களைப் பற்றிய செய்திகளை விசாரித்துக் கொண்டிருக்கவே விரும்புவார்கள். உங்களுடன் அவர்கள் இருந்திருந்தாலும் குறைவாகவே தவிர போரிட்டிருக்க மாட்டார்கள்.

21. அல்லாஹ்வையும், இறுதி நாளையும்1 நம்பி, அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது.318

22. நம்பிக்கை கொண்டோர் கூட்டுப் படையினரைக் கண்டபோது "இதுவே அல்லாஹ்வும், அவனது தூதரும் நமக்கு வாக்களித்தது. அல்லாஹ்வும், அவனது தூதரும் உண்மையே சொன்னார்கள்'' என்று கூறினர். நம்பிக்கையையும், கட்டுப்படுதலையும் தவிர வேறெதனையும் அவர்களுக்கு (இது) அதிகமாக்கவில்லை.

23. அல்லாஹ்விடம் எதைப் பற்றி உறுதிமொழி எடுத்தார்களோ அதை உண்மைப்படுத்தியோரும் நம்பிக்கை கொண்டோரில் உள்ளனர். தமது இலட்சியத்தை அடைந்தவரும் அவர்களில் உள்ளனர் (அதை) எதிர்பார்த்துக் கொண்டிருப்பவரும் அவர்களில் உள்ளனர். அவர்கள் சிறிதளவும் (வாக்கை) மாற்றவில்லை.

24. உண்மையாளர்களுக்கு அவர்களது உண்மையின் காரணமாக அல்லாஹ் பரிசளிப்பான். நாடினால் நயவஞ்சகர்களைத் தண்டிப்பான். அல்லது அவர்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

25. (தன்னை) மறுப்போரை எந்த நன்மையையும் அடையாமல் அவர்களது கோபத்துடனேயே அல்லாஹ் அவர்களைத் திருப்பி அனுப்பினான். நம்பிக்கை கொண்டோருக்காக போரிட அல்லாஹ் போதுமானவன். அல்லாஹ் வலிமை மிக்கவனாகவும், மிகைத்தவனாகவும் இருக்கிறான்.

26. வேதமுடையோரில்27 அவர்களுக்கு உதவி செய்தோரை அவர்களின் கோட்டைகளிலிருந்து இறக்கினான். அவர்களின் உள்ளங்களில் அச்சத்தைப் போட்டான். ஒரு கூட்டத்தைக் கொன்றீர்கள்! மறு கூட்டத்தைச் சிறைப் பிடித்தீர்கள்.

27. அவர்களது பூமிக்கும், வீடுகளுக்கும், அவர்களது செல்வங்களுக்கும், நீங்கள் கால் வைக்காத பூமிக்கும் உங்களை வாரிசாக்கினான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவனாக இருக்கிறான்.

28. "இவ்வுலக வாழ்வையும், இதன் அலங்காரத்தையும் நீங்கள் விரும்பினால் வாருங்கள்! உங்களுக்கு வசதியளித்து அழகிய முறையில் உங்களை விடுவித்து விடுகிறேன்'' என்று நபியே (முஹம்மதே!) உமது மனைவியரிடம் கூறுவீராக!

29. நீங்கள் அல்லாஹ்வையும், அவனது தூதரையும், மறுமை வாழ்வையும் விரும்பினால் உங்களில் நன்மை செய்வோருக்கு அல்லாஹ் மகத்தான கூலியைத் தயாரித்துள்ளான்.

30. நபியின் மனைவியரே! உங்களில் யாரேனும் தெளிவான வெட்கக்கேடானதைச் செய்தால் அவருக்கு இரு மடங்கு வேதனை அளிக்கப்படும்.500 அது அல்லாஹ்வுக்கு எளிதானதாகவே இருக்கிறது.

31. (நபியின் மனைவியரான) உங்களில் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு நல்லறம் செய்பவருக்கு அவரது கூலியை இரண்டு தடவை வழங்குவோம். அவருக்கு மதிப்புமிக்க உணவையும் தயாரித்துள்ளோம்.500

32. நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்லர்.500 நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள்.

33. உங்கள் வீடுகளிலேயே தங்குங்கள்! முந்தைய அறியாமைக் காலத்தில் வெளிப்படுத்தித் திரிந்தது போல் திரியாதீர்கள்!500 தொழுகையை நிலைநாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! இவ்வீட்டினராகிய உங்களை விட்டு அசுத்தத்தை நீக்கவும், உங்களை முழுமையாகப் பரிசுத்தப்படுத்தவுமே அல்லாஹ் நாடுகிறான்.

34. உங்கள் வீடுகளில் கூறப்படும் அல்லாஹ்வின் வசனங்களையும், ஞானத்தையும்67 நினையுங்கள்! அல்லாஹ் நுணுக்கமானவனாகவும், நன்கறிந்தவனாகவும், இருக்கிறான்.

35. முஸ்லிமான ஆண்களும், பெண்களும், நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும், கட்டுப்படும் ஆண்களும், பெண்களும், உண்மை பேசும் ஆண்களும், பெண்களும், பொறுமையை மேற்கொள்ளும் ஆண்களும், பெண்களும், அடக்கமாக நடக்கும் ஆண்களும், பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும், தமது கற்பைக் காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும், அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் ஆண்களும், பெண்களும் ஆகியோருக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் தயாரித்துள்ளான்.

36. அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும்போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுயவிருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறுசெய்பவர் தெளிவாக வழிகெட்டு விட்டார்.

37. யாருக்கு அல்லாஹ் அருள் புரிந்து (முஹம்மதே!) நீரும் அவருக்கு அருள் புரிந்தீரோ, அவரிடம் "உமது மனைவியை உம்மிடமே வைத்துக் கொள்! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்'' என்று நீர் கூறியதை எண்ணிப் பார்ப்பீராக! அல்லாஹ் வெளிப்படுத்த இருந்ததை உமது மனதுக்குள் மறைத்துக் கொண்டீர். மனிதருக்கு அஞ்சினீர்! நீர் அஞ்சுவதற்கு அல்லாஹ்வே தகுதியானவன். ஸைத் என்பார் அவரிடம் தன் தேவையை முடித்துக் கொண்டபோது (விவாகரத்துச் செய்தபோது) உமக்கு அவரை மணமுடித்துத் தந்தோம். வளர்ப்பு மகன்கள் தம் மனைவியரிடம் தமது தேவையை முடித்துக் கொண்டால் (விவாகரத்துச் செய்தால்) அவர்களை (வளர்ப்புத் தந்தையரான) நம்பிக்கை கொண்டோர் மணந்து கொள்வது குற்றமாக ஆகக் கூடாது என்பதற்காக (இவ்வாறு செய்தோம்). அல்லாஹ்வின் கட்டளை செய்து முடிக்கப்பட வேண்டியதாக இருக்கிறது.319

38, 39. அல்லாஹ் அவருக்காகச் செய்த ஏற்பாட்டில் நபியின் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ்வை அஞ்சி, அவனைத் தவிர வேறு எவருக்கும் அஞ்சாது அல்லாஹ்வின் தூதுச் செய்திகளை எடுத்துச் சொன்ன முன் சென்றோரிடம் அல்லாஹ்வின் வழிமுறை இதுவே. அல்லாஹ்வின் கட்டளை தீர்மானிக்கப்பட்ட முடிவாக இருக்கிறது. அல்லாஹ் கணக்கெடுக்கப் போதுமானவன். 26

40. முஹம்மத் உங்களின் ஆண்களில் எவருக்கும் தந்தையாக இருக்கவில்லை.320 மாறாக அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களில் முத்திரையாகவும்187 இருக்கிறார். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கிறான்.

41. நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அதிகமதிகம் நினையுங்கள்!

42. அவனைக் காலையிலும், மாலையிலும் துதியுங்கள்!

43. இருள்களிலிருந்து303 ஒளிக்கு உங்களைக் கொண்டு செல்வதற்காக, அவனே உங்களுக்கு அருள் புரிகிறான். அவனுடைய வானவர்கள் உங்களுக்காக அருளைத் தேடுகின்றனர். அவன் நம்பிக்கை கொண்டோரிடம் நிகரற்ற அன்புடையோனாக இருக்கிறான்.

44. அவனை அவர்கள் சந்திக்கும்488 நாளில் அவர்களின் காணிக்கை ஸலாம்159 என்பதாகும். அவர்களுக்காக மரியாதைக்குரிய கூலியையும் அவன் தயாரித்துள்ளான்.

45, 46. நபியே (முஹம்மதே!) உம்மை சாட்சியாகவும், நற்செய்தி கூறுபவராகவும், எச்சரிக்கை செய்பவராகவும், அல்லாஹ்வின் விருப்பப்படி அவனை நோக்கி அழைப்பவராகவும், ஒளிவீசும் விளக்காகவும் நாம் அனுப்பினோம்.26

47. "நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ்விடமிருந்து பெரிய அருட்கொடை உள்ளது'' என்று அவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக!

48. (ஏகஇறைவனை) மறுப்போருக்கும் நயவஞ்சகருக்கும் கட்டுப்படாதீர்! அவர்களின் தொல்லைகளை அலட்சியப்படுத்துவீராக! அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! அல்லாஹ் பொறுப்பேற்கப் போதுமானவன்.

49. நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் நம்பிக்கை கொண்ட பெண்களை மணந்து அவர்களைத் தீண்டுவதற்கு முன் விவாகரத்துச் செய்து66 விட்டால் உங்களுக்காக அவர்கள் அனுசரிக்கும் இத்தா ஏதுமில்லை.69 அவர்களுக்கு வாழ்க்கை வசதி அளியுங்கள்.74 அழகிய முறையில் அவர்களை விட்டு விடுங்கள்!

50. நபியே! (முஹம்மதே!) உமது மனைவியரில் யாருக்கு அவர்களின் மணக்கொடையைக்108 கொடுத்து விட்டீரோ அவர்களையும், அல்லாஹ் உமக்கு போர்க் கைதிகளாகக் கொடுத்த அடிமைப் பெண்களையும்,107 உமது தந்தையின் சகோதரரின் புதல்விகள், உமது தந்தையின் சகோதரிகளுடைய புதல்விகள், உமது தாயின் சகோதரருடைய புதல்விகள், உமது தாயின் சகோதரிகளுடைய புதல்விகள் ஆகியோரில் உம்முடன் ஹிஜ்ரத்460 செய்தோரையும் உமக்கு (மணமுடிக்க) நாம் அனுமதித்துள்ளோம். நபிக்காக தன்னைத் தானே அர்ப்பணம் செய்த நம்பிக்கை கொண்ட பெண்ணையும் நபி அவரை மணக்க விரும்பினால் (அனுமதித்துள்ளோம்) உமக்குச் சங்கடம் ஏற்படக் கூடாது என்பதற்காக நம்பிக்கை கொண்டோருக்கு இல்லாமல் உமக்கு மட்டும் சிறப்பான சட்டமாகும்.378 (மற்றவர்களுக்கு) அவர்களின் மனைவியர் மற்றும் அடிமைகள் குறித்து ஏற்படுத்தியுள்ளதை அறிவோம். அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

51. (முஹம்மதே!) அவர்களில் நீர் விரும்பியவரை ஒதுக்கி விடலாம். விரும்பியவரை உம்முடன் வைத்துக் கொள்ளலாம். நீர் ஒதுக்கியோரில் யாரை விரும்புகிறீரோ (அவரை மீண்டும் சேர்த்துக் கொள்வதில்) உம் மீது குற்றம் இல்லை. அவர்களின் கண்கள் குளிரவும், அவர்கள் கவலைப்படாமல் இருக்கவும், நீர் அவர்களுக்கு எதைக் கொடுக்கிறீரோ அதில் அவர்கள் அனைவரும் திருப்தியடையவும் இது ஏற்றது. உங்கள் உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ் அறிவான். அல்லாஹ் அறிந்தவனாகவும், சகிப்புத்தன்மை உடையவனாகவும் இருக்கிறான்.

52. அடிமைப் பெண்கள் தவிர107 வேறு பெண்கள் இதன் பிறகு உமக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவர்களின் அழகு உம்மைக் கவர்ந்தபோதும் சரியே. (அவர்களை விவாகரத்துச் செய்து விட்டு) அவர்களுக்குப் பகரமாக வேறு மனைவியரை மாற்றுவதும் கூடாது. அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் கண்காணிப்பவனாக இருக்கிறான்.

53. நம்பிக்கை கொண்டோரே! நபியின் வீடுகளில் அனுமதிக்கப்பட்டால் தவிர உண்பதற்கு நுழையாதீர்கள்! அவரது பாத்திரத்தைப் பார்த்துக் கொண்டிருக்காதீர்கள்! மாறாக அழைக்கப்பட்டால் செல்லுங்கள்! உணவு உட்கொண்டதும் சென்று விடுங்கள்! பேச்சில் லயித்து விடாதீர்கள்! இது நபிக்குத் தொந்தரவாக இருக்கும். உங்களிடம் (கூற) அவர் வெட்கப்படுவார். உண்மை(யைக் கூறும்) விஷயத்தில் அல்லாஹ் வெட்கப்பட மாட்டான். (நபியின் மனைவியரான) அவர்களிடம் எதையேனும் நீங்கள் கேட்டால் திரைக்கப்பால் இருந்தே கேளுங்கள்!500 இதுவே உங்கள் உள்ளங்களுக்கும், அவர்களின் உள்ளங்களுக்கும் தூய்மையானது. அல்லாஹ்வின் தூதரை நீங்கள் தொந்தரவு செய்யக் கூடாது. அவருக்குப் பின் ஒருபோதும் அவரது மனைவியரை நீங்கள் மணக்கவும் கூடாது. இது அல்லாஹ்விடம் மகத்தானதாக இருக்கிறது.322

54. எதையேனும் நீங்கள் வெளிப்படுத்தினாலோ, மறைத்துக் கொண்டாலோ அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிபவனாக இருக்கிறான்.

55. அவர்களின் தந்தையர், அவர்களின் புதல்வர்கள், அவர்களின் சகோதரர்கள், அவர்களது சகோதரர்களின் புதல்வர்கள், அவர்களது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், அவர்களின் அடிமைகள்107 விஷயத்தில் அவர்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் பார்ப்பவனாக488 இருக்கிறான்.

56. அல்லாஹ் இந்த நபிக்கு அருள் புரிகிறான். வானவர்கள் அவருக்காக அவனது அருளை வேண்டுகின்றனர். நம்பிக்கை கொண்டோரே! நீங்களும் அவருக்காக (இறை) அருளை வேண்டுங்கள்! ஸலாமும்159 கூறுங்கள்!324

57. அல்லாஹ்வையும், அவனது தூதரையும் தொந்தரவு செய்வோரை இவ்வுலகிலும், மறுமையிலும் அல்லாஹ் சபிக்கிறான்.6 அவர்களுக்கு இழிவு தரும் வேதனையையும் தயாரித்துள்ளான்.

58. நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் அவர்கள் செய்யாததைக் கூறி துன்புறுத்துவோர் அவதூறையும், தெளிவான பாவத்தையும் சுமந்து விட்டனர்.

59. நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தங்கள் மீது தொங்க விடுமாறு கூறுவீராக!472 அவர்கள் அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது.''300 அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

60. நயவஞ்சகர்களும், உள்ளங்களில் நோய் உள்ளோரும், மதீனாவில் பொய்களைப் பரப்புவோரும் விலகிக் கொள்ளாவிட்டால் (முஹம்மதே!) உம்மை அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்த வைப்போம். பின்னர் இங்கே குறைவாகவே உமக்கருகில் குடியிருப்பார்கள்.185

61. அவர்கள் சபிக்கப்பட்டு இருப்பார்கள். அவர்கள் எங்கு காணப்பட்டாலும் பிடிக்கப்பட்டு கொன்றொழிக்கப்படுவார்கள்.

62. முன் சென்றோர் விஷயத்தில் இதுவே அல்லாஹ்வின் நடைமுறையாக இருந்தது. அல்லாஹ்வின் நடைமுறையில் எந்த மாற்றத்தையும் நீர் காண மாட்டீர்.

63. (முஹம்மதே!) யுகமுடிவு நேரம்1 பற்றி மக்கள் உம்மிடம் கேட்கின்றனர். "அது பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது'' எனக் கூறுவீராக! யுகமுடிவு நேரம்1 சமீபத்தில் இருக்கக் கூடும் என்பது உமக்கு எப்படித் தெரியும்?

64. (ஏகஇறைவனை) மறுப்போரை அல்லாஹ் சபித்து விட்டான்.6 அவர்களுக்கு நரகத்தையும் தயாரித்துள்ளான்.

65. அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். எந்தப் பொறுப்பாளனையோ, உதவியாளனையோ காண மாட்டார்கள்.

66. அவர்களின் முகங்கள் நரகில் புரட்டப்படும் நாளில்6 "நாங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? இத்தூதருக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா?'' எனக் கூறுவார்கள்.

67. "எங்கள் இறைவா! எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியார்களுக்கும் நாங்கள் கட்டுப்பட்டோம். அவர்கள் எங்களை வழிகெடுத்து விட்டனர்'' எனவும் கூறுவார்கள்.

68. "எங்கள் இறைவா! அவர்களுக்கு இருமடங்கு வேதனையை அளிப்பாயாக! அவர்களை மிகப் பெரிய அளவுக்குச் சபிப்பாயாக!'' (எனவும் கூறுவார்கள்.)

69. நம்பிக்கை கொண்டோரே! மூஸாவுக்குத் தொந்தரவு கொடுத்தோர் போல் ஆகி விடாதீர்கள்! அவர்கள் கூறியதிலிருந்து அவரை அல்லாஹ் நீக்கினான். அல்லாஹ்விடம் அவர் தகுதியுடையவராக இருந்தார்.394

70. நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! நேர்மையான சொல்லையே கூறுங்கள்!

71. அவன் உங்களுக்காக உங்கள் செயல்களைச் சீராக்குவான். உங்களுக்காக உங்களின் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுபவர் மகத்தான வெற்றி பெற்று விட்டார்.

72. வானங்களுக்கும்,507 பூமிக்கும் மலைகளுக்கும் அமானிதத்தை446 நாம் முன்வைத்தோம். அதைச் சுமக்க அஞ்சி அவை மறுத்து விட்டன. மனிதன் அதைச் சுமந்து கொண்டான். அவன் அநீதி இழைப்பவனாகவும், அறியாதவனாகவும் இருக்கிறான்.

73. நயவஞ்சகர்களான ஆண்களையும், பெண்களையும், இணை கற்பிக்கும் ஆண்களையும், பெண்களையும் அல்லாஹ் தண்டிப்பதற்காகவும், நம்பிக்கை கொண்ட ஆண்களையும் பெண்களையும் அல்லாஹ் மன்னிப்பதற்காகவும் (இவ்வாறு செய்தான்) அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

To read this Chapter in English click here.

(14வது பதிப்பின்படி திருத்தி அமைக்கப்பட்டது)

July 8, 2009, 10:30 PM

அத்தியாயம் : 34

அத்தியாயம் : 34
ஸபா - ஓர் ஊர்

மொத்த வசனங்கள் : 54
ஸபா எனும் ஊரைப் பற்றியும், அவ்வூரில் செழிப்பான வசதிகள் செய்து கொடுத்தது பற்றியும், அவ்வூரார் நன்றி மறந்தபோது செழிப்பை நீக்கியது பற்றியும் 15, 16, 17 ஆகிய வசனங்களில் கூறப்படுவதால் இந்த அத்தியாயத்திற்கு இவ்வாறு பெயர் சூட்டப்பட்டது.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்... .

1. அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். வானங்களில்507 உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. மறுமையிலும்1 புகழ் அவனுக்கே. அவன் ஞானமிக்கவன்; நன்கறிந்தவன்.

2. பூமியில் நுழைவதையும், அதிலிருந்து வெளியேறுவதையும், வானிலிருந்து இறங்குவதையும், அதை நோக்கி மேலே செல்வதையும் அவன் அறிகிறான். அவன் நிகரற்ற அன்புடையோன்; மன்னிப்பவன்.

3. "யுகமுடிவு நேரம்1 எங்களிடம் வராது'' என்று (ஏகஇறைவனை) மறுப்போர் கூறுகின்றனர். "அவ்வாறல்ல! என் இறைவன் மீது ஆணையாக! அது உங்களிடம் வரும். அவன் மறைவானதை அறிபவன். வானங்களிலோ,507 பூமியிலோ அணுவளவோ அதை விடச் சிறியதோ, அதை விடப் பெரியதோ அவனுக்குத் தெரியாமல் போகாது. தெளிவான பதிவேட்டில்157 அவை இல்லாமல் இல்லை என்று கூறுவீராக!

4. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு அவன் பரிசளிப்பதற்காக (இவ்வாறு பதிவு செய்யப்படுகிறது). அவர்களுக்கு மன்னிப்பும், மதிப்புமிக்க உணவும் உள்ளன.

5. நமது வசனங்களில் நம்மை வெல்ல முயற்சிப்போருக்கு துன்புறுத்தும் வேதனையே தண்டனையாக உள்ளது.

6. (முஹம்மதே!) "உமது இறைவனிடமிருந்து உமக்கு அருளப்பட்டதே உண்மை'' என்று கல்வி வழங்கப்பட்டோர் கருதுகின்றனர். புகழுக்குரிய மிகைத்தவனின் வழியை அது காட்டுகிறது.

7. "நீங்கள் முழுமையாக உருக்குலைந்த பின் புதிய படைப்பைப் பெறுவீர்கள் எனக் கூறும் ஒரு மனிதரைப் பற்றி நாம் உங்களுக்குக் கூறட்டுமா?'' என்று (ஏகஇறைவனை) மறுப்போர் கேட்கின்றனர்.

8. இவர் அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டினாரா? அல்லது இவருக்குப் பைத்தியமா?468 அவ்வாறில்லை! மறுமையை1 நம்பாதோர் வேதனையிலும், தூரமான வழிகேட்டிலும் உள்ளனர்.

9. வானத்திலும்,507 பூமியிலும் தங்களுக்கு முன்னே இருப்பதையும், தங்களுக்குப் பின்னே இருப்பதையும் அவர்கள் பார்க்கவில்லையா? நாம் நாடினால் அவர்களைப் பூமியில் புதையச் செய்திருப்போம். அல்லது அவர்கள் மீது வானத்தின்507 துண்டுகளை விழச் செய்திருப்போம். திருந்துகிற ஒவ்வொரு அடியானுக்கும் இதில் தக்க சான்று உள்ளது.

10, 11. தாவூதுக்கு நம் அருளை வழங்கினோம். "மலைகளே! பறவைகளே! அவருடன் சேர்ந்து துதியுங்கள்!'' (எனக் கூறினோம்.) "போர்க் கவசங்களைச் செய்வீராக! அவற்றின் வளையங்களை ஒழுங்குபடுத்துவீராக'' என (கூறி) அவருக்கு இரும்பை மென்மையாக்கினோம். "நல்லறத்தைச் செய்யுங்கள்! நீங்கள் செய்பவற்றை நான் பார்ப்பவன்''488 எனவும் கூறினோம்.26

12. ஸுலைமானுக்குக் காற்றை வசப்படுத்தினோம். அதன் புறப்பாடு ஒரு மாதமாகும். அதன் திரும்புதல் ஒரு மாதமாகும்.325 அவருக்காக செம்பு ஊற்றை ஓடச் செய்தோம். தனது இறைவனின் விருப்பப்படி அவரிடம் பணியாற்றும் ஜின்களும் இருந்தனர். அவர்களில் நமது கட்டளையை யாரேனும் புறக்கணித்தால் நரகின் வேதனையை அவருக்குச் சுவைக்கச் செய்வோம்.

13. அவர் விரும்பிய மாளிகைகளையும், சிற்பங்களையும்,326 தடாகங்களைப் போன்ற கொப்பரைகளையும், நகர்த்த முடியாத பாத்திரங்களையும், அவருக்காக அவை செய்தன. "தாவூதின் குடும்பத்தாரே! நன்றியுடன் செயல்படுங்கள்! எனது அடியார்களில் நன்றியுடையோர் குறைவாகவே உள்ளனர்'' (என்று கூறினோம்.)

14. அவருக்கு நாம் மரணத்தை ஏற்படுத்தியபோது பூமியில் ஊர்ந்து செல்லும் உயிரினமே (கரையான்) அவரது மரணத்தைக் காட்டிக் கொடுத்தது. அது அவரது கைத்தடியைச் சாப்பிட்டது. அவர் கீழே விழுந்ததும் "நமக்கு மறைவானவை தெரிந்திருந்தால் இழிவு தரும் இத்துன்பத்தில் இருந்திருக்க மாட்டோமே'' என்பதை ஜின்கள் விளங்கிக் கொண்டன.327

15. ஸபாவாசிகளுக்கு அவர்களின் குடியிருப்புகளில் தக்க சான்று உள்ளது. அதன் வலப்புறமும், இடப்புறமும் இரண்டு சோலைகள் (இருந்தன). உங்கள் இறைவனின் உணவை உண்ணுங்கள்! அவனுக்கு நன்றி செலுத்துங்கள்! (எனக் கூறப்பட்டது) ஊரும் நல்ல ஊர். இறைவனும் மன்னிப்பவன்.

16. ஆனால் அவர்கள் புறக்கணித்தனர். எனவே பெருவெள்ளத்தை அவர்களிடம் அனுப்பினோம். புளிப்பும், கசப்பும் உடைய புற்களும், சிறிதளவு இலந்தை மரங்களும் கொண்ட வேறு இரு சோலைகளாக அவர்களது இரண்டு சோலைகளையும் மாற்றினோம்.

17. அவர்கள் (நம்மை) மறுத்ததால் இவ்வாறு தண்டித்தோம். (நம்மை) மறுப்போரைத் தவிர மற்றவர்களை நாம் தண்டிப்போமா?

18. நாம் பாக்கியம் செய்த ஊர்களுக்கும், அவர்களுக்கும் இடையே வெளிப்படையாகத் தெரியும் ஊர்களை ஏற்படுத்தினோம். அவற்றில் பயணத்தையும் ஏற்படுத்தினோம். இரவிலும், பகலிலும் அச்சமற்று பயணம் செய்யுங்கள்! (எனக் கூறினோம்)

19. "எங்கள் இறைவா! எங்களுக்கு தொலைதூர பயணங்களை ஏற்படுத்துவாயாக!'' என்று கூறி தமக்குத் தாமே தீங்கிழைத்தனர். அவர்களைப் பழங்கதைகளாக்கினோம். அவர்களை உருக்குலைத்தோம். பொறுமையும், நன்றியுணர்வும் உள்ள ஒவ்வொருவருக்கும் இதில் பல சான்றுகள் உள்ளன.

20. அவர்களைப் பொருத்த வரை இப்லீஸ் தனது எண்ணத்தில் வெற்றியடைந்தான். நம்பிக்கை கொண்டோரில் ஒரு கூட்டத்தினரைத் தவிர (மற்றவர்கள்) அவனைப் பின்பற்றினார்கள்.

21. அவனுக்கு அவர்கள் மீது எந்த அதிகாரமும் இல்லை. மறுமையை நம்புபவரையும், சந்தேகப்படுபவரையும் வேறுபடுத்திக் காட்டவே (இது நடந்தது). உமது இறைவன் ஒவ்வொரு பொருளையும் பாதுகாப்பவன்.

22. "அல்லாஹ்வையன்றி நீங்கள் கற்பனை செய்தவற்றை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் வானங்களிலும்,507 பூமியிலும் அணுவளவுக்கும் அதிகாரம் பெற மாட்டார்கள். அவ்விரண்டிலும் அவர்களுக்கு எந்தப் பங்கும் இல்லை. அவர்களில் அவனுக்கு எந்த உதவியாளரும் இல்லை'' என்று கூறுவீராக!

23. யாருக்காக அவன் அனுமதியளித்தானோ அவருக்கே தவிர அவனிடம் பரிந்துரை17 பயன் தராது. முடிவில் அவர்களின் உள்ளங்களிலிருந்து நடுக்கம் நீங்கியதும் "உங்கள் இறைவன் என்ன கூறினான்?'' எனக் கேட்டுக் கொள்வார்கள். "உண்மையையே (கூறினான்.) அவன் உயர்ந்தவன்; பெரியவன்'' என்று கூறுவார்கள்.

24. "வானங்களிலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்?''463 என்று (முஹம்மதே!) கேட்டு, 'அல்லாஹ்' என்று கூறுவீராக! "நாமோ அல்லது நீங்களோ, நேர்வழியிலோ பகிரங்கமான வழிகேட்டிலோ இருக்கிறோம்'' 

25. "நாங்கள் செய்த குற்றங்களைப் பற்றி நீங்கள் விசாரிக்கப்பட மாட்டீர்கள். நீங்கள் செய்தவை பற்றி நாங்கள் விசாரிக்கப்பட மாட்டோம்'' என்றும் கூறுவீராக!

26. நம்மை நமது இறைவன் ஒன்று திரட்டுவான். பின்னர் நமக்கிடையே நேர்மையான தீர்ப்பு வழங்குவான். அவன் தீர்ப்பளிப்பவன்; அறிந்தவன் என்றும் கூறுவீராக!

27. நீங்கள் அவனுக்கு இணைகற்பித்தோரை எனக்குக் காட்டுங்கள் என்றும் கூறுவீராக! அவ்வாறில்லை! மாறாக அவனே மிகைத்தவனும் ஞானமிக்கோனுமாகிய அல்லாஹ்.

28. (முஹம்மதே!) நற்செய்தி கூறுபவராகவும், எச்சரிக்கை செய்பவராகவும் மனிதர்கள் அனைவருக்காகவுமே281 உம்மை அனுப்பியுள்ளோம்.187 எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.

29. "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இந்த எச்சரிக்கை எப்போது (நிறைவேறும்?)'' என்று அவர்கள் கேட்கின்றனர்.

30. "உங்களுக்கென வாக்களிக்கப்பட்ட நாள்1 ஒன்று உள்ளது. அதை விட்டு சிறிது நேரம் பிந்தவும் மாட்டீர்கள். முந்தவும் மாட்டீர்கள்'' என்று கூறுவீராக!

31. "இந்தக் குர்ஆனையும், இதற்கு முன் சென்றதையும்4 நம்பவே மாட்டோம்'' என்று (ஏகஇறைவனை) மறுப்போர் கூறுகின்றனர். அநீதி இழைத்தோர் தமது இறைவனிடம் நிறுத்தப்பட்டிருக்கும்போது நீர் பார்ப்பீராயின் அவர்களில் ஒருவர் மற்றவர் மீது குற்றம் சுமத்துவார்கள். "நீங்கள் இல்லாதிருந்தால் நாங்களும் நம்பிக்கை கொண்டிருப்போம்'' என்று பலவீனமாக இருந்தோர் பெருமையடித்துக் கொண்டிருந்தோரிடம் கூறுவார்கள்.

32. "நேர்வழி உங்களிடம் வந்தபோது நாங்கள் தான் உங்களைத் தடுத்தோமா? இல்லை. மாறாக நீங்களே குற்றவாளிகளாக இருந்தீர்கள்'' என்று பெருமையடித்தோர் பலவீனர்களிடம் கூறுவார்கள்.

33. "அல்லாஹ்வை மறுக்குமாறும், அவனுக்கு இணையானவர்களைக் கற்பனை செய்யுமாறும் எங்களுக்கு நீங்கள் கட்டளையிட்டபோது இரவிலும், பகலிலும் செய்த சூழ்ச்சி தான் (எங்களை வழிகெடுத்து விட்டது)'' என்று பெருமையடித்தோரை நோக்கி பலவீனர்கள் கூறுவார்கள். வேதனையை அவர்கள் காணும்போது கவலையை மனதுக்குள் மறைத்துக் கொள்வார்கள். (நம்மை) மறுப்போரின் கழுத்துக்களில் விலங்கிடுவோம். அவர்கள் செய்து கொண்டிருந்ததற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) அவர்கள் தண்டிக்கப்படுவார்களா?

34. எந்த ஊருக்கு எச்சரிக்கை செய்பவரை நாம் அனுப்பினாலும் "எதைக் கொடுத்து அனுப்பப்பட்டுள்ளீர்களோ அதை நாங்கள் மறுப்பவர்கள்'' என்று அங்கே சொகுசாக வாழ்ந்தோர் கூறாமல் இருந்ததில்லை.

35. "நாங்கள் அதிகமான பொருட்செல்வமும், மக்கட்செல்வமும் பெற்றவர்கள். நாங்கள் தண்டிக்கப்படுவோர் அல்லர்'' என்றும் அவர்கள் கூறினர்.

36. "என் இறைவன், தான் நாடியோருக்குச் செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான். எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்'' என்று கூறுவீராக!

37. உங்களின் மக்கட்செல்வமும், பொருட்செல்வமும் நம்மிடத்தில் நெருக்கத்தை ஏற்படுத்துபவை அல்ல. நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்தவரைத் தவிர. அவர்களுக்கு அவர்கள் செய்தவற்றின் பன்மடங்கு கூலி இருக்கிறது. அவர்கள் உயர்ந்த மாளிகைகளில் கவலையற்றிருப்பார்கள்.

38. நமது வசனங்களில் (நம்மை) வெல்ல முயற்சிப்போர் வேதனையின் முன் நிறுத்தப்படுவார்கள்.

39. எனது இறைவன் தனது அடியார்களில் தான் நாடியோருக்குச் செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். தான் நாடியோருக்கு அதைக் குறைத்தும் கொடுக்கிறான். நீங்கள் எப்பொருளை (நல்வழியில்) செலவிட்டாலும் அவன் அதற்கான பிரதிபலனை அளிப்பான். அவன் வழங்குவோரில் சிறந்தவன் என்று கூறுவீராக!

40. (அது) அவர்கள் அனைவரையும் அவன் ஒன்று திரட்டும் நாள்!1 பின்னர் "இவர்கள் உங்களைத்தான் வணங்குவோராக இருந்தார்களா?'' என்று வானவர்களிடம் கேட்பான்.

41. "நீ தூயவன்.10 நீயே எங்கள் பாதுகாவலன். இவர்களுடன் (எங்களுக்குச் சம்பந்தம்) இல்லை. மாறாக இவர்கள் ஜின்களையே வணங்கி வந்தனர். இவர்களில் அதிகமானோர் அவர்களையே நம்பினர்'' என்று கூறுவார்கள்.

42. எனவே இந்நாளில் உங்களில் ஒருவர் மற்றவருக்கு எந்த நன்மையும், தீங்கும் செய்ய அதிகாரம் பெற மாட்டீர்கள். "நீங்கள் பொய்யெனக் கருதிய நரகமெனும் வேதனையைச் சுவையுங்கள்!'' என்று அநீதி இழைத்தோருக்குக் கூறுவோம்.

43. நமது தெளிவான வசனங்கள் அவர்களுக்குக் கூறப்பட்டால் "இவர் உங்கள் முன்னோர்கள் வணங்கி வந்ததை விட்டு உங்களைத் தடுக்க நினைக்கும் மனிதராகவே இருக்கிறார்'' எனக் கூறுகின்றனர். "இது இட்டுக்கட்டப்பட்ட அவதூறு தான்'' எனவும் கூறுகின்றனர். தங்களிடம் உண்மை வந்தபோது "இது தெளிவான சூனியம் தவிர வேறு இல்லை''285 என்று (ஏகஇறைவனை) மறுப்போர் கூறுகின்றனர்.357

44. அவர்கள் வாசிக்கும் எந்த வேதங்களையும் அவர்களுக்கு நாம் கொடுக்கவில்லை. (முஹம்மதே!) உமக்கு முன் அவர்களிடம் எச்சரிக்கை செய்யும் எவரையும் நாம் அனுப்பியதில்லை.

45. இவர்களுக்கு முன் சென்றோரும் பொய்யெனக் கருதினர். அவர்களுக்கு வழங்கியதில் பத்தில் ஒரு பங்கை (கூட) இவர்கள் அடையவில்லை. அவர்கள் எனது தூதர்களைப் பொய்யரெனக் கருதினர். எனது பதிலடி எவ்வாறு இருந்தது?

46. "நீங்கள் இருவர் இருவராகவோ, தனித் தனியாகவோ அல்லாஹ்வுக்காக சற்று நேரம் ஒதுக்கி பின்னர் "உங்கள் தோழருக்கு (எனக்கு) பைத்தியம் எதுவுமில்லை;468 கடுமையான வேதனைக்கு முன் அவர் உங்களுக்கு எச்சரிக்கை செய்பவரே தவிர வேறில்லை என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும் என்ற ஒரே விஷயத்தையே உங்களுக்குப் போதிக்கிறேன்'' எனக் கூறுவீராக!

47. "உங்களிடம் நான் எந்தக் கூலியும் கேட்டதில்லை. அது உங்களுக்கே உரியது. எனது கூலி அல்லாஹ்விடம் தவிர வேறு (எவரிடமும்) இல்லை. அவன் ஒவ்வொரு பொருளையும் பார்ப்பவன்''488 என்று கூறுவீராக!

48. "எனது இறைவன் உண்மையையே போடுகிறான். (அவன்) மறைவானவற்றை நன்கு அறிந்தவன்'' என்று கூறுவீராக!

49. "உண்மை வந்து விட்டது. பொய்(யான கடவுள்கள் எந்த ஒன்றையும்) படைக்கவில்லை. மறுபடி அதைப் படைக்கப் போவதுமில்லை'' என்று கூறுவீராக!

50. "நான் வழிகெட்டால் எனக்கு எதிராகவே வழிகெடுகிறேன். நான் நேர்வழி பெற்றால் அது எனது இறைவன் எனக்கு அறிவித்த தூதுச் செய்தியின் காரணமாகத்தான்.81 அவன் செவியேற்பவன்; அருகில் உள்ளவன்''49 என்று (முஹம்மதே!) கூறுவீராக!

51. அவர்கள் திடுக்குற்றிருக்கும்போது நீர் காண்பீராயின் அவர்கள் தப்பிச் செல்ல முடியாது. அருகிலிருந்து அவர்கள் பிடிக்கப்படுவார்கள்.

52. "அவனை நம்பினோம்'' என அவர்கள் கூறுவார்கள். தூரமான இடத்திலிருந்து (ஒன்றை) அடைந்து கொள்வது எவ்வாறு இயலும்?

53. இதற்கு முன் அதை அவர்கள் மறுத்தனர். தூரமான இடத்திலிருந்து கொண்டு மறைவானவை பற்றி (சந்தேகங்களை) எறிந்து கொண்டிருந்தனர்.

54. இவர்களைப் போன்றோருக்கு முன்னர் செய்யப்பட்டதைப் போல் இவர்களுக்கும் இவர்கள் விரும்பியவற்றுக்கும் இடையே திரை போடப்பட்டு விட்டது. இவர்கள் கடுமையான சந்தேகத்திலேயே இருந்தனர்.

To read this Chapter in English click here.

(14வது பதிப்பின்படி திருத்தி அமைக்கப்பட்டது)

July 8, 2009, 10:32 PM

அத்தியாயம் : 35

அத்தியாயம் : 35
ஃபாத்திர் - படைப்பவன்

மொத்த வசனங்கள் : 45
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் ஃபாத்திர் என்ற சொல் இடம் பெறுவதால் இந்த அத்தியாயத்துக்கு இவ்வாறு பெயர் சூட்டியுள்ளனர்.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்... .

1. வானங்களையும்,507 பூமியையும் படைத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். (அவன்) வானவர்களை இரண்டிரண்டு, மும்மூன்று, நான்கு நான்கு சிறகுகளைக் கொண்ட தூதர்களாக161 அனுப்புவான். அவன் நாடியதைப் படைப்பில் அதிகமாக்குவான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்.

2. மனிதர்களுக்காக அல்லாஹ் திறந்து விட்ட எந்த அருளையும் தடுப்பவன் எவனும் இல்லை. அவன் தடுத்ததை அதற்குப் பின் அனுப்புபவனும் இல்லை. அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.

3. மனிதர்களே! உங்களுக்கு அல்லாஹ் செய்துள்ள அருளை எண்ணிப் பாருங்கள்! வானத்திலிருந்தும்,507 பூமியிலிருந்தும் உங்களுக்கு அல்லாஹ்வைத் தவிர உணவளிக்கும்463 (வேறு) படைப்பாளன் உண்டா? அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. எவ்வாறு நீங்கள் திசை திருப்பப்படுகிறீர்கள்?

4. (முஹம்மதே!) அவர்கள் உம்மைப் பொய்யரெனக் கருதினால் உமக்கு முன் பல தூதர்கள் பொய்யரெனக் கருதப்பட்டுள்ளனர். காரியங்கள் அல்லாஹ்விடமே கொண்டு செல்லப்படும்.

5. மனிதர்களே! அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது. இவ்வுலக வாழ்வு உங்களை ஏமாற்றி விட வேண்டாம். ஏமாற்றுபவன் (ஷைத்தான்) அல்லாஹ் விஷயத்தில் உங்களை ஏமாற்றி விட வேண்டாம்.

6. ஷைத்தான் உங்களுக்கு எதிரியாவான். அவனை எதிரியாகவே ஆக்கிக் கொள்ளுங்கள்! நரகவாசிகளாக ஆவதற்காகவே அவன் தனது கூட்டத்தாரை அழைக்கிறான்.

7. நிராகரிப்போருக்கு கடுமையான வேதனை உண்டு. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோருக்கு மன்னிப்பும், பெரிய கூலியும் உண்டு.

8. யாருக்கு தனது தீய செயல் அழகாகக் காட்டப்பட்டு, அதை அவனும் அழகானதாகக் கருதினானோ அவனா (சொர்க்கவாசி)? தான் நாடியோரை அல்லாஹ் வழிகேட்டில் விடுகிறான். தான் நாடியோருக்கு நேர்வழி காட்டுகிறான். (முஹம்மதே!) அவர்களுக்காகக் கவலைப்பட்டு உமது உயிர் போய்விட வேண்டாம்.81 அவர்கள் செய்வதை அல்லாஹ் அறிந்தவன்.

9. அல்லாஹ்வே காற்றை அனுப்புகிறான். அது மேகத்தைக் கலைத்து விடுகிறது. இறந்த ஊருக்கு அதைப் பொழிவிக்கிறோம். அதன் மூலம் இறந்த பூமியை உயிர்ப்பிக்கிறோம். மீண்டும் எழுப்புவதும் இவ்வாறே.

10. யாரேனும் கண்ணியத்தை நாடினால் கண்ணியம் யாவும் அல்லாஹ்வுக்கே உரியது. தூய சொற்கள் அவனிடமே மேலேறிச் செல்லும். நல்லறம் அதை உயர்த்தும். தீய காரியங்களில் சூழ்ச்சி செய்வோருக்குக் கடுமையான வேதனை உண்டு. அவர்களின் சூழ்ச்சி தான் அழியும்.

11. அல்லாஹ் உங்களை மண்ணாலும்,368&506 பின்னர் விந்துத் துளியாலும் படைத்தான். பின்னர் உங்களை ஜோடிகளாக அமைத்தான். ஒரு பெண் கருவுறுவதும், ஈன்றெடுப்பதும் அவனுக்குத் தெரியாமல் இருப்பதில்லை. ஒருவனுக்கு வாழ்நாள் வழங்கப்படுவதும், அவனது வாழ்நாள் குறைக்கப்படுவதும் பதிவேட்டில்157 இல்லாமல் இல்லை. இது அல்லாஹ்வுக்கு எளிதானது.

12. இரண்டு கடல்கள் சமமாகாது. இது இனிமையானதும், அடர்த்தி குறைந்ததும், அருந்த ஏற்றதுமாகும். அதுவோ உப்பும், கசப்பும் உடையது. ஒவ்வொன்றிலிருந்தும் பசுமையான மாமிசத்தை உண்ணுகின்றீர்கள்.171 நீங்கள் அணிகின்ற ஆபரணத்தை (அதிலிருந்து) வெளிப்படுத்துகின்றீர்கள். நீங்கள் அவனது அருளைத் தேடவும், நன்றி செலுத்திடவும் அதைக் கிழித்துக் கொண்டு கப்பல்கள் செல்வதைக் காண்கிறீர்.

13. அவன் இரவைப் பகலில் நுழைக்கிறான். பகலை இரவில் நுழைக்கிறான். சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலக்கெடு வரை செல்கின்றன.241 அவனே அல்லாஹ்; உங்கள் இறைவன். அவனுக்கே அதிகாரம் உள்ளது. அவனையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள், அணுவளவும் அதிகாரம் படைத்தவர்களல்லர்.

14. நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற்பார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள். கியாமத் நாளில்1 நீங்கள் இணைகற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்த (இறை)வனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது.

15. மனிதர்களே! நீங்கள் அல்லாஹ்விடம் தேவையுடையவர்கள். அல்லாஹ்வே தேவைகளற்றவன்;485 புகழுக்குரியவன்.

16. அவன் நாடினால் உங்களை அழித்து விட்டு புதிய படைப்பைக் கொண்டு வருவான்.

17. இது அல்லாஹ்வுக்குக் கடினமானது அல்ல.

18. ஒருவர் மற்றவரின் சுமையைச் சுமக்க மாட்டார்.265 கனத்த சுமையுடையவன் அதைச் சுமக்குமாறு யாரையேனும் அழைத்தால் (அழைக்கப்படுபவன்) உறவினராக இருந்தாலும் அதிலிருந்து எதுவும் அவன் மீது சுமத்தப்பட மாட்டாது. தனிமையில் இருக்கும்போது தமது இறைவனை அஞ்சி, தொழுகையை நிலைநாட்டியோரையே நீர் எச்சரிக்கை செய்வீர். பரிசுத்தமாக நடப்பவர் தமக்காகவே பரிசுத்தமாகிக் கொள்கிறார். அல்லாஹ்விடமே திரும்புதல் உள்ளது.

19, 20, 21. குருடனும், பார்வையுள்ளவனும் இருள்களும்,303 ஒளியும் நிழலும், வெப்பமும் சமமாகா.26

22. உயிருடன் உள்ளோரும், இறந்தோரும் சமமாக மாட்டார்கள். தான் நாடியோரை அல்லாஹ் செவியேற்கச் செய்கிறான். மண்ணறைகளில் உள்ளவர்களை நீர் செவியேற்கச் செய்பவராக இல்லை.

23. நீர் எச்சரிக்கை செய்பவர் தவிர வேறில்லை.

24. நற்செய்தி கூறுபவராகவும், எச்சரிக்கை செய்பவராகவும் உண்மையுடன் உம்மை நாம் அனுப்பினோம். எந்த ஒரு சமுதாயமானாலும் எச்சரிக்கை செய்பவர் அவர்களுக்கு வராமல் இருந்ததில்லை.

25. அவர்கள் உம்மைப் பொய்யரெனக் கருதினால் அவர்களுக்கு முன் சென்றோரும் (தூதர்களை) பொய்யரெனக் கருதியுள்ளனர். அவர்களிடம் அவர்களின் தூதர்கள் தெளிவான சான்றுகளையும், ஏடுகளையும், ஒளிவீசும் வேதத்தையும் கொண்டு வந்தனர்.105

26. பின்னர் (என்னை) மறுத்தோரைப் பிடித்தேன். எனது பதிலடி எவ்வாறு இருந்தது?

27. அல்லாஹ்வே வானத்திலிருந்து507 தண்ணீரை இறக்கினான் என்பதை நீர் அறியவில்லையா? அதன் மூலம் மாறுபட்ட நிறங்களைக் கொண்ட கனிகளை வெளியாக்கினோம். மலைகளில் வெண்மையும், சிவப்பும் மாறுபட்ட நிறங்களைக் கொண்டதுமான பாதைகள் உள்ளன. கருப்பு நிறமுடையவைகளும் உள்ளன.

28. இவ்வாறே மனிதர்களிலும், ஊர்வனவற்றிலும், கால்நடைகளிலும் மாறுபட்ட நிறங்களைக் கொண்டவை உள்ளன. அல்லாஹ்வின் அடியார்களில் அவனை அஞ்சுவோர் அறிஞர்களே. அல்லாஹ் மிகைத்தவன்; மன்னிப்பவன்.

29. அல்லாஹ்வின் வேதத்தைப் படித்து தொழுகையை நிலைநாட்டி நாம் அவர்களுக்கு வழங்கியதிலிருந்து இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (நல்வழியில்) செலவிடுவோர் நட்டமில்லாத ஒரு வியாபாரத்தை எதிர்பார்க்கின்றனர்.

30. ஏனெனில் அவர்களின் கூலிகளை அவன் முழுமையாக அளிப்பான். தனது அருட்கொடைகளில் அவர்களுக்கு இன்னும் அதிகமாகவும் அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நன்றி செலுத்துபவன்.6

31. (முஹம்மதே!) வேதத்திலிருந்து நாம் உமக்கு அறிவித்திருப்பதே உண்மையானது. அது தனக்கு முன் சென்றதை4 உண்மைப்படுத்துகிறது. அல்லாஹ் தனது அடியார்களை நன்கறிந்தவன்; பார்ப்பவன்.488

32. பின்னர் நமது அடியார்களில் நாம் தேர்வு செய்து கொண்டோரை வேதத்துக்கு வாரிசுகளாக்கினோம். அவர்களில் தமக்குத் தாமே தீங்கிழைத்தோரும் உள்ளனர். அவர்களில் நடுநிலையானவர்களும் உள்ளனர். அவர்களில் நன்மையை நோக்கி அல்லாஹ்வின் விருப்பப்படி விரைந்து செல்வோரும் உள்ளனர். இதுவே பேரருள்.

33. நிலையான சொர்க்கச் சோலைகளில் அவர்கள் நுழைவார்கள். அங்கே தங்கக் காப்புகளும், முத்துக்களும் அணிவிக்கப்படுவார்கள். அங்கே அவர்களின் ஆடை பட்டாகும்.

34. "எங்களை விட்டும் கவலையைப் போக்கிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். எங்கள் இறைவன் மன்னிப்பவன்; நன்றி செலுத்துபவன்''6 என்றும் கூறுவார்கள்.

35. "அவன் தனது அருளால் எங்களை நிலையான உலகில் தங்க வைத்தான். இங்கே எங்களுக்குச் சிரமமும் ஏற்படாது. களைப்பும் ஏற்படாது'' (என்றும் கூறுவார்கள்.)

36. (நம்மை) மறுத்தோருக்கு நரக நெருப்பு உள்ளது. அவர்கள் மரணிக்குமாறு முடிவு செய்யப்படாது. அதன் வேதனை அவர்களுக்கு இலேசாக்கப்படவும் மாட்டாது. (நம்மை) மறுக்கும் ஒவ்வொருவருக்கும் இவ்வாறே வேதனை அளிப்போம்.

37. "எங்கள் இறைவா! எங்களை வெளியே அனுப்பு! நாங்கள் செய்து வந்தது போலன்றி (இனிமேல்) நல்லறங்களைச் செய்கிறோம்'' என்று அங்கே அவர்கள் கதறுவார்கள். "படிப்பினை பெறும் அளவு உங்களுக்கு நாம் வாழ்நாளை அளித்திருக்கவில்லையா? எச்சரிக்கை செய்பவர் உங்களிடம் வரவில்லையா? எனவே அனுபவியுங்கள்! அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளரும் இல்லை'' (என்று கூறப்படும்)

38. வானங்களிலும்507 பூமியிலும் உள்ள மறைவானவற்றை அல்லாஹ் அறிபவன். உள்ளங்களில் உள்ளதையும் அவன் அறிந்தவன்.

39. அவனே உங்களைப் பூமியில் வழித்தோன்றல்களாக46 ஆக்கினான். யாரேனும் (ஏகஇறைவனை) மறுத்தால் அவரது மறுப்பு அவருக்கே எதிரானது. மறுப்போருக்கு அவர்களின் மறுப்பு அவர்களின் இறைவனிடம் கோபத்தைத் தவிர அதிகமாக்காது. மறுப்போருக்கு அவர்களின் மறுப்பு, நட்டத்தைத் தவிர அதிகமாக்காது.

40. "அல்லாஹ்வையன்றி நீங்கள் அழைக்கின்ற, உங்கள் தெய்வங்கள் பூமியில் எதனைப் படைத்தன?'' என்று எனக்குக் காட்டுங்கள்! அல்லது வானங்களிலாவது507 அவர்களுக்குப் பங்கு உண்டா? என்பதற்குப் பதில் சொல்லுங்கள்!" என்று கேட்பீராக! அல்லது அவர்களுக்கு நாம் ஒரு வேதத்தை அளித்து அதனால் (கிடைத்த) தெளிவில் அவர்கள் இருக்கிறார்களா? இல்லை. இந்த அநியாயக்காரர்களில் ஒருவருக்கொருவர் மோசடியையே வாக்களிக்கின்றனர்.

41. வானங்களும்,507 பூமியும் இடம் பெயராதபடி அவனே தடுத்து வைத்துள்ளான். அவ்விரண்டும் இடம் பெயருமானால் அவனன்றி எவரும் அவற்றைத் தடுத்து நிறுத்த முடியாது.328 அவன் சகிப்புத் தன்மையுடையவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கிறான்.

42, 43. தங்களிடம் எச்சரிக்கை செய்பவர் வந்தால் எந்த ஒரு சமுதாயத்தையும் விட தாங்கள் நேர்வழி பெற்றோராக ஆவோம் என அல்லாஹ்வின் மீது உறுதியாக சத்தியம் செய்தார்கள். அவர்களிடம் எச்சரிக்கை செய்பவர் வந்தபோது அது அவர்களுக்கு வெறுப்பையும், பூமியில் பெருமையடிப்பதையும், கெட்ட சூழ்ச்சியையும் தவிர (வேறு எதையும்) அதிகமாக்கவில்லை. கெட்ட சூழ்ச்சி அதைச் செய்தோரையே சூழ்ந்து கொள்ளும். முன்னோர்களின் கதியைத் தவிர (வேறு எதையும்) அவர்கள் எதிர்பார்க்கிறார்களா? அல்லாஹ்வின் நடைமுறையில் எந்த மாற்றத்தையும் காணமாட்டீர்! அல்லாஹ்வின் நடைமுறையில் எந்தத் திருப்பத்தையும் காணமாட்டீர்.26

44. அவர்கள் பூமியில் பயணம் செய்து தமக்கு முன் சென்றோரின் முடிவு எவ்வாறு அமைந்தது என்று பார்க்கவில்லையா? அவர்கள் இவர்களை விட கடும் வலிமை பெற்று இருந்தனர். வானங்களிலும்,507 பூமியிலும் அல்லாஹ்வை எதுவும் வெற்றி கொள்ள முடியாது. அவன் அறிந்தவனாகவும், ஆற்றலுடையவனாகவும் இருக்கிறான்.

45. மனிதர்களை அவர்கள் செய்தவற்றுக்காக அல்லாஹ் பிடிப்பதாக இருந்தால் பூமியின் மேல் எந்த உயிரினத்தையும் விட்டு வைத்திருக்க மாட்டான். மாறாகக் குறிப்பிட்ட தவணை வரை அவர்களுக்கு அவகாசம் அளித்துள்ளான். அவர்களின் அவகாசம் வரும்போது அல்லாஹ் தனது அடியார்களைப் பார்ப்பவனாக488 இருக்கிறான்.

To read this Chapter in English click here.

(14வது பதிப்பின்படி திருத்தி அமைக்கப்பட்டது)

July 8, 2009, 10:35 PM

அத்தியாயம் : 36

அத்தியாயம் : 36
யாஸீன் - அரபு மொழியின் 28வது மற்றும் 12வது எழுத்துக்கள்.

மொத்த வசனங்கள் : 83
இந்த அத்தியாயத்தின் துவக்கம் யா, ஸீன் என்ற இரண்டு எழுத்துக்களைக் கொண்டு துவங்குவதால் இவ்வாறு பெயர் சூட்டப்பட்டது.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்... .

1. யா, ஸீன்.2

2. ஞானமிக்க குர்ஆன் மீது ஆணையாக!

3. (முஹம்மதே!) நீர் தூதர்களில் ஒருவர்.

4. (நீர்) நேரான பாதையில் இருக்கிறீர்.

5, 6. கவனமற்றும், முன்னோர் எச்சரிக்கப்படாமலும் இருக்கின்ற சமுதாயத்தை நீர் எச்சரிக்கை செய்வதற்காக மிகைத்தவனாகிய நிகரற்ற அன்புடையோனால் இது அருளப்பட்டது.26

7. அவர்களில் அதிகமானோருக்கு எதிராகக் கட்டளை உறுதியாகி விட்டது. எனவே அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.

8. அவர்களின் கழுத்துக்களில் விலங்குகளை நாம் போட்டுள்ளோம். அவை (அவர்களின்) கீழ்த்தாடை வரை உள்ளன. எனவே அவர்களின் தலைகள் மேல் நோக்கியுள்ளன.

9. அவர்களுக்கு முன்னே ஒரு தடுப்பை ஏற்படுத்தியுள்ளோம். அவர்களுக்குப் பின்னேயும் ஒரு தடுப்பை ஏற்படுத்தியுள்ளோம். அவர்களை மூடி விட்டோம். எனவே அவர்கள் பார்க்க முடியாது.

10. அவர்களை நீர் எச்சரிப்பதும், எச்சரிக்காதிருப்பதும் அவர்களைப் பொறுத்த வரை சமமானதே. அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.

11. இந்த அறிவுரையைப் பின்பற்றி அளவற்ற அருளாளனைத் தனிமையில் அஞ்சுவோரைத்தான் நீர் எச்சரிப்பீர். அவருக்கு மன்னிப்பு பற்றியும் மரியாதைக்குரிய கூலி பற்றியும் நற்செய்தி கூறுவீராக!

12. இறந்தோரை நாமே உயிர்ப்பிப்போம். அவர்கள் செய்தவற்றையும், அவர்களது அடிச்சுவடுகளையும் பதிவு செய்கிறோம். ஒவ்வொரு பொருளையும் தெளிவான ஏட்டில்157 வரையறுத்து உள்ளோம்.

13. ஓர் ஊராரிடம் தூதர்கள் வந்தபோது நடந்ததை அவர்களுக்கு முன்னுதாரணமாகக் கூறுவீராக!

14. அவர்களிடம் இருவரைத் தூதர்களாக நாம் அனுப்பியபோது அவ்விருவரையும் பொய்யரெனக் கருதினர். எனவே மூன்றாமவரைக் கொண்டு வலுப்படுத்தினோம்.329 நாங்கள் உங்களுக்கு அனுப்பப்பட்ட தூதர்கள் என்று அவர்கள் கூறினர்.

15. "நீங்கள் எங்களைப் போன்ற மனிதர்கள் தவிர வேறில்லை. அளவற்ற அருளாளன் எதையும் அருளவில்லை. நீங்கள் பொய் சொல்வோராகவே இருக்கிறீர்கள்'' என்று (அவ்வூரார்) கூறினர்

16, 17. "நாங்கள் உங்களுக்கு அனுப்பப்பட்ட தூதர்களே என்பதை எங்கள் இறைவன் அறிவான்; தெளிவாக எடுத்துச் சொல்வது தவிர எங்கள் மீது (வேறு எதுவும்) இல்லை'' என்று (தூதர்கள்) கூறினர்.

18. "நாங்கள் உங்களைக் கெட்ட சகுனமாகக் கருதுகிறோம். நீங்கள் விலகிக் கொள்ளவில்லையானால் உங்களைக் கல்லால் எறிந்து கொலை செய்வோம். எங்களிடமிருந்து துன்புறுத்தும் வேதனை உங்களுக்கு ஏற்படும்'' என்று (அவ்வூரார்) கூறினர்.

19. "உங்கள் கெட்ட சகுனம் உங்களிடமே உள்ளது. நீங்கள் அறிவுரை கூறப்பட்டாலுமா (எங்களை மிரட்டுவீர்கள்)? இல்லை! நீங்கள் வரம்பு மீறிய கூட்டமாக இருக்கிறீர்கள்'' என்று (தூதர்கள்) கூறினர்.

20. அந்நகரத்தின் கடைக்கோடியிலிருந்து ஒருவர் விரைந்து வந்து, "என் சமுதாயமே! தூதர்களைப் பின்பற்றுங்கள்!'' என்றார்.

21. உங்களிடம் கூலியைக் கேட்காத நேர்வழி பெற்றோரைப் பின்பற்றுங்கள்.

22. என்னைப் படைத்தவனை நான் எப்படி வணங்காதிருக்க முடியும்? அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!

23. அவனையன்றி வேறு கடவுள்களை ஏற்படுத்திக் கொள்வேனா? அளவற்ற அருளாளன் எனக்கு ஒரு தீங்கை நாடி விட்டால் அவர்களின் பரிந்துரை17 எனக்கு எந்தப் பயனையும் அளிக்காது. அவர்கள் என்னைக் காப்பாற்றவும் மாட்டார்கள்.

24. அப்போது நான் பகிரங்கமான வழிகேட்டில் ஆவேன்.

25. நான் உங்கள் இறைவனை நம்பி விட்டேன். எனக்குச் செவிசாயுங்கள்! (என்றும் கூறினார்).

26, 27. சொர்க்கத்திற்குச் செல் என்று (அவரிடம்) கூறப்பட்டது.330 அதற்கவர் "என் இறைவன் என்னை மன்னித்ததையும் மரியாதைக்குரியோரில் என்னை ஆக்கியதையும் எனது சமுதாயத்தினர் அறிந்து கொள்ளக் கூடாதா?'' என்றார்.26

28. அவருக்குப் பின் அவரது சமுதாயத்திற்கு எதிராக ஒரு படையை வானத்திலிருந்து507 நாம் இறக்கவில்லை. (அவ்வாறு) இறக்குவோராகவும் நாம் இருந்ததில்லை.

29. அது ஒரே ஒரு பெரும் சப்தமாகவே இருந்தது. உடனே அவர்கள் சாம்பலானார்கள்.

30. அடியார்களுக்கு இது நட்டம் தான்! அவர்களிடம் எந்தத் தூதர் வந்தாலும் அவரை அவர்கள் கேலி செய்யாமல் இருந்ததில்லை.

31. அவர்களுக்கு முன் எத்தனையோ தலைமுறையினரை அழித்துள்ளோம். அவர்கள் இவர்களிடம் திரும்பி வர மாட்டார்கள் என்பதை இவர்கள் அறியவில்லையா?

32. அனைவரும் ஒட்டுமொத்தமாக நம்மிடம் ஒன்று திரட்டப்படுவார்கள்.

33. இறந்த பூமி அவர்களுக்கு ஓர் சான்றாகும். அதை நாம் உயிர்ப்பிக்கிறோம். அதிலிருந்து தானியத்தை வெளிப்படுத்துகிறோம். அதிலிருந்து அவர்கள் உண்ணுகின்றனர்.

34, 35. அதில் பேரீச்சை மற்றும் திராட்சைத் தோட்டங்களை ஏற்படுத்தினோம். அதன் கனிகளை அவர்கள் உண்பதற்காக. அதில் ஊற்றுகளையும் பீறிட்டு ஓடச் செய்தோம். அதை அவர்களின் கைகள் தயாரிக்கவில்லை. அவர்கள் நன்றி செலுத்த மாட்டார்களா?26

36. பூமி முளைக்கச் செய்வதிலிருந்தும், அவர்களிலிருந்தும், அவர்கள் அறியாதவற்றிலிருந்தும் ஜோடிகள்242 அனைத்தையும் உருவாக்கியவன் தூயவன்.10

37. இரவும் அவர்களுக்கு ஒரு சான்றாகும். அதிலிருந்து பகலை உரித்தெடுக்கிறோம். உடனே அவர்கள் இருளில் ஆழ்ந்து விடுகிறார்கள்.

38. சூரியன் அதற்குரிய இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இது அறிந்தவனாகிய மிகைத்தவனுடைய ஏற்பாடாகும்.241

39. சந்திரனுக்குப் பல நிலைகளை ஏற்படுத்தியுள்ளோம். முடிவில் அது காய்ந்த பேரீச்சம் பாளை போல் ஆகிறது.

40. சூரியனால் சந்திரனை அடைய முடியாது. இரவு, பகலை முந்தாது. ஒவ்வொன்றும் ஆகாயத்தில் நீந்துகின்றன.241

41, 42. நிரப்பப்பட்ட கப்பலில் அவர்களின் சந்ததிகளை நாம் ஏற்றியதும், அவர்கள் ஏறிச் செல்லும் அது போன்றதை399 (நிலத்தில்) அவர்களுக்காகப் படைத்ததும் அவர்களுக்குரிய சான்றாகும்.26

43. நாம் நாடினால் அவர்களை மூழ்கடிப்போம். அவர்களுக்காகக் குரல் எழுப்புவோர் எவரும் இருக்க மாட்டார்கள். அவர்கள் காப்பாற்றப்படவும் மாட்டார்கள்.

44. எனினும் நமது அருளின் காரணமாகவும், குறிப்பிட்ட நேரம் வரை அனுபவிப்பதற்காகவும் (மூழ்கடிக்கவில்லை).

45. உங்களுக்கு முன்னும், பின்னும் உள்ளதை அஞ்சுங்கள்! நீங்கள் அருள் செய்யப்படுவீர்கள் என்று அவர்களிடம் கூறப்படும்போது (புறக்கணிக்கின்றனர்)

46. அவர்களின் இறைவனது சான்றுகளில் எந்தச் சான்று அவர்களிடம் வந்தபோதும் அதை அவர்கள் புறக்கணிக்காமல் இருந்ததில்லை.

47. அல்லாஹ் உங்களுக்கு வழங்கியதிலிருந்து (நல்வழியில்) செலவிடுங்கள்! என்று அவர்களிடம் கூறப்படும்போது "(இல்லாதவருக்கு) நாங்கள் உணவளிக்க வேண்டுமா? அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களுக்கு உணவளித்திருப்பானே! தெளிவான வழிகேட்டிலேயே நீங்கள் இருக்கிறீர்கள்'' என்று (ஏகஇறைவனை) மறுப்போர் நம்பிக்கை கொண்டோரிடம் கூறுகின்றனர்.

48. "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இந்த எச்சரிக்கை எப்போது (நிறைவேறும்?)'' என்று அவர்கள் கேட்கின்றனர்.

49. ஒரே ஒரு பெரும் சப்தத்தைத் தவிர அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் விவாதித்துக் கொண்டிருக்கும்போது அவர்களை அது பிடித்துக் கொள்ளும்.

50. அப்போது மரண சாசனம் கூறவும் அவர்களுக்கு இயலாது. தமது குடும்பத்தாரிடம் திரும்பிச் செல்லவும் மாட்டார்கள்.

51. ஸூர் ஊதப்படும். உடனே அவர்கள் சமாதிகளிலிருந்து தமது இறைவனை நோக்கி விரைவார்கள்.

52. எங்கள் உறக்கத்தலத்திலிருந்து எங்களை உயிர்ப்பித்தவன் யார்?'' என்று கேட்பார்கள்.332 அளவற்ற அருளாளன் வாக்களித்ததும், தூதர்கள் உண்மையெனக் கூறியதும் இதுவே (எனக் கூறப்படும்.)

53. ஒரே ஒரு பெரும் சப்தம் தவிர வேறு எதுவும் இல்லை. உடனே அவர்கள் அனைவரும் நம்மிடம் ஒன்று திரட்டப்படுவார்கள்.

54. இன்று எவருக்கும் சிறிதளவும் அநீதி இழைக்கப்படாது. நீங்கள் செய்து கொண்டிருந்ததைத் தவிர கூலி கொடுக்கப்பட மாட்டீர்கள். 

55. அந்நாளில் சொர்க்கவாசிகள் (தமது) செயல்களில் திளைத்திருப்பார்கள்.

56. அவர்களும், அவர்களது துணைகளும்8 கட்டிலில் சாய்ந்து நிழல்களில் இருப்பார்கள்.

57. அங்கே அவர்களுக்குக் கனிகள் உள்ளன. அவர்கள் கேட்டவை அவர்களுக்குக் கிடைக்கும்.

58. ஸலாம்!159 இது நிகரற்ற அன்புடைய இறைவனின் கூற்றாகும்.

59. "குற்றவாளிகளே! இன்று (நல்லோர்களை விட்டுப்) பிரிந்து விடுங்கள்!'' (என்று கூறப்படும்.)

60, 61. "ஆதமுடைய மக்களே!504 ஷைத்தானை வணங்காதீர்கள்! அவன் உங்களின் பகிரங்க எதிரியாவான். என்னையே வணங்குங்கள்! அதுவே நேரான வழி என்று உங்களிடம் நான் உறுதிமொழி எடுக்கவில்லையா?''26

62. உங்களில் பெரும் கூட்டத்தினரை அவன் வழிகெடுத்து விட்டான். நீங்கள் விளங்கியிருக்கக் கூடாதா?

63. இதுவே உங்களுக்கு எச்சரிக்கப்பட்ட நரகம்.

64. "நீங்கள் (ஏகஇறைவனை) மறுத்துக் கொண்டிருந்ததால் இன்று இதில் கருகுங்கள்!'' என்று கூறப்படும்.

65. இன்று அவர்களின் வாய்களுக்கு முத்திரையிடுவோம். அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவர்களின் கைகள் நம்மிடம் பேசும்; கால்கள் சாட்சி கூறும்.

66. நாம் நினைத்திருந்தால் அவர்களின் கண்களை எடுத்திருப்போம். அப்போது பாதையை நோக்கி விரைவார்கள். அப்போது எப்படி அவர்களால் பார்க்க முடியும்?

67. நாம் நாடியிருந்தால் இருந்த இடத்திலேயே அவர்களை உருமாற்றி இருப்போம். அதனால் அவர்கள் (முன்னே) செல்ல இயலாது. பின்னேயும் செல்ல மாட்டார்கள்.

68. நாம் யாருக்கு வாழ்நாள் அளித்தோமோ அவரைப் படைப்பில் இறங்குமுகமாக்குகிறோம்.333 (இதை) அவர்கள் விளங்க மாட்டார்களா?

69. இவருக்கு (முஹம்மதுக்கு) கவிதையை நாம் கற்றுத் தரவில்லை. (அது) அவருக்குத் தேவையுமில்லை. இது அறிவுரையும், தெளிவான குர்ஆனும் தவிர வேறில்லை.

70. உயிருடன் உள்ளவரை எச்சரிப்பதற்காகவும், (நம்மை) மறுப்போருக்கு எதிரான கட்டளை உறுதியாவதற்காகவும் (இதை அருளினோம்).

71. நம் கைகளால் உருவாக்கிய கால்நடைகளை அவர்களுக்காகப் படைத்துள்ளோம் என்பதையும், அவர்கள் அதற்கு உரிமையாளர்களாக உள்ளனர் என்பதையும் அவர்கள் காணவில்லையா?

72. அவற்றை அவர்களுக்காகக் கீழ்ப்படியச் செய்தோம். அவற்றில் அவர்களின் வாகனங்களும் உள்ளன. அவற்றிலிருந்து அவர்கள் உண்ணுகின்றனர்.171

73. அவர்களுக்குப் பயன்களும், பானங்களும் அவற்றில் உள்ளன. நன்றி செலுத்த மாட்டார்களா?

74. தமக்கு உதவி செய்யப்பட அல்லாஹ்வையன்றி பல கடவுள்களை அவர்கள் ஏற்படுத்திக் கொண்டனர்.

75. அக்கடவுள்களுக்கு இவர்களே (இவ்வுலகில்) முதன்மைக் காவலர்களாக இருக்க அக்கடவுள்களோ இவர்களுக்கு உதவ இயலாது.

76. (முஹம்மதே!) அவர்களின் கூற்று உம்மைக் கவலையில் ஆழ்த்த வேண்டாம். அவர்கள் மறைப்பதையும், வெளிப்படுத்துவதையும் நாம் அறிவோம்.

77. மனிதனை விந்துத் துளியிலிருந்து படைத்தோம்368 என்பதை அவன் பார்க்கவில்லையா? அவனோ பகிரங்கமாக எதிர்வாதம் புரிகிறான்.506

78. அவன் நமக்கு உதாரணம் கூறுகிறான். அவனை (நாம்) படைத்திருப்பதை மறந்து விட்டான். "எலும்புகள் மக்கிய நிலையில் அதை உயிர்ப்பிப்பவன் யார்?'' என்று கேட்கிறான்.

79. "முதல் தடவை இதை யார் படைத்தானோ அவன் இதை உயிர்ப்பிப்பான். அவன் ஒவ்வொரு படைப்பையும் அறிந்தவன்'' என்று கூறுவீராக!

80. அவன் பசுமையான மரத்திலிருந்து உங்களுக்காக நெருப்பை ஏற்படுத்தினான். அதிலிருந்து நீங்கள் தீ மூட்டுகிறீர்கள்.

81. வானங்களையும்,507 பூமியையும் படைத்தவன் இவர்களைப் போன்றவர்களைப் படைக்க சக்தி பெற்றவன் இல்லையா? ஆம்! அவன் மிகப் பெரிய படைப்பாளன்; அறிந்தவன்.

82. ஏதேனும் ஒரு பொருளை அவன் நாடும்போது 'ஆகு' என்று அவன் கூற உடனே அது ஆகி விடும் என்பதுதான் அவனது நிலை.506

83. எவனது கையில் ஒவ்வொரு பொருளின் அதிகாரங்களும் உள்ளனவோ அவன் தூயவன்.10 அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!

To read this Chapter in English click here.

(14வது பதிப்பின்படி திருத்தி அமைக்கப்பட்டது)

July 8, 2009, 10:37 PM

அத்தியாயம் : 37

அத்தியாயம் : 37
அஸ் ஸாஃப்பாத் - அணி வகுப்போர்

மொத்த வசனங்கள் : 182
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அஸ் ஸாஃப்பாத் என்ற சொல் இடம் பெறுவதால் இந்த அத்தியாயத்துக்கு இவ்வாறு பெயர் சூட்டப்பட்டது.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்... .

1. அணி அணியாய் நிற்போர் மீது சத்தியமாக!379

2. கடுமையாக விரட்டுவோர் மீது சத்தியமாக!379

3. போதனையைக் கூறுவோர் மீது சத்தியமாக!379

4. உங்கள் இறைவன் ஒருவனே.

5. (அவன்) வானங்கள்,507 பூமி மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவற்றுக்கு இறைவன். கிழக்குகளுக்கும் இறைவன்.335

6. முதல் வானத்தை507 நட்சத்திரங்கள் எனும் அலங்காரம் மூலம் நாம் அலங்கரித்துள்ளோம்.

7. கட்டுப்படாத ஒவ்வொரு ஷைத்தானிடமிருந்தும் பாதுகாப்பாக (அவற்றை ஆக்கினோம்).307

8, 9, 10. (வானவர்கள் எனும்) உயர்ந்த கூட்டத்தினரிடமிருந்து (ஓரிரு சொற்களை) ஒட்டுக் கேட்பவனைத் தவிர அவர்கள் செவியுற முடியாது. விரட்டப்படுவதற்காக ஒவ்வொரு பகுதியிலிருந்தும் அவர்கள் மீது எறியப்படும் பிரகாசமான தீப்பந்தம் அவர்களை விரட்டும்.307 அவர்களுக்கு நிலையான வேதனையுமுன்டு.26

11. இவர்கள் வலிமையான படைப்பா? அல்லது நாம் படைத்த(மற்ற)வைகளா? என்பதை இவர்களிடம் கேட்பீராக! இவர்களைப் பிசுபிசுப்பான களிமண்ணால்503&506 நாம் படைத்தோம்.368

12. உண்மையில் (இறைவனின் ஆற்றலை எண்ணி) நீர் ஆச்சரியப்படுகிறீர். இவர்களோ கேலி செய்கின்றனர்.

13. இவர்களுக்கு அறிவுரை கூறப்பட்டால் படிப்பினை பெறுவதில்லை.

14. சான்றை இவர்கள் கண்டபோதும் கேலி செய்கின்றனர்.

15. "இது தெளிவான சூனியம் தவிர வேறில்லை''285 என்று இவர்கள் கூறுகின்றனர்.357

16, 17. "நாங்கள் இறந்து மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆகும்போது நாங்களும், முந்தைய எங்கள் முன்னோர்களும் உயிர்ப்பிக்கப்படுவோமா?'' (என்று கேட்கின்றனர்).26

18. ஆம்! நீங்கள் சிறுமைப்பட்டவர்கள்'' எனக் கூறுவீராக!

19. அது ஒரே ஒரு பெரும் சப்தம் தான். உடனே அவர்கள் காண்பார்கள்.

20. "எங்களுக்குக் கேடு தான்; இது தீர்ப்பு நாள்1'' என அப்போது கூறுவார்கள். 

21. "நீங்கள் பொய்யெனக் கருதிக் கொண்டிருந்தீர்களே அந்தத் தீர்ப்பு நாள்1 இதுவே'' (எனக் கூறப்படும்.)

22, 23. அநீதி இழைத்தோரையும், அவர்களுக்குத் துணை நின்றவர்களையும், அல்லாஹ்வையன்றி அவர்கள் வணங்கி வந்ததையும் ஒன்று திரட்டுங்கள்! அவர்களுக்கு நரகத்தின் பாதையைக் காட்டுங்கள்!26

24. "அவர்கள் விசாரிக்கப்படுபவர்கள்; அவர்களைப் பிடித்து நிறுத்துங்கள்!'' (என்று வானவர்களுக்குக் கூறப்படும்.)

25. "உங்களுக்கு என்ன நேர்ந்தது? ஏன் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாமல் இருக்கின்றீர்கள்?'' (என்று கேட்கப்படும்.)

26. அவ்வாறு நடக்காது. இன்று1 அவர்கள் சரணடைந்தவர்கள்.

27. அவர்களில் ஒருவர் மற்றவரை நோக்கி விசாரித்துக் கொள்வார்கள்.

28. "நீங்களே எங்கள் மீது ஆதிக்கம் செய்வோராக இருந்தீர்கள்'' என்று (சிலர்) கூறுவார்கள்.

29. "இல்லை. நீங்கள் தான் நம்பிக்கை கொள்வோராக இருக்கவில்லை'' என்று (மற்றும் சிலர்) பதிலளிப்பார்கள்.

30. உங்கள் மீது எங்களுக்கு எந்த அதிகாரமும் இருந்ததில்லை. மாறாக நீங்களே வழிகெட்ட கூட்டமாக இருந்தீர்கள்.

31. எனவே எங்கள் இறைவனின் கட்டளை எங்களுக்கு எதிராக உறுதியாகி விட்டது. (அதன் பலனை) நாங்கள் அனுபவிக்கிறோம்.

32. "நாங்கள் உங்களை வழிகெடுத்தோம். நாங்களும் வழிகெட்டவர்களாக இருந்தோம்'' (என்றும் கூறுவார்கள்)

33. அந்நாளில் அவர்கள் வேதனையில் பங்காளிகளாக இருப்பார்கள்.

34. குற்றவாளிகளை இப்படித்தான் நாம் நடத்துவோம்.

35. "அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை'' என்று அவர்களிடம் கூறப்பட்டால் பெருமையடிப்போராக அவர்கள் இருந்தனர்.

36. "பைத்தியக்காரக்468 கவிஞருக்காக நாங்கள் எங்கள் கடவுள்களை விட்டு விடுவோமா?'' என்று கேட்கின்றனர்.

37. அவ்வாறில்லை! அவர் உண்மையையே கொண்டு வந்துள்ளார். தூதர்களை உண்மைப்படுத்துகிறார்.

38. நீங்கள் துன்புறுத்தும் வேதனையை அனுபவிப்பவர்கள்.

39. நீங்கள் செய்து கொண்டிருந்ததைத் தவிர (வேறு எதற்கும்) கூலி கொடுக்கப்பட மாட்டீர்கள்.

40. தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லாஹ்வின் அடியார்களைத் தவிர.

41, 42, 43. இனிமையான சொர்க்கச் சோலைகளில் அவர்களுக்கு அறியப்பட்ட உணவும், கனிகளும் உண்டு. அவர்கள் மரியாதையுடன் நடத்தப்படுவார்கள்.26

44. கட்டில்களில் ஒருவரையொருவர் எதிர் நோக்குவார்கள்.

45. மது ஊற்றிலிருந்து (நிரப்பப்பட்ட) குவளைகள் அவர்களைச் சுற்றி வரும்.

46. அது வெண்மையானதும், அருந்துவோருக்கு இன்பம் அளிப்பதுமாகும்.

47. அதில் எந்தக் கேடும் இல்லை. அவர்கள் மதி மயக்கப்படவும் மாட்டார்கள்.

48, 49. அவர்களுடன் தாழ்ந்த பார்வையுடைய கண்ணழகிகள்8 மறைத்து வைக்கப்பட்ட முட்டைகளைப் போல் இருப்பார்கள்.26

50. அவர்களில் ஒருவர் மற்றவரை விசாரித்துக் கொள்வார்கள்.

51, 52, 53. "எனக்கு ஒரு நண்பன் இருந்தான். நீயும் (மறுமையை) நம்புவோரில் ஒருவனா? நாம் இறந்து மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆகும்போது நாம் கூலி கொடுக்கப்படுவோமா?'' என்று (என்னிடம் கேட்டான்) என அவர்களில் ஒருவர் கூறுவார்.26

54. நீங்கள் (அவனை) எட்டிப் பார்க்கிறீர்களா என்று (இறைவன்) கேட்பான்.

55. அவர் எட்டிப் பார்க்கும்போது அவனை நரகின் மத்தியில் காண்பார்.

56. "அல்லாஹ்வின் மீது ஆணையாக! என்னைக் குழியில் தள்ள முயன்றாய்'' என்று அவர் (நரகவாசியிடம்) கூறுவார்.

57. எனது இறைவனின் அருட்கொடை இல்லாதிருந்தால் (நரகத்திற்கு) கொண்டு வரப்பட்டோரில் நானும் ஆகியிருப்பேன்.

58, 59. நமது முதல் மரணத்தைத் தவிர, நாம் மரணிப்போர் இல்லையோ? நாம் தண்டிக்கப்படுவோரும் இல்லையோ? (என்றும் அவனிடம் கேட்பார்.)26

60. இதுவே மகத்தான வெற்றி.

61. செயல்படுவோர் இது போன்றதற்காகவே செயல்படட்டும்.

62. இது சிறந்த தங்குமிடமா? அல்லது ஸக்கூம் மரமா?

63. அதை அநீதி இழைத்தோருக்குச் சோதனையாக நாம் ஆக்கினோம்.

64. அது நரகத்தின் அடித்தளத்திலிருந்து வெளிப்படும் மரம்.

65. அதனுடைய பாளை ஷைத்தான்களின் தலைகளைப் போன்றது.

66. அவர்கள் அதிலிருந்து சாப்பிடுவர். அதிலிருந்து வயிறுகளை நிரப்புவர்.

67. கொதிக்க வைக்கப்பட்ட பானமும் இதற்கு மேல் அவர்களுக்கு உண்டு.

68. மேலும் அவர்கள் மீளுமிடம் நரகமே.

69. அவர்கள் தமது முன்னோர்களை வழிகெட்டவர்களாகவே கண்டனர்.

70. அவர்களின் அடிச்சுவடுகளிலேயே இவர்களும் இழுக்கப்படுகின்றனர்.

71. முன்னோர்களில் அதிகமானோர் இவர்களுக்கு முன் வழிகெட்டிருந்தனர்.

72. அவர்களிடம் எச்சரிப்போரை அனுப்பினோம்.

73, 74. "தேர்வு செய்யப்பட்ட அல்லாஹ்வின் அடியார்களைத் தவிர எச்சரிக்கப்பட்டோரின் முடிவு எவ்வாறு அமைந்தது'' என்று கவனிப்பீராக!26

75. நூஹ் நம்மிடம் பிரார்த்தித்தார். நாம் ஏற்றுக் கொள்வோரில் சிறந்தவராவோம்.

76. அவரையும், அவரது குடும்பத்தினரையும் பெரும் துன்பத்திலிருந்து காப்பாற்றினோம்.

77. அவரது சந்ததிகளையே எஞ்சியோராக ஆக்கினோம்.

78. பின் வருவோரிடம் அவரது புகழை நிலைக்கச் செய்தோம்.

79. அகிலத்தாரில் நூஹ் மீது ஸலாம்159 உண்டாகும்!

80. நல்லோருக்கு இவ்வாறே நாம் கூலி கொடுப்போம்.

81. அவர் நம்பிக்கை கொண்ட நமது அடியாராக இருந்தார்.

82. பின்னர் மற்றவர்களை மூழ்கடித்தோம்.

83. அவரது வழித் தோன்றலில் உள்ளவரே இப்ராஹீம்.

84. அவர் தமது இறைவனிடம் தூய உள்ளத்துடன் வந்ததை நினைவூட்டுவீராக!

85. "எதை வணங்குகிறீர்கள்?'' என்று தமது தந்தையிடமும் தமது சமூகத்தாரிடமும் கூறியதை நினைவூட்டுவீராக!

86. அல்லாஹ்வையன்றி கற்பனை செய்யப்பட்ட கடவுள்களையா நாடுகிறீர்கள்?

87. அகிலத்தின் இறைவனைப் பற்றி உங்கள் எண்ணம் தான் என்ன? (என்று கேட்டார்.)

88. பின்னர் நட்சத்திரங்களைக் கவனமாகப் பார்த்தார்.

89. "நான் நோயாளி'' எனக் கூறினார்.336

90. அவரை விட்டு விட்டு அவர்கள் சென்றனர்.

91, 92. அவர்களின் கடவுள்களிடம் சென்று "சாப்பிட மாட்டீர்களா? ஏன் பேச மாட்டேன் என்கிறீர்கள்? உங்களுக்கு என்ன நேர்ந்தது?'' என்று கேட்டார்.26

93. பின்னர் அவற்றிடம் (நெருங்கிச்) சென்று பலமாக அடித்தார்.473

94. அவர்கள் அவரை நோக்கி விரைந்து வந்தனர்.

95, 96. நீங்கள் செதுக்கிக் கொண்டதை வணங்குகிறீர்களா? அல்லாஹ்வே உங்களையும், நீங்கள் செய்தவற்றையும் படைத்தான் என்றார்.26

97. இவருக்காக ஒரு கட்டடத்தைக் கட்டி இவரை நெருப்பில் போடுங்கள்! என்று அவர்கள் கூறினர்.

98. அவருக்கு எதிராகச் சதி செய்ய நினைத்தனர். அவர்களைத் தாழ்ந்தோராக்கி விட்டோம்.

99. "நான் என் இறைவனிடம் செல்கிறேன். அவன் எனக்கு வழிகாட்டுவான்'' என்றார்.

100. என் இறைவா! எனக்கு நல்லொழுக்கம் உடையோரில் ஒருவரை (வாரிசாகத்) தருவாயாக! (என்று கேட்டார்.)

101. அவருக்கு சகிப்புத் தன்மை மிக்க ஆண் குழந்தை (இஸ்மாயீல்) பற்றி நற்செய்தி கூறினோம்.

102. அவருடன் உழைக்கும் நிலையை அவர் (இஸ்மாயீல்) அடைந்தபோது "என் அருமை மகனே! நான் உன்னை அறுப்பது போல்455 கனவில்122 கண்டேன். நீ என்ன கருதுகிறாய் என்பதைச் சிந்தித்துக் கூறு'' என்று (இப்ராஹீம்) கேட்டார். "என் தந்தையே! உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதைச் செய்யுங்கள்! அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்கள்'' என்று (இஸ்மாயீல்) பதிலளித்தார்.

103, 104, 105. இருவரும் கீழ்ப்படிந்து (தமது) மகனை அவர் முகம் குப்புறக் கிடத்தியபோது, "இப்ராஹீமே! அக்கனவை122 நீர் உண்மைப்படுத்தி விட்டீர். நன்மை செய்வோருக்கு இவ்வாறே நாம் கூலி வழங்குவோம்'' என்று அவரை அழைத்துக் கூறினோம்.26

106. இது தான் மகத்தான சோதனை.

107. பெரிய பலிப்பிராணியை அவருக்குப் பகரமாக்கினோம்.

108. பின்வருவோரில் அவரது புகழை நிலைக்கச் செய்தோம்.

109. இப்ராஹீமின் மீது ஸலாம்159 உண்டாகும்!

110. நன்மை செய்வோருக்கு இவ்வாறே கூலி வழங்குவோம்.

111. அவர் நம்பிக்கை கொண்ட நமது அடியார்களில் ஒருவர்.

112. நபியும், நல்லவருமான இஸ்ஹாக்கைப் பற்றி அவருக்கு நற்செய்தி கூறினோம்.

113. அவர் மீதும், இஸ்ஹாக் மீதும் பாக்கியம் செய்தோம். அவ்விருவரின் வழித்தோன்றல்களில் நல்லோரும் உள்ளனர். தெளிவாக தமக்கே தீங்கிழைத்தோரும் உள்ளனர்.

114. மூஸாவுக்கும், ஹாரூனுக்கும் அருள் புரிந்தோம்.

115. அவ்விருவரையும் அவர்களது சமூகத்தாரையும் பெரும் துன்பத்திலிருந்து காப்பாற்றினோம்.

116. அவர்களுக்கு உதவினோம். எனவே அவர்களே வெற்றி பெற்றனர்.

117. அவ்விருவருக்கும் தெளிவான வேதத்தை வழங்கினோம்.

118. அவ்விருவருக்கும் நேரான வழியைக் காட்டினோம்.

119. பின்வருவோரில் அவ்விருவரின் புகழை நிலைக்கச் செய்தோம்.

120. மூஸாவின் மீதும், ஹாரூன் மீதும் ஸலாம்159 உண்டாகும்!

121. நன்மை செய்வோருக்கு இவ்வாறே நாம் கூலி வழங்குவோம்.

122. அவ்விருவரும் நம்பிக்கை கொண்ட நமது அடியார்கள்.

123. இல்யாஸும் தூதர்களில் ஒருவர்.

124, 125, 126, 127. "அஞ்ச மாட்டீர்களா? அழகிய படைப்பாளனும், உங்கள் இறைவனும், உங்கள் முன்னோரின் இறைவனுமாகிய அல்லாஹ்வை விட்டு விட்டு 'பஅல்' எனும் சிலையைப் பிரார்த்திக்கிறீர்களா? என்று தமது சமூகத்தாரிடம் அவர் கூறியபோது அவரை அவர்கள் பொய்யரெனக் கருதினர். அவர்கள் (நம்மிடம்) கொண்டு வரப்படுவார்கள்.26

128. தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லாஹ்வின் அடியார்களைத் தவிர.

129. பின்வருவோரில் அவரது புகழை நிலைக்கச் செய்தோம்.

130. இல்யாஸீன் மீது ஸலாம்159 உண்டாகும்!

131. நன்மை செய்வோருக்கு இவ்வாறே நாம் கூலி கொடுப்போம்.

132. அவர் நம்பிக்கை கொண்ட நமது அடியார்களில் ஒருவர்.

133. லூத்தும் தூதர்களில் ஒருவர்.

134, 135. அவரையும், (அழிவோருடன்) தங்கி விட்ட கிழவியைத் தவிர, அவரது குடும்பத்தார் அனைவரையும் நாம் காப்பாற்றியதை நினைவூட்டுவீராக!26

136. பின்னர் மற்றவர்களை அடியோடு அழித்தோம்.

137, 138. காலை நேரத்திலும், இரவிலும் அவர்களைக் கடந்து செல்கிறீர்கள். விளங்க மாட்டீர்களா?26

139. யூனுஸ் தூதர்களில் ஒருவர்.

140, 141. நிரப்பப்பட்ட கப்பலை நோக்கி அவர் ஒளிந்தோடியபோது, அவர்கள் (கப்பலில் இருந்து யாரை வெளியேற்றுவது என்று) சீட்டுக் குலுக்கினர். தோற்றவர்களில் அவர் ஆகி விட்டார்.26

142. இழிந்தவராக இருக்கும் நிலையில் அவரை மீன் விழுங்கியது.508

143, 144. அவர் (நம்மை) துதிக்காது இருந்திருந்தால் அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள்1 வரை அதன் வயிற்றிலேயே தங்கியிருப்பார்.26

145. அவரை நோயுற்றவராக வெட்ட வெளியில் எறிந்தோம்.

146. அவர் மீது (நிழல் தருவதற்காக) சுரைக் கொடியை முளைக்கச் செய்தோம்.

147. அவரை ஒரு லட்சம் அல்லது (அதை விட) அதிகமானோருக்குத் தூதராக452 அனுப்பினோம்.

148. அவர்கள் நம்பிக்கை கொண்டனர். குறிப்பிட்ட காலம் வரை அவர்களுக்கு வசதிகளை அளித்தோம்.

149. "உமது இறைவனுக்குப் பெண் குழந்தைகள்! இவர்களுக்கு ஆண் குழந்தைகளா?'' என்று இவர்களிடம் கேட்பீராக!

150. வானவர்களை நாம் பெண்களாகப் படைக்கும்போது இவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்களா?

151, 152. கவனத்தில் கொள்க! அல்லாஹ் (பிள்ளைகளைப்) பெற்றெடுத்தான் என்று அவர்கள் இட்டுக்கட்டியே கூறுகின்றனர். அவர்கள் பொய் கூறுபவர்கள்.26

153. ஆண் மக்களை விட அவன் பெண் மக்களைத் தேர்வு செய்து விட்டானா?

154. உங்களுக்கு என்ன நேர்ந்தது? எவ்வாறு தீர்ப்பளிக்கிறீர்கள்?

155. சிந்திக்க மாட்டீர்களா?

156. அல்லது உங்களுக்குத் தெளிவான சான்று உள்ளதா?

157. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்கள் வேதத்தைக் கொண்டு வாருங்கள்!

158. ஜின்களுக்கும், அவனுக்குமிடையே வம்சாவளி உறவை அவர்கள் கற்பனை செய்து விட்டனர். தாம் (இறைவன் முன்) நிறுத்தப்படுவோம் என்பதை ஜின்கள் அறிந்து வைத்துள்ளன.

159. அவர்கள் கூறுவதை விட்டும் அல்லாஹ் தூயவன்.10

160. தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லாஹ்வின் அடியார்களைத் தவிர.

161, 162, 163. நீங்களும், நீங்கள் வணங்குபவைகளும் நரகத்தில் கருகவிருப்பவனைத் தவிர (மற்றவர்களை) வழிகெடுக்க முடியாது.26

164, 165, 166. எங்களில் யாராக இருந்தாலும் அவருக்கு குறிப்பிட்ட இடம் உண்டு. நாங்கள் அணிவகுத்து நிற்பவர்கள். நாங்கள் துதிப்பவர்கள்.279 (என்று வானவர்கள் கூறுவார்கள்)26

167, 168 169. முன்னோர் வழியாக எங்களுக்கு அறிவுரை கிடைத்திருக்குமானால் தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லாஹ்வின் அடியார்களாக ஆகியிருப்போம் என்று அவர்கள் (இணைகற்பிப்போர்) கூறிக் கொண்டு இருந்தார்கள்.26

170. இப்போது அதை மறுக்கின்றனர். பின்னர் அறிந்து கொள்வார்கள்.

171. நமது அடியார்களான தூதர்களுக்கு நமது கட்டளை முந்தி விட்டது.

172. அவர்களே உதவி செய்யப்படுவார்கள்.

173. நமது படையினரே வெல்பவர்கள்.

174. குறிப்பிட்ட காலம் வரை அவர்களைப் புறக்கணிப்பீராக!

175. அவர்களைப் பார்த்துக் கொண்டிருப்பீராக! அவர்களும் பின்னர் பார்ப்பார்கள்.

176. நம்முடைய வேதனையையா அவசரமாகத் தேடுகின்றனர்?

177. அது அவர்களின் முற்றத்தில் இறங்கி விட்டால் எச்சரிக்கப்பட்டோரின் காலைப் பொழுது கெட்டதாக ஆகி விடும்.

178. குறிப்பிட்ட நேரம் வரை அவர்களைப் புறக்கணிப்பீராக!

179. பார்த்துக் கொண்டிருப்பீராக! அவர்களும் பின்னர் பார்ப்பார்கள்.

180. கண்ணியத்தின் அதிபதியாகிய உமது இறைவன் அவர்கள் கூறுவதை விட்டும் தூயவன்.10

181. தூதர்கள் மீது ஸலாம்159 உண்டாகும்!

182. அகிலத்தின் அதிபதியாகிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.

To read this Chapter in English click here.

(14வது பதிப்பின்படி திருத்தி அமைக்கப்பட்டது)

July 8, 2009, 10:40 PM

அத்தியாயம் : 38

அத்தியாயம் : 38
ஸாத் - அரபு மொழியின் 14வது எழுத்து.

மொத்த வசனங்கள் : 88
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் ஸாத் என்ற எழுத்து இடம் பெற்றுள்ளதால் இந்த அத்தியாயத்துக்கு இவ்வாறு பெயர் சூட்டியுள்ளனர்.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்... .

1. ஸாத்2. அறிவுரை அடங்கிய இக்குர்ஆன் மீது ஆணையாக!

2. (ஏகஇறைவனை) மறுத்தோர் கர்வத்திலும், முரண்பாட்டிலும் உள்ளனர்.

3. இவர்களுக்கு முன் எத்தனையோ தலைமுறையினரை அழித்துள்ளோம். அப்போது அவர்கள் கூப்பாடு போட்டனர். அது தப்பிக்கும் நேரமாக இல்லை.

4. அவர்களிலிருந்தே எச்சரிப்பவர் அவர்களிடம் வந்ததில் ஆச்சரியப்பட்டனர். "இவர் பொய்யர்; சூனியக்காரர்''285 என்று (ஏகஇறைவனை) மறுப்போர் கூறினர்.357

5. "கடவுள்களை ஒரே கடவுளாக ஆக்கி விட்டாரா? இது வியப்பான செய்தி தான்.''

6. "(இவரை விட்டும்) சென்று விடுங்கள்! உங்கள் கடவுள்கள் விஷயத்தில் உறுதியாக இருங்கள்! இது ஏதோ எதிர்பார்ப்பில் கூறப்படும் விஷயமாக உள்ளது'' என்று அவர்களில் பிரமுகர்கள் கூறினர்.

7. "இதை வேறு மார்க்கத்தில் நாம் கேள்விப்பட்டதில்லை. இது கட்டுக்கதை தவிர வேறில்லை.''

8. "நமக்கிடையே இவர் மீது (மட்டும்) அறிவுரை அருளப்பட்டு விட்டதா?'' (என்றும் கேட்கின்றனர்.) மாறாக எனது அறிவுரையில் சந்தேகத்தில் உள்ளனர். இவர்கள் எனது வேதனையைச் சுவைத்துப் பார்த்ததில்லை.

9. மிகைத்தவனும், வள்ளலுமாகிய உமது இறைவனது அருட்கொடையின் கருவூலங்கள் அவர்களிடம் உள்ளனவா?

10. அல்லது வானங்கள்,507 பூமி மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவற்றின் ஆட்சி அவர்களுக்கு உள்ளதா? அப்படியாயின் ஏணிகளில் ஏறிச் செல்லட்டும்.

11. இங்கிருக்கும் இந்த அற்பப்படை தோற்கடிக்கப்படும் படை.

12, 13. இவர்களுக்கு முன் நூஹுடைய சமுதாயம், ஆது சமுதாயம், பெரும் படைகளைக் கொண்ட ஃபிர்அவ்ன், ஸமூது சமுதாயம், லூத்துடைய சமுதாயம், (மத்யன்) தோப்புவாசிகள் ஆகியோரும் பொய்யெனக் கருதினர். அவர்களே (தோற்கடிக்கப்பட்ட) அந்தச் சமுதாயத்தினர்.26

14. (அவர்களில்) ஒவ்வொருவரும் தூதர்களைப் பொய்யரெனக் கருதாமல் இருந்ததில்லை. எனவே எனது வேதனைக்கு உரித்தானார்கள்.

15. ஒரே ஒரு பெரும் சப்தத்தைத் தவிர (வேறு எதையும்) இவர்கள் எதிர்பார்க்கவில்லை. அதற்கு எந்தத் தாமதமும் இல்லை.

16. "எங்கள் இறைவா! விசாரிக்கப்படும் நாளுக்கு முன்பே எங்கள் பங்கை (இவ்வுலகில்) விரைந்து வழங்கி விடு'' என்று கேட்கின்றனர்.

17. (முஹம்மதே!) அவர்கள் கூறுவதைச் சகித்துக் கொள்வீராக! பலம் பொருந்திய நமது அடியார் தாவூதை நினைவூட்டுவீராக! அவர் (நம்மிடம்) திரும்புபவராக இருந்தார்.

18, 19. மாலையிலும், காலையிலும் மலைகளும், ஒன்று திரட்டப்பட்ட பறவைகளும் அவருடன் இறைவனைத் துதிக்குமாறு நாம் வசப்படுத்திக் கொடுத்தோம். ஒவ்வொன்றும் அவனை நோக்கித் திரும்புபவையாக இருந்தன.26

20. அவரது ஆட்சியைப் பலப்படுத்தினோம். அவருக்கு ஞானத்தையும், தெளிவான விளக்கத்தையும் கொடுத்தோம்.

21, 22. வழக்குரைக்க வந்தோரின் செய்தி உமக்குத் தெரியுமா? தொழுமிடத்தைத் தாண்டி, தாவூதிடம் அவர்கள் வந்தபோது அவர்களைக் கண்டு திடுக்குற்றார். "பயப்படாதீர்!' நாங்கள் ஒருவர் மீது மற்றவர் வரம்பு மீறிய இரண்டு வழக்காளிகள். எங்களுக்கிடையே நியாயமான தீர்ப்பு வழங்குவீராக! தவறிழைத்து விடாதீர்! நேரான வழியில் எங்களை நடத்துவீராக!'' என்று அவர்கள் கூறினர்.26

23. "இவர் எனது சகோதரர். இவருக்கு தொண்ணூற்று ஒன்பது ஆடுகள் உள்ளன. எனக்கோ ஒரே ஒரு ஆடு தான் உள்ளது. அதையும் என் பொறுப்பில் விடு என்று இவர் கூறுகிறார். வாதத்தில் என்னை மிகைத்து விட்டார்'' என்று ஒருவர் கூறினார்.

24. "உமது ஆட்டைத் தனது ஆடுகளுடன் சேர்க்க அவர் கேட்டதன் மூலம் உமக்கு அநீதி இழைத்து விட்டார். கூட்டுச் சேர்வோரில் அதிகமானோர் ஒருவர் மற்றவர் மீது அநீதி இழைக்கின்றனர். நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரைத் தவிர. அவர்கள் மிகவும் குறைவு தான்'' என்று தாவூத் கூறினார். அவரைச் சோதித்தோம்484 என்பதை தாவூத் விளங்கிக் கொண்டார்.337 தமது இறைவனிடம் மன்னிப்புக் கேட்டார். பணிந்து விழுந்தார்.396 திருந்தினார்.

25. எனவே அதை அவருக்கு மன்னித்தோம். அவருக்கு நம்மிடத்தில் நெருக்கமும், அழகிய தங்குமிடமும் உள்ளது.

26. தாவூதே! உம்மைப் பூமியில் வழித் தோன்றலாக46 நாம் ஆக்கினோம். எனவே மக்கள் மத்தியில் நியாயமான தீர்ப்பு வழங்குவீராக! மனோ இச்சையைப் பின்பற்றாதீர்! அது அல்லாஹ்வின் பாதையை விட்டும் உம்மை வழிகெடுத்து விடும். அல்லாஹ்வின் பாதையை விட்டும் வழிகெடுப்போர் விசாரணை நாளை1 மறந்ததால் அவர்களுக்குக் கடுமையான வேதனை உண்டு.

27. வானத்தையும்,507 பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டதையும் வீணுக்காக நாம் படைக்கவில்லை. இது (ஏகஇறைவனை) மறுப்போரின் எண்ணம். மறுப்போருக்கு நரகம் எனும் கேடு உள்ளது.

28. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோரைப் பூமியில் குழப்பம் செய்வோரைப் போல் ஆக்குவோமா? அல்லது (நம்மை) அஞ்சுவோரைக் குற்றம் புரிந்தோரைப் போல் ஆக்குவோமா?

29. இது பாக்கியமான வேதம். இதன் வசனங்களை அவர்கள் சிந்திப்பதற்காகவும், அறிவுடையோர் படிப்பினை பெறுவதற்காகவும் உமக்கு அருளினோம்.

30. தாவூதுக்கு ஸுலைமானை அன்பளிப்பாக வழங்கினோம். அவர் நல்லடியார். (இறைவனிடம்) திரும்புபவர்.

31, 32. பயிற்சி பெற்ற உயர்ந்த ரக குதிரைகள் அவர் முன்னே மாலை நேரத்தில் நிறுத்தப்பட்டு, முடிவில் அவை திரைக்குப் பின் மறைந்தபோது "எனது இறைவனை நினைக்காமல் இந்த நல்ல பொருளை விரும்பி விட்டேன்'' எனக் கூறினார்.26

33. அவற்றை என்னிடம் மீண்டும் கொண்டு வாருங்கள்! (எனக் கூறி) அவற்றின் கால்களையும், கழுத்துக்களையும் தடவிக் கொடுத்தார்.

34. ஸுலைமானை நாம் சோதித்தோம்.484 அவரது சிம்மாசனத்தில் (அவரை) ஒரு சடலமாகப் போட்டோம்.338 பின்னர் அவர் திருந்தினார்.

35. "என் இறைவா! என்னை மன்னித்து விடு! எனக்குப் பின் யாருக்கும் கிடைக்காத ஆட்சியை எனக்கு வழங்கு! நீயே வள்ளல்'' எனக் கூறினார்.

36. அவருக்குக் காற்றை வசப்படுத்திக் கொடுத்தோம். அவரது கட்டளைப்படி அவர் நினைத்தவாறு பணிந்து அது சென்றது.

37, 38. ஷைத்தான்களில் கட்டடம் கட்டுவோரையும், முத்துக் குளிப்போரையும், விலங்கிடப்பட்ட வேறு சிலரையும் (அவருக்கு) வசப்படுத்திக் கொடுத்தோம்.26

39. "இது நமது அருட்கொடை! கணக்கின்றி மற்றவருக்குக் கொடுக்கலாம்! அல்லது நீரே வைத்துக் கொள்ளலாம்!'' (என்று கூறினோம்.)

40. அவருக்கு நம்மிடம் நெருக்கமும், அழகிய தங்குமிடமும் உள்ளது.

41, 42. நமது அடியார் அய்யூபை நினைவூட்டுவீராக! "ஷைத்தான் வேதனையாலும், துன்புறுத்தலாலும் என்னைத் தீண்டி விட்டான்'' என்று தமது இறைவனிடம் அவர் பிரார்த்தித்தபோது, "உமது காலால் மிதிப்பீராக! இதோ குளிர்ந்த குளிக்குமிடம்! பானம்!'' (எனக் கூறினோம்).26

43. அவருக்கு அவரது குடும்பத்தினரையும் அவர்களுடன் அவர்களைப் போன்றோரையும் வழங்கினோம். இது நம்மிடமிருந்து கிடைக்கப் பெறும் அருளும், அறிவுடையோருக்கு அறிவுரையுமாகும்.

44. உமது கையால் புல்லில் ஒரு பிடியை எடுத்து அதன் மூலம் அடிப்பீராக! சத்தியத்தை முறிக்காதீர்!339 (என்றோம்.) நாம் அவரைப் பொறுமையாளராகக் கண்டோம். அவர் நல்லடியார். அவர் (நம்மிடம்) திரும்புபவர்.

45. வலிமையும், சிந்தனையும் உடைய இப்ராஹீம், இஸ்ஹாக், யாகூப் ஆகிய நமது அடியார்களை நினைவூட்டுவீராக!

46. மறு உலகை நினைப்பதற்காக அவர்களைச் சிறப்பாக நாம் தேர்வு செய்தோம்.

47. அவர்கள் நம்மிடத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்தவர்கள்.

48. இஸ்மாயீல், அல்யஸஃ, துல்கிஃப்ல் ஆகியோரையும் நினைவூட்டுவீராக! அனைவரும் சிறந்தோராக இருந்தனர்.

49, 50. இது அறிவுரை! (இறைவனை) அஞ்சுவோருக்கு வாயில்கள் திறக்கப்பட்ட நிலையான சொர்க்கச் சோலைகளான சிறந்த தங்குமிடம் உள்ளது.26

51. அதில் சாய்ந்து கொண்டு அதிகமான கனிகளையும், பானத்தையும் கேட்பார்கள்.

52. ஒத்த வயதுடைய பார்வைகளைத் தாழ்த்திய கன்னியரும்8 அவர்களுக்கு உள்ளனர்.

53. விசாரணை நாளுக்காக உங்களுக்கு வாக்களிக்கப்பட்டது இதுவே.

54. இது நமது செல்வம். இதற்கு முடிவே கிடையாது.

55. இதோ! வரம்பு மீறியோருக்குக் கெட்ட தங்குமிடம் உள்ளது.

56. நரகத்தில் தான் அவர்கள் கருகுவார்கள். அது கெட்ட தங்குமிடம்.

57. இதோ கொதி நீரும், சீழும் உள்ளது. இதை அவர்கள் சுவைக்கட்டும்.

58. இது போன்ற வேறு பல வகைகளும் உள்ளன.

59. "இது உங்களுடன் சேரும் கூட்டமாகும்'' (என்று நரகத்தில் கிடக்கும் தலைவர்களிடம் கூறப்படும்.) "அவர்களுக்கு எந்த வரவேற்பும் இல்லை. அவர்களும் நரகில் கருகுபவர்கள் தானே'' (என்று நரகத்தில் கிடக்கும் தலைவர்கள் கூறுவார்கள்)

60. "அவ்வாறில்லை! நீங்களும் தான்! உங்களுக்கும் வரவேற்பு இல்லை. இதற்கு எங்களைக் கொண்டு வந்தவர்களே நீங்கள் தான். இது கெட்ட தங்குமிடம்'' என்று இவர்கள் கூறுவார்கள்.

61. "எங்கள் இறைவா! இதற்கு (நரகத்திற்கு) எங்களைக் கொண்டு வந்தோருக்கு நரகில் பன்மடங்கு வேதனையை அதிகமாக்குவாயாக!'' என்றும் கூறுவார்கள்.

62. "தீயோர் என்று நாங்கள் கருதி வந்த மனிதர்களை (நரகில்) ஏன் காணாமல் இருக்கிறோம்?'' என்று கேட்பார்கள்.

63. (அவர்கள் நல்லோராக இருந்தும்) அவர்களை ஏளனமாகக் கருதினோமா? அல்லது அவர்களை விட்டும் (நமது) பார்வைகள் சாய்ந்து விட்டனவா?

64. நரகவாசிகளின் இந்த வாய்ச் சண்டை உண்மை!

65. "நான் எச்சரிக்கை செய்பவனே. அடக்கியாளும் ஒரே அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை'' என்று (முஹம்மதே!) கூறுவீராக!

66. (அவன்) வானங்கள்,507 பூமி மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவற்றின் இறைவன். மிகைத்தவன்; அதிகம் மன்னிப்பவன்.

67. "இது மகத்தான செய்தியாகும்'' என்று கூறுவீராக!

68. இதை நீங்கள் புறக்கணிக்கின்றீர்கள்.

69. (வானவர்களான) மேலான கூட்டத்தார் விவாதம் செய்தபோது அவர்களைப் பற்றிய அறிவு எனக்கு இல்லை.380

70. நான் தெளிவாக எச்சரிப்பவன் என்பதைத் தவிர வேறு எதுவும் எனக்கு அறிவிக்கப்படவில்லை.

71, 72, 73, 74. "களிமண்ணால்503&506 மனிதனைப் படைக்கப் போகிறேன்;368 அவரைச் சீர்படுத்தி எனது உயிரை அவரிடம் நான் ஊதும்போது அவருக்குப் பணிந்து விழுங்கள்!''11 என்று உமது இறைவன் வானவர்களிடம் கூறியபோது இப்லீஸைத் தவிர வானவர் அனைவரும் பணிந்தனர். அவன் அகந்தை கொண்டான். (ஏகஇறைவனை) மறுப்போரில் ஆனான்.26

75. "இப்லீஸே! எனது இரு கைகளால்488 நான் படைத்தவருக்கு நீ பணிவதை விட்டும் எது உன்னைத் தடுத்தது? அகந்தை கொண்டு விட்டாயா? அல்லது உயர்ந்தவனாக ஆகி விட்டாயா?'' என்று (இறைவன்) கேட்டான்.

76. "நான் அவரை விடச் சிறந்தவன். என்னை நெருப்பால் நீ படைத்தாய். அவரைக் களிமண்ணால்503&506 படைத்தாய்'' என்று அவன் கூறினான்.

77, 78. "இங்கிருந்து வெளியேறு! நீ விரட்டப்பட்டவன். தீர்ப்பு நாள்1 வரை உன் மீது எனது சாபம் உள்ளது''6 என்று (இறைவன்) கூறினான்.26

79. "என் இறைவா! அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள்1 வரை எனக்கு அவகாசம் அளிப்பாயாக!'' என்று அவன் கேட்டான்.

80, 81. "அறியப்பட்ட நேரத்தை உள்ளடக்கிய நாள்1 வரை நீ அவகாசம் கொடுக்கப்பட்டவன்'' என்று இறைவன் கூறினான்.26

82, 83. "உனது கண்ணியத்தின் மீது ஆணையாக! தேர்ந்தெடுக்கப்பட்ட உனது அடியார்களைத் தவிர அவர்கள் அனைவரையும் வழிகெடுப்பேன்'' என்று (ஷைத்தான்) கூறினான்.26

84. "இதுவே உண்மை. உண்மையையே கூறுகிறேன்'' என்று (இறைவன்) கூறினான்.

85. உன்னையும், அவர்களில் உன்னைப் பின்பற்றியோர் அனைவரையும் போட்டு நரகத்தை நிரப்புவேன் (என்று இறைவன் கூறினான்)

86. "இதற்காக உங்களிடம் நான் எந்தக் கூலியும் கேட்கவில்லை. நான் சுயமாக உருவாக்கிக் கூறுபவனல்லன்'' என்று (முஹம்மதே!) கூறுவீராக!

87. இது அகிலத்தாருக்கு அறிவுரை தவிர வேறில்லை.

88. சிறிது காலத்திற்குப் பின் இதனுடைய செய்தியை அறிந்து கொள்வீர்கள்!

To read this Chapter in English click here.

(14வது பதிப்பின்படி திருத்தி அமைக்கப்பட்டது)

July 9, 2009, 3:04 PM