அத்தியாயம் : 79

அத்தியாயம் : 79

அந்நாஸிஆத் - கைப்பற்றுவோர்

மொத்த வசனங்கள் : 46

உயிரைக் கைப்பற்றும் வானவர்களைப் பற்றி இந்த அத்தியாயத்தில் கூறப்படுவதால் இதையே இந்த அத்தியாயத்துக்கு பெயராகச் சூட்டியுள்ளனர்.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

1. பலமாகக் கைப்பற்றுவோர்165 (வானவர்கள்) மீது ஆணையாக!

2. எளிதாகக் கைப்பற்றுவோர்165 மீது ஆணையாக!

3, 4, 5. நீந்திச் செல்வோர் மீதும், முந்திச் செல்வோர் மீதும், காரியங்களை நிர்வாகிப்போர் மீதும் ஆணையாக!26

6. அந்தப் பெரு நடுக்கத்தை ஏற்படுத்துதல் (ஸூர் ஊதுதல்) நிகழும் நாள்!

7. அடுத்தது (இரண்டாம் ஸூர்), அதைத் தொடர்ந்து வரும்!

8. அந்நாளில் சில உள்ளங்கள் கலக்கம் கொண்டிருக்கும்.

9. அவற்றின் பார்வைகள் தாழ்ந்திருக்கும்.

10. குழியிலிருந்து நாம் எழுப்பப்படுவோமா?'' என்று கேட்கின்றனர்.

11. மக்கிப் போன எலும்புகளாக ஆகி விட்ட பிறகுமா?

12. அப்படியானால் அது நட்டத்தை ஏற்படுத்தும் மீளுதல் தான் என்றும் கூறுகின்றனர்.

13. அது ஒரே ஒரு சப்தம் தான்!

14. உடனே அவர்கள் வெட்ட வெளியில் நிற்பார்கள்.

15. மூஸாவைப் பற்றிய செய்தி உமக்குக் கிடைத்ததா?

16. அவரை அவரது இறைவன் 'துவா' எனும் தூய பள்ளத்தாக்கில் அழைத்தான்.

17. "நீர் ஃபிர்அவ்னிடம் செல்வீராக! அவன் வரம்பு மீறி விட்டான்''

18, 19. "நீ பரிசுத்தமாகிட உனக்கு விருப்பம் உண்டா? நான் உனது இறைவனை நோக்கி வழிகாட்டுகிறேன்! (இறைவனை) அஞ்சிக் கொள்! எனக் கூறுவீராக'' (என்று இறைவன் கூறினான்.)

20. அவனுக்கு (மூஸா) மிகப் பெரிய சான்றைக் காட்டினார்.

21. அவன் பொய்யெனக் கருதி பாவம் செய்தான்.

22. பின்னர் விரைவாகப் பின்வாங்கினான்.

23. (மக்களைத்) திரட்டி, பிரகடனம் செய்தான்.

24. நானே உங்களின் மிகப் பெரிய இறைவன் என்றான்.

25. அவனை இம்மையிலும், மறுமையிலும் வேதனை மூலம் அல்லாஹ் பிடித்தான்.

26. (இறைவனை) அஞ்சுபவருக்கு இதில் படிப்பினை உண்டு.

27. படைக்கப்படுவதில் நீங்கள் கடினமானவர்களா? அல்லது வானமா?507 அதை அவன் நிறுவினான்.

28. அதன் முகட்டை உயர்த்திச் சீராக்கினான்.

29. அதன் இரவை மூடி பகலை வெளிப்படுத்தினான்.

30. இதன் பின்னர் பூமியை விரித்தான்.

31. அதிலிருந்து அதற்கான தண்ணீரையும், மேய்ச்சல் பயிர்களையும் வெளிப்படுத்தினான்.

32. மலைகளை முளைகளாக நாட்டினான்.248

33. உங்களுக்கும், உங்கள் கால்நடைகளுக்கும் வாழ்க்கை வசதிக்காக (இவற்றை ஏற்படுத்தினான்).

34, 35. மாபெரும் அமளி ஏற்படும்போது மனிதன் தான் செய்ததைப் பற்றி அந்நாளில் எண்ணிப் பார்ப்பான்.26

36. காண்போருக்கு (அருகில்) நரகம் வெளிப்படுத்தப்படும்.

37, 38, 39. யார் வரம்பு மீறி, இவ்வுலக வாழ்வைத் தேர்ந்தெடுத்துக் கொண்டானோ அவனுக்கு நரகமே தங்குமிடம்.26

40, 41. யார் தமது இறைவன் முன்னே நிற்பது பற்றி அஞ்சி, மனோ இச்சையை விட்டும் தன்னை விலக்கிக் கொண்டாரோ சொர்க்கமே (அவரது) தங்குமிடம்.26

42. (முஹம்மதே!) யுகமுடிவு நேரம் பற்றி அது எப்போது ஏற்படும்? என உம்மிடம் கேட்கின்றனர்.

43. அது பற்றிய விளக்கம் உம்மிடம் எங்கே இருக்கிறது?

44. அதன் முடிவு உமது இறைவனிடமே உள்ளது.

45. அதை அஞ்சுவோருக்கு நீர் எச்சரிப்பவரே.

46. அதை அவர்கள் காணும்போது ஒரு மாலைப்பொழுதோ, அல்லது அதன் காலைப்பொழுதோ தவிர வாழவில்லை என்பது போல் அவர்களுக்குத் தோன்றும்.

Published on: July 9, 2009, 4:55 PM Views: 2631

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top