அத்தியாயம் : 75

அத்தியாயம் : 75

அல்கியாமா - இறைவன் முன்னால் நிற்கும் நாள்

மொத்த வசனங்கள் : 40

இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில், கியாமத் நாள் என்று உள்ளதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆக்கப்பட்டது.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்... .

1. கியாமத் நாள்1 மீது சத்தியம் செய்கிறேன்.

2. குறை கூறிக்கொண்டிருக்கும் உள்ளத்தின் மீது சத்தியம் செய்கிறேன்.

3. மனிதனின் எலும்புகளை ஒன்று திரட்ட மாட்டோம் என்று அவன் எண்ணுகிறானா?

4. அவ்வாறில்லை! அவனது விரல் நுனிகளையும் சீராக்க நாம் ஆற்றலுடையவர்கள்.208

5. ஆனால் அவனுக்கு (இறைவனுக்கு) முன்னால் குற்றம் செய்யவே மனிதன் நாடுகிறான்.

6. "கியாமத் நாள்1 எப்போது?'' எனக் கேட்கிறான்.

7, 8, 9, 10. பார்வை நிலை குத்தும்போது, சந்திரனுக்குக் கிரகணம் ஏற்படும்போது, சூரியனும், சந்திரனும் ஒன்று சேர்க்கப்படும்போது, வெருண்டோடும் இடம் எங்கே என்று அந்நாளில் மனிதன் கேட்பான்.26

11. அவ்வாறில்லை! தப்பிக்கும் எந்த இடமும் இல்லை.

12. அந்நாளில் உமது இறைவனிடமே தங்குமிடம் இருக்கும்.

13. அந்நாளில் மனிதன் முற்படுத்தியது பற்றியும், பிற்படுத்தியது பற்றியும் அறிவிக்கப்படுவான்.

14, 15. மாறாக மனிதன் சமாதானங்களைக் கூறியபோதும் தன்னைப் பற்றி நன்கு தெரிந்தவனாக இருக்கிறான்.26

16. (முஹம்மதே!) இதற்காக (குர்ஆனை மனனம் செய்வதற்காக) அவசரப்பட்டு உமது நாவை அசைக்காதீர்!152

17. அதைத் திரட்டுவதும், ஓதச் செய்வதும் நம்மைச் சேர்ந்தது.

18. எனவே நாம் அதை ஓதும்போது அந்த ஓதுதலைப் பின்பற்றுவீராக!152

19. பின்னர் அதைத் தெளிவுபடுத்துவது நம்மைச் சேர்ந்தது.

20. அவ்வாறில்லை! எனினும் நீங்கள் இம்மையை விரும்புகிறீர்கள்.

21. மறுமையை விட்டுவிடுகிறீர்கள்.

22. அந்நாளில் சில முகங்கள் மலர்ந்து இருக்கும்.

23. தமது இறைவனைப் பார்த்துக்488 கொண்டிருக்கும்.21

24. சில முகங்கள் அந்நாளில் சோகமாக இருக்கும்.

25. தமக்குப் பேராபத்து ஏற்படும் என அவை நினைக்கும்.

26, 27. அவ்வாறில்லை! உயிர், தொண்டைக்குழியை அடைந்து விடும்போது "மந்திரிப்பவன் யார்?'' எனக் கூறப்படும்.26

28. "அதுவே பிரிவு'' என்று அவன் விளங்கிக் கொள்வான்.

29. காலோடு கால் பின்னிக் கொள்ளும்.

30. அந்நாளில் இழுத்துச் செல்லப்படுவது உமது இறைவனிடமே.

31. அவன் நம்பவுமில்லை. தொழவுமில்லை.

32. மாறாக பொய்யெனக் கருதிப் புறக்கணித்தான்.

33. பின்னர் தனது குடும்பத்தினரிடம் கர்வமாகச் சென்றான்.

34. உனக்கு நெருங்கி விட்டது! இன்னும் நெருங்கி விட்டது!

35. பின்னரும் உனக்கு நெருங்கி விட்டது! மேலும் நெருங்கி விட்டது!

36. வெறுமனே விடப்படுவான் என்று மனிதன் எண்ணுகிறானா?

37. அவன் செலுத்தப்படும் விந்தின் சிறு துளியாக இருக்கவில்லையா?506

38. பின்னர் கருவுற்ற சினைமுட்டையானான்.365&506 பின்னர் (இறைவன்) படைத்துச் சீராக்கினான்.

39. அவனிலிருந்து437 ஆண், பெண் என ஜோடியை ஏற்படுத்தினான்.

40. இத்தகையவன் இறந்தோரை உயிர்ப்பிக்க ஆற்றலுடையவன் இல்லையா?

To read this Chapter in English click here.

(குறிப்பு : இன்ஷா அல்லாஹ் 2015 ஜூனில் வெளியாகவுள்ள 14ஆம் பதிப்பின் படி மாற்றப்பட்டது.)

Published on: July 9, 2009, 4:50 PM Views: 2248

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top