அத்தியாயம் : 54

அத்தியாயம் : 54

அல் கமர் - சந்திரன்

மொத்த வசனங்கள் : 55

இந்த அத்தியாயத்தின் துவக்கத்தில் சந்திரன் பிளந்தது என்று கூறப்படுவதால் இந்த அத்தியாயத்துக்கு சந்திரன் எனப் பெயரிடப்பட்டது.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

1. யுகமுடிவு நேரம்1 நெருங்கி விட்டது. சந்திரனும் பிளந்து விட்டது.422

2. அவர்கள் சான்றைக் கண்டால் "இது தொடர்ந்து நடக்கும் சூனியம்''285 எனக் கூறிப் புறக்கணிக்கின்றனர்.357

3. பொய்யெனக் கருதி தமது மனோ இச்சைகளைப் பின்பற்றுகின்றனர். ஒவ்வொரு காரியமும் பதிவாகின்றது.

4, 5. அச்சுறுத்தல் அடங்கிய செய்திகளும், உயர்ந்த தரத்திலமைந்த ஞானமும் அவர்களுக்கு வந்து விட்டன. எச்சரிக்கைகள் (அவர்களுக்குப்) பயனளிக்கவில்லை.26

6, 7. எனவே அவர்களைப் புறக்கணிப்பீராக. (அவர்கள்) வெறுக்கும் காரியத்திற்கு அழைப்பவர் அழைக்கும் நாளில்1 அவர்களின் பார்வைகள் பணிந்திருக்கும். பரவிக் கிடக்கும் வெட்டுக்கிளிகளைப் போல் அவர்கள் மண்ணறைகளிலிருந்து வெளியாவார்கள்.26

8. அழைப்பாளரை நோக்கி விரைவார்கள். "இது கஷ்டமான நாள்1 தான்'' என்று (ஏகஇறைவனை) மறுப்போர் கூறுவார்கள்.

9. அவர்களுக்கு முன் நூஹுடைய சமுதாயம் பொய்யெனக் கருதியது. அவர்கள் நமது அடியாரைப் பொய்யரென்றனர். பைத்தியக்காரர் என்றனர். அவர் விரட்டப்பட்டார்.

10. "நான் தோற்கடிக்கப்பட்டு விட்டேன்; எனவே நீ உதவி செய்வாயாக!'' என்று அவர் தமது இறைவனிடம் பிரார்த்தித்தார்.

11. அப்போது வானத்தின்507 வாசல்களைக் கொட்டும் நீரால் திறந்து விட்டோம்.

12. பூமியில் ஊற்றுகளைப் பீறிட்டு ஓடச் செய்தோம். ஏற்கனவே திட்டமிட்ட படி தண்ணீர் இணைந்தது.

13. பலகைகளும், ஆணிகளும் உடைய (கப்பல்) ஒன்றில் அவரை ஏற்றினோம்.

14. அது நமது கண்காணிப்பில் ஓடியது. இது (தன் சமுதாயத்தால்) மறுக்கப்பட்டவருக்கு (நூஹுக்கு) உரிய கூலி.

15. அதைச் சான்றாக விட்டு வைத்தோம்.222 படிப்பினை பெறுவோர் உண்டா?

16. எனது வேதனையும், எச்சரிக்கைகளும் எவ்வாறு இருந்தன?

17. இக்குர்ஆனை விளங்குவதற்கு எளிதாக்கியுள்ளோம். படிப்பினை பெறுவோர் உண்டா?

18. ஆது சமுதாயத்தினரும் பொய்யெனக் கருதினர். எனது வேதனையும், எச்சரிக்கைகளும் எவ்வாறு இருந்தன?

19. தொடர்ந்து துர்பாக்கியமாக இருந்த ஒரு நாளில்381 அவர்களுக்கு எதிராகக் கடும் புயல் காற்றை நாம் அனுப்பினோம்.

20. வேருடன் பிடுங்கி எறியப்பட்ட பேரீச்சை மரங்களைப் போல் மனிதர்களை அது பிடுங்கி எறிந்தது.

21. எனது வேதனையும், எச்சரிக்கைகளும் எவ்வாறு இருந்தன?

22. இக்குர்ஆனை விளங்குவதற்கு எளிதாக்கியுள்ளோம். படிப்பினை பெறுவோர் உண்டா?

23. ஸமூது சமுதாயத்தினர் எச்சரிக்கைகளைப் பொய்யெனக் கருதினர்.

24. நம்மைச் சேர்ந்த ஒரு மனிதரையா நாம் பின்பற்றுவோம்? அப்படிச் செய்தால் வழிகேட்டிலும், சிரமத்திலும் நாம் ஆகி விடுவோம்.

25. நம்மிடையே இவருக்கு மட்டும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளதா? இல்லை. இவர் கர்வம் கொண்ட பெரும் பொய்யர். (என்றனர்)

26. யார் கர்வம் கொண்ட பெரும் பொய்யர் என்பதை நாளை அறிவார்கள்.

27. அவர்களுக்குச் சோதனையாக484 ஒட்டகத்தை நாம் அனுப்புவோம். எனவே அவர்களைக் கண்காணிப்பீராக! பொறுமையாக இருப்பீராக!

28. "தண்ணீர் அவர்களுக்கிடையே பங்கு போடப்பட வேண்டும்! ஒவ்வொரு (தண்ணீர்) குடிக்கும் உரிமையும் பேணப்பட வேண்டும் என்று அவர்களுக்கு அறிவிப்பீராக'' (என்று ஸாலிஹ் நபிக்கு கூறினோம்).

29. அவர்கள் தமது சகாவை அழைத்தனர். அவன் (ஒட்டகத்தைப்) பிடித்து கால் நரம்பைத் துண்டித்தான்.

30. எனது வேதனையும், எச்சரிக்கைகளும் எவ்வாறு இருந்தன?

31. அவர்களுக்கு எதிராக ஒரே ஒரு பெரும் சப்தத்தையே நாம் அனுப்பினோம். உடனே அவர்கள், தொழுவத்தின் கூளங்களைப் போல் ஆனார்கள்.

32. இக்குர்ஆனை விளங்குவதற்கு எளிதாக்கியுள்ளோம். படிப்பினை பெறுவோர் உண்டா?

33. லூத்துடைய சமுதாயத்தினர் எச்சரிக்கைகளைப் பொய்யெனக் கருதினர்.

34. அவர்களுக்கு எதிராகக் கல் மழையை நாம் அனுப்பினோம். லூத்துடைய குடும்பத்தினரைத் தவிர. அவர்களை இரவின் கடைசி நேரத்தில் காப்பாற்றினோம்.

35. இது நமது அருட்கொடை. இவ்வாறே நன்றி செலுத்துவோருக்குக் கூலி வழங்குவோம்.

36. நமது பிடியைப் பற்றி அவர்களை அவர் எச்சரித்தார். அவர்கள் எச்சரிக்கைகளைச் சந்தேகித்தனர்.

37. அவருடைய விருந்தினரைத் தீய காரியத்திற்கு அவர்கள் இழுத்தனர். உடனே அவர்களின் கண்களைக் குருடாக்கினோம். எனது வேதனையையும், எச்சரிக்கைகளையும் சுவையுங்கள்! (என்றோம்)

38. அதிகாலை நேரத்தில் நிலையான வேதனை அவர்களைப் பிடித்தது.

39. எனது வேதனையையும், எச்சரிக்கைகளையும் சுவையுங்கள் (என்று கூறப்பட்டது).

40. இக்குர்ஆனை விளங்குவதற்கு எளிதாக்கியுள்ளோம். படிப்பினை பெறுவோர் உண்டா?

41. ஃபிர்அவ்னுடைய கூட்டத்திடம் எச்சரிக்கைகள் வந்தன.

42. அவர்கள் நமது அனைத்து சான்றுகளையும் பொய்யெனக் கருதினர். எனவே அவர்களை வலிமையுடைய மிகைத்தவனின் பிடியாகப் பிடித்தோம்.

43. உங்களுடன் உள்ள (ஏகஇறைவனை) மறுப்போர் அவர்களை விட மேலானவர்களா? அல்லது பதிவேட்டில்157 உங்களுக்கு விதிவிலக்கு இருக்கிறதா?

44. "நாங்கள் அனைவரும் (இறை) உதவி பெற்றோர்'' என்று அவர்கள் கூறுகிறார்களா?

45. இக்கூட்டம் தோற்கடிக்கப்படும். புறங்காட்டி ஓடுவார்கள்.306

46. மேலும் யுகமுடிவு நேரம்1 தான் அவர்களுக்கு எச்சரிக்கப்பட்ட நேரம். யுகமுடிவு நேரம்1 மிகவும் அதிர்ச்சியளிப்பது; மிகவும் கசப்பானது.

47. குற்றம் புரிந்தோர் வழிகேட்டிலும், மனக் குழப்பத்திலும் உள்ளனர்.

48. அவர்கள் நரகத்தில் முகம் குப்புறப் போடப்படும் நாளில் "நரகத்தின் வேதனையைச் சுவையுங்கள்'' (எனக் கூறப்படும்)

49. ஒவ்வொரு பொருளையும் கணக்கிட்டு நாம் படைத்துள்ளோம்.

50. நமது கட்டளை கண்மூடித் திறப்பது போல் ஒரே ஒரு கட்டளை தான்.

51. உங்களைப் போன்ற பலரை அழித்திருக்கிறோம். படிப்பினை பெறுவோர் உண்டா?

52. அவர்கள் செய்த ஒவ்வொரு காரியமும் ஏடுகளில் உள்ளது.

53. ஒவ்வொரு சிறியதும், பெரியதும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

54. (இறைவனை) அஞ்சியோர் சொர்க்கச் சோலைகளிலும், நதியிலும் இருப்பார்கள்.

55. வலிமைமிக்க அரசனிடம் உண்மையான இருப்பிடத்தில் (அவர்கள் இருப்பார்கள்.)

Published on: July 9, 2009, 3:57 PM Views: 2835

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top