அத்தியாயம் : 62

அத்தியாயம் : 62

அல் ஜுமுஆ - வெள்ளிக் கிழமையின் சிறப்புத் தொழுகை

மொத்த வசனங்கள் : 11

இந்த அத்தியாயத்தின் 9, 10 வசனங்களில் ஜுமுஆ என்ற வெள்ளிக்கிழமை தொழுகையைப் பற்றிக் கூறப்படுவதால் இந்த அத்தியாயத்துக்கு ஜுமுஆ என்று பெயரிடப்பட்டது.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

1. வானங்களில்507 உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வைத் துதிக்கின்றன. அவன் அரசன்; தூயவன்;10 மிகைத்தவன்; ஞானமிக்கவன்.

2. அவனே எழுதப்படிக்காத சமுதாயத்தில் அவர்களிலிருந்தே ஒரு தூதரை அனுப்பினான். அவர்களுக்கு அவர் அவனது வசனங்களைக் கூறுகிறார். அவர்களைப் பரிசுத்தப்படுத்துகிறார். அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும்67 கற்றுக் கொடுக்கிறார்.36 அவர்கள் இதற்கு முன் தெளிவான வழிகேட்டில் இருந்தனர்.

3. அவர்களில் மற்றவர்களுக்காகவும்187 (அவரை அனுப்பினான்)281 அவர்களுடன் இவர்கள் இன்னும் சேரவில்லை. அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.

4. இது அல்லாஹ்வின் அருள். தான் நாடியோருக்கு இதை அவன் வழங்குகிறான். அல்லாஹ் மகத்தான அருளுடையவன்.

5. தவ்ராத்491 சுமத்தப்பட்டு பின்னர் அதைச் சுமக்காமல் (அதன்படி நடக்காமல்) இருந்தார்களே அவர்களது உதாரணம் ஏடுகளைச் சுமக்கும் கழுதையைப் போன்றது. அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்யெனக் கருதுவோருக்குரிய உதாரணம் மிகவும் கெட்டது. அநீதி இழைக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்டமாட்டான்.

6. "யூதர்களே! மற்ற மனிதர்கள் இன்றி நீங்கள் தான் அல்லாஹ்வின் நேசர்கள் என்று கருதுவதில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் சாவதற்கு ஆசைப்படுங்கள்!'' எனக் கூறுவீராக!

7. அவர்கள் செய்த வினை காரணமாக அதை அவர்கள் ஒருபோதும் விரும்ப மாட்டார்கள். அநீதி இழைத்தோரை அல்லாஹ் அறிந்தவன்.

8. "நீங்கள் எதை விட்டும் வெருண்டு ஓடுகிறீர்களோ அந்த மரணம் உங்களைச் சந்திக்கவுள்ளது. பின்னர் மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிபவனிடம் கொண்டு செல்லப்படுவீர்கள். நீங்கள் செய்து கொண்டிருந்ததை அவன் உங்களுக்கு அறிவிப்பான்'' என்று கூறுவீராக!

9. நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக்கிழமையில் தொழுகைக்காக அழைக்கப்பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டு விடுங்கள்!481 நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது.

10. தொழுகை முடிக்கப்பட்டதும் பூமியில் அலைந்து அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள்!481 அல்லாஹ்வை அதிகம் நினையுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.

11. "(முஹம்மதே) அவர்கள் வியாபாரத்தையோ, வீணானதையோ கண்டால் நின்ற நிலையில் உம்மை விட்டு விட்டு அதை நோக்கிச் சென்று விடுகின்றனர். அல்லாஹ்விடம் இருப்பது வீணானதையும், வியாபாரத்தையும் விட சிறந்தது. அல்லாஹ் உணவளிப்போரில் சிறந்தவன்''463 எனக் கூறுவீராக!.

Published on: July 9, 2009, 4:09 PM Views: 2832

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top