அத்தியாயம் : 80

அத்தியாயம் : 80

அபஸ - கடுகடுத்தார்

மொத்த வசனங்கள் : 42

இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில், கடுகடுத்தார் என்ற சொல் இடம் பெறுவதால் அதையே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆக்கியுள்ளனர்.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

1, 2. தன்னிடம் அந்தக் குருடர் வந்ததற்காக168 இவர் (முஹம்மது) கடுகடுத்தார். அலட்சியம் செய்தார்.26

3. அவர் தூயவராக இருக்கலாம் என்பது (முஹம்மதே!) உமக்கு எப்படித் தெரியும்?

4. அல்லது அவர் அறிவுரை பெறலாம். அந்த அறிவுரை அவருக்குப் பயன் அளிக்கலாம்.

5, 6. யார் அலட்சியம் செய்கிறானோ அவனிடம் வலியச் செல்கிறீர்.26

7. அவன் பரிசுத்தமாக ஆகாவிட்டால் உம் மீது ஏதும் இல்லை.

8, 9, 10. (இறைவனை) அஞ்சி உம்மிடம் யார் ஓடி வருகிறாரோ அவரை அலட்சியம் செய்கிறீர்.26

11. அவ்வாறில்லை! இது ஓர் அறிவுரை.

12. விரும்பியவர் இதில் படிப்பினை பெற்றுக் கொள்வார்.

13, 14, 15, 16. இது தூய்மைப்படுத்தப்பட்டு உயர்வாக்கப்பட்ட மதிப்பு மிக்க ஏடுகளில்461 உள்ளது. மரியாதைக்குரிய நல்லோர்களான எழுத்தர்களின் (வானவர்களின்) கைகளில் உள்ளது.26

17. மனிதன் சபிக்கப்பட்டு விட்டான். அவன் எப்படி நன்றி கெட்டவனாக இருக்கிறான்?

18. எந்தப் பொருளிலிருந்து அவனை (இறைவன்) படைத்தான்?

19. விந்துத் துளியிலிருந்து அவனைப் படைத்து அவனுக்கு (விதியை) நிர்ணயித்தான்.506

20. பின்னர் வழியை அவனுக்கு எளிதாக்கினான்.

21. பின்னர் அவனை மரணிக்கச் செய்து மண்ணறைக்கு அனுப்புகிறான்.

22. பின்னர் தான் நாடும்போது அவனை எழுப்புவான்.

23. அவ்வாறில்லை! (இறைவன்) கட்டளையிட்டதை அவன் நிறைவேற்றவில்லை.

24. மனிதன் தனது உணவைக் கவனிக்கட்டும்!

25. நாமே தண்ணீரை (வானிலிருந்து) ஊற்றினோம்.

26. பின்னர் பூமியை முறையாகப் பிளந்தோம்.

27, 28, 29, 30, 31, 32. உங்களுக்கும், உங்கள் கால்நடைகளுக்கும் பயன்படுவதற்காக தானியத்தையும், திராட்சையையும், புற்பூண்டையும், ஒலிவ மரத்தையும், பேரீச்சை மரத்தையும், அடர்ந்த தோப்புகளையும், கனிகளையும், தீவனங்களையும் அதில் முளைக்கச் செய்தோம்.26

33, 34, 35, 36. அந்தச் சப்தம் ஏற்படும் அந்த நாளில் மனிதன் தனது சகோதரனையும், தாயையும், தந்தையையும், மனைவியையும், பிள்ளைகளையும் விட்டு ஓடுவான்.26

37. அந்நாளில் அவர்களில் ஒவ்வொரு மனிதனுக்கும் முழுக் கவனத்தை ஈர்க்கும் காரியம் உண்டு.

38. அந்நாளில் சில முகங்கள் ஒளி வீசும்.

39. மகிழ்ச்சியுடன் சிரித்துக் கொண்டிருக்கும்

40. அந்நாளில் சில முகங்கள் மீது புழுதி படிந்திருக்கும்.

41. அவற்றைக் கருமை மூடியிருக்கும்.

42. அவர்களே (ஏகஇறைவனை) மறுப்போரான பாவிகள்.

Published on: July 9, 2009, 6:28 PM Views: 2389

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top