அத்தியாயம் : 1

அத்தியாயம் : 1
அல் பாத்திஹா - தோற்றுவாய்

மொத்த வசனங்கள் : 7
அல்ஃபாத்திஹா என்ற அரபுச் சொல்லுக்கு தோற்றுவாய், முதன்மையானது எனப் பொருள். திருக்குர்ஆனின் முதல் அத்தியாயமாக இது அமைந்துள்ளதால் இந்தப் பெயர் வந்தது. திருக்குர்ஆனிலேயே இந்த அத்தியாயம் குறித்துச் சிறப்பித்துக் கூறப்பட்டிருக்கிறது. பார்க்க 15:87
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…

1. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. (அவன்) அகிலத்தைப் (படைத்துப்) பராமரிப்பவன்.

2. அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன்.

3. தீர்ப்பு நாளின்1 அதிபதி.

4. (எனவே) உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவியும் தேடுகிறோம்.

5. எங்களை நேர்வழியில் செலுத்துவாயாக!

6, 7. அது நீ யாருக்கு அருள் புரிந்தாயோ அவர்கள் வழி. அவர்கள் (உன்னால்) கோபிக்கப்படாதவர்களும், பாதை மாறிச் செல்லாதவர்களும் ஆவர்.26

To read this Chapter in English click here.

(14வது பதிப்பின்படி திருத்தி அமைக்கப்பட்டது)

July 23, 2009, 7:55 PM

அத்தியாயம் : 2

அத்தியாயம் : 2
அல் பகரா - அந்த மாடு

மொத்த வசனங்கள் : 286
திருக்குர்ஆனில் மிகப் பெரிய அத்தியாயம் இது. இந்த அத்தியாயத்தில் 67வது வசனம் முதல் 71வது வசனம் வரை மாட்டுடன் தொடர்புடைய அதிசய நிகழ்ச்சி ஒன்று கூறப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி இடம் பெற்றதன் காரணமாகவே 'அந்த மாடு' என்ற பெயர் இந்த அத்தியாயத்துக்கு வந்தது.
காளை, பசு இரண்டையும் இச்சொல் குறித்தாலும், பெயர் வரக் காரணமான 67 முதல் 71 வரை உள்ள வசனங்களைக் கவனித்தால் காளையையே குறிக்கிறது என அறியலாம்.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

1. அலிஃப், லாம், மீம்.2

2. இது வேதம். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு (இது) வழிகாட்டி.

3. அவர்கள் மறைவானவற்றை3 நம்புவார்கள். தொழுகையை நிலைநாட்டுவார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுவார்கள்.

4. (முஹம்மதே!) உமக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தையும், உமக்கு முன் அருளப்பட்டதையும்4 அவர்கள் நம்புவார்கள். மறுமையையும்1 உறுதியாக நம்புவார்கள்.

5. அவர்களே, தமது இறைவனிடமிருந்து (பெற்ற) நேர்வழியில் இருப்பவர்கள். அவர்களே வெற்றியாளர்கள்.

6. (ஏகஇறைவனை) மறுப்போரை நீர் எச்சரிப்பதும், எச்சரிக்காமல் இருப்பதும் அவர்களைப் பொறுத்த வரை சமமானதே. நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.

7. அவர்களது உள்ளங்களிலும், செவியிலும் அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். அவர்களின் பார்வைகளில் திரை உள்ளது. அவர்களுக்குக் கடும் வேதனையுமுண்டு.439

8. "அல்லாஹ்வையும், இறுதி நாளையும்1 நம்பினோம்'' எனக் கூறுவோரும் மனிதர்களில் உள்ளனர். (ஆனால்) அவர்கள் நம்புவோர் அல்லர்.

9. அல்லாஹ்வையும், நம்பிக்கை கொண்டோரையும் அவர்கள் ஏமாற்ற நினைக்கின்றனர். (உண்மையில்) தம்மைத் தாமே அவர்கள் ஏமாற்றிக் கொள்கின்றனர். அவர்கள் உணர்வதில்லை. 

10. அவர்களின் உள்ளங்களில் நோய் இருக்கிறது. அல்லாஹ்வும் அவர்களுக்கு நோயை அதிகமாக்கி விட்டான். பொய் சொல்வோராக இருந்ததால் அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.

11. "பூமியில் குழப்பம் செய்யாதீர்கள்!'' என்று அவர்களிடம் கூறப்படும்போது "நாங்கள் சீர்திருத்தம் செய்வோரே'' எனக் கூறுகின்றனர்.

12. கவனத்தில் கொள்க! அவர்களே குழப்பம் செய்பவர்கள்; எனினும் உணர மாட்டார்கள்.

13. "இந்த மக்கள் நம்பிக்கை கொண்டது போல் நீங்களும் நம்பிக்கை கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் கூறப்படும்போது, "இம்மூடர்கள் நம்பிக்கை கொண்டது போல் நம்புவோமா?'' எனக் கேட்கின்றனர். கவனத்தில் கொள்க! அவர்களே மூடர்கள். ஆயினும் அறிந்து கொள்ள மாட்டார்கள்.

14. நம்பிக்கை கொண்டோரை அவர்கள் சந்திக்கும்போது "நம்பிக்கை கொண்டுள்ளோம்'' எனக் கூறுகின்றனர். தமது ஷைத்தான்களுடன்5 தனித்திருக்கும்போது "நாங்கள் உங்களைச் சேர்ந்தவர்களே. நாங்கள் (அவர்களை) கேலி செய்வோரே'' எனக் கூறுகின்றனர்.

15. அல்லாஹ்வோ அவர்களைக் கேலி செய்கிறான்.6 அவர்களது அத்துமீறலில் அவர்களைத் தடுமாற விட்டு விடுகிறான்.

16. அவர்களே, நேர்வழியை விற்று வழிகேட்டை வாங்கியவர்கள். எனவே அவர்களின் வியாபாரம் பயன் தராது. அவர்கள் நேர்வழி பெற்றோரும் அல்லர்.

17. ஒருவன் நெருப்பை மூட்டுகிறான். அந்த நெருப்பு அவனைச் சுற்றியுள்ளதை வெளிச்சமாக்கியபோது அவர்களின் ஒளியைப் போக்கி, பார்க்க முடியாமல் இருள்களில்303 அவர்களை அல்லாஹ் விட்டு விட்டான். இவனது தன்மை போன்றே (வழிகேட்டை வாங்கிய) இவர்களது தன்மையும் உள்ளது.

18. (இவர்கள்) செவிடர்கள்; ஊமைகள்; குருடர்கள். எனவே இவர்கள் (நல்வழிக்கு) திரும்ப மாட்டார்கள்.439

19. அல்லது (இவர்களது தன்மை,) வானத்திலிருந்து507 விழும் மழை போன்றது. அதில் இருள்களும்,303 இடியும், மின்னலும் உள்ளன. இடி முழக்கங்களால் மரணத்திற்கு அஞ்சி தமது விரல்களைக் காதுகளில் வைத்துக் கொள்கின்றனர். (தன்னை ஏற்க) மறுப்போரை அல்லாஹ் முழுமையாக அறிபவன்.

20. அவர்களின் பார்வைகளை மின்னல் பறிக்கப் பார்க்கிறது. (அது) அவர்களுக்கு வெளிச்சத்தை ஏற்படுத்தும்போது அதில் நடக்கின்றனர். அவர்களை இருள்கள்303 சூழ்ந்து கொள்ளும்போது நின்று விடுகின்றனர். அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களின் செவியையும், பார்வைகளையும் போக்கியிருப்பான். எல்லாப் பொருட்களின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவன்.

21. மனிதர்களே! உங்களையும், உங்களுக்கு முன் சென்றோரையும் படைத்த368 உங்கள் இறைவனையே வணங்குங்கள்! இதனால் (தண்டனையிலிருந்து) தப்பித்துக் கொள்வீர்கள்.

22. அவனே பூமியை உங்களுக்கு விரிப்பாகவும், வானத்தை507 முகடாகவும் அமைத்தான்.288 வானிலிருந்து507 தண்ணீரையும் இறக்கினான். அதன் மூலம் கனிகளை உங்களுக்கு உணவாக (பூமியிலிருந்து) வெளிப்படுத்தினான். எனவே அறிந்து கொண்டே அல்லாஹ்வுக்கு நிகராக எவரையும் கற்பனை செய்யாதீர்கள்!

23. நமது அடியாருக்கு (முஹம்மதுக்கு) நாம் அருளியதில் நீங்கள் சந்தேகம் கொண்டு, (அதில்) நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள்! அல்லாஹ்வைத் தவிர ஏனைய உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள்!7 

24. உங்களால் (இதைச்) செய்யவே முடியாது. நீங்கள் செய்யாவிட்டால் (நரக) நெருப்புக்கு அஞ்சுங்கள்! (கெட்ட) மனிதர்களும், கற்களுமே அதன் எரிபொருட்கள். (ஏகஇறைவனை) மறுப்போருக்காகவே அது தயாரிக்கப்பட்டுள்ளது.

25. "நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு சொர்க்கச் சோலைகள் உள்ளன'' என்று நற்செய்தி கூறுவீராக! அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் ஏதாவது கனி அவர்களுக்கு உணவாக வழங்கப்படும் போதெல்லாம் "இதற்கு முன் இது தானே நமக்கு வழங்கப்பட்டது'' எனக் கூறுவார்கள். இதே தோற்றமுடையது தான் (முன்னரும்) கொடுக்கப்பட்டிருந்தது. அங்கே அவர்களுக்குத் தூய்மையான துணைகளும்8 உள்ளனர். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.

26. கொசுவையோ, அதை விட அற்பமானதையோ உதாரணமாகக் கூற அல்லாஹ் வெட்கப்பட மாட்டான். நம்பிக்கை கொண்டோர் "இது தமது இறைவனிடமிருந்து வந்த உண்மை'' என்பதை அறிந்து கொள்கின்றனர். ஆனால் (ஏகஇறைவனை) மறுப்போர் "இதன் மூலம் அல்லாஹ் என்ன உவமையை நாடுகிறான்?'' என்று கேட்கின்றனர். இ(வ்வுதாரணத்)தின் மூலம்9 அல்லாஹ் பலரை வழிகேட்டில் விடுகிறான். இதன் மூலம் பலரை நேர்வழியில் செலுத்துகிறான். இதன் மூலம் குற்றம் புரிவோரைத் தவிர (மற்றவர்களை) அவன் வழிகேட்டில் விடுவதில்லை.

27. அவர்கள் அல்லாஹ்வின் உடன்படிக்கையை உறுதிப்படுத்திய பின் முறிக்கின்றனர். இணைக்கப்பட வேண்டுமென அல்லாஹ் கட்டளையிட்டதை (உறவை) முறிக்கின்றனர். பூமியில் குழப்பம் விளைவிக்கின்றனர். அவர்களே நட்டமடைந்தவர்கள்.

28. அல்லாஹ்வை எப்படி மறுக்கிறீர்கள்? உயிரற்று இருந்த உங்களுக்கு அவன் உயிரூட்டினான். பின்னர் உங்களை மரணமடையச் செய்வான். பின்னர் உங்களை உயிர்ப்பிப்பான். பின்னர் அவனிடமே கொண்டு வரப்படுவீர்கள்!441

29. அவனே பூமியில் உள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான். பின்னர் வானத்தை507 நாடி, அவற்றை ஏழு வானங்களாக507 ஒழுங்குபடுத்தினான். அவன் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்.

30. "பூமியில் நான் ஒரு தலைமுறையைப் படைக்கப் போகிறேன்''46 என்று உமது இறைவன் வானவர்களிடம் கூறியபோது "அங்கே குழப்பம் விளைவித்து இரத்தம் சிந்துவோரையா அதில் படைக்கப் போகிறாய்? நாங்கள் உன்னைப் புகழ்ந்து போற்றுகிறோமே; குறைகளற்றவன் என உன்னை ஏற்றுக் கொண்டிருக்கிறோமே'' என்று கேட்டனர். "நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன்'' என்று (இறைவன்) கூறினான்.

31. அனைத்துப் பெயர்களையும் (இறைவன்) ஆதமுக்குக் கற்றுக் கொடுத்தான். பின்னர் அவற்றை வானவர்களுக்கு எடுத்துக் காட்டி "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இவற்றின் பெயர்களை என்னிடம் கூறுங்கள்!'' என்று கேட்டான்.

32. "நீ தூயவன்.10 நீ எங்களுக்குக் கற்றுத் தந்ததைத் தவிர எங்களுக்கு வேறு அறிவு இல்லை. நீயே அறிந்தவன்; ஞானமிக்கவன்'' என்று அவர்கள் கூறினர்.

33. "ஆதமே! இவற்றின் பெயர்களை அவர்களுக்குக் கூறுவீராக!'' என்று (இறைவன்) கூறினான். அவர்களுக்கு அவற்றின் பெயர்களை அவர் கூறியபோது, "வானங்களிலும்,507 பூமியிலும் உள்ள மறைவானவற்றை நான் அறிவேன் என்றும், நீங்கள் வெளிப்படுத்துவதையும், மறைத்துக் கொண்டிருந்ததையும் அறிவேன் என்றும் உங்களிடம் கூறவில்லையா?'' என (இறைவன்) கேட்டான்.

34. "ஆதமுக்குப் பணியுங்கள்!''11 என்று நாம் வானவர்களுக்குக் கூறியபோது இப்லீஸைத் தவிர அனைவரும் பணிந்தனர். அவனோ மறுத்துப் பெருமையடித்தான். (நம்மை) மறுப்பவனாக ஆகி விட்டான்.

35. "ஆதமே! நீயும், உன் மனைவியும் இந்த சொர்க்கத்தில்12 குடியிருங்கள்! இருவரும் விரும்பியவாறு தாராளமாக இதில் உண்ணுங்கள்! இந்த மரத்தை13 (மட்டும்) நெருங்காதீர்கள்! (நெருங்கினால்) அநீதி இழைத்தோராவீர்'' என்று நாம் கூறினோம்.

36. அவ்விருவரையும் அங்கிருந்து ஷைத்தான் அப்புறப்படுத்தினான். அவர்கள் இருந்த (உயர்ந்த) நிலையிலிருந்து அவர்களை வெளியேற்றினான். "இறங்குங்கள்! உங்களில் சிலர், சிலருக்கு எதிரிகள்! உங்களுக்குப் பூமியில் குறிப்பிட்ட காலம் வரை வாழ்விடமும், வசதியும் உள்ளன''175 என்றும் நாம் கூறினோம்.

37. (பாவமன்னிப்புக்குரிய) சில வார்த்தைகளை14 தமது இறைவனிடமிருந்து ஆதம் பெற்றுக் கொண்டார். எனவே அவரை இறைவன் மன்னித்தான்; அவன் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

38. "இங்கிருந்து அனைவரும் இறங்கி விடுங்கள்!15 என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வரும்போது எனது நேர்வழியைப் பின்பற்றுவோருக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்'' என்று கூறினோம்.

39. "(நம்மை) மறுத்து நமது வசனங்களைப் பொய்யெனக் கருதியோர் நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்'' (என்றும் கூறினோம்.)

40. இஸ்ராயீலின் மக்களே! உங்களுக்கு நான் வழங்கியிருந்த அருட்கொடையை எண்ணிப்பாருங்கள்! என் உடன்படிக்கையை நிறைவேற்றுங்கள்! உங்கள் உடன்படிக்கையை நான் நிறைவேற்றுவேன். என்னையே அஞ்சுங்கள்!

41. உங்களிடம் உள்ள(வேதத்)தை உண்மைப்படுத்தும் வகையில் நான் அருளிய(குர்ஆன் எனும் வேதத்)தை நம்புங்கள்! இதை மறுப்போரில் முதலாமவராக ஆகாதீர்கள்! எனது வசனங்களை அற்ப விலைக்கு விற்காதீர்கள்!445 எனக்கே அஞ்சுங்கள்!

42. அறிந்து கொண்டே சரியானதைத் தவறானதுடன் கலக்காதீர்கள்! உண்மையை மறைக்காதீர்கள்!

43. தொழுகையை நிலைநாட்டுங்கள்! ஸகாத்தையும் கொடுங்கள்! ருகூவு செய்வோருடன் ருகூவு செய்யுங்கள்!

44. வேதத்தைப் படித்து கொண்டே உங்களை மறந்து விட்டு, மக்களுக்கு நன்மையை ஏவுகிறீர்களா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா?

45. பொறுமை, மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்! பணிவுடையோரைத் தவிர (மற்றவர்களுக்கு) இது பாரமாகவே இருக்கும்.

46. (பணிவுடையோர் யாரெனில்) தமது இறைவனைச் சந்திக்கவுள்ளோம்488 என்றும், அவனிடம் திரும்பிச் செல்லவிருக்கிறோம் என்றும் அவர்கள் நம்புவார்கள்.

47. இஸ்ராயீலின் மக்களே! உங்களுக்கு நான் வழங்கியிருந்த அருட்கொடையையும், உலக மக்கள் அனைவரையும் விட உங்களை நான் மேன்மைப்படுத்தியிருந்ததையும் எண்ணிப் பாருங்கள்!16

48. ஒருவர் இன்னொருவருக்கு எந்தப் பயனும் அளிக்க முடியாத நாளை1 அஞ்சுங்கள்! (அந்நாளில்) எவரிடமிருந்தும் எந்தப் பரிந்துரையும் ஏற்கப்படாது.17 எவரிடமிருந்தும் எந்த ஈடும் பெற்றுக் கொள்ளப்படாது. அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.

49. ஃபிர்அவ்னின் ஆட்களிடமிருந்து உங்களை நாம் காப்பாற்றியதை எண்ணிப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குக் கடுமையான வேதனையை அனுபவிக்கச் செய்தார்கள். உங்கள் ஆண் மக்களைக் கொலை செய்து விட்டு, பெண்(மக்)களை உயிருடன் விட்டனர். உங்கள் இறைவனிடமிருந்து இது மிகப் பெரும் சோதனையாக இருந்தது.

50. உங்களுக்காகக் கடலைப் பிளந்து, உங்களைக் காப்பாற்றி, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஃபிர்அவ்னின் ஆட்களை நாம் மூழ்கடித்ததை எண்ணிப் பாருங்கள்!

51. மூஸாவுக்கு நாற்பது இரவுகளை நாம் வாக்களித்ததையும் எண்ணிப் பாருங்கள்!18 அவருக்குப் பின் நீங்கள் அநீதி இழைத்துக் காளைக் கன்றை (கடவுளாக) கற்பனை செய்தீர்கள்.19

52. நீங்கள் நன்றி செலுத்துவதற்காக இதன் பின்னரும் உங்களை மன்னித்தோம்.

53. நீங்கள் நேர்வழி பெறுவதற்காக வேதத்தையும், (பொய்யை விட்டு உண்மையைப்) பிரித்துக் காட்டும் வழிமுறையையும் மூஸாவுக்கு நாம் வழங்கியதை எண்ணிப் பாருங்கள்!

54. "என் சமுதாயமே! காளைக் கன்றைக் (கடவுளாக) கற்பனை செய்ததன் மூலம் உங்களுக்கே தீங்கிழைத்து விட்டீர்கள்.19 எனவே உங்களைப் படைத்தவனிடம் மன்னிப்புக் கேளுங்கள்! உங்களையே கொன்று விடுங்கள்!20 இதுவே உங்களைப் படைத்தவனிடம் உங்களுக்கு நல்லது'' என்று மூஸா தமது சமுதாயத்திற்குக் கூறியதை நினைவூட்டுவீராக! அவன் உங்களை மன்னித்தான். அவனே மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

55. "மூஸாவே! அல்லாஹ்வை நேரில் பார்க்காத வரை உம்மை நம்பவே மாட்டோம்'' என்று நீங்கள் கூறியபோது, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையிலேயே உங்களை இடிமுழக்கம் தாக்கியது.21

56. பின்னர் நீங்கள் நன்றி செலுத்துவதற்காக நீங்கள் மரணித்த பின் உங்களை உயிர்ப்பித்தோம்.

57. உங்கள் மீது மேகத்தை நிழலிடச் செய்தோம். மன்னு, ஸல்வா442 (எனும் உண)வை உங்களுக்கு இறக்கினோம். "நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையானவற்றை உண்ணுங்கள்!'' (என்று கூறினோம்). அவர்கள் நமக்குத் தீங்கிழைக்கவில்லை. மாறாக தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டனர்.

58. "இவ்வூருக்குள் செல்லுங்கள்! அங்கே விரும்பியவாறு தாராளமாக உண்ணுங்கள்! வாசல் வழியாக பணிவாக நுழையுங்கள்! 'மன்னிப்பு' என்று கூறுங்கள்! உங்கள் தவறுகளை மன்னிப்போம். நன்மை செய்வோருக்கு அதிகமாக வழங்குவோம்'' என்று நாம் கூறியதை எண்ணிப்பாருங்கள்!

59. ஆனால் அநீதி இழைத்தோர், தமக்குக் (கூறப்பட்டதை விடுத்து) கூறப்படாத வேறு சொல்லாக மாற்றினார்கள். எனவே அநீதி இழைத்து, குற்றம் புரிந்ததால் வானத்திலிருந்து507 வேதனையை அவர்களுக்கு இறக்கினோம்.

60. மூஸா, தமது சமுதாயத்திற்காக (நம்மிடம்) தண்ணீர் வேண்டியபோது "உமது கைத்தடியால் அந்தப் பாறையில் அடிப்பீராக!" என்று கூறினோம். உடனே அதில் பன்னிரண்டு ஊற்றுகள் பீறிட்டன. ஒவ்வொரு கூட்டத்தாரும் தத்தமது நீர்த்துறையை அறிந்து கொண்டனர். "அல்லாஹ் வழங்கியதை உண்ணுங்கள்! பருகுங்கள்! பூமியில் குழப்பம் விளைவித்துத் திரியாதீர்கள்!'' (என்று கூறினோம்)

61. "மூஸாவே! ஒரே (வகையான) உணவைச் சகித்துக் கொள்ளவே மாட்டோம். எனவே எங்களுக்காக உமது இறைவனிடம் பிரார்த்தனை செய்வீராக! பூமி விளைவிக்கின்ற கீரைகள், வெள்ளரிக்காய், பூண்டு, பருப்பு, வெங்காயம் ஆகியவற்றை அவன் எங்களுக்கு வெளிப்படுத்துவான்'' என்று நீங்கள் கூறியபோது, "சிறந்ததற்குப் பகரமாகத் தாழ்ந்ததை மாற்றிக் கேட்கிறீர்களா? ஏதோ ஒரு நகரத்தில் தங்கி விடுங்கள்! நீங்கள் கேட்டது உங்களுக்கு உண்டு'' என்று அவர் கூறினார்.389 அவர்களுக்கு இழிவும், வறுமையும் விதிக்கப்பட்டன. அல்லாஹ்வின் கோபத்திற்கும் ஆளானார்கள். அல்லாஹ்வின் வசனங்களை மறுப்போராக அவர்கள் இருந்ததும், நியாயமின்றி நபிமார்களைக் கொன்றதும் இதற்குக் காரணம். மேலும் பாவம் செய்து, வரம்பு மீறிக்கொண்டே இருந்ததும் இதற்குக் காரணம்.

62. நம்பிக்கை கொண்டோரிலும், யூதர்களிலும், கிறித்தவர்களிலும், ஸாபியீன்களிலும்443 அல்லாஹ்வையும், இறுதி நாளையும்1 நம்பி, நல்லறம் செய்வோருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உண்டு. அவர்களுக்கு எந்தப் பயமும் இல்லை. கவலைப்படவும் மாட்டார்கள்.

63. "நீங்கள் இறையச்சமுடையோராக ஆகிட உங்களுக்கு நாம் வழங்கிய (வேதத்)தைப் பலமாகப் பிடித்துக் கொண்டு அதில் உள்ளதைச் சிந்தியுங்கள்!'' என்று தூர் மலையை உங்களுக்கு மேல் உயர்த்தி உங்களிடம் நாம் உடன்படிக்கை எடுத்ததை எண்ணிப் பாருங்கள்!22

64. இதன் பின்னரும் புறக்கணித்தீர்கள். அல்லாஹ்வின் அருளும், கருணையும் உங்கள் மீது இல்லாதிருந்தால் நட்டமடைந்திருப்பீர்கள்!

65. உங்களில் சனிக்கிழமையில் வரம்பு மீறியோரை அறிவீர்கள்! "இழிந்த குரங்குகளாக ஆகுங்கள்!'' என்று அவர்களுக்குக் கூறினோம்.23

66. அதை அக்காலத்தவருக்கும், அடுத்து வரும் காலத்தவருக்கும் பாடமாகவும், (நம்மை) அஞ்சுவோருக்குப் படிப்பினையாகவும் ஆக்கினோம்.

67. "ஒரு காளைமாட்டை நீங்கள் அறுக்க வேண்டும் என அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்'' என்று மூஸா, தமது சமுதாயத்திடம் கூறியபோது "எங்களைக் கேலிப் பொருளாகக் கருதுகிறீரா?'' என்று கேட்டனர். அதற்கு அவர், "அறிவீனனாக நான் ஆவதை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன்'' என்றார்.24

68. "உமது இறைவனிடம் எங்களுக்காக வேண்டுவீராக! அது எத்தகையது என்பதை அவன் எங்களுக்குத் தெளிவுபடுத்துவான்'' என்று அவர்கள் கேட்டனர். "அது கிழடும், கன்றும் அல்லாத இரண்டுக்கும் இடைப்பட்ட மாடு என்று அவன் கூறுகிறான். எனவே உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதைச் செய்யுங்கள்!'' என்று அவர் கூறினார்.

69. "உமது இறைவனிடம் எங்களுக்காக வேண்டுவீராக! அதன் நிறம் என்ன என்பதை எங்களுக்கு அவன் விளக்குவான்'' என்று அவர்கள் கேட்டனர். "அது பார்ப்போரைப் பரவசப்படுத்துகிற கருமஞ்சள் நிற மாடு என்று அவன் கூறுகிறான்'' என்றார்.

70. "உமது இறைவனிடம் எங்களுக்காக வேண்டுவீராக! அது எத்தகையது என்பதை அவன் எங்களுக்குத் தெளிவுபடுத்துவான். அந்த மாடு எங்களைக் குழப்புகிறது. அல்லாஹ் நாடினால் நாங்கள் வழி காண்போம்'' என்று அவர்கள் கூறினர்.

71. "அது நிலத்தை உழவோ, விவசாயத்துக்கு நீரிறைக்கவோ பழக்கப்படுத்தப்படாத மாடு; குறைகளற்றது; தழும்புகள் இல்லாதது'' என்று அவன் கூறுவதாக (மூஸா) கூறினார். "இப்போது தான் சரியாகச் சொன்னீர்'' என்று கூறி செய்ய முடியாத நிலையிலும் (மிகுந்த சிரமப்பட்டு) அம்மாட்டை அவர்கள் அறுத்தனர்.

72. நீங்கள் ஒருவரைக் கொன்று விட்டு அது குறித்து விவாதித்துக் கொண்டிருந்ததையும் எண்ணிப் பாருங்கள்! நீங்கள் மறைத்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் வெளிப்படுத்துபவன்.

73. "அதன் (மாட்டின்) ஒரு பகுதியால் அவரை (கொல்லப்பட்டவரை) அடியுங்கள்!'' என்று கூறினோம். இவ்வாறே அல்லாஹ் இறந்தோரை உயிர்ப்பிக்கிறான். நீங்கள் விளங்குவதற்காக தனது சான்றுகளை உங்களுக்குக் காட்டுகிறான்.24

74. இதன் பின்னர் உங்கள் உள்ளங்கள் பாறையைப் போன்று அல்லது அதை விடக் கடுமையாக இறுகி விட்டன. ஏனெனில் சில பாறைகளில் ஆறுகள் பொங்கி வழிவதுண்டு. சில பாறைகள் பிளந்து அதில் தண்ணீர் வருவதுண்டு. அல்லாஹ்வின் அச்சத்தால் (உருண்டு) விழும் பாறைகளும் உள்ளன. நீங்கள் செய்வதை அல்லாஹ் கவனிக்காதவனாக இல்லை.

75. அவர்கள் (இஸ்ரவேலர்கள்) உங்களை நம்புவார்கள் என்று ஆசைப்படுகின்றீர்களா? அவர்களில் ஒரு பகுதியினர் அல்லாஹ்வின் வார்த்தைகளைச் செவியேற்று விளங்கிய பின் அறிந்து கொண்டே அதை மாற்றி விட்டனர்.

76. நம்பிக்கை கொண்டோரைக் காணும்போது "நம்பிக்கை கொண்டுள்ளோம்'' எனக் கூறுகின்றனர். அவர்களில் ஒருவர் மற்றவருடன் தனியாக இருக்கும்போது "அல்லாஹ் உங்களுக்கு அருளியதை அவர்களுக்கு (முஸ்லிம்களுக்கு) கூறுவதால் உங்கள் இறைவனிடம் உங்களுக்கு எதிராக அவர்கள் வாதிடுவார்களே? விளங்க மாட்டீர்களா?'' என்று கேட்கின்றனர்.

77. அவர்கள் மறைப்பதையும், வெளிப்படுத்துவதையும் அல்லாஹ் அறிகிறான் என்பதை அறிய மாட்டார்களா?

78. அவர்களில் எழுத்தறிவற்றோரும் உள்ளனர். அவர்கள் பொய்களைத் தவிர வேதத்தை அறிந்து கொள்ள மாட்டார்கள். அவர்கள் கற்பனையே செய்கின்றனர்.

79. தம் கைகளால் நூலை எழுதி, அதை அற்ப விலைக்கு445 விற்பதற்காக "இது அல்லாஹ்விடமிருந்து வந்தது" என்று கூறுவோருக்குக் கேடு தான். அவர்களின் கைகள் எழுதியதற்காகவும் அவர்களுக்குக் கேடு உள்ளது. (அதன் மூலம்) சம்பாதித்ததற்காகவும் அவர்களுக்குக் கேடு உள்ளது.

80. குறிப்பிட்ட நாட்கள் தவிர நரகம் எங்களைத் தீண்டாது எனவும் அவர்கள் கூறினர். "அல்லாஹ்விடம் (இது பற்றி) ஏதாவது உடன்படிக்கை செய்துள்ளீர்களா? (அவ்வாறு செய்திருந்தால்) அல்லாஹ் தனது உடன்படிக்கையை மீறவே மாட்டான். அல்லது நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறுகிறீர்களா?'' என்று கேட்பீராக!

81. அவ்வாறில்லை! யாராக இருந்தாலும் தீமை செய்து, அவர்களின் குற்றம் அவர்களைச் சுற்றி வளைத்துக் கொள்ளுமானால் அவர்கள் நரகவாசிகளே. அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.

82. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோர் சொர்க்கவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.

83. "அல்லாஹ்வைத் தவிர (யாரையும்) நீங்கள் வணங்கக் கூடாது; பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும் நல்லுதவி புரிய வேண்டும்; மக்களிடம் அழகானதையே பேச வேண்டும்; தொழுகையை நிலைநாட்ட வேண்டும்; ஸகாத்தையும் கொடுக்க வேண்டும்'' என்று இஸ்ராயீலின் மக்களிடம் நாம் உறுதிமொழி எடுத்த பின்னர் உங்களில் சிலரைத் தவிர (மற்றவர்கள்) புறக்கணித்து அலட்சியப்படுத்தினீர்கள்.

84. "உங்கள் இரத்தங்களை ஓட்டிக் கொள்ளாதீர்கள்! உங்கள் வீடுகளிலிருந்து உங்களை (சேர்ந்தோரை) வெளியேற்றாதீர்கள்!'' என்று உங்களிடம் உறுதிமொழி எடுத்தபோது, நீங்களே சாட்சிகளாக இருந்து ஏற்றீர்கள்.

85. பின்னர் நீங்கள் உங்களை (சேர்ந்தவர்களை)க் கொலை செய்தீர்கள். உங்களில் ஒரு பகுதியினரை அவர்களது வீடுகளிலிருந்து விரட்டினீர்கள். அவர்களுக்கு எதிராக பாவமான காரியத்திலும், வரம்பு மீறலிலும் உதவிக் கொண்டீர்கள்! உங்களிடம் (யாரேனும்) கைதிகளாக வந்தால் (உங்கள் வேதத்தில் உள்ளபடி) ஈட்டுத் தொகை பெற்றுக் கொள்கிறீர்கள். (அதே வேதத்தில் உரிமையாளர்களை அவர்களின் வீட்டிலிருந்து) வெளியேற்றுவது தடை செய்யப்பட்டுள்ளது. வேதத்தில் ஒரு பகுதியை ஏற்று, மறு பகுதியை மறுக்கிறீர்களா? உங்களில் இவ்வாறு செய்பவனுக்கு இவ்வுலக வாழ்க்கையில் இழிவைத் தவிர வேறு கூலி இல்லை. கியாமத் நாளில்1 கடுமையான வேதனைக்கு அவர்கள் உட்படுத்தப்படுவார்கள். நீங்கள் செய்வதை அல்லாஹ் கவனிக்காதவனாக இல்லை.

86. அவர்களே மறுமையை1 விற்று இவ்வுலக வாழ்வை வாங்கியவர்கள். எனவே அவர்களுக்கு வேதனை இலேசாக்கப்படாது; அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.

87. மூஸாவுக்கு வேதத்தை வழங்கினோம். அவருக்குப் பின் பல தூதர்களைத் தொடரச் செய்தோம். மர்யமுடைய மகன் ஈஸாவுக்குத் தெளிவான சான்றுகளை வழங்கினோம். ரூஹுல் குதுஸ்444 மூலம் அவரைப் பலப்படுத்தினோம். நீங்கள் விரும்பாததைத் தூதர்கள் கொண்டு வந்த போதெல்லாம் அகந்தை கொண்டீர்கள். சிலரைப் பொய்யரென்றீர்கள். சிலரைக் கொன்றீர்கள்.

88. "எங்கள் உள்ளங்கள் மூடப்பட்டுள்ளன'' என்று கூறுகின்றனர். அவ்வாறில்லை! (தன்னை) மறுத்ததால் அல்லாஹ் அவர்களைச் சபித்தான்.6 அவர்கள் மிகக் குறைவாகவே நம்பிக்கை கொள்கின்றனர்.

89. (ஏகஇறைவனை) மறுப்போருக்கு எதிராக அவர்கள் இதற்கு முன் உதவி தேடி வந்தனர். அவர்களிடம் இருப்பதை உண்மைப்படுத்தும் வேதம் அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு வந்தபோது, (அதாவது) அவர்கள் அறிந்து வைத்திருந்தது25 அவர்களிடம் வந்தபோது, அதை (ஏற்க) மறுத்து விட்டனர். மறுப்போர் மீது அல்லாஹ்வின் சாபம் உள்ளது.6

90. அல்லாஹ் அருளியதை மறுப்பதற்குப் பகரமாக தங்களையே அவர்கள் விற்பனை செய்வது மிகவும் கெட்டது. அடியார்களில், தான் நாடியோருக்கு தனது அருளை அல்லாஹ் அருளியதில் பொறாமைப்பட்டதே இதற்குக் காரணம். எனவே கோபத்திற்கு மேல் கோபத்திற்கு ஆளானார்கள். (ஏகஇறைவனை) மறுப்போருக்கு இழிவுபடுத்தும் வேதனை இருக்கிறது.

91. "அல்லாஹ் அருளியதை நம்புங்கள்!'' என்று அவர்களிடம் கூறப்பட்டால் "எங்களுக்கு அருளப்பட்டதையே நம்புவோம்'' என்று கூறுகின்றனர். அதற்குப் பிறகு உள்ளதை (குர்ஆனை) மறுக்கின்றனர். அது உண்மையாகவும், அவர்களிடம் இருப்பதை உண்மைப்படுத்துவதாகவும் இருக்கிறது. "நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் இதற்கு முன் அல்லாஹ்வின் நபிமார்களை ஏன் கொலை செய்தீர்கள்?'' என்று (முஹம்மதே!) கேட்பீராக!

92. மூஸா தெளிவான சான்றுகளுடன் உங்களிடம் வந்தார். அவருக்குப் பின் அநீதி இழைத்து காளைக்கன்றைக் (கடவுளாக) கற்பனை செய்தீர்கள்.19

93. உங்களிடம் நாம் உடன்படிக்கை எடுத்ததை எண்ணிப் பாருங்கள்! தூர் மலையை உங்களுக்கு மேல் உயர்த்தினோம்.22 "உங்களுக்கு நாம் வழங்கியதைப் பலமாகப் பிடித்துக் கொள்ளுங்கள்! செவிமடுங்கள்!'' (எனக் கூறினோம்). "செவியுற்றோம்; மாறுசெய்தோம்'' என்று அவர்கள் கூறினர். (நம்மை) மறுத்ததால் அவர்களின் உள்ளங்களில் காளைக் கன்றின் பக்தி ஊட்டப்பட்டது.19 "நீங்கள் (சரியான) நம்பிக்கை கொண்டிருந்தால் உங்கள் நம்பிக்கை உங்களுக்குக் கெட்டதையே கட்டளை இடுகின்றதே'' என்று கேட்பீராக!

94. "அல்லாஹ்விடம் உள்ள மறுமை1 வாழ்க்கை ஏனைய மக்களுக்கு இல்லாமல் உங்களுக்கு மட்டும் சொந்தமானது என்பதில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் சாவதற்கு ஆசைப்படுங்கள்!'' என்று கூறுவீராக!

95. அவர்கள் செய்த வினை காரணமாக ஒருபோதும் அதற்கு ஆசைப்பட மாட்டார்கள். அநீதி இழைத்தோரை அல்லாஹ் அறிந்தவன்.

96. மற்ற மனிதர்களை விட, (குறிப்பாக) இணை கற்பித்தோரை விட வாழ்வதற்கு அதிகமாக ஆசைப்படுவோராக அவர்களைக் காண்பீர்! அவர்களில் ஒருவர் ஆயிரம் வருடங்கள் வாழ்நாளாக அளிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார். அவ்வாறு வாழ்நாள் அளிக்கப்படுவது வேதனையிலிருந்து அவரைத் தடுப்பதாக இல்லை. அவர்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன்.488

97. யாரேனும் ஜிப்ரீலுக்கு எதிரியாக இருந்தால் (அது தவறாகும்.) ஏனெனில் அவரே அல்லாஹ்வின் விருப்பப்படி இதை (முஹம்மதே!) உமது உள்ளத்தில்152 இறக்கினார்.492 "இது, தனக்கு முன் சென்றவற்றை4 உண்மைப்படுத்துவதாகவும், நம்பிக்கை கொண்டோருக்கு நேர்வழியாகவும், நற்செய்தியாகவும் உள்ளது'' என்று கூறுவீராக!

98. அல்லாஹ்வுக்கும், அவனது வானவர்களுக்கும், அவனது தூதர்களுக்கும், ஜிப்ரீலுக்கும், மீகாயீலுக்கும் யார் எதிரியாக இருக்கிறாரோ, அத்தகைய மறுப்போருக்கு அல்லாஹ்வும் எதிரியாக இருக்கிறான்.

99. தெளிவான வசனங்களை (முஹம்மதே!) உமக்கு அருளினோம். குற்றம் புரிவோரைத் தவிர (யாரும்) அதை மறுக்க மாட்டார்கள்.

100. அவர்கள் ஒப்பந்தம் செய்யும் போதெல்லாம் அவர்களில் ஒரு பகுதியினர் அதை வீசி எறிந்ததில்லையா? மாறாக அவர்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.

101. அவர்களிடம் இருப்பதை உண்மைப்படுத்தும் தூதர் (முஹம்மத்) அல்லாஹ்விடமிருந்து அவர்களிடம் வந்தபோது, வேதம் கொடுக்கப்பட்டோரில்27 ஒரு பிரிவினர் ஏதும் அறியாதோரைப் போல் அல்லாஹ்வின் வேதத்தைத் தமது முதுகுக்குப் பின்னால் வீசி எறிந்தனர்.

102. ஸுலைமானின் ஆட்சியில் ஷைத்தான்கள்5 கூறியதை இவர்கள் பின்பற்றினார்கள். ஸுலைமான் (ஏகஇறைவனை) மறுக்கவில்லை. மேலும் (ஜிப்ரீல், மீகாயீல் எனும்) அவ்விரு வானவர்களுக்கும் (சூனியம்) அருளப்படவில்லை.28 பாபில் நகரத்தில் சூனியத்தை357 மக்களுக்குக் கற்பித்த ஹாரூத், மாரூத்395 என்ற ஷைத்தான்களே5 (ஏகஇறைவனை) மறுத்தனர். "நாங்கள் படிப்பினையாக இருக்கிறோம். எனவே (இதைக் கற்று இறைவனை) மறுத்து விடாதே!'' என்று கூறாமல் அவ்விருவரும் யாருக்கும் கற்றுக் கொடுப்பதில்லை. எனவே எதன் மூலம் கணவனுக்கும், மனைவிக்குமிடையில் பிரிவினை ஏற்படுத்துவார்களோ அதை அவ்விருவரிடமிருந்தும் அவர்கள் கற்றுக் கொண்டனர். அல்லாஹ்வின் விருப்பமின்றி அதன் மூலம் யாருக்கும் எந்தத் தீங்கும் அவர்களால் செய்ய முடியாது.495 மேலும் அவர்கள் தமக்குத் தீங்களிப்பதையும், பயனளிக்காததையும் கற்றுக் கொண்டார்கள். "இதை விலைக்கு வாங்கியோருக்கு மறுமையில்1 எந்த நற்பேறும் இல்லை" என்பதை உறுதியாக அவர்கள் அறிந்து வைத்துள்ளனர். தங்களை எதற்காக விற்றார்களோ அது மிகவும் கெட்டது. அவர்கள் அறிய வேண்டாமா?

103. அவர்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் கூலி மிகவும் சிறந்தது. அவர்கள் அறிய வேண்டாமா?

104. நம்பிக்கை கொண்டோரே! 'ராஇனா' எனக் கூறாதீர்கள்! 'உன்ளுர்னா' என்று கூறுங்கள்! செவிமடுங்கள்! (ஏகஇறைவனை) மறுப்போருக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.29

105. (ஏகஇறைவனை) மறுக்கும் வேதம் கொடுக்கப்பட்டோரும்,27 இணை கற்பித்தோரும் உங்கள் இறைவனிடமிருந்து ஏதேனும் நன்மை உங்களுக்கு அருளப்படுவதை விரும்ப மாட்டார்கள். தான் நாடியோருக்கு மட்டும் தனது அருளை அல்லாஹ் வழங்குவான். அல்லாஹ் மகத்தான அருளுடையவன்.

106. ஏதேனும் வசனத்தை நாம் மாற்றினால்30 அல்லது அதை மறக்கச் செய்தால் அதைவிடச் சிறந்ததையோ, அதற்குச் சமமானதையோ தருவோம். அனைத்துப் பொருட்களின் மீதும் அல்லாஹ் ஆற்றலுள்ளவன் என்பதை நீர் அறியவில்லையா?

107. வானங்கள்507 மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது என்பதையும், அல்லாஹ்வையன்றி உங்களுக்குப் பாதுகாவலனோ, உதவுபவனோ இல்லை என்பதையும் நீர் அறியவில்லையா?

108. இதற்கு முன் மூஸாவிடம் (கேள்வி) கேட்கப்பட்டது31 போல் உங்கள் தூதரிடம் கேட்க விரும்புகிறீர்களா? நம்பிக்கையை (இறை)மறுப்பாக மாற்றுபவர் நேர்வழியை விட்டு விலகி விட்டார்.

109. நீங்கள் நம்பிக்கை கொண்ட பிறகு உங்களை (இறை)மறுப்போராக மாற்றிட வேதம் கொடுக்கப்பட்டோரில்27 பெரும்பாலோர் ஆசைப்படுகின்றனர். உண்மை அவர்களுக்குத் தெளிவான பின்பு அவர்களிடம் ஏற்பட்ட பொறாமையே இதற்குக் காரணம். அல்லாஹ் தனது கட்டளையைப் பிறப்பிக்கும் வரை (அவர்களை) பொருட்படுத்தாது அலட்சியப்படுத்தி விடுங்கள்! அனைத்துப் பொருட்களின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவன்.

110. தொழுகையை நிலைநாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்! உங்களுக்காக முற்படுத்தும் எந்த நன்மையையும் அல்லாஹ்விடம் பெற்றுக் கொள்வீர்கள். நீங்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன்.488

111. "யூதராகவோ, கிறித்தவராகவோ இருப்பவரைத் தவிர (யாரும்) சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள்'' என்று கூறுகின்றனர். இது அவர்களின் வீண் கற்பனை. "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்கள் சான்றைக் கொண்டு வாருங்கள்!'' என்று கேட்பீராக!

112. அவ்வாறில்லை! தமது முகத்தை அல்லாஹ்வுக்குப் பணியச் செய்து, நல்லறமும் செய்பவருக்கு அவரது கூலி அவரது இறைவனிடம் உள்ளது. அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை; அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.

113. "கிறித்தவர்கள் எதிலும் இல்லை" என்று யூதர்களும், "யூதர்கள் எதிலும் இல்லை" என்று கிறித்தவர்களும் வேதத்தைப் படித்துக் கொண்டே கூறுகின்றனர். அறியாத மக்களும் அவர்களைப் போலவே கூறுகின்றனர். அவர்கள் முரண்பட்டதில் அவர்களுக்கிடையே கியாமத் நாளில்1 அல்லாஹ் தீர்ப்பு வழங்குவான்.

114. அல்லாஹ்வின் பள்ளிவாசல்களில் அவனது பெயர் கூறப்படுவதைத் தடுத்து, அவற்றைப் பாழாக்க முயல்பவனை விட பெரும் அநீதி இழைத்தவன் யார்?32 பயந்து கொண்டே தவிர அவற்றில் நுழையும் உரிமை அவர்களுக்கு இல்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவும், மறுமையில்1 கடுமையான வேதனையுமுண்டு.

115. கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே. நீங்கள் எங்கே திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் உள்ளது.488 அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.

116. "அல்லாஹ் மகனை ஏற்படுத்திக் கொண்டான்'' எனக் கூறுகின்றனர். அவ்வாறில்லை! அவன் தூயவன்.10 வானங்களிலும்,507 பூமியிலும் உள்ளவை அவனுக்கே உரியன. அனைத்தும் அவனுக்கே அடிபணிகின்றன.

117. (அவன்) வானங்களையும்,507 பூமியையும் முன்மாதிரியின்றி படைத்தவன். ஒரு காரியத்தை அவன் முடிவு செய்யும்போது அது குறித்து 'ஆகு'506 என்றே கூறுவான். உடனே அது ஆகி விடும்.

118. "அல்லாஹ் எங்களிடம் பேசக் கூடாதா? அல்லது எங்களுக்கு ஓர் சான்று வரக் கூடாதா?'' என்று அறியாதோர் கூறுகின்றனர். இவர்களுக்கு முன் சென்றோர் இவர்களின் கூற்றைப் போலவே கூறினர். அவர்களின் உள்ளங்கள் ஒத்தவையாக இருக்கின்றன. உறுதியான நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு சான்றுகளைத் தெளிவுபடுத்துகிறோம்.

119. நற்செய்தி கூறுபவராகவும், எச்சரிக்கை செய்பவராகவும் உண்மையுடன் (முஹம்மதே!) உம்மை நாம் அனுப்பியுள்ளோம். நரகவாசிகளைப் பற்றி உம்மிடம் கேட்கப்படாது. 

120. யூதர்களும், கிறித்தவர்களும் அவர்களின் மார்க்கத்தை நீர் பின்பற்றும் வரை உம்மை ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள். "அல்லாஹ்வின் வழியே (சரியான) வழியாகும்'' எனக் கூறுவீராக! உமக்கு விளக்கம் வந்த பின் அவர்களின் மனோ இச்சைகளை நீர் பின்பற்றினால், அல்லாஹ்விடமிருந்து காப்பாற்றுபவனோ, உதவுபவனோ உமக்கு இல்லை.

121. நாம் யாருக்கு வேதத்தை வழங்கினோமோ அவர்கள் படிக்க வேண்டிய விதத்தில் அதைப் படிக்கின்றனர். அவர்களே அதில் நம்பிக்கை கொண்டவர்கள். அதை ஏற்க மறுப்போரே நட்டமடைந்தவர்கள்.

122. இஸ்ராயீலின் மக்களே! உங்களுக்கு நான் வழங்கியிருந்த அருட்கொடையையும், உலகத்தாரை விட உங்களைச் சிறப்பித்திருந்ததையும் எண்ணிப் பாருங்கள்!16

123. ஒருவர், இன்னொருவருக்கு எந்தப் பயனும் அளிக்க முடியாத நாளை1 அஞ்சுங்கள்! (அந்நாளில்) எவரிடமிருந்தும் எந்த ஈடும் பெறப்படாது. எவருக்கும் எந்தப் பரிந்துரையும் பயன்படாது.17 அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.

124. இப்ராஹீமை அவரது இறைவன் பல கட்டளைகள் மூலம் சோதித்த484போது அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார். "உம்மை மனிதர்களுக்குத் தலைவராக்கப் போகிறேன்'' என்று அவன் கூறினான். "எனது வழித்தோன்றல்களிலும்'' (தலைவர்களை ஆக்குவாயாக!) என்று அவர் கேட்டார். "என் வாக்குறுதி (உமது வழித்தோன்றல்களில்) அநீதி இழைத்தோரைச் சேராது''497 என்று அவன் கூறினான்.245

125. இந்த ஆலயத்தை33 மக்களின் ஒன்று கூடுமிடமாகவும், பாதுகாப்பு மையமாகவும் நாம் அமைத்ததை நினைவூட்டுவீராக!34 மகாமு இப்ராஹீமின் ஒரு பகுதியில்35 தொழுமிடத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! "தவாஃப் செய்வோருக்காகவும், இஃதிகாஃப் இருப்போருக்காகவும், ருகூவு, ஸஜ்தா செய்வோருக்காகவும் இருவரும் எனது ஆலயத்தைத் தூய்மைப்படுத்துங்கள்!'' என்று இப்ராஹீமிடமும், இஸ்மாயீலிடமும் உறுதிமொழி வாங்கினோம்.

126. "இறைவா! இவ்வூரைப் பாதுகாப்பு மையமாக34 ஆக்குவாயாக! இவ்வூராரில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும்1 நம்பியோருக்குக் கனிகளை வழங்குவாயாக!''497 என்று இப்ராஹீம் கூறியபோது, "(என்னை) மறுப்போருக்கும் சிறிது காலம் வசதிகள் அளிப்பேன்; பின்னர் அவர்களை நரக வேதனையில் தள்ளுவேன்; சேருமிடத்தில் அது மிகவும் கெட்டது'' என்று அவன் கூறினான். 

127. இந்த ஆலயத்தின்33 அடித்தளத்தை இப்ராஹீமும், இஸ்மாயீலும் உயர்த்தியபோது "எங்கள் இறைவா! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக! நீயே செவியுறுபவன்;488 அறிந்தவன்'' (என்றனர்.)

128. "எங்கள் இறைவா! எங்களை உனக்குக் கட்டுப்பட்டோராகவும், எங்கள் வழித்தோன்றல்களை உனக்குக் கட்டுப்பட்டு நடக்கும் சமுதாயமாகவும் ஆக்குவாயாக! எங்கள் வழிபாட்டு முறைகளை எங்களுக்குக் காட்டித் தருவாயாக! எங்களை மன்னிப்பாயாக! நீ மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' (என்றனர்.)

129. "எங்கள் இறைவா! (எங்கள் வழித்தோன்றல்களான) அவர்களிலிருந்து அவர்களுக்காக ஒரு தூதரை அனுப்புவாயாக! அவர், உனது வசனங்களை அவர்களுக்குக் கூறுவார். அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும்67 கற்றுக் கொடுப்பார். அவர்களைத் தூய்மைப்படுத்துவார். நீயே மிகைத்தவன்; ஞானமிக்கவன்'' (என்றனர்.)36

130. தன்னை அறிவிலியாக்கிக் கொண்டவனைத் தவிர யார் இப்ராஹீமின் மார்க்கத்தைப் புறக்கணிக்க முடியும்? அவரை இவ்வுலகில் நாம் தேர்வு செய்தோம். அவர் மறுமையில்1 நல்லோரில் இருப்பார்.

131. அவரது இறைவன் 'கட்டுப்படு!' என்று அவரிடம் கூறியபோது "அகிலத்தின் இறைவனுக்குக் கட்டுப்பட்டேன்'' என்று அவர் கூறினார்.

132. "என் மக்களே! அல்லாஹ் உங்களுக்காக இம்மார்க்கத்தைத் தேர்வு செய்துள்ளான். முஸ்லிம்களாகவே295 தவிர நீங்கள் மரணிக்கக் கூடாது'' என்று இப்ராஹீமும், யாகூபும் தமது பிள்ளைகளுக்கு வலியுறுத்தினர்.

133. யாகூபுக்கு மரணம் நெருங்கியபோது, நீங்கள் சாட்சிகளாக இருந்தீர்களா? "எனக்குப்பின் எதை வணங்குவீர்கள்?'' என்று தமது பிள்ளைகளிடம் அவர் கேட்டபோது "உங்கள் இறைவனும், உங்கள் தந்தையரான இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் இறைவனுமாகிய ஒரே இறைவனையே வணங்குவோம். நாங்கள் அவனுக்கே கட்டுப்பட்டவர்கள்'' என்றே (பிள்ளைகள்) கூறினர்.

134. அவர்கள், சென்று விட்ட சமுதாயம். அவர்கள் செய்தது அவர்களுக்கு. நீங்கள் செய்தது உங்களுக்கு. அவர்கள் செய்தது குறித்து நீங்கள் விசாரிக்கப்பட மாட்டீர்கள்.265

135. "யூதர்களாகவோ, கிறித்தவர்களாகவோ ஆகி விடுங்கள்! நேர்வழி பெறுவீர்கள்'' என்று கூறுகின்றனர். "அவ்வாறல்ல! உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தையே (பின்பற்றுவோம்). அவர் இணைகற்பித்தவராக இருந்ததில்லை'' எனக் கூறுவீராக!

136. "அல்லாஹ்வையும், எங்களுக்கு அருளப்பட்டதையும், இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யாகூப் மற்றும் (அவரது) வழித்தோன்றல்களுக்கு அருளப்பட்டதையும், மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் வழங்கப்பட்டதையும், ஏனைய நபிமார்களுக்கு தமது இறைவனிடமிருந்து வழங்கப்பட்டதையும் நம்பினோம்; அவர்களுக்கிடையே பாகுபாடு காட்டமாட்டோம்;37 அவனுக்கே நாங்கள் கட்டுப்பட்டவர்கள்'' என்று கூறுங்கள்!

137. நீங்கள் நம்பிக்கை கொண்டது போல் அவர்களும் நம்பிக்கை கொண்டால் நேர்வழி பெறுவர். புறக்கணிப்பார்களாயின் அவர்கள் முரண்பாட்டில் உள்ளனர். அவர்கள் விஷயத்தில் அல்லாஹ் உமக்குப் போதுமானவன்; அவன் செவியுறுபவன்;488 அறிந்தவன்.

138. "(நாங்கள்) அல்லாஹ் தீட்டும் வர்ணத்தை38 (ஏற்பவர்கள்.) அல்லாஹ்வை விட அழகிய வர்ணம் தீட்டுபவன் யார்? நாங்கள் அவனையே வணங்குபவர்கள்'' (என்று கூறுங்கள்!)

139. "அல்லாஹ்வைப் பற்றி எங்களிடம் விதண்டாவாதம் செய்கிறீர்களா? அவனே எங்கள் இறைவனும், உங்கள் இறைவனுமாவான். எங்கள் செயல்கள் எங்களுக்கு. உங்கள் செயல்கள் உங்களுக்கு. நாங்கள் அவனுக்கே உளத்தூய்மையுடன் நடப்பவர்கள்'' என்று கூறுவீராக!

140. "இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யாகூப் மற்றும் (அவரது) வழித்தோன்றல்கள் யூதர்களாகவோ, கிறித்தவர்களாகவோ இருந்தார்கள் என்று கூறுகிறீர்களா? நன்கு அறிந்தோர் நீங்களா? அல்லாஹ்வா?'' என்று கேட்பீராக! அல்லாஹ்விடமிருந்து தனக்குக் கிடைத்த சான்றை மறைப்பவனை விட அநீதி இழைத்தவன் யார்? நீங்கள் செய்வதை அல்லாஹ் கவனிக்காதவனாக இல்லை.

141. அவர்கள் சென்று விட்ட சமுதாயம். அவர்கள் செய்தது அவர்களுக்கு. நீங்கள் செய்தது உங்களுக்கு. அவர்கள் செய்ததைப் பற்றி நீங்கள் விசாரிக்கப்பட மாட்டீர்கள்.265

142. "(முஸ்லிம்கள்) ஏற்கனவே இருந்த தமது கிப்லாவை விட்டும் ஏன் திரும்பி விட்டனர்?'' என்று மனிதர்களில் அறிவிலிகள் கேட்பார்கள். "கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே உரியன. அவன் நாடியோரை நேரான வழியில் செலுத்துகிறான்'' என்று கூறுவீராக!

143. இவ்வாறே நீங்கள் (மற்ற) மக்களுக்கு எடுத்துச் சொல்வோராகத் திகழவும், இத்தூதர் (முஹம்மத்) உங்களுக்கு எடுத்துச் சொல்பவராகத் திகழவும் உங்களை நடுநிலையான சமுதாயமாக்கினோம். வந்த வழியே திரும்பிச் செல்வோரிலிருந்து இத்தூதரைப் பின்பற்றுவோரை அடையாளம் காட்டுவதற்காகவே, ஏற்கனவே நீர் நோக்கிய கிப்லாவை நிர்ணயித்திருந்தோம்.39 அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்டினானோ அவரைத் தவிர (மற்றவர்களுக்கு) இது பாரமாகவே இருக்கிறது. அல்லாஹ் உங்கள் நம்பிக்கையைப் பாழாக்குபவனாக இல்லை.498 அல்லாஹ் இரக்கமுடையோன்; நிகரற்ற அன்புடையோன்.

144. (முஹம்மதே!) உம்முடைய முகம் வானத்தை507 நோக்கி அடிக்கடி திரும்புவதைக் காண்கிறோம். எனவே நீர் விரும்புகிற கிப்லாவை நோக்கி உம்மைத் திருப்புகிறோம். எனவே உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராமின் திசையில் திருப்புவீராக! நீங்கள் எங்கே இருந்தாலும் உங்கள் முகங்களை அதன் திசையிலேயே திருப்பிக் கொள்ளுங்கள்!430 "இதுவே தமது இறைவனிடமிருந்து வந்த உண்மை'' என்று வேதம் கொடுக்கப்பட்டோர்27 அறிவார்கள். அவர்கள் செய்பவற்றை அல்லாஹ் கவனிக்காதவனாக இல்லை.

145. வேதம் கொடுக்கப்பட்டோரிடம்27 அத்தனை சான்றுகளையும் (முஹம்மதே!) நீர் கொண்டு வந்தாலும் அவர்கள் உமது கிப்லாவைப் பின்பற்ற மாட்டார்கள். நீர் அவர்களின் கிப்லாவைப் பின்பற்றுபவராக இல்லை. அவர்களிலேயே ஒருவர் மற்றவரின் கிப்லாவைப் பின்பற்றுபவராக இல்லை. உமக்கு விளக்கம் வந்த பின் அவர்களின் மனோ இச்சையை நீர் பின்பற்றினால் அநீதி இழைத்தவராவீர்!

146. நாம் யாருக்கு வேதத்தை வழங்கினோமோ அவர்கள்,27 தமது பிள்ளைகளை அறிவது போல் இவரை அறிவார்கள்.25 அவர்களில் ஒரு சாரார் அறிந்து கொண்டே உண்மையை மறைக்கின்றனர்.

147. இவ்வுண்மை உம் இறைவனிடமிருந்து வந்ததாகும். எனவே சந்தேகம் கொள்பவராக ஆகி விடாதீர்!

148. ஒவ்வொருவருக்கும் முன்னோக்கும் இலக்கு உள்ளது. அவர் அதை நோக்குகிறார். எனவே நன்மைகளுக்கு முந்திக் கொள்ளுங்கள்! நீங்கள் எங்கே இருந்தாலும் உங்கள் அனைவரையும் அல்லாஹ் கொண்டு வருவான். அனைத்துப் பொருட்களின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவன்.

149. நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராம் திசையில் திருப்புவீராக!430 அதுவே உம் இறைவனிடமிருந்து கிடைத்த உண்மை. நீங்கள் செய்வதை அல்லாஹ் கவனிக்காதவனாக இல்லை.

150. நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராம் திசையில் திருப்புவீராக!430 எங்கே நீங்கள் இருந்தாலும் உங்கள் முகங்களை அதன் திசையிலேயே திருப்பிக் கொள்ளுங்கள்! அவர்களில் அநீதி இழைத்தோரைத் தவிர (மற்ற) மக்களிடம் உங்களுக்கு எதிராக எந்தச் சான்றும் இருக்கக் கூடாது என்பதும், எனது அருட்கொடையை உங்களுக்கு நான் முழுமைப்படுத்துவதும், நீங்கள் நேர்வழி பெறுவதுமே இதற்குக் காரணம்.40 எனவே அவர்களுக்கு அஞ்சாதீர்கள்! எனக்கே அஞ்சுங்கள்!

151. உங்களுக்கு உங்களிலிருந்து தூதரை அனுப்பியது போல் (கிப்லாவை மாற்றுவதன் மூலமும் அருள் புரிந்தான்). அவர் உங்களுக்கு நமது வசனங்களைக் கூறுவார். உங்களைத் தூய்மைப்படுத்துவார். உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும்67 கற்றுத் தருவார். நீங்கள் அறியாமல் இருந்தவற்றையும் உங்களுக்கு அவர் கற்றுத் தருவார்.36

152. எனவே என்னை நினையுங்கள்! நானும் உங்களை நினைக்கிறேன்.6 எனக்கு நன்றி செலுத்துங்கள்! எனக்கு நன்றி மறக்காதீர்கள்!

153. நம்பிக்கை கொண்டோரே! பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்! அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்.

154. அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் எனக் கூறாதீர்கள்! மாறாக உயிருடன் உள்ளனர். எனினும் நீங்கள் உணர மாட்டீர்கள்.41

155. ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்களையும், உயிர்களையும், பலன்களையும் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம்.484 பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக!

156. தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும்போது "நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்'' என்று அவர்கள் கூறுவார்கள்.

157. அவர்களுக்கே தமது இறைவனின் அருள்களும், அன்பும் உள்ளன. அவர்களே நேர்வழி பெற்றோர்.

158. ஸஃபாவும், மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்கள். இந்த ஆலயத்தில்33 ஹஜ்ஜோ, உம்ராவோ செய்பவர், அவ்விரண்டையும் சுற்றுவது குற்றமில்லை.400 நன்மைகளை மேலதிகமாகச் செய்பவருக்கு அல்லாஹ் நன்றி பாராட்டுபவன்;6 அறிந்தவன்.

159. வேதத்தில் மக்களுக்காக நாம் தெளிவுபடுத்திய பின்னர் நாம் அருளிய தெளிவான சான்றுகளையும், நேர்வழியையும் மறைப்பவர்களை அல்லாஹ்வும் சபிக்கிறான்.6 சபிப்ப(தற்குத் தகுதியுடைய)வர்களும் சபிக்கின்றனர்.

160. மன்னிப்புக் கேட்டு (தங்களைத்) திருத்திக் கொண்டு, (மறைத்தவற்றை) தெளிவுபடுத்தியோரைத் தவிர. அவர்களை நான் மன்னிப்பேன். நான் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

161. (ஏகஇறைவனை) மறுத்து, மறுத்த நிலையிலேயே மரணித்தோர் மீது அல்லாஹ்வின் சாபமும்6 வானவர்கள் மற்றும் அனைத்து (நல்ல) மனிதர்களின் சாபமும் உள்ளது.

162. அதில் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களுக்கு வேதனை இலேசாக்கப்படாது. அவர்கள் அவகாசம் அளிக்கப்படவும் மாட்டார்கள்.

163. உங்கள் வணக்கத்திற்குரியவன் ஒரே ஒரு இறைவனே. அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. (அவன்) அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன்.

164. வானங்களையும்,507 பூமியையும் படைத்திருப்பதிலும், இரவு பகல் மாறிமாறி வருவதிலும், மக்களுக்குப் பயனளிப்பவற்றுடன் கடலில் செல்லும் கப்பலிலும், அல்லாஹ் வானத்திலிருந்து507 இறக்கி வைக்கும் மழையிலும், பூமி வறண்ட பின் அதன் மூலம் அதைச் செழிக்கச் செய்வதிலும், ஒவ்வொரு உயிரினத்தையும் அதில் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறிமாறி வீசச் செய்திருப்பதிலும், வானத்திற்கும்,507 பூமிக்கும் இடையே வசப்படுத்தப்பட்டுள்ள மேகத்திலும் உணரும் சமுதாயத்திற்குப் பல சான்றுகள் உள்ளன.

165. அல்லாஹ்வையன்றி பல கடவுள்களைக் கற்பனை செய்து, அல்லாஹ்வை விரும்புவது போல் அவர்களை விரும்புவோரும் மனிதர்களில் உள்ளனர். நம்பிக்கை கொண்டோர் (அவர்களை விட) அல்லாஹ்வை அதிகமாக நேசிப்பவர்கள். அநீதி இழைத்தோர் வேதனையைக் காணும்போது அனைத்து வல்லமையும் அல்லாஹ்வுக்கே என்பதையும், அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன் என்பதையும் கண்டு கொள்வார்கள்.

166. பின்பற்றப்பட்டோர், வேதனையைக் காணும்போது (தம்மைப்) பின்பற்றியோரிடமிருந்து விலகிக் கொள்வர். அவர்களிடையே (இருந்த) உறவுகள் முறிந்து விடும்.

167. "(உலகுக்கு) திரும்பிச் செல்லும் வாய்ப்பு எங்களுக்கு இருக்குமானால் அவர்கள் எங்களிடமிருந்து விலகிக் கொண்டதைப் போல் அவர்களிடமிருந்து நாங்களும் விலகிக் கொள்வோம்'' என்று பின்பற்றியோர் கூறுவார்கள். இப்படித்தான் அல்லாஹ் அவர்களது செயல்களை அவர்களுக்கே கவலையளிப்பதாகக் காட்டுகிறான். அவர்கள் நரகிலிருந்து வெளியேறுவோர் அல்லர்.

168. மனிதர்களே! பூமியில் உள்ளவற்றில் அனுமதிக்கப்பட்ட தூய்மையானதை உண்ணுங்கள்! ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்! அவன் உங்களுக்குப் பகிரங்க எதிரியாவான்.

169. அவன் தீமையையும், வெட்கக்கேடானதையும், நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுவதையும் உங்களுக்குத் தூண்டுகிறான்.

170. "அல்லாஹ் அருளியதைப் பின்பற்றுங்கள்!'' என்று அவர்களிடம் கூறப்பட்டால் "எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதையே பின்பற்றுவோம்'' என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் விளங்காமலும், நேர்வழி பெறாமலும் இருந்தாலுமா?

171. வெறும் சப்தத்தையும், ஓசையையும் மட்டுமே கேட்கும் கால்நடைகளை அழைப்பதற்காக சப்தம் போடுபவனின் தன்மை போன்றே (ஏகஇறைவனை) மறுப்போரின் தன்மை உள்ளது. (அவர்கள்) செவிடர்கள்; ஊமைகள்; குருடர்கள். எனவே அவர்கள் விளங்க மாட்டார்கள்.

172. நம்பிக்கை கொண்டோரே! நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையானவற்றை உண்ணுங்கள்! நீங்கள் அல்லாஹ்வையே வணங்குவோராக இருந்தால் அவனுக்கே நன்றி செலுத்துங்கள்!

173. தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி,407 அல்லாஹ் அல்லாதோருக்காக சப்தமிடப்பட்டவை42 ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்துள்ளான்.171 வரம்பு மீறாமலும், வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப்படுவோர்431 மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

174. அல்லாஹ் அருளிய வேதத்தை மறைத்து அதை அற்ப விலைக்கு விற்போர்,445 தமது வயிறுகளில் நெருப்பைத் தவிர (வேறு எதையும்) சாப்பிடுவதில்லை. கியாமத் நாளில்1 அல்லாஹ் அவர்களுடன் பேச மாட்டான். அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு.

175. அவர்களே நேர்வழியை விற்று வழிகேட்டையும், மன்னிப்பை விற்று வேதனையையும் விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள். நரகத்தைச் சகித்துக் கொள்ளும் அவர்களின் துணிவை என்னவென்பது!

176. அல்லாஹ் உண்மையை உள்ளடக்கிய வேதத்தை அருளியிருந்(தும் அதை மறைத்)ததே இதற்குக் காரணம். வேதத்திற்கு முரண்படுவோர் (உண்மையிலிருந்து) தூரமான முரண்பாட்டிலேயே உள்ளனர்.

177. உங்கள் முகங்களை கிழக்கு நோக்கியோ, மேற்கு நோக்கியோ திருப்புவது நன்மையன்று. மாறாக அல்லாஹ்வையும், இறுதி நாளையும்,1 வானவர்களையும், வேதங்களையும், நபிமார்களையும் நம்புவோரும் உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், நாடோடிகளுக்கும்,206 யாசிப்போருக்கும், மற்றும் அடிமைகளை விடுதலை செய்வதற்கும் (மன) விருப்பத்துடன் செல்வத்தை வழங்குவோரும், தொழுகையை நிலைநாட்டுவோரும், ஸகாத்தை வழங்குவோரும், வாக்களித்தால் தமது வாக்கை நிறைவேற்றுவோரும், வறுமை, நோய், மற்றும் போர்க்களத்தில் சகித்துக் கொள்வோருமே நன்மை செய்பவர்கள். அவர்களே உண்மை கூறியவர்கள். அவர்களே (இறைவனை) அஞ்சுபவர்கள்.

178. நம்பிக்கை கொண்டோரே! (கொல்லப்பட்ட) சுதந்திரமானவனுக்காக (கொலைசெய்த) சுதந்திரமானவன், (கொல்லப்பட்ட) அடிமைக்காக (கொலைசெய்த) அடிமை, (கொல்லப்பட்ட) பெண்ணுக்காக (கொலைசெய்த) பெண், என்ற வகையில் கொல்லப்பட்டோருக்காகப் பழி வாங்குவது உங்களுக்குக் கடமையாக்கப்பட்டுள்ளது. கொலையாளிக்கு (கொல்லப்பட்டவனின் வாரிசாகிய) அவனது (கொள்கைச்) சகோதரன் மூலம் ஏதேனும் மன்னிக்கப்படுமானால் நல்ல விதமாக நடந்து அழகிய முறையில் அவனிடம் (இழப்பீடு) வழங்க வேண்டும்.401 இது உங்கள் இறைவன் எளிதாக்கியதும், அருளுமாகும். இதன் பிறகு யாரேனும் வரம்பு மீறினால் அவருக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது.43

179. அறிவுடையோரே! பழிக்குப்பழி வாங்கும் சட்டத்தில் உங்களுக்கு வாழ்வு உள்ளது. (இச்சட்டத்தினால் கொலை செய்வதிலிருந்து) விலகிக் கொள்வீர்கள்.43

180. உங்களில் ஒருவர் செல்வத்தை விட்டுச் சென்றால் அவருக்கு மரணம் நெருங்கும்போது பெற்றோருக்காகவும், உறவினருக்காகவும் சிறந்த முறையில் மரணசாசனம் செய்வது கடமையாக்கப்பட்டுள்ளது. (இறைவனை) அஞ்சுவோருக்கு இது கடமை.45

181. (மரண சாசனத்துக்குச் சாட்சியாக இருந்தோர்) அதைச் செவிமடுத்த பின் மாற்றிக் கூறினால் அதற்கான குற்றம், மாற்றிக் கூறியோரையே சேரும். அல்லாஹ் செவியுறுபவன்;488 அறிந்தவன்.

182. மரணசாசனம் செய்பவரிடம் அநீதியையோ, பாவத்தையோ யாரேனும் அஞ்சினால் அவர்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது அவர் மீது குற்றம் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

183, 184. நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன்சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. உங்களில் நோயாளியாகவோ, பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம். அதற்குச் சக்தியுள்ளவர்கள் ஓர் ஏழைக்கு உணவளிப்பது பரிகாரமாகும்.47 நன்மைகளை மேலதிகமாகச் செய்வோருக்கு அது நல்லது. நீங்கள் அறிந்தால் நோன்பு நோற்பதே சிறந்தது.26&475

185. இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் அருளப்பட்டது. (இது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர்வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும்.44 நோயாளியாகவோ, பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம். அல்லாஹ் உங்களுக்கு எளிதானதையே நாடுகிறான். சிரமமானதை உங்களுக்கு நாடமாட்டான்.68 எண்ணிக்கையை நீங்கள் முழுமையாக்குவதற்காகவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக நீங்கள் அல்லாஹ்வைப் பெருமைப்படுத்திடவும், நன்றி செலுத்திடவும் (வேறு நாட்களில் நோற்கும் சலுகை வழங்கப்பட்டது)

186. என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் "நான் அருகில்49 இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும்போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர்வழி பெறுவார்கள்'' (என்பதைக் கூறுவீராக!)

187. நோன்பின் இரவில் உங்கள் மனைவியரிடம் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் உங்களுக்கு ஆடை. நீங்கள் அவர்களுக்கு ஆடை.465 உங்களுக்கு நீங்கள் துரோகம் செய்து கொண்டிருந்தது அல்லாஹ்வுக்குத் தெரியும். எனவே உங்கள் மன்னிப்பை ஏற்று உங்களைப் பிழை பொறுத்தான். இப்போது (முதல்) அவர்களுடன் கூடுங்கள்!50 அல்லாஹ் உங்களுக்கு விதித்ததை (சந்ததியை)த் தேடுங்கள்! வைகறை எனும் வெள்ளைக் கயிறு, (இரவு எனும்) கருப்புக் கயிறிலிருந்து தெளிவாகும் வரை உண்ணுங்கள்! பருகுங்கள்! பின்னர் இரவு வரை நோன்பை முழுமைப்படுத்துங்கள்! பள்ளிவாசல்களில் இஃதிகாஃப் இருக்கும்போது மனைவியருடன் கூடாதீர்கள்! இவை அல்லாஹ்வின் வரம்புகள். எனவே அவற்றை நெருங்காதீர்கள்! (தன்னை) அஞ்சுவதற்காகத் தனது வசனங்களை அல்லாஹ் மக்களுக்கு இவ்வாறு தெளிவுபடுத்துகிறான்.

188. உங்களுக்கிடையே (ஒருவருக்கொருவர்) உங்கள் பொருட்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள்! தெரிந்து கொண்டே மக்களின் பொருட்களில் ஒரு பகுதியைப் பாவமான முறையில் சாப்பிடுவதற்காக அதிகாரிகளிடம் உங்கள் பொருட்களை (இலஞ்சமாகக்) கொண்டு செல்லாதீர்கள்!

189. பிறைகளைப்51 பற்றி (முஹம்மதே!) உம்மிடம் கேட்கின்றனர். "அவை மக்களுக்கும், (குறிப்பாக) ஹஜ்ஜுக்கும் காலம் காட்டிகள்'' எனக் கூறுவீராக! வீடுகளுக்குள் அதன், பின்வழியாக வருவது நன்மை அன்று.52 (இறைவனை) அஞ்சுவதே நன்மை. எனவே வீடுகளுக்கு வாசல்கள் வழியாகவே செல்லுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள். இதனால் வெற்றி பெறுவீர்கள்.

190. உங்களிடம் போருக்கு வருவோருடன் அல்லாஹ்வின் பாதையில் நீங்களும் போர் செய்யுங்கள்! வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறியோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.53

191. (களத்தில்) சந்திக்கும்போது அவர்களைக் கொல்லுங்கள்! அவர்கள் உங்களை வெளியேற்றியவாறு நீங்களும் அவர்களை வெளியேற்றுங்கள்! கலகம், கொலையை விடக் கடுமையானது. மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் உங்களுடன் போருக்கு வராத வரை அங்கே அவர்களுடன் போர் செய்யாதீர்கள்! அவர்கள் உங்களுடன் போருக்கு வந்தால் அவர்களைக் கொல்லுங்கள்! (ஏகஇறைவனை) மறுப்போருக்கு இதுவே தண்டனை.53

192. (போரிலிருந்து) அவர்கள் விலகிக் கொள்வார்களானால் அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.53

193. கலகம் இல்லாதொழிந்து அதிகாரம்54 அல்லாஹ்வுக்குரியதாக ஆகும் வரை அவர்களுடன் போர் செய்யுங்கள்! அவர்கள் விலகிக் கொள்வார்களானால் அநீதி இழைத்தோர் மீதே தவிர (மற்றவர்கள் மீது) எந்த வரம்பு மீறலும் கூடாது.53

194. புனித மாதத்துக்கு55 (நிகர்) புனித மாதமே! புனிதங்கள் இரு தரப்புக்கும் சமமானவை. உங்களிடம் வரம்பு மீறியோரிடம் அவர்கள் வரம்பு மீறியது போன்ற அதே அளவு நீங்களும் வரம்பு மீறுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! (தன்னை) அஞ்சுவோருடனே அல்லாஹ் இருக்கிறான்49 என்பதை அறிந்து கொள்ளுங்கள்!

195. அல்லாஹ்வின் பாதையில் செலவிடுங்கள்! உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்! நன்மை செய்யுங்கள்! நன்மை செய்வோரை அல்லாஹ் விரும்புகிறான்.

196. அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும், உம்ராவையும் முழுமைப்படுத்துங்கள்! நீங்கள் தடுக்கப்பட்டால் இயன்ற பலிப்பிராணியை (அறுங்கள்.) பலிப்பிராணி அதற்குரிய இடத்தை அடைவதற்கு முன் உங்கள் தலைகளை மழிக்காதீர்கள்! உங்களில் நோயாளியாகவோ, தலையில் ஏதேனும் தொந்தரவோ இருப்பவர் (தலையை முன்னரே மழிக்கலாம்.) அதற்குப் பரிகாரமாக நோன்பு அல்லது தர்மம் அல்லது பலியிடுதல் உண்டு. உங்களில் அச்சமற்ற நிலையை அடைந்து ஹஜ்ஜையும், உம்ராவையும் தமத்துவ்56 முறையில் செய்பவர், இயன்ற பலிப்பிராணியை (பலியிட வேண்டும்) அது கிடைக்காதவர் ஹஜ்ஜின்போது மூன்று நோன்புகளும் (ஊர்) திரும்பிய பின் ஏழு நோன்புகளும் நோற்க வேண்டும். இதனால் பத்து முழுமை பெறும். இ(ச்சலுகையான)து மஸ்ஜிதுல் ஹராமில் யாருடைய குடும்பம் வசிக்கவில்லையோ அவருக்குரியது. அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் தண்டிப்பதில் கடுமையானவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! 

197. ஹஜ்(ஜுக்குரிய காலம்) தெரிந்த மாதங்களாகும்.57 அம்மாதங்களில் ஹஜ்ஜை (தன்மீது) விதியாக்கிக் கொண்டவர் ஹஜ்ஜின்போது உடலுறவு கொள்வதோ, குற்றம் செய்வதோ, விதண்டாவாதம் புரிவதோ கூடாது. நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அதை அல்லாஹ் அறிகிறான். (ஹஜ்ஜுக்குத்) தேவையானவற்றைத் திரட்டிக் கொள்ளுங்கள்! திரட்டிக் கொள்ள வேண்டியவற்றில் (இறை) அச்சமே மிகச் சிறந்தது. அறிவுடையோரே! என்னை அஞ்சுங்கள்!

198. (ஹஜ்ஜின்போது வியாபாரத்தின் மூலம்) உங்கள் இறைவனின் அருளைத் தேடுவது உங்களுக்குக் குற்றமில்லை.58 அரஃபாத் பெருவெளியிலிருந்து நீங்கள் திரும்பும்போது மஷ்அருல் ஹராமில் அல்லாஹ்வை நினையுங்கள்! அவன் உங்களுக்குக் காட்டித் தந்தவாறு அவனை நினையுங்கள்! இதற்கு முன் வழிதவறி இருந்தீர்கள்.

199. பின்னர், மக்கள் எங்கிருந்து புறப்படுகிறார்களோ அங்கிருந்து நீங்களும் புறப்படுங்கள்!59 அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேளுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

200. உங்கள் முன்னோர்களை நீங்கள் நினைப்பது போல், அல்லது அதைவிட அதிகமாக உங்களுடைய வழிபாடுகளை முடிக்கும்போது அல்லாஹ்வை நினையுங்கள்! "எங்கள் இறைவா! இவ்வுலகில் எங்களுக்கு (நன்மையை) வழங்குவாயாக!'' எனக் கேட்போரும் மனிதர்களில் உள்ளனர். அவருக்கு மறுமையில்1 எந்த நற்பேறும் இல்லை.

201. "எங்கள் இறைவா! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும்1 நன்மையை (வழங்குவாயாக!) நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!'' என்று கூறுவோரும் மனிதர்களில் உள்ளனர்.

202. அவர்களுக்கே அவர்கள் பாடுபட்டதற்கான பங்கு உள்ளது. அல்லாஹ் விரைந்து கணக்கெடுப்பவன்.

203. குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வை நினையுங்கள்! இரண்டு நாட்களில் விரைபவர் மீதும் குற்றமில்லை. தாமதிப்பவர் மீதும் குற்றமில்லை.60 (இது இறைவனை) அஞ்சுவோருக்கு உரியது. அல்லாஹ்வை அஞ்சுங்கள்! 'அவனிடம் ஒன்று சேர்க்கப்படுவீர்கள்' என்பதை அறிந்து கொள்ளுங்கள்!

204. உம்மைக் கவரும் வகையில் இவ்வுலக வாழ்வைப் பற்றிப் பேசுகின்ற, கடுமையான வாதத்திறமை உள்ளவனும் மனிதர்களில் இருக்கிறான். தன் உள்ளத்தில் இருப்பதற்கு அல்லாஹ்வையும் சாட்சியாக்குகிறான்.

205. அவன் உம்மை விட்டுப் புறப்பட்டதும் இம்மண்ணில் குழப்பம் விளைவிக்கவும், பயிர்களையும், உயிர்களையும் அழிக்கவும் முயல்கிறான். அல்லாஹ் குழப்பத்தை விரும்ப மாட்டான்.

206. "அல்லாஹ்வை அஞ்சிக்கொள்!'' என்று அவனிடம் கூறப்பட்டால் அவனது ஆணவம் அவனைப் பாவத்தில் ஆழ்த்துகிறது. அவனுக்கு நரகமே போதுமானது. அது மிகக் கெட்ட தங்குமிடம்.

207. அல்லாஹ்வின் திருப்தியை விரும்பி தம்மையே அர்ப்பணிப்பவர்களும் மனிதர்களில் உள்ளனர். அடியார்கள் மீது அல்லாஹ் இரக்கமுடையோன்.

208. நம்பிக்கை கொண்டோரே! இஸ்லாத்தில் முழுமையாக நுழையுங்கள்! ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்! அவன் உங்களுக்குப் பகிரங்க எதிரியாவான்.

209. தெளிவான சான்றுகள் உங்களுக்கு வந்தபின் நீங்கள் தடம் புரண்டால் "அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்" என்பதை அறிந்து கொள்ளுங்கள்!

210. மேகக் கூட்டங்களில் அல்லாஹ்வும்,61 வானவர்களும்153 வந்து காரியம் முடிக்கப்பட வேண்டும் என்பதைத்தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்களா? அல்லாஹ்விடமே காரியங்கள் கொண்டு வரப்படும்.

211. எத்தனை தெளிவான சான்றுகளை அவர்களுக்கு வழங்கியிருந்தோம் என இஸ்ராயீலின் மக்களிடம் கேட்பீராக! அல்லாஹ்வின் அருட்கொடை தன்னிடம் வந்த பின்பு மாற்றுபவனைத் தண்டிப்பதில் அல்லாஹ் கடுமையானவன்.

212. (ஏகஇறைவனை) மறுப்போருக்கு இவ்வுலக வாழ்க்கை அழகாக்கப்பட்டுள்ளது. அவர்கள் நம்பிக்கை கொண்டோரைக் கேலி செய்கின்றனர். (இறைவனை) அஞ்சியோர் கியாமத் நாளில்1 அவர்களுக்கு மேலே இருப்பார்கள். அல்லாஹ், தான் நாடியோருக்கு கணக்கின்றி வழங்குகிறான்.

213. மனிதர்கள் ஒரே ஒரு சமுதாயமாகவே இருந்தனர். எச்சரிக்கை செய்யவும், நற்செய்தி கூறவும் நபிமார்களை அல்லாஹ் அனுப்பினான். மக்கள் முரண்பட்டவற்றில் அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக உண்மையை உள்ளடக்கிய வேதத்தை அவர்களுடன் அருளினான். தெளிவான சான்றுகள் அவர்களிடம் வந்த பின்பும் வேதம் வழங்கப்பட்டவர்கள்27 அதற்கு முரண்பட்டனர். அவர்களுக்கிடையே இருந்த பொறாமையே (இதற்குக்) காரணம். அவர்கள் முரண்பட்டதில் எது உண்மை என நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் தனது விருப்பப்படி வழிகாட்டினான். தான் நாடியோரை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துவான்.

214. உங்களுக்கு முன் சென்றோருக்கு ஏற்பட்டது போல் உங்களுக்கும் ஏற்படாமல் சொர்க்கத்தில் நுழையலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா? அவர்களுக்கு வறுமையும், துன்பமும் ஏற்பட்டன. "அல்லாஹ்வின் உதவி எப்போது?'' என்று (இறைத்)தூதரும் அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரும் கூறுமளவுக்கு அலைக்கழிக்கப்பட்டனர். கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் உதவி அருகிலேயே உள்ளது.

215. தாம் எதைச் செலவிட வேண்டும் என்று உம்மிடம் கேட்கின்றனர். "நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவிட்டாலும் பெற்றோருக்காகவும், உறவினருக்காகவும், அனாதைகளுக்காகவும், ஏழைகளுக்காகவும், நாடோடிகளுக்காகவும்206 (செலவிட வேண்டும்.) நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அல்லாஹ் அதை அறிந்தவன்'' எனக் கூறுவீராக!62

216. உங்களுக்கு வெறுப்பாக இருப்பினும் போர் செய்வது உங்களுக்குக் கடமையாக்கப்பட்டுள்ளது. ஒன்றை நீங்கள் வெறுக்கலாம். அது உங்களுக்கு நன்மையானதாக இருக்கும். ஒன்றை நீங்கள் 
விரும்பலாம். அது உங்களுக்குக் கெட்டதாக இருக்கும். அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.53

217. புனித மாதத்தில்55 போர் செய்வது குறித்து உம்மிடம் கேட்கின்றனர். "அதில் போரிடுவது பெருங்குற்றமே. அல்லாஹ்வின் பாதையை விட்டும், மஸ்ஜிதுல் ஹராமை விட்டும் (மற்றவர்களைத்) தடுப்பதும், அவனை ஏற்க மறுப்பதும், அதற்கு (மஸ்ஜிதுல் ஹராமுக்கு) உரியோரை அங்கிருந்து வெளியேற்றுவதும் அல்லாஹ்விடம் இதைவிடப் பெரியது. கொலையை விட கலகம் மிகப் பெரியது'' எனக் கூறுவீராக! அவர்களுக்கு இயலுமானால் உங்கள் மார்க்கத்தை விட்டும் உங்களை மாற்றும் வரை உங்களுடன் போரிட்டுக் கொண்டே இருப்பார்கள். உங்களில் தனது மார்க்கத்தை விட்டும் மாறி (ஏகஇறைவனை) மறுப்போராக மரணித்தவரின் செயல்கள் இவ்வுலகிலும் மறுமையிலும்1 அழிந்து விடும். அவர்கள் நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.

218. நம்பிக்கை கொண்டு, ஹிஜ்ரத்460 செய்து அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிந்தோரே அல்லாஹ்வின் அருளை எதிர்பார்க்கின்றனர். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

219, 220. மது மற்றும் சூதாட்டம் பற்றி உம்மிடம் கேட்கின்றனர். "அவ்விரண்டிலும் பெரும் கேடும், மக்களுக்குச் சில பயன்களும் உள்ளன. அவ்விரண்டின் பயனை விட கேடு இவ்வுலகிலும், மறுமையிலும்1 மிகப் பெரியது'' எனக் கூறுவீராக!116 தாங்கள் எதைச் செலவிட வேண்டும் என்று உம்மிடம் கேட்கின்றனர். 'உபரியானதை' எனக் கூறுவீராக! நீங்கள் சிந்திப்பதற்காக உங்களுக்குத் தனது வசனங்களை அல்லாஹ் இவ்வாறு தெளிவுபடுத்துகிறான். அனாதைகளைப் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். "அவர்களுக்காக நல் ஏற்பாடு செய்தல் சிறந்தது. நீங்கள் அவர்களுடன் கலந்து வாழ்ந்தால் அவர்கள் உங்கள் சகோதரர்கள். சீர்படுத்துவோனையும், சீரழிப்போனையும் அல்லாஹ் அறிகிறான். அல்லாஹ் நாடியிருந்தால் உங்களுக்குச் சிரமத்தைத் தந்திருப்பான்.68 அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்'' எனக் கூறுவீராக!26

221. இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர்கள்! இணை கற்பிப்பவள் உங்களை எவ்வளவு கவர்ந்தாலும் அவளை விட நம்பிக்கை கொண்ட அடிமைப்பெண் சிறந்தவள். இணைகற்பிக்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மணமுடித்துக் கொடுக்காதீர்கள்! இணை கற்பிப்பவன் உங்களை எவ்வளவு தான் கவர்ந்தாலும் அவனை விட நம்பிக்கை கொண்ட அடிமை சிறந்தவன். அவர்கள் நரகத்திற்கு அழைக்கின்றனர். அல்லாஹ் தனது விருப்பப்படி சொர்க்கத்திற்கும் மன்னிப்பிற்கும் அழைக்கிறான். படிப்பினை பெறுவதற்காக (இறைவன்) தனது வசனங்களை மனிதர்களுக்குத் தெளிவுபடுத்துகிறான்.91

222. மாதவிடாய் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர்.48 "அது ஓர் தொல்லை. எனவே மாதவிடாயின்போது பெண்களை விட்டும் (உடலுறவு கொள்ளாமல்) விலகிக் கொள்ளுங்கள்! அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை நெருங்காதீர்கள்! அவர்கள் தூய்மையாகி விட்டால் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிட்டவாறு அவர்களிடம் செல்லுங்கள்! திருந்திக் கொள்வோரை அல்லாஹ் விரும்புகிறான். தூய்மையாக இருப்போரையும் விரும்புகிறான்'' எனக் கூறுவீராக!

223. உங்கள் மனைவியர் உங்களின் விளைநிலங்கள். உங்கள் விளைநிலங்களுக்கு விரும்பியவாறு செல்லுங்கள்!63 உங்களுக்காக (நல்லறங்களை) முற்படுத்துங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அவனைச் சந்திக்கவுள்ளீர்கள்488 என்பதை அறிந்து கொள்ளுங்கள்! நம்பிக்கை கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக!

224. நன்மை செய்வதற்கும், (இறைவனை) அஞ்சுவதற்கும், மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் உங்கள் சத்தியங்கள் மூலம் அல்லாஹ்வை ஒரு தடையாக ஆக்காதீர்கள்!64 அல்லாஹ் செவியுறுபவன்;488 அறிந்தவன்.

225. உங்கள் சத்தியங்களில் வீணானவற்றுக்காக அல்லாஹ் உங்களைத் தண்டிக்க மாட்டான். உங்கள் உள்ளங்கள் உறுதி செய்தவற்றின் காரணமாகவே உங்களைத் தண்டிப்பான்.64 அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத்தன்மை மிக்கவன்.

226. தமது மனைவியருடன் கூடுவதில்லை என்று சத்தியம் செய்தோருக்கு நான்கு மாத அவகாசம் உள்ளது.65 அவர்கள் (சத்தியத்தை) திரும்பப் பெற்றால் அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

227. விவாகரத்துச் செய்வதில்66 அவர்கள் உறுதியாக இருந்தால் அல்லாஹ் செவியுறுபவன்;488 அறிந்தவன்.

228. விவாகரத்துச்66 செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய்க் காலம் (மறுமணம் செய்யாமல்) காத்திருக்க வேண்டும்.69 அல்லாஹ்வையும், இறுதி நாளையும்1 அவர்கள் நம்பி இருந்தால் தமது கருவறைகளில் அல்லாஹ் படைத்திருப்பதை மறைப்பதற்கு அவர்களுக்கு அனுமதி இல்லை. இருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால் இதற்குள் (இந்தக் காலகட்டத்துக்குள்) அவர்களின் கணவர்கள் அவர்களைத் திரும்பச் சேர்த்துக் கொள்ளும் உரிமை படைத்தவர்கள். பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. அவர்களை விட ஆண்களுக்கு ஓர் உயர்வு உண்டு. அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.

229. இவ்வாறு விவாகரத்துச் செய்தல்66 இரண்டு தடவைகளே. (இதன் பிறகு) நல்ல முறையில் சேர்ந்து வாழலாம். அல்லது அழகான முறையில் விட்டுவிடலாம். மனைவியருக்கு நீங்கள் கொடுத்தவற்றிலிருந்து எந்த ஒன்றையும் திரும்பப் பெறுவதற்கு அனுமதி இல்லை. அவ்விருவரும் அல்லாஹ்வின் வரம்புகளை நிலைநாட்ட மாட்டார்கள் என்று அஞ்சினால் தவிர. அவ்விருவரும் அல்லாஹ்வின் வரம்புகளை நிலைநாட்ட மாட்டார்கள் என்று நீங்கள் அஞ்சினால் அவள் (மஹரிலிருந்து) ஈடாகக் கொடுத்து பிரிந்து விடுவது இருவர் மீதும் குற்றமில்லை.402 இவை அல்லாஹ்வின் வரம்புகள். எனவே அவற்றை மீறாதீர்கள்! அல்லாஹ்வின் வரம்புகளை மீறுவோரே அநீதி இழைத்தவர்கள்.

230. (இரண்டு தடவை விவாகரத்துச் செய்து66 சேர்ந்து கொண்ட பின் மூன்றாவது தடவையாக) அவளை அவன் விவாகரத்துச் செய்தால் அவள் வேறு கணவனை மணம் செய்யாத வரை அவனுக்கு அனுமதிக்கப்பட்டவளாக ஆக மாட்டாள். (இரண்டாம் கணவனாகிய) அவனும் அவளை விவாகரத்துச் செய்து, (மீண்டும் முதல் கணவனும் அவளும் ஆகிய) இருவரும் அல்லாஹ்வின் வரம்புகளை நிலைநாட்ட முடியும் எனக் கருதினால் (திருமணத்தின் மூலம்) சேர்ந்து கொள்வது குற்றமில்லை. இவை அல்லாஹ்வின் வரம்புகள். அறிகின்ற சமுதாயத்திற்கு அவன் இதைத் தெளிவுபடுத்துகிறான்.

231. பெண்களை நீங்கள் விவாகரத்துச் செய்தால்66 அவர்கள் தமக்குரிய காலக்கெடுவை69 நிறைவு செய்வதற்குள் நல்ல முறையில் அவர்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள்! அல்லது நல்ல முறையில் விட்டு விடுங்கள்! அவர்களைத் துன்புறுத்தி வரம்பு மீறுவதற்காகச் சேர்த்துக் கொள்ளாதீர்கள்! இவ்வாறு செய்பவர் தமக்கே அநீதி இழைத்துக் கொண்டார். அல்லாஹ்வின் வசனங்களைக் கேலிக்குரியதாக்கி விடாதீர்கள்! உங்களுக்கு அல்லாஹ் செய்துள்ள அருட்கொடையையும், வேதத்தையும் ஞானத்தையும்67 வழங்கியதையும் எண்ணிப் பாருங்கள்! இது குறித்து அவன் உங்களுக்கு அறிவுரை கூறுகிறான். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! "அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்" என்பதை அறிந்து கொள்ளுங்கள்!

232. பெண்களை விவாகரத்துச் செய்த66 பின் அவர்கள் தமது காலக்கெடுவை69 நிறைவு செய்து விட்டால் அவர்கள் (தமக்குப் பிடித்த) கணவர்களை விருப்பப்பட்டு நல்ல முறையில் மணந்து கொள்வதைத் தடுக்காதீர்கள்! உங்களில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும்1 நம்புவோருக்கு இவ்வாறு அறிவுரை கூறப்படுகிறது. இதுவே உங்களுக்குத் தூய்மையானது; பரிசுத்தமானது. அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.

233. பாலூட்ட வேண்டும் என்று விரும்புகிற (கண)வனுக்காக (விவாகரத்துச் செய்யப்பட்ட) தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள்314 பாலூட்ட வேண்டும்.478 அவர்களுக்கு நல்ல முறையில் உணவும் உடையும் வழங்குவது குழந்தையின் தந்தைக்குக் கடமை. சக்திக்கு உட்பட்டே தவிர எவரும் சிரமம் தரப்பட மாட்டார்.68 பெற்றவள் தனது பிள்ளையின் காரணமாகவோ, தந்தை தனது பிள்ளையின் காரணமாகவோ சிரமம் கொடுக்கப்பட மாட்டார்கள்.68 (குழந்தையின் தந்தை இறந்து விட்டால்) அவரது வாரிசுக்கு இது போன்ற கடமை உண்டு. இருவரும் ஆலோசனை செய்து மனம் விரும்பி பாலூட்டுவதை நிறுத்த முடிவு செய்தால் இருவர் மீதும் எந்தக் குற்றமும் இல்லை. உங்கள் குழந்தைகளுக்கு (வேறு பெண் மூலம்) பாலூட்ட வேண்டும் என நீங்கள் விரும்பினால் (பெற்றவளுக்குக்) கொடுக்க வேண்டியதை நல்ல முறையில் கொடுத்து விட்டால் உங்கள் மீது எந்தக் குற்றமுமில்லை. அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன்488 என்பதை அறிந்து கொள்ளுங்கள்!

234. உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் (மறுமணம் செய்யாமல்) அப்பெண்கள் காத்திருக்க வேண்டும்.69 அந்தக் காலக்கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் தம் விஷயமாக நல்ல முறையில் முடிவு செய்வதில் உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை.403 நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

235. (காத்திருக்கும் காலகட்டத்தில்) அவர்களை மணம் செய்ய எண்ணுவதோ, சாடையாக மணம் பேசுவதோ உங்கள் மீது குற்றம் இல்லை.404 அவர்களை நீங்கள் (மனதால்) விரும்புவதை அல்லாஹ் அறிவான். நல்ல சொற்கள் சொல்வதைத் தவிர இரகசியமாக அவர்களுக்கு வாக்குறுதி அளித்து விடாதீர்கள்! உரிய காலம்69 முடியும் வரை திருமணம் செய்யும் முடிவுக்கு வராதீர்கள்! உங்களுக்குள்ளே இருப்பதை அல்லாஹ் அறிவான் என்பதை அறிந்து அவனுக்கு அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத்தன்மை மிக்கவன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்!

236. அவர்களைத் தீண்டாத நிலையிலோ, அவர்களுக்கென மஹர்108 தொகையை முடிவு செய்யாத நிலையிலோ விவாகரத்துச் செய்வது உங்களுக்குக் குற்றமில்லை.66 வசதி உள்ளவர் தமக்குத் தக்கவாறும், ஏழை தமக்குத் தக்கவாறும் சிறந்த முறையில் அவர்களுக்கு வசதிகள் அளியுங்கள்! இது நன்மை செய்வோர் மீது கடமை.74

237. அவர்களுக்கு மஹர்108 தொகையை முடிவு செய்து, தீண்டுவதற்கு முன் அவர்களை நீங்கள் விவாகரத்துச் செய்தால் முடிவு செய்ததில் பாதி(யைக் கொடுப்பது கடமை). அப்பெண்களோ அல்லது திருமண ஒப்பந்தத்தில் அதிகாரம் உள்ள(கண)வரோ பெருந்தன்மையாக நடந்து கொண்டால் தவிர. (ஆண்களாகிய) நீங்கள் விட்டுக் கொடுப்பதே70 இறையச்சத்திற்கு நெருக்கமானது. உங்களுக்கிடையே (சிலருக்கு) இருக்கும் உயர்வை மறந்து விடாதீர்கள்! நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன்.488

238. தொழுகைகளையும், நடுத் தொழுகையையும்71 பேணிக் கொள்ளுங்கள்!361 அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நில்லுங்கள்!

239. நீங்கள் அச்சத்தில் இருந்தால் நடந்தோ, வாகனத்திலோ (தொழலாம்). அச்சம் தீர்ந்ததும் நீங்கள் அறியாமல் இருந்ததை அல்லாஹ் உங்களுக்குக் கற்றுத் தந்தவாறு72 அல்லாஹ்வை நினையுங்கள்!

240. உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் "ஒரு வருடம் வரை அவர்கள் வெளியேற்றப்படாமல், வசதிகள் வழங்கப்பட மரண சாசனம் செய்ய வேண்டும்.405 தங்கள் விஷயத்தில் நல்ல முடிவை மேற்கொண்டு அவர்களாக வெளியேறினால் உங்கள் மீது குற்றமில்லை. அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.

241. விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களுக்கு66 நல்ல முறையில் வசதிகள் அளிக்கப்பட வேண்டும். (இறைவனை) அஞ்சுவோருக்கு இது கடமை.74

242. நீங்கள் விளங்குவதற்காக அல்லாஹ் தனது வசனங்களை இவ்வாறு தெளிவுபடுத்துகிறான்.

243. மரணத்திற்கு அஞ்சி தமது ஊர்களை விட்டு வெளியேறியோரை நீர் அறியவில்லையா? அவர்கள் ஆயிரக்கணக்கில் இருந்தனர். "செத்து விடுங்கள்!''20 என்று அவர்களுக்கு அல்லாஹ் கூறினான். பின்னர் அவர்களை உயிர்ப்பித்தான். மனிதர்கள் மீது அல்லாஹ் அருளுடையவன். எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை.

244. அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்! அல்லாஹ் செவியுறுபவன்;488 அறிந்தவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!53

245. அல்லாஹ்வுக்காக அழகிய கடன்75 வழங்குவோர் யார்? அதை அவருக்குப் பன்மடங்காக (இறைவன்) பெருக்குவான். அல்லாஹ் குறைவாகவும் வழங்குகிறான். தாராளமாகவும் வழங்குகிறான். அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.

246. மூஸாவுக்குப் பின்னர் இஸ்ராயீலின் மக்களில் (உருவான) ஒரு சமுதாயத்தைப் பற்றி நீர் அறியவில்லையா? "எங்களுக்கு ஒர் ஆட்சியாளரை நியமியுங்கள்! அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோம்''76 என்று தமது நபியிடம் கூறினர். "உங்களுக்குப் போர் கடமையாக்கப்பட்டால் போரிடாமல் இருக்க மாட்டீர்கள் அல்லவா?'' என்று அவர் கேட்டார். "எங்கள் ஊர்களையும், பிள்ளைகளையும் விட்டு நாங்கள் வெளியேற்றப்பட்டிருக்கும்போது அல்லாஹ்வின் பாதையில் போரிடாமலிருக்க எங்களுக்கு என்ன வந்தது?'' என்று அவர்கள் கூறினர். அவர்களுக்குப் போர் கடமையாக்கப்பட்டபோது அவர்களில் சிலரைத் தவிர (மற்றவர்கள்) புறக்கணித்தனர். அநீதி இழைத்தோரை அல்லாஹ் அறிந்தவன்.

247. "தாலூத் என்பவரை அல்லாஹ் உங்கள் ஆட்சியாளராக நியமித்துள்ளான்''76 என்று அவர்களின் நபி அவர்களிடம் கூறினார். "எங்கள் மீது அவருக்கு எப்படி ஆட்சியதிகாரம் இருக்க முடியும்? அவரை விட ஆட்சிக்கு நாங்களே தகுதியானவர்கள். அவருக்குப் பொருள் வசதியும் வழங்கப்படவில்லை'' என்று அவர்கள் கூறினர். "உங்களை விட அவரை அல்லாஹ் தேர்வு செய்து விட்டான். அவருக்கு கல்வியையும், உடலையும் (வலுவை) அதிகமாக வழங்கியிருக்கிறான். தான் நாடியோருக்கு அல்லாஹ் அதிகாரத்தை வழங்குவான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்'' என்று அவர் கூறினார்.

248. "அவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டதற்கு அடையாளமாக, உங்களிடம் ஓர் அலங்காரப் பெட்டி வரும்.77 அதில் உங்கள் இறைவனிடமிருந்து (உங்களுக்கு) மனநிறைவு இருக்கும். மூஸாவின் குடும்பத்தாரும், ஹாரூனின் குடும்பத்தாரும் விட்டுச் சென்றவற்றில் எஞ்சியது அதில் இருக்கும். அதை வானவர்கள் சுமந்து வருவார்கள். நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அதில் உங்களுக்கு தக்க சான்று உள்ளது'' என்று அவர்களின் நபி அவர்களிடம் கூறினார்.

249. படைகளுடன் தாலூத் புறப்பட்டபோது "அல்லாஹ் உங்களை ஒரு நதியின் மூலம் சோதிக்கவுள்ளான்.484 அதில் அருந்துபவர் என்னைச் சேர்ந்தவர் அல்லர். அதை உட்கொள்ளாதவர் என்னைச் சேர்ந்தவர்; கையளவு அருந்தியவர் தவிர'' என்றார். அவர்களில் சிலரைத் தவிர (மற்றவர்கள்) அதில் அருந்தினார்கள். அவரும், அவருடனிருந்த நம்பிக்கை கொண்டோரும் அதைக் கடந்தபோது "ஜாலூத் மற்றும் அவனது படையினருடன் (போரிட) இன்று எங்களுக்கு எந்த வலிமையும் இல்லை'' என்றனர். அல்லாஹ்வைச் சந்திக்கவுள்ளோம்488 என்று நம்பியோர், "எத்தனையோ சிறு படைகள், பெரும் படைகள் பலவற்றை அல்லாஹ்வின் விருப்பப்படி வென்றுள்ளன. சகித்துக் கொள்வோருடன் அல்லாஹ் இருக்கிறான்'' என்றனர்.

250. ஜாலூத்தையும், அவனது படையினரையும் அவர்கள் களத்தில் சந்தித்தபோது "எங்கள் இறைவா! எங்கள் மீது சகிப்புத் தன்மையை ஊற்றுவாயாக! எங்கள் பாதங்களை நிலைப்படுத்துவாயாக! (உன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு உதவுவாயாக!'' என்றனர்.

251. அவர்களை அல்லாஹ்வின் விருப்பப்படி (தாலூத் படையினர்) தோற்கடித்தனர். தாவூத், ஜாலூத்தைக் கொன்றார். அவருக்கு அல்லாஹ் அதிகாரத்தையும், ஞானத்தையும் வழங்கினான். தான் நாடியவற்றை அவருக்குக் கற்றுக் கொடுத்தான். மனிதர்களில் சிலர் மூலம் வேறு சிலரை அல்லாஹ் தடுக்காதிருந்தால் பூமி சீர்கெட்டிருக்கும். எனினும் அகிலத்தார் மீது அல்லாஹ் அருளுடையவன்.

252. இவை உண்மையை உள்ளடக்கிய அல்லாஹ்வின் வசனங்கள். அதை (முஹம்மதே!) உமக்குக் கூறுகிறோம். நீர் தூதர்களில் ஒருவர்.

253. இத்தூதர்களில், சிலரை விடச் சிலரைச் சிறப்பித்திருக்கிறோம். அவர்களில் சிலரிடம் அல்லாஹ் பேசியுள்ளான்.488 அவர்களில் சிலருக்கு, பல தகுதிகளை அவன் உயர்த்தியிருக்கிறான்.37 மர்யமுடைய மகன் ஈஸாவுக்குத் தெளிவான சான்றுகளை வழங்கினோம். ரூஹுல் குதுஸ்444 மூலம் அவரை வலுப்படுத்தினோம். தூதர்களுக்குப் பின் வந்தோர் தம்மிடம் தெளிவான சான்றுகள் வந்த பின்பு அல்லாஹ் நாடியிருந்தால் சண்டையிட்டிருக்க மாட்டார்கள். என்றாலும் அவர்கள் முரண்பட்டனர். அவர்களில் நம்பிக்கை கொண்டோரும் உள்ளனர். (ஏகஇறைவனை) மறுப்போரும் உள்ளனர். அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் சண்டையிட்டிருக்க மாட்டார்கள். எனினும் அல்லாஹ், தான் விரும்புவதைச் செய்வான்.

254. நம்பிக்கை கொண்டோரே! பேரமோ, நட்போ, பரிந்துரையோ17 இல்லாத நாள்1 வருவதற்கு முன் நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுங்கள்! (ஏகஇறைவனை) மறுப்பவர்கள் அநீதி இழைத்தவர்கள்.

255. அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். அவனுக்குச் சிறு உறக்கமோ, ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது. வானங்களில்507 உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அவன் அனுமதித்தால் தவிர அவனிடம் யார் தான் பரிந்து பேச முடியும்?17 அவர்களுக்கு முன்னேயும், பின்னேயும் உள்ளதை அவன் அறிகிறான். அவன் அறிந்திருப்பவற்றில் எதையும் அவர்களால் அறிய முடியாது. அவன் நாடியதைத் தவிர. அவனது இருக்கை, வானங்களையும்,507 பூமியையும் உள்ளடக்கும். அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமமானதன்று. அவன் உயர்ந்தவன்; மகத்துவமிக்கவன். 

256. இம்மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி தெளிவாகி விட்டது. தீய சக்திகளை மறுத்து அல்லாஹ்வை நம்புபவர் அறுந்து போகாத பலமான கயிற்றைப் பிடித்துக் கொண்டார். அல்லாஹ் செவியுறுபவன்;488 அறிந்தவன்.

257. நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் உதவுபவன். இருள்களிலிருந்து303 வெளிச்சத்திற்கு அவர்களைக் கொண்டு செல்கிறான். (ஏகஇறைவனை) மறுப்போருக்கு தீய சக்திகளே உதவியாளர்கள். வெளிச்சத்திலிருந்து இருள்களுக்கு303 அவர்களைக் கொண்டு செல்கின்றனர். அவர்கள் நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பர்.

258. தனக்கு அல்லாஹ் ஆட்சியைக் கொடுத்ததற்காக இப்ராஹீமிடம் அவரது இறைவன் குறித்து தர்க்கம் செய்தவனை நீர் அறியவில்லையா? "என் இறைவன் உயிர் கொடுப்பவன்; மரணிக்கச் செய்பவன்'' என்று இப்ராஹீம் கூறியபோது, "நானும் உயிர் கொடுப்பேன்; மரணிக்கச் செய்வேன்'' என்று அவன் கூறினான். "அல்லாஹ் கிழக்கில் சூரியனை உதிக்கச் செய்கிறான். எனவே நீ மேற்கில் அதை உதிக்கச் செய்!'' என்று இப்ராஹீம் கேட்டார். உடனே (ஏகஇறைவனை) மறுத்த அவன் வாயடைத்துப் போனான். அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.

259. அல்லது ஒரு கிராமத்தைக் கடந்து சென்றவரைப் பற்றி (நீர் அறிவீரா?) அந்த ஊர் அடியோடு வீழ்ந்து கிடந்தது. "இவ்வூர் அழிந்த பிறகு அல்லாஹ் எவ்வாறு இதை உயிராக்குவான்?'' என்று அவர் நினைத்தார். உடனே அவரை அல்லாஹ் நூறு ஆண்டுகள் மரணிக்கச் செய்தான். பின்னர் அவரை உயிர்ப்பித்து "எவ்வளவு நாளைக் கழித்திருப்பீர்?'' என்று கேட்டான். "ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சிறிதளவு நேரம் கழித்திருப்பேன்'' என்று அவர் கூறினார். "அவ்வாறில்லை! நூறு ஆண்டுகளைக் கழித்து விட்டீர்! உமது உணவும், பானமும் கெட்டுப் போகாமல் இருப்பதைக் காண்பீராக!406 (செத்துவிட்ட) உமது கழுதையையும் கவனிப்பீராக! மக்களுக்கு உம்மை எடுத்துக் காட்டாக ஆக்குவதற்காக (இவ்வாறு செய்தோம். கழுதையின்) எலும்புகளை எவ்வாறு திரட்டுகிறோம் என்பதையும், அதற்கு எவ்வாறு மாமிசத்தை அணிவிக்கிறோம் என்பதையும் கவனிப்பீராக!'' என்று அவன் கூறினான். அவருக்குத் தெளிவு பிறந்தபோது "அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன் என்பதை அறிகிறேன்'' எனக் கூறினார்.79

260. "என் இறைவா! இறந்தோரை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கிறாய் என்பதை எனக்குக் காட்டுவாயாக!'' என்று இப்ராஹீம் வேண்டியபோது, "நீர் நம்பிக்கை கொள்ளவில்லையா?'' என்று (இறைவன்) கேட்டான். அதற்கவர் "அவ்வாறல்ல! மாறாக எனது உள்ளம் அமைதியுறவே.'' என்றார். "நான்கு பறவைகளைப் பிடிப்பீராக! அவற்றைத் துண்டு துண்டாக வெட்டி உம்மிடம் வைத்துக் கொள்வீராக! பின்னர் அவற்றில் ஒரு பகுதியை ஒவ்வொரு மலையின் மீதும் வைப்பீராக! பின்னர் அவற்றை அழைப்பீராக! அவை உம்மிடம் விரைந்து வரும். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன் என்பதை அறிந்து கொள்வீராக'' என்று (இறைவன்) கூறினான்.

261. தமது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம். அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. தான் நாடியோருக்கு அல்லாஹ் இன்னும் பன்மடங்காகக் கொடுக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.

262. அல்லாஹ்வின் பாதையில் தமது செல்வங்களைச் செலவிட்டு, செலவிட்டதைப் பின்னர் சொல்லிக் காட்டாமலும், தொல்லை தராமலும் இருப்போருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உள்ளது. அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. கவலைப்படவும் மாட்டார்கள்.

263. தர்மம் செய்து விட்டு அதைத் தொடர்ந்து, தொல்லை கொடுப்பதை விட அழகிய சொற்களைக் கூறுவதும், மன்னிப்பதும் சிறந்தது. அல்லாஹ் தேவைகளற்றவன்;485 சகிப்புத் தன்மைமிக்கவன்.

264. நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வையும், இறுதி நாளையும்1 நம்பாது மக்களுக்குக் காட்டுவதற்காக தனது செல்வத்தைச் செலவிடுபவனைப் போல், உங்கள் தர்மங்களைச் சொல்லிக் காட்டியும், தொல்லை தந்தும் பாழாக்கி விடாதீர்கள்! இவனுக்கு உதாரணம் மேலே மண் படிந்திருக்கும் வழுக்குப் பாறை. அதன் மேல் மழை விழுந்ததும் மேலே ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுகிறது. தாம் பாடுபட்ட எதன் மீதும் அவர்கள் சக்தி பெற மாட்டார்கள். (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.

265. அல்லாஹ்வின் திருப்தியைப் பெறுவதற்காகவும், தமக்குள்ளே இருக்கும் உறுதியான நம்பிக்கைக்காகவும் தமது செல்வங்களை (நல்வழியில்) செலவிடுவோரின் உதாரணம், உயரமான இடத்தில் அமைந்த தோட்டம். பெருமழை விழுந்ததும் அத்தோட்டம் இருமடங்காக தன் உணவுப் பொருட்களை வழங்குகிறது. பெருமழை விழாவிட்டாலும் தூறல் (போதும்). நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன்.488

266. பேரீச்சை மற்றும் திராட்சைத் தோட்டம் ஒருவருக்கு இருக்கிறது; அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகளும் ஓடுகின்றன; அதில் அனைத்துக் கனிகளும் அவருக்கு உள்ளன; அவருக்குப் பலவீனமான சந்ததிகள் உள்ள நிலையில் அவருக்கு முதுமையும் ஏற்பட்டு விடுகிறது; அப்போது நெருப்புடன் கூடிய புயல் காற்று வீசி அ(த்தோட்டத்)தை எரித்து விடுகிறது. இந்த நிலையை உங்களில் எவரேனும் விரும்புவாரா? நீங்கள் சிந்திப்பதற்காக இவ்வாறே அல்லாஹ் சான்றுகளைத் தெளிவுபடுத்துகிறான்.

267. நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்ததில் தூய்மையானவற்றிலிருந்தும், பூமியிலிருந்து உங்களுக்கு நாம் வெளிப்படுத்தியதிலிருந்தும் (நல்வழியில்) செலவிடுங்கள்! கண்ணை மூடிக் கொண்டே தவிர எதை வாங்கிக் கொள்ள மாட்டீர்களோ அத்தகைய மட்டமான பொருளைச் செலவிட நினைக்காதீர்கள்! அல்லாஹ் தேவைகளற்றவன்;485, புகழுக்குரியவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!80

268. ஷைத்தான் வறுமையைப் பற்றி உங்களைப் பயமுறுத்துகிறான். வெட்கக்கேடானதை உங்களுக்குத் தூண்டுகிறான். அல்லாஹ்வோ தனது மன்னிப்பையும், அருளையும் வாக்களிக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.

269. தான் நாடியோருக்கு ஞானத்தை (அல்லாஹ்) வழங்குகிறான். ஞானம் வழங்கப்பட்டவர் ஏராளமான நன்மைகள் வழங்கப்பட்டு விட்டார். அறிவுடையோரைத் தவிர (யாரும்) சிந்திப்பதில்லை.

270. நீங்கள் எதையேனும் (நல்வழியில்) செலவிட்டாலோ, நேர்ச்சை செய்தாலோ அல்லாஹ் அதை அறிகிறான். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளரும் இல்லை.

271. தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அது நல்லதே. அதை(ப் பிறருக்கு) மறைத்து ஏழைகளுக்கு வழங்கினால் அது உங்களுக்கு மிகச் சிறந்தது. உங்கள் தீமைகளுக்கு (அல்லாஹ் இதைப்) பரிகாரமாக ஆக்குகிறான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

272. அவர்களை நேர்வழியில் சேர்ப்பது உமது பொறுப்பில் இல்லை.81 மாறாக தான் நாடியோருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுகிறான். நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அது உங்களுக்கே. அல்லாஹ்வின் திருப்தியைப் பெறவே செலவிடுகிறீர்கள். நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் உங்களுக்கே அது முழுமையாக வழங்கப்படும். நீங்கள் அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள்.

273. (பொருள் திரட்டுவதற்காக) பூமியில் பயணம் மேற்கொள்ள இயலாதவாறு அல்லாஹ்வின் பாதையில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட ஏழைகளுக்கு (தர்மங்கள்) உரியன. (அவர்களைப் பற்றி) அறியாதவர், (அவர்களின்) தன்மான உணர்வைக் கண்டு அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்வார். அவர்களின் அடையாளத்தை வைத்து அவர்களை அறிந்து கொள்வீர்! மக்களிடம் கெஞ்சிக் கேட்க மாட்டார்கள். நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அல்லாஹ் அதை அறிந்தவன்.82

274. தமது செல்வங்களை இரவிலும், பகலிலும், இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (நல்வழியில்) செலவிடுவோருக்கு தமது இறைவனிடம் அவர்களுக்கான கூலி உண்டு. அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.

275. வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள்.83 "வியாபாரம் வட்டியைப் போன்றதே'' என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான். தமது இறைவனிடமிருந்து தமக்கு அறிவுரை வந்த பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் செய்வோர் நரகவாசிகள். அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.

276. அல்லாஹ் வட்டியை அழிக்கிறான். தர்மங்களை வளர்க்கிறான். நன்றி கெட்ட எந்தப் பாவியையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்.

277. நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் புரிந்து, தொழுகையை நிலைநாட்டி, ஸகாத்தையும் கொடுத்து வருவோருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உள்ளது. அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.

278. நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் வர வேண்டிய வட்டியை விட்டு விடுங்கள்!84

279. அவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால் அல்லாஹ்விடமிருந்தும், அவனது தூதரிடமிருந்தும் போர்ப் பிரகடனத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்! நீங்கள் திருந்திக் கொண்டால் உங்கள் செல்வங்களில் மூலதனம் உங்களுக்கு உரியது. நீங்களும் அநீதி இழைக்கக் கூடாது. உங்களுக்கும் அநீதி இழைக்கப்படாது.

280. (கடன் வாங்கிய) அவன் சிரமப்படுபவனாக இருந்தால் வசதி ஏற்படும் வரை அவகாசம் கொடுக்க வேண்டும். நீங்கள் அறிந்து கொள்வோராக இருந்தால் அதைத் தர்மமாக்கி விடுவது உங்களுக்குச் சிறந்தது.73

281. அல்லாஹ்விடம் நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படும் நாளை1 அஞ்சுங்கள்! பின்னர் ஒவ்வொருவருக்கும், அவர்கள் உழைத்தது முழுமையாக வழங்கப்படும்.265 அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.

282. நம்பிக்கை கொண்டோரே! குறிப்பிட்ட காலக்கெடு விதித்து ஒருவருக்கொருவர் கடன் கொடுத்தால் அதை எழுதிக் கொள்ளுங்கள்!476 எழுதுபவர் உங்களுக்கிடையே நேர்மையான முறையில் எழுதட்டும். எழுதுபவர் அல்லாஹ் தமக்குக் கற்றுக் கொடுத்தது போல் எழுத மறுக்காமல் எழுதட்டும். கடன் வாங்கியவர், எழுதுவதற்குரிய வாசகங்களைச் சொல்லட்டும்! தனது இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும். அதில் எதையும் குறைத்திடக் கூடாது. கடன் வாங்கியவர் விபரமறியாதவராகவோ, பலவீனராகவோ, எழுதுவதற்கு ஏற்பச் சொல்ல இயலாதவராகவோ இருந்தால் அவரது பொறுப்பாளர் நேர்மையாகச் சொல்லட்டும். உங்கள் ஆண்களில் இருவரை சாட்சிகளாக்கிக் கொள்ளுங்கள்! இரு ஆண்கள் இல்லாவிட்டால் சாட்சிகள் என நீங்கள் திருப்தியடையும் ஓர் ஆணையும், இரண்டு பெண்களையும் (ஆக்கிக் கொள்ளுங்கள்!) அவ்விரு பெண்களில் ஒருத்தி தவறாகக் கூறினால் மற்றொருத்தி நினைவுபடுத்துவாள்.85 அழைக்கப்படும்போது சாட்சிகள் மறுக்கக் கூடாது. சிறிதோ, பெரிதோ தவணையைக் குறிப்பிட்டு எழுதிக் கொள்வதை அலட்சியம் செய்யாதீர்கள்! இதுவே அல்லாஹ்விடம் நேர்மையானது; சாட்சியத்தை நிரூபிக்கத்தக்கது; ஒருவருக்கொருவர் சந்தேகம் கொள்ளாமல் இருப்பதற்கு ஏற்றது. உங்களுக்கிடையே உடனுக்குடன் நடைபெறும் வியாபாரமாக இருந்தால் தவிர. (கடனில்லாத) வியாபாரத்தை எழுதிக் கொள்ளாமல் இருப்பது உங்களுக்குக் குற்றமாகாது. ஒப்பந்தம் செய்யும்போதும் சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! எழுத்தருக்கோ, சாட்சிக்கோ எந்த இடையூறும் அளிக்கப்படக் கூடாது. அவ்வாறு செய்தால் அது உங்கள் மீது குற்றமாகும். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் உங்களுக்குக் கற்றுத் தருவான். அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் அறிந்தவன்.

283. நீங்கள் பயணத்தில் இருக்கும்போது எழுத்தர் கிடைக்காவிட்டால் அடைமானத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும். உங்களில் ஒருவர் மற்றவரை நம்பினால் நம்பப்பட்டவர் தனது நாணயத்தை நிறைவேற்றட்டும். தனது இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும்! சாட்சியத்தை மறைத்து விடாதீர்கள்! அதை மறைப்பவரின் உள்ளம் குற்றம் புரிந்தது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிந்தவன்.

284. வானங்களில்507 உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வுக்கே உரியன. உங்களுக்குள் இருப்பதை நீங்கள் வெளிப்படுத்தினாலோ, மறைத்துக் கொண்டாலோ அல்லாஹ் அதுபற்றி உங்களை விசாரிப்பான். தான் நாடியோரை மன்னிப்பான். தான் நாடியோரைத் தண்டிப்பான். அனைத்துப் பொருட்களின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவன்.

285. இத்தூதர் (முஹம்மத்) தமது இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பட்டதை நம்பினார். நம்பிக்கை கொண்டோரும் (இதை நம்பினார்கள்). அல்லாஹ்வையும், அவனது வானவர்களையும், அவனது வேதங்களையும், அவனது தூதர்களையும் அனைவரும் நம்பினார்கள். "அவனது தூதர்களில் எவருக்கிடையேயும் வேற்றுமை காட்டமாட்டோம்;37 செவியுற்றோம்; கட்டுப்பட்டோம். எங்கள் இறைவா! உனது மன்னிப்பை (வேண்டுகிறோம்.) உன்னிடமே (எங்கள்) திரும்புதல் உண்டு'' எனக் கூறுகின்றனர்.

286. எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான்.68 அவர் செய்த நன்மை அவருக்குரியது. அவர் செய்த தீமையும் அவருக்குரியதே.265 "எங்கள் இறைவா! நாங்கள் மறந்து விட்டாலோ, தவறு செய்து விட்டாலோ எங்களைத் தண்டித்து விடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு முன்சென்றோர் மீது சிரமத்தைச் சுமத்தியது போல் எங்கள் மீது சுமத்தி விடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு வலிமையில்லாததை எங்கள் மீது சுமத்தி விடாதே! எங்கள் பிழைகளைப் பொறுத்து எங்களை மன்னிப்பாயாக! அருள் புரிவாயாக! நீயே எங்கள் அதிபதி. (உன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு நீ உதவுவாயாக! (எனவும் கூறுகின்றனர்).

To read this Chapter in English click here.

(14வது பதிப்பின்படி திருத்தி அமைக்கப்பட்டது)

July 23, 2009, 7:57 PM

அத்தியாயம் : 3

அத்தியாயம் : 3
ஆலு இம்ரான் - இம்ரானின் குடும்பத்தினர்

மொத்த வசனங்கள் : 200
இம்ரான் என்பவர், ஈஸா நபி (இயேசு) அவர்களின் தாய்வழிப் பாட்டனாரும் மர்யம் (மேரி) அவர்களின் தந்தையும் ஆவார். இம்ரானின் குடும்பத்தினர் என்பது மர்யமையும், அவரது தாயாரையும், ஈஸா நபியையும் குறிக்கும்.
இந்த அத்தியாயத்தில் 35, 36, 37 ஆகிய வசனங்களில் இம்ரானின் குடும்பத்தார் பற்றிய முக்கிய நிகழ்ச்சி கூறப்படுகின்றது. எனவே இந்த அத்தியாயம் இம்ரானின் குடும்பத்தினர் எனப் பெயர் பெற்றது.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்... 

1. அலிஃப், லாம், மீம்.2

2. அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன்.

3, 4. (முஹம்மதே!) உண்மையை உள்ளடக்கிய இவ்வேதத்தை அவன் உமக்கு அருளினான். இது தனக்கு முன் சென்றவற்றை4 உண்மைப்படுத்துகிறது. இதற்கு முன் மனிதர்களுக்கு நேர்வழி காட்ட தவ்ராத்தையும், இஞ்சீலையும் அவன் அருளினான்.491 (பொய்யை விட்டு உண்மையைப்) பிரித்துக் காட்டும் வழிமுறையையும் அவன் அருளினான். அல்லாஹ்வின் வசனங்களை ஏற்க மறுப்போருக்குக் கடுமையான வேதனை உண்டு. அல்லாஹ் மிகைத்தவன்; தண்டிப்பவன்.26

5. வானத்திலும்,507 பூமியிலும் எதுவுமே அல்லாஹ்வுக்கு மறைந்ததாக இல்லை.

6. தான் விரும்பியவாறு அவனே உங்களுக்குக் கருவறைகளில் வடிவம் தருகிறான். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.

7. (முஹம்மதே!) அவனே உமக்கு இவ்வேதத்தை அருளினான். அதில் உறுதி செய்யப்பட்ட வசனங்களும் உள்ளன. அவையே இவ்வேதத்தின் தாய். இரு கருத்தைத் தருகின்ற86 மற்றும் சில வசனங்களும் உள்ளன. உள்ளங்களில் கோளாறு இருப்போர் குழப்பத்தை நாடியும், அதற்கேற்RaRrற விளக்கத்தைத் தேடியும் அதில் இரு கருத்துடையவற்றைப் பின்பற்றுகின்றனர். அல்லாஹ்வையும், கல்வியில் தேர்ந்தவர்களையும் தவிர அதன் விளக்கத்தை (மற்றவர்கள்) அறிய மாட்டார்கள். அவர்கள் "இதை நம்பினோம்; அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவையே'' எனக் கூறுவார்கள். அறிவுடையோரைத் தவிர (மற்றவர்கள்) சிந்திப்பதில்லை.

8. எங்கள் இறைவா! எங்களுக்கு நேர்வழி காட்டிய பின் எங்கள் உள்ளங்களைத் தடம் புரளச் செய்து விடாதே!81 எங்களுக்கு உன் அருளை வழங்குவாயாக! நீ மாபெரும் வள்ளல்.

9. எங்கள் இறைவா! எந்தச் சந்தேகமும் இல்லாத நாளில்1 எங்களை நீ ஒன்று திரட்டுபவன். (எனக் கூறுவார்கள்.) அல்லாஹ் வாக்கு மீற மாட்டான்.

10. (ஏகஇறைவனை) மறுத்தோரின் மக்கட்செல்வமும், பொருட்செல்வமும் அல்லாஹ்விடமிருந்து அவர்களைச் சிறிதும் காப்பாற்றவே முடியாது. அவர்களே நரகின் எரிபொருட்கள்.

11. ஃபிர்அவ்னுக்கும், அவனுக்கு முன்சென்றோருக்கும் ஏற்பட்ட கதியைப் போலவே இவர்களுக்கும் ஏற்படும். அவர்கள் நமது வசனங்களைப் பொய்யெனக் கருதினர். அவர்களது பாவங்களின் காரணமாக அல்லாஹ் அவர்களைத் தண்டித்தான். அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்.

12. "தோற்கடிக்கப்பட்டு, நரகத்திற்குக் கொண்டு செல்லப்படுவீர்கள்; அது மிகக் கெட்ட தங்குமிடம்'' என்று (ஏகஇறைவனை) மறுப்போரிடம் கூறுவீராக!

13. இரண்டு அணியினர் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டதில்87 உங்களுக்கு தக்க சான்று உள்ளது. ஓர் அணியினர் அல்லாஹ்வின் பாதையில் போரிட்டனர். (ஏகஇறைவனை) மறுப்போராக மற்றொரு அணியினர் இருந்தனர். தம்மைப் போல் இரு மடங்காக கண்களால் அவர்களைக் கண்டனர்.466 தான் நாடியோரைத் தன் உதவியின் மூலம் அல்லாஹ் வலுப்படுத்துகிறான். அறிவுடையோருக்கு இதில் பாடம் உள்ளது.

14. பெண்கள், ஆண் மக்கள், திரட்டப்பட்ட தங்க வெள்ளிக் குவியல்கள், அழகிய குதிரைகள், கால்நடைகள், விளைநிலங்கள் ஆகிய மனம் கவருபவற்றை நேசிப்பது மனிதர்களுக்குக் கவர்ச்சியாக்கப்பட்டுள்ளது. இவை இவ்வுலக வாழ்க்கையின் வசதிகள். அல்லாஹ்விடம் அழகிய புகலிடம் உள்ளது.88

15. "இதை விடச் சிறந்ததை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?'' என்று கேட்பீராக! (இறைவனை) அஞ்சுவோருக்குத் தம் இறைவனிடம் சொர்க்கச் சோலைகள் உள்ளன. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். தூய்மையான துணைகளும்,8 அல்லாஹ்வின் திருப்தியும் உள்ளன. அல்லாஹ் அடியார்களைப் பார்ப்பவன்.488

16. "எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!'' என்று அவர்கள் கூறுவார்கள்.

17. (அவர்கள்) பொறுமையாளர்களாகவும், உண்மை பேசுவோராகவும், (இறைவனுக்கு) கட்டுப்பட்டோராகவும், (நல்வழியில்) செலவிடுவோராகவும், இரவின் கடைசி நேரத்தில் பாவமன்னிப்புத் தேடுவோராகவும் (இருப்பார்கள்.)

18. "தன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை'' என்று அல்லாஹ் உறுதி கூறுகிறான். வானவர்களும், நீதியை நிலைநாட்டும் அறிவுடையோரும் (உறுதி கூறுகின்றனர்.) அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. (அவன்) மிகைத்தவன்; ஞானமிக்கவன்.

19. அல்லாஹ்விடம் மார்க்கம் என்பது இஸ்லாமே. வேதம் கொடுக்கப்பட்டோர்27 தம்மிடம் விளக்கம் வந்த பின் தமக்கிடையே ஏற்பட்ட பொறாமையின் காரணமாகவே முரண்பட்டனர். அல்லாஹ்வின் வசனங்களை ஏற்க மறுப்போரை அல்லாஹ் விரைந்து விசாரிப்பவன்.

20. அவர்கள் உம்மிடம் விதண்டாவாதம் செய்வார்களானால் "என் முகத்தை அல்லாஹ்வுக்கே வழிபடச் செய்து விட்டேன். என்னைப் பின்பற்றியோரும் (இவ்வாறே செய்து விட்டனர்)'' எனக் கூறுவீராக! வேதம் கொடுக்கப்பட்டோரிடமும்,27 எழுதப் படிக்கத் தெரியாதோரிடமும் "இஸ்லாத்தை ஏற்கிறீர்களா?'' என்று கேட்பீராக! அவர்கள் இஸ்லாத்தை ஏற்றால் நேர்வழி பெற்றனர். புறக்கணித்தால் எடுத்துச் சொல்வதே உமக்குக் கடமை.81 அல்லாஹ் அடியார்களைப் பார்ப்பவன்.488

21. அல்லாஹ்வின் வசனங்களை ஏற்க மறுத்து, நபிமார்களை நியாயமின்றி கொலை செய்து, நீதியை ஏவும் மக்களையும் கொலை செய்வோருக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு என எச்சரிப்பீராக!

22. இவ்வுலகிலும், மறுமையிலும் நல்லறங்கள் அழிந்து போனவர்கள் அவர்களே. அவர்களுக்கு உதவி செய்வோர் யாருமில்லை.

23. வேதம் எனும் நற்பேறு வழங்கப்பட்டோரை27 நீர் அறியவில்லையா? அவர்களுக்கிடையே தீர்ப்பளிப்பதற்காக அல்லாஹ்வின் வேதத்தை நோக்கி அழைக்கப்படுகின்றனர். பின்னர் அவர்களில் ஒரு பகுதியினர் அலட்சியம் செய்து புறக்கணிக்கின்றனர்.

24. குறிப்பிட்ட நாட்களே தவிர நரகம் எங்களைத் தீண்டாது என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். தாமாக இட்டுக்கட்டிக் கொண்டது அவர்களது மார்க்க விஷயத்தில் அவர்களை ஏமாற்றி விட்டது.

25. எவ்விதச் சந்தேகமும் இல்லாத நாளில்1 அவர்களை நாம் ஒன்று திரட்டும்போது எவ்வாறு இருக்கும்? ஒவ்வொருவருக்கும், அவர் உழைத்தது முழுமையாக வழங்கப்படும்.265 அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.

26. "அல்லாஹ்வே! ஆட்சியின் அதிபதியே! நீ நாடியோருக்கு ஆட்சியை வழங்குகிறாய். நீ நாடியோரிடமிருந்து ஆட்சியைப் பறித்துக் கொள்கிறாய். நாடியோரைக் கண்ணியப்படுத்துகிறாய். நாடியோரை இழிவுபடுத்துகிறாய். நன்மைகள் உன் கைவசமே உள்ளன. நீ அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்'' என்று கூறுவீராக!

27. "இரவைப் பகலில் நுழைக்கிறாய்! பகலை இரவில் நுழைக்கிறாய்! உயிரற்றதிலிருந்து441 உயிருள்ளதை வெளிப்படுத்துகிறாய். உயிருள்ளதிலிருந்து உயிரற்றதை வெளிப்படுத்துகிறாய். நீ நாடியோருக்குக் கணக்கின்றி வழங்குகிறாய்'' (என்றும் கூறுவீராக!)

28. நம்பிக்கை கொண்டோர், நம்பிக்கை கொண்டோரை விட்டு விட்டு (ஏகஇறைவனை) மறுப்போரைப் பொறுப்பாளர்களாக ஆக்கக் கூடாது.89 அவர்களிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காக தவிர. இவ்வாறு செய்பவருக்கு அல்லாஹ்விடமிருந்து (பாதுகாப்பு) எதுவுமில்லை. அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கிறான். திரும்புதல் அல்லாஹ்விடமே உள்ளது.

29. "உங்கள் உள்ளங்களில் உள்ளதை நீங்கள் மறைத்தாலோ, வெளிப்படுத்தினாலோ அதை அல்லாஹ் அறிகிறான். வானங்களில்507 உள்ளதையும், பூமியில் உள்ளதையும் அவன் அறிகிறான். அனைத்துப் பொருட்களின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவன்'' என்று கூறுவீராக! 

30. ஒவ்வொருவரும், தாம் செய்த நன்மையையும், தீமையையும் கண் முன்னே பெற்றுக் கொள்ளும் நாளில்1 "தமக்கும் தமது (தீய) செயல்களுக்குமிடையே மிகப் பெரிய இடைவெளி இருக்க வேண்டும்'' என ஆசைப்படுவர். அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கிறான். அடியார்கள் மீது அல்லாஹ் இரக்கமுள்ளவன்.

31. "நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக!

32. "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் (தன்னை) மறுப்போரை அல்லாஹ் விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக!

33. ஆதமையும், நூஹையும், இப்ராஹீமின் குடும்பத்தாரையும், இம்ரானின் குடும்பத்தினரையும் அகிலத்தாரை விட அல்லாஹ் தேர்வு செய்தான்.

34. அவர்களில் சிலர், மற்ற சிலரின் வழித்தோன்றல்கள். அல்லாஹ் செவியுறுபவன்;488 அறிந்தவன்.

35. "இறைவா! என் வயிற்றில் உள்ளதை (குழந்தையை) உனக்காக நேர்ச்சை செய்து விட்டேன். அது (உனக்காக) முழுமையாக அர்ப்பணிக்கப்படும். (இதை) என்னிடமிருந்து ஏற்றுக் கொள்வாயாக! நீயே செவியுறுபவன்;488 அறிந்தவன்'' என்று இம்ரானின் மனைவி கூறியதை நினைவூட்டுவீராக!

36. அவர் ஈன்றெடுத்தபோது, "என் இறைவா! பெண் குழந்தையாக ஈன்றெடுத்து விட்டேனே'' எனக் கூறினார். அவர் எதை ஈன்றெடுத்தார் என்பதை அல்லாஹ் நன்கறிவான். "ஆண், பெண்ணைப் போன்றவன் அல்ல. நான் இவளுக்கு மர்யம் என்று பெயரிட்டேன்.373 விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் இவருக்கும், இவரது வழித் தோன்றல்களுக்கும் உன் பாதுகாப்பை வேண்டுகிறேன்'' எனவும் அவர் கூறினார்.

37. அவரை, (அக்குழந்தையை) அவரது இறைவன் அழகிய முறையில் ஏற்றுக் கொண்டான். அவரை அழகிய முறையில் வளர்த்தான். அவருக்கு ஸக்கரிய்யாவைப் பொறுப்பாளியாக்கினான். அவரது அறைக்கு ஸக்கரிய்யா சென்றபோதெல்லாம் அவரிடம் உணவைக் கண்டு, "மர்யமே! இது உனக்கு எங்கிருந்து கிடைத்தது?'' என்று கேட்டார். "இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது. அல்லாஹ் நாடுவோருக்கு கணக்கின்றி வழங்குகிறான்'' என்று (மர்யம்) கூறினார்.

38. அப்போது தான் ஸக்கரிய்யா "இறைவா! உன்னிடமிருந்து எனக்கொரு தூய குழந்தையைத் தருவாயாக! நீ வேண்டுதலைச் செவியுறுபவன்''488 என்று தம் இறைவனிடம் வேண்டினார்.

39. அவர் தொழுமிடத்தில் நின்று தொழுது கொண்டிருந்தபோது "யஹ்யாவைப் பற்றி அல்லாஹ் உமக்கு நற்செய்தி கூறுகிறான். அல்லாஹ்வின் வார்த்தையை90 அவர் உண்மைப்படுத்துவார். தலைவராகவும், ஒழுக்கக் கட்டுப்பாடு மிக்கவராகவும், நபியாகவும், நல்லவராகவும் இருப்பார்'' என்று வானவர்கள் அவரை அழைத்துக் கூறினர்.

40. "என் இறைவா! எனக்கு முதுமை வந்து விட்ட நிலையிலும், என் மனைவி மலடியாகவுள்ள நிலையிலும் எனக்கு எவ்வாறு குழந்தை உருவாகும்?'' என்று அவர் கேட்டார். "தான் நாடியதை அல்லாஹ் இப்படித்தான் செய்வான்'' என்று (இறைவன்) கூறினான்.

41. "இறைவா! எனக்கொரு சான்றை வழங்குவாயாக!'' என்று அவர் கேட்டார். "மூன்று நாட்கள் சைகையாகவே தவிர உம்மால் மக்களிடம் பேச முடியாது என்பதே உமக்குரிய சான்றாகும். உமது இறைவனை அதிகம் நினைப்பீராக! காலையிலும், மாலையிலும் துதிப்பீராக!'' என்று (இறைவன்) கூறினான்.

42. "மர்யமே! அல்லாஹ் உம்மைத் தேர்வு செய்து தூய்மையாக்கி அகிலத்துப் பெண்களை விட உம்மைச் சிறப்பித்தான்'' என்று வானவர்கள் (மர்யமிடம்) கூறியதை நினைவூட்டுவீராக!

43. "மர்யமே! உமது இறைவனுக்குப் பணிவாயாக! ஸஜ்தாச் செய்வாயாக! ருகூவு செய்வோருடன் ருகூவு செய்வாயாக!'' (என்றும் வானவர்கள் கூறினர்.)

44. இது மறைவான செய்திகளில் ஒன்றாகும். (முஹம்மதே!) இதை நாமே உமக்கு அறிவிக்கிறோம். மர்யமை யார் பொறுப்பேற்றுக் கொள்வது என்று (முடிவு செய்ய) தமது எழுதுகோல்களை அவர்கள் போட்டபோது அவர்களுடன் நீர் இருக்கவில்லை. அவர்கள் இது குறித்து சர்ச்சை செய்தபோதும் அவர்களுடன் நீர் இருக்கவில்லை.

45. "மர்யமே! அல்லாஹ் தன் வார்த்தை90 பற்றி உமக்கு நற்செய்தி கூறுகிறான். மர்யமின் மகனான ஈஸா எனும் மஸீஹ்92 என்பது அவரது பெயர். இவ்வுலகிலும், மறுமையிலும் தகுதிமிக்கவராகவும், (இறைவனுக்கு) நெருக்கமானவராகவும் இருப்பார்'' என்று வானவர்கள் கூறியதை நினைவூட்டுவீராக!

46. "அவர் தொட்டில் பருவத்திலும், இளமையிலும் மக்களிடம் பேசுவார்.415 நல்லவராகவும் இருப்பார்'' (என்றும் கூறினர்)

47. "இறைவா! எந்த ஆணும் என்னைத் தொடாத நிலையில் எனக்கு எவ்வாறு குழந்தை உருவாகும்?'' என்று அவர் கேட்டார். "தான் நாடியதை அல்லாஹ் இவ்வாறே படைக்கிறான். ஏதேனும் ஒரு காரியம் பற்றி அவன் முடிவு செய்து விட்டால் 'ஆகு' என்பான். உடனே அது ஆகி விடும்'' என்று (இறைவன்) கூறினான்.506

48. அவருக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும்491 கற்றுக் கொடுப்பான்.67

49. இஸ்ராயீலின் மக்களுக்குத் தூதராகவும்459 (ஈஸாவை அனுப்பினான்.) "உங்கள் இறைவனிடமிருந்து சான்றை நான் கொண்டு வந்துள்ளேன். உங்களுக்காக களிமண்ணால் பறவையின் வடிவம் அமைத்து, அதில் ஊதுவேன்; அல்லாஹ்வின் விருப்பப்படி269 அது பறவையாக ஆகும். அல்லாஹ்வின் விருப்பப்படி பிறவிக் குருடையும், தொழுநோயையும் நீக்குவேன்; இறந்தோரை உயிர்ப்பிப்பேன்; நீங்கள் உண்பதையும், உங்கள் வீடுகளில் நீங்கள் சேமித்து வைத்திருப்பதையும் உங்களுக்குக் கூறுவேன்; நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் இதில் உங்களுக்குத் தக்க சான்று உள்ளது'' (என்றார்)

50. "எனக்கு முன் சென்ற தவ்ராத்தை491 உண்மைப்படுத்தவும், உங்களுக்குத் தடை செய்யப்பட்டவற்றில் சிலவற்றை உங்களுக்கு அனுமதிக்கவும் உங்கள் இறைவனிடமிருந்து சான்றுடனும் வந்துள்ளேன். எனவே அல்லாஹ்வை அஞ்சுங்கள்! எனக்குக் கட்டுப்படுங்கள்!'' (என்றும் கூறினார்.)

51. "அல்லாஹ்வே எனது இறைவனும், உங்கள் இறைவனுமாவான். எனவே அவனையே வணங்குங்கள்! இதுவே நேரான வழியாகும்'' (எனவும் கூறினார்)

52. அவர்களிடம் (இறை) மறுப்பை ஈஸா உணர்ந்தபோது "அல்லாஹ்வுக்காக எனக்கு உதவுவோர் யார்?'' என்று கேட்டார். (அவரது) அந்தரங்கத் தோழர்கள், "நாங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்கள். அல்லாஹ்வை நம்பினோம். நாங்கள் முஸ்லிம்கள்295 என்பதற்கு நீங்களே சாட்சியாக இருங்கள்'' என்றனர்.

53. "எங்கள் இறைவா! நீ அருளியதை நம்பினோம். இத்தூதரைப் பின்பற்றினோம். எங்களை இதற்கு சாட்சிகளாகப் பதிவு செய்து கொள்!'' (எனவும் கூறினர்.)

54. (ஈஸாவின் எதிரிகள்) சூழ்ச்சி செய்தனர். அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்தான்6. அல்லாஹ் சிறப்பாகச் சூழ்ச்சி செய்பவன்.

55, 56. " ஈஸாவே! நான் உம்மைக் கைப்பற்றுபவனாகவும்,93 என்னளவில் உம்மை உயர்த்துபவனாகவும்,456 (என்னை) மறுப்போரிடமிருந்து உம்மைத் தூய்மைப்படுத்துபவனாகவும், உம்மைப் பின்பற்றுவோரை (என்னை) மறுப்போரை விட கியாமத் நாள்1 வரை மேல் நிலையில் வைப்பவனாகவும்448 இருக்கிறேன். பின்னர் என்னிடமே உங்களின் திரும்புதல் உள்ளது. நீங்கள் முரண்பட்ட விஷயத்தில் உங்களுக்கிடையே தீர்ப்பு வழங்குவேன். (என்னை) மறுப்போரை இவ்வுலகிலும், மறுமையிலும் கடுமையாகத் தண்டிப்பேன். அவர்களுக்கு எந்த உதவியாளரும் இருக்க மாட்டார்.'' என்று அல்லாஹ் கூறியதை நினைவூட்டுவீராக!26 

57. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரின் கூலிகளை அவர்களுக்கு அவன் முழுமையாக வழங்குவான். அநீதி இழைத்தோரை அல்லாஹ் விரும்ப மாட்டான்.

58. (முஹம்மதே!) நாம் உமக்குக் கூறும் இச்செய்தியானது (நமது) வசனங்களும், ஞானமிக்க அறிவுரையுமாகும்.

59. அல்லாஹ்விடம் ஈஸாவுக்கு உதாரணம் ஆதம் ஆவார்.459 அவரை மண்ணால் படைத்து 'ஆகு' என்று அவரிடம் கூறினான்.506 உடனே அவர் ஆகி விட்டார்.368

60. இந்த உண்மை உம் இறைவனிடமிருந்து வந்தது. எனவே சந்தேகிப்பவராக நீர் ஆகாதீர்!

61. உமக்கு விளக்கம் வந்த பின் இது குறித்து உம்மிடம் யாரேனும் விதண்டாவாதம் செய்தால் "வாருங்கள்! எங்கள் பிள்ளைகளையும், உங்கள் பிள்ளைகளையும், எங்கள் பெண்களையும், உங்கள் பெண்களையும் அழைப்போம். நாங்களும் வருகிறோம். நீங்களும் வாருங்கள்! பின்னர் இறைவனிடம் இறைஞ்சி பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபத்தைக் கேட்போம்''94 &449 எனக் கூறுவீராக!


62. இதுவே உண்மையான வரலாறாகும். அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை அல்லாஹ்வே மிகைத்தவன்; ஞானமிக்கவன்.

63. நீங்கள் புறக்கணித்தால் குழப்பம் செய்வோரை அல்லாஹ் அறிந்தவன்.

64. "வேதமுடையோரே!27 நாம் அல்லாஹ்வைத் தவிர (யாரையும்) வணங்கக் கூடாது; அவனுக்கு இணையாக எதையும் கருதக் கூடாது; அல்லாஹ்வையன்றி நம்மில் ஒருவர் மற்றவரைக் கடவுள்களாக ஆக்கக் கூடாது என்ற எங்களுக்கும், உங்களுக்கும் பொதுவான கொள்கைக்கு வாருங்கள்!'' என்று கூறுவீராக! அவர்கள் புறக்கணித்தால் "நாங்கள் முஸ்லிம்கள்295 என்பதற்கு நீங்களே சாட்சிகளாக இருங்கள்!'' எனக் கூறி விடுங்கள்!

65. வேதமுடையோரே!27 இப்ராஹீமைப் பற்றி ஏன் தர்க்கம் செய்கின்றீர்கள்? தவ்ராத்தும், இஞ்சீலும்491 அவருக்குப் பிறகே அருளப்பட்டன. விளங்க மாட்டீர்களா?

66. உங்களுக்கு விளக்கம் உள்ள விஷயத்தில் (இதுவரை) தர்க்கம் செய்தீர்கள். உங்களுக்கு எது பற்றி விளக்கம் இல்லையோ அது பற்றி ஏன் தர்க்கம் செய்கின்றீர்கள்? அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள்!

67. இப்ராஹீம், யூதராகவோ, கிறித்தவராகவோ இருந்ததில்லை. மாறாக அவர் உண்மை வழியில் நின்ற முஸ்லிமாக295 இருந்தார். இணை கற்பித்தவராக அவர் இருந்ததில்லை.

68. இப்ராஹீம் விஷயத்தில் உரிமை படைத்த மக்கள் அவரைப் பின்பற்றியோரும், இந்த நபியும், நம்பிக்கை கொண்டோருமே. அல்லாஹ்வே நம்பிக்கை கொண்டோரின் பாதுகாவலன்.

69. வேதமுடையோரில்27 ஒரு பகுதியினர் உங்களை வழிகெடுக்க விரும்புகின்றனர். அவர்கள் தம்மையே வழிகெடுத்துக் கொள்கின்றனர். அவர்கள் உணர்வதில்லை.

70. வேதமுடையோரே!27 நீங்கள் விளங்கிக் கொண்டே ஏன் அல்லாஹ்வின் வசனங்களை மறுக்கின்றீர்கள்?

71. வேதமுடையோரே!27 உண்மையை ஏன் பொய்யுடன் கலக்கின்றீர்கள்? அறிந்து கொண்டே ஏன் உண்மையை மறைக்கின்றீர்கள்?

72. "நம்பிக்கை கொண்டோர் மீது அருளப்பட்டதைக் காலையில் நம்பி, மாலையில் மறுத்து விடுங்கள்! அப்போது தான் (மற்றவர்களும் அந்த மார்க்கத்திலிருந்து) விலகுவார்கள்'' என்று வேதமுடையோரில்27 ஒரு குழுவினர் கூறுகின்றனர்.

73. "உங்கள் மார்க்கத்தைப் பின்பற்றுபவர் தவிர (மற்றவருக்கு) உங்களுக்குக் கொடுக்கப்பட்டது போன்று கொடுக்கப்படும் என்றோ, உங்கள் இறைவனிடம் அவர்கள் உங்களை வென்று விடுவார்கள் என்றோ நம்பாதீர்கள்!'' (எனவும் கூறுகின்றனர்.) "நேர்வழி அல்லாஹ்வின் வழியே'' என்று கூறுவீராக! "அருள், அல்லாஹ்வின் கையில் உள்ளது; தான் நாடியோருக்கு அதைக் கொடுப்பான்'' என்றும் கூறுவீராக! அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.

74. தான் நாடியோருக்கு தன் அருளை அவன் சொந்தமாக்குகிறான். அல்லாஹ் மகத்தான அருளுடையவன்.

75. நம்பி, ஒரு குவியலையே ஒப்படைத்தால் உம்மிடம் திருப்பித் தருவோரும் வேதமுடையோரில்27 உள்ளனர். நீர் நம்பி ஒரு தங்கக் காசை ஒப்படைத்தால் நிலையாய் நின்றால் தவிர உம்மிடம் திருப்பித் தராதோரும் அவர்களில் உள்ளனர். "எழுதப்படிக்கத் தெரியாத சமுதாயத்தின் விஷயத்தில் எங்கள் மீது எந்தப் பாவமும் ஏற்படாது'' என்று அவர்கள் கூறுவதே இதற்குக் காரணம். அல்லாஹ்வின் பெயரால் அறிந்து கொண்டே அவர்கள் பொய்யை இட்டுக்கட்டிக் கூறுகின்றனர்.

76. அவ்வாறில்லை! யார் தமது வாக்குறுதியை நிறைவேற்றி (இறைவனை) அஞ்சுகிறாரோ, அல்லாஹ் (தன்னை) அஞ்சுவோரை விரும்புகிறான்.

77. அல்லாஹ்விடம் செய்த உறுதிமொழியையும், தமது சத்தியங்களையும் அற்பமான விலைக்கு விற்றோருக்கு445 மறுமையில் எந்த நற்பேறும் இல்லை.64 கியாமத் நாளில்1 அவர்களுடன் அல்லாஹ் பேசவும் மாட்டான். அவர்களைப் பார்க்கவும்488 மாட்டான். அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.

78. அவர்களில் ஒரு பகுதியினர் உள்ளனர். வேதத்தில் இல்லாததை வேதம் என்று நீங்கள் நினைக்க வேண்டும் என்பதற்காக வேதத்தை வாசிப்பது போல் தமது நாவுகளை வளைக்கின்றனர். "இது அல்லாஹ்விடமிருந்து வந்தது'' எனவும் கூறுகின்றனர். அது அல்லாஹ்விடமிருந்து வந்ததல்ல. அறிந்து கொண்டே அல்லாஹ்வின் பெயரால் பொய் கூறுகின்றனர்.

79. எந்த மனிதருக்காவது வேதத்தையும், அதிகாரத்தையும்,164 நபி எனும் தகுதியையும் அல்லாஹ் வழங்கினால் (அதன்) பின் "அல்லாஹ்வையன்றி எனக்கு அடிமைகளாக ஆகி விடுங்கள்!'' என்று மனிதர்களிடம் கூறுகின்ற அதிகாரம் அவருக்கு இல்லை. மாறாக, "வேதத்தை நீங்கள் கற்றுக் கொடுப்போராக இருப்பதாலும், அதை வாசித்துக் கொண்டிருப்பதாலும் இறைவனுக்குரியோராக ஆகி விடுங்கள்!'' (என்றே நபி கூறுவார்.)

80. "வானவர்களையும், நபிமார்களையும் கடவுள்களாக்கிக் கொள்ளுங்கள்!'' என்று அவர் உங்களுக்கு ஏவமாட்டார். நீங்கள் முஸ்லிம்களாக295 ஆன பின் (ஏகஇறைவனை) மறுக்குமாறு அவர் உங்களுக்கு ஏவுவாரா?

81. "உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும்67 நான் தந்த பின் உங்களிடம் இருப்பதை உண்மைப்படுத்தும் தூதர் உங்களிடம் வந்தால் அவரை நம்புவீர்களா? அவருக்கு உதவுவீர்களா?'' என்று நபிமார்களிடம் அல்லாஹ் உறுதிமொழி எடுத்து95 "இதை ஒப்புக் கொண்டீர்களா? எனது பலமான உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டீர்களா?'' என்று கேட்டபோது, "ஒப்புக் கொண்டோம்'' என்று அவர்கள் கூறினர். "நீங்களே இதற்குச் சாட்சியாக இருங்கள்! உங்களுடன் நானும் சாட்சியாக இருக்கிறேன்'' என்று அவன் கூறினான்.

82. இதன் பிறகு புறக்கணிப்போரே குற்றம் புரிந்தவர்கள்.

83. அல்லாஹ்வின் மார்க்கத்தை விடுத்து வேறு ஒன்றையா தேடுகின்றனர்? வானங்களிலும்,507 பூமியிலும் உள்ளவை விரும்பியோ, விரும்பாமலோ அவனுக்கே அடிபணிகின்றன.96 அவனிடமே அவர்கள் கொண்டு செல்லப்படுவார்கள்.

84. "அல்லாஹ்வையும், எங்களுக்கு அருளப்பட்டதையும், இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யாகூப், மற்றும் (அவர்களின்) சந்ததிகளுக்கு அருளப்பட்டதையும், மூஸா, ஈஸா, மற்றும் நபிமார்களுக்கு தமது இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்பினோம். அவர்களில் எவருக்கிடையேயும் வேற்றுமை காட்ட மாட்டோம்.37 நாங்கள் அவனுக்கே கட்டுப்பட்டவர்கள்'' என்று கூறுவீராக!

85. இஸ்லாம் அல்லாத மார்க்கத்தை யாரேனும் விரும்பினால் அவரிடமிருந்து அது ஏற்கப்படாது. அவர் மறுமையில் நட்டமடைந்தவராக இருப்பார்.

86. தம்மிடம் தெளிவான சான்றுகள் வந்து, இத்தூதர் (முஹம்மத்) உண்மையாளர் என்று விளங்கி, நம்பிக்கை கொண்டு விட்டு பிறகு மறுத்த கூட்டத்திற்கு அல்லாஹ் எவ்வாறு நேர்வழி காட்டுவான்? அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.

87. அவர்கள் மீது அல்லாஹ்வின் சாபமும், வானவர்கள் மற்றும் ஏனைய (நன்) மக்களின் சாபமும் உள்ளது என்பதே அவர்களுக்கான தண்டனை.6

88, 89. அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். இதன் பின்னர் திருந்தி சீர்திருத்திக் கொண்டோரைத் தவிர (மற்றவர்களுக்கு) வேதனை இலேசாக்கப்படாது. அவகாசமும் அளிக்கப்பட மாட்டார்கள். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.26

90. நம்பிக்கை கொண்ட பின் மறுத்து, பின்னர் (இறை) மறுப்பை அதிகமாக்கிக் கொண்டோரின் மன்னிப்பு ஒருக்காலும் ஏற்கப்படாது. அவர்களே வழி தவறியவர்கள்.

91. (ஏகஇறைவனை) மறுத்து, மறுத்த நிலையில் மரணித்தோர், பூமி நிரம்பும் அளவுக்குத் தங்கத்தை ஈடாகக் கொடுத்தாலும் அது ஏற்கப்படாது. அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு. அவர்களுக்கு உதவுவோர் யாருமில்லை.

92. நீங்கள் விரும்புவதிலிருந்து (நல்வழியில்) செலவிடாத வரை நன்மையை அடைந்து கொள்ளவே மாட்டீர்கள்.78 நீங்கள் எப்பொருளை (நல்வழியில்) செலவிட்டாலும் அல்லாஹ் அதை அறிந்தவன்.

93. தவ்ராத்491 அருளப்படுவதற்கு முன் இஸ்ராயீல் (யாகூப்) தம் மீது தடைசெய்து கொண்டதைத் தவிர எல்லா உணவுகளும் இஸ்ராயீலின் மக்களுக்கு அனுமதிக்கப்பட்டதாகவே இருந்தன. "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் தவ்ராத்தைக் கொண்டு வந்து படித்துக் காட்டுங்கள்!'' என்று (முஹம்மதே! யூதர்களிடம்) கேட்பீராக!97

94. இதன் பிறகும் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியோரே அநீதி இழைத்தவர்கள்.

95. "அல்லாஹ் உண்மையே கூறினான். எனவே இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுங்கள்! அவர் உண்மை வழியில் நின்றார். இணைகற்பித்தவராக அவர் இருந்ததில்லை'' என்று கூறுவீராக!

96. அகிலத்தின் நேர்வழிக்குரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம்33 பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதாகும்.

97. அதில் தெளிவான சான்றுகளும்438 மகாமே இப்ராஹீமும்35 உள்ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார்.34 அந்த ஆலயத்தில்33 அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்றுவர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. யாரேனும் (ஏகஇறைவனை) மறுத்தால் அகிலத்தாரை விட்டும் அல்லாஹ் தேவைகளற்றவன்.485

98. "வேதமுடையோரே!27 அல்லாஹ்வின் வசனங்களை ஏன் ஏற்க மறுக்கிறீர்கள்? நீங்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன்''488 என்று கூறுவீராக!

99. "வேதமுடையோரே!27 நம்பிக்கை கொண்டோரை அல்லாஹ்வின் பாதையை விட்டும் ஏன் தடுக்கின்றீர்கள்? தெரிந்து கொண்டே அதைக் கோணலா(ன மார்க்கமா)கச் சித்தரிக்கின்றீர்கள். நீங்கள் செய்வதை அல்லாஹ் கவனிக்காதவனாக இல்லை'' என்றும் கூறுவீராக!

100. நம்பிக்கை கொண்டோரே! வேதம் கொடுக்கப்பட்டோரில்27 ஒரு பிரிவினருக்கு நீங்கள் கட்டுப்பட்டால் நம்பிக்கை கொண்ட உங்களை (ஏகஇறைவனை) மறுப்போராக மாற்றி விடுவார்கள்.

101. அல்லாஹ்வின் வசனங்கள் உங்களுக்குக் கூறப்படும் நிலையிலும், அவனது தூதர் (முஹம்மத்) உங்களுடன் இருக்கும் நிலையிலும் எப்படி (ஏகஇறைவனை) மறுக்கின்றீர்கள்? அல்லாஹ்வைப் பற்றிக் கொள்பவர் நேரான வழியில் செலுத்தப்பட்டு விட்டார்.

102. நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுகின்ற விதத்தில் அஞ்சுங்கள்! நீங்கள் முஸ்லிம்களாகவே295 தவிர மரணிக்காதீர்கள்!

103. அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள்!98 பிரிந்து விடாதீர்கள்! நீங்கள் பகைவர்களாக இருந்த நிலையில் அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருளை எண்ணிப்பாருங்கள்! அவன் உங்கள் உள்ளங்களுக்கிடையே இணைப்பை ஏற்படுத்தினான். எனவே அவனது அருளால் சகோதரர்களாகி விட்டீர்கள்! நரகத்தின் விளிம்பில் இருந்தீர்கள். அதிலிருந்து உங்களைக் காப்பாற்றினான். நீங்கள் நேர்வழி பெறுவதற்காக இவ்வாறே தனது சான்றுகளை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.

104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

105. தம்மிடம் தெளிவான சான்றுகள் வந்த பின்பு முரண்பட்டுப் பிரிந்து விட்டோரைப் போல் ஆகாதீர்கள்! அவர்களுக்கே கடும் வேதனை உண்டு.

106. அந்நாளில் சில முகங்கள் வெண்மையாகத் திகழும். வேறு சில முகங்கள் கருத்திருக்கும். "நம்பிக்கை கொண்ட பின் (ஏகஇறைவனை) மறுத்து விட்டீர்களா? நீங்கள் மறுத்துக் கொண்டிருந்ததால் இவ்வேதனையை அனுபவியுங்கள்!'' என்று முகங்கள் கறுத்தவர்களிடம் (கூறப்படும்)

107. வெண்மையான முகமுடையோர் அல்லாஹ்வின் அருளில் இருப்பார்கள். அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.

108. இவை, உண்மையை உள்ளடக்கிய அல்லாஹ்வின் வசனங்கள். இவற்றை உமக்குக் கூறுகிறோம். அகிலத்தாருக்கு அநீதி இழைப்பதை அல்லாஹ் விரும்ப மாட்டான்.

109. வானங்களில்507 உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வுக்கே உரியன. அல்லாஹ்விடமே காரியங்கள் கொண்டு செல்லப்படும்.

110. நீங்கள், மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத் தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்! வேதமுடையோர்27 நம்பிக்கை கொண்டிருந்தால் அது அவர்களுக்குச் சிறந்ததாக இருந்திருக்கும். அவர்களில் நம்பிக்கை கொண்டோரும் உள்ளனர். அவர்களில் அதிகமானோர் குற்றம் புரிபவர்கள்.

111. தொந்தரவு தருவதைத் தவிர அவர்கள் உங்களுக்கு எந்தத் தீங்கும் செய்யவே முடியாது. உங்களுடன் போருக்கு வந்தால் புறங்காட்டி ஓடுவார்கள். பின்னர் உதவி செய்யப்பட மாட்டார்கள்.

112. அல்லாஹ்வின் உடன்படிக்கையும், மனிதர்களின் உடன்படிக்கையும் இருந்தால் தவிர அவர்கள் எங்கிருந்தபோதும் அவர்களுக்கு இழிவு விதிக்கப்பட்டு விட்டது. அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளானார்கள். அவர்களுக்கு வறுமை விதிக்கப்பட்டு விட்டது.99 அல்லாஹ்வின் வசனங்களை அவர்கள் ஏற்க மறுத்ததும், நபிமார்களை அநியாயமாகக் கொலை செய்ததுமே இதற்குக் காரணம். மேலும் அவர்கள் பாவம் செய்ததும், வரம்பு மீறியதும் இதற்குக் காரணம்.

113. அவர்கள் அனைவரும் சமமாக இல்லை. வேதமுடையோரில்27 நேரான சமுதாயமும் உள்ளது. அவர்கள் இரவு நேரங்களில் அல்லாஹ்வின் வசனங்களை ஓதுகின்றனர்; ஸஜ்தாச் செய்கின்றனர்.

114. அல்லாஹ்வையும், இறுதி நாளையும்1 அவர்கள் நம்புகின்றனர். நன்மையை ஏவுகின்றனர். தீமையைத் தடுக்கின்றனர். நல்ல காரியங்களை நோக்கி விரைகின்றனர். அவர்களே நல்லோர்.

115. அவர்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அது மறுக்கப்படாது. (தன்னை) அஞ்சுவோரை அல்லாஹ் அறிந்தவன்.

116. (ஏகஇறைவனை) மறுப்போருக்கு அவர்களின் மக்கட்செல்வமும், பொருட்செல்வமும் அல்லாஹ்விடமிருந்து அவர்களைச் சிறிதும் காப்பாற்றாது. அவர்கள் நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.

117. இவ்வுலக வாழ்க்கையில் அவர்கள் செலவிடுவதற்கு உதாரணம் கடும் குளிர் காற்றாகும். தமக்குத் தாமே தீங்கிழைத்த கூட்டத்தின் பயிர்களில் அக்காற்று பட்டு அவற்றை அழித்து விடுகிறது. அல்லாஹ் அவர்களுக்குத் தீங்கிழைக்கவில்லை. மாறாக அவர்கள் தமக்குத் தாமே தீங்கிழைத்தனர்.

118. நம்பிக்கை கொண்டோரே! உங்களை விடுத்து மற்றவர்களை உற்ற நண்பர்களாக்காதீர்கள்!89 அவர்கள் உங்களுக்குத் தீங்கிழைப்பதில் எந்தக் குறையும் வைக்க மாட்டார்கள். நீங்கள் சிரமப்படுவதை அவர்கள் விரும்புவார்கள். அவர்களின் வாய்களிலிருந்தே பகைமை வெளியாகி விட்டது. அவர்களின் உள்ளங்கள் மறைத்து வைத்திருப்பது அதைவிட அதிகம். நீங்கள் விளங்குவோராக இருந்தால் (நமது) வசனங்களைத் தெளிவுபடுத்தி விட்டோம்.

119. நீங்களோ அவர்களை நேசிக்கிறீர்கள். அவர்களோ உங்களை நேசிப்பதில்லை. நீங்கள் அனைத்து வேதங்களையும் நம்புகிறீர்கள். அவர்கள் உங்களைக் காணும்போது "நம்பிக்கை கொண்டோம்'' எனக் கூறுகின்றனர். தனித்திருக்கும்போது உங்களுக்கு எதிராக கோபத்தின் காரணமாக நகங்களைக் கடிக்கின்றனர். "உங்கள் கோபத்தின் காரணமாகச் செத்து விடுங்கள்! உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ் அறிந்தவன்'' எனக் கூறுவீராக!

120. உங்களுக்கு நன்மை ஏற்பட்டால் அது அவர்களுக்குக் கவலையை ஏற்படுத்துகிறது. உங்களுக்குத் தீங்கு ஏற்பட்டால் அதனால் அவர்கள் மகிழ்கின்றனர். நீங்கள் சகித்துக் கொண்டு (இறைவனை) அஞ்சினால் அவர்களின் சூழ்ச்சி உங்களுக்கு எந்தத் தீங்கும் செய்யாது. அவர்கள் செய்வதை அல்லாஹ் முழுமையாக அறிபவன்.

121. நம்பிக்கை கொண்டோரைப் போர்க்களங்களில் நிறுத்துவதற்காக (முஹம்மதே!) உமது குடும்பத்தை விட்டுப் புறப்பட்டதை நினைவூட்டுவீராக! அல்லாஹ் செவியுறுபவன்;488 அறிந்தவன்.53

122. உங்களில் இரு குழுவினருக்கும் அல்லாஹ் உதவுபவன் என்ற நிலையில் அவ்விரு குழுவினரும் கோழைகளாகிட எண்ணினர்.196 நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்.

123. நீங்கள் தாழ்ந்த நிலையில் இருந்தபோது அல்லாஹ் 'பத்ரு'க்களத்தில் உங்களுக்கு உதவி செய்தான். எனவே நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ்வை அஞ்சுங்கள்!

124. "(விண்ணிலிருந்து) இறக்கப்பட்ட மூவாயிரம் வானவர்கள் மூலம் உங்கள் இறைவன் உங்களுக்கு உதவியது உங்களுக்குப் போதாதா?'' என்று நம்பிக்கை கொண்டோருக்கு நீர் கூறியதை நினைவூட்டுவீராக!

125. அது மட்டுமல்ல! நீங்கள் சகித்துக் கொண்டு (இறைவனை) அஞ்சும்போது திடீரென்று அவர்கள் உங்களிடம் (போரிட) வந்தால் போர்க்கலை அறிந்த ஐயாயிரம் வானவர்கள் மூலம் உங்கள் இறைவன் உங்களுக்கு உதவுவான்.

126. உங்களுக்கு நற்செய்தி கூறவும், உங்கள் உள்ளங்கள் இதன் மூலம் அமைதி பெறவுமே இதை அல்லாஹ் ஏற்படுத்தினான். மிகைத்தவனும், ஞானமிக்கோனுமான அல்லாஹ்விடமிருந்தே தவிர எந்த உதவியும் இல்லை.

127. (ஏகஇறைவனை) மறுப்போரில் ஒரு பகுதியினரை அழிக்கவோ, அவர்களைத் தோல்வியுடன் திரும்பச் செய்து இழிவுபடுத்தவோ (இறைவன் உதவினான்)

128. (முஹம்மதே!) அதிகாரத்தில் உமக்கு ஏதுமில்லை.100 அவன் அவர்களை மன்னிக்கலாம். அல்லது அவர்களைத் தண்டிக்கலாம். ஏனெனில் அவர்கள் அநீதி இழைத்தவர்கள்.480

129. வானங்களில்507 உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வுக்கே உரியன. தான் நாடியோரை அவன் மன்னிக்கிறான். நாடியோரைத் தண்டிக்கிறான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

130. நம்பிக்கை கொண்டோரே! பன்மடங்காகப் பெருகிக் கொண்டிருக்கும் நிலையில் வட்டியை84 உண்ணாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! இதனால் வெற்றி பெறுவீர்கள்.

131. (ஏகஇறைவனை) மறுப்போருக்காகத் தயாரிக்கப்பட்டுள்ள நரகத்தை அஞ்சுங்கள்!

132. அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்படுங்கள்! இதனால் அருள் செய்யப்படுவீர்கள்.

133. உங்கள் இறைவனிடமிருந்து கிடைக்கும் மன்னிப்பிற்கும், வானங்கள்507 மற்றும் பூமியின் பரப்பளவு கொண்ட சொர்க்கத்திற்கும் விரையுங்கள்! (இறைவனை) அஞ்சுவோருக்காக அது தயாரிக்கப்பட்டுள்ளது.

134. அவர்கள் செழிப்பிலும், வறுமையிலும் (நல்வழியில்) செலவிடுவார்கள். கோபத்தை மென்று விழுங்குவார்கள். மக்களை மன்னிப்பார்கள். நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கிறான்.

135. அவர்கள் வெட்கக்கேடானதைச் செய்தாலோ, தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டாலோ அல்லாஹ்வை நினைத்து தமது பாவங்களுக்கு மன்னிப்புத் தேடுவார்கள். அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? தாங்கள் செய்ததில் தெரிந்து கொண்டே அவர்கள் நிலைத்திருக்க மாட்டார்கள்.

136. தமது இறைவனிடமிருந்து மன்னிப்பும், சொர்க்கச் சோலைகளுமே அவர்களின் கூலி. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். (நன்கு) செயல்பட்டோரின் கூலி மிகவும் நல்லது.

137. உங்களுக்கு முன்னர் முன்னுதாரணங்கள் சென்றுள்ளன. எனவே பூமியில் பயணம் செய்து (உண்மையைப்) பொய்யெனக் கருதியோரின் முடிவு எப்படி இருந்தது என்பதைச் சிந்தியுங்கள்!

138. இது மனிதர்களுக்கு விளக்கமும், நேர்வழியும், (இறைவனை) அஞ்சுவோருக்கு அறிவுரையுமாகும்.

139. தளர்ந்து விடாதீர்கள்! கவலைப்படாதீர்கள்! நம்பிக்கை கொண்டிருந்தால் நீங்களே உயர்ந்தவர்கள்.

140. உங்களுக்கு (போரில்) ஒரு காயம் ஏற்பட்டால் அந்தக் கூட்டத்திற்கும் அது போன்ற காயம் ஏற்பட்டிருக்கிறது. காலத்தை மக்களிடையே நாம் சுழல விடுகிறோம். நம்பிக்கை கொண்டோரை அல்லாஹ் அடையாளம் காட்டவும், உங்களில் உயிர் தியாகிகளை ஏற்படுத்தவுமே (இவ்வாறு துன்பத்தைத் தருகிறான்). அநீதி இழைத்தோரை அல்லாஹ் விரும்ப மாட்டான்.

141. நம்பிக்கை கொண்டோரை அல்லாஹ் தூய்மைப்படுத்தவும் (தன்னை) மறுப்போரை அழிக்கவும் (இவ்வாறு செய்கிறான்.)

142. உங்களில் தியாகம் புரிந்தோரை அல்லாஹ் அடையாளம் காட்டாமலும், பொறுமையாளர்களை அடையாளம் காட்டாமலும் நீங்கள் சொர்க்கத்தில் நுழையலாம் என்று நினைக்கிறீர்களா?

143. (வீர) மரணத்தைச் சந்திப்பதற்கு முன்னால் அதற்கு ஆசைப்படுவோராக இருந்தீர்கள். இப்போது அதை நேருக்கு நேராகவே பார்த்து விட்டீர்கள்.

144. முஹம்மத், தூதர் தவிர வேறு இல்லை. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர்.101 அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால் வந்த வழியில் திரும்பி விடுவீர்களா? வந்த வழியே திரும்புவோர் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்யவே முடியாது. நன்றியுடன் நடப்போருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான்.

145. அல்லாஹ்வின் விருப்பமின்றி எந்த உயிரும் மரணிக்க முடியாது. இது நேரம் நிர்ணயிக்கப்பட்ட விதி. இவ்வுலகக் கூலியை விரும்புவோருக்கு அதை வழங்குவோம். மறுமையின் கூலியை விரும்புவோருக்கு அதை வழங்குவோம். நன்றியுடன் நடப்போருக்கு கூலி வழங்குவோம்.

146. எத்தனையோ நபிமார்களுடன் சேர்ந்து எவ்வளவோ படையினர் போரிட்டுள்ளனர். அல்லாஹ்வின் பாதையில் அவர்களுக்கு ஏற்பட்ட (துன்பத்)திற்காக அவர்கள் தளர்ந்திடவில்லை; பலவீனப்படவும் இல்லை; பணிந்திடவும் இல்லை. சகித்துக் கொள்வோரை அல்லாஹ் விரும்புகிறான்.

147. "எங்கள் இறைவா! எங்கள் பாவங்களையும், எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறியதையும் மன்னிப்பாயாக! எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! (உன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு உதவுவாயாக!'' என்பதே அவர்களின் வேண்டுதலாக இருந்தது.

148. எனவே இவ்வுலகக் கூலியையும், மறுமையின் அழகிய கூலியையும் அவர்களுக்கு அல்லாஹ் வழங்கினான். நன்மை செய்வோரை அல்லாஹ் விரும்புகிறான்.

149. நம்பிக்கை கொண்டோரே! (ஏகஇறைவனை) மறுப்போருக்கு நீங்கள் கட்டுப்பட்டால் உங்களை வந்தவழியே திருப்பி விடுவார்கள். இதனால் நட்டமடைவீர்கள்!

150. மாறாக அல்லாஹ்வே உங்கள் அதிபதி. அவனே உதவி செய்வோரில் சிறந்தவன்.

151. அல்லாஹ் எந்தச் சான்றையும் அருளாமலிருந்தும் அவனுக்கு இணை கற்பித்ததால் (நம்மை) மறுத்தோரின் உள்ளங்களில் பீதியை ஏற்படுத்துவோம். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோர் சென்றடையும் இடம் மிகவும் கெட்டது.

152. அல்லாஹ்வின் விருப்பப்படி அவர்களை நீங்கள் கருவறுத்தபோது தனது வாக்குறுதியை உங்களுக்கு உண்மைப்படுத்தினான். தளர்ந்து போய் இவ்விஷயத்தில் முரண்பட்டீர்கள்! நீங்கள் விரும்பியதை அவன் உங்களுக்குக் காட்டிய பிறகும் (அவனுக்கு) மாறுசெய்தீர்கள். உங்களில் இவ்வுலகை விரும்புவோரும் இருந்தீர்கள். மறுமையை விரும்புவோரும் இருந்தீர்கள். உங்களைச் சோதிப்பதற்காக484 அவர்களை (வெற்றி கொள்வதை) விட்டும் அவன் உங்களைத் திருப்பினான். உங்களை மன்னித்தான். நம்பிக்கை கொண்டோர் மீது அல்லாஹ் அருளுடையவன்.

153. உங்களுக்குப் பின்னால் இத்தூதர் (முஹம்மத்) உங்களை அழைத்துக் கொண்டிருக்கும்போது எவரையும் திரும்பிப் பார்க்காமல் நீங்கள் (மலை மேல்) ஏறிச் சென்றதை எண்ணிப் பாருங்கள்! உங்களுக்கு (வெற்றி) தவறியதற்காகவும், துன்பம் ஏற்பட்டதற்காகவும் நீங்கள் கவலைப்படாமலிருப்பதற்காக அதை விடப் பெருங்கவலையை அவன் உங்களுக்குப் பரிசளித்தான்.102 நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

154. பின்னர் கவலைக்குப் பிறகு உங்களுக்கு மனஅமைதியை ஏற்படுத்த சிறு தூக்கத்தைத் தந்தான். உங்களில் ஒரு பகுதியினருக்கு அது மேலிட்டது. இன்னொரு பகுதியினரைக் கவலை பிடித்துக் கொண்டது. அவர்கள் அல்லாஹ்வைப் பற்றி உண்மைக்கு மாறான அறியாமைக்கால எண்ணம் கொண்டனர். "நமக்குச் சிறிதளவாவது அதிகாரம் கிடைக்குமா?'' என்று அவர்கள் கேட்டனர். "அதிகாரம் முழுமையாக அல்லாஹ்வுக்கே உரியது'' என்று கூறுவீராக! உம்மிடம் வெளிப்படையாகக் கூறாததை தமது உள்ளங்களில் மறைத்துள்ளனர். "நமக்குச் சிறிதளவாவது அதிகாரம் இருந்திருந்தால் இங்கே கொல்லப்பட்டிருக்க மாட்டோம்'' என்றனர். "உங்கள் வீடுகளில் நீங்கள் இருந்திருந்தாலும் உங்களில் கொல்லப்பட வேண்டும் என்று விதிக்கப்பட்டோர் தமது களத்திற்குச் சென்றிருப்பார்கள். உங்கள் உள்ளங்களில் உள்ளதைச் சோதிப்பதற்காகவும்,484 உங்கள் உள்ளங்களில் இருப்பதைத் தூய்மைப்படுத்தவும் அல்லாஹ் இவ்வாறு செய்தான். உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ் அறிந்தவன்'' எனக் கூறுவீராக!

155. இரு அணிகளும் மோதிக் கொண்ட நாளில் உங்களில் பின்வாங்கியவர்களை, அவர்களின் சில செயல்கள் காரணமாக ஷைத்தான் வழிதவறச் செய்தான். அல்லாஹ் அவர்களை மன்னித்தான். அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத் தன்மைமிக்கவன்.

156. நம்பிக்கை கொண்டோரே! பயணம் மேற்கொண்ட, அல்லது போருக்குச் சென்ற தம் சகோதரர்களைக் குறித்து "அவர்கள் நம்முடன் இருந்திருந்தால் இறந்திருக்க மாட்டார்கள். கொல்லப்பட்டிருக்கவும் மாட்டார்கள்'' என்று கூறிய (ஏகஇறைவனை) மறுத்தோரைப் போல் நீங்கள் ஆகி விடாதீர்கள்! அவர்களின் உள்ளங்களில் கவலையை ஏற்படுத்தவே அல்லாஹ் இதைச் செய்தான். அல்லாஹ்வே உயிர்ப்பிக்கிறான். மரணிக்கச் செய்கிறான். நீங்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன்.488

157. அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் கொல்லப்பட்டாலோ, மரணித்தாலோ அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் மன்னிப்பும், அருளும் அவர்கள் திரட்டிக் கொண்டிருப்பவற்றை விடச் சிறந்தது.

158. நீங்கள் இறந்தாலோ, கொல்லப்பட்டாலோ அல்லாஹ்விடமே ஒன்று திரட்டப்படுவீர்கள்.

159. (முஹம்மதே!) அல்லாஹ்வின் அருள் காரணமாகவே அவர்களிடம் நளினமாக நீர் நடந்து கொள்கிறீர். முரட்டுத்தனம் உடையவராகவும் கடின உள்ளம் உடையவராகவும் நீர் இருந்திருந்தால் அவர்கள் உம்மை விட்டு ஓடியிருப்பார்கள். அவர்களை மன்னிப்பீராக! அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவீராக! காரியங்களில் அவர்களுடன் ஆலோசனை செய்வீராக! உறுதியான முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! தன்னையே சார்ந்திருப்போரை அல்லாஹ் நேசிக்கிறான்.

160. அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்தால் உங்களை வெல்பவர் எவருமில்லை. அவன் உங்களுக்கு உதவ மறுத்தால் அவனுக்குப் பின் உங்களுக்கு உதவி செய்பவன் யார்? நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்.

161. மோசடி செய்வது எந்த நபிக்கும் தகாது. மோசடி செய்தவர் மோசடி செய்த பொருளை கியாமத் நாளில்1 கொண்டு வருவார். பின்னர் ஒவ்வொருவருக்கும் அவர் செய்தது முழுமையாக வழங்கப்படும்.265 அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.

162. அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றவன், அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகி, நரகத்தை அடைந்தவனைப் போன்றவனா? (அது) சென்றடையும் இடங்களில் மிகவும் கெட்டது.

163. அவர்களுக்கோ அல்லாஹ்விடம் பல தகுதிகள் உள்ளன. அவர்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன்.488

164. நம்பிக்கை கொண்டோருக்கு அவர்களிலிருந்தே ஒரு தூதரை அனுப்பியதன் மூலம் அவர்களுக்கு அல்லாஹ் பேருபகாரம் செய்தான். அவர்களுக்கு அவனது வசனங்களை அவர் கூறுவார். அவர்களைத் தூய்மைப்படுத்துவார். அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும்67 கற்றுக் கொடுப்பார். இதற்கு முன் அவர்கள் பகிரங்கமான வழிகேட்டில் இருந்தனர்.36

165. (பத்ருப் போரில்) இது போன்ற இரு மடங்குகளை (எதிரிகளுக்கு) அளித்த நீங்கள், உங்களுக்கு (உஹதுப் போரில்) துன்பம் ஏற்பட்டபோது "இது எப்படி ஏற்பட்டது'' என்று கேட்டீர்கள். "இது உங்களிடமிருந்தே ஏற்பட்டது'' என்று கூறுவீராக! அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.

166, 167. இரு அணிகளும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்ட நாளில் உங்களுக்கு ஏற்பட்டது, அல்லாஹ்வின் விருப்பப்படியே நிகழ்ந்தது. நம்பிக்கை கொண்டோரை அடையாளம் காட்டவும், நயவஞ்சகர்களை அடையாளம் காட்டவுமே (இது நிகழ்ந்தது.) "வாருங்கள்! அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்! அல்லது (எதிரிகளைத்) தடுங்கள்!'' என்று அவர்களிடம் கூறப்பட்டது. "போர் செய்வது எங்களுக்குத் தெரிந்திருந்தால் உங்களைப் பின்தொடர்ந்திருப்போம்'' என்றனர். அன்று அவர்கள் நம்பிக்கையை விட (இறை) மறுப்பிற்கு அதிக நெருக்கத்தில் இருந்தனர். தமது உள்ளங்களில் இல்லாததைத் தமது வாய்களால் கூறினர். அவர்கள் மறைப்பதை அல்லாஹ் மிக அறிந்தவன்.26

168. "அவர்கள் நமக்குக் கட்டுப்பட்டு (போருக்குப் போகாமல்) இருந்திருந்தால் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்'' என்று போருக்குச் செல்லாதோர், தம் சகோதரர்கள் பற்றி கூறினர். "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்களை விட்டு மரணத்தைத் தடுத்துப் பாருங்கள்!'' என்று கூறுவீராக!

169. அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் என எண்ணாதீர்கள்! மாறாக அவர்கள் தம் இறைவனிடம் உயிருடன் உள்ளனர்;41 உணவளிக்கப்படுகின்றனர்.

170. தமக்கு அல்லாஹ் வழங்கும் அருளை எண்ணி மகிழ்கின்றனர். தம்முடன் (இதுவரை) சேராமல் பின்னால் (உயிர் தியாகம் செய்து) வரவிருப்போருக்கு எந்தப் பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள் என்பதை எண்ணி மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

171. அல்லாஹ்விடமிருந்து கிடைத்த நற்பேறு மற்றும் அருள் பற்றியும், நம்பிக்கை கொண்டோரின் கூலியை அல்லாஹ் வீணாக்க மாட்டான் என்பது பற்றியும் அவர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

172. தங்களுக்கு (போரில்) காயம் ஏற்பட்ட பிறகும் அவர்கள் அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் பதிலளித்தார்கள். அவர்களில் நன்மை செய்து (இறைவனை) அஞ்சியோருக்கு மகத்தான கூலி உள்ளது.

173. "மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. "எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்.

174. எனவே அவர்கள் அல்லாஹ்வின் அருளுடனும், நற்பேறுடனும் திரும்பினார்கள். அவர்களுக்கு எந்தக் கேடும் ஏற்படவில்லை. அவர்கள் அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றனர். அல்லாஹ் மகத்தான அருளுடையவன்.

175. தனது நேசர்களை ஷைத்தான் (இவ்வாறு) அச்சுறுத்துகிறான். எனவே நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அவர்களுக்கு அஞ்சாதீர்கள்! எனக்கே அஞ்சுங்கள்!

176. (இறை) மறுப்பை நோக்கி விரைந்து செல்வோர் குறித்து நீர் கவலைப்படாதீர்! அவர்கள் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்ய முடியாது. மறுமையில் அவர்களுக்கு எந்த நற்பேறும் இருக்கக் கூடாதென்று அல்லாஹ் நாடுகிறான். அவர்களுக்குக் கடும் வேதனை உண்டு. 

177. நம்பிக்கையை விற்று (இறை) மறுப்பை விலைக்கு வாங்கிக் கொண்டோர், அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்யவே முடியாது. அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.

178. "(நம்மை) மறுப்போரை நாம் விட்டு வைத்திருப்பது அவர்களுக்கு நல்லது'' என்று அவர்கள் நினைக்க வேண்டாம். பாவத்தை அவர்கள் அதிகமாக்கிக் கொள்வதற்காகவே விட்டு வைத்துள்ளோம். இழிவுபடுத்தும் வேதனை அவர்களுக்கு உண்டு.

179. நல்லவரிலிருந்து கெட்டவரை அவன் பிரித்துக் காட்டாமல் நீங்கள் எப்படி (கெட்டவருடன் கலந்து) இருக்கிறீர்களோ அப்படியே (கலந்திருக்குமாறு) நம்பிக்கை கொண்டோரை அல்லாஹ் விட்டுவிடமாட்டான்.103 மறைவானதை அல்லாஹ் உங்களுக்குக் காட்டித் தருபவனாக இல்லை. மாறாக அல்லாஹ் தனது தூதர்களில் தான் நாடியோரைத் தேர்வு செய்கிறான்.104 எனவே அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் நம்புங்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்களுக்கு மகத்தான கூலி உண்டு.

180. அல்லாஹ் தமக்கு வழங்கிய அருளில் கஞ்சத்தனம் செய்வோர், "அது தங்களுக்கு நல்லது" என்று எண்ண வேண்டாம். மாறாக அது அவர்களுக்குத் தீயது. அவர்கள் எதில் கஞ்சத்தனம் செய்தார்களோ அதன் மூலம் கியாமத் நாளில்1 கழுத்து நெரிக்கப்படுவார்கள். வானங்கள்507 மற்றும் பூமியின் உரிமை அல்லாஹ்வுக்குரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன்.

181, 182 "அல்லாஹ் தேவையுள்ளவன்; நாங்களோ தேவையற்றோர்'' என்று கூறியோரின் கூற்றை அல்லாஹ் செவியுற்று விட்டான்.485 அவர்கள் கூறியதையும் நியாயமின்றி நபிமார்களை அவர்கள் கொலை செய்ததையும் பதிவு செய்வோம். "சுட்டெரிக்கும் வேதனையைச் சுவையுங்கள்! இது நீங்கள் செய்த வினை'' என்று கூறுவோம். அடியார்களுக்கு அல்லாஹ் அநீதி இழைப்பவன் அல்லன்.26

183. "எங்களிடம் ஒரு காணிக்கையைக் கொண்டு வந்து அதை நெருப்பு சாப்பிடும் வரை எந்தத் தூதரையும் நாங்கள் நம்பக் கூடாது என அல்லாஹ் எங்களிடம் உறுதிமொழி வாங்கியுள்ளான்'' என்று அவர்கள் கூறினர். எனக்கு முன்னால் பல தூதர்கள் தெளிவான சான்றுகளையும், நீங்கள் கேட்டதையும் கொண்டு வந்தனர். "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் ஏன் அவர்களைக் கொலை செய்தீர்கள்?'' என்று (முஹம்மதே!) கேட்பீராக!

184. (முஹம்மதே!) உம்மை அவர்கள் பொய்யரெனக் கருதினால் உமக்கு முன் பல தூதர்கள் பொய்யரெனக் கருதப்பட்டுள்ளனர். அவர்கள் தெளிவான சான்றுகளையும், ஏடுகளையும், ஒளி வீசும் வேதத்தையும் கொண்டு வந்தனர்.105

185. ஒவ்வோர் உயிரும் மரணத்தைச் சுவைக்கும். கியாமத் நாளில்1 உங்களின் கூலிகள் முழுமையாக வழங்கப்படும். நரகத்தை விட்டும் தூரமாக்கப்பட்டு சொர்க்கத்திற்கு அனுப்பப்பட்டவர் வெற்றி பெற்று விட்டார். இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் வசதிகள் தவிர வேறில்லை.

186. உங்கள் செல்வங்களிலும், உயிர்களிலும் சோதிக்கப்படுவீர்கள்.484 உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிடமிருந்தும்,27 இணை கற்பித்தோரிடமிருந்தும் ஏராளமான சங்கடம் தரும் சொற்களைச் செவியுறுவீர்கள். நீங்கள் சகித்துக் கொண்டு (இறைவனை) அஞ்சினால் அது உறுதிமிக்க காரியங்களில் ஒன்றாகும்.

187. வேதம் கொடுக்கப்பட்டோரிடம்27 "அதை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்; மறைக்கக் கூடாது'' என்று அல்லாஹ் உறுதிமொழி எடுத்தபோது, அவர்கள் அதைத் தமது முதுகுகளுக்குப் பின் எறிந்தனர். அற்பமான விலைக்கு விற்றனர். 445 (அதற்குப் பகரமாக) அவர்கள் விலைக்கு வாங்கியது மிகவும் கெட்டது.

188. தாங்கள் செய்தவற்றுக்காக மகிழ்ச்சியடைந்து, தாம் செய்யாதவற்றுக்காகப் புகழப்பட வேண்டுமென விரும்புவோர் வேதனையிலிருந்து தப்பித்து விட்டார்கள் என்று நீர் நினைக்காதீர்! அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது.

189. வானங்கள்507 மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.

190. வானங்களையும்,507 பூமியையும் படைத்திருப்பதிலும் இரவு, பகல் மாறிமாறி வருவதிலும் அறிவுடைய மக்களுக்குப் பல சான்றுகள் உள்ளன.

191. அவர்கள் நின்றும், அமர்ந்தும், படுத்த நிலையிலும் அல்லாஹ்வை நினைப்பார்கள். வானங்களும்507 பூமியும் படைக்கப்பட்டது குறித்துச் சிந்திப்பார்கள். "எங்கள் இறைவா! இதை நீ வீணாகப் படைக்கவில்லை; நீ தூயவன்;10 எனவே நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!'' (என்று அவர்கள் கூறுவார்கள்)

192. "எங்கள் இறைவா! நீ நரகத்திற்கு அனுப்புபவனை இழிவுபடுத்தி விட்டாய். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளரும் இல்லை'' (என்றும் கூறுவார்கள்.)

193. "உங்கள் இறைவனை நம்புங்கள்! என்ற நம்பிக்கையை நோக்கி அழைத்தவரின் அழைப்பை எங்கள் இறைவா! நாங்கள் செவியுற்றோம். உடனே நம்பிக்கை கொண்டோம். எங்கள் இறைவா! எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டு அழிப்பாயாக! நல்லோருடன் எங்களைக் கைப்பற்றுவாயாக!'' (என்றும் கூறுவார்கள்.)

194. "எங்கள் இறைவா! உன் தூதர்கள் வழியாக நீ எங்களுக்கு வாக்களித்ததை எங்களுக்கு வழங்குவாயாக! கியாமத் நாளில்1 எங்களை இழிவுபடுத்தாதே! நீ வாக்கு மீறமாட்டாய்'' (எனவும் அவர்கள் கூறுவார்கள்.)

195. "உங்களில் ஆணோ, பெண்ணோ எவரது செயலையும் நான் வீணாக்க மாட்டேன்'' என்று அவர்களது இறைவன் அவர்களுக்குப் பதிலளித்தான். உங்களில் சிலர் மற்றும் சிலரிடமிருந்து (தோன்றியவர்கள்.) ஹிஜ்ரத்460 செய்து தமது நாடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு என் பாதையில் தொல்லைக்குள்ளாக்கப்பட்டு, போரிட்டுக் கொல்லப்பட்டோரின் பாவங்களை அவர்களை விட்டும் அழிப்பேன்.53 அவர்களை சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வேன். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். (இது) அல்லாஹ்வின் கூலி. அல்லாஹ்விடம் அழகிய கூலி உள்ளது.

196. (ஏகஇறைவனை) மறுப்போர் ஊர்கள் தோறும் (சொகுசாக) திரிவது உம்மை ஏமாற்றிட வேண்டாம்.

197. இது அற்ப வசதிகளே. பின்னர் அவர்களின் புகலிடம் நரகமாகும். தங்குமிடத்தில் அது கெட்டது.

198. எனினும் தமது இறைவனை அஞ்சியோருக்கு சொர்க்கச் சோலைகள் உள்ளன. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். (இது) அல்லாஹ்வின் விருந்து. அல்லாஹ்விடம் இருப்பவை நல்லோருக்குச் சிறந்தது.

199. அல்லாஹ்வுக்குப் பணிந்து, அல்லாஹ்வையும், உங்களுக்கு அருளப்பட்டதையும், தமக்கு அருளப்பட்டதையும் நம்புவோர் வேதமுடையோரில்27 உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை அற்ப விலைக்கு விற்க மாட்டார்கள்.445 அவர்களுக்குரிய கூலி அவர்களின் இறைவனிடம் உண்டு. அல்லாஹ் விரைவாகக் கணக்கெடுப்பவன்.

200. நம்பிக்கை கொண்டோரே! சகித்துக் கொள்ளுங்கள்! சகிப்புத் தன்மையில் (மற்றவர்களை) மிகைத்து விடுங்கள்! உறுதியாக நில்லுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! வெற்றி பெறுவீர்கள்.

To read this Chapter in English click here.

(14வது பதிப்பின்படி திருத்தி அமைக்கப்பட்டது)

 

July 23, 2009, 8:05 PM

அத்தியாயம் : 4

அத்தியாயம் : 4
அன்னிஸா - பெண்கள்

மொத்த வசனங்கள் : 176
பெண்களின் சொத்துரிமை, குடும்ப வாழ்க்கை, விவாகரத்து, போன்ற பல சட்டங்கள் இந்த அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளதால் இது 'பெண்கள்' எனும் பெயர் பெற்றது.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

1. மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த368 உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து504 ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான்.368 எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான்.

2. அனாதைகளின் சொத்துக்களை அவர்களிடம் அளித்து விடுங்கள்! (அவர்களின் சொத்துக்களில்) நல்லதை (உங்களிடம் உள்ள) கெட்டதற்குப் பகரமாக மாற்றி விடாதீர்கள்! அவர்கள் சொத்துக்களை உங்கள் சொத்துக்களுடன் சேர்த்துச் சாப்பிடாதீர்கள்! இது மிகப் பெரிய குற்றமாக உள்ளது.

3. அனாதைகள் விஷயத்தில் நேர்மையாக நடக்க மாட்டீர்கள் என்று அஞ்சினால்393 உங்களுக்குப் பிடித்த பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணந்து கொள்ளுங்கள்!106 (மனைவியரிடையே) நீதியாக நடக்க மாட்டீர்கள் என்று அஞ்சினால் ஒருத்தியை அல்லது உங்களுக்கு உடைமையாக உள்ள அடிமைப் பெண்களை107 (போதுமாக்கிக் கொள்ளுங்கள்!). இதுவே நீங்கள் வரம்பு மீறாமலிருக்க நெருக்கமான வழி.

4. பெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளை108 கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்! அவர்களாக மனமுவந்து அதில் எதையேனும் விட்டுத் தந்தால் மனநிறைவுடனும், மகிழ்வுடனும் அதை உண்ணுங்கள்!

5. அல்லாஹ் உங்களை நிர்வாகிகளாக்கியுள்ள சொத்துக்களை (அதன் உரிமையாளரான) விபரம் அறியாதோரிடம் கொடுக்காதீர்கள்! அதில் அவர்களுக்கு உணவு அளியுங்கள்! உடையும் வழங்குங்கள்! அவர்களிடம் அழகான சொல்லைக் கூறுங்கள்!

6. அனாதைகளைச் சோதித்துப் பாருங்கள்! அவர்கள் திருமணத்திற்குரிய பருவத்தை அடைந்து, அவர்களிடம் தகுதியையும் நீங்கள் கண்டால் அவர்களின் சொத்துக்களை அவர்களிடம் கொடுத்து விடுங்கள்! வீண் விரயமாகவும், அவர்கள் பெரியவர்களாகி விடுவர் எனப் பயந்தும் அவசரமாக அதைச் சாப்பிட்டு விடாதீர்கள்! செல்வந்தராக இருப்பவர் (அநாதைச் சொத்தைத் தொடாமல்) தன்மானம் காக்கட்டும். ஏழையாக இருப்பவர் (பராமரிப்பதற்குரிய கூலி என்ற அடிப்படையில்) நியாயமாகச் சாப்பிடலாம். அவர்களின் சொத்துக்களை அவர்களிடம் வழங்கும்போது அவர்கள் விஷயத்தில் சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! அல்லாஹ் கண்காணிக்கப் போதுமானவன்.

7. குறைவாக இருந்தாலும், அதிகமாக இருந்தாலும் பெற்றோரும், உறவினர்களும் விட்டுச் சென்றவற்றில் ஆண்களுக்கும் பங்கு உண்டு. பெற்றோரும் உறவினர்களும் விட்டுச் சென்றவற்றில் பெண்களுக்கும் பங்கு உண்டு. இப்பங்கீடு கட்டாயக் கடமை.

8. பங்கிடும்போது உறவினர்களோ, அனாதைகளோ, ஏழைகளோ வந்து விட்டால் அதில் அவர்களுக்கும் வழங்குங்கள்! அவர்களுக்கு நல்ல சொல்லையே கூறுங்கள்!

9. தமக்குப் பின் பலவீனர்களான சந்ததிகளை விட்டுச் செல்கிறார்கள் என்று வைத்துக் கொண்டால் எவ்வாறு அவர்கள் விஷயத்தில் அஞ்சுவார்களோ அவ்வாறு (அனாதைகளின் விஷயத்தில்) அஞ்சிக் கொள்ளட்டும். அல்லாஹ்வை அஞ்சட்டும்! நேர்மையான சொல்லையே அவர்கள் கூறட்டும்.

10. அனாதைகளின் சொத்துக்களை அநியாயமாக உண்போர் தமது வயிறுகளில் நெருப்பையே உண்(டு நிரப்பு)கின்றனர். நரகில் அவர்கள் கருகுவார்கள்.

11. "இரண்டு பெண்களின் பாகம் போன்றது ஓர் ஆணுக்கு உண்டு'' என்று உங்கள் பிள்ளைகள் விஷயத்தில் அல்லாஹ் வலியுறுத்துகிறான்.109 அனைவரும் பெண்களாகவும் (இரண்டு அல்லது) இரண்டுக்கு மேற்பட்டும் இருந்தால் (பெற்றோர்) விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பங்கு அவர்களுக்கு உண்டு. ஒரே ஒரு பெண் மட்டும் இருந்தால் அவளுக்கு (மொத்தச் சொத்தில்) பாதி உள்ளது. அவருக்குச் சந்ததி இருந்தால் அவர் விட்டுச் சென்றதில் பெற்றோர் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உண்டு. அவருக்குச் சந்ததி இல்லாவிட்டால் அவர் விட்டுச் சென்றதற்குப் பெற்றோர் இருவரும் வாரிசாவார்கள். அவரது தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் உண்டு. அவருக்குச் சகோதரர்கள் இருந்தால் அவரது தாய்க்கு ஆறில் ஒரு பாகம் உண்டு. (இவை யாவும்) அவர் செய்த மரண சாசனத்தையும் கடனையும் நிறைவேற்றிய பின்னரே. உங்கள் பெற்றோரிலும் பிள்ளைகளிலும் உங்களுக்கு அதிகமாகப் பயன் தருபவர் யார் என்பதை அறிய மாட்டீர்கள். (இது) அல்லாஹ் விதித்த கடமை. அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.

12. உங்கள் மனைவியருக்குக் குழந்தை இல்லாவிட்டால் அவர்கள் விட்டுச் சென்றதில் பாதி உங்களுக்கு உண்டு. அவர்களுக்குக் குழந்தை இருந்தால் அவர்கள் விட்டுச் சென்றதில் கால் பாகம் உங்களுக்கு உண்டு. அவர்கள் செய்த மரண சாசனம், கடன் ஆகியவற்றை நிறைவேற்றிய பிறகே (பாகம் பிரிக்க வேண்டும்). உங்களுக்குக் குழந்தை இல்லாவிட்டால் நீங்கள் விட்டுச் சென்றதில் கால் பாகம் உங்கள் மனைவியருக்கு உண்டு. உங்களுக்குக் குழந்தை இருந்தால் நீங்கள் விட்டுச் சென்றதில் எட்டில் ஒரு பாகம் அவர்களுக்கு உண்டு. நீங்கள் செய்த மரண சாசனம், கடன் ஆகியவற்றை நிறைவேற்றிய பின்பே (பாகம் பிரிக்கப்பட வேண்டும்). இறந்த ஆணோ, பெண்ணோ பிள்ளை இல்லாதவராக இருந்து110 அவர்களுக்கு ஒரு சகோதரனோ, ஒரு சகோதரியோ இருந்தால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உள்ளது. அதை விட அதிகமாக இருந்தால் மூன்றில் ஒரு பங்கில் அவர்கள் அனைவரும் கூட்டாளிகள். செய்யப்பட்ட மரண சாசனத்துக்கும், கடனுக்கும் பிறகே (பாகம் பிரிக்கப்பட வேண்டும்.) (இவை அனைத்தும் யாருக்கும்) பாதிப்பு ஏற்படாத வகையில் (செய்யப்பட வேண்டும்.)111 இது அல்லாஹ்வின் கட்டளை. அல்லாஹ் அறிந்தவன்; சகிப்புத் தன்மை மிக்கவன்.

13. இவை அல்லாஹ்வின் வரம்புகள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவோரை சொர்க்கச் சோலைகளில் அவன் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி.

14. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறுசெய்து அவனது வரம்புகளை மீறுபவனை (அல்லாஹ்) நரகில் நுழையச் செய்வான். அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவனுக்கு இழிவு தரும் வேதனை உண்டு.

15. உங்கள் பெண்கள் வெட்கக் கேடானதைச் செய்தால் உங்களில் நான்கு சாட்சிகள் மூலம் நிரூபிக்கச் சொல்லுங்கள்!112 அவர்கள் சாட்சி கூறினால் அப்பெண்கள் மரணிக்கும் வரை அல்லது அவர்கள் விஷயத்தில் அல்லாஹ் வேறு வழியைக் காட்டும் வரை113 வீடுகளில் அவர்களைத் தடுத்து வையுங்கள்!

16. உங்களில் வெட்கக்கேடானதைச் செய்த அவ்விருவரையும் துன்புறுத்துங்கள்!113 அவர்கள் மன்னிப்புக் கேட்டுத் திருந்தி விட்டால் அவர்களை விட்டு விடுங்கள்! அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

17. அறியாமல் தீய காரியம் செய்து விட்டு தாமதமின்றி மன்னிப்புக் கேட்போருக்கே அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு உண்டு. அவர்களையே அல்லாஹ் மன்னிப்பான். அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.

18. தீமைகளைச் செய்து விட்டு மரணம் நெருங்கும் வேளையில் "நான் இப்போது மன்னிப்புக் கேட்கிறேன்'' எனக் கூறுவோருக்கும், (ஏகஇறைவனை) மறுப்போராகவே மரணித்தோருக்கும் மன்னிப்பு இல்லை.384 அவர்களுக்காகவே துன்புறுத்தும் வேதனையைத் தயாரித்துள்ளோம்.

19. நம்பிக்கை கொண்டோரே! பெண்களை வலுக்கட்டாயமாக அடைவது உங்களுக்கு அனுமதி இல்லை.403 அவர்களுக்கு நீங்கள் வழங்கியதில் எதையும் பிடுங்கிக் கொள்வதற்காக அவர்களைத் துன்புறுத்தாதீர்கள்! அவர்கள் வெளிப்படையான வெட்கக்கேடானதைச் செய்தால் தவிர. அவர்களுடன் நல்ல முறையில் குடும்பம் நடத்துங்கள்! நீங்கள் அவர்களை வெறுத்தால், நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை அமைத்திருப்பான்.

20. ஒரு மனைவியை விவாகரத்துச் செய்து,66 இன்னொருத்தியை மணந்து கொள்ள நீங்கள் விரும்பினால் அவளுக்கு ஒரு குவியலையே கொடுத்திருந்தாலும் அதில் எதையும் பிடுங்கிக் கொள்ளாதீர்கள்! அக்கிரமமாகவும், பெரும் குற்றமாகவும் உள்ள நிலையில் அதைப் பிடுங்கிக் கொள்கிறீர்களா?

21. உங்களிடம் கடுமையான உடன்படிக்கையை அவர்கள் எடுத்து, நீங்கள் ஒருவர் மற்றவருடன் இரண்டறக் கலந்து விட்ட நிலையில் எப்படி நீங்கள் அதைப் பிடுங்கிக் கொள்ள முடியும்? 

22. உங்கள் தந்தையர் மணமுடித்த பெண்களை மணக்காதீர்கள்! ஏற்கனவே நடந்து முடிந்ததைத் தவிர.114 இது வெட்கக்கேடானதும், வெறுப்புக்குரியதும், கெட்ட வழியுமாகும்.

23. உங்கள் அன்னையர், உங்கள் புதல்வியர், உங்கள் சகோதரிகள், உங்கள் தந்தையரின் சகோதரிகள், உங்கள் அன்னையின் சகோதரிகள், சகோதரனின் புதல்விகள், சகோதரியின் புதல்விகள், உங்களுக்குப் பாலூட்டிய அன்னையர், பால்குடிச் சகோதரிகள், உங்கள் மனைவியரின் அன்னையர், நீங்கள் தாம்பத்தியம் நடத்திய மனைவிக்கு (வேறு கணவர் மூலம்) பிறந்த உங்கள் பொறுப்பில் உள்ள புதல்விகள், ஆகியோர் (மணமுடிக்க) தடுக்கப்பட்டுள்ளனர். நீங்கள் உங்கள் மனைவியருடன் உடலுறவு கொள்ளா(த நிலையில் விவாகரத்துச் செய்து) விட்டால் (அவர்களின் புதல்விகளை மணப்பது) உங்களுக்குக் குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த புதல்வர்களின் மனைவியரும், (தடுக்கப்பட்டுள்ளனர்.) இரு சகோதரிகளை ஒரே நேரத்தில் மணந்து கொள்வதும் (தடுக்கப்பட்டுள்ளது). நடந்து முடிந்ததைத் தவிர.114 அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

24. உங்கள் அடிமைப் பெண்களைத்107 தவிர கணவனுள்ள பெண்களும் (மணமுடிக்க தடுக்கப்பட்டுள்ளனர். இது) அல்லாஹ் உங்களுக்கு விதித்த சட்டம். இவர்களைத் தவிர மற்றவர்களை விபச்சாரமாக இல்லாமல் உங்கள் பொருட்களைக் கொடுத்து திருமணம் செய்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்களில் (திருமணத்தின் மூலம்) யாரிடம் இன்பம் அனுபவிக்கிறீர்களோ அவர்களுக்குரிய மணக் கொடைகளை108 கட்டாயமாக அவர்களிடம் கொடுத்து விடுங்கள். நிர்ணயம் செய்த பின் ஒருவருக்கொருவர் திருப்தியடைந்(து மணக்கொடையில் மாற்றம் செய்)தால் உங்கள் மீது குற்றம் இல்லை. அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.

25. நம்பிக்கை கொண்ட, கணவனில்லாத பெண்களை மணக்க உங்களில் (பொருள்) வசதி இல்லாதவர் நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண்களை107 (போதுமாக்கிக் கொள்ளுங்கள்!) உங்கள் நம்பிக்கையை அல்லாஹ் நன்கறிபவன். நீங்களும், அவர்களும் ஒன்றுக்குள் ஒன்றாக இருப்பவர்களே. அவர்களை அவர்களின் எஜமானர்களின் அனுமதியுடன் மணந்து கொள்ளுங்கள்! கள்ளக் கணவர்களை ஏற்படுத்தாதவர்களாகவும், விபச்சாரம் செய்யாதவர்களாகவும், கற்பொழுக்கமுடையோராகவும் உள்ள அடிமைப் பெண்களுக்கு மணக் கொடைகளை108 நியாயமான முறையில் வழங்கி விடுங்கள்! அவர்கள் மணமுடிக்கப்பட்ட பின் வெட்கக்கேடானதைச் செய்தால் கணவனில்லாத பெண்களுக்கு வழங்கப்படும் தண்டனையில் பாதி அவர்களுக்கு உண்டு.115 இது உங்களில் விபச்சாரத்தை அஞ்சுவோருக்குரியது! நீங்கள் பொறுமையை மேற்கொள்வது உங்களுக்குச் சிறந்தது. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

26. உங்களுக்குத் தெளிவுபடுத்திடவும், உங்களுக்கு முன் சென்றோரின் வழி முறைகளை உங்களுக்குக் காட்டிடவும், உங்களை மன்னிக்கவும் அல்லாஹ் விரும்புகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன். 

27. அல்லாஹ் உங்களை மன்னிக்க விரும்புகிறான். மனோ இச்சைகளைப் பின்பற்றுபவர்களோ முழுமையாக நீங்கள் பாதை மாற வேண்டும் என்று விரும்புகின்றனர்.

28. அல்லாஹ் உங்களுக்கு (சட்டங்களை) எளிதாக்கவே விரும்புகிறான். (ஏனெனில்) மனிதன் பலவீனனாகப் படைக்கப்பட்டுள்ளான்.68

29. நம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கிடையே உங்கள் பொருட்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள்! உங்களுக்கிடையே திருப்தியுடன் நடக்கும் வியாபாரத்தைத் தவிர. உங்களையே நீங்கள் கொன்று விடாதீர்கள்! அல்லாஹ் உங்கள் மீது நிகரற்ற அன்புடையோனாக இருக்கிறான்.

30. வரம்பு மீறியும், அநீதி இழைத்தும் இதைச் செய்பவரை பின்னர் நரகில் கருகச் செய்வோம். இது அல்லாஹ்வுக்கு எளிதானதாகவே உள்ளது.

31. உங்களுக்குத் தடை செய்யப்பட்ட பெரும் பாவங்களை விட்டு நீங்கள் விலகிக் கொண்டால் உங்கள் தவறுகளை அழித்து விடுவோம். உங்களை மதிப்புமிக்க இடத்தில் நுழையச் செய்வோம்.

32. சிலரை விட சிலரை அல்லாஹ் மேன்மைப்படுத்தியுள்ளதில் பேராசை கொள்ளாதீர்கள்! ஆண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. பெண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. அல்லாஹ்விடம் அவனது அருளை வேண்டுங்கள்! அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கிறான்.

33. பெற்றோர்களும், உறவினர்களும் விட்டுச் சென்றவற்றுக்கு ஒவ்வொருவருக்கும் வாரிசுகளை ஏற்படுத்தியுள்ளோம். நீங்கள் (திருமண) உடன்படிக்கை எடுத்தோருக்கும் அவர்களது பங்கைக் கொடுத்து விடுங்கள்! அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் கண்காணிப்பவனாக இருக்கிறான்.

34. சிலரை விட சிலரை அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள், பெண்களை நிர்வாகம் செய்பவர்கள் ஆவர். கட்டுப்பட்டு நடப்போரும், அல்லாஹ்வின் பாதுகாவல் மூலம் மறைவானவற்றை (கற்பை) காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள். பிணக்கு ஏற்படும் என்று (மனைவியர் விஷயத்தில்) நீங்கள் அஞ்சினால் அவர்களுக்கு அறிவுரை கூறுங்கள்! படுக்கைகளில் அவர்களை விலக்குங்கள்! அவர்களை அடியுங்கள்! அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டு விட்டால் அவர்களுக்கு எதிராக வேறு வழியைத் தேடாதீர்கள்! அல்லாஹ் உயர்ந்தவனாகவும், பெரியவனாகவும் இருக்கிறான்.66

35. அவ்விருவரிடையே பிளவு ஏற்படும் என்று நீங்கள் அஞ்சினால் அவன் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும், அவள் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும் அனுப்புங்கள்! அவ்விருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால் அல்லாஹ் அவ்விருவருக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துவான். அல்லாஹ் அறிந்தவனாகவும், நன்றாகவே அறிந்தவனாகவும் இருக்கிறான்.

36. அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்! பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், நெருங்கிய அண்டை வீட்டாருக்கும், தூரமான அண்டை வீட்டாருக்கும், பயணத் தோழருக்கும், நாடோடிகளுக்கும்,206 உங்கள் அடிமைகளுக்கும்107 நன்மை செய்யுங்கள்! பெருமையடித்து, கர்வம் கொள்பவரை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.

37. (தாமும்) கஞ்சத்தனம் செய்து, மக்களையும் கஞ்சத்தனம் செய்யத் தூண்டி, தமக்கு அல்லாஹ் அளித்துள்ள அருளை மறைக்கும் மறுப்பாளர்களுக்கு இழிவுபடுத்தும் வேதனையைத் தயாரித்துள்ளோம்.

38. அல்லாஹ்வையும், இறுதி நாளையும்1 நம்பாது மக்கள் மெச்சுவதற்காகத் தமது செல்வத்தைச் செலவிடுவோர் (ஷைத்தானின் நண்பர்கள்). யாருக்கு ஷைத்தான் நண்பனாக ஆகி விட்டானோ அவனே கெட்ட நண்பன்.

39. அல்லாஹ்வையும், இறுதி நாளையும்1 நம்பி தமக்கு அல்லாஹ் வழங்கியதை (நல்வழியில்) செலவிட்டால் அவர்களுக்கு என்ன (கேடு) ஏற்பட்டு விடும்? அல்லாஹ் அவர்களை அறிந்தவனாக இருக்கிறான்.

40. அல்லாஹ் அணுவளவும் அநீதி இழைக்க மாட்டான். அது நன்மையாக இருந்தால் அதைப் பன்மடங்காகப் பெருக்குவான். தனது மகத்தான கூலியை வழங்குவான்.

41. (முஹம்மதே!) ஒவ்வொரு சமுதாயத்திற்கும் சாட்சியை நாம் கொண்டு வந்து, இவர்களுக்கு உம்மைச் சாட்சியாக நாம் கொண்டு வரும்போது (இவர்களின் நிலைமை) எப்படி இருக்கும்?

42. (ஏகஇறைவனை) மறுத்து, இத்தூதருக்கு மாறுசெய்தோர் "தம்மைப் பூமி விழுங்கி விடாதா?'' என்று அந்நாளில்1 விரும்புவார்கள். அல்லாஹ்விடம் அவர்கள் எந்தச் செய்தியையும் மறைக்க முடியாது.

43. நம்பிக்கை கொண்டோரே! போதையாக இருக்கும்போது நீங்கள் கூறுவது உங்களுக்கு விளங்கும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள்!116 குளிப்புக் கடமையாக இருக்கும்போது குளிக்கும் வரை (தொழுகைக்காக பள்ளிவாசலுக்குச் செல்லாதீர்கள்! பள்ளிவாசல் வழியாக) பாதையைக் கடந்து செல்வோராகவே தவிர.494 நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால் அல்லது உங்களில் ஒருவர் கழிவறையிலிருந்து வந்தால் அல்லது பெண்களை (உடலுறவு மூலம்) தீண்டினால்363 தண்ணீரைப் பெற்றுக் கொள்ளாதபோது தூய்மையான மண்ணைத் தொட்டு உங்கள் முகங்களிலும், கைகளிலும் தடவிக் கொள்ளுங்கள்!117 அல்லாஹ் பிழைகளைப் பொறுப்பவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கிறான்.

44. வேதம் எனும் நற்பேறு அளிக்கப்பட்டோரை27 நீர் அறியவில்லையா? அவர்கள் வழிகேட்டை விலைக்கு வாங்குகின்றனர். நீங்கள் வழிதவற வேண்டும் என்று விரும்புகின்றனர்.

45. உங்கள் பகைவர்களை அல்லாஹ் நன்கறிவான். அல்லாஹ் பொறுப்பேற்கப் போதுமானவன்; அல்லாஹ் உதவி செய்யப் போதுமானவன்.

46. யூதர்களில் சிலர், வார்த்தைகளை அதற்குரிய இடங்களிலிருந்து மாற்றுகின்றனர். "செவியுற்றோம்; மாறுசெய்தோம்; (நாங்கள் கூறுவது) உமக்குச் சரியாகக் கேட்காமல் போகட்டும்'' எனவும் 'ராஇனா' எனவும் கூறுகின்றனர். இம்மார்க்கத்தைக் குறைவுபடுத்திட தமது நாவுகளால் (வார்த்தைகளை) மாற்றிக் கூறுகின்றனர். "செவியுற்றோம். கட்டுப்பட்டோம். செவிமடுப்பீராக! உன்ளுர்னா (எங்களைக் கவனிப்பீராக)'' என்று அவர்கள் கூறியிருந்தால் அது அவர்களுக்குச் சிறந்ததாகவும், நேர்மையானதாகவும் இருந்திருக்கும்.29 எனினும் (தன்னை) அவர்கள் மறுப்பதால் அவர்களை அல்லாஹ் சபித்து விட்டான்.6 அவர்களில் சிலரைத் தவிர (மற்றவர்கள்) நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.

47. வேதம் வழங்கப்பட்டோரே!27 முகங்களைச் சிதைத்து அதைப் பிடரிகளைப் போல் நாம் மாற்றுவதற்கு முன்னால், அல்லது சனிக்கிழமைக்காரர்களை நாம் சபித்தது6 போல் சபிப்பதற்கு முன்னால்23 நாம் அருளியதை நம்புங்கள்! அது உங்களிடம் இருப்பதை உண்மைப்படுத்துகிறது. அல்லாஹ்வின் கட்டளை செய்து முடிக்கப்படுவதாக உள்ளது.

48. தனக்கு இணைகற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான்.490 அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.

49. தம்மைத் தாமே பரிசுத்தவான்கள் எனக் கருதிக் கொள்வோரை நீர் அறியவில்லையா? மாறாக, தான் நாடியோரை அல்லாஹ்வே பரிசுத்தமாக்குகிறான். (அவர்கள்) அணுவளவும் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.

50. "அவர்கள் அல்லாஹ்வின் மீது எப்படி இட்டுக்கட்டுகிறார்கள்!" என்பதைக் கவனிப்பீராக! பகிரங்கமான பாவத்தில் இதுவே (அவர்களை நரகில் தள்ள) போதுமானது.

51. வேதம் எனும் நற்பேறு வழங்கப்பட்டோரை27 நீர் அறியவில்லையா? அவர்கள் சிலைகளையும், தீய சக்திகளையும் நம்புகின்றனர். (ஏகஇறைவனை) மறுப்போரைப் பற்றி "இவர்கள் நம்பிக்கை கொண்டோரை விட நேர்வழியில் உள்ளவர்கள்'' எனக் கூறுகின்றனர்.

52. அவர்களைத்தான் அல்லாஹ் சபித்து விட்டான். அல்லாஹ் சபித்தவனுக்கு6 உதவுபவனை நீர் காணவே முடியாது.

53. அவர்களுக்கு அதிகாரத்தில் ஏதேனும் பங்கு உள்ளதா? அப்படி இருந்திருந்தால் அற்பமான பொருளைக் கூட மக்களுக்குக் கொடுக்க மாட்டார்கள்.

54. அல்லாஹ் தனது அருளை இம்மக்களுக்கு வழங்கியதற்காக அவர்கள் பொறாமை கொள்கிறார்களா? இப்ராஹீமின் குடும்பத்தாருக்கு வேதத்தையும், ஞானத்தையும்67 கொடுத்தோம். அவர்களுக்கு மகத்தான ஆட்சியையும் வழங்கினோம்.

55. இவரை (முஹம்மதை) நம்பியோரும் அவர்களில் உள்ளனர். இவரை விட்டுத் தடுப்போரும் அவர்களில் உள்ளனர். பற்றி எரியும் நரகமே (அவர்களுக்கு) போதுமானது.

56. நமது வசனங்களை மறுப்போரை பின்னர் நரகில் கருகச் செய்வோம். அவர்களின் தோல்கள் கருகும் போதெல்லாம் அவர்கள் வேதனையை உணர்வதற்காக119 வேறு தோல்களை அவர்களுக்கு மாற்றுவோம். அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.

57. நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் புரிவோரைச் சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வோம். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். அதில் அவர்களுக்குத் தூய்மையான துணைகளும்8 உள்ளனர். மிகச்சிறந்த நிழலில் அவர்களை நுழையச் செய்வோம்.

58. அமானிதங்களை அதற்குரியோரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், மக்கள் மத்தியில் தீர்ப்பளிக்கும்போது நீதியாக நீங்கள் தீர்ப்பளிக்க வேண்டும் எனவும் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான். அல்லாஹ்வின் இந்த அறிவுரை உங்களுக்கு மிகவும் நல்லது. அல்லாஹ் செவியுறுபவனாகவும்,488 பார்ப்பவனாகவும்488 இருக்கிறான்.

59. நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும்1 நம்பி இருந்தால் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும், (முஹம்மதுக்கும்) உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள்! ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை அல்லாஹ்விடமும், இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்! இதுவே சிறந்ததும், மிக அழகிய விளக்கமுமாகும்.120

60. (முஹம்மதே!) உமக்கு அருளப்பட்டதையும், உமக்கு முன் அருளப்பட்டதையும்4 நம்புவதாகக் கூறிக் கொள்வோரை நீர் அறியவில்லையா? அவர்கள் தீய சக்திகளிடம் தீர்ப்புக் கோர விரும்புகின்றனர். அதை மறுக்குமாறு அவர்கள் கட்டளையிடப்பட்டிருந்தனர். (உண்மைக்கு) மிகவும் தூரமாக உள்ள வழிகேட்டில் அவர்களைத் தள்ள ஷைத்தான் விரும்புகிறான்.

61. "அல்லாஹ் அருளியதை நோக்கியும், இத்தூதரை (முஹம்மதை) நோக்கியும் வாருங்கள்!'' என்று அவர்களிடம் கூறப்பட்டால் நயவஞ்சகர்கள் உம்மை ஒரேயடியாகப் புறக்கணிப்பதை நீர் காண்கிறீர்.

62. அவர்கள் செய்த வினை காரணமாக அவர்களுக்குத் துன்பம் ஏற்பட்டால் என்னவாகும்? பின்னர் அவர்கள் உம்மிடம் வந்து "நன்மையையும், ஒற்றுமையையுமே நாடுகிறோம்'' என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறுகின்றனர்.

63. அவர்களின் உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ் அறிவான். எனவே அவர்களை அலட்சியம் செய்வீராக! அவர்களுக்கு அறிவுரை கூறுவீராக! அவர்களுக்காக கருத்தாழமிக்க சொல்லை அவர்களின் உள்ளங்களில் (பதியுமாறு) கூறுவீராக!

64. அல்லாஹ்வின் விருப்பப்படி மக்கள் கட்டுப்பட வேண்டுமென்பதற்காகவே தவிர எந்தத் தூதரையும் நாம் அனுப்புவதில்லை. (முஹம்மதே) அவர்கள் தமக்குத் தாமே அநீதி இழைத்த நேரத்தில் உம்மிடம் வந்து, அல்லாஹ்விடம் பாவமன்னிப்பும் தேடி, அவர்களுக்காக தூத(ராகிய நீ)ரும் பாவமன்னிப்புக் கோரினால் மன்னிப்பை ஏற்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் அல்லாஹ்வை அவர்கள் காண்பார்கள்.121

65. (முஹம்மதே!) உம் இறைவன் மேல் ஆணையாக! அவர்கள் தமக்கிடையே ஏற்பட்ட சண்டையில் உம்மை நீதிபதியாக ஏற்று, பின்னர் நீர் வழங்கிய தீர்ப்பில் தமக்குள் அதிருப்தி கொள்ளாமல், முழுமையாகக் கட்டுப்படும் வரை அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாக மாட்டார்கள்.234

66. "உங்களையே கொன்று விடுங்கள்! அல்லது உங்கள் ஊர்களிலிருந்து வெளியேறுங்கள்!'' என்று அவர்களுக்கு நாம் கட்டளையிட்டிருந்தால் அவர்களில் சிலரைத் தவிர (மற்றவர்கள்) அதை நிறைவேற்றியிருக்க மாட்டார்கள். தமக்கு அறிவுரை கூறப்பட்டவாறு அவர்கள் செய்திருந்தால் அது அவர்களுக்குச் சிறந்ததாகவும், அதிக உறுதியைக் காட்டுவதாகவும் இருந்திருக்கும்.

67. அப்போது நாம் மகத்தான கூலியையும் அவர்களுக்கு வழங்கியிருப்போம்.

68. அவர்களுக்கு நேரான வழியையும் காட்டியிருப்போம்.

69. அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்பட்டு நடப்போர், அல்லாஹ்வின் அருள் பெற்ற நபிமார்களுடனும், உண்மையாளர்களுடனும், உயிர்த் தியாகிகளுடனும் நல்லோருடனும் இருப்பார்கள். அவர்களே மிகச் சிறந்த நண்பர்கள். 

70. இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்த அருள். அறிந்து கொள்ள அல்லாஹ் போதுமானவன்.

71. நம்பிக்கை கொண்டோரே! எச்சரிக்கையுடன் இருங்கள்! தனித்தனிக் குழுக்களாகப் புறப்படுங்கள்! அல்லது அனைவரும் சேர்ந்து புறப்படுங்கள்!

72. (போருக்குச் செல்லாது) தங்கி விடுபவனும் உங்களில் இருக்கிறான். உங்களுக்கு ஏதேனும் துன்பம் ஏற்பட்டால் "நான் அவர்களுடன் பங்கெடுக்காததால் அல்லாஹ் எனக்கு அருள் புரிந்து விட்டான்'' என்று அவன் கூறுகிறான்.

73. அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு ஏதேனும் அருள் கிடைத்தால் "நானும் அவர்களுடன் இருந்திருக்கக் கூடாதா? மகத்தான வெற்றி பெற்றிருப்பேனே'' என்று உங்களுடன் தனக்கு (இதற்கு முன்) நட்பே இல்லாதது போல் அவன் கூறுவான்.

74. இவ்வுலக வாழ்வை விற்று மறுமையை வாங்குவோர் அல்லாஹ்வின் பாதையில் போரிடட்டும்! யாரேனும் அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டாலோ, வெற்றி பெற்றாலோ அவர்களுக்கு மகத்தான கூலியைப் பின்னர் வழங்குவோம்.53

75. "எங்கள் இறைவா! அநீதி இழைத்தோர் உள்ள இவ்வூரிலிருந்து எங்களை வெளியேற்றுவாயாக! உன்னிடமிருந்து பொறுப்பாளரை எங்களுக்கு ஏற்படுத்துவாயாக! உன்னிடமிருந்து உதவியாளரையும் எங்களுக்கு ஏற்படுத்துவாயாக!'' என்று கூறிக் கொண்டிருக்கின்ற பலவீனமான ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும், சிறுவர்களுக்காகவும்359 அல்லாஹ்வின் பாதையில் போரிடாமலிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது?53

76. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வின் பாதையில் போரிடுகின்றனர். (ஏகஇறைவனை) மறுப்போர் தீய சக்திகளின் பாதையில் போரிடுகின்றனர். எனவே ஷைத்தானின் கூட்டாளிகளுக்கு எதிராகப் போரிடுங்கள்! ஷைத்தானின் சூழ்ச்சி பலவீனமானதாக உள்ளது.

77. "உங்கள் கைகளை (போர் செய்யாமல்) தடுத்துக் கொள்ளுங்கள்! தொழுகையை நிலைநாட்டுங்கள்! ஸகாத் கொடுங்கள்!'' என்று கூறப்பட்டோரை நீர் அறியவில்லையா? அவர்களுக்குப் போர் கடமையாக்கப்பட்டபோது அவர்களில் ஒரு சாரார் அல்லாஹ்வுக்கு அஞ்சுவது போல் அல்லது அதை விடக் கடுமையாக மனிதர்களுக்கு அஞ்சுகின்றனர். "எங்கள் இறைவா! எங்களுக்கு ஏன் போர் செய்வதைக் கடமையாக்கினாய்? சிறிது காலம் எங்களுக்கு அவகாசம் தந்திருக்கக் கூடாதா'' எனவும் கூறுகின்றனர். "இவ்வுலகின் வசதி குறைவு தான். (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமையே சிறந்தது. அணுவளவும் நீங்கள் அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள்'' எனக் கூறுவீராக!

78. "நீங்கள் எங்கே இருந்தபோதும் மரணம் உங்களை அடையும். உறுதியான கோட்டைகளில் நீங்கள் இருந்தாலும் சரியே. அவர்களுக்கு ஏதேனும் நன்மை ஏற்பட்டால் "இது அல்லாஹ்விடமிருந்து வந்தது'' என்று கூறுகின்றனர். அவர்களுக்கு ஏதேனும் தீங்கு ஏற்பட்டால் "இது உம்மால் தான் ஏற்பட்டது'' என்று கூறுகின்றனர். "அனைத்தும் அல்லாஹ்விடமிருந்தே'' என்று (முஹம்மதே!) கூறுவீராக! இந்தச் சமுதாயத்திற்கு என்ன நேர்ந்தது? எந்தச் செய்தியையும் புரிந்து கொள்ள அவர்கள் முயற்சிப்பதில்லையே!

79. (முஹம்மதே!) உமக்கு ஏதேனும் நன்மை ஏற்பட்டால் அது அல்லாஹ்விடமிருந்து ஏற்பட்டது. உமக்கு ஏதேனும் தீங்கு ஏற்பட்டால் அது உம்மால் ஏற்பட்டது. உம்மை மனித குலத்துக்குத் தூதராக அனுப்பியுள்ளோம்.187 அல்லாஹ் கண்காணிக்கப் போதுமானவன்.

80. இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) கட்டுப்பட்டவர் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டார். யாரேனும் புறக்கணித்தால் உம்மை அவர்களின் காப்பாளராக நாம் அனுப்பவில்லை.

81. "கட்டுப்படுகிறோம்'' என அவர்கள் கூறுகின்றனர். (முஹம்மதே!) உம்மிடமிருந்து அவர்கள் வெளியேறிய உடன் அவர்களில் ஒரு பகுதியினர், தாம் கூறியதற்கு மாறாக இரவில் சதி செய்கின்றனர். அவர்கள் இரவில் செய்கின்ற சதியை அல்லாஹ் பதிவு செய்கிறான். எனவே அவர்களைப் புறக்கணிப்பீராக! அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! அல்லாஹ் பொறுப்பேற்கப் போதுமானவன்.

82. அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.123

83. பாதுகாப்பு அல்லது பயம் பற்றிய செய்தி அவர்களுக்குக் கிடைத்தால் அதைப் பரப்புகின்றனர்.124 அதை இத்தூதரிடமும், (முஹம்மதிடமும்) தங்களில் அதிகாரமுள்ளோரிடமும் கொண்டு சென்றிருந்தால் ஆய்வு செய்வோர் அதை அறிந்து கொள்வார்கள். அல்லாஹ்வின் அருளும், அவனது அன்பும் உங்களுக்கு இல்லாதிருந்தால் சிலரைத் தவிர (மற்றவர்கள்) ஷைத்தானைப் பின்பற்றியிருப்பீர்கள்.

84. (முஹம்மதே!) அல்லாஹ்வின் பாதையில் போரிடுவீராக!53 உம்மைத் தவிர (யாருக்கும்) நீர் பொறுப்பாக்கப்பட மாட்டீர். நம்பிக்கை கொண்டோருக்கு ஆர்வமூட்டுவீராக! (தன்னை) மறுப்போரின் தாக்குதலை அல்லாஹ் தடுப்பான். தாக்குவதில் அல்லாஹ் வல்லவன்; தண்டிப்பதிலும் அவன் கடுமையானவன்.

85. அழகிய பரிந்துரை செய்பவருக்கு அதில் பங்கு உள்ளது. தீய பரிந்துரை செய்பவருக்கு அதில் பங்கு உள்ளது. அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் கண்காணிப்பவனாக இருக்கிறான்.

86. உங்களுக்கு வாழ்த்துக் கூறப்பட்டால் அதை விட அழகிய முறையிலோ, அல்லது அதையோ திருப்பிக் கூறுங்கள்! அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் கணக்கெடுப்பவனாக இருக்கிறான்.

87. அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. எந்தச் சந்தேகமுமில்லாத கியாமத் நாளில்1 உங்களை அவன் ஒன்று திரட்டுவான். அல்லாஹ்வை விட அதிக உண்மை பேசுபவன் யார்?

88. நயவஞ்சகர்கள் பற்றி (முடிவு செய்வதில்) இரண்டு கூட்டத்தினராக ஏன் ஆகி விட்டீர்கள்? அவர்கள் செய்தவற்றின் காரணமாக அல்லாஹ் அவர்களை வீழ்த்தி விட்டான். அல்லாஹ் யாரை வழிகேட்டில் விட்டு விடுகிறானோ அவருக்கு நேர்வழி காட்ட நாடுகிறீர்களா? அல்லாஹ் யாரை வழிகேட்டில் விட்டு விடுகிறானோ அவருக்கு எந்த வழியையும் நீர் காணமாட்டீர்!

89. "அவர்கள் (ஏகஇறைவனை) மறுப்போராக ஆனது போல் நீங்களும் மறுப்போராக ஆகி அவர்களும் நீங்களும் (கொள்கையில்) சமமாக ஆக வேண்டும்'' என்று அவர்கள் விரும்புகின்றனர். எனவே அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத்460 செய்யும் வரை அவர்களில் (எவரையும்) உற்ற நண்பர்களாக89 ஆக்காதீர்கள்! அவர்கள் புறக்கணித்தால் அவர்களைப் பிடியுங்கள்! அவர்களைக் கண்ட இடத்தில் கொல்லுங்கள்!53 அவர்களில் எந்தப் பொறுப்பாளரையும், உதவியாளரையும் ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்!

90. உங்களுடன் உடன்படிக்கை செய்த சமுதாயத்துடன் சேர்ந்து கொண்டோரைத் தவிர. அல்லது உங்களை எதிர்த்துப் போரிடுவதையோ, தமது சமுதாயத்தை எதிர்த்துப் போரிடுவதையோ ஒப்பாமல் உங்களிடம் வந்து விட்டோரைத் தவிர. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களை உங்கள் மீது அடக்கியாளச் செய்திருப்பான். அப்போது அவர்கள் உங்களை எதிர்த்துப் போரிட்டிருப்பார்கள். அவர்கள் உங்களை விட்டு விலகி உங்களுடன் போர் செய்யாது, உங்களிடம் சமாதானத்துக்கு வந்தால் அவர்களுக்கு எதிராக அல்லாஹ் எந்த வழியையும் உங்களுக்கு ஏற்படுத்தவில்லை.

91. வேறு சிலரையும் காண்பீர்கள். அவர்கள் உங்களிடமும் அபயம் பெற்று, தமது சமுதாயத்தினரிடமும் அபயம் பெறுவதை விரும்புகின்றனர். கலகம் செய்ய அவர்கள் அழைக்கப்படும் போதெல்லாம் அதில் தீவிரமாக ஈடுபடுகின்றனர். அவர்கள் உங்களை விட்டு விலகிக் கொள்ளாமலும், உங்களிடம் சமாதானத்துக்கு வராமலும், தமது கைகளைக் கட்டுக்குள் வைக்காமலும் இருந்தால் அவர்களைப் பிடியுங்கள்! அவர்களைக் கண்டவுடன் கொல்லுங்கள்! அவர்களுக்கு எதிராக (போரிட) தெளிவான சான்றை ஏற்படுத்தியுள்ளோம்.53

92. நம்பிக்கை கொண்டவர் இன்னொரு நம்பிக்கை கொண்டவரைத் தவறுதலாகவே தவிர கொலை செய்தல் தகாது. நம்பிக்கை கொண்டவரை யாரேனும் தவறுதலாகக் கொன்று விட்டால் நம்பிக்கை கொண்ட அடிமையை விடுதலை செய்ய வேண்டும். அவனது (கொல்லப்பட்டவனது) குடும்பத்தார் தர்மமாக விட்டுக் கொடுத்தால் தவிர அவர்களுக்கு இழப்பீடு ஒப்படைக்கப்பட வேண்டும். அவர் உங்களுக்கு எதிராகவுள்ள சமுதாயத்தைச் சேர்ந்தவராகவும், நம்பிக்கை கொண்டவராகவும் இருந்தால் நம்பிக்கை கொண்ட அடிமையை விடுதலை செய்ய வேண்டும். அவர், உங்களுடன் உடன்படிக்கை செய்த சமுதாயத்தைச் சேர்ந்தவராக இருந்தால் அவரது குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கி,209 நம்பிக்கை கொண்ட அடிமையையும் விடுதலை செய்ய வேண்டும். (இதில் எதுவும்) கிடைக்காதோர் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க வேண்டும். (இது) அல்லாஹ்வின் மன்னிப்பாகும். அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.

93. நம்பிக்கை கொண்டவரை வேண்டுமென்று கொலை செய்பவனது கூலி நரகமே! அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவன் மீது அல்லாஹ் கோபம் கொண்டான். அவனைச் சபித்தான்.6 அவனுக்குக் கடுமையான வேதனையைத் தயாரித்துள்ளான்.

94. நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் (போருக்குச்) சென்றால் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! உங்களுக்கு ஸலாம்159 கூறியவரிடம் இவ்வுலக வாழ்க்கையின் பொருட்களைப் பறிப்பதற்காக "நீ நம்பிக்கை கொண்டவன் இல்லை'' என்று கூறி விடாதீர்கள்! அல்லாஹ்விடம் ஏராளமான செல்வங்கள் உள்ளன. இதற்கு முன் நீங்களும் இவ்வாறே இருந்தீர்கள். அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிந்தான். எனவே தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான்.

95, 96. நம்பிக்கை கொண்டோரில் தக்க காரணமின்றி போருக்குச் செல்லாதோரும், தமது பொருட்களாலும், உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரும் சமமாக மாட்டார்கள். தமது பொருட்களாலும், உயிர்களாலும் போரிடுவோருக்கு, போரிடாதோரை விட ஒரு தகுதியை அல்லாஹ் சிறப்பாக வழங்கியிருக்கிறான். அனைவருக்கும் அல்லாஹ் நல்லதையே வாக்களித்திருக்கிறான். போருக்குச் செல்லாதோரை விட போரிடுவோரை மகத்தான கூலியாலும், பல தகுதிகளாலும், தனது மன்னிப்பாலும், அருளாலும் அல்லாஹ் சிறப்பித்திருக்கிறான். அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.26

97. தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டோரின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றும்165போது, "நீங்கள் எந்த நிலையில் இருந்தீர்கள்?'' என்று கேட்பார்கள். "நாங்கள் பூமியில் பலவீனர்களாக இருந்தோம்'' என்று இவர்கள் கூறுவார்கள். "அல்லாஹ்வின் பூமி விசாலமானதாக இல்லையா? அதில் நீங்கள் ஹிஜ்ரத்460 செய்திருக்கக் கூடாதா?'' என்று (வானவர்கள்) கேட்பார்கள். இவர்கள் தங்குமிடம் நரகம். அது கெட்ட தங்குமிடம்.

98. ஆண்களில் பலவீனமானவர்களையும், பெண்களையும், சிறுவர்களையும் தவிர. எந்தத் தந்திரம் செய்வதற்கும் அவர்களுக்கு இயலாது. எந்த வழியையும் அறிய மாட்டார்கள்.

99. அல்லாஹ் அவர்களது பிழைகளைப் பொறுப்பான். அல்லாஹ் பிழைகளைப் பொறுப்பவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கிறான்.

100. அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத்460 செய்பவர் பூமியில் அதிகமான புகலிடங்களையும், வசதிகளையும் பெற்றுக் கொள்வார். அல்லாஹ்வை நோக்கியும், அவனது தூதரை நோக்கியும் ஹிஜ்ரத்460 செய்து தன் வீட்டை விட்டு புறப்பட்டுச் செல்பவருக்கு மரணம் ஏற்பட்டால் அவருக்குரிய கூலி அல்லாஹ்விடம் கிடைத்து விடும். அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

101. நீங்கள் பூமியில் பயணம் மேற்கொள்ளும்போது (ஏகஇறைவனை) மறுப்போர் உங்களைத் தாக்கக் கூடும் என்று அஞ்சினால் தொழுகையைச் சுருக்கிக் கொள்வது125 உங்கள் மீது குற்றம் ஆகாது. (ஏகஇறைவனை) மறுப்போர் உங்களுக்குப் பகிரங்க எதிரிகளாகவுள்ளனர்.

102. (முஹம்மதே!) நீர் அவர்களுடன் (போர்க்களத்தில்) இருந்து அவர்களுக்கு நீர் தொழுகையை நடத்தினால்126 அவர்களில் ஒரு பகுதியினர் உம்மோடு (தொழுகையில்) நிற்கட்டும். தமது ஆயுதங்களையும் எடுத்துக் கொள்ளட்டும். ஸஜ்தாச் செய்ததும் அவர்கள் உங்களுக்குப் பின்னால் செல்லட்டும். தொழாத மற்ற கூட்டம் வந்து உம்முடன் தொழட்டும். எச்சரிக்கையுடன் தமது ஆயுதங்களையும் எடுத்துக் கொள்ளட்டும். உங்கள் ஆயுதங்களையும், தளவாடங்களையும் விட்டு நீங்கள் கவனமற்று இருப்பதையும், அப்போது திடீரென உங்கள் மீது தாக்குதல் தொடுப்பதையும் (ஏகஇறைவனை) மறுப்போர் விரும்புகின்றனர். மழையின் காரணமாகவோ, நீங்கள் நோயாளிகளாக இருப்பதாலோ உங்களுக்குத் தொல்லையாக இருந்தால் உங்கள் ஆயுதங்களைக் கீழே வைப்பது குற்றமில்லை. (அதே சமயத்தில்) எச்சரிக்கை உணர்வுடன் இருங்கள்! (தன்னை) மறுப்போருக்கு இழிவுபடுத்தும் வேதனையை அல்லாஹ் தயாரித்துள்ளான்.

103. நீங்கள் தொழுகையை முடித்ததும் நின்றும், அமர்ந்தும், படுத்த நிலையிலும் அல்லாஹ்வை நினையுங்கள்! நீங்கள் அச்சமற்ற நிலையை அடைந்தால் தொழுகையை (முழுமையாக) நிலைநாட்டுங்கள்!127 நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது.479

104. அக்கூட்டத்தை விரட்டிச் செல்வதில் தளர்வடையாதீர்கள்! நீங்கள் துன்புற்றால் (கவலைப்படாதீர்கள். ஏனெனில்) நீங்கள் துன்புற்றது போல் அவர்களும் துன்புறுகின்றனர். அவர்கள் எதிர்பார்க்காத (சொர்க்கத்)தை நீங்கள் அல்லாஹ்விடம் எதிர்பார்க்கிறீர்கள். அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.

105. (முஹம்மதே!) அல்லாஹ் உமக்குக் காட்டித் தரும் அடிப்படையில் மக்கள் மத்தியில் நீர் தீர்ப்பு வழங்குவதற்காக உண்மையை உள்ளடக்கிய இவ்வேதத்தை உமக்கு நாம் அருளினோம்.128 மோசடி செய்வோருக்கு வாதிடுபவராக நீர் ஆகி விடாதீர்!

106. அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுவீராக!493 அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

107. தமக்குத் தாமே துரோகம் செய்வோருக்காக நீர் வாதிடாதீர்! துரோகம் செய்யும் பாவியை அல்லாஹ் விரும்ப மாட்டான்.

108. அவர்கள் மக்களிடம் மறைத்திடலாம். அல்லாஹ்விடம் மறைக்க முடியாது. இறைவனுக்குப் பிடிக்காத பேச்சுக்களை இரவில் பேசி அவர்கள் சதி செய்தபோது அவன் அவர்களுடன் இருந்தான்.49 அவர்கள் செய்வதை அல்லாஹ் முழுமையாக அறிபவனாக இருக்கிறான்.

109. நீங்கள் இவ்வுலக வாழ்க்கையில் அவர்களுக்காக வாதிடுகிறீர்கள். கியாமத் நாளில்1 அவர்களுக்காக அல்லாஹ்விடம் வாதிடுபவன் யார்? அல்லது அவர்களுக்காகப் பொறுப்பேற்பவன் யார்?

110. யாரேனும் தீமையைச் செய்து, அல்லது தமக்குத் தாமே தீங்கிழைத்து பின்னர் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடினால் அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் அவர் காண்பார். 

111. பாவம் செய்பவர் தமக்கு எதிராகவே அதைச் செய்கிறார்.265 அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.

112. தவறையோ, பாவத்தையோ செய்து சம்பந்தமில்லாதவன் மீது அதைச் சுமத்துபவன் அவதூறையும் பகிரங்கமான பாவத்தையும் சுமந்து விட்டான்.

113. (முஹம்மதே!) அல்லாஹ்வின் அருளும், அன்பும் உம் மீது இல்லாதிருந்தால் அவர்களில் ஒரு பகுதியினர் உம்மை வழிகெடுக்க முயன்றிருப்பார்கள். அவர்கள் தம்மையே வழிகெடுத்துக் கொள்கின்றனர். அவர்களால் உமக்கு எந்தத் தீங்கும் செய்ய முடியாது. உமக்கு வேதத்தையும், ஞானத்தையும்67 அல்லாஹ் அருளினான். நீர் அறியாமல் இருந்ததை உமக்குக் கற்றுத் தந்தான். உம் மீது அல்லாஹ்வின் அருள் மகத்தானதாக உள்ளது.

114. தர்மம், நன்மையான காரியம், மக்களிடையே நல்லிணக்கம் ஏற்படுத்துதல் ஆகியவற்றை ஏவியதைத் தவிர அவர்களின் பெரும்பாலான பேச்சுக்களில் எந்த நன்மையும் இல்லை. அல்லாஹ்வின் திருப்தியை நாடி இவற்றைச் செய்பவருக்கு மகத்தான கூலியைப் பின்னர் வழங்குவோம்.

115. நேர்வழி தனக்குத் தெளிவான பின் இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) மாறுசெய்து நம்பிக்கை கொண்டோரின் வழியல்லாத (வேறு) வழியைப் பின்பற்றுபவரை, அவர் செல்லும் வழியில் விட்டு விடுவோம். நரகத்திலும் அவரை கருகச் செய்வோம். தங்குமிடங்களில் அது மிகவும் கெட்டது.

116. தனக்கு இணைகற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான்.490 இதற்குக் கீழ் நிலையில் உள்ளதை, தான் நாடியோருக்கு அவன் மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்பவர் (உண்மையை விட்டும்) தூரமான வழிகேட்டில் விழுந்து விட்டார்.

117. அவர்கள் அவனை விட்டு விட்டு பெண்(தெய்வங்)களையே அழைக்கின்றனர். (உண்மையில்) மூர்க்கத்தனம் கொண்ட ஷைத்தானைத் தவிர (யாரையும்) அவர்கள் அழைக்கவில்லை.

118, 119 அல்லாஹ் அவனை (ஷைத்தானை) சபித்து விட்டான்.6 "உன் அடியார்களில் குறிப்பிட்ட தொகையினரை வென்றெடுப்பேன்; அவர்களை வழிகெடுப்பேன்; அவர்களுக்கு(த் தவறான) ஆசை வார்த்தை கூறுவேன்; அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள். (மீண்டும்) அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அல்லாஹ் வடிவமைத்ததை அவர்கள் மாற்றுவார்கள்'' என்று அவன் (இறைவனிடம்) கூறினான். அல்லாஹ்வையன்றி ஷைத்தானைப் பொறுப்பாளனாக்கிக் கொள்பவன் வெளிப்படையான நட்டமடைந்து விட்டான்.26

120. அவர்களுக்கு அவன் வாக்களிக்கிறான். ஆசை வார்த்தை கூறுகிறான். ஷைத்தான் அவர்களுக்கு ஏமாற்றத்தையே வாக்களிக்கிறான். 

121. அவர்கள் தங்குமிடம் நரகம். அதிலிருந்து தப்பிக்கும் வழியை அவர்கள் காணமாட்டார்கள்.

122. நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்தோரை சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வோம். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். (இது) அல்லாஹ்வின் உண்மையான வாக்குறுதி. அல்லாஹ்வை விட அதிக உண்மை பேசுபவன் யார்?

123. உங்கள் ஆசைப்படியோ, வேதமுடையோரின்27 ஆசைப்படியோ (மறுமையில் தீர்ப்பு) இருக்காது. தீய காரியம் செய்தவன் அதற்காகத் தண்டிக்கப்படுவான். அல்லாஹ்வையன்றி தனக்கு உதவுபவனையோ, பொறுப்பாளனையோ அவன் காணமாட்டான்.

124. ஆண்களிலோ, பெண்களிலோ நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்தோர் சொர்க்கத்தில் நுழைவார்கள். சிறிதளவும் அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.

125. தன் முகத்தை அல்லாஹ்வுக்குப் பணியச் செய்து, நல்லறம் செய்து, உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றி நடந்தவரை விட அழகிய மார்க்கத்திற்குரியவர் யார்? அல்லாஹ் இப்ராஹீமை உற்ற தோழராக்கிக் கொண்டான்.

126. வானங்களிலும்,507 பூமியிலும் உள்ளவை அல்லாஹ்வுக்கே உரியன. அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் முழுமையாக அறிபவனாக இருக்கிறான்.

127. பெண்கள் பற்றி அவர்கள் (முஹம்மதே!) உம்மிடம் மார்க்கத் தீர்ப்பு கேட்கின்றனர். "அவர்களைப் பற்றி அல்லாஹ் உங்களுக்குத் தீர்ப்பு வழங்குகிறான்'' எனக் கூறுவீராக! அநாதைப் பெண்களுக்கு கடமையாக்கப்பட்டதைக்108 கொடுக்காமல் அவர்களை மணந்து கொள்ள நீங்கள் விரும்பியது பற்றியும், பலவீனமானவர்களான சிறுவர்கள் பற்றியும், அனாதைகளை நீங்கள் நியாயமாக நிர்வகிக்க வேண்டும் என்பது பற்றியும் இவ்வேதத்தில் (ஏற்கனவே) உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது.129 நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அல்லாஹ் அதை அறிபவனாக இருக்கிறான்.

128. தன் கணவனிடம் பிணக்கையோ, புறக்கணிப்பையோ ஒரு பெண் அஞ்சினால் அவ்விருவரும் தமக்கிடையே நல்ல முறையில் சமாதானம் செய்து கொள்வது (அல்லது பிரிந்து விடுவது) இருவர் மீதும் குற்றமில்லை. சமாதானமே சிறந்தது. மனிதர்களிடம் கஞ்சத்தனம் இயல்பாகவே அமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் (ஒருவருக்கொருவர்) உதவி செய்து (இறைவனை) அஞ்சிக் கொண்டால் அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவனாக இருக்கிறான்.

129. மனைவியரிடையே நீதியாக நடந்து கொள்ள நீங்கள் ஆசைப்பட்டாலும் உங்களால் இயலாது. எனவே முழுமையாக (ஒரு பக்கமாக) சாய்ந்து, இன்னொருத்தியை அந்தரத்தில் தொங்கவிடப்பட்டவளைப் போல் விட்டு விடாதீர்கள்! நீங்கள் நல்லிணக்கம் பேணி (இறைவனை) அஞ்சினால் அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

130. அவ்விருவரும் பிரிந்து விட்டால் அவர்களில் ஒவ்வொருவரையும் அல்லாஹ் தனது அருளால் தன்னிறைவு பெறச் செய்வான். அல்லாஹ் ஞானமிக்கவனாகவும், தாராளமானவனாகவும் இருக்கிறான்.

131. வானங்களில்507 உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வுக்கே உரியன. "அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரையும்,27 உங்களையும் வலியுறுத்தியுள்ளோம். நீங்கள் (ஏகஇறைவனை) மறுத்தால் வானங்களில்507 உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வுக்கே உரியன. அல்லாஹ் தேவைகளற்றவனாகவும்,485 புகழப்பட்டவனாகவும் இருக்கிறான்.

132. வானங்களில்507 உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வுக்கே உரியன. பொறுப்பேற்க அல்லாஹ் போதுமானவன்.

133. மனிதர்களே! அவன் நாடினால் உங்களை அழித்து விட்டு வேறொரு சமுதாயத்தைக் கொண்டு வருவான். அல்லாஹ் இதற்கு ஆற்றலுடையவனாக இருக்கிறான்.

134. யாரேனும் இவ்வுலகின் பயனை விரும்பினால் இவ்வுலகின் பயனும், மறுமையின் பயனும் அல்லாஹ்விடமே உள்ளன. அல்லாஹ் செவியுறுபவனாகவும்,488 பார்ப்பவனாகவும்488 இருக்கிறான்.

135. நம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கோ, பெற்றோருக்கோ, உறவினருக்கோ பாதகமாக இருந்தாலும் நீங்கள் நீதியை நிலைநாட்டுவோராகவும், அல்லாஹ்வுக்காக சாட்சி கூறுவோராகவும் ஆகி விடுங்கள்! (வாதியோ, பிரதிவாதியோ) செல்வந்தனாக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும் அவ்விருவருக்கும் அல்லாஹ்வே பொறுப்பாளன். நீதி வழங்குவதில் மனோ இச்சையைப் பின்பற்றாதீர்கள்! நீங்கள் (சாட்சியத்தைப்) புரட்டினாலோ, புறக்கணித்தாலோ நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான்.

136. நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வையும், அவனது தூதரையும், தனது தூதர் மீது அவன் அருளிய வேதத்தையும், இதற்கு முன் அவன் அருளிய வேதத்தையும்4 நம்புங்கள்! அல்லாஹ்வையும், அவனது வானவர்களையும், அவனது வேதங்களையும், அவனது தூதர்களையும், இறுதி நாளையும்1 ஏற்க மறுப்பவர் தூரமான வழிகேட்டில் விழுந்து விட்டார்.

137. நம்பிக்கை கொண்டு, பின்னர் (ஏகஇறைவனை) மறுத்து, பிறகு நம்பிக்கை கொண்டு, பின்னர் மறுத்து, பிறகு (இறை) மறுப்பை அதிகமாக்கிக் கொண்டோரை அல்லாஹ் மன்னிப்பவனாக இல்லை.490 அவர்களுக்கு வழி காட்டுபவனாகவும் இல்லை.

138. "நயவஞ்சகர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு'' என்று எச்சரிப்பீராக! 

139. நம்பிக்கை கொண்டோரை விடுத்து (ஏகஇறைவனை) மறுப்போரை அவர்கள் உற்ற நண்பர்களாக்கிக் கொண்டனர்.89 கண்ணியத்தை அவர்களிடம் தேடுகிறார்களா? கண்ணியம் யாவும் அல்லாஹ்வுக்கே உரியது.

140. அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர்களுடன் அமராதீர்கள்! (அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர்களே என்று இவ்வேதத்தில் உங்களுக்கு அவன் அருளியுள்ளான்.131 நயவஞ்சகர்களையும், (தன்னை) மறுப்போர் அனைவரையும் நரகில் அல்லாஹ் ஒன்று சேர்ப்பான்.

141. அவர்கள் உங்களைக் கவனித்துக் கொண்டே உள்ளனர். உங்களுக்கு அல்லாஹ்விடமிருந்து ஒரு வெற்றி கிடைத்தால் "உங்களுடன் நாங்கள் இருக்கவில்லையா?'' என்று கூறுகின்றனர். (ஏகஇறைவனை) மறுப்போருக்கு ஏதேனும் வெற்றி கிடைத்தால், "நாங்கள் உங்களுக்கு உதவி செய்து, நம்பிக்கை கொண்டோர் உங்களை (வெற்றி கொள்வதை) விட்டும் தடுக்கவில்லையா?'' என்று (அவர்களிடம்) கூறுகின்றனர். கியாமத் நாளில்1 அல்லாஹ் உங்களுக்கிடையே தீர்ப்பளிப்பான். நம்பிக்கை கொண்டோருக்கு எதிரான வழியை (தன்னை) மறுப்போருக்கு அல்லாஹ் ஏற்படுத்தவில்லை.

142. நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்ற நினைக்கின்றனர். அவனோ அவர்களை ஏமாற்றவுள்ளான்6. அவர்கள் தொழுகையில் நிற்கும்போது சோம்பேறிகளாகவும், மக்களுக்குக் காட்டுவோராகவும் நிற்கின்றனர். குறைவாகவே அல்லாஹ்வை நினைக்கின்றனர்.

143. அவர்களுடனும் இல்லாமல் இவர்களுடனும் இல்லாமல் இதற்கிடையே தடுமாறிக் கொண்டுள்ளனர். அல்லாஹ் யாரை வழிகேட்டில் விட்டு விடுகிறானோ அவருக்கு எந்த வழியையும் நீர் காண மாட்டீர்!

144. நம்பிக்கை கொண்டோரே! நம்பிக்கை கொண்டோரை விடுத்து (ஏகஇறைவனை) மறுப்போரை உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்!89 உங்களுக்கு எதிராக தெளிவான சான்றை அல்லாஹ்வுக்கு ஏற்படுத்திக் கொடுக்க விரும்புகிறீர்களா?

145. நயவஞ்சகர்கள் நரகத்தின் அடித்தட்டில் இருப்பார்கள். அவர்களுக்கு எந்த உதவியாளரையும் நீர் காணமாட்டீர்.

146. மன்னிப்புக் கேட்டுத் திருந்தி, அல்லாஹ்வைப் பற்றிப்பிடித்துக் கொண்டு, வணக்கத்தை அல்லாஹ்வுக்கு மட்டுமே உளத்தூய்மையுடன் உரித்தாக்கியோரைத் தவிர. அவர்கள் நம்பிக்கை கொண்டோருடன் இருப்பார்கள். நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் மகத்தான கூலியைப் பின்னர் வழங்குவான்.

147. நீங்கள் நம்பிக்கை கொண்டு நன்றி செலுத்தினால் உங்களை அல்லாஹ் ஏன் தண்டிக்கப்போகிறான்? அல்லாஹ் நன்றி செலுத்துபவனாகவும்,6 அறிந்தவனாகவும் இருக்கிறான்.

148. அநீதி இழைக்கப்பட்டவர் தவிர (வேறெவரும்) தீய சொல்லைப் பகிரங்கமாகக் கூறுவதை அல்லாஹ் விரும்ப மாட்டான். அல்லாஹ் செவியுறுபவனாகவும்,488 அறிந்தவனாகவும் இருக்கிறான்.

149. நன்மையை நீங்கள் வெளிப்படுத்தினாலும், அதை மறைத்துக் கொண்டாலும், (பிறர் செய்யும்) தீமையை மன்னித்தாலும் அல்லாஹ் மன்னிப்பவனாகவும், ஆற்றலுடையவனாகவும் இருக்கிறான்.

150, 151. அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் மறுத்து, "சிலவற்றை ஏற்று சிலவற்றை மறுப்போம்'' எனக் கூறி, அல்லாஹ்வுக்கும், அவனது தூதர்களுக்குமிடையே வேற்றுமை பாராட்டி132 இதற்கு இடைப்பட்ட வழியை உருவாக்க யார் எண்ணுகிறார்களோ அவர்களே உண்மையாக (நம்மை) மறுப்பவர்கள். மறுப்போருக்கு இழிவு தரும் வேதனையைத் தயாரித்துள்ளோம்.26

152. அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் நம்பி அவர்களில் எவருக்கிடையேயும் வேற்றுமை காட்டாதோருக்கு அவர்களது கூலிகளை அவன் பின்னர் வழங்குவான். அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

153. (முஹம்மதே!) "வானத்திலிருந்து அவர்களுக்கு வேதத்தை நீர் இறக்க வேண்டும்''152 என்று வேதமுடையோர்27 உம்மிடம் கேட்கின்றனர். இதை விடப் பெரியதை அவர்கள் மூஸாவிடம் கேட்டுள்ளனர். "அல்லாஹ்வைக் கண்முன்னே எங்களுக்குக் காட்டு'' என்று அவர்கள் கேட்டனர். அவர்கள் அநீதி இழைத்ததால் இடிமுழக்கம் அவர்களைத் தாக்கியது.21 பின்னர் தெளிவான சான்றுகள் அவர்களிடம் வந்த பின்பு, காளைக் கன்றை (கடவுளாக) கற்பனை செய்தார்கள்.19 அதை மன்னித்தோம். மூஸாவுக்குத் தெளிவான சான்றை அளித்தோம்.

154. அவர்களிடம் உடன்படிக்கை எடுப்பதற்காக தூர் மலையை அவர்களுக்கு மேல் உயர்த்தினோம்.22 "பணிந்து, வாசல் வழியாக நுழையுங்கள்!'' என்று அவர்களிடம் கூறினோம். "சனிக்கிழமையில் வரம்பு மீறாதீர்கள்!''23 என்றும் அவர்களிடம் கூறினோம். அவர்களிடம் உறுதியான உடன்படிக்கை எடுத்தோம்.

155. அவர்கள் தமது உடன்படிக்கையை முறித்ததாலும், அல்லாஹ்வின் வசனங்களை ஏற்க மறுத்ததாலும், நியாயமின்றி நபிமார்களைக் கொலை செய்ததாலும், எங்கள் உள்ளங்கள் மூடப்பட்டுள்ளன என்று கூறியதாலும், (இதற்கும்) மேலாக அவர்கள் (ஏகஇறைவனை) மறுத்ததாலும் அவர்களின் உள்ளங்கள் மீது அல்லாஹ் முத்திரையிட்டான். அவர்கள் குறைவாகவே நம்பிக்கை கொள்கின்றனர்.

156, 157. அவர்கள் (ஏகஇறைவனை) மறுத்ததாலும், மர்யமின் மீது மிகப் பெரும் அவதூறை அவர்கள் கூறியதாலும், அல்லாஹ்வின் தூதரான மர்யமின் மகன் மஸீஹ்92 எனும் ஈஸாவை நாங்களே கொன்றோம்'' என்று அவர்கள் கூறியதாலும் (இறைவன் முத்திரையிட்டான்.) அவரை அவர்கள் கொல்லவில்லை. அவரைச் சிலுவையிலும் அவர்கள் அறையவில்லை. மாறாக அவர்களுக்கு ஆள் மாறாட்டம் செய்யப்பட்டது.456 இதில் முரண்பட்டோர் சந்தேகத்திலேயே உள்ளனர். ஊகத்தைப் பின்பற்றுவதைத் தவிர அவர்களுக்கு இது குறித்து அறிவு இல்லை. அவர்கள் அவரை உறுதியாகக் கொல்லவே இல்லை.26

158. மாறாக அவரை அல்லாஹ் தன்னளவில் உயர்த்திக் கொண்டான். அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையோனாகவும் இருக்கிறான்.133

159. வேதமுடையோரில்27 ஒவ்வொருவரும் அவர் (ஈஸா, மீண்டும் வந்து) மரணிப்பதற்கு முன் அவரை நம்பிக்கை கொள்ளாமல் இருக்க மாட்டார்கள்.134 கியாமத் நாளில்1 அவர்களுக்கு சாட்சியாக அவர் இருப்பார்.

160, 161. யூதர்கள் செய்த அநீதியின் காரணமாகவும், அல்லாஹ்வின் பாதையை விட்டும் அதிகமானோரை அவர்கள் தடுத்ததன் காரணமாகவும், வட்டியை விட்டு அவர்கள் தடுக்கப்பட்டிருந்தும் வட்டி வாங்கியதாலும், மக்களின் செல்வங்களைத் தவறான முறையில் அவர்கள் சாப்பிட்டதாலும் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த தூய்மையானவற்றை அவர்களுக்கு விலக்கினோம். அவர்களில் (நம்மை) மறுப்போருக்குத் துன்புறுத்தும் வேதனையைத் தயாரித்துள்ளோம்.26

162. எனினும் அவர்களில் கல்வியில் தேர்ந்தவர்களும், நம்பிக்கை கொண்டோரும் (முஹம்மதே!) உமக்கு அருளப்பட்டதையும், உமக்கு முன் அருளப்பட்டதையும்4 நம்புகின்றனர். தொழுகையை நிலைநாட்டி, ஸகாத் கொடுத்து, அல்லாஹ்வையும் இறுதி நாளையும்1 நம்பியோர்க்கே மகத்தான கூலியை வழங்குவோம்.

163. நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த நபிமார்களுக்கும் தூதுச்செய்தி அறிவித்தது போல் (முஹம்மதே!) உமக்கும் நாம் தூதுச்செய்தி அறிவித்தோம். இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யாகூப், (அவரது) சந்ததிகள், ஈஸா, அய்யூப், யூனுஸ், ஹாரூன், ஸுலைமான் ஆகியோருக்கும் தூதுச் செய்தி அறிவித்தோம். தாவூதுக்கு ஸபூரை வழங்கினோம்.

164. (முஹம்மதே!) இதற்கு முன் சில தூதர்களின் வரலாற்றை உமக்குக் கூறியுள்ளோம். சில தூதர்களின் வரலாற்றை நாம் உமக்குக் கூறவில்லை. அல்லாஹ் மூஸாவுடன் உண்மையாகவே பேசினான்.488

165. தூதர்களை அனுப்பிய பின்னர் அல்லாஹ்வைக் குறை கூற மனிதர்களுக்கு எந்தச் சான்றும் இருக்கக் கூடாது என்பதற்காக நற்செய்தி கூறி, எச்சரிக்கும் தூதர்களை (அவன் அனுப்பினான்.) அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.

166. எனினும் (முஹம்மதே!) அல்லாஹ் உமக்கு அருளியதற்கு அவனே சாட்சியாக இருக்கிறான். தனது விளக்கத்துடன் அதை அவன் அருளினான். வானவர்களும் சாட்சி கூறுகின்றனர். அல்லாஹ் கண்காணிக்கப் போதுமானவன்.

167. (ஏகஇறைவனை) மறுத்து, அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுப்போர், (உண்மைக்கு வெகு) தூரமான வழிகேட்டில் வீழ்ந்து விட்டனர்.

168, 169. (தன்னை) மறுத்து அநீதி இழைத்தோரை அல்லாஹ் மன்னிப்பவனாக இல்லை.490 நரகத்தின் பாதைக்கே தவிர (வேறு) வழிகாட்டுபவனாகவும் இல்லை. அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். இது அல்லாஹ்வுக்கு எளிதானது.26

170. மனிதர்களே! இத்தூதர் (முஹம்மத்) உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு உண்மையைக் கொண்டு வந்துள்ளார். எனவே நம்பிக்கை கொள்ளுங்கள்! (அது) உங்களுக்குச் சிறந்தது. நீங்கள் (ஏகஇறைவனை) மறுத்தால் வானங்களிலும்,507 பூமியிலும் உள்ளவை அல்லாஹ்வுக்கே உரியன. அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.

171. வேதமுடையோரே!27 உங்கள் மார்க்கத்தில் வரம்பு மீறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறெதனையும்) கூறாதீர்கள்! மர்யமின் மகன் ஈஸா எனும் மஸீஹ்92 அல்லாஹ்வின் தூதரும் அவனது கட்டளையா(ல் உருவானவருமா)வார். அக்கட்டளையை அவன் மர்யமிடம் போட்டான். மேலும் அவனது உயிருமாவார்.90 எனவே அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் நம்புங்கள்! (கடவுள்) மூவர் எனக் கூறாதீர்கள்!459 விலகிக் கொள்ளுங்கள்! (அது) உங்களுக்குச் சிறந்தது. அல்லாஹ் ஒருவனே வணக்கத்திற்குரியவன். அவனுக்குப் பிள்ளை இருப்பதை விட்டும் அவன் தூயவன்.10 வானங்களில்507 உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அல்லாஹ் பொறுப்பேற்கப் போதுமானவன்.

172. மஸீஹும்,92 நெருக்கமான வானவர்களும் அல்லாஹ்வுக்கு அடிமையாக இருப்பதிலிருந்து விலகிக் கொள்ள மாட்டார்கள்.459 அவனுக்கு அடிமையாக இருப்பதிலிருந்து விலகிப் பெருமையடிப்போர் அனைவரையும் அவன் தன்னிடம் ஒன்று திரட்டுவான்.

173. நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்வோரின் கூலிகளை அவர்களுக்கு (இறைவன்) முழுமையாக வழங்குவான். தனது அருளை அதிகமாக அளிப்பான். (அடிமைத் தனத்திலிருந்து) விலகிப் பெருமையடிப்போரைத் துன்புறுத்தும் வகையில் தண்டிப்பான். அல்லாஹ்வையன்றி தங்களுக்கு உதவுபவனையோ, பொறுப்பாளனையோ அவர்கள் காணமாட்டார்கள்.

174. மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு தக்க சான்று வந்துள்ளது. உங்களிடம் தெளிவான ஒளியையும் அருளியுள்ளோம்.

175. அல்லாஹ்வை நம்பி அவனைப் பற்றிப் பிடித்துக் கொண்டோரைத் தனது அன்பிலும், அருளிலும் அவன் நுழையச் செய்வான். அவர்களுக்கு தன்னை நோக்கி நேரான வழியையும் காட்டுவான்.

176. "கலாலா பற்றி (முஹம்மதே!) உம்மிடம் மார்க்கத் தீர்ப்பு கேட்கின்றனர்.110 "அல்லாஹ் இது குறித்து தீர்ப்பளிக்கிறான்'' எனக் கூறுவீராக! பிள்ளை இல்லாத ஒரு மனிதன் இறக்கும்போது அவனுக்கு ஒரு சகோதரி இருந்தால் அவன் விட்டுச் சென்றதில் பாதி அவளுக்கு உண்டு. (அவள் இறக்கும்போது) அவளுக்குப் பிள்ளை இல்லாவிட்டால் அவ(ளது சகோதர)ன் அவளுக்கு வாரிசாவான். இரண்டு சகோதரிகள் இருந்தால் அவன் விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு அவர்களுக்கு உண்டு. ஆண்களும், பெண்களுமாக உடன் பிறப்புக்கள் இருந்தால் இரண்டு பெண்களுக்குரிய பங்கு ஓர் ஆணுக்கு என்ற விகிதத்தில் உண்டு.109 நீங்கள் வழிதவறி விடாமல் இருக்க அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் அறிந்தவன்.

To read this Chapter in English click here.

(14வது பதிப்பின்படி திருத்தி அமைக்கப்பட்டது)

July 23, 2009, 8:07 PM

அத்தியாயம் : 5

அத்தியாயம் : 5
அல் மாயிதா - உணவுத் தட்டு

மொத்த வசனங்கள் : 120
ஈஸா நபி அவர்களின் சமுதாயத்தினர் வானத்திலிருந்து உணவுடன் உணவுத் தட்டை இறைவன் இறக்கித் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஈஸா நபி அவர்கள் பிரார்த்தனை செய்ததன் அடிப்படையில் அவ்வாறே உணவுத் தட்டு இறக்கப்பட்டதாக 112, 113, 114 ஆகிய வசனங்களில் கூறப்படும் நிகழ்ச்சியை ஒட்டி இந்த அத்தியாயத்திற்கு இப்பெயர் வந்தது.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

1. நம்பிக்கை கொண்டோரே! ஒப்பந்தங்களை நிறைவேற்றுங்கள்! உங்களுக்கு (பின்னர்) கூறப்படுவதைத் தவிர தாவரத்தை உண்ணும் கால்நடைகள் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. இஹ்ராமின்போது வேட்டையாடுவதை அனுமதிக்கப்பட்டது என நீங்கள் கருதக் கூடாது. தான் விரும்பியதை அல்லாஹ் கட்டளையிடுவான்.

2. நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வின் (புனிதச்) சின்னங்கள், புனித மாதம்55, பலிப்பிராணி, (பலிப்பிராணியின் கழுத்தில் அடையாளத்திற்காகப் போடப்பட்ட) மாலைகள், தமது இறைவனின் அருளையும், திருப்தியையும் தேடி இப்புனித ஆலயத்தை33 நாடிச் செல்வோர் ஆகியவற்றின் புனிதங்களுக்குப் பங்கம் விளைவித்து விடாதீர்கள்! இஹ்ராமிலிருந்து விடுபட்டதும் வேட்டையாடுங்கள்! மஸ்ஜிதுல் ஹராமை விட்டு உங்களைத் தடுத்த சமுதாயத்தார் மீதுள்ள பகைமை, வரம்பு மீறுவதற்கு உங்களைத் தூண்ட வேண்டாம். நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்.

3. தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி,407 அல்லாஹ் அல்லாதோருக்காக சப்தமிடப்பட்டவை42 உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன.171 கழுத்து நெரிக்கப்பட்டவை, அடிபட்டவை, (மேட்டிலிருந்து) உருண்டு விழுந்தவை, (தமக்கிடையே) மோதிக்கொண்டவை, வனவிலங்குகள் சாப்பிட்ட பிராணிகள் ஆகியவற்றில் (உயிர் இருந்து) நீங்கள் முறையாக அறுத்தவை தவிர (மற்றவை தடைசெய்யப்பட்டுள்ளன.) பலி பீடங்களில்135 அறுக்கப்பட்டவையும், அம்புகள் மூலம் குறி கேட்பதும்136 (உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன.) இவை குற்றமாகும். (ஏகஇறைவனை) மறுப்போர், உங்கள் மார்க்கத்தை (அழித்திடலாம் என்பது) பற்றி இன்று நம்பிக்கை இழந்து விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சாதீர்கள்! எனக்கே அஞ்சுங்கள்! இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன். பாவம் செய்யும் நாட்டமில்லாமல், வறுமையின் காரணமாக நிர்பந்தத்துக்கு431 உள்ளானோரை அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.42

4. "தமக்கு அனுமதிக்கப்பட்டவை யாவை?'' என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். "தூய்மையானவைகளும், வேட்டையாடும் பிராணிகளில் எவற்றுக்கு நீங்கள் பயிற்சியளித்து அல்லாஹ் உங்களுக்குக் கற்றுத் தந்தவற்றைக் கற்றுக் கொடுக்கிறீர்களோ அவை (வேட்டையாடியவை)களும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன''171 எனக் கூறுவீராக! அவை உங்களுக்காகப் பிடித்துக் கொண்டு வந்ததை உண்ணுங்கள்! (அதை அனுப்பும்போது) அதன் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் விரைந்து கணக்கெடுப்பவன்.

5. தூய்மையானவை உங்களுக்கு இன்று அனுமதிக்கப்பட்டுள்ளன. வேதம் கொடுக்கப்பட்டோரின்27 உணவு உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.137 உங்கள் உணவு அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. நம்பிக்கை கொண்ட கணவனில்லாத பெண்களையும், உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்ட27 கணவனில்லாத பெண்களையும் வைப்பாட்டிகளாக்கிக் கொள்ளாமலும், விபச்சாரம் செய்யாமலும், கற்புநெறி தவறாமலும் அவர்களுக்குரிய மணக்கொடைகளை108 வழங்கி மணமுடிப்பது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.138 தனது நம்பிக்கையை (இறை)மறுப்பாக ஆக்கிக் கொள்பவரின் நல்லறம் அழிந்து விட்டது. அவர் மறுமையில் நட்டமடைந்தவராக இருப்பார்.

6. நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் தொழுகைக்காகத் தயாராகும்போது உங்கள் முகங்களையும், மூட்டுக்கள் வரை உங்கள் கைகளையும், கரண்டை வரை உங்கள் கால்களையும் கழுவிக் கொள்ளுங்கள்! உங்கள் தலைகளை (ஈரக்கையால்) தடவிக் கொள்ளுங்கள்! குளிப்புக் கடமையானோராக நீங்கள் இருந்தால் (குளித்து) தூய்மையாகிக் கொள்ளுங்கள்! நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால், அல்லது உங்களில் ஒருவர் கழிப்பறையிலிருந்து வந்தால், அல்லது (உடலுறவின் மூலம்) பெண்களைத் தீண்டினால்363 தண்ணீர் கிடைக்காதபோது தூய்மையான மண்ணைத் தொட்டு அதில் உங்கள் முகங்களையும், கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்!117 அல்லாஹ் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை.68 மாறாக நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்களைத் தூய்மைப்படுத்தவும், தனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தவுமே விரும்புகிறான். 

7. அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருளையும், உங்களிடம் அவன் செய்த உடன்படிக்கையையும், "செவியுற்றோம்; கட்டுப்பட்டோம்'' என்று நீங்கள் கூறியதையும் எண்ணிப் பாருங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உள்ளங்களில் இருப்பதை அல்லாஹ் அறிந்தவன்.

8. நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

9. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் புரிந்தோருக்கு மன்னிப்பும், மகத்தான கூலியும் உண்டு என அல்லாஹ் வாக்களித்துள்ளான்.

10. (நம்மை) மறுத்து, நமது வசனங்களைப் பொய்யெனக் கருதியோரே நரகவாசிகள்.

11. நம்பிக்கை கொண்டோரே! ஒரு சமுதாயத்தினர் உங்களுக்கு எதிராகத் தம் கைகளை நீட்ட திட்டமிட்டபோது, அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருளை எண்ணிப் பாருங்கள்! அவர்களின் கைகளை உங்களை விட்டும் அவன் தடுத்தான். அல்லாஹ்வை அஞ்சிக் கெள்ளுங்கள்! நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்.

12. இஸ்ராயீலின் மக்களிடம் அல்லாஹ் உறுதிமொழி எடுத்தான். அவர்களில் தேர்வு செய்யப்பட்ட பன்னிரண்டு பேரை அனுப்பினோம். "நான் உங்களுடன் இருக்கிறேன். நீங்கள் தொழுகையை நிலைநாட்டி, ஸகாத்தும் கொடுத்து, எனது தூதர்களையும் நம்பி, அவர்களுக்கு உதவியாக இருந்து, அல்லாஹ்வுக்கு அழகிய கடனையும்75 கொடுப்பீர்களானால் உங்கள் தீமைகளை உங்களை விட்டும் அழிப்பேன். உங்களைச் சொர்க்கச் சோலைகளிலும் நுழையச் செய்வேன். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். உங்களில் இதன் பிறகு (என்னை) மறுத்தவர் நேரான வழியிலிருந்து விலகி விட்டார்'' என்று அல்லாஹ் கூறினான்.

13. அவர்கள் தமது ஒப்பந்தத்தை முறித்ததால் அவர்களைச் சபித்தோம்.6 அவர்களின் உள்ளங்களை இறுக்கமாக்கினோம். வார்த்தைகளை அதற்குரிய இடங்களை விட்டும் அவர்கள் மாற்றுகின்றனர். அவர்களுக்கு அறிவுரை கூறப்பட்டவற்றில் ஒரு பகுதியை விட்டு விட்டனர். அவர்களில் சிலரைத் தவிர மற்றவர்களிடமிருந்து ஏதேனும் துரோகத்தை நீர் பார்த்துக் கொண்டே இருப்பீர். ஆகவே அவர்களைக் கண்டு கொள்ளாது அலட்சியப்படுத்துவீராக! நன்மை செய்வோரை அல்லாஹ் விரும்புகிறான்.

14. "நாங்கள் கிறித்தவர்கள்'' என்று கூறியோரிடமும் உடன்படிக்கை எடுத்தோம். அவர்களுக்கு அறிவுரை கூறப்பட்டவற்றில் ஒரு பகுதியை விட்டு விட்டனர். எனவே கியாமத் நாள்1 வரை அவர்களிடையே பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தினோம்.99 அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி அல்லாஹ் அவர்களுக்குப் பின்னர் அறிவிப்பான்.

15. வேதமுடையோரே!27 நம்முடைய தூதர் (முஹம்மத்) உங்களிடம் வந்து விட்டார். வேதத்தில் நீங்கள் மறைத்தவற்றில் அதிகமானவற்றை அவர் உங்களுக்குத் தெளிவுபடுத்துவார்.97 பலவற்றை அலட்சியம் செய்து விடுவார். அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு ஒளியும், தெளிவான வேதமும் வந்து விட்டன.

16. அவனது திருப்தியை நாடுவோருக்கு இதன் மூலம் அல்லாஹ் ஈடேற்றத்தின் வழிகளைக் காட்டுகிறான். தன் விருப்பப்படி அவர்களை இருள்களிலிருந்து303 வெளிச்சத்திற்குக் கொண்டு செல்கிறான். அவர்களுக்கு நேரான வழியைக் காட்டுகிறான்.

17. "மர்யமுடைய மகன் மஸீஹ்92 தான் அல்லாஹ்'' என்று கூறியோர் (ஏகஇறைவனை) மறுத்து விட்டனர்.459 "மர்யமின் மகன் மஸீஹையும், அவரது தாயாரையும், பூமியில் உள்ள அனைவரையும் அல்லாஹ் அழிக்க நாடினால் அவனிடமிருந்து (அதைத் தடுக்க) சிறிதளவேனும் சக்தி பெற்றவர் யார்?'' என்று நீர் கேட்பீராக! வானங்கள்,507 பூமி, மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவைகளின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைப்பான். அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.

18. "நாங்கள் அல்லாஹ்வின் பிள்ளைகளும், அவனது நேசர்களுமாவோம்'' என்று யூதர்களும், கிறித்தவர்களும் கூறுகின்றனர். "(அவ்வாறாயின்) உங்கள் பாவங்களின் காரணமாக உங்களை ஏன் அவன் தண்டிக்கிறான்?'' என்று கேட்பீராக! மாறாக நீங்கள், அவன் படைத்த மனிதர்களாவீர்கள்.368 தான் நாடியோரை அவன் மன்னிப்பான். தான் நாடியோரைத் தண்டிப்பான். வானங்கள்,507 பூமி, அவற்றுக்கு இடைப்பட்டவைகளின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவனிடமே திரும்பிச் செல்லுதல் உள்ளது.

19. வேதமுடையோரே!27 "எங்களுக்கு நற்செய்தி கூறுபவரோ, எச்சரிக்கை செய்பவரோ வரவில்லை'' என்று நீங்கள் கூறாமல் இருப்பதற்காக தூதர்களின் வருகை நின்று போயிருந்த காலகட்டத்தில் நம்முடைய தூதர் (முஹம்மத்) உங்களுக்குத் தெளிவுபடுத்திட உங்களிடம் வந்து விட்டார். நற்செய்தி கூறுபவரும், எச்சரிக்கை செய்பவரும் உங்களிடம் வந்து விட்டார். அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.

20. "என் சமுதாயமே! உங்களில் நபிமார்களை ஏற்படுத்தி, உங்களை ஆட்சியாளர்களாக்கி, உலகத்தில் எவருக்கும் கொடுக்காததை உங்களுக்குக் கொடுத்ததன் மூலம் அல்லாஹ் உங்களுக்குச் செய்திருந்த அருட்கொடையை எண்ணிப் பாருங்கள்!'' என்று மூஸா தமது சமுதாயத்திற்குக் கூறியதை நினைவூட்டுவீராக!

21. "என் சமுதாயமே! அல்லாஹ் உங்களுக்கு விதித்த தூய்மையான இப்பூமியில் நுழையுங்கள்! புறங்காட்டி ஓடாதீர்கள்! (அவ்வாறு ஓடினால்) நட்டமடைந்தவர்களாவீர்கள்!'' (என்றும் மூஸா கூறினார்)

22. "மூஸாவே! அதில் அடக்குமுறை செய்யும் கூட்டத்தினர் உள்ளனர். அதிலிருந்து அவர்கள் வெளியேறும் வரை நாங்கள் அதில் நுழைய மாட்டோம். அவர்கள் அங்கிருந்து வெளியேறி விட்டால் நாங்கள் நுழைவோம்'' என்று அவர்கள் கூறினர்.

23. "அவர்களை எதிர்த்து (அவ்வூரின்) நுழைவாயில் வழியாக நுழையுங்கள்! நீங்கள் அதில் நுழைந்தால் நீங்களே வெற்றி பெறுபவர்கள். நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அல்லாஹ்வையே சார்ந்திருங்கள்!'' என்று அல்லாஹ்வின் அருட்கொடையைப் பெற்ற, (இறைவனை) அஞ்சுகிற இருவர் கூறினர். 

24. "மூஸாவே! அவர்கள் அங்கே இருக்கும் வரை அதில் நாங்கள் ஒருபோதும் நுழைய மாட்டோம். எனவே நீரும், உமது இறைவனும் சென்று போரிடுங்கள்! நாங்கள் இங்கேயே அமர்ந்திருக்கிறோம்'' என்று அவர்கள் கூறினர்.

25. "என் இறைவா! என்னையும், என் சகோதரரையும் தவிர (யாரையும்) நான் கட்டுப்படுத்த முடியாது. எனவே எங்களுக்கும், குற்றம் புரிந்த இக்கூட்டத்திற்குமிடையே நீ தீர்ப்பளிப்பாயாக!'' என்று (மூஸா) கூறினார்.

26. "இவ்வூர் அவர்களுக்கு நாற்பது ஆண்டுகளுக்குத் தடை செய்யப்பட்டது. (நாடற்று) பூமியில் அவர்கள் திரிவார்கள். எனவே குற்றம் புரிந்த இக்கூட்டத்திற்காக நீர் கவலைப்படாதீர்!'' என்று (இறைவன்) கூறினான்.

27. ஆதமுடைய இரு புதல்வர்களின் உண்மை வரலாற்றை அவர்களுக்குக் கூறுவீராக! அவ்விருவரும் ஒரு வணக்கத்தைப் புரிந்தனர். அவர்களில் ஒருவரிடம் அது ஏற்கப்பட்டது. மற்றொருவரிடம் ஏற்கப்படவில்லை. "நான் உன்னைக் கொல்வேன்'' என்று (ஏற்கப்படாதவர்) கூறினார். "(தன்னை) அஞ்சுவோரிடமிருந்தே அல்லாஹ் ஏற்றுக் கொள்வான்'' என்று (ஏற்கப்பட்டவர்) கூறினார்.

28, 29. "என்னைக் கொல்வதற்காக உன் கையை என்னை நோக்கி நீ நீட்டினால் உன்னைக் கொல்வதற்காக என் கையை உன்னை நோக்கி நான் நீட்டுபவனல்லன். அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வை நான் அஞ்சுகிறேன். உன் பாவத்துடன், என்(னைக் கொன்ற) பாவத்தையும் நீ சுமந்து நரகவாசியாக நீ ஆவதையே நான் விரும்புகிறேன். இதுவே அநீதி இழைத்தோரின் கூலியாகும்'' (எனவும் அவர் கூறினார்.)26 

30. (இவ்வளவுக்குப் பிறகும்) தன் சகோதரரைக் கொல்லுமாறு அவனது மனம் தூண்டியது. அவரைக் கொன்றான். எனவே நட்டமடைந்தவனாக ஆகி விட்டான்.

31. தனது சகோதரரின் உடலை எவ்வாறு மறைப்பது என்று அவனுக்குக் காட்ட அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பினான். அது பூமியைத் தோண்டியது. "அந்தோ! இந்தக் காகத்தைப் போல் இருப்பதற்குக் கூட என்னால் இயலவில்லையே! அவ்வாறு இருந்திருந்தால் என் சகோதரரின் உடலை மறைத்திருப்பேனே'' எனக் கூறினான். கவலைப்பட்டவனாக ஆனான்.

32. "கொலைக்குப் பதிலாகவோ, பூமியில் செய்யும் குழப்பத்திற்குப் பதிலாகவோ இல்லாமல் ஒருவர், மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார்" என்றும், "ஒரு மனிதனை வாழவைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்" என்றும் இஸ்ராயீலின் மக்களுக்கு இதன் காரணமாகவே விதியாக்கினோம். அவர்களிடம் நம்முடைய தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தனர். இதன் பின்னர் அவர்களில் அதிகமானோர் பூமியில் வரம்பு மீறுவோராகவே உள்ளனர்.

33. கொல்லப்படுவது, அல்லது சிலுவையில் அறையப்படுவது, அல்லது மாறுகால், மாறுகை வெட்டப்படுவது, அல்லது நாடுகடத்தப்படுவது ஆகியவையே அல்லாஹ்வுடனும், அவனது தூதருடனும் போர் செய்து பூமியில் குழப்பம் செய்ய முயற்சிப்போருக்குரிய தண்டனை. இது அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் இழிவாகும். அவர்களுக்கு மறுமையில் கடும் வேதனை உள்ளது.43

34. அவர்களில், நீங்கள் சிறைபிடிப்பதற்கு முன் திருந்திக் கொள்வோரைத் தவிர. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!

35. நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அவனை நோக்கி ஒரு வஸீலாவைத் தேடிக் கொள்ளுங்கள்!141 அவன் பாதையில் அறப்போர் செய்யுங்கள்! வெற்றி பெறுவீர்கள்.

36. பூமியில் உள்ள அனைத்தும், அத்துடன் அதுபோல் இன்னொரு மடங்கும் (ஏகஇறைவனை) மறுப்போருக்கு உடைமையாக இருந்து, கியாமத் நாளின்1 வேதனைக்கு ஈடாகக் கொடுத்தாலும் அவர்களிடமிருந்து அவை ஏற்கப்படாது. அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.

37. அவர்கள் நரகிலிருந்து வெளியேற விரும்புவார்கள். (ஆனால்) அதிலிருந்து அவர்கள் வெளியேற முடியாது. அவர்களுக்கு நிலையான வேதனை உண்டு.

38. திருடுபவன், திருடுபவள் ஆகிய இருவரின் கைகளை வெட்டி விடுங்கள்! இது அவர்கள் செய்ததற்குரிய கூலியும், அல்லாஹ்வின் தண்டனையுமாகும். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.43

39. அநீதி இழைத்த பின் மன்னிப்புக் கேட்டு (தம்மை) திருத்திக் கொண்டவரை அல்லாஹ் மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

40. வானங்கள்507 மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது என்பதை நீர் அறியவில்லையா? தான் நாடியோரை அவன் தண்டிப்பான். தான் நாடியோரை மன்னிப்பான். அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.

41. நம்பிக்கை கொண்டோம் என்று தம் வாய்களால் கூறி, உள்ளங்களால் நம்பிக்கை கொள்ளாமல் (இறை)மறுப்பை நோக்கி விரைந்து செல்வோர் குறித்தும், யூதர்களைக் குறித்தும் தூதரே கவலைப்படாதீர்! அவர்கள் பொய்களையே அதிகம் செவியுறுகின்றனர். உம்மிடம் வராத மற்றொரு சமுதாயத்திற்காக (உமது பேச்சை) செவியுறுகின்றனர். வார்த்தைகளை அவற்றுக்குரிய இடங்களை விட்டும் மாற்றிக் கூறுகின்றனர். "அது (சாதகமானது) உங்களுக்கு வழங்கப்பட்டால் அதை எடுத்துக் கொள்ளுங்கள்! அது கொடுக்கப்படாவிட்டால் அதைத் தவிர்த்து விடுங்கள்!'' என்று கூறுகின்றனர். அல்லாஹ் சோதிக்க484 நாடுபவரை அல்லாஹ்விடமிருந்து காப்பாற்ற சிறிதும் நீர் அதிகாரம் பெறமாட்டீர். அவர்களின் உள்ளங்களை அல்லாஹ் தூய்மையாக்க விரும்பவில்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவு இருக்கிறது. மறுமையில் கடும் வேதனை உண்டு.

42. பொய்யையே அவர்கள் அதிகம் செவியுறுகின்றனர். தடுக்கப்பட்டதையே அதிகம் சாப்பிடுகின்றனர். அவர்கள் உம்மிடம் வந்தால் அவர்களிடையே நீர் தீர்ப்பு வழங்கலாம். அல்லது அவர்களை அலட்சியம் செய்யலாம். அவர்களை நீர் அலட்சியம் செய்தால் அவர்களால் உமக்கு எந்தத் தீங்கும் தர முடியாது. நீர் தீர்ப்பளித்தால் அவர்களிடையே நீதியான முறையில் தீர்ப்பளிப்பீராக! நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான்.

43. அவர்களிடம் தவ்ராத் இருக்கிறது.491 அதில் அல்லாஹ்வின் கட்டளையும் உள்ளது. இதன் பின்னர் அதை அவர்கள் புறக்கணிக்கின்றனர். இந்நிலையில் அவர்கள் உம்மை எப்படி தீர்ப்பு வழங்குபவராக ஏற்றுக் கொள்வார்கள்? அவர்கள் நம்பிக்கை கொண்டோர் அல்லர்.

44. தவ்ராத்தை491 நாம் அருளினோம். அதில் நேர்வழியும், ஒளியும் இருந்தது. (இறைவனுக்கு) கட்டுப்பட்ட நபிமார்களும், யூத வணக்கசாலிகளும், மேதைகளும் அல்லாஹ்வின் வேதத்தைப் பாதுகாக்கக் கட்டளையிடப்பட்டதாலும், அதற்குச் சாட்சிகளாக இருந்ததாலும் யூதர்களுக்கு அதன் மூலமே தீர்ப்பளித்து வந்தனர். எனவே மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள்! எனக்கே அஞ்சுங்கள்! எனது வசனங்களை அற்பவிலைக்கு விற்று விடாதீர்கள்!445 அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோரே234 (ஏகஇறைவனை) மறுப்பவர்கள்.

45. உயிருக்கு உயிர், கண்ணுக்குக் கண், மூக்குக்கு மூக்கு, காதுக்குக் காது, பல்லுக்குப் பல், காயங்களுக்குப் பதிலாக அதே அளவு காயப்படுத்துதல் ஆகியவற்றை அதில் (தவ்ராத்தில்) அவர்களுக்கு விதியாக்கினோம். (பாதிக்கப்பட்ட) யாராவது அதை மன்னித்தால் அது அவருக்குப் (பாவங்களுக்குப்) பரிகாரமாக ஆகும். அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர்234 அநீதி இழைத்தவர்கள்.43

46. தமக்கு முன்சென்ற தவ்ராத்தை491 உண்மைப்படுத்துபவராக அவர்களின் அடிச்சுவட்டில் மர்யமின் மகன் ஈஸாவைத் தொடரச் செய்தோம். அவருக்கு இஞ்சீலையும்491 வழங்கினோம். அதில் நேர்வழியும், ஒளியும் இருந்தன. தனக்கு முன்சென்ற தவ்ராத்தை491 உண்மைப்படுத்துவதாகவும் அது அமைந்திருந்தது. (இறைவனை) அஞ்சுவோருக்கு நேர்வழியாகவும், அறிவுரையாகவும் இருந்தது.

47. இஞ்சீலுக்குரியோர்491 அதில் அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்கட்டும். அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோரே குற்றவாளிகள்.234

48. உண்மையை உள்ளடக்கிய வேதத்தை உமக்கு அருளினோம். அது தனக்கு முன்சென்ற வேதத்தை4 உண்மைப்படுத்துவதாகவும், அதைப் பாதுகாப்பதாகவும் இருக்கிறது. எனவே அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் அவர்களிடையே தீர்ப்பளிப்பீராக! உம்மிடம் வந்துள்ள உண்மையை அலட்சியம் செய்து அவர்களின் மனோ இச்சைகளைப் பின்பற்றாதீர்! உங்களில் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கைத் திட்டத்தையும், வழியையும் ஏற்படுத்தியுள்ளோம். அல்லாஹ் நினைத்திருந்தால் உங்களை ஒரே சமுதாயமாக ஆக்கியிருப்பான். எனினும் உங்களுக்கு அவன் வழங்கியவற்றில் உங்களைச் சோதிப்பதற்காக484 (அவ்வாறு ஆக்கிடவில்லை.) எனவே நன்மைகளுக்கு முந்திக் கொள்ளுங்கள்! நீங்கள் அனைவரும் அல்லாஹ்விடமே திரும்பிச் செல்ல வேண்டும். நீங்கள் முரண்பட்டது பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான்.

49. அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் அவர்களிடையே தீர்ப்பளிப்பீராக! அவர்களின் மனோ இச்சைகளைப் பின்பற்றாதீர்! அல்லாஹ் உமக்கு அருளியதில் சிலவற்றை விட்டும் அவர்கள் உம்மைக் குழப்புவார்கள் என்பதில் கவனமாக இருப்பீராக! அவர்கள் புறக்கணித்தால் அவர்களின் சில பாவங்கள் காரணமாக அவர்களைத் தண்டிப்பதையே அல்லாஹ் நாடுகிறான் என்பதை அறிந்து கொள்வீராக! மனிதர்களில் அதிகமானோர் குற்றம் புரிவோராகவுள்ளனர்.

50. அறியாமைக் காலத் தீர்ப்பைத்தான் அவர்கள் தேடுகிறார்களா? உறுதியாக நம்புகிற சமுதாயத்திற்கு அல்லாஹ்வை விட அழகிய தீர்ப்பளிப்பவன் யார்?234 

51. நம்பிக்கை கொண்டோரே! யூதர்களையும், கிறித்தவர்களையும் உங்கள் பாதுகாவலர்களாக்கிக் கொள்ளாதீர்கள்!89 அவர்களில் ஒருவர் மற்றவருக்குப் பாதுகாவலர்கள். உங்களில் அவர்களைப் பொறுப்பாளராக்கிக் கொள்வோர் அவர்களைச் சேர்ந்தவரே. அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் வழிகாட்ட மாட்டான்.

52. உள்ளங்களில் நோய் இருப்போர், அவர்களை நோக்கி விரைவதைக் காண்கிறீர். "எங்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமோ என அஞ்சுகிறோம்'' என்று அவர்கள் கூறுகின்றனர். அல்லாஹ் (உங்களுக்கு) வெற்றியளிக்கலாம்; அல்லது ஏதேனும் ஒரு காரியத்தை அவன் நிகழ்த்தலாம். அவர்கள் தமக்குள் இரகசியமாக வைத்திருந்ததற்காக அப்போது கவலைப்பட்டோராக ஆவார்கள்.

53. இவர்களின் நல்லறங்கள் அழிந்து, நட்டமடைந்தனர். "நாங்களும் உங்களைச் சேர்ந்தோரே என அல்லாஹ் மீது உறுதியாகச் சத்தியம் செய்தோர் இவர்கள் தாமா?'' என்று நம்பிக்கை கொண்டோர் (மறுமையில் வியப்புடன்) கூறுவார்கள்.

54. நம்பிக்கை கொண்டோரே! உங்களில் யாரேனும் தமது மார்க்கத்தை விட்டு மாறிவிட்டால் அல்லாஹ் பின்னர் வேறொரு சமுதாயத்தைக் கொண்டு வருவான். அவன் அவர்களை விரும்புவான். அவர்கள் அவனை விரும்புவார்கள். அவர்கள் நம்பிக்கை கொண்டோரிடம் பணிவாகவும், (ஏகஇறைவனை) மறுப்போரிடம் தலை நிமிர்ந்தும் இருப்பார்கள். அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவார்கள். பழிப்போரின் பழிச் சொல்லுக்கு அவர்கள் அஞ்சமாட்டார்கள். இது அல்லாஹ்வின் அருள். தான் நாடியோருக்கு அதை அவன் அளிப்பான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.

55. அல்லாஹ்வும், அவனது தூதரும், தொழுகையை நிலைநாட்டி, ஸகாத்தும் கொடுத்து, ருகூவு செய்கிற நம்பிக்கை கொண்டோருமே உங்கள் உதவியாளர்கள்.

56. அல்லாஹ்வையும், அவனது தூதரையும், நம்பிக்கை கொண்டோரையும் பொறுப்பாளராக்கிக் கொண்ட அல்லாஹ்வின் கூட்டத்தினரே வெற்றி பெறுபவர்கள்.

57. நம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிலும்27 (ஏகஇறைவனை) மறுப்போரிலும் உங்கள் மார்க்கத்தைக் கேலியாகவும், விளையாட்டாகவும் ஆக்கிக் கொண்டோரை உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்!89 நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அல்லாஹ்வை அஞ்சுங்கள்!

58. தொழுகைக்கு நீங்கள் அழைக்கும்போது அதை அவர்கள் கேலியாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொண்டனர். அவர்கள் விளங்காத கூட்டத்தினராக இருப்பதே இதற்குக் காரணம்.

59. "வேதமுடையோரே!27 அல்லாஹ்வையும், எங்களுக்கு அருளப்பட்டதையும், இதற்கு முன் அருளப்பட்டதையும்4 நம்புகிறோம் என்பதற்காகத் தவிர வேறு எதற்காக எங்களை வெறுக்கின்றீர்கள்? உங்களில் பெரும்பாலோர் குற்றவாளிகள்'' என்று கூறுவீராக!

60. "அல்லாஹ்விடம் இதைவிட கெட்டகூலி பெறுபவனைப் பற்றி உங்களுக்கு நான் கூறட்டுமா?'' என்று கேட்பீராக! அல்லாஹ் எவர்களைச் சபித்து6 கோபம் கொண்டானோ, எவர்களைக் குரங்குகளாகவும், பன்றிகளாகவும் உருமாற்றினானோ,23 எவர்கள் தீயசக்திகளுக்கு அடிபணிந்தார்களோ அவர்களே தீய இடத்திற்குரியவர்கள். நேர்வழியிலிருந்து தவறியவர்கள்.

61. அவர்கள் உங்களிடம் வரும்போது "நம்பிக்கை கொண்டோம்'' எனக் கூறுகின்றனர். அவர்கள் (இறை)மறுப்பை (மனதில்) வைத்துக் கொண்டே வந்தனர். அதனுடனேயே வெளியேறியும் விட்டனர். அவர்கள் மறைத்து வைப்பவற்றை அல்லாஹ் நன்கு அறிந்தவன்.

62. அவர்களில் அதிகமானோர் பாவத்திற்கும், வரம்பு மீறலுக்கும், தடுக்கப்பட்டதை உண்பதற்கும் விரைந்து செல்வதை நீர் காண்பீர்! அவர்கள் செய்வது மிகவும் கெட்டது.

63. அவர்களின் பாவமான கூற்றை விட்டும், தடுக்கப்பட்டதை அவர்கள் உண்பதை விட்டும், வணக்கசாலிகளும், மேதைகளும் அவர்களைத் தடுத்திருக்க வேண்டாமா? அவர்கள் செய்வது மிகவும் கெட்டது.

64. "அல்லாஹ்வின் கை கட்டப்பட்டுள்ளது'' என்று யூதர்கள் கூறுகின்றனர். அவர்களின் கைகளே கட்டப்பட்டுள்ளன. அவர்களது இக்கூற்றின் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டனர். மாறாக அவனது இரு கைகளும் விரிக்கப்பட்டே உள்ளன. அவன் நாடியவாறு வழங்குவான். உமது இறைவனிடமிருந்து உமக்கு அருளப்பட்டது, அவர்களில் பெரும்பாலோருக்கு (இறை) மறுப்பையும் வரம்பு மீறலையும் அதிகப்படுத்தி விட்டது. கியாமத் நாள்1 வரை அவர்களிடையே பகைமையையும் வெறுப்பையும் ஏற்படுத்தி விட்டோம்.99 அவர்கள் போர் (எனும்) தீயை மூட்டும் போதெல்லாம் அதை அல்லாஹ் அணைத்து விடுகிறான். அவர்கள் பூமியில் குழப்பம் விளைவிக்கின்றனர். குழப்பம் விளைவிப்போரை அல்லாஹ் விரும்ப மாட்டான்.

65. வேதமுடையோர்27 நம்பிக்கை கொண்டு, (இறை) அச்சத்துடன் நடந்து கொண்டிருந்தால் அவர்களது பாவங்களை அவர்களை விட்டும் நீக்கியிருப்போம். அவர்களை இன்பம் நிறைந்த சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்திருப்போம்.

66. தவ்ராத்தையும், இஞ்சீலையும்,491 அவர்களுக்கு அவர்களது இறைவனிடமிருந்து அருளப்பட்டதையும் அவர்கள் நிலைநாட்டியிருந்தால் தமது (தலைக்கு) மேலிருந்தும், தமது கால்களுக்குக் கீழே இருந்தும் (கிடைப்பவற்றைச்) சாப்பிட்டிருப்பார்கள். அவர்களில் நேர்மையான கூட்டமும் உள்ளது. அவர்களில் அதிகமானோரின் செயல் மிகவும் கெட்டதாகும்.

67. தூதரே! உமது இறைவனிடமிருந்து உமக்கு அருளப்பட்டதை எடுத்துச் சொல்வீராக! (இதைச்) செய்யவில்லையானால் அவனது தூதை நீர் எடுத்துச் சொன்னவராக மாட்டீர்! அல்லாஹ் உம்மை மனிதர்களிடமிருந்து காப்பாற்றுவான்.145 (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் வழிகாட்ட மாட்டான்.

68. "வேதமுடையோரே!27 தவ்ராத்தையும், இஞ்சீலையும்,491 உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையும் நீங்கள் நிலைநாட்டாத வரை நீங்கள் எதிலும் சேர்ந்தவர்களல்லர்'' என்று கூறுவீராக! உமது இறைவனிடமிருந்து உமக்கு அருளப்பட்ட (இவ்வேதமான)து அவர்களில் அதிகமானோருக்கு (இறை) மறுப்பையும், வரம்பு மீறலையும் அதிகப்படுத்துகிறது. எனவே (ஏகஇறைவனை) மறுக்கும் கூட்டத்திற்காக நீர் கவலைப்படாதீர்!

69. நம்பிக்கை கொண்டோரிலும், யூதர்களிலும், ஸாபியீன்களிலும்,443 கிறித்தவர்களிலும் அல்லாஹ்வையும், இறுதி நாளையும்1 நம்பி நல்லறங்களைச் செய்தோருக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.

70. இஸ்ராயீலின் மக்களிடம் உறுதிமொழி எடுத்தோம்.22 அவர்களிடம் தூதர்களையும் அனுப்பினோம். அவர்கள் விரும்பாததைத் தூதர் அவர்களிடம் கொண்டு வந்த போதெல்லாம் சிலரைப் பொய்யர் என்றனர். மற்றும் சிலரைக் கொன்றனர்.

71. எந்தச் சோதனையும் ஏற்படாது என்று அவர்கள் எண்ணி விட்டனர். இதனால், குருடர்களாகவும், செவிடர்களாகவும் ஆனார்கள். பின்னரும் அவர்களை அல்லாஹ் மன்னித்தான். பின்னர் அவர்களில் அதிகமானோர் குருடர்களாகவும், செவிடர்களாகவும் ஆனார்கள். அவர்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன்.488

72. "மர்யமின் மகன் மஸீஹ்தான்92 அல்லாஹ்'' எனக் கூறியவர்கள் (ஏகஇறைவனை) மறுத்து விட்டனர்.459 "இஸ்ராயீலின் மக்களே! என் இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்! அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் தடைசெய்து விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை'' என்றே மஸீஹ்92 கூறினார்.

73. "மூவரில் (மூன்று கடவுள்களில்) அல்லாஹ்வும் ஒருவன்'' என்று கூறியோர் (ஏகஇறைவனை) மறுப்பவர்களாகி விட்டனர்.459 ஒரே இறைவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் (வேறு) யாருமில்லை. அவர்கள் தமது கூற்றிலிருந்து விலகிக் கொள்ளவில்லையானால் (ஏகஇறைவனை) மறுப்போருக்குத் துன்புறுத்தும் வேதனை வந்தடையும்.

74. அவர்கள் அல்லாஹ்விடம் திரும்பி, அவனிடம் பாவமன்னிப்புத் தேட வேண்டாமா? அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

75. மர்யமின் மகன் மஸீஹ்92 தூதரைத் தவிர வேறில்லை.459 அவருக்கு முன் பல தூதர்கள் சென்று விட்டனர்.101 அவரது தாய் உண்மையாளர். அவ்விருவரும் உணவு உண்போராக இருந்தனர். இவர்களுக்குச் சான்றுகளை எவ்வாறு தெளிவுபடுத்தியுள்ளோம் என்பதைச் சிந்திப்பீராக! பின்னர் எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர் என்பதையும் சிந்திப்பீராக!

76. "அல்லாஹ்வையன்றி உங்களுக்கு எந்த நன்மையும், தீமையும் செய்யச் சக்தியற்றவற்றை வணங்குகிறீர்களா?'' என்று கேட்பீராக! அல்லாஹ்வே செவியுறுபவன்;488 அறிந்தவன்.

77. "வேதமுடையோரே!27 உங்கள் மார்க்கத்தில் உண்மைக்கு மாற்றமாக (கூறி) வரம்பு மீறாதீர்கள்! இதற்கு முன் தாமும் வழிகெட்டு, அதிகமானோரையும் வழிகெடுத்து, நேரான பாதையை விட்டும் தடம் புரண்ட கூட்டத்தின் மனோஇச்சைகளைப் பின்பற்றாதீர்கள்!'' என்று கூறுவீராக!

78. "தாவூத், மர்யமின் மகன் ஈஸா ஆகியோரின் வாயால் (ஏகஇறைவனை) மறுத்த இஸ்ராயீலின் மக்கள் சபிக்கப்பட்டனர். அவர்கள் மாறுசெய்ததும், வரம்பு மீறியோராக இருந்ததுமே இதற்குக் காரணம்.

79. அவர்கள் செய்து வந்த தீய செயல்களை விட்டும் ஒருவரை ஒருவர் தடுக்காதிருந்தனர். அவர்கள் செய்தது மிகவும் கெட்டது.

80. அவர்களில் அதிகமானோர் (ஏகஇறைவனை) மறுப்போரைப் பொறுப்பாளர்களாக ஏற்படுத்திக் கொள்வதை நீர் காண்கிறீர்.89 தமக்காக அவர்கள் தயாரித்தது கெட்டது. அவர்கள் மீது அல்லாஹ் கோபம் கொண்டான். வேதனையில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.

81. அவர்கள் அல்லாஹ்வையும், இந்த நபியையும், (முஹம்மதையும்) இவருக்கு அருளப்பட்டதையும் நம்பியிருந்தால் அவர்களைப் பொறுப்பாளர்களாக்கியிருக்க மாட்டார்கள்.89 எனினும் அவர்களில் அதிகமானோர் குற்றம் புரிபவர்கள்.

82. நம்பிக்கை கொண்டோருக்கு மனிதர்களிலேயே கடுமையான பகைவர்களாக யூதர்களையும், இணை கற்பிப்போரையும் (முஹம்மதே!) நீர் காண்பீர்! "நாங்கள் கிறித்தவர்கள்'' எனக் கூறியோர் நம்பிக்கை கொண்டோருக்கு மிக நெருக்கமான நேசமுடையோராக இருப்பதையும் நீர் காண்பீர்!147 அவர்களில் பாதிரிகளும், துறவிகளும் இருப்பதும், அவர்கள் ஆணவம் கொள்ளாது இருப்பதுமே இதற்குக் காரணம்.

83. இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) அருளப்பட்டதை அவர்கள் செவியுறும்போது உண்மையை அறிந்து கொண்டதால் அவர்களின் கண்களில் கண்ணீர் வடிவதை நீர் காண்பீர். "எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே சான்று கூறுவோருடன் எங்களைப் பதிவு செய்வாயாக!'' என அவர்கள் கூறுகின்றனர். 

84. "அல்லாஹ்வையும், எங்களிடம் வந்த உண்மையையும் நாங்கள் நம்பாதிருக்க எங்களுக்கு என்ன (தடை) உள்ளது? நல்ல சமுதாயத்துடன் எங்களையும் எங்கள் இறைவன் சேர்த்திட ஆவல் கொள்கிறோம்'' (எனவும் கூறுகின்றனர்).

85. அவர்கள் (இவ்வாறு) கூறியதால் அவர்களுக்கு சொர்க்கச் சோலைகளை அல்லாஹ் பரிசாக வழங்கினான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே நன்மை செய்வோருக்குரிய கூலி.

86. (நம்மை) மறுத்து, நமது வசனங்களைப் பொய்யெனக் கருதுவோரே நரகவாசிகள்.

87. நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்த தூயவற்றை தடுக்கப்பட்டவையாக ஆக்காதீர்கள்! வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறுவோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.

88. அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய, அனுமதிக்கப்பட்ட தூய்மையானதை உண்ணுங்கள்! நீங்கள் நம்புகின்ற அல்லாஹ்வையே அஞ்சுங்கள்!

89. உங்கள் சத்தியங்களில் வீணானவற்றுக்காக அல்லாஹ் உங்களைத் தண்டிக்க மாட்டான். மாறாக திட்டமிட்டுச் செய்யும் சத்தியங்களுக்காகவே உங்களைத் தண்டிப்பான். அதற்கான பரிகாரம், உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் உணவாக அளிக்கும் நடுத்தரமான உணவில் பத்து ஏழைகளுக்கு உணவளிப்பது, அல்லது அவர்களுக்கு உடையளிப்பது, அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்வது ஆகியவையே.64 (இவற்றில் எதையும்) பெறாதோர் மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும். நீங்கள் சத்தியம் செய்(து முறித்)தால், சத்தியத்திற்குரிய பரிகாரம் இவையே. உங்கள் சத்தியங்களைப் பேணிக் கொள்ளுங்கள்! நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ் இவ்வாறே தனது வசனங்களைத் தெளிவுபடுத்துகிறான்.

90. நம்பிக்கை கொண்டோரே! மது116, சூதாட்டம், பலிபீடங்கள்,135 (குறி கேட்பதற்கான) அம்புகள்136, ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! வெற்றி பெறுவீர்கள்!

91. மது, சூதாட்டம் மூலம் உங்களுக்கிடையே பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தவும், அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை விட்டும் உங்களைத் தடுக்கவுமே ஷைத்தான் விரும்புகிறான். எனவே விலகிக் கொள்ள மாட்டீர்களா?

92. அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்படுங்கள்! எச்சரிக்கையோடு இருந்து கொள்ளுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் தெளிவாக எடுத்துச் சொல்வதே நமது தூதரின் கடமை81 என்பதை அறிந்து கொள்ளுங்கள்!

93. (இறைவனை) அஞ்சி, நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்து, பிறகு அஞ்சி, நம்பிக்கை கொண்டு, பின்னரும் அஞ்சி, நன்மைகளைச் செய்வார்களானால் (தடுக்கப்பட்டவற்றை முன்னர்) உட்கொண்டதற்காக நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோர் மீது எந்தக் குற்றமுமில்லை. நன்மை செய்வோரை அல்லாஹ் விரும்புகிறான்.

94. நம்பிக்கை கொண்டோரே! "தனிமையில் (தன்னை) அஞ்சுபவர் யார்?' என்பதை அல்லாஹ் அடையாளம் காட்ட (நீங்கள் இஹ்ராமுடன் இருக்கும்போது) உங்கள் கைகளுக்கும், உங்கள் ஈட்டிகளுக்கும் எட்டும் வகையில் சில வேட்டைப் பிராணிகளைக் காட்டி உங்களை அல்லாஹ் சோதித்துப்484 பார்ப்பான். இதன் பின்னர் வரம்பு மீறுபவருக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.

95. நம்பிக்கை கொண்டோரே! இஹ்ராமுடன் இருக்கும்போது வேட்டைப் பிராணிகளைக் கொல்லாதீர்கள்! உங்களில் எவரேனும் வேண்டுமென்றே அதைக் கொன்றால் அவர் கொன்ற பிராணியுடன் ஒத்துப் போகும் கால்நடை (ஆடு, மாடு ஒட்டகம் ஆகியவை) பரிகாரமாகும். அது கஅபாவைச் சென்றடைய வேண்டிய காணிக்கை(ப் பிராணி). அல்லது பரிகாரமாக ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். அல்லது அதற்கு ஈடான அளவு நோன்பு நோற்க வேண்டும். உங்களில் நீதியுடைய இருவர் இது பற்றித் தீர்ப்பளிக்க வேண்டும். தனது வினையின் விளைவை அவர் அனுபவிப்பதற்காக (இது அவசியம்). இதற்கு முன் நடந்தவற்றை அல்லாஹ் மன்னித்தான். மீண்டும் செய்பவரை அல்லாஹ் தண்டிப்பான். அல்லாஹ் மிகைத்தவன்; தண்டிப்பவன்.

96. உங்களுக்கும், ஏனைய பயணிகளுக்கும் பயன்படும் பொருட்டு கடலில் வேட்டையாடுவதும், அதன் உணவும்505 உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.42 இஹ்ராமுடன் இருக்கும்போது நீங்கள் தரையில் வேட்டையாடுதல் தடுக்கப்பட்டுள்ளது. அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அவனிடமே ஒன்று சேர்க்கப்படுவீர்கள். 

97. புனித ஆலயமான கஅபாவையும், புனித மாதத்தையும்,55 குர்பானிப் பிராணியையும், (அதற்கு அணிவிக்கப்படும்) மாலைகளையும் மனிதர்களுக்கு நிலையானதாக அல்லாஹ் ஆக்கி விட்டான்.34 வானங்களில்507 உள்ளவற்றையும், பூமியில் உள்ளவற்றையும் அல்லாஹ் அறிவான் என்பதையும், அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் அறிந்தவன் என்பதையும் நீங்கள் அறிவதற்காகவே இது (கூறப்படுகிறது.)

98. அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன் என்பதையும், அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்!

99. எடுத்துச் சொல்வது தவிர இத்தூதர் மீது வேறு (பொறுப்பு) இல்லை.81 நீங்கள் வெளிப்படுத்துவதையும், மறைப்பதையும் அல்லாஹ் அறிகிறான்.

100. "கெட்டதும், நல்லதும் சமமாகாது'' என்று கூறுவீராக! கெட்டது அதிகமாக இருப்பது உம்மைக் கவர்ந்த போதிலும் சரியே. அறிவுடையோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! வெற்றி பெறுவீர்கள்!

101. நம்பிக்கை கொண்டோரே! சில விஷயங்களைப் பற்றி கேள்வி எழுப்பாதீர்கள்! அவை உங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டால் உங்களுக்குத் தீங்கு தரும். குர்ஆன் அருளப்படும் நேரத்தில் அவை பற்றி நீங்கள் கேள்வி கேட்டால் அவை உங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டு விடும்.150 அவற்றை அல்லாஹ் மன்னித்தான். அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத் தன்மையுள்ளவன்.

102. உங்களுக்கு முன் சென்ற சமுதாயத்தினர் இவ்வாறு கேள்வி கேட்டனர். பின்னர் அவர்கள், அவற்றை மறுப்போராக ஆகி விட்டனர்.

103. பஹீரா, ஸாயிபா, வஸீலா, ஹாம் ஆகியவற்றை அல்லாஹ் ஏற்படுத்தவில்லை.148 மாறாக (ஏகஇறைவனை) மறுப்போர் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுகின்றனர். அவர்களில் அதிகமானோர் விளங்க மாட்டார்கள்.

104. "அல்லாஹ் அருளியதை நோக்கியும் இத்தூதரை நோக்கியும் வாருங்கள்!'' என்று அவர்களிடம் கூறப்பட்டால் "எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதுவே எங்களுக்குப் போதும்'' என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் அறியாமலும், நேர்வழி பெறாமலும் இருந்தாலுமா?

105. நம்பிக்கை கொண்டோரே! உங்களைக் காத்துக் கொள்ளுங்கள்! நீங்கள் நேர்வழி நடக்கும்போது வழிகெட்டவனால் உங்களுக்கு எந்தத் தீங்கும் செய்ய முடியாது. நீங்கள் அனைவரும் மீள்வது அல்லாஹ்விடமே. நீங்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவன் உங்களுக்கு (அப்போது) அறிவிப்பான்.

106. நம்பிக்கை கொண்டோரே! உங்களில் ஒருவருக்கு மரணம் நெருங்கி அவர் மரண சாசனம் செய்தால் உங்களைச் சேர்ந்த நேர்மையான இருவர் அதற்குச் சாட்சிகளாக இருக்க வேண்டும்.45 நீங்கள் பூமியில் பயணம் மேற்கொண்டிருக்கும்போது மரணம் எனும் துன்பம் உங்களுக்கு ஏற்பட்டால் உங்களைச் சேராத இருவராக இருக்கலாம். நீங்கள் (அவர்களைச்) சந்தேகப்பட்டால் தொழுகைக்குப் பின் அவ்விருவரையும் தடுத்து வைத்துக் கொள்ளவும்! "இதனை (சாட்சியத்தை) விலை பேச மாட்டோம். நெருங்கிய உறவினராக இருந்தாலும் சரியே. அல்லாஹ்வின் சாட்சியத்தை மறைக்கவும் மாட்டோம். மறைத்தால் நாங்கள் குற்றவாளிகளாவோம்'' என்று அல்லாஹ்வின் மீது அவ்விருவரும் சத்தியம் செய்ய வேண்டும்.

107. அவ்விருவரும் (பொய்சாட்சி கூறி) பாவம் செய்தனர் என்பது தெரிய வந்தால், யாருக்குப் பாதகமாக சாட்சியம் கூறினார்களோ அவர்களைச் சேர்ந்த இருவர், அவ்விருவர் இடத்தில் நின்று "எங்கள் சாட்சியம் இவ்விருவரின் சாட்சியத்தை விட மிகவும் உண்மையானது. நாங்கள் வரம்பு மீறவில்லை. (அவ்வாறு வரம்பு மீறினால்) அப்போது நாங்கள் அநீதி இழைத்தவர்களாவோம்'' என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்ய வேண்டும்.

108. சரியான முறையில் சாட்சியம் கூறவோ, தமது சத்தியம் (பிறரால்) மறுக்கப்படும் என்று அவர்கள் அஞ்சவோ இதுவே ஏற்ற வழி. அல்லாஹ்வை அஞ்சுங்கள்! செவிமடுங்கள்! குற்றம் புரியும் கூட்டத்துக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.

109. தூதர்களை அல்லாஹ் ஒன்று திரட்டும் நாளில்1 "உங்களுக்கு என்ன பதில் அளிக்கப்பட்டது?'' என்று கேட்பான். "எங்களுக்கு (இதுபற்றி) எந்த அறிவும் இல்லை. நீயே மறைவானவற்றை அறிபவன்'' என்று அவர்கள் கூறுவார்கள்.

110. "மர்யமின் மகன் ஈஸாவே! உமக்கும், உமது தாயாருக்கும் நான் வழங்கிய அருட்கொடையையும், ரூஹுல்குதுஸ்444 மூலம் உம்மை வலுப்படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீராக! தொட்டிலிலும், இளமைப் பருவத்திலும் மக்களிடம் நீர் பேசினீர்! உமக்கு வேதத்தையும், ஞானத்தையும்,67 தவ்ராத்தையும், இஞ்சீலையும்491 நான் கற்றுத் தந்ததையும் எண்ணிப் பார்ப்பீராக! என் விருப்பப்படி களிமண்ணால் பறவை வடிவத்தைப் படைத்து அதில் நீர் ஊதியதையும், என் விருப்பப்படி அது பறவையாக மாறியதையும், என் விருப்பப்படி269 பிறவிக் குருடரையும் தொழுநோயாளியையும் நீர் குணப்படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீராக! இறந்தவர்களை என் விருப்பப்படி269 (உயிருடன்) வெளிப்படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீராக! இஸ்ராயீலின் மக்களிடம் தெளிவான சான்றுகளை நீர் கொண்டு வந்தீர்! அப்போது "இது தெளிவான சூனியமேயன்றி357 வேறில்லை''285 என்று அவர்களில் (ஏகஇறைவனை) மறுப்போர் கூறியபோது, அவர்களிடமிருந்து நான் உம்மைக் காப்பாற்றியதையும் எண்ணிப் பார்ப்பீராக!'' என்று அல்லாஹ் (ஈஸாவிடம்) கூறியதை நினைவூட்டுவீராக!

111. "என்னையும், என் தூதரையும் நம்புங்கள்!" என்று (ஈஸாவின்) சீடர்களுக்கு நான் அறிவித்தபோது "நம்பிக்கை கொண்டோம்! நாங்கள் முஸ்லிம்கள்295 என்பதற்கு நீயே சாட்சியாக இருப்பாயாக!'' என அவர்கள் கூறினர்.

112. "மர்யமின் மகன் ஈஸாவே! வானிலிருந்து உணவுத் தட்டை இறக்கிட உமது இறைவனுக்கு இயலுமா?'' என்று சீடர்கள் கூறியபோது, "நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்!'' என்று அவர் கூறினார்.

113. "அதை உண்டு, எங்கள் உள்ளங்கள் அமைதி பெறவும், நீர் எங்களிடம் உண்மையே உரைத்தீர் என நாங்கள் அறிந்து, அதற்குச் சாட்சியாளர்களாக ஆகவும் விரும்புகிறோம்'' என்று அவர்கள் கூறினர்.

114. "அல்லாஹ்வே! எங்கள் இறைவா! வானிலிருந்து எங்களுக்கு உணவுத் தட்டை இறக்குவாயாக! அது எங்களில் முதலாமவருக்கும், எங்களில் கடைசியானவருக்கும் திருநாளாகவும், உன்னிடமிருந்து பெற்ற சான்றாகவும் இருக்கும். எங்களுக்கு உணவளிப்பாயாக! உணவளிப்போரில் நீயே சிறந்தவன்'' என்று மர்யமின் மகன் ஈஸா கூறினார்.

115. "உங்களுக்கு அதை நான் இறக்குவேன். அதன் பிறகு உங்களில் யாரேனும் (என்னை) மறுத்தால் இவ்வுலகில் யாரையும் தண்டிக்காத அளவு அவரைத் தண்டிப்பேன்'' என்று அல்லாஹ் கூறினான்.

116. "மர்யமின் மகன் ஈஸாவே! அல்லாஹ்வையன்றி என்னையும், என் தாயாரையும் கடவுள்களாக்கிக் கொள்ளுங்கள்! என நீர் மக்களுக்குக் கூறினீரா?''459 என்று அல்லாஹ் (மறுமையில்) கேட்கும்போது, "நீ தூயவன்.10 எனக்குத் தகுதியில்லாத வார்த்தையை நான் கூற உரிமையில்லாதவன். நான் அவ்வாறு கூறியிருந்தால் அதை நீ அறிவாய். எனக்குள் உள்ளதை நீ அறிவாய்! உனக்குள் உள்ளதை நான் அறிய மாட்டேன். நீயே மறைவானவற்றை அறிபவன்'' என்று அவர் பதிலளிப்பார்.

117, 118. "நீ எனக்குக் கட்டளையிட்ட படி எனது இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்! என்பதைத் தவிர வேறு எதையும் நான் அவர்களிடம் கூறவில்லை. நான் அவர்களுடன் இருக்கும்போது அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். என்னை நீ கைப்பற்றியதும் நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய். நீ அனைத்துப் பொருட்களையும் கண்காணிப்பவன்.151 அவர்களை நீ தண்டித்தால் அவர்கள் உனது அடியார்களே. அவர்களை நீ மன்னித்தால் நீ மிகைத்தவன்; ஞானமிக்கவன்'' (எனவும் அவர் கூறுவார்.)26

119. "இது உண்மை பேசுவோருக்கு அவர்களது உண்மை பயன் தரும் நாள்1. அவர்களுக்குச் சொர்க்கச் சோலைகள் உள்ளன. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். இதுவே மகத்தான வெற்றியாகும்'' என்று அல்லாஹ் கூறுவான்.

120. வானங்கள்,507 பூமி, மற்றும் அவற்றில் உள்ளவைகளின் அதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியது. அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.

To read this Chapter in English click here. 

 

 

(14வது பதிப்பின்படி திருத்தி அமைக்கப்பட்டது)

July 23, 2009, 8:11 PM

அத்தியாயம் : 6

அத்தியாயம் : 6
அல் அன்ஆம் - கால்நடைகள்

மொத்த வசனங்கள் : 165
கால்நடைகள் குறித்து அன்றைய அரபுகளிடம் பலவிதமான மூட நம்பிக்கைகள் இருந்தன. அவை இந்த அத்தியாயத்தின் 136, 138, 139, 143, 144 ஆகிய வசனங்களில் கண்டிக்கப்படுகிறது. எனவே இந்த அத்தியாயத்திற்கு இவ்வாறு பெயர் வந்தது.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

1. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. அவனே வானங்களையும்,507 பூமியையும் படைத்தான். இருள்களையும்,303 ஒளியையும் ஏற்படுத்தினான். பின்னரும் (ஏகஇறைவனை) மறுப்போர் தம் இறைவனுக்கு (மற்றவர்களை) சமமாக்குகின்றனர்.

2. அவனே உங்களைக் களிமண்ணால்503 படைத்தான்.368 பின்னர் (மரணத்திற்கான) காலக்கெடுவை நிர்ணயித்தான். (திரும்ப உயிர்ப்பிக்கப்படுவதற்கு) குறிப்பிட்ட மற்றொரு காலக்கெடுவும் அவனிடத்தில் உள்ளது. பின்னரும் நீங்கள் சந்தேகப்படுகின்றீர்கள்!506

3. வானங்களிலும்,507 பூமியிலும் அவனே அல்லாஹ். அவன் உங்களின் இரகசியத்தையும், வெளிப்படையானதையும் அறிகிறான். நீங்கள் செய்பவற்றையும் அவன் அறிகிறான்.

4. தம் இறைவனது சான்றுகளில் ஏதேனும் ஒரு சான்று அவர்களிடம் வந்தால் அதை அவர்கள் புறக்கணிக்காமல் இருப்பதில்லை.

5. உண்மை அவர்களிடம் வந்தபோது அதை அவர்கள் பொய்யெனக் கருதினர். அவர்கள் கேலி செய்து கொண்டிருந்தது குறித்த விபரங்கள் பின்னர் அவர்களிடம் வந்து சேரும்.

6. இவர்களுக்கு முன் எத்தனையோ தலைமுறையினரை அழித்திருக்கிறோம் என்பதை இவர்கள் அறியவில்லையா? உங்களுக்குச் செய்து தராத வசதிகளை அவர்களுக்குப் பூமியில் செய்து கொடுத்திருந்தோம். வானத்தை507 அவர்கள் மீது தொடர்ந்து மழைபொழியச் செய்தோம். அவர்களுக்குக் கீழ் ஆறுகளை ஓடச் செய்தோம். அவர்களது பாவங்களின் காரணமாக அவர்களை அழித்தோம். அவர்களுக்குப் பின்னர் வேறு தலைமுறையினரை உருவாக்கினோம்.

7. (முஹம்மதே!) காகிதத்தில் எழுதப்பட்ட152 வேதத்தை உமக்கு நாம் அருளியிருந்து அதைத் தம் கைகளால் தொட்டுப் பார்த்தாலும்312 "இது வெளிப்படையான சூனியத்தைத்357 தவிர வேறு இல்லை'' என்று (ஏகஇறைவனை) மறுப்போர் கூறியிருப்பார்கள்.

8. "இவருடன் வானவர் இறக்கப்பட்டிருக்க வேண்டாமா?'' என அவர்கள் கூறுகின்றனர்.154 வானவரை நாம் அனுப்பியிருந்தால்153 காரியம் முடிக்கப்பட்டிருக்கும். பின்னர் அவர்கள் அவகாசம் அளிக்கப்பட்டிருக்க மாட்டார்கள்.

9. வானவரை அனுப்புவதாக வைத்துக் கொண்டாலும் அவரை மனிதராகவே ஆக்கியிருப்போம். எதில் குழம்பிப் போனார்களோ அதே குழப்பத்தை (அப்போது மீண்டும்) ஏற்படுத்தியிருப்போம்.154

10. (முஹம்மதே!) உமக்கு முன் பல தூதர்கள் கேலி செய்யப்பட்டனர். எதைக் கேலி செய்தார்களோ அதுவே கேலி செய்தவர்களைச் சூழ்ந்தது.

11. "பூமியில் பயணம் செய்து, பொய்யெனக் கருதியோரின் முடிவு எவ்வாறு இருந்தது? என்பதைச் சிந்தியுங்கள்!'' என்று கூறுவீராக!

12. "வானங்களிலும், பூமியிலும் உள்ளவை யாருக்குரியன?'' என்று கேட்பீராக! அல்லாஹ்வுக்கே எனக் கூறுவீராக! அருள் புரிவதைத் தன் மீது அவன் கடமையாக்கிக் கொண்டான். கியாமத் நாளில்1 அவன் உங்களைத் திரட்டுவான். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. தமக்கே நட்டத்தை ஏற்படுத்திக் கொண்டோர் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.

13. பகலிலும், இரவிலும் வாழ்பவை அவனுக்கே உரியன. அவன் செவியுறுபவன்;488 அறிந்தவன்.

14. "வானங்களையும், பூமியையும் படைத்த அல்லாஹ்வையன்றி வேறு பொறுப்பாளனை ஏற்படுத்திக் கொள்வேனா? அவனே உணவளிக்கிறான்.463 அவன் உணவளிக்கப்படுவதில்லை'' என்று கூறுவீராக! "கட்டுப்பட்டு நடப்போரில் முதலாமவனாக இருக்குமாறும் இணை கற்பித்தோரில் ஒருவனாக ஆகிவிடக்கூடாது என்றும் கட்டளையிடப்பட்டுள்ளேன்'' எனவும் கூறுவீராக!

15. "என் இறைவனுக்கு நான் மாறுசெய்தால் மகத்தான நாளின்1 வேதனையை அஞ்சுகிறேன்'' எனக் கூறுவீராக!

16. அந்நாளில்1 வேதனையிலிருந்து காக்கப்படுவோர்க்கே அவன் அருள் புரிந்தான். அதுவே தெளிவான வெற்றி.

17. அல்லாஹ் உமக்குத் துன்பத்தை ஏற்படுத்தினால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. அவன் உமக்கு நன்மையை ஏற்படுத்தி விட்டால் அவன் அனைத்துப் பொருட்களின் மீது ஆற்றலுடையவன்.

18. அவனே தன் அடியார்கள் மீது ஆதிக்கம் செலுத்துபவன்; அவன் ஞானமுள்ளவன்; நன்கறிந்தவன்.

19. "மிகப் பெரும் சாட்சியம் எது?'' என்று (முஹம்மதே!) கேட்பீராக! "எனக்கும், உங்களுக்குமிடையே அல்லாஹ்வே சாட்சியாளன். இந்தக் குர்ஆன் மூலம் உங்களையும், இதை அடைவோரையும் நான் எச்சரிக்கை செய்வதற்காக இது எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது''187 எனக் கூறுவீராக! "அல்லாஹ்வுடன் வேறு கடவுள்கள் இருப்பதாக சாட்சி கூறுகிறீர்களா? நான் (அவ்வாறு) சாட்சி கூற மாட்டேன்'' என்று நீர் கூறுவீராக! "வணக்கத்திற்குரியவன் அவன் ஒருவனே. நீங்கள் இணை கற்பிப்பவற்றை விட்டும் நான் விலகிக் கொண்டவன்'' எனவும் கூறுவீராக!

20. நாம் யாருக்கு வேதத்தை வழங்கினோமோ அவர்கள் தமது பிள்ளைகளை அறிவது போல் இவரை (முஹம்மதை) அறிவார்கள்.25 தமக்கே நட்டத்தை ஏற்படுத்திக் கொண்டோர் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.

21. அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுபவனை விட அல்லது அவனது வசனங்களைப் பொய்யெனக் கருதுபவனை விட அநீதி இழைத்தவன் யார்? அநீதி இழைத்தோர் வெற்றி பெற மாட்டார்கள்.

22. அவர்கள் அனைவரையும் நாம் ஒன்று சேர்க்கும் நாளில்1 "நீங்கள் கற்பனை செய்த உங்கள் தெய்வங்கள் எங்கே?'' என்று இணை கற்பித்தோரிடம் கேட்போம்.

23. "எங்கள் இறைவனாகிய அல்லாஹ்வின் மீது ஆணையாக! நாங்கள் இணை கற்பித்தோராக இருக்கவில்லை'' என்று கூறுவதைத் தவிர வேறு எதுவும் அவர்களின் பதிலாக இருக்காது.

24. தமக்கெதிராக அவர்கள் எவ்வாறு பொய் கூறுகின்றனர் என்பதைக் கவனிப்பீராக! அவர்கள் கற்பனை செய்த யாவும் அவர்களை விட்டு மறைந்து போகும்.

25. (முஹம்மதே!) உம்மிடம் (வந்து) செவிமடுப்போரும் அவர்களில் உள்ளனர். அதைப் புரிந்து கொள்ளாத வகையில் அவர்களின் உள்ளங்கள் மீது மூடிகளையும், காதுகளில் செவிட்டுத் தன்மையையும் ஏற்படுத்தி விட்டோம். அத்தனை சான்றுகளையும் அவர்கள் பார்த்தாலும் அதை நம்ப மாட்டார்கள். (நம்மை) மறுப்போர் உம்மிடம் வரும்போது "இது முன்னோர்களின் கட்டுக்கதைகள் தவிர வேறில்லை'' எனக் கூறி உம்மிடம் தர்க்கம் செய்வார்கள்.

26. அவர்கள் அதை விட்டு தாமும் ஒதுங்கிக் கொண்டு, மற்றவர்களையும் தடுக்கின்றனர். அவர்கள் தம்மையே அழித்துக் கொள்கின்றனர். அவர்கள் உணர்வதில்லை.

27. நரகின் முன்னே அவர்கள் நிறுத்தப்படும்போது நீர் பார்ப்பீராயின் "நாங்கள் திரும்ப அனுப்பப்படலாகாதா? எங்கள் இறைவனின் வசனங்களைப் பொய்யெனக் கருதாமல், நம்பிக்கை கொண்டோராக ஆவோமே'' என்று கூறுவார்கள்.

28. மாறாக, இதற்கு முன் அவர்கள் மறைத்துக் கொண்டிருந்தது அவர்களுக்கு வெளிப்பட்டு விட்டது. அவர்கள் திரும்ப அனுப்பப்பட்டாலும் தடுக்கப்பட்டதையே மீண்டும் செய்வார்கள். அவர்கள் பொய்யர்களே.

29. "நமது இந்த உலக வாழ்வு தவிர வேறு வாழ்க்கை கிடையாது. நாங்கள் உயிர்ப்பிக்கப்படுவோர் அல்லர்'' என்று அவர்கள் கூறுகின்றனர்.

30. தமது இறைவன் முன் அவர்கள் நிறுத்தப்படும்போது நீர் பார்ப்பீராயின் "இது உண்மையல்லவா?'' என்று இறைவன் கேட்பான். "ஆம். எங்கள் இறைவன் மீது ஆணையாக! (உண்மையே)'' எனக் கூறுவார்கள். "நீங்கள் (என்னை) மறுத்துக் கொண்டிருந்ததால் வேதனையைச் சுவையுங்கள்!'' என்று (இறைவன்) கூறுவான்.

31. அல்லாஹ்வின் சந்திப்பைப்488 பொய்யெனக் கருதியோர் நட்டமடைந்து விட்டனர். திடீரென யுகமுடிவு நேரம்1 அவர்களிடம் வரும்போது "உலகில் வரம்பு மீறி நடந்து கொண்டதால் எங்களுக்குக் கேடு ஏற்பட்டு விட்டதே'' என்று கூறுவார்கள். தமது முதுகுகளில் அவர்கள் பாவங்களைச் சுமப்பார்கள்.265 கவனத்தில் கொள்க! அவர்கள் சுமப்பது மிகக் கெட்டது.

32. இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

33. (முஹம்மதே!) அவர்கள் கூறுவது உம்மைக் கவலையில் ஆழ்த்துவதை அறிவோம். அவர்கள் உம்மைப் பொய்யரெனக் கூறவில்லை. மாறாக அநீதி இழைத்தோர் அல்லாஹ்வின் வசனங்களையே மறுக்கின்றனர்.

34. (முஹம்மதே!) உமக்கு முன் சென்ற தூதர்கள் பொய்யரெனக் கருதப்பட்டுள்ளனர். அவர்கள் பொய்யரெனக் கருதப்பட்டதையும், தொல்லைப்படுத்தப்பட்டதையும் சகித்துக் கொண்டனர். முடிவில் அவர்களுக்கு நமது உதவி வந்தது. அல்லாஹ்வின் வார்த்தைகளை மாற்றுபவன் யாருமில்லை.30 தூதர்கள் பற்றிய செய்தி உமக்கு (ஏற்கனவே) வந்துள்ளது.

35. (முஹம்மதே!) அவர்களின் புறக்கணிப்பு உமக்குப் பெரிதாகத் தெரிந்தால் உமக்கு முடியுமானால் பூமியில் சுரங்கத்தை ஏற்படுத்தி, அல்லது வானத்தில்507 ஏணியை அமைத்து அவர்களிடம் அற்புதத்தைக் கொண்டு வாரும்! அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களை நேர்வழியில் ஒன்று சேர்த்திருப்பான்.81 அறியாதவராக நீர் ஆகி விடாதீர்!

36. செவியேற்பவர்களே பதிலளிக்க முடியும். இறந்தவர்களை அல்லாஹ் உயிர்ப்பிப்பான். பின்னர் அவனிடமே அவர்கள் கொண்டு செல்லப்படுவார்கள்.

37. "இவரது இறைவனிடமிருந்து இவருக்கு அற்புதம் அருளப்பட்டிருக்க வேண்டாமா?'' என்று அவர்கள் கேட்கின்றனர். "அற்புதத்தை அருளிட அல்லாஹ்வே ஆற்றலுடையவன்'' எனக் கூறுவீராக! எனினும் அவர்களில் அதிகமானோர் அறிந்து கொள்வதில்லை.

38. பூமியில் வாழும் எந்த உயிரினமானாலும், தமது இறக்கைகளால் பறந்து செல்லும் எந்தப் பறவையானாலும் அவை உங்களைப் போன்ற சமுதாயங்களே. அந்தப் புத்தகத்தில் எந்த ஒன்றையும் நாம் விட்டுவிடவில்லை.157 பின்னர் அவர்கள் தம் இறைவனிடம் ஒன்று திரட்டப்படுவார்கள்.

39. நமது வசனங்களைப் பொய்யெனக் கருதியோர் செவிடர்களாவர்; ஊமைகளாவர். இருள்களில்303 அவர்கள் உள்ளனர். தான் நாடியோரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டு விடுகிறான். தான் நாடியோரை நேரான பாதையில் செலுத்துகிறான்.

40. "உங்களிடம் அல்லாஹ்வின் வேதனை வந்தால் அல்லது யுகமுடிவு நேரம்1 வந்து விட்டால் அல்லாஹ் அல்லாதவர்களையா அழைப்பீர்கள்? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் பதில் சொல்லுங்கள்!'' என்று கேட்பீராக!

41. மாறாக அவனையே அழைக்கிறீர்கள். நீங்கள் இணை கற்பித்தவர்களை மறந்து விடுகிறீர்கள். அவன் நாடினால் அவனை எதற்காக அழைத்தீர்களோ அதை நீக்கி விடுகிறான். 

42. (முஹம்மதே!) உமக்கு முன் சென்ற சமுதாயங்களுக்கும் தூதர்களை அனுப்பினோம். அவர்கள் பணிவதற்காக அவர்களை வறுமையாலும், நோயாலும் தண்டித்தோம்.

43. அவர்களுக்கு நமது வேதனை வந்ததும் அவர்கள் பணிந்திருக்க வேண்டாமா? மாறாக அவர்களின் உள்ளங்கள் இறுகி விட்டன. அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றை ஷைத்தான் அவர்களுக்கு அழகாக்கிக் காட்டினான்.

44. அவர்களுக்குக் கூறப்பட்ட அறிவுரையை அவர்கள் மறந்தபோது, அவர்களுக்கு அனைத்துப் பொருட்களின் வாசல்களையும் திறந்து விட்டோம். அவர்களுக்கு வழங்கப்பட்டதில் மகிழ்ச்சியடைந்திருந்தபோது திடீரென அவர்களைத் தண்டித்தோம். அப்போது அவர்கள் நம்பிக்கை இழந்தனர்.

45. எனவே அநீதி இழைத்த கூட்டத்தினர் வேரறுக்கப்பட்டனர். அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.

46. "உங்கள் செவிப்புலனையும், பார்வைகளையும் அல்லாஹ் நீக்கி விட்டு, உங்கள் உள்ளங்கள் மீது முத்திரையிட்டால் அதைக் கொண்டு வருகின்ற அல்லாஹ் அல்லாத (வேறு) கடவுள் யாரேனும் உண்டா? என்பதற்குப் பதில் சொல்லுங்கள்!'' எனக் கேட்பீராக! சான்றுகளை எவ்வாறு விளக்குகிறோம் என்பதையும், பின்னர் அவர்கள் எவ்வாறு புறக்கணிக்கின்றனர் என்பதையும் கவனிப்பீராக!

47. "அல்லாஹ்வின் வேதனை திடீரென்று அல்லது பகிரங்கமாக உங்களிடம் வருமானால் அநீதி இழைத்த கூட்டத்தினர் தவிர (வேறு) யாரும் அழிக்கப்படுவார்களா? என்பதற்குப் பதில் சொல்லுங்கள்!'' என்று கேட்பீராக!158

48. நற்செய்தி கூறுவோராகவும், எச்சரிக்கை செய்வோராகவும் தவிர நாம் தூதர்களை அனுப்புவதில்லை. நம்பிக்கை கொண்டு, சீர்திருத்திக் கொள்வோருக்கு அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.

49. நமது வசனங்களைப் பொய்யெனக் கருதியோர் குற்றம் செய்து கொண்டிருந்ததால் வேதனை அவர்களை வந்தடையும்.

50. "அல்லாஹ்வின் கருவூலங்கள் என்னிடம் உள்ளன; மறைவானதை அறிவேன்; என்று உங்களிடம் கூற மாட்டேன். நான் வானவர் என்றும் உங்களிடம் கூற மாட்டேன். எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர (வேறெதனையும்) நான் பின்பற்றுவதில்லை'' என்று (முஹம்மதே!) கூறுவீராக! "குருடனும், பார்வையுடையவனும் சமமாவார்களா? சிந்திக்க மாட்டீர்களா?'' என்று கேட்பீராக!

51. "தமது இறைவனிடம், தாம் ஒன்று சேர்க்கப்படுவதை அஞ்சுவோருக்கு அவனன்றி பொறுப்பாளனோ, பரிந்துரைப்பவனோ17 இல்லை'' என்று இதன் மூலம் எச்சரிப்பீராக! இதனால் அவர்கள் (இறைவனை) அஞ்சுவர்.

52. தமது இறைவனின் திருப்தியை நாடி காலையிலும், மாலையிலும் அவனிடம் பிரார்த்திப்போரை நீர் விரட்டாதீர்! அவர்களைப் பற்றிய விசாரணையில் உமக்கு எந்தப் பொறுப்பும் இல்லை. உம்மைப் பற்றிய விசாரணையில் அவர்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை. எனவே அவர்களை நீர் விரட்டினால் அநீதி இழைத்தவராவீர்!

53. "நம்மில் இ(ந்த அற்பமான)வர்களுக்குத் தானா அல்லாஹ் அருள் புரிய வேண்டும்?'' என்று அவர்கள் கூறுவதற்காக அவர்களில் ஒருவர் மூலம் மற்றவரை இவ்வாறு சோதித்தோம்.484 நன்றி செலுத்துவோரை அல்லாஹ் நன்கறிந்தவன் அல்லவா?

54. (முஹம்மதே!) நமது வசனங்களை நம்புவோர் உம்மிடம் வந்தால் "உங்கள் மீது ஸலாம்159 உண்டாகட்டும். அருள் புரிவதைத் தன் மீது உங்கள் இறைவன் கடமையாக்கிக் கொண்டான். உங்களில் எவரேனும் அறியாமையின் காரணமாக தீமையைச் செய்து விட்டு, அதன் பின்னர் மன்னிப்புக் கேட்டு திருந்திக் கொண்டால் அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' எனக் கூறுவீராக!

55. குற்றவாளிகளின் பாதை தெளிவாகத் தெரிவதற்காக இவ்வாறே சான்றுகளைத் தெளிவுபடுத்துகிறோம்.

56. "அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்திப்போரை வணங்குவதை விட்டும் நான் தடுக்கப்பட்டுள்ளேன்'' என்று கூறுவீராக! "உங்கள் மனோ இச்சைகளைப் பின்பற்ற மாட்டேன். (பின்பற்றினால்) வழிதவறி விடுவேன். நேர்வழி பெற்றவனாக ஆகமாட்டேன்'' என்றும் கூறுவீராக!

57. "நான் என் இறைவனிடமிருந்து வந்த சான்றுடன் இருக்கிறேன். நீங்கள் அதைப் பொய்யெனக் கருதுகிறீர்கள். நீங்கள் அவசரப்படுவது என்னிடம் இல்லை. அதிகாரம் அல்லாஹ்வுக்கே தவிர (எவருக்கும்) இல்லை.234 அவன் உண்மையை உரைக்கிறான். தீர்ப்பளிப்போரில் அவன் மிகச் சிறந்தவன்'' என்றும் கூறுவீராக!

58. "நீங்கள் அவசரப்படுவது என்னிடம் இருந்திருந்தால் எனக்கும், உங்களுக்குமிடையே காரியம் முடிக்கப்பட்டிருக்கும். அநீதி இழைத்தவர்களை அல்லாஹ் அறிந்தவன்'' என்றும் கூறுவீராக!

59. மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும் அதை அறிய மாட்டார். தரையிலும், கடலிலும் உள்ளவற்றை அவன் அறிவான். ஓர் இலை கீழே விழுந்தாலும் அதை அவன் அறியாமல் இருப்பதில்லை. பூமியின் இருள்களில்303 உள்ள விதையானாலும், ஈரமானதோ காய்ந்ததோ ஆனாலும் தெளிவான ஏட்டில்157 இல்லாமல் இல்லை.

60. அவனே இரவில் உங்களைக் கைப்பற்றுகிறான். பகலில் நீங்கள் செய்வதை அறிகிறான். நிர்ணயிக்கப்பட்ட தவணை நிறைவு செய்யப்படுவதற்காக பகலில் உங்களை எழுப்புகிறான். உங்கள் மீளுதல் அவனிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான்.

61. அவனே தனது அடியார்கள் மீது ஆதிக்கம் செலுத்துபவன். உங்களுக்குப் பாதுகாவலர்களை160 அவன் அனுப்புகிறான். எனவே உங்களில் ஒருவருக்கு மரணம் ஏற்படும்போது நமது தூதர்கள்161 அவரைக் கைப்பற்றுகிறார்கள்.165 அவர்கள் (அப்பணியில்) குறை வைக்க மாட்டார்கள்.

62. பின்னர் அவர்களது உண்மையான அதிபதியாகிய அல்லாஹ்விடம் கொண்டு செல்லப்படுவார்கள். கவனத்தில் கொள்க! அவனுக்கே அதிகாரம் உள்ளது. அவன் விரைவாகக் கணக்கெடுப்பவன்.

63. "இதிலிருந்து அவன் எங்களைக் காப்பாற்றினால் நன்றி செலுத்துவோராக இருப்போம்'' என்று பணிவாகவும், இரகசியமாகவும் நீங்கள் அவனிடம் பிரார்த்தனை செய்யும்போது "தரை மற்றும் கடலின் இருள்களிலிருந்து303 உங்களைக் காப்பாற்றுபவன் யார்?'' என்று கேட்பீராக!

64. "இதிலிருந்தும், ஒவ்வொரு துன்பத்திலிருந்தும் அல்லாஹ்வே உங்களைக் காப்பாற்றுகிறான். பின்னர் நீங்கள் இணை கற்பிக்கிறீர்கள்'' என்றும் கூறுவீராக!

65. "உங்களுக்கு மேலே இருந்தோ, உங்களின் கால்களுக்குக் கீழே இருந்தோ உங்களுக்கு வேதனையை அனுப்பிடவும், உங்களைப் பல பிரிவுகளாக்கி ஒருவரின் கொடுமையை மற்றவர் சுவைக்கச் செய்திடவும் அவன் ஆற்றலுடையவன்'' என்றும் கூறுவீராக! அவர்கள் புரிந்து கொள்வதற்காகச் சான்றுகளை எவ்வாறு தெளிவுபடுத்துகிறோம் என்பதைக் கவனிப்பீராக! 

66. இது உண்மையாக இருந்தும் உமது சமுதாயத்தினர் பொய்யெனக் கருதுகின்றனர். "உங்களுக்கு நான் பொறுப்பாளன் அல்ல'' என்று கூறுவீராக!81

67. ஒவ்வொரு செய்திக்கும் நிகழ்வதற்கான நேரம் உள்ளது. பின்னர் அறிந்து கொள்வீர்கள்!

68. நமது வசனங்களில் (குறை காண்பதற்காக) மூழ்கிக் கிடப்பவர்களை நீர் காணும்போது அவர்கள் வேறு செய்தியில் மூழ்கும் வரை அவர்களைப் புறக்கணிப்பீராக! ஷைத்தான் உம்மை மறக்கச் செய்தால் நினைவு வந்த பின் அநீதி இழைத்த கூட்டத்துடன் நீர் அமராதீர்!

69. அவர்களைப் பற்றிய விசாரணையில் (இறைவனை) அஞ்சுவோருக்கு எந்தப் பங்கும் இல்லை. எனினும் அவர்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக அறிவுரை கூறுதல் (உங்களுக்கு) உள்ளது.

70. யார் தமது மார்க்கத்தை விளையாட்டாகவும், வீணாகவும் ஆக்கி, இவ்வுலக வாழ்க்கையும் அவர்களை மயக்கி விட்டதோ அவர்களை விட்டு விடுவீராக! தான் செய்தவற்றுக்கு ஒவ்வொருவரும் கூலி கொடுக்கப்படுவது பற்றி இதன் மூலம் அறிவுரை கூறுவீராக! அல்லாஹ்வையன்றி பொறுப்பாளனோ, பரிந்துரைப்பவனோ17 அவருக்கு இல்லை. அவர் அனைத்து வகை ஈட்டுத் தொகையை வழங்கினாலும் அவரிடம் பெற்றுக் கொள்ளப்படாது. அவர்கள் செய்தவற்றுக்கே கூலி கொடுக்கப்படுவார்கள். அவர்கள் (ஏகஇறைவனை) மறுத்துக் கொண்டிருந்ததால் சூடேற்றப்பட்ட பானமும், துன்புறுத்தும் வேதனையும் உண்டு.

71. "எங்களுக்கு நன்மையும், தீங்கும் செய்ய முடியாத அல்லாஹ் அல்லாதவர்களைப் பிரார்த்திப்போமா? அல்லாஹ் எங்களுக்கு நேர்வழி காட்டிய பின் வந்த வழியே திருப்பப்படுவோமா? (அவ்வாறு திரும்பினால்) 'எங்களிடம் வந்து விடு' என நேர்வழிக்கு அழைக்கும் நண்பர்கள் இருந்தும், பூமியில் ஷைத்தான்கள் யாரை வழிகெடுத்து குழப்பத்தில் தள்ளி விட்டார்களோ அவனைப் போல் ஆகி விடுவோம்'' எனக் கூறுவீராக! "அல்லாஹ்வின் வழியே நேர்வழி. அகிலத்தின் இறைவனுக்குக் கட்டுப்பட்டு நடக்குமாறு கட்டளையிடப்பட்டுள்ளோம்'' என்றும் கூறுவீராக!

72. தொழுகையை நிலைநாட்டுங்கள்! அவனையே அஞ்சுங்கள்! அவனிடமே ஒன்று சேர்க்கப்படுவீர்கள்!

73. அவனே வானங்களையும்,507 பூமியையும் தக்க காரணத்துடன் படைத்தான். 'ஆகு' என்று அவன் கூறும் நாளில் ஆகி விடும். அவனது சொல் உண்மையானது. ஸூர் ஊதப்படும் நாளில்1 ஆட்சி அவனுக்கே உரியது. மறைவானதையும், வெளிப்படையானதையும் அவன் அறிபவன்; அவன் ஞானமிக்கவன்; நன்கறிந்தவன்.

74. "சிலைகளைக் கடவுள்களாக நீர் கற்பனை செய்கிறீரா? உம்மையும், உமது சமூகத்தையும் தெளிவான வழிகேட்டில் இருப்பதாகவே நான் கருதுகிறேன்'' என்று இப்ராஹீம் தம் தந்தை ஆஸரிடம் கூறியதை நினைவூட்டுவீராக!

75. உறுதியான நம்பிக்கையாளராக இப்ராஹீம் ஆவதற்காக அவருக்கு வானங்கள்507 மற்றும் பூமியின் சான்றுகளை இவ்வாறே காட்டினோம்.

76. இரவு அவரை மூடிக்கொண்டபோது ஒரு நட்சத்திரத்தைக் கண்டு "இதுவே என் இறைவன்'' எனக் கூறினார். அது மறைந்தபோது "மறைபவற்றை நான் விரும்ப மாட்டேன்'' என்றார்.

77. சந்திரன் உதிப்பதை அவர் கண்டபோது "இதுவே என் இறைவன்'' என்றார். அது மறைந்தபோது "என் இறைவன் எனக்கு நேர்வழி காட்டாவிட்டால் வழிகெட்ட கூட்டத்தில் ஒருவனாக ஆகி விடுவேன்'' என்றார்.

78. சூரியன் உதிப்பதை அவர் கண்டபோது "இதுவே என் இறைவன்! இதுவே மிகப் பெரியது'' என்றார். அது மறைந்தபோது "என் சமுதாயமே! நீங்கள் இணை கற்பிப்பவற்றை விட்டு நான் விலகிக் கொண்டவன்'' எனக் கூறினார்.162

79. "வானங்களையும், பூமியையும் படைத்தவனை நோக்கி உண்மை வழியில் நின்றவனாக என் முகத்தைத் திருப்பி விட்டேன். நான் இணை கற்பித்தவனல்லன்'' (எனவும் கூறினார்)

80. அவரது சமுதாயத்தினர் அவரிடம் விவாதித்தனர். "அல்லாஹ் எனக்கு நேர்வழி காட்டிய நிலையில் அவனைப் பற்றி என்னிடம் விவாதிக்கிறீர்களா? நீங்கள் இணை கற்பித்தவற்றுக்கு அஞ்ச மாட்டேன். என் இறைவன் எதையேனும் நாடினாலன்றி (எனக்கு ஏதும் நேராது.) என் இறைவன், அறிவால் அனைத்துப் பொருட்களையும் சூழ்ந்திருக்கிறான். உணர மாட்டீர்களா?''

81. "அல்லாஹ் உங்களுக்குச் சான்றளிக்காதவைகளை அவனுக்கு இணையாக்குவதற்கு நீங்கள் அஞ்சாதபோது நீங்கள் இணை கற்பித்தவைகளுக்கு நான் எவ்வாறு அஞ்சுவேன்? நீங்கள் அறிந்தால் இரு கூட்டத்தினரில் அச்சமற்றிருக்க அதிகத் தகுதி படைத்தவர் யார்?'' (என்றும் அவர் கூறினார்.)

82. நம்பிக்கை கொண்டு, தமது நம்பிக்கையுடன் அநீதியைக் கலந்து விடாமல் இருப்போர்க்கே அச்சமற்ற நிலை உள்ளது. அவர்களே நேர்வழி பெற்றோர்.

83. இது நமது சான்றாகும். இப்ராஹீமின் சமுதாயத்திற்கு எதிராக இதை அவருக்கு வழங்கினோம். நாம் நாடியவருக்குத் தகுதிகளை உயர்த்துவோம். உமது இறைவன் ஞானமிக்கவன்; அறிந்தவன்.

84, 85, 86. அவருக்கு இஸ்ஹாக்கையும், யாகூபையும் வழங்கினோம். அனைவருக்கும் நேர்வழி காட்டினோம். அதற்கு முன் நூஹுக்கும், அவரது வழித்தோன்றல்களில் தாவூத், ஸுலைமான், அய்யூப், யூஸுஃப், மூஸா, ஹாரூன், ஸக்கரிய்யா, யஹ்யா, ஈஸா, இல்யாஸ், இஸ்மாயீல், அல்யஸஃ, யூனுஸ், லூத் ஆகியோருக்கும் நேர்வழி காட்டினோம். இவ்வாறே நன்மை செய்வோருக்குக் கூலி வழங்குவோம். அனைவரும் நல்லோர்கள். அனைவரையும் அகிலத்தாரை விடச் சிறப்பித்தோம்.26

87. அவர்களின் முன்னோரிலும், அவர்களது வழித் தோன்றல்களிலும், அவர்களது சகோதரர்களிலும் (பலரைத்) தேர்வு செய்து அவர்களை நேரான வழியில் செலுத்தினோம்.

88. இதுவே அல்லாஹ்வின் வழி. தனது அடியார்களில் தான் நாடியோரை இதன் மூலம் நேர்வழியில் செலுத்துகிறான். அவர்கள் இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த (நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும்.498

89. அவர்களுக்கு வேதத்தையும், அதிகாரத்தையும்,164 நபி எனும் தகுதியையும் அளித்தோம். அவர்கள் இதனை மறுத்தால் இதனை மறுக்காத ஒரு சமுதாயத்தை இதற்குப் பொறுப்பாளிகளாக்குவோம்.

90. அவர்களுக்கே அல்லாஹ் நேர்வழி காட்டினான். எனவே அவர்களின் வழியை (முஹம்மதே!) நீரும் பின்பற்றுவீராக! "இதற்காக உங்களிடம் எந்தக் கூலியையும் நான் கேட்கவில்லை; இது அகிலத்தாருக்கு அறிவுரை தவிர வேறில்லை'' எனக் கூறுவீராக! 

91. "எந்த மனிதருக்கும் அல்லாஹ் எதையும் அருளவில்லை'' என்று அவர்கள் கூறியதால் அல்லாஹ்வை மதிக்க வேண்டிய முறையில் அவர்கள் மதிக்கவில்லை. "ஒளியாகவும், மனிதர்களுக்கு நேர்வழியாகவும் மூஸா கொண்டு வந்த வேதத்தை அருளியவன் யார்?" என்று கேட்டு, 'அல்லாஹ்' எனக் கூறுவீராக! "அதை ஏடுகளாகவும் ஆக்கி வைத்திருக்கிறீர்கள்! அதைப் பகிரங்கப்படுத்துகிறீர்கள். அதிகமானதை மறைத்தும் வருகிறீர்கள்! நீங்களும், உங்கள் முன்னோர்களும் அறிந்திராதவை உங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.'' (என்றும் கூறுவீராக!) பின்னர் அவர்கள் மூழ்கிக் கிடப்பதில் விளையாடிக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களை விட்டு விடுவீராக!

92. இது, தாய் கிராமத்தை (மக்காவை)யும், அதைச் சுற்றியுள்ளவர்களையும் (முஹம்மதே!) நீர் எச்சரிப்பதற்காக நாம் அருளிய வேதம்.281 பாக்கியம் பெற்றதும், தனக்கு முன்சென்றவற்றை4 உண்மைப்படுத்துவதுமாகும். மறுமையை நம்புவோர் இதை நம்புகின்றனர். அவர்கள் தமது தொழுகையில் பேணுதலாகவும் உள்ளனர்.

93. அல்லாஹ்வின் பெயரால் பொய்யை இட்டுக்கட்டுபவன், தனக்கு (இறைவனிடமிருந்து) எதுவும் அறிவிக்கப்படாதிருந்தும் 'எனக்கு அறிவிக்கப்படுகிறது' எனக் கூறுபவன், 'அல்லாஹ் அருளியதைப் போல் நானும் இறக்குவேன்' என்று கூறுபவன் ஆகியோரை விட மிகவும் அநீதி இழைத்தவன் யார்? அநீதி இழைத்தோர் மரணத்தின் வேதனைகளில் இருக்கும்போது நீர் பார்ப்பீராயின் வானவர்கள்165 அவர்களை நோக்கித் தமது கைகளை விரிப்பார்கள். "உங்கள் உயிர்களை நீங்களே வெளியேற்றுங்கள்! அல்லாஹ்வின் பெயரால் உண்மையல்லாதவற்றை நீங்கள் கூறியதாலும், அவனது வசனங்களை நீங்கள் நிராகரித்ததாலும் இன்று166 இழிவு தரும் வேதனைக்கு உட்படுத்தப்படுகிறீர்கள்!'' (எனக் கூறுவார்கள்).

94. "உங்களுக்கு நாம் வழங்கியவற்றை உங்கள் முதுகுக்குப் பின்னால் விட்டுவிட்டு உங்களை ஆரம்பத்தில் நாம் படைத்தது போல் தன்னந்தனியாக நம்மிடம் வந்து விட்டீர்கள்! தெய்வங்கள் என்று நீங்கள் கருதிக் கொண்டிருந்த, உங்கள் பரிந்துரையாளர்களை17 நாம் உங்களுடன் காணவில்லையே? உங்களுக்கிடையே (உறவுகள்) முறிந்து விட்டன. நீங்கள் கற்பனை செய்தவை உங்களை விட்டும் மறைந்து விட்டன'' (என்று கூறப்படும்.)

95. அல்லாஹ்வே விதைகளையும், கொட்டைகளையும் வெடித்து முளைக்கச் செய்பவன். உயிரற்றதிலிருந்து441 உயிருள்ளதை வெளிப்படுத்துகிறான். உயிருள்ளதிலிருந்து உயிரற்றதை வெளிப்படுத்துபவன். அவனே அல்லாஹ். எவ்வாறு திசை திருப்பப்படுகிறீர்கள்?

96. அவனே காலைப் பொழுதை ஏற்படுத்துபவன். இரவை அமைதி தருவதாகவும், சூரியனையும் சந்திரனையும் காலம் காட்டியாகவும் அமைத்தான். இது மிகைத்தவனாகிய அறிந்தவனின் எற்பாடு.

97. தரை மற்றும் கடலின் இருள்களில்303 நீங்கள் வழியை அறிந்து கொள்வதற்காக உங்களுக்காக நட்சத்திரங்களை அவனே ஏற்படுத்தினான். அறிகின்ற சமுதாயத்திற்குச் சான்றுகளை விளக்கியுள்ளோம்.

98. அவனே உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்தான்.368 (உங்களுக்கு) தங்குமிடமும் ஒப்படைக்கப்படும் இடமும்167 உள்ளன. புரிந்து கொள்ளும் சமுதாயத்திற்குச் சான்றுகளை விளக்கியுள்ளோம்.

99. அவனே வானிலிருந்து தண்ணீரை இறக்கினான். அதன் மூலம் ஒவ்வொரு பொருளின் விளைச்சலையும் வெளிப்படுத்துகிறோம். அதிலிருந்து பசுமையான பயிர்களை வெளிப்படுத்துகிறோம். அடுக்கி வைக்கப்பட்ட தானியத்தை அப்பயிர்களில் வெளிப்படுத்துகிறோம். பேரீச்சை மரத்தின் பாளைகளில் தொங்கும் பழக்குலைகளையும், திராட்சைத் தோட்டங்களையும், ஒலிவமரம், மாதுளை ஆகியவற்றையும் (வெளிப்படுத்துகிறோம்.) அவ்விரண்டும் (தோற்றத்தில்) ஒன்றுபட்டதாகவும், (தன்மையில்) வேறுபட்டதாகவும் உள்ளன. அது பலன் கொடுக்கும்போது அதன் பலனையும், அது கனிவதையும் கவனியுங்கள்! நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.

100. ஜின்களை அல்லாஹ்வே படைத்திருக்கும்போது அவர்களை அவனுக்கு இணையாக்கி விட்டனர். அவனுக்கு ஆண் மக்களையும், பெண் மக்களையும் அறிவில்லாமல் கற்பனை செய்து விட்டனர். அவனோ தூயவன்.10 அவர்கள் வர்ணிப்பதை விட்டும் அவன் உயர்ந்து விட்டான்.

101. (அவன்) வானங்களையும்,507 பூமியையும் முன்மாதிரியின்றி படைத்தவன். அவனுக்கு மனைவி இல்லாத நிலையில் அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும்? அவனே எல்லாப் பொருட்களையும் படைத்தான். அவன் அனைத்துப் பொருட்களையும் அறிந்தவன்.

102. அவனே உங்கள் இறைவனாகிய அல்லாஹ். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அவன் ஒவ்வொரு பொருளையும் படைத்தவன். எனவே அவனையே வணங்குங்கள்! அவன் அனைத்துப் பொருட்களுக்கும் பொறுப்பாளன்.

103. அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான். அவன் நுட்பமானவன்; நன்கறிந்தவன்.21

104. "உங்கள் இறைவனிடமிருந்து சான்றுகள் உங்களிடம் வந்து விட்டன. அதைக் கவனிப்போருக்கு அது நன்மையாகும். அதைப் பார்க்காதிருப்போருக்கு அது கேடாகும். நான் உங்களுக்குக் காவலன் அல்லன்'' (என்று கூறுவீராக)

105. "(மற்றவர்களிடம்) கற்று விட்டுக் கூறுகிறீர்'' என்று அவர்கள் கூறுவதாலும், அறிகின்ற சமுதாயத்திற்கு இதைத் தெளிவுபடுத்திடவும் இவ்வாறே சான்றுகளை விளக்குகிறோம்.169

106. (முஹம்மதே!) உமது இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதை நீர் பின்பற்றுவீராக! அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. இணை கற்பிப்போரைப் புறக்கணிப்பீராக! 

107. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் இணை கற்பித்திருக்க மாட்டார்கள். உம்மை அவர்களுக்குக் காவலராக நாம் ஆக்கவில்லை. அவர்களுக்கு நீர் பொறுப்பாளரும் அல்லர்.81

108. அல்லாஹ்வையன்றி யாரிடம் அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ அவர்களை ஏசாதீர்கள்! அவர்கள் அறிவில்லாமல் வரம்பு மீறி அல்லாஹ்வை ஏசுவார்கள்.170 இவ்வாறே ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அவர்களது செயலை அழகாக்கிக் காட்டினோம். பின்னர் அவர்களின் மீளுதல் அவர்களின் இறைவனிடமே உள்ளது. அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவன் அவர்களுக்கு அறிவிப்பான்.

109. "எங்களிடம் அற்புதம் வந்தால் அதை நம்புவோம்'' என்று அல்லாஹ்வின் மீது உறுதியாக சத்தியம் செய்து அவர்கள் கூறுகின்றனர். அற்புதங்கள் அல்லாஹ்விடமே உள்ளன எனக் கூறுவீராக!269 "அது நிகழும்போது அவர்கள் நம்ப மாட்டார்கள்'' என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்?

110. அவர்கள் ஆரம்பத்தில் நம்பிக்கை கொள்ளாமல் இருந்தது போலவே அவர்களின் உள்ளங்களையும், பார்வைகளையும் புரட்டுவோம். அவர்களது அத்துமீறலில் அவர்களைத் தடுமாற விட்டு விடுவோம்

111. அவர்களிடம் வானவர்களை நாம் இறக்கினாலும், இறந்தோர் அவர்களுடன் பேசினாலும், ஒவ்வொரு பொருளையும் அவர்களின் கண்முன்னே நாம் ஒன்று திரட்டினாலும், அல்லாஹ் நாடினால் தவிர அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். எனினும் அவர்களில் அதிகமானோர் அறியாதவர்கள்.

112. இவ்வாறே மனிதர்களிலும், ஜின்களிலும் உள்ள ஷைத்தான்களை5 ஒவ்வொரு நபிக்கும் பகைவர்களாக ஆக்கினோம். ஏமாற்றுவதற்காக கவர்ச்சிகரமான சொற்களை அவர்களில் ஒருவர் மற்றவருக்கு அறிவிக்கின்றனர். உமது இறைவன் நாடியிருந்தால் அவர்கள் இதைச் செய்திருக்க மாட்டார்கள். அவர்கள் இட்டுக்கட்டுவதோடு அவர்களை விட்டு விடுவீராக!

113. மறுமையை நம்பாதோரின் உள்ளங்கள் அச்சொல்லைச் செவிமடுப்பதற்காகவும், அதை அவர்கள் பொருந்திக் கொள்வதற்காகவும், அவர்கள் செய்து வந்ததை(த் தொடர்ந்து) செய்வதற்காகவும் (இவ்வாறு ஆக்கினோம்)

114. தீர்ப்பளிப்பவனாக அல்லாஹ் அல்லாதவர்களையா தேடுவேன்?234 அவனே இவ்வேதத்தை தெளிவுபடுத்தப்பட்டதாக உங்களிடம் அருளினான். (முஹம்மதே!) நாம் யாருக்கு வேதத்தைக் கொடுத்தோமோ அவர்கள் "இது உமது இறைவனிடமிருந்து உண்மையை உள்ளடக்கியதாக அருளப்பட்டது'' என்பதை அறிவார்கள். எனவே சந்தேகப்படுபவராக நீர் ஆகி விடாதீர்!

115. உமது இறைவனின் வார்த்தை உண்மையாலும், நீதியாலும் நிறைந்துள்ளது. அவனது கட்டளைகளை155 மாற்றுபவன் எவனும் இல்லை.30 அவன் செவியுறுபவன்;488 அறிந்தவன்.

116. பூமியில் உள்ளவர்களில் அதிகமானோருக்கு (முஹம்மதே!) நீர் கட்டுப்பட்டால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையிலிருந்து வழிகெடுத்து விடுவார்கள். அவர்கள் ஊகத்தையே பின்பற்றுகின்றனர். அவர்கள் அனுமானம் செய்வோர் தவிர வேறு இல்லை.

117. "தனது பாதையை விட்டும் வழி தவறியவன் யார்?' என்பதை உமது இறைவன் நன்றாக அறிபவன். நேர்வழி பெற்றோரையும் அவன் மிக அறிபவன்.

118. நீங்கள் அல்லாஹ்வின் வசனங்களை நம்பியவர்களாக இருந்தால் அவன் பெயர் கூறப்பட்(டு அறுக்கப்பட்)டதை உண்ணுங்கள்!171

119. அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டதை நீங்கள் உண்ணாமல் இருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது?171 நீங்கள் நிர்பந்திக்கப்படும்431போது தவிர (மற்ற நேரங்களில்) உங்களுக்கு அவன் தடை செய்ததைத் தெளிவுபடுத்தி விட்டான்.42 அதிகமானோர் அறிவில்லாமல் தமது மனோ இச்சைகள் மூலம் வழிகெடுக்கின்றனர். வரம்பு மீறியோரை உமது இறைவன் மிக அறிந்தவன்.

120. பாவங்களில் வெளிப்படையானதையும், இரகசியமானதையும் விட்டு விடுங்கள்! பாவத்தைச் செய்தோர், தாம் செய்து வந்ததன் காரணமாகத் தண்டிக்கப்படுவார்கள்.

121. அல்லாஹ்வின் பெயர் கூறப்படாததை உண்ணாதீர்கள்!171 அது குற்றமாகும். உங்களுடன் தர்க்கம் செய்யுமாறு ஷைத்தான்கள் தமது தோழர்களுக்குக் கூறுகின்றனர். நீங்கள் அவர்களுக்குக் கட்டுப்பட்டால் நீங்கள் இணை கற்பிப்பவர்களே.

122. இறந்தவனை உயிர்ப்பித்து, மக்களிடையே நடந்து செல்வதற்காக அவனுக்கு ஒளியையும் ஏற்படுத்தினோமே அவன், இருள்களில்303 கிடந்து அதிலிருந்து வெளியேற முடியாமல் உள்ளவனைப் போல் ஆவானா? இவ்வாறே (நம்மை) மறுப்போருக்கு அவர்கள் செய்து வருபவை அழகாக்கப்பட்டுள்ளன.

123. இவ்வாறே ஒவ்வொரு ஊரிலும் அவ்வூரின் மிகப் பெரிய குற்றவாளிகளைச் சூழ்ச்சி செய்வோராக ஆக்கியுள்ளோம். அவர்கள் தமக்கெதிராகவே சூழ்ச்சி செய்கின்றனர். அவர்கள் உணர்வதில்லை.

124. அவர்களிடம் ஏதேனும் சான்று வருமானால் "அல்லாஹ்வின் தூதர்களுக்கு வழங்கப்பட்டது போல் எங்களுக்கும் வழங்கப்படும் வரை நம்பிக்கை கொள்ளவே மாட்டோம்'' என்று கூறுகின்றனர். "தனது தூதை எங்கே வைப்பது? (யாரிடம் கொடுப்பது)" என்பதை அல்லாஹ் மிக அறிந்தவன். குற்றம் செய்து கொண்டிருந்தோருக்கு அவர்கள் செய்து வந்த சூழ்ச்சியின் காரணமாக அல்லாஹ்விடமிருந்து சிறுமையும், கடும் வேதனையும் கிடைக்கும்.

125. ஒருவனுக்கு நேர்வழி காட்ட அல்லாஹ் நாடினால் அவனது உள்ளத்தை இஸ்லாத்திற்காக விரிவடையச் செய்கிறான். அவனை வழிதவறச் செய்ய நாடினால் அவனது உள்ளத்தை வானத்தில்507 ஏறிச் செல்பவனைப் போல் இறுக்கமாக்கி விடுகிறான்.172 இவ்வாறே நம்பிக்கை கொள்ளாதோருக்கு வேதனையை அல்லாஹ் வழங்குகிறான்.

126. இதுவே உமது இறைவனின் நேரான வழி. சிந்திக்கின்ற சமுதாயத்திற்காக சான்றுகளைத் தெளிவுபடுத்தி விட்டோம்.

127. அவர்களுக்குத் தமது இறைவனிடம் அமைதி இல்லம் இருக்கிறது. அவர்கள் செய்து கொண்டிருந்ததன் காரணமாக அவனே அவர்களின் பொறுப்பாளியாவான்.

128. அவர்கள் அனைவரையும் அவன் ஒன்று சேர்க்கும் நாளில்1 "ஜின்களின் கூட்டத்தினரே! அதிகமான மனிதர்களை வழிகெடுத்து விட்டீர்கள்'' (என்று கூறுவான்). அதற்கு மனிதர்களில் உள்ள அவர்களின் நண்பர்கள் "எங்கள் இறைவா! எங்களில் ஒருவர் மற்றவர் மூலம் பயனடைந்தனர். நீ எங்களுக்கு விதித்த கெடுவையும் அடைந்து விட்டோம்'' என்று கூறுவார்கள். "நரகமே உங்கள் தங்குமிடம். அதில் நிரந்தரமாக இருப்பீர்கள். அல்லாஹ் நாடுவதைத் தவிர''173 (என்று கூறுவான்.) உமது இறைவன் ஞானமிக்கவன்; அறிந்தவன்.

129. அநீதி இழைத்தோரின் செயல்களின் காரணமாக அவர்களில் ஒருவரை மற்றவருக்கு இவ்வாறே நண்பர்களாக ஆக்குவோம்.

130. ஜின், மனித சமுதாயமே! "உங்களுக்கு என் வசனங்களை எடுத்துக் கூறி இந்த நாளை1 நீங்கள் சந்திக்கவிருப்பதை உங்களுக்கு எச்சரிக்கை செய்யும் தூதர்கள் உங்களில் இருந்து உங்களிடம் வரவில்லையா?'' (என்று இறைவன் கேட்பான்). "எங்களுக்கு எதிராக நாங்களே சாட்சி கூறுகிறோம்'' என்று அவர்கள் கூறுவார்கள். இவ்வுலக வாழ்வு அவர்களை மயக்கி விட்டது. "(ஏகஇறைவனை) மறுத்தோராக இருந்தோம்'' எனத் தங்களுக்கு எதிராக அவர்கள் சாட்சியமளிப்பார்கள்.

131. ஊரார் கவனமின்றி இருக்கும் நிலையில் (அவர்கள் செய்த) அநியாயத்தின் காரணமாக அவ்வூராரை உமது இறைவன் அழிப்பதில்லை என்பதே இ(றைத் தூதர்களை அனுப்புவ)தற்குக் காரணம்.

132. ஒவ்வொருவருக்கும் அவர்கள் செய்தவற்றின் காரணமாகப் பல தகுதிகள் உள்ளன. அவர்கள் செய்வதை உமது இறைவன் கவனிக்காதவனாக இல்லை.

133. உமது இறைவன் தேவைகளற்றவன்;485 இரக்கமுள்ளவன். வேறு சமுதாயத்தின் வழித் தோன்றல்களிலிருந்து46 உங்களை உருவாக்கியது போல் அவன் நாடினால் உங்களைப் போக்கி விட்டு உங்களுக்குப் பின் அவன் நாடியதை உங்கள் இடத்துக்குக் கொண்டு வருவான்.

134. உங்களுக்கு எச்சரிக்கப்பட்டது வந்தே தீரும். நீங்கள் வெற்றி பெறுவோர் அல்லர்.

135. "என் சமுதாயமே! நீங்கள் உங்கள் வழியில் செயல்படுங்கள்! நானும் (எனது வழியில்) செயல்படுகிறேன். அவ்வுலகின் முடிவு யாருக்குச் சாதகமாக இருக்கும்? என்பதைப் பின்னர் அறிந்து கொள்வீர்கள். அநீதி இழைத்தோர் வெற்றி பெற மாட்டார்கள்'' என்று கூறுவீராக!

136. அல்லாஹ் உற்பத்தி செய்த பயிர்களிலும், கால்நடைகளிலும் அவனுக்கு ஒரு பங்கை ஏற்படுத்துகின்றனர். "இது அல்லாஹ்வுக்கு உரியது; இது எங்கள் தெய்வங்களுக்கு உரியது'' என்று அவர்களாகக் கற்பனை செய்து கூறுகின்றனர். அவர்களின் தெய்வங்களுக்கு உரியது, அல்லாஹ்வைச் சேராதாம். அல்லாஹ்வுக்கு உரியது, அவர்களின் தெய்வங்களைச் சேருமாம். அவர்கள் அளிக்கும் தீர்ப்பு மிகவும் கெட்டது.

137. இவ்வாறே இணை கற்பிப்போரில் அதிகமானோர் தமது குழந்தைகளைக் கொல்வதை அவர்களின் தெய்வங்கள் அழகாக்கிக் காட்டி, அவர்களை அழித்து, அவர்களது மார்க்கத்தையும் அவர்களுக்குக் குழப்பி விட்டன. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் இதைச் செய்திருக்க மாட்டார்கள். அவர்கள் இட்டுக்கட்டுவதோடு அவர்களை விட்டு விடுவீராக!

138. "இவை தடை செய்யப்பட்ட கால்நடைகளும், பயிர்களுமாகும். நாங்கள் நாடியோரைத் தவிர (மற்றவர்கள்) இதை உண்ண முடியாது'' என்று அவர்களாகக் கற்பனை செய்து கூறுகின்றனர். சில கால்நடைகளில் சவாரி செய்வது தடுக்கப்பட்டுள்ளது எனவும், சில கால்நடைகள் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூற மாட்டோம் எனவும் அவன் மீது இட்டுக்கட்டிக் கூறுகின்றனர். அவர்கள் இட்டுக்கட்டிக் கொண்டிருந்ததால் அவர்களை அவன் தண்டிப்பான்.
139. "இந்தக் கால்நடைகளின் வயிற்றில் உள்ளவை எங்களில் ஆண்களுக்கு மட்டுமே உரியவை. எங்களில் பெண்களுக்குத் தடுக்கப்பட்டவை. அவை இறந்தே பிறந்தால் அதில் அனைவரும் பங்காளிகள்'' எனவும் அவர்கள் கூறுகின்றனர். அவர்களின் இக்கூற்றுக்காக அவர்களை அவன் தண்டிப்பான். அவன் ஞானமிக்கவன்; அறிந்தவன்.

140. அறிவில்லாமல் மடமையின் காரணமாகத் தமது குழந்தைகளைக் கொன்றவர்களும்,487 அல்லாஹ்வின் பெயரால் இட்டுக்கட்டி, அல்லாஹ் தமக்கு வழங்கியதைத் தடுக்கப்பட்டதாக ஆக்கிக் கொண்டோரும் நட்டமடைந்தனர்; வழிகெட்டனர்; நேர்வழி பெறவில்லை.

141. படரவிடப்பட்ட, படரவிடப்படாத தோட்டங்களையும், பேரீச்சை மரங்களையும், மாறுபட்ட உணவான தானியங்களையும், (தோற்றத்தில்) ஒன்றுபட்டும் (தன்மையில்) வேறுபட்டும் உள்ள மாதுளை மற்றும் ஒலிவ மரங்களையும் அவனே படைத்தான். அவை பலன் தரும்போது அதன் பலனை உண்ணுங்கள்! அதை அறுவடை செய்யும் நாளில் அதற்குரிய (ஸகாத் எனும்) கடமையை வழங்கி விடுங்கள்! வீண் விரயம் செய்யாதீர்கள்! வீண் விரயம் செய்வோரை அவன் நேசிக்க மாட்டான்.

142. கால்நடைகளில் சுமப்பவற்றையும், சுமக்காதவற்றையும் (அவன் படைத்தான்). அல்லாஹ் உங்களுக்கு வழங்கியதிலிருந்து உண்ணுங்கள்! ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்! அவன் உங்களுக்குப் பகிரங்க எதிரியாவான்.

143. "(பலியிடும் பிராணிகளில்) எட்டு வகைகள் உள்ளன. செம்மறியாட்டில் (ஆண் பெண் என) இரண்டு, வெள்ளாட்டில் இரண்டு உள்ளன. (இவற்றில்) ஆண் பிராணிகளையா (இறைவன்) தடுத்திருக்கிறான்? அல்லது பெண் பிராணிகளையா? அல்லது பெண் பிராணிகளின் கருவில் உள்ளவற்றையா? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அறிவுடன் எனக்கு விளக்குங்கள்!'' எனக் கேட்பீராக!

144. "ஒட்டகத்தில் இரண்டு, மாட்டில் இரண்டு உள்ளன. இவற்றில் ஆண் பிராணிகளையா தடை செய்திருக்கிறான்? அல்லது பெண் பிராணிகளையா? அல்லது பெண் பிராணிகளின் கருவில் உள்ளவைகளையா?'' என்று கேட்பீராக! இவ்வாறு அல்லாஹ் உங்களுக்குக் கூறியபோது நீங்கள் சாட்சிகளாக இருந்தீர்களா? அறிவின்றி மக்களை வழிகெடுப்பதற்காக அல்லாஹ்வின் பெயரால் பொய்யை இட்டுக்கட்டுவோரை விட மிகப் பெரிய அநீதி இழைத்தோர் யார்? அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்டமாட்டான்.

145. "தாமாகச் செத்தது, ஓட்டப்பட்ட இரத்தம், அசுத்தமாகிய பன்றியின் இறைச்சி,407 அல்லாஹ் அல்லாதோருக்காக சப்தமிடப்பட்ட42 பாவமான(உண)வை தவிர வேறு எதுவும் மனிதர் உண்பதற்குத் தடை செய்யப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்ட செய்தியில் நான் காணவில்லை'' என்று கூறுவீராக! யாரேனும் வரம்பு மீறாமலும், வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப்பட்டால்431 உமது இறைவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.171

146. குளம்பு மற்றும் நகங்களுக்கிடையே பிளவில்லாத ஒவ்வொன்றையும் யூதர்களுக்குத் தடை செய்திருந்தோம். ஆடு, மாடு ஆகியவற்றின் கொழுப்புகளில் அவற்றின் முதுகுகள் அல்லது சிறு குடல்கள் சுமந்திருப்பவை, அல்லது எலும்புடன் கலந்து விட்டவை தவிர மற்றவைகளை (கொழுப்புகளை) அவர்களுக்குத் தடை செய்திருந்தோம். அவர்கள் அநீதி இழைத்ததற்காக இவ்வாறு நாம் தண்டித்தோம். நாம் உண்மையே கூறுகிறோம்.

147. (முஹம்மதே!) அவர்கள் உம்மைப் பொய்யரெனக் கருதினால் "உங்கள் இறைவன் விசாலமான அருளுக்குரியவன்; (ஆயினும்) குற்றவாளிகளான கூட்டத்திற்கு அவனது வேதனை தடுக்கப்படாது'' எனக் கூறுவீராக!

148. "அல்லாஹ் நாடியிருந்தால் நாங்களும், எங்கள் முன்னோர்களும் இணைகற்பித்திருக்க மாட்டோம். எதையும் தடுக்கப்பட்டதாக ஆக்கியிருக்கவும் மாட்டோம்'' என்று இணைகற்பிப்போர் கூறுகின்றனர். இவ்வாறே அவர்களுக்கு முன் சென்றோரும் பொய்யெனக் கருதினர். முடிவில் நமது வேதனையை அனுபவித்தார்கள். "உங்களிடம் (இது பற்றிய) விபரம் உண்டா? (இருந்தால்) அதை எங்களுக்குக் காட்டுங்கள்! ஊகத்தையே பின்பற்றுகிறீர்கள்! நீங்கள் அனுமானம் செய்வோர் தவிர வேறில்லை'' என்று கேட்பீராக! 

149. "முழுமையான சான்று அல்லாஹ்வுக்கே உரியது'' என்று கூறுவீராக! அவன் நாடியிருந்தால் உங்கள் அனைவருக்கும் நேர்வழி காட்டியிருப்பான்.

150. "அல்லாஹ்வே இதைத் தடை செய்தான் என சாட்சியமளிக்கும் உங்கள் சாட்சிகளைக் கொண்டு வாருங்கள்!'' என்று கேட்பீராக! அவர்கள் (பொய்யாக) சாட்சியமளித்தால் அவர்களுடன் சேர்ந்து நீரும் சாட்சியமளிக்காதீர்! நமது வசனங்களைப் பொய்யெனக் கருதி, மறுமையை நம்பாதோரின் மனோஇச்சைகளைப் பின்பற்றாதீர்! அவர்கள் தம் இறைவனுக்கு (மற்றவர்களை) சமமாக்குகின்றனர்.

151. "வாருங்கள்! உங்கள் இறைவன் உங்களுக்குத் தடை செய்ததைக் கூறுகிறேன்'' என்று (முஹம்மதே!) கூறுவீராக! அது, "நீங்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்கக் கூடாது'' என்பதே. பெற்றோருக்கு உதவுங்கள்! வறுமையின் காரணமாக உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்!487 உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம்.463 வெட்கக்கேடான காரியங்களில் வெளிப்படையானதையும், இரகசியமானதையும் நெருங்காதீர்கள்! அல்லாஹ் தடை செய்துள்ளதால் எவரையும் (அதற்கான) உரிமை இருந்தால் தவிர கொல்லாதீர்கள்! நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக இதையே அவன் உங்களுக்கு வலியுறுத்துகிறான்.

152. அனாதையின் செல்வத்தை அவன் பருவமடையும் வரை அழகிய முறையில் தவிர நெருங்காதீர்கள்! அளவையும், நிறுவையையும் நேர்மையாக நிறைவேற்றுங்கள்! எவரையும் அவரது சக்திக்கு மேல் சிரமப்படுத்த மாட்டோம்.68 உறவினராகவே இருந்தாலும் பேசும்போது நீதியையே பேசுங்கள்! அல்லாஹ்வின் ஒப்பந்தத்தை நிறைவேற்றுங்கள்! நீங்கள் படிப்பினை பெறுவதற்காக அவன் இதையே உங்களுக்கு வலியுறுத்துகிறான்.

153. இதுவே எனது நேரான வழி. எனவே இதனையே பின்பற்றுங்கள்! பல வழிகளைப் பின்பற்றாதீர்கள்! அவை, அவனது (ஒரே) வழியை விட்டும் உங்களைப் பிரித்து விடும். நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக இதையே அவன் உங்களுக்கு வலியுறுத்துகிறான்.

154. பின்னர் தமது இறைவனின் சந்திப்பை அவர்கள் நம்புவதற்காக மூஸாவுக்கு வேதத்தை அருளினோம். அது, நன்மை செய்தோருக்கு (நன்மையை) நிறைவு செய்வதாகவும், ஒவ்வொன்றையும் தெளிவுபடுத்துவதாகவும், நேர்வழியாகவும், அருளாகவும் இருந்தது.

155. இது நாம் அருளிய பாக்கியம் பொருந்திய வேதம். எனவே இதைப் பின்பற்றுங்கள்! (நம்மை) அஞ்சுங்கள்! அருள் செய்யப்படுவீர்கள்!

156, 157. "எங்களுக்கு முன் இரண்டு சமுதாயங்களுக்கே வேதம் அருளப்பட்டது; நாங்கள் அதைப் படிக்கத் தெரியாமல் இருந்தோம்'' என்றும், "எங்களுக்கு வேதம் அருளப்பட்டிருந்தால் அவர்களை விட நேர்வழி பெற்றிருப்போம்'' என்றும் நீங்கள் கூறாதிருப்பதற்காக (இவ்வேதத்தை அருளினோம்). உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான சான்றும், நேர்வழியும் அருளும் வந்து விட்டன. அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்யெனக் கருதிப் புறக்கணித்தவனை விட அநீதி இழைத்தவன் யார்? நமது வசனங்களைப் புறக்கணிப்போருக்கு அவர்கள் புறக்கணித்து வந்த காரணத்தினால் கடுமையான வேதனையை அளிப்போம்.26

158. (முஹம்மதே!) வானவர்கள் அவர்களிடம் வருவதை,153 அல்லது உமது இறைவன் வருவதை,61 அல்லது உமது இறைவனின் சில சான்றுகள் வருவதைத்தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்களா? உமது இறைவனின் சில சான்றுகள் வரும் நாளில், ஏற்கனவே நம்பிக்கை கொண்டவர்களையும், நம்பிக்கையோடு நல்லறங்களைச் செய்தவர்களையும் தவிர எவருக்கும் அவரது நம்பிக்கை பயன் தராது.384 "நீங்களும் எதிர்பாருங்கள்! நாங்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்'' எனக் கூறுவீராக!

159. தமது மார்க்கத்தைப் பிரித்து, பல பிரிவுகளானோரின் எந்தக் காரியத்திலும் (முஹம்மதே!) உமக்குச் சம்மந்தம் இல்லை. அவர்களின் விஷயம் அல்லாஹ்விடமே உள்ளது. பின்னர் அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவன் அவர்களுக்கு அறிவிப்பான்.

160. நன்மை செய்தவருக்கு அது போன்ற பத்து மடங்கு உண்டு. தீமை செய்தவர், தீமையின் அளவே தண்டிக்கப்படுவார். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.

161. "எனக்கு என் இறைவன் நேரான பாதையைக் காட்டி விட்டான். அது நேரான மார்க்கம். உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கம். அவர் இணை கற்பித்தவராக இருக்கவில்லை'' என்று கூறுவீராக!

162, 163. "எனது தொழுகை, எனது வணக்கமுறை, எனது வாழ்வு, எனது மரணம் யாவும் அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரியன; அவனுக்கு நிகரானவன் இல்லை; இவ்வாறே நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்; முஸ்லிம்களில்295 நான் முதலாமவன்'' என்றும் கூறுவீராக!26

164. "அல்லாஹ் அல்லாதவர்களையா இறைவனாகக் கருதுவேன்? அவனே அனைத்துப் பொருட்களின் இறைவன். (பாவம் செய்யும்) எவரும் தமக்கு எதிராகவே சம்பாதிக்கிறார். ஒருவன் மற்றவனின் சுமையைச் சுமக்க மாட்டான்.265 பின்னர் உங்கள் இறைவனிடமே உங்கள் மீளுதல் உள்ளது. நீங்கள் முரண்பட்டது பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான்'' என்றும் கூறுவீராக!

165. அவனே உங்களைப் பூமியில் வழித்தோன்றல்களாக46 ஆக்கினான். அவன் உங்களுக்கு வழங்கியவற்றில் உங்களைச் சோதித்துப் பார்ப்பதற்காக484 உங்களில் சிலரை விட சிலருக்குத் தகுதிகளை உயர்த்தினான். உமது இறைவன் விரைவாகத் தண்டிப்பவன்; அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.To read this Chapter in English click here.

(14வது பதிப்பின்படி திருத்தி அமைக்கப்பட்டது)

July 23, 2009, 8:44 PM

அத்தியாயம் : 7

அத்தியாயம் : 7
அல் அஃராப் - தடுப்புச் சுவர்

மொத்த வசனங்கள் : 206
சொர்க்கத்துக்கும், நரகத்துக்கும் இடையே அகலமான தடுப்புச் சுவர் ஒன்று இருக்கும். செர்க்கத்திற்கும் நரகத்திற்கும் அனுப்பப்படாத சிலர் அதில் தங்க வைக்கப்படுவார்கள். அந்தத் தடுப்புச் சுவர் தான் அஃராப் எனப்படுகிறது.
இது பற்றி இந்த அத்தியாயத்தில் 46, 47, 48, 49 ஆகிய வசனங்கள் கூறுவதால் இந்த அத்தியாயம் அஃராப் என்று பெயர் பெற்றது.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

1. அலிஃப், லாம், மீம், ஸாத்.2

2. (இது) வேதம். நம்பிக்கை கொண்டோருக்கு அறிவுரையாகவும், இதன் மூலம் (முஹம்மதே!) நீர் எச்சரிப்பதற்காகவும் உமக்கு இது அருளப்பட்டது. எனவே இதனால் உமது உள்ளத்தில் கலக்கம் ஏற்பட வேண்டாம். 

3. உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்!

4. எத்தனையோ ஊர்களை அழித்திருக்கிறோம். அவ்வூர்களுக்கு நமது வேதனை இரவு நேரத்திலோ, முற்பகலில் அவர்கள் தூங்கும் போதோ வந்து சேர்ந்தது.

5. நமது வேதனை அவர்களிடம் வந்தபோது "நாம் அநீதி இழைத்து விட்டோம்'' என்று கூறுவதைத் தவிர வேறு ஏதும் அவர்களின் கூப்பாடாக இருக்கவில்லை.

6. யாருக்குத் தூதர்கள் அனுப்பப்பட்டார்களோ அவர்களையும் விசாரிப்போம். தூதர்களையும் விசாரிப்போம்.

7. (நமக்குத்) தெரியும் என்பதால் அவர்களுக்கு விளக்குவோம். நாம் கவனிக்காமல் இல்லை.

8. அந்நாளில்1 மதிப்பீடு செய்தல் உண்மை. (நன்மையின்) எடைகள் கனமாக இருப்போரே வெற்றி பெற்றோர்.

9. (நன்மையின்) எடைகள் இலேசாக இருப்போர் தமக்கே நட்டத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள். நமது வசனங்கள் விஷயத்தில் அநீதியாக அவர்கள் நடந்து கொண்டதே இதற்குக் காரணம்.

10. பூமியில் உங்களை வாழச் செய்திருக்கிறோம்.175 உங்களுக்கு வசதி வாய்ப்புகளையும் அதில் ஏற்படுத்தினோம். குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள்!

11. உங்களைப் படைத்தோம். பின்னர் உங்களை வடிவமைத்தோம். பின்னர் "ஆதமுக்குப் பணியுங்கள்!''11 என்று வானவர்களுக்குக் கூறினோம். இப்லீஸைத் தவிர அனைவரும் பணிந்தனர். அவன் பணிந்தவர்களில் ஒருவனாக இல்லை.

12. "நான் உனக்குக் கட்டளையிட்டபோது பணிவதை11 விட்டும் உன்னைத் தடுத்தது எது?'' என்று (இறைவன்) கேட்டான். "நான் அவரை விடச் சிறந்தவன். என்னை நீ நெருப்பால் படைத்தாய்! அவரைக் களிமண்ணால்503 படைத்தாய்!'' என்று கூறினான்.506

13. "இங்கிருந்து நீ இறங்கி விடு! இங்கே நீ பெருமையடிப்பது தகாது. எனவே வெளியேறு! நீ சிறுமையடைந்தவனாவாய்'' என்று (இறைவன்) கூறினான்.

14. "அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள்1 வரை எனக்கு அவகாசம் அளிப்பாயாக!'' என்று அவன் கேட்டான்.

15. "நீ அவகாசம் அளிக்கப்பட்டவனாவாய்'' என்று (இறைவன்) கூறினான்.

16. "நீ என்னை வழிகெட்டவனாக ஆக்கியதால் அவர்களுக்காக உனது நேரான பாதையில் அமர்ந்து கொள்வேன்'' என்று கூறினான்.

17. "பின்னர் அவர்களின் முன்னும், பின்னும், வலமும், இடமும் அவர்களிடம் வருவேன். அவர்களில் அதிகமானோரை நன்றி செலுத்துவோராக நீ காண மாட்டாய்'' (என்றும் கூறினான்).

18. "இழிவுபடுத்தப்பட்டவனாகவும், விரட்டப்பட்டவனாகவும் இங்கிருந்து வெளியேறி விடு! (மனிதர்களாகிய) அவர்களிலும் (ஜின்களாகிய) உங்களிலும் உன்னைப் பின்பற்றுவோர் அனைவரையும் போட்டு நரகத்தை நிரப்புவேன்'' என்று (இறைவன்) கூறினான்.

19. "ஆதமே! நீயும் உமது மனைவியும் இந்தச் சொர்க்கத்தில்12 தங்குங்கள்! விரும்பியவாறு இருவரும் உண்ணுங்கள்! இந்த மரத்தை13 நெருங்காதீர்கள்! (நெருங்கினால்) இருவரும் அநீதி இழைத்தவர்களாகி விடுவீர்கள்'' (என்றும் கூறினான்)

20. அவ்விருவருக்கும் மறைக்கப்பட்டிருந்த வெட்கத்தலங்களைப் பற்றிப் புரிய வைப்பதற்காக ஷைத்தான் அவ்விருவருக்கும் தீய எண்ணத்தை ஏற்படுத்தினான்.174 "இருவரும் வானவர்களாக ஆகி விடுவீர்கள் என்பதற்காகவோ, நிரந்தரமாக இங்கேயே தங்கி விடுவீர்கள் என்பதற்காகவோ தவிர உங்கள் இறைவன் இம்மரத்தை13 உங்களுக்குத் தடை செய்யவில்லை'' என்று கூறினான்.

21. "நான் உங்கள் இருவருக்கும் நலம் நாடுபவனே'' என்று அவர்களிடம் சத்தியம் செய்தான்.

22. அவ்விருவரையும் ஏமாற்றி (தரம்) தாழ்த்தினான். அவ்விருவரும் அம்மரத்தைச்13 சுவைத்தபோது அவர்களின் வெட்கத்தலங்கள் பற்றி அவர்களுக்குத் தெரிந்தது.174 அவ்விருவரும் சொர்க்கத்தின்12 இலையினால் தம்மை மூடிக் கொள்ள முயன்றனர். அவர்களை அவர்களின் இறைவன் அழைத்து "இம்மரத்தை13 நான் உங்களுக்குத் தடுக்கவில்லையா? ஷைத்தான் உங்கள் இருவருக்கும் பகிரங்க எதிரி என்று உங்களிடம் நான் கூறவில்லையா?'' எனக் கேட்டான்.

23. "எங்கள் இறைவா! எங்களுக்கே தீங்கிழைத்து விட்டோம். நீ எங்களை மன்னித்து, அருள் புரியவில்லையானால் நட்டமடைந்தோராவோம்''14 என்று அவ்விருவரும் கூறினர்.

24. "(இங்கிருந்து) இறங்கி விடுங்கள்! உங்களில் ஒருவர் மற்றவருக்குப் பகைவர்களாவீர். உங்களுக்குப் பூமியில் குறிப்பிட்ட காலம் வரை தங்குமிடமும், வசதியும் உள்ளன''175 என்று (இறைவன்) கூறினான்.

25. "அதிலேயே வாழ்வீர்கள்! அதிலேயே மரணிப்பீர்கள்! அதிலிருந்தே வெளிப்படுத்தப்படுவீர்கள்'' என்றும் கூறினான்.175

26. ஆதமுடைய மக்களே!504 உங்கள் வெட்கத்தலங்களை மறைக்கும் ஆடையையும், அலங்காரத்தையும் உங்களுக்கு அருளியுள்ளோம். (இறை) அச்சம் எனும் ஆடையே சிறந்தது. அவர்கள் சிந்திப்பதற்காக இது அல்லாஹ்வின் சான்றுகளில் உள்ளது.

27. ஆதமுடைய மக்களே! உங்கள் பெற்றோர் இருவரையும் ஷைத்தான் சொர்க்கத்திலிருந்து12 வெளியேற்றியது போல் உங்களையும் அவன் குழப்பிவிட வேண்டாம். அவர்களின் வெட்கத்தலங்களை அவர்களுக்குக் காட்ட ஆடைகளை அவர்களை விட்டும் அவன் கழற்றினான்.174 நீங்கள் அவர்களைக் காணாத வகையில் அவனும், அவனது கூட்டத்தாரும் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். நம்பிக்கை கொள்ளாதோருக்கு ஷைத்தான்களை உற்ற நண்பர்களாக நாம் ஆக்கி விட்டோம்.

28. அவர்கள் வெட்கக்கேடான காரியத்தைச் செய்யும்போது "எங்கள் முன்னோர்களை இப்படித்தான் கண்டோம். அல்லாஹ்வே இதை எங்களுக்குக் கட்டளையிட்டான்'' என்று கூறுகின்றனர். "அல்லாஹ் வெட்கக்கேடானதை ஏவ மாட்டான். நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறுகிறீர்களா?'' என்று கேட்பீராக!

29. "எனது இறைவன் நீதியைக் கட்டளையிட்டுள்ளான்'' எனக் கூறுவீராக! ஒவ்வொரு தொழுமிடத்திலும் உங்களின் கவனங்களை ஒருமுகப்படுத்திக் கொள்ளுங்கள்! வணக்கத்தை அவனுக்கே உளத்தூய்மையுடன் செய்து, அவனிடமே பிரார்த்தியுங்கள்! உங்களை அவன் முதலில் படைத்தவாறே மீள்வீர்கள்!

30. சிலருக்கு அவன் நேர்வழி காட்டினான். மற்றும் சிலர் மீது வழிகேடு உறுதியாகி விட்டது. அவர்கள் அல்லாஹ்வையன்றி ஷைத்தான்களை உற்ற நண்பர்களாக்கிக் கொண்டனர். தாங்கள் நேர்வழி நடப்போர் எனவும் எண்ணிக் கொள்கின்றனர்.

31. ஆதமுடைய மக்களே!504 ஒவ்வொரு தொழுமிடத்திலும் உங்கள் அலங்காரத்தைச் செய்து கொள்ளுங்கள்!176 உண்ணுங்கள்! பருகுங்கள்! வீண் விரயம் செய்யாதீர்கள்! வீண் விரயம் செய்வோரை அவன் விரும்ப மாட்டான்.

32. "தனது அடியார்களுக்காக அல்லாஹ் வழங்கிய அலங்காரத்தையும், தூய்மையான உணவுகளையும் தடை செய்பவன் யார்?'' என்று கேட்பீராக! "அவை இவ்வுலக வாழ்க்கையிலும் குறிப்பாக கியாமத் நாளிலும்1 நம்பிக்கை கொண்ட மக்களுக்குரியது'' எனக் கூறுவீராக! அறிகின்ற சமுதாயத்திற்கு இவ்வாறே சான்றுகளை விளக்குகிறோம்.

33. "வெட்கக்கேடானவைகளில் வெளிப்படையானதையும், இரகசியமானதையும், பாவத்தையும், நியாயமின்றி வரம்பு மீறுவதையும், எது பற்றி அல்லாஹ் எந்தச் சான்றையும் இறக்கவில்லையோ அதை அல்லாஹ்வுக்கு இணையாகக் கருதுவதையும், நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறுவதையுமே என் இறைவன் தடை செய்துள்ளான்'' எனக் கூறுவீராக!

34. ஒவ்வொரு சமுதாயத்துக்கும் கெடு உண்டு. அவர்களின் கெடு வரும்போது சிறிது நேரம் அவர்கள் முந்தவும் மாட்டார்கள். பிந்தவும் மாட்டார்கள்.

35. ஆதமுடைய மக்களே!504 எனது வசனங்களை உங்களுக்குக் கூறும் தூதர்கள் உங்களிலிருந்து உங்களிடம் வரும்போது (என்னை) அஞ்சி, திருந்திக் கொள்வோருக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.

36. நமது வசனங்களைப் பொய்யெனக் கருதி, அதைப் புறக்கணிப்போரே நரகவாசிகள். அவர்கள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.

37. அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவனை விட, அல்லது அவனது வசனங்களைப் பொய்யெனக் கருதியவனை விட மிகப் பெரிய அநீதி இழைத்தவன் யார்? விதிக்கப்பட்ட அவர்களின் பங்கு அவர்களுக்குக் கிடைக்கும். அவர்களைக் கைப்பற்ற நமது தூதர்கள்161 அவர்களிடம் வரும்போது165 "அல்லாஹ்வை விட்டு விட்டு நீங்கள் யாரை அழைத்துக் கொண்டிருந்தீர்களோ அவர்கள் எங்கே?'' என்று கேட்பார்கள். "எங்களை விட்டும் அவர்கள் மறைந்து விட்டனர்'' என அவர்கள் கூறுவார்கள். "நாங்கள் (ஏகஇறைவனை) மறுப்போராக இருந்தோம்'' எனத் தமக்கு எதிராகச் சாட்சி கூறுவார்கள்.

38. "உங்களுக்கு முன் சென்ற சமுதாயங்களான ஜின்களுடனும், மனிதர்களுடனும் நீங்களும் நரகத்தில் நுழையுங்கள்!'' என்று (அவன்) கூறுவான். ஒவ்வொரு சமுதாயமும் அதில் நுழையும்போது தம் சகோதர சமுதாயத்தைச் சபிப்பார்கள். முடிவில் அவர்கள் அனைவரும் நரகத்தை அடைந்தவுடன் "எங்கள் இறைவா! இவர்களே எங்களை வழிகெடுத்தனர். எனவே இவர்களுக்கு நரகமெனும் வேதனையை இரு மடங்கு அளிப்பாயாக!'' என்று அவர்களில் பிந்தியோர், முந்தியோரைப் பற்றிக் கூறுவார்கள். "ஒவ்வொருவருக்கும் இரு மடங்கு உள்ளது. எனினும் நீங்கள் அறிய மாட்டீர்கள்'' என்று (அவன்) கூறுவான்.

39. "எங்களை விட உங்களுக்கு எந்தச் சிறப்பும் கிடையாது. எனவே நீங்கள் செய்து கொண்டிருந்ததன் காரணமாக265 வேதனையைச் சுவையுங்கள்!'' என்று முந்தியோர், பிந்தியோரிடம் கூறுவார்கள்.

40. நமது வசனங்களைப் பொய்யெனக் கருதி, அதைப் புறக்கணிப்போருக்கு வானத்தின்507 வாசல்கள் திறக்கப்பட மாட்டாது.177 ஊசித் துவாரத்தில் ஒட்டகம் நுழையும் வரை அவர்கள் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள். இவ்வாறே குற்றவாளிகளைத் தண்டிப்போம்.

41. அவர்களுக்கு நரகத்திலிருந்து விரிப்பும், அவர்களுக்கு மேலே (நரகத்திலிருந்து) போர்வைகளும் உள்ளன. இவ்வாறே அநீதி இழைத்தவர்களைத் தண்டிப்போம்.

42. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரே சொர்க்கவாசிகள். அவர்கள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள். எவரையும் அவர்களின் சக்திக்கு மீறி நாம் சிரமப்படுத்துவதில்லை.68

43. அவர்களின் உள்ளங்களில் இருந்த குரோதத்தை எடுத்து விடுவோம். அவர்களுக்குக் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். "நமக்கு இத்தகைய வழிகாட்டிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். அல்லாஹ் எங்களுக்கு நேர்வழி காட்டியிருக்காவிட்டால் நேர்வழி பெற்றிருக்க மாட்டோம். நமது இறைவனின் தூதர்கள் உண்மையையே கொண்டு வந்தனர்'' என அவர்கள் கூறுவார்கள். "உங்கள் செயல்களின் காரணமாக உங்களுக்கு உரிமையாக்கப்பட்டுள்ள சொர்க்கம் இதுவே'' என்று அவர்களுக்குக் கூறப்படும்.

44. "எங்கள் இறைவன் எங்களுக்கு வாக்களித்ததை உறுதியாகப் பெற்றுக் கொண்டோம். உங்கள் இறைவன் உங்களுக்கு வாக்களித்ததை உறுதியாகப் பெற்றுக் கொண்டீர்களா?'' என்று சொர்க்கவாசிகள் நரகவாசிகளிடம் கேட்பார்கள். அவர்கள் 'ஆம்' என்பர். "அநீதி இழைத்தோர் மீது அல்லாஹ்வின் சாபம்6 உள்ளது'' என்று அவர்களுக்கிடையே அறிவிப்பாளர் அறிவிப்பார்.

45. அவர்கள் அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுத்தனர். அதைக் கோணல் வழியாகவும் கருதினர். மறுமையை ஏற்க மறுத்துக் கொண்டும் இருந்தனர்.

46. அவ்விரண்டுக்கும் இடையே தடுப்பு (சுவர்) இருக்கும். அந்தத் தடுப்புச்சுவர் மேல் சில மனிதர்கள் இருப்பார்கள். ஒவ்வொருவரையும் அவர்களின் அடையாளத்தைக் கொண்டு அவர்கள் அறிந்து கொள்வார்கள். சொர்க்கவாசிகளை அழைத்து "உங்கள் மீது ஸலாம்159 உண்டாகட்டும்'' என்பார்கள். அவர்கள் ஆசைப்பட்டாலும் அங்கே நுழையாமல் இருப்பார்கள்.

47. அவர்களின் பார்வைகள் நரகவாசிகளை நோக்கித் திருப்பப்படும்போது "எங்கள் இறைவா! எங்களை அநீதி இழைத்த கூட்டத்துடன் சேர்த்து விடாதே!'' எனக் கூறுவார்கள்.

48, 49. தடுப்புச் சுவர் மேல் இருப்போர், (நரகிலுள்ள) சிலரை அழைப்பார்கள். அவர்களது அடையாளத்தைக் கொண்டு அவர்களை அறிந்து கொள்வார்கள். "உங்களுடைய ஆள் பலமும், நீங்கள் பெருமையடித்துக் கொண்டிருந்ததும் உங்களைக் காப்பாற்றவில்லை; அல்லாஹ் அருள் புரிய மாட்டான் என (சொர்க்கவாசிகளான) இவர்களைப் பற்றியா சத்தியம் செய்தீர்கள்?'' என்று கூறுவார்கள். (இதன்பின்) "சொர்க்கத்தில் நுழையுங்கள்!178 உங்களுக்கு எந்த அச்சமும் இல்லை. நீங்கள் கவலைப்படவும் மாட்டீர்கள்"26 (என தடுப்புச் சுவரிலிருப்போரை நோக்கிக் கூறப்படும்.)

50. நரகவாசிகள் சொர்க்கவாசிகளை அழைத்து "எங்கள் மீது சிறிது தண்ணீரை அல்லது அல்லாஹ் உங்களுக்கு வழங்கியதை ஊற்றுங்கள்!'' எனக் கேட்பார்கள். ''(தன்னை) மறுப்போருக்கு அவ்விரண்டையும் அல்லாஹ் தடை செய்து விட்டான்'' என்று (சொர்க்கவாசிகள்) கூறுவார்கள்.

51. அவர்கள் தமது மார்க்கத்தை வீணாகவும், விளையாட்டாகவும் ஆக்கிக் கொண்டனர். இவ்வுலக வாழ்க்கை அவர்களை மயக்கி விட்டது. இந்த நாளைச்1 சந்திக்க வேண்டிவரும் என்பதை அவர்கள் மறந்து, நமது வசனங்களை அவர்கள் மறுத்துக் கொண்டிருந்தது போல் இன்று அவர்களை நாமும் மறந்து விட்டோம்6.

52. அவர்களிடம் வேதத்தைக் கொண்டு வந்துள்ளோம். அறிவுப்பூர்வமாக அதைத் தெளிவுபடுத்தியுள்ளோம். நம்பிக்கை கொள்கின்ற சமுதாயத்துக்கு அது நேர்வழியாகவும், அருளாகவும் உள்ளது.

53. இவ்வேதத்தில் செய்யப்பட்ட எச்சரிக்கையைத்தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்களா? அந்த எச்சரிக்கை நிறைவேறும் நாளில் "எங்கள் இறைவனின் தூதர்கள் உண்மையையே கொண்டு வந்தனர். எங்களுக்காகப் பரிந்துரைப்போர் யாரும் இருந்து எங்களுக்குப் பரிந்துரை17 செய்ய மாட்டார்களா? அல்லது மீண்டும் (உலகுக்கு) திருப்பி அனுப்பப்பட மாட்டோமா? ஏற்கனவே செய்து வந்தவற்றுக்கு மாற்றமாகச் செய்வோமே'' என்று அந்நாளை1 இதற்கு முன் மறந்திருந்தோர் கூறுவார்கள். அவர்கள் தமக்கே நட்டத்தை ஏற்படுத்திக் கொண்டனர். அவர்கள் இட்டுக்கட்டியவை அவர்களை விட்டும் மறைந்து விட்டன.

54. உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வே வானங்களையும்,507 பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான்.179 பின்னர் அர்ஷின்488 மீது அமர்ந்தான். இரவைப் பகலால் அவன் மூடுகிறான். பகல், இரவை வேகமாகத் தொடர்கிறது. சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும் தனது கட்டளையால் கட்டுப்படுத்தினான். கவனத்தில் கொள்க! படைத்தலும், கட்டளையும் அவனுக்கே உரியன. அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ் பாக்கியம் பொருந்தியவன்.

55. உங்கள் இறைவனைப் பணிவுடனும், இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்! வரம்பு மீறியோரை அவன் நேசிக்க மாட்டான்.180

56. பூமியில் சீர்திருத்தம் செய்யப்பட்ட பின் அதைச் சீர்கெடுக்காதீர்கள்! அச்சத்துடனும், நம்பிக்கையுடனும் அவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்! அல்லாஹ்வின் அருள் நன்மை செய்வோருக்கு அருகில் உள்ளது.49

57. தனது அருளுக்கு முன்னால் நற்செய்தியாக அவனே காற்றை அனுப்புகிறான். அது கனமான மேகத்தைச் சுமக்கும்போது இறந்து போன ஊருக்கு அதை ஓட்டிச் செல்கிறோம். அதிலிருந்து தண்ணீரை இறக்கி, அதன் மூலம் எல்லாப் பலன்களையும் வெளிப்படுத்துகிறோம். இவ்வாறே இறந்தவர்களையும் வெளிப்படுத்துவோம். (இதன் மூலம்) நீங்கள் படிப்பினை பெறக் கூடும்.

58. தாவரங்கள், தனது இறைவனின் விருப்பப்படி நல்ல பூமியில் வெளிப்படுகிறது. கெட்ட பூமியில் அற்பமானதைத் தவிர வேறெதுவும் வெளிப்படாது. நன்றி செலுத்தும் சமுதாயத்திற்கு இவ்வாறே சான்றுகளை விளக்குகிறோம்.

59. நூஹை, அவரது சமுதாயத்திடம் அனுப்பி வைத்தோம். "என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் யாருமில்லை மகத்தான நாளின்1 வேதனையை உங்கள் மீது நான் அஞ்சுகிறேன்'' என்று அவர் கூறினார்.

60. "நாங்கள் உம்மைப் பகிரங்கமான வழிகேட்டிலேயே காண்கிறோம்'' என அவரது சமுதாயத்தின் பிரமுகர்கள் கூறினர்.

61. "என் சமுதாயமே! என்னிடம் எந்த வழிகேடும் இல்லை. மாறாக நான் அகிலத்தின் இறைவனுடைய தூதன்'' என்று அவர் கூறினார்.

62. "என் இறைவனின் தூதுச் செய்திகளை உங்களுக்கு எடுத்துச் சொல்கிறேன். உங்களுக்கு நலம் நாடுகிறேன். நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்விடமிருந்து அறிகிறேன்''

63. "உங்களை எச்சரிப்பதற்காகவும், நீங்கள் (இறைவனை) அஞ்சவும், உங்களுக்கு அருள் செய்யப்படவும், உங்களைச் சேர்ந்த மனிதருக்கு உங்கள் இறைவனிடமிருந்து அறிவுரை வருவதில் ஆச்சரியம் அடைகிறீர்களா?'' (என்றும் கூறினார்.)

64. ஆயினும் அவரைப் பொய்யரெனக் கருதினர். எனவே அவரையும், அவருடன் கப்பலில் இருந்தவர்களையும் காப்பாற்றினோம்.222 நமது வசனங்களைப் பொய்யெனக் கருதியோரை மூழ்கடித்தோம். அவர்கள் குருட்டுக் கூட்டமாகவே இருந்தனர்.

65. ஆது சமுதாயத்திடம் அவர்களின் சகோதரர் ஹூதை அனுப்பினோம். "என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் யாருமில்லை (இறைவனை) அஞ்ச மாட்டீர்களா?'' என்று அவர் கேட்டார்.

66. "உம்மை மடமையில் இருப்பதாகவே நாங்கள் கருதுகிறோம். பொய்யராகவும் உம்மை நாங்கள் கருதுகிறோம்'' என்று அவரது சமுதாயத்தில் (ஏகஇறைவனை) மறுத்த பிரமுகர்கள் கூறினர்.

67. "என் சமுதாயமே! என்னிடம் எந்த மடமையும் இல்லை. மாறாக நான் அகிலத்தின் இறைவனுடைய தூதன்'' என்று அவர் கூறினார்.

68. "என் இறைவனின் தூதுச் செய்திகளை உங்களுக்கு எடுத்துச் சொல்கிறேன். நான் உங்களின் நலம் நாடுபவன்; நம்பிக்கைக்குரியவன்''

69. "உங்களை எச்சரிப்பதற்காக உங்களைச் சேர்ந்த மனிதருக்கு உங்கள் இறைவனிடமிருந்து அறிவுரை வருவது உங்களுக்கு ஆச்சரியமாக உள்ளதா? நூஹுடைய சமுதாயத்திற்குப் பின் உங்களை வழித்தோன்றல்களாக46 அவன் ஆக்கியதையும், உடலமைப்பில் உங்களுக்கு வலிமையை அதிகப்படுத்தியதையும் எண்ணிப் பாருங்கள்! அல்லாஹ்வின் அருட்கொடைகளை எண்ணிப் பாருங்கள்!'' நீங்கள் வெற்றியடைவீர்கள் (என்றும் அவர் கூறினார்).

70. "எங்கள் முன்னோர்கள் வணங்கி வந்ததை விட்டு விட்டு, அல்லாஹ்வை மட்டும் நாங்கள் வணங்க வேண்டும் என்பதற்காக எங்களிடம் நீர் வந்திருக்கிறீரா? நீர் உண்மையாளராக இருந்தால் எங்களுக்கு நீர் எச்சரிப்பதை எங்களிடம் கொண்டு வாரும்'' என்று அவர்கள் கூறினர்.

71. "உங்கள் இறைவனிடமிருந்து வேதனையும், கோபமும் உங்கள் மீது ஏற்பட்டு விட்டன. நீங்களும், உங்கள் முன்னோர்களும் சூட்டிக் கொண்ட வெறும் பெயர்களைப் பற்றி (கற்பனைப் பாத்திரங்களைப் பற்றி) என்னிடம் தர்க்கம் செய்கிறீர்களா? அது பற்றி அல்லாஹ் எந்தச் சான்றையும் அருளவில்லை. எதிர்பாருங்கள்! உங்களுடன் சேர்ந்து நானும் எதிர்பார்க்கிறேன்'' என்று அவர் கூறினார்.

72. அவரையும், அவருடன் இருந்தவர்களையும் நமது அருளால் காப்பாற்றினோம். நமது வசனங்களைப் பொய்யெனக் கருதியோரைக் கருவறுத்தோம். அவர்கள் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை.

73. ஸமூது சமுதாயத்திடம் அவர்களின் சகோதரர் ஸாலிஹை அனுப்பி வைத்தோம். "என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் யாருமில்லை உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து அத்தாட்சி வந்துள்ளது. அது உங்களுக்குச் சான்றாக உள்ள அல்லாஹ்வின் ஒட்டகம். அல்லாஹ்வின் பூமியில் அதை மேயவிட்டு விடுங்கள்! அதற்குத் தீங்கிழைக்காதீர்கள். (அவ்வாறு செய்தால்) உங்களுக்குத் துன்புறுத்தும் வேதனை ஏற்படும்'' என்று அவர் கூறினார்.

74. "ஆது சமுதாயத்துக்குப் பின்னர் உங்களை வழித்தோன்றல்களாக46 அவன் ஆக்கியதை எண்ணிப் பாருங்கள்! பூமியில் அவன் உங்களை வசிக்கச் செய்தான். அதன் மென்மையான பகுதிகளில் மாளிகைகளைக் கட்டுகிறீர்கள்! மலைகளைக் குடைந்து வீடுகளை அமைத்துக் கொள்கிறீர்கள்! எனவே அல்லாஹ்வின் அருட்கொடைகளை எண்ணிப் பாருங்கள்! பூமியில் குழப்பம் செய்து திரியாதீர்கள்!'' (என்று அவர் கூறினார்).

75. "ஸாலிஹ் தமது இறைவனால் அனுப்பப்பட்ட தூதர் தான் என்பதை அறிவீர்களா?'' என்று அவரது சமுதாயத்தில் கர்வம் பிடித்த பிரமுகர்கள் அவர்களில் நம்பிக்கை கொண்ட பலவீனர்களிடம் (கிண்டலாக) கேட்டனர். அதற்கு, (பலவீனர்கள்) "அவரிடம் கொடுத்து அனுப்பப்பட்ட செய்தியை நாங்கள் நம்புகிறோம்'' என்று கூறினர்.

76. "நீங்கள் நம்புவதை நாங்கள் மறுக்கிறோம்'' என்று கர்வம் பிடித்தவர்கள் கூறினர்.

77. பின்னர் அந்த ஒட்டகத்தை அறுத்தனர். அவர்களின் இறைவனது கட்டளையை மீறினர். "ஸாலிஹே நீர் தூதராக இருந்தால் எங்களுக்கு எச்சரித்ததை எங்களிடம் கொண்டு வாரும்'' எனவும் கூறினர்.

78. உடனே அவர்களைப் பூகம்பம் தாக்கியது. காலையில் தமது வீடுகளில் வீழ்ந்து கிடந்தனர். 

79. (வீழ்ந்து கிடக்கும்) அவர்களை விட்டு அவர் விலகினார். "என் சமுதாயமே! எனது இறைவனின் தூதுச் செய்தியை உங்களுக்கு எடுத்துச் சொன்னேன். உங்களுக்கு நல்லதையே விரும்பினேன். எனினும் நலம் நாடுவோரை நீங்கள் விரும்பவில்லை'' எனக் கூறினார்.

80. லூத்தையும் (தூதராக அனுப்பினோம்). "உலகில் உங்களுக்கு முன் யாரும் செய்திராத வெட்கக்கேடான காரியத்தையா செய்கிறீர்கள்?'' என்று தமது சமுதாயத்திடம் கேட்டார்.

81. "நீங்கள் பெண்களை விட்டு இச்சைக்காக ஆண்களிடம் செல்கிறீர்கள்! நீங்கள் வரம்பு மீறிய கூட்டமாகவே இருக்கிறீர்கள்'' (என்றும் கூறினார்.)

82. "இவர்களை உங்கள் ஊரை விட்டு வெளியேற்றுங்கள்! இவர்கள் சுத்தமான மனிதர்களாக உள்ளனர்'' என்பதே அவரது சமுதாயத்தின் பதிலாக இருந்தது.

83. எனவே அவரது மனைவியைத் தவிர அவரது குடும்பத்தாரையும், அவரையும் காப்பாற்றினோம். அவள் அழிந்து போவோரில் ஒருத்தியாக இருந்தாள்.

84. அவர்களுக்கு பெருமழையைப் பொழிவித்தோம். "குற்றவாளிகளின் முடிவு எவ்வாறு இருந்தது?" என்பதைக் கவனிப்பீராக!

85. மத்யன் நகருக்கு அவர்களின் சகோதரர் ஷுஐபை அனுப்பினோம். "என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. உங்கள் இறைனிடமிருந்து உங்களிடம் தக்க சான்று வந்துள்ளது. எனவே அளவையும், நிறுவையையும் நிறைவாக்குங்கள்! மக்களுக்கு அவர்களின் பொருட்களைக் குறைத்து விடாதீர்கள்! பூமியில் சீர்திருத்தம் செய்யப்பட்ட பின் அதில் குழப்பம் விளைவிக்காதீர்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் இதுவே உங்களுக்குச் சிறந்தது'' என்று அவர் கூறினார்.

86. "ஒவ்வொரு பாதையிலும் (மக்களை) மிரட்டுவதற்காக அமராதீர்கள்! அல்லாஹ்வின் பாதையைக் கோணலாகச் சித்தரித்து, நம்பிக்கை கொண்டோரை அதை விட்டும் தடுக்காதீர்கள்! நீங்கள் குறைவான எண்ணிக்கையில் இருந்ததையும், உங்களை அவன் அதிகமாக்கியதையும் எண்ணிப் பாருங்கள்! குழப்பம் செய்தோரின் முடிவு எவ்வாறு இருந்தது என்பதைக் கவனியுங்கள்!''

87. "எனக்குக் கொடுத்தனுப்பப்பட்டதை உங்களில் ஒரு சாரார் நம்பி, மற்றொரு சாரார் நம்பாமல் இருந்தால் அல்லாஹ் நமக்கிடையே தீர்ப்பளிக்கும் வரை பொறுமையாக இருங்கள்! அவன் தீர்ப்பளிப்போரில் மிகவும் சிறந்தவன்'' (எனவும் அவர் கூறினார்.)

88. "ஷுஐபே! உம்மையும், உம்முடன் உள்ள நம்பிக்கை கொண்டோரையும் எங்கள் ஊரிலிருந்து வெளியேற்றுவோம். அல்லது நீங்கள் எங்கள் மார்க்கத்துக்குத் திரும்ப வேண்டும்'' என்று அவரது சமுதாயத்தில் கர்வம் கொண்ட பிரமுகர்கள் கூறினர். (அதற்கு ஷுஐப்) "நாங்கள் (உங்கள் மார்க்கத்தை) வெறுத்தாலுமா?'' என்று கேட்டார்.

89. உங்கள் மார்க்கத்தை விட்டும் அல்லாஹ் எங்களைக் காப்பாற்றிய பின்னர் அதற்குத் திரும்பினால் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியோராக ஆவோம். எங்கள் இறைவன் நாடினால் தவிர அதற்கு (உங்கள் மார்க்கத்திற்கு) திரும்புதல் எங்களிடம் ஏற்படாது. எங்கள் இறைவன் ஞானத்தால் எல்லாப் பொருட்களையும் சூழ்ந்திருக்கிறான். நாங்கள் அல்லாஹ்வையே சார்ந்திருக்கிறோம். எங்கள் இறைவா! எங்களுக்கும், எங்கள் சமுதாயத்திற்குமிடையில் நியாயமான தீர்ப்பை வழங்குவாயாக! நீயே தீர்ப்பளிப்போரில் சிறந்தவன் (எனவும் ஷுஐப் கூறினார்.)

90. "ஷுஐபைப் பின்பற்றினால் நீங்கள் நட்டமடைந்தோராவீர்கள்'' என்று அவரது சமுதாயத்தில் (ஏகஇறைவனை) மறுத்த பிரமுகர்கள் கூறினர்.

91. உடனே அவர்களைப் பூகம்பம் தாக்கியது. காலையில் தமது வீடுகளில் வீழ்ந்து கிடந்தனர்.

92. ஷுஐபைப் பொய்யரெனக் கருதியோர் (அதற்கு முன்) அங்கே வசிக்காதவர்களைப் போலானார்கள். ஷுஐபைப் பொய்யரெனக் கருதியோரே நட்டமடைந்தோரானார்கள்.

93. (வீழ்ந்து கிடக்கும்) அவர்களை விட்டு அவர் விலகினார். "என் சமுதாயமே! என் இறைவனின் தூதுச் செய்திகளை உங்களுக்கு எடுத்துச் சொல்லி விட்டேன். உங்களுக்கு நல்லதையே நாடினேன். எனவே (ஏகஇறைவனை) மறுத்த கூட்டத்திற்காக எவ்வாறு கவலைப்படுவேன்?'' என்றார்.

94. எந்த ஊருக்கு நபியை நாம் அனுப்பினாலும் அவ்வூரார் பணிய வேண்டும் என்பதற்காக அவர்களை வறுமையினாலும், நோயினாலும் நாம் பிடிக்காமல் இருந்ததில்லை.

95. பின்னர் கெட்டதற்குப் பகரமாக நல்லதை மாற்றிக் கொடுத்தோம். அவர்கள் பல்கிப் பெருகியபோது "(எங்களுக்கு மட்டுமின்றி) எங்கள் முன்னோருக்கும் துன்பமும், இன்பமும் ஏற்பட்டன'' எனக் கூறினர். எனவே அவர்கள் அறியாத நிலையில் திடீரென்று அவர்களைத் தண்டித்தோம்.

96. அவ்வூர்களைச் சேர்ந்தோர் நம்பிக்கை கொண்டு (நம்மை) அஞ்சியிருந்தால் வானிலிருந்தும், பூமியிலிருந்தும் பாக்கியங்களை அவர்களுக்காக திறந்து விட்டிருப்போம். மாறாக அவர்கள் பொய்யெனக் கருதினர். எனவே அவர்கள் (தீமை) செய்து வந்ததன் காரணமாக265 அவர்களைத் தண்டித்தோம்.

97. அவர்கள் இரவில் உறங்கிக் கொண்டிருக்கும்போது நமது வேதனை அவர்களுக்கு வரும் என்பதில் அவ்வூரார் அச்சமற்று இருக்கிறார்களா?

98. அவர்கள் விளையாடிக் கொண்டிருக்கும்போது முற்பகலில் நமது வேதனை அவர்களுக்கு வரும் என்பதில் அவ்வூரார் அச்சமற்று இருக்கிறார்களா?

99. அல்லாஹ்வின் சூழ்ச்சியில்6 அச்சமற்று இருக்கிறார்களா? நட்டமடைந்த கூட்டத்தினர் தவிர (மற்றவர்கள்) அல்லாஹ்வின் சூழ்ச்சியில் அச்சமற்று இருக்க மாட்டார்கள்.

100. நாம் நாடியிருந்தால் பூமிக்கு உரியவர்களிடமிருந்து (அவர்கள் அழிக்கப்பட்ட பின்) அதைக் கைப்பற்றிக் கொண்டவர்களை அவர்களது பாவங்களின் காரணமாகத் தண்டித்திருப்போம் என்பதும், அவர்கள் செவியுறாதவாறு அவர்களின் உள்ளங்கள் மீது முத்திரையிட்டிருப்போம் என்பதும் விளங்கவில்லையா? 

101. (முஹம்மதே!) இந்த ஊர்கள் பற்றிய செய்திகளை உமக்குக் கூறுகிறோம். அவர்களிடம் அவர்களது தூதர்கள் தெளிவான சான்றுகளுடன் வந்தனர். முன்னரே அவர்கள் பொய்யெனக் கருதியதால் அவர்கள் நம்பிக்கை கொள்வோராக இருக்கவில்லை. இவ்வாறே (தன்னை) மறுப்போரின் உள்ளங்கள் மீது அல்லாஹ் முத்திரையிடுகிறான்.

102. அவர்களில் பெரும்பாலோரிடம் வாக்கை நிறைவேற்றுதல் இல்லை. அவர்களில் அதிகமானோரைக் குற்றம் புரிவோராகவே காண்கிறோம்.

103. அவர்களுக்குப் பின் மூஸாவை ஃபிர்அவ்னிடமும், அவனது சபையோரிடமும் தெளிவான சான்றுகளுடன் அனுப்பினோம். அவற்றை அவர்கள் ஏற்க மறுத்தனர். "குழப்பம் செய்தோரின் முடிவு எவ்வாறு இருந்தது?" என்பதைக் கவனிப்பீராக!

104. "ஃபிர்அவ்னே! நான் அகிலத்தாருடைய இறைவனின் தூதர்'' என்று மூஸா கூறினார்.

105. அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறெதனையும்) கூறாதிருக்க நான் கடமைப்பட்டவன். உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான சான்றை உங்களிடம் கொண்டு வந்துள்ளேன். எனவே என்னுடன் இஸ்ராயீலின் மக்களை அனுப்பு181 (எனவும் கூறினார்).

106. "நீர் உண்மை கூறுபவராக இருந்து, சான்றைக் கொண்டு வந்திருந்தால் அதைக் கொண்டு வாரும்!'' என்று அவன் கூறினான்.

107. அப்போது அவர் தமது கைத்தடியைப் போட்டார். உடனே அது உண்மையாகவே பாம்பாக ஆனது.

108. அவர் தமது கையை வெளியே காட்டினார். உடனே அது பார்ப்போருக்கு வெண்மையாகத் தெரிந்தது.

109, 110. "இவர் தேர்ந்த சூனியக்காரராக357 உள்ளார்285. உங்கள் பூமியிலிருந்து உங்களை வெளியேற்ற இவர் எண்ணுகிறார். என்ன கட்டளையிடப் போகிறீர்கள்?'' என்று ஃபிர்அவ்னின் சமுதாயப் பிரமுகர்கள் கூறினர்.26

111, 112. "இவருக்கும், இவரது சகோதரருக்கும் அவகாசம் அளிப்பீராக! (சூனியக்காரர்களைத்) திரட்டி வருவோரைப் பல ஊர்களுக்கும் அனுப்புவீராக! அவர்கள் தேர்ந்த சூனியக்காரர்357 ஒவ்வொருவரையும் உம்மிடம் கொண்டு வருவார்கள்'' என்றும் (ஃபிர்அவ்னிடம்) கூறினர்.26

113. சூனியக்காரர்கள்357 ஃபிர்அவ்னிடம் வந்தனர். "நாங்கள் வெற்றிபெற்றால் எங்களுக்குப் பரிசு உண்டா?'' என்று அவர்கள் கேட்டனர்.

114. "ஆம்! நீங்கள் (எனக்கு) நெருக்கமானவர்கள்'' என (அவன்) கூறினான்.

115. "மூஸாவே! (வித்தைகளை) நீர் போடுகிறீரா? நாங்களே போடட்டுமா?'' என்று அவர்கள் கேட்டனர்.

116. "நீங்களே போடுங்கள்!'' என்று (மூஸா) கூறினார். அவர்கள் (தமது வித்தைகளைப்) போட்டபோது மக்களின் கண்களை வயப்படுத்தினார்கள்.285 மக்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தினார்கள். பெரும் சூனியத்தை357 அவர்கள் கொண்டு வந்தனர்.

117. "உமது கைத்தடியைப் போடுவீராக!'' என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது அவர்கள் செய்த வித்தையை விழுங்கியது.

118. உண்மை நிலைத்தது. அவர்கள் செய்து கொண்டிருந்தவை வீணாயின.285

119. அங்கே அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர்; சிறுமையடைந்தனர்.285

120. சூனியக்காரர்கள்357 ஸஜ்தாவில் விழுந்தனர்.285

121,122. "அகிலத்தாரின் இறைவனாகிய மூஸா மற்றும் ஹாரூனின் இறைவனை நம்பினோம்'' என்றும் கூறினர்.26

123. "நான் உங்களுக்கு அனுமதியளிப்பதற்கு முன் அவரை நம்பி விட்டீர்களா? இது, இந்த நகரத்திலிருந்து அதன் உரிமையாளர்களை வெளியேற்றுவதற்காக இங்கே நீங்கள் நிகழ்த்திய சதி. (இதன் விளைவை) பின்னர் அறிந்து கொள்வீர்கள்!'' என்று ஃபிர்அவ்ன் கூறினான்.

124. "உங்களை மாறுகால் மாறுகை வெட்டுவேன். பின்னர் உங்கள் அனைவரையும் சிலுவையில் அறைவேன்'' (என்றும் கூறினான்)

125. "நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்புபவர்கள்'' என்று அவர்கள் கூறினர்.

126. "எங்கள் இறைவனின் சான்றுகள் எங்களிடம் வந்தபோது அதை நம்பினோம் என்பதற்காகவே எங்களை நீ தண்டிக்கிறாய்'' (என்று ஃபிர்அவ்னிடம் கூறிவிட்டு) "எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறுமையைத் தருவாயாக! எங்களை முஸ்லிம்களாக295 மரணிக்கச் செய்வாயாக!'' என்றனர்.

127. "இந்தப் பூமியில் குழப்பம் செய்வதற்காகவும், உம்மையும் உமது கடவுள்களையும் புறக்கணிப்பதற்காகவும், மூஸாவையும் அவரது சமுதாயத்தையும் விட்டு வைக்கப் போகிறீரா?'' என்று ஃபிர்அவ்னுடைய சமுதாயத்துப் பிரமுகர்கள் கேட்டனர். "அவர்களின் ஆண் மக்களைக் கொல்வோம். பெண் (மக்)களை உயிருடன் விட்டு விடுவோம். நாம் அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துபவர்கள்'' என்று ஃபிர்அவ்ன் கூறினான்.

128. "அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்! பொறுமையாக இருங்கள்! பூமி அல்லாஹ்வுக்கே உரியது. தனது அடியார்களில் தான் நாடியோருக்கு அதை அவன் உரிமையாக்குவான். இறுதி முடிவு (இறைவனை) அஞ்சுவோர்க்கே சாதகமாக இருக்கும்'' என்று மூஸா தமது சமுதாயத்திடம் கூறினார்.

129. "நீர் எங்களிடம் வருவதற்கு முன்னரும், நீர் எங்களிடம் வந்த பின்னரும் தொல்லை கொடுக்கப்பட்டு வருகிறோம்'' என்று அவர்கள் கூறினர். "உங்கள் இறைவன், உங்கள் எதிரியை அழித்து உங்களைப் பூமியில் (அவர்களுக்குப்) பகரமாக்கி46 எவ்வாறு செயல்படுகின்றீர்கள் என்பதைக் கவனிப்பான்'' என்றும் கூறினார்.

130. "படிப்பினை பெறுவதற்காகப் பல வகைப் பஞ்சங்களாலும், பலன்களைக் குறைப்பதன் மூலமும் ஃபிர்அவ்னுடைய சமுதாயத்தைத் தண்டித்தோம்''

131. அவர்களுக்கு ஏதேனும் நன்மை வந்தால் "அது எங்களுக்காக (கிடைத்தது)'' எனக் கூறுகின்றனர். அவர்களுக்கு தீங்கு ஏற்படுமானால் மூஸாவையும் அவருடன் உள்ளவர்களையும் பீடையாகக் கருதுகின்றனர். "கவனத்தில் கொள்க. அவர்கள் பீடையாகக் கருதுவது அல்லாஹ்விடமிருந்து வந்துள்ளது. எனினும் அவர்களில் அதிகமானோர் இதனை அறிவதில்லை.''

132. "எங்களை வசியம் செய்வதற்காக நீர் எந்தச் சான்றைக் கொண்டு வந்த போதிலும், நாம் உம்மை நம்பப் போவதில்லை'' என்று அவர்கள் கூறினர்.

133. எனவே அவர்களுக்கு எதிராக வெள்ளப்பெருக்கு, வெட்டுக்கிளி, பேன், தவளைகள், இரத்தம் ஆகிய தெளிவான சான்றுகளை அனுப்பினோம். அவர்கள் ஆணவம் கொண்டனர். குற்றம் புரிந்த கூட்டமாகவே இருந்தனர்.

134. அவர்களுக்கு எதிராக, வேதனை வந்த போதெல்லாம் "மூஸாவே! உமது இறைவன் உம்மிடம் தந்த வாக்குறுதியின் படி அவனிடம் பிரார்த்திப்பீராக! எங்களை விட்டு இந்த வேதனையை நீர் நீக்கினால் உம்மை நம்புவோம். உம்முடன் இஸ்ராயீலின் மக்களை அனுப்பி வைப்போம்''181 என்று அவர்கள் கூறினர்.

135. அவர்கள் நிறைவு செய்யும் காலக்கெடு வரை அவர்களுக்கு நாம் வேதனையை நீக்கிய உடனே அவர்கள் வாக்கு மீறுகின்றனர்.

136. அவர்கள் நமது சான்றுகளைப் பொய்யெனக் கருதி, அவற்றை அலட்சியம் செய்து வந்ததால் அவர்களைத் தண்டித்தோம். அவர்களைக் கடலில் மூழ்கடித்தோம்.

137. பலவீனர்களாகக் கருதப்பட்டு வந்த சமுதாயத்தை, நாம் பாக்கியம் செய்த பூமியின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளுக்கு உரிமையாளர்களாக்கினோம். இஸ்ராயீலின் மக்கள் பொறுமையைக் கைக்கொண்டதால் உமது இறைவனின் அழகிய வாக்கு அவர்கள் விஷயத்தில் முழுமையாக நிறைவேறியது. ஃபிர்அவ்னும், அவனது சமுதாயத்தினரும் தயாரித்தவற்றையும், அவர்கள் உயரமாக எழுப்பியவற்றையும் அடியோடு அழித்தோம்.

138. இஸ்ராயீலின் மக்களைக் கடல் கடந்து செல்ல வைத்தோம். அப்போது தமது சிலைகளுக்கு வழிபாடு நடத்திக் கொண்டிருந்த கூட்டத்திடம் அவர்கள் வந்தனர். "மூஸாவே! அவர்களுக்கு இருக்கும் கடவுள்கள் போல் எங்களுக்கும் கடவுளை எற்படுத்தித் தருவீராக!'' என்று கேட்டனர். "நீங்கள் அறிவுகெட்ட கூட்டமாகவே இருக்கின்றீர்கள்'' என்று அவர் கூறினார்.

139. "அவர்கள் எதில் இருக்கிறார்களோ, அது அழியும். அவர்கள் செய்து வந்தவையும் வீணானது.'' 

140. "அல்லாஹ் அல்லாதவர்களையா உங்களுக்குக் கடவுளாகக் கற்பிப்பேன்? அவனே உங்களை அகிலத்தாரை விட சிறப்பித்திருக்கிறான்'' என்று (மூஸா) கூறினார்.

141. உங்கள் ஆண் மக்களைக் கொன்று, உங்கள் பெண் (மக்)களை உயிருடன் விட்டு, உங்களுக்குக் கடும் வேதனையைச் சுவைக்கச் செய்து கொண்டிருந்த ஃபிர்அவ்னின் கூட்டத்திடமிருந்து நாம் உங்களைக் காப்பாற்றியதை எண்ணிப் பாருங்கள்! உங்கள் இறைவனிடமிருந்து இதில் கடும் சோதனை இருந்தது.

142. மூஸாவுக்கு முப்பது இரவுகளை வாக்களித்தோம். அதை (மேலும்) பத்து (இரவுகள்) மூலம் முழுமையாக்கினோம். எனவே அவரது இறைவன் நிர்ணயித்த காலம் நாற்பது இரவுகளாக முழுமையடைந்தது.18 "என் சமுதாயத்திற்கு நீர் எனக்குப் பகரமாக46 இருந்து சீர்திருத்துவீராக! குழப்பவாதிகளின் பாதையைப் பின்பற்றிவிடாதீர்!'' என்று தம் சகோதரர் ஹாரூனிடம் மூஸா (ஏற்கனவே) கூறியிருந்தார்.

143. நாம் வாக்களித்த இடத்துக்கு மூஸா வந்து, அவரிடம் அவரது இறைவன் பேசியபோது488 "என் இறைவா! (உன்னை) எனக்குக் காட்டுவாயாக! நான் உன்னைப் பார்க்க வேண்டும்'' எனக் கூறினார். அதற்கு (இறைவன்) "என்னை நீர் பார்க்கவே முடியாது. எனினும் அந்த மலையைப் பார்ப்பீராக! அது அதற்குரிய இடத்தில் நிலையாக இருந்தால் பின்னர் நீர் என்னைப் பார்க்கலாம்'' என்று கூறினான். அவரது இறைவன் அந்த மலைக்குக் காட்சி தந்தபோது அதைத் தூளாக்கினான். மூஸா மூர்ச்சித்து விழுந்தார். அவர் தெளிவடைந்தபோது "நீ தூயவன்.10 உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நம்பிக்கை கொண்டோரில் நான் முதலாமவனாக இருக்கிறேன்'' எனக் கூறினார்.21

144. "மூஸாவே! எனது தூதுச் செய்திகள் மூலமும், நான் பேசியதன்488 மூலமும் மக்களை விட உம்மைத் தேர்ந்தெடுத்து விட்டேன். எனவே நான் உமக்குக் கொடுத்ததைப் பிடித்துக் கொள்வீராக! நன்றி செலுத்துபவராக ஆவீராக!'' என்று (இறைவன்) கூறினான்.

145. பலகைகளில் அவருக்காக ஒவ்வொரு விஷயத்தையும் எழுதினோம். அறிவுரையாகவும், அனைத்து விஷயங்களுக்கும் விளக்கமாகவும் அது இருந்தது.184 "இதைப் பலமாகப் பிடிப்பீராக! இதை மிக அழகிய முறையில் பிடிக்குமாறு உமது சமுதாயத்திற்கும் கட்டளையிடுவீராக! குற்றம் புரிந்தோரின் இல்லத்தை உங்களுக்குக் காட்டுவேன்''428 (என்று இறைவன் கூறினான்.)

146. நியாயமின்றி பூமியில் கர்வம் கொண்டிருப்பவர்களை எனது சான்றுகளை விட்டும் திருப்புவேன். அவர்கள் எந்தச் சான்றைக் கண்டாலும் அவற்றை நம்ப மாட்டார்கள். நேரான வழியை அவர்கள் கண்டால் அதை (தங்களது) வழியாகக் கொள்ள மாட்டார்கள். வழிகேடான பாதையை அவர்கள் கண்டால் அதை (தமது) வழியாக்கிக் கொள்வார்கள். அவர்கள் நமது வசனங்களைப் பொய்யெனக் கருதியதும், அவற்றை அலட்சியப்படுத்தியதும் இதற்குக் காரணம்.

147. நமது வசனங்களையும், மறுமையின் சந்திப்பையும் பொய்யெனக் கருதியோரின் செயல்கள் அழிந்து விடும். அவர்கள் செய்ததைத் தவிர வேறு எதற்கும் கூலி கொடுக்கப்படுவார்களா?

148. மூஸாவுடைய சமூகத்தார் அவருக்குப் பின் அவர்களது நகைகளால் காளைக் கன்றின் வடிவத்தை (கடவுளாக) கற்பனை செய்து கொண்டனர். அதற்கு மாட்டின் சப்தமும் இருந்தது. "அது அவர்களிடம் பேசாது என்பதையும், அவர்களுக்கு எந்த வழியையும் காட்டாது என்பதையும் அவர்கள் அறிய வேண்டாமா?19 அவர்கள் இதைக் கற்பனை செய்து அநீதி இழைத்தோரானார்கள்.

149. தாங்கள் வழிதவறி விட்டதை உணர்ந்து அவர்கள் கைசேதப்பட்டபோது "எங்கள் இறைவன் எங்களுக்கு அருள் புரிந்து, எங்களை மன்னிக்காவிட்டால் நட்டமடைந்தோராவோம்'' என்றனர்.

150. கவலையும், கோபமும் கொண்டு மூஸா தமது சமுதாயத்திடம் திரும்பியபோது "எனக்குப் பின்னர் நீங்கள் செய்தது மிகவும் கெட்டது. உங்கள் இறைவனின் கட்டளைக்கு (தண்டனைக்கு) அவசரப்படுகிறீர்களா?'' என்றார். பலகைகளைப் போட்டார். தமது சகோதரரின் தலையைப் பிடித்து தம்மை நோக்கி இழுத்தார். (அதற்கு அவரது சகோதரர்) "என் தாயின் மகனே! இந்தச் சமுதாயத்தினர் என்னைப் பலவீனனாகக் கருதி விட்டனர். என்னைக் கொல்லவும் முயன்றனர். எனவே எதிரிகள் என்னைப் பார்த்துச் சிரிக்கும் நிலையை ஏற்படுத்தி விடாதீர்! அநீதி இழைத்த சமுதாயத்தில் என்னையும் ஆக்கி விடாதீர்!'' என்றார்.

151. "என் இறைவா! என்னையும், என் சகோதரரையும் மன்னிப்பாயாக! எங்களை உனது அருளில் நுழைப்பாயாக! நீ கருணையாளர்களில் மிகவும் கருணையாளன்'' என்று (மூஸா) கூறினார்.

152. காளைக் கன்றைக் கடவுளாகக் கருதியோருக்கு அவர்களின் இறைவனிடமிருந்து கோபமும், இவ்வுலக வாழ்க்கையில் இழிவும் ஏற்படும். கற்பனை செய்வோரை இவ்வாறே வேதனைக்கு உட்படுத்துவோம்.19

153. யார் தீமையான காரியங்களைச் செய்து, பின்னர் திருந்தி நம்பிக்கை கொள்கிறார்களோ (அவர்களை) உமது இறைவன் அதன் பிறகு மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

154. மூஸாவுக்குக் கோபம் தணிந்தபோது பலகைகளை எடுத்தார். அதன் எழுத்துக்களில் இறைவனை அஞ்சுவோருக்கு அருளும், நேர்வழியும் இருந்தது.

155. நாம் நிர்ணயித்த இடத்தில் மூஸா தமது சமுதாயத்தில் எழுபது ஆண்களைத் தேர்வு செய்தார். அவர்களைப் பூகம்பம் தாக்கியபோது "என் இறைவா! நீ நாடியிருந்தால் (இதற்கு) முன்பே அவர்களையும் என்னையும் அழித்திருப்பாய். எங்களில் மூடர்கள் செய்ததற்காக எங்களை அழிக்கிறாயா? இது உன் சோதனை தவிர வேறில்லை. இதன் மூலம் நீ நாடியோரை வழிகேட்டில் விட்டு விடுகிறாய். நீ நாடியோருக்கு வழிகாட்டுகிறாய். நீயே எங்கள் பொறுப்பாளன். எனவே எங்களை மன்னித்து, எங்களுக்கு அருள் புரிவாயாக! நீயே மன்னிப்போரில் சிறந்தவன்'' என்று (மூஸா) பிரார்த்தித்தார்.392 

156. "எங்களுக்கு இவ்வுலகிலும், மறுமையிலும் நன்மையைப் பதிவு செய்வாயாக! நாங்கள் உன்னிடம் திரும்பி விட்டோம்'' (எனவும் பிரார்த்தித்தார்) "என் வேதனையை நான் நாடியோருக்கு அளிப்பேன். எனது அருள், எல்லாப் பொருட்களையும் சூழ்ந்திருக்கிறது. (என்னை) அஞ்சி, ஸகாத்தும் கொடுத்து, நமது வசனங்களை நம்புகின்ற மக்களுக்காக அதைப் பதிவு செய்வேன்'' என்று (இறைவன்) கூறினான்.

157. எழுதப் படிக்கத்312 தெரியாத152 இத்தூதரை, இந்த நபியை (முஹம்மதை) அவர்கள் பின்பற்றுகின்றனர். தங்களிடம் உள்ள தவ்ராத்திலும், இஞ்சீலிலும்491 இவரைப் பற்றி எழுதப்பட்டிருப்பதை457 அவர்கள் காண்கின்றனர்.25 இவர், நன்மையை அவர்களுக்கு ஏவுகிறார். தீமையை விட்டும் அவர்களைத் தடுக்கிறார். தூய்மையானவற்றை அவர்களுக்கு அனுமதிக்கிறார். தூய்மையற்றவைகளை அவர்களுக்குத் தடை செய்கிறார்.186 அவர்களுடைய சுமையையும், அவர்கள் மீது (பிணைக்கப்பட்டு) இருந்த விலங்குகளையும் அப்புறப்படுத்துகிறார். இவரை நம்பி, இவரைக் கண்ணியப்படுத்தி, இவருக்கு உதவியும் செய்து, இவருடன் அருளப்பட்ட ஒளியையும் பின்பற்றுவோரே வெற்றி பெற்றோர்.

158. "மனிதர்களே! நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதராவேன்.187&281 அவனுக்கே வானங்கள்507 மற்றும் பூமியின் ஆட்சி உரியது. அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அவன் உயிர்ப்பிக்கிறான்; மரணிக்கச் செய்கிறான்'' என்று (முஹம்மதே!) கூறுவீராக! அல்லாஹ்வையும், அவனது தூதராகிய எழுதப் படிக்கத்312 தெரியாத152 இந்த நபியையும் நம்புங்கள்! இவர் அல்லாஹ்வையும், அவனது வார்த்தைகளையும் நம்புகிறார். இவரைப் பின்பற்றுங்கள்! நேர்வழி பெறுவீர்கள்.

159. மூஸாவுடைய சமுதாயத்தில் உண்மையின்படி வழி காட்டுவோரும், அதன்படி நீதி செலுத்துவோரும் உள்ளனர்.

160. அவர்களைப் பன்னிரண்டு கிளைகளைக் கொண்ட சமுதாயங்களாகப் பிரித்தோம். மூஸாவின் சமுதாயத்தினர் அவரிடம் தண்ணீர் கேட்டபோது "உமது கைத்தடியால் இப்பாறையில் அடிப்பீராக!' என்று அவருக்கு அறிவித்தோம். உடனே அதில் பன்னிரண்டு நீரூற்றுக்கள் ஏற்பட்டன. ஒவ்வொரு கூட்டத்தினரும் தமக்குரிய நீர்த்துறையை அறிந்து கொண்டனர். அவர்கள் மீது மேகத்தை நிழலிடச் செய்தோம். அவர்களுக்கு மன்னு, ஸல்வா442 (எனும் உண)வை இறக்கினோம். "உங்களுக்கு நாம் வழங்கிய தூய்மையானவற்றை உண்ணுங்கள்!" (என்று கூறினோம்) அவர்கள் நமக்குத் தீங்கிழைக்கவில்லை. மாறாக தமக்கே தீங்கிழைத்தனர்.

161. "இவ்வூரில் குடியிருங்கள்! விரும்பியதை இதில் உண்ணுங்கள்! 'மன்னிப்பு (கேட்கிறோம்)' எனக் கூறுங்கள்! பணிந்து, வாசல்வழியாக நுழையுங்கள்! உங்கள் தவறுகளை உங்களுக்கு மன்னிப்போம். நன்மை செய்வோருக்கு அதிகமாக வழங்குவோம்'' என்று அவர்களுக்குக் கூறப்பட்டதை நினைவூட்டுவீராக!

162. அவர்களில் அநீதி இழைத்தோர், (மேற்கூறப்பட்ட சொல்லை) தமக்குக் கூறப்படாத சொல்லாக மாற்றிக் கொண்டார்கள். எனவே அவர்கள் அநீதி இழைத்ததால் அவர்கள் மீது வானத்திலிருந்து507 வேதனையை இறக்கினோம்.

163. கடல் ஓரத்தில் இருந்த ஊரைப் பற்றி அவர்களிடம் கேட்பீராக! அவர்கள் சனிக்கிழமையில் வரம்பு மீறியதை நினைவூட்டுவீராக! சனிக்கிழமையன்று மீன்கள் நீரின் மேல்மட்டத்தில் அவர்கள் முன்னே வந்தன. சனிக்கிழமை அல்லாத நாட்களில் அவர்களிடம் வருவதில்லை. அவர்கள் குற்றம் புரிந்து வந்ததால்23 இவ்வாறு அவர்களைச் சோதித்தோம்.484

164. "அல்லாஹ் அழிக்கப் போகின்ற அல்லது கடுமையாகத் தண்டிக்கப் போகின்ற கூட்டத்திற்கு ஏன் அறிவுரை கூறுகிறீர்கள்?'' என்று அவர்களில் ஒரு சாரார் கூறினர். அதற்கவர்கள் "உங்கள் இறைவனிடமிருந்து (விசாரணையின்போது) தப்பிப்பதற்காகவும், அவர்கள் (இறைவனை) அஞ்சுவோராக ஆவதற்காகவும் (அவர்களுக்கு அறிவுரை கூறுகிறோம்)'' எனக் கூறினர்.

165. கூறப்பட்ட அறிவுரையை அவர்கள் மறந்தபோது தீமையைத் தடுத்தவர்களை (மட்டும்) காப்பாற்றினோம். குற்றம் புரிந்து வந்ததால் அநீதி இழைத்தவர்களைக் கடுமையாகத் தண்டித்தோம்.188

166. தடுக்கப்பட்டதை அவர்கள் மீறியபோது "இழிந்த குரங்குகளாக ஆகிவிடுங்கள்!'' என்று அவர்களுக்குக் கூறினோம்.23

167. கியாமத் நாள்1 வரை அவர்களுக்குக் கொடிய வேதனை அளிப்போரையே அவர்களுக்கு எதிராக நியமிப்பதாக உமது இறைவன் பிரகடனம் செய்ததை நினைவூட்டுவீராக!99 உமது இறைவன் விரைவாகத் தண்டிப்பவன்; அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

168. அவர்களைப் பூமியில் பல கூட்டத்தினராகப் பிரித்தோம். அவர்களில் நல்லோரும் உள்ளனர். அவ்வாறு அல்லாதோரும் அவர்களில் உள்ளனர். அவர்கள் திருந்துவதற்காக அவர்களை நல்லவை மூலமும், தீயவை மூலமும் சோதித்தோம்.484

169. அவர்களுக்குப் பின்னர் மற்றொரு சமுதாயத்தினர் அவர்களுக்குப் பகரமாக46 வந்தனர். அவர்கள் வேதத்தை வாரிசு முறையில் பெற்றனர். (அதன் மூலம்) இந்த மட்டமான பொருளைப் பெற்றுக் கொள்கின்றனர். எங்களுக்கு மன்னிக்கப்படும் எனவும் கூறுகின்றனர். மீண்டும் அது போன்ற அற்பப் பொருள் அவர்களுக்குக் கிடைத்தால் அதையும் பெற்றுக் கொள்வார்கள். அல்லாஹ்வின் பெயரால் உண்மையைத் தவிர (எதையும்) கூறக்கூடாது என்று அவர்களிடம் வேதத்தில் (தெளிவுபடுத்தி) உறுதிமொழி எடுக்கப்படவில்லையா? அதில் உள்ளதை அவர்கள் படிக்கவில்லையா? (இறைவனை) அஞ்சுகின்ற மக்களுக்கு மறுமை வாழ்வே சிறந்தது. (இதை) நீங்கள் விளங்க வேண்டாமா?

170. யார் வேதத்தை உறுதியாகப் பிடித்துக் கொண்டு, தொழுகையையும் நிலைநாட்டுகிறார்களோ அத்தகைய சீர்படுத்திக் கொள்வோரின் கூலியை நாம் வீணாக்க மாட்டோம்.

171. "மலையை அவர்களுக்கு மேல் மேகத்தைப் போன்று நாம் உயர்த்தி, அது தம் மீது விழுந்து விடும் என்று அவர்கள் நினைத்தபோது "உங்களுக்கு நாம் வழங்கியதைப் பலமாகப் பிடியுங்கள்! அதில் உள்ளதை எண்ணிப் பாருங்கள்! (நம்மை) அஞ்சுவோராகலாம்'' (என்று கூறினோம்)22

172, 173. "ஆதமுடைய மக்களின்504 முதுகுகளிலிருந்து189 அவர்களின் சந்ததிகளை உமது இறைவன் வெளியாக்கி, அவர்களை அவர்களுக்கு எதிரான சாட்சிகளாக்கினான். நான் உங்கள் இறைவன் அல்லவா?'' (என்று கேட்டான்.) "ஆம்! (இதற்கு) சாட்சி கூறுகிறோம்'' என்று அவர்கள் கூறினர். "இதை விட்டும் நாங்கள் கவனமற்று இருந்து விட்டோம்'' என்றோ, "இதற்கு முன் எங்களின் முன்னோர்கள் இணை கற்பித்தனர்; நாங்கள் அவர்களுக்குப் பின் வந்த சந்ததிகளாக இருந்தோம்; அந்த வீணர்களின் செயலுக்காக எங்களை நீ அழிக்கிறாயா?'' என்றோ கியாமத் நாளில்1 நீங்கள் கூறாதிருப்பதற்காக (இவ்வாறு உறுதிமொழி எடுத்தோம்.)26

174. அவர்கள் திருந்துவதற்காக இவ்வாறே சான்றுகளைத் தெளிவுபடுத்துகிறோம்.

175. (முஹம்மதே!) அவர்களுக்கு ஒருவனைப் பற்றிய செய்தியைக் கூறுவீராக! அவனுக்கு நமது வசனங்களை வழங்கியிருந்தோம். அவன் அதிலிருந்து நழுவிக் கொண்டான். அவனை ஷைத்தான் தொடர்ந்தான். எனவே அவன் வழிகெட்டவனாகி விட்டான்.

176. நாம் நாடியிருந்தால் அதன் மூலம் அவனை உயர்த்தியிருப்போம். மாறாக அவன் இவ்வுலக வாழ்வை நோக்கிச் சாய்ந்து விட்டான். தனது மனோ இச்சையைப் பின்பற்றினான். அவனுக்குரிய உதாரணம் நாயாகும். அதை நீர் தாக்கினாலும் நாக்கைத் தொங்க விட்டுக் கொள்கிறது. அதை விட்டு விட்டாலும் நாக்கைத் தொங்க விட்டுக் கொள்கிறது. நமது வசனங்களைப் பொய்யெனக் கருதிய கூட்டத்தின் உதாரணம் இதுவே. அவர்கள் சிந்திப்பதற்காக இவ்வரலாறுகளைக் கூறுவீராக!

177. நமது வசனங்களைப் பொய்யெனக் கருதி, தமக்குத் தாமே தீங்கிழைத்த கூட்டத்தினரே மோசமான உதாரணமாவர்.

178. அல்லாஹ் யாரை நேர்வழியில் செலுத்துகிறானோ அவரே நேர்வழி பெற்றவர். அவன் யாரை வழிகேட்டில் விட்டு விடுகிறானோ அவனே நட்டமடைந்தவன்.

179. ஜின்களிலும், மனிதர்களிலும் நரகத்திற்காகவே பலரைப் படைத்துள்ளோம். அவர்களுக்கு உள்ளங்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்களுக்குக் கண்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் பார்ப்பதில்லை. அவர்களுக்குக் காதுகள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் கேட்பதில்லை. அவர்கள் கால்நடைகளைப் போன்றோர். இல்லை! அதை விட வழிகெட்டவர்கள். அவர்களே அலட்சியம் செய்தவர்கள்.

180. அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. அவற்றின் மூலமே அவனிடம் பிரார்த்தியுங்கள்! அவனது பெயர்களில் திரித்துக் கூறுவோரை விட்டு விடுங்கள்! அவர்கள் செய்து வந்ததற்காக அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.190

181.நாம் யாரைப் படைத்தோமோ அவர்களில் உண்மையான வழிகாட்டும் சமுதாயத்தினரும், அதைக் கொண்டே நீதி செலுத்துவோரும் உள்ளனர்.

182. நமது வசனங்களைப் பொய்யெனக் கருதுவோரை அவர்கள் அறியாத விதத்தில் விட்டுப் பிடிப்போம்.

183. அவர்களுக்கு அவகாசம் அளித்துள்ளேன். எனது திட்டம் உறுதியானது.

184. அவர்களின் தோழருக்கு (முஹம்மதுக்கு) எந்தப் பைத்தியமும் இல்லை468 என்பதை அவர்கள் சிந்தித்துப் பார்க்கவில்லையா? அவர் தெளிவான எச்சரிக்கை செய்பவரே.

185. வானங்கள்507 மற்றும் பூமியின் ஆட்சியையும், அவன் படைத்துள்ள ஏனைய பொருட்களையும், அவர்களின் காலக்கெடு அருகில் இருக்கக்கூடும் என்பதையும் அவர்கள் கவனிக்கவில்லையா? இதன் பிறகு எந்தச் செய்தியைத்தான் அவர்கள் நம்பப் போகிறார்கள்? 

186. அல்லாஹ் யாரை வழிகேட்டில் விட்டு விடுகிறானோ அவருக்கு வழிகாட்டுபவர் யாருமில்லை. அவர்களை அவர்களது அத்துமீறலில் தடுமாற விட்டு விடுவான்

187. "யுகமுடிவு நேரம்1 எப்போது வரும்?'' என்று (முஹம்மதே!) உம்மிடம் அவர்கள் கேட்கின்றனர். "இது பற்றிய ஞானம் என் இறைவனிடமே உள்ளது. அதற்குரிய நேரத்தில் அவனைத் தவிர யாரும் அதை வெளிப்படுத்த முடியாது. வானங்களிலும்,507 பூமியிலும் அது மகத்தானதாக அமையும். அது உங்களிடம் திடீரென்று தான் வரும்'' என்று கூறுவீராக! இது பற்றி நீர் நன்கு அறிந்தவர் போல் அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். "இது பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது'' என்று கூறுவீராக! எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிந்து கொள்வதில்லை.

188. "அல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ, தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. நான் மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மைகளை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனாகவும், நற்செய்தி கூறுபவனாகவுமே இருக்கிறேன்'' என்று (முஹம்மதே!) கூறுவீராக!

189. "அவனே உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்தான்.368 அவரிலிருந்து அவரது துணைவியை504 அவளிடம் அவர் மன அமைதி பெறுவதற்காகப் படைத்தான். அவன், அவளுடன் இணைந்தபோது அவள் இலேசான சுமையைச் சுமந்தாள். அதனுடன் அவள் நடமாடினாள். அவள் (வயிறு) கனத்தபோது (உறுப்புக்களில்) குறைகளற்றவனை நீ எங்களுக்கு வழங்கினால் நன்றி செலுத்துவோராவோம்'' என்று அவ்விருவரும் தமது இறைவனாகிய அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தனர்.

190. அவ்விருவருக்கும் (உறுப்புக்களில்) குறைகளற்றவனை அவன் கொடுத்தபோது அவர்களுக்கு அவன் கொடுத்தவற்றில் அல்லாஹ்வுக்குப் பங்காளிகளை ஏற்படுத்தி விட்டனர். அவர்கள் இணைகற்பிப்பதை விட்டும் அல்லாஹ் தூரமானவன்.191

191. எதையும் படைக்காதவற்றையா அவர்கள் (இறைவனுக்கு) இணைகற்பிக்கின்றனர்? அவர்களே படைக்கப்படுகின்றனர்.

192. இவர்களுக்கு உதவிட அவர்களுக்கு இயலாது. தமக்கே கூட அவர்கள் உதவிக் கொள்ள முடியாது.

193. (எதையும்) தெரிவிக்க அவர்களை நீங்கள் அழைத்தால் அவர்கள் உங்களைப் பின்பற்ற மாட்டார்கள். நீங்கள் அவர்களை அழைப்பதும், மௌனமாக இருப்பதும் உங்களைப் பொறுத்த வரை சமமானதே!

194. அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்!

195. அவர்களுக்கு நடக்கின்ற கால்கள் உள்ளனவா? அல்லது பிடிக்கின்ற கைகள் உள்ளனவா? அல்லது பார்க்கின்ற கண்கள் உள்ளனவா? அல்லது கேட்கின்ற காதுகள் உள்ளனவா? "உங்கள் தெய்வங்களை அழைத்து எனக்கெதிராகச் சூழ்ச்சி செய்யுங்கள்! எனக்கு எந்த அவகாசமும் தராதீர்கள்!'' என்று கூறுவீராக!

196. "இவ்வேதத்தை அருளிய அல்லாஹ்வே எனது பொறுப்பாளன். அவனே நல்லோருக்குப் பொறுப்பேற்றுக் கொள்கிறான்'' (என்றும் கூறுவீராக!)

197. அவனையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவிட இயலாது. தமக்கே அவர்கள் உதவ முடியாது.

198. (எதையும்) தெரிவிக்க நீங்கள் அவர்களை அழைத்தால் அவர்கள் செவியுற மாட்டார்கள். அவர்கள் உம்மைப் பார்ப்பது போல் நீர் காண்பீர்! (ஆனால்) அவர்கள் பார்க்க மாட்டார்கள்.

199. பெருந்தன்மையை மேற்கொள்வீராக! நன்மையை ஏவுவீராக! அறிவீனர்களை அலட்சியம் செய்வீராக!

200. ஷைத்தானின் தாக்கம் உமக்கு ஏற்பட்டால் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக! அவன் செவியுறுபவன்;488 அறிந்தவன்.

201. (இறைவனை) அஞ்சுவோருக்கு ஷைத்தானின் தாக்கம் ஏற்பட்டால் உடனே சுதாரித்துக் கொள்வார்கள்! அப்போது இவர்கள் விழித்துக் கொள்வார்கள்.

202. அவர்கள் (ஷைத்தான்கள்), தமது சகோதரர்களை வழிகேட்டில் இழுத்துச் செல்வார்கள். பின்னர் (அதில்) எந்தக் குறையும் வைக்க மாட்டார்கள்.

203. (முஹம்மதே!) அவர்களிடம் சான்றை நீர் கொண்டு வராவிட்டால் "அதைக் கொண்டு வரமாட்டீரா?'' என்று அவர்கள் கேட்கின்றனர். "என் இறைவனிடமிருந்து எனக்கு அறிவிக்கப்படுவதையே பின்பற்றுகிறேன். இது உங்கள் இறைவனிடமிருந்து வந்த தெளிவாகவும், நேர்வழியாகவும், நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு அருளாகவும் உள்ளது'' என்று கூறுவீராக! 

204. குர்ஆன் ஓதப்படும்போது அதைச் செவிமடுங்கள்! வாய் மூடுங்கள்! நீங்கள் அருள் செய்யப்படுவீர்கள்!

205. உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும், சொல்லில் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராக ஆகி விடாதீர்!192

206. உமது இறைவனிடம் இருப்போர் (வானவர்கள்) அவனுக்கு அடிமைத்தனம் செய்வதைப் புறக்கணிக்க மாட்டார்கள். அவனைத் துதிக்கின்றனர். அவனுக்கே ஸஜ்தாச் செய்கின்றனர்.396To read this Chapter in English click here.

(14 வது பதிப்பின்படி திருத்தி அமைக்கப்பட்டது)

December 1, 2009, 1:13 AM

அத்தியாயம் : 8

அத்தியாயம் : 8
அல் அன்ஃபால் - போர்க்களத்தில் எதிரிகளிடம் கைப்பற்றப்படும் பொருட்கள்

மொத்த வசனங்கள் : 75
எதிரிகளிடம் போரில் கைப்பற்றப்படுபவை அன்ஃபால் எனப்படுகிறது. இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அன்ஃபால் என்ற சொல் இடம் பெற்றுள்ளதால் இந்த அத்தியாயத்திற்கு இப்பெயர் வந்தது.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

1. போர்க்களத்தில் எதிரிகளிடம் கைப்பற்றப்படும் பொருட்களைப் பற்றி (முஹம்மதே!) உம்மிடம் அவர்கள் கேட்கின்றனர். "போர்க்களத்தில் எதிரிகளிடம் கைப்பற்றப்படும் பொருட்கள் (பற்றி முடிவு செய்யும் அதிகாரம்) அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் உரியது'' என்று கூறுவீராக! எனவே அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உங்களுக்கிடையே உள்ள உறவுகளைச் சீர்படுத்திக் கொள்ளுங்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! 

2. நம்பிக்கை கொண்டோர் யார் எனில் அல்லாஹ்வைப் பற்றிக் கூறப்பட்டால் அவர்களின் உள்ளங்கள் நடுங்கும். அவனது வசனங்கள் அவர்களுக்குக் கூறப்பட்டால் அது அவர்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தும். அவர்கள் தமது இறைவனையே சார்ந்திருப்பார்கள்.

3. அவர்கள் தொழுகையை நிலைநாட்டுவார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுவார்கள்.

4. அவர்களே உண்மையான நம்பிக்கை கொண்டவர்கள். அவர்களுக்கு, அவர்களின் இறைவனிடம் பல பதவிகளும், மன்னிப்பும், கண்ணியமான உணவும் உண்டு.

5. (முஹம்மதே!) உமது இறைவன் உமது வீட்டிலிருந்து உண்மையுடன் உம்மை வெளியேற்றிய (போது வெறுத்த)து போலவே, நம்பிக்கை கொண்டோரில் ஒரு சாரார் (போரை) வெறுத்தனர்.

6. உண்மை தெளிவாகத் தெரிந்த பின்பு உம்மிடம் எதிர்வாதம் செய்கின்றனர். பார்த்துக் கொண்டிருக்கும் போதே மரணத்திற்கு இழுத்துச் செல்லப்படுபவர்களைப் போல் அவர்கள் உள்ளனர்.

7. "எதிரிகளின் இரண்டு கூட்டத்தினரில் ஒன்று உங்களுக்கு (சாதகமாக இருக்கும்)'' என்று அல்லாஹ் உங்களுக்கு வாக்களித்ததை எண்ணிப் பாருங்கள்!358 ஆயுதம் தரிக்காத (வியாபாரக்) கூட்டம் உங்களுக்கு வேண்டும் என்று நீங்கள் விரும்புகின்றீர்கள். அல்லாஹ் தனது கட்டளைகள்155 மூலம் உண்மையை நிலைநாட்டவும், (தன்னை) மறுப்போரை வேரறுக்கவும் விரும்புகிறான்.196

8. குற்றவாளிகள் வெறுத்தபோதும் உண்மையை நிலைநாட்டி, பொய்யை அழித்திட அவன் நாடுகிறான்.

9. நீங்கள் உங்கள் இறைவனிடம் உதவி தேடியபோது "உங்களுக்குப் பின்னால் அணிவகுக்கும் ஆயிரம் வானவர்களின் மூலம் நான் உங்களுக்கு உதவுபவன்'' என்று உங்களுக்குப் பதிலளித்தான்.

10. நற்செய்தியாகவும், உங்கள் உள்ளங்கள் இதன் மூலம் அமைதி பெற வேண்டும் என்பதற்காகவுமே இதை இறைவன் ஏற்படுத்தினான். உதவி அல்லாஹ்விடமிருந்தே உள்ளது. அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.

11. உங்களுக்குச் சிறு தூக்கத்தை அவன் ஏற்படுத்தியதை எண்ணிப் பாருங்கள்! அது அவனிடமிருந்து கிடைத்த நிம்மதியாக இருந்தது. தண்ணீர் மூலம் உங்களைத் தூய்மைப்படுத்திடவும், உங்களை விட்டும் ஷைத்தானின் அசுத்தத்தைப் போக்கிடவும், உங்கள் உள்ளங்களைப் பலப்படுத்தவும், உங்கள் பாதங்களை அதன் மூலம் உறுதிப்படுத்தவுமே வானத்திலிருந்து507 தண்ணீரை உங்கள் மீது இறக்கினான். 

12. "நான் உங்களுடன் இருக்கிறேன். நம்பிக்கை கொண்டோரைப் பலப்படுத்துங்கள்! (என்னை) மறுப்போரின் உள்ளங்களில் பயத்தை ஏற்படுத்துவேன். எனவே கழுத்துகளுக்கு மேலே வெட்டுங்கள்! அவர்களின் ஒவ்வொரு இணைப்பையும் வெட்டுங்கள்!'' என்று (முஹம்மதே!) உமது இறைவன் வானவர்களுக்கு அறிவித்ததை நினைவூட்டுவீராக! 

13. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் அவர்கள் மாறுசெய்தார்கள் என்பதே இதற்குக் காரணம். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறுசெய்வோரை அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்.

14. இதோ, இதனை அனுபவியுங்கள்! (ஏகஇறைவனை) மறுப்போருக்கு நரக வேதனை உண்டு.

15. நம்பிக்கை கொண்டோரே! முன்னேறி வரும் (ஏகஇறைவனை) மறுப்போரை நீங்கள் சந்திக்கும்போது அவர்களுக்குப் புறங்காட்டி ஓடாதீர்கள்!

16. அந்நாளில் போரிடுவதற்காக பதுங்கித் தாக்குபவராகவோ மற்றொரு அணியுடன் சேர்ந்து கொள்பவராகவோ தவிர அவர்களுக்குப் புறங்காட்டி ஓடுபவர் அல்லாஹ்வின் கோபத்துடன் திரும்புகிறார். அவரது தங்குமிடம் நரகம். அது மிகக் கெட்ட தங்குமிடம்.

17. அவர்களை நீங்கள் கொல்லவில்லை. மாறாக அல்லாஹ்வே அவர்களைக் கொன்றான். (முஹம்மதே!) நீர் எறிந்தபோது (உண்மையில்) நீர் எறியவில்லை. மாறாக அல்லாஹ்வே எறிந்தான். நம்பிக்கை கொண்டோருக்கு அழகிய முறையில் பரிசளிப்பதற்காக இவ்வாறு செய்தான். அல்லாஹ் செவியுறுபவன்;488 அறிந்தவன்.193

18. (தன்னை) மறுப்போரின் சூழ்ச்சியை அல்லாஹ் பலவீனப்படுத்துபவன் என்பதும் இதற்குக் காரணம்.

19. (ஏகஇறைவனை) மறுப்போரே! நீங்கள் தீர்ப்பைத் தேடுவீர்களானால் இதோ தீர்ப்பு உங்களிடம் வந்து விட்டது. நீங்கள் விலகிக் கொண்டீர்களானால் அது உங்களுக்குச் சிறந்தது. நீங்கள் மீண்டும் போரிட வந்தால் நாமும் வருவோம். உங்கள் கூட்டம் அதிகமாக இருந்தபோதும் அது உங்களுக்குச் சிறிதளவும் உதவாது. நம்பிக்கை கொண்டோருடன் அல்லாஹ் இருக்கிறான்.

20. நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் செவிமடுத்துக் கொண்டே அவரைப் புறக்கணிக்காதீர்கள்!

21. செவியுறாமலே 'செவியுற்றோம்' என்று கூறியோரைப் போல் ஆகி விடாதீர்கள்!

22. (உண்மையை) விளங்காத செவிடர்களும், ஊமைகளுமே அல்லாஹ்விடம் மிகவும் கெட்ட உயிரினமாவர்.

23. அவர்களிடம் நன்மை இருப்பதை அல்லாஹ் அறிந்திருந்தால்194 அவர்களைச் செவியேற்கச் செய்திருப்பான். அவர்களை அவன் செவியேற்கச் செய்திருந்தாலும் அதை அலட்சியம் செய்து புறக்கணித்திருப்பார்கள்.

24. நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குப் பதிலளியுங்கள்! உங்களுக்கு வாழ்வளிக்கும் காரியத்திற்கு இத்தூதர் (முஹம்மத்) உங்களை அழைக்கும்போது அவருக்கும் (பதிலளியுங்கள்.) ஒரு மனிதனுக்கும், அவனது உள்ளத்திற்கும் இடையே அல்லாஹ் இருக்கிறான் என்பதையும், அவனிடமே ஒன்று திரட்டப்படுவீர்கள் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்!

25. ஒரு சோதனையை அஞ்சுங்கள்! அது உங்களில் அநீதி இழைத்தவர்களை மட்டுமே பிடிக்கும் என்பதல்ல.409 அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!

26. மக்கள் உங்களை வாரிச் சென்று விடுவார்களோ என அஞ்சிக் கொண்டும், குறைந்த எண்ணிக்கையிலும், இப்பூமியில் பலவீனர்களாவும் நீங்கள் இருந்ததை எண்ணிப் பாருங்கள்! அவன் உங்களுக்குப் புகலிடம் அளித்தான். தனது உதவியால் உங்களைப் பலப்படுத்தினான். நீங்கள் நன்றி செலுத்துவதற்காக தூய்மையானவற்றை உங்களுக்கு உணவாக அளித்தான்.

27. நம்பிக்கை கொண்டோரே! அறிந்து கொண்டே அல்லாஹ்வுக்கும் இத்தூதருக்கும் மோசடி செய்யாதீர்கள்! உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்டவற்றிலும் மோசடி செய்யாதீர்கள்!

28. உங்களின் மக்கட்செல்வமும், பொருட்செல்வமும் சோதனை என்பதையும், அல்லாஹ்விடம் மகத்தான கூலி உண்டு என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்!

29. நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்சினால் உங்களுக்குத் தெளிவை அவன் வழங்குவான். உங்கள் தீமைகளை உங்களை விட்டு நீக்கி உங்களை மன்னிப்பான். அல்லாஹ் மகத்தான அருளுடையவன்.

30. (முஹம்மதே!) உம்மைப் பிடித்து வைத்துக் கொள்ளவோ, உம்மைக் கொலை செய்யவோ, உம்மை வெளியேற்றவோ (ஏகஇறைவனை) மறுப்போர் சூழ்ச்சி செய்ததை எண்ணிப் பார்ப்பீராக! அவர்களும் சூழ்ச்சி செய்கின்றனர். அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்கிறான்6. சூழ்ச்சி செய்வோரில் அல்லாஹ் சிறந்தவன்.

31. அவர்களுக்கு நமது வசனங்கள் கூறப்பட்டால் 'செவியுற்றோம்' என்றும் 'நாங்கள் நினைத்தால் இதே போல கூறியிருப்போம். இது முன்னோர்களின் கட்டுக் கதைகளேயன்றி வேறில்லை' என்றும் கூறுகின்றனர்.

32. "அல்லாஹ்வே! இது உன்னிடமிருந்து வந்த உண்மையாக இருந்தால் எங்கள் மீது வானத்திலிருந்து507 கல்மழையைப் பொழியச் செய்வாயாக! அல்லது துன்புறுத்தும் வேதனையைத் தருவாயாக!'' என்று அவர்கள் கூறியதை எண்ணிப் பாருங்கள்!

33. (முஹம்மதே!) நீர் அவர்களுடன் இருக்கும்போது அல்லாஹ் அவர்களைத் தண்டிப்பவனாக இல்லை. அவர்கள் பாவமன்னிப்புத் தேடிக் கொண்டிருக்கும்போதும் அவர்களை அல்லாஹ் தண்டிப்பவனாக இல்லை.

34. மஸ்ஜிதுல் ஹராமுக்கு அவர்கள் நிர்வாகிகளாக (தகுதி) இல்லாத நிலையிலும், (மக்களை) அவர்கள் தடுத்துக் கொண்டிருக்கும்போது அல்லாஹ் அவர்களை எவ்வாறு தண்டிக்காமலிருப்பான்? (இறைவனை) அஞ்சுவோரைத் தவிர வேறெவரும் அதன் நிர்வாகிகளாக இருக்க முடியாது. எனினும் அவர்களில் அதிகமானோர் (இதை) அறிய மாட்டார்கள்.

35. சீட்டியடிப்பதும், கை தட்டுவதும் தவிர (வேறெதுவும்) அந்த ஆலயத்தில்33 அவர்களின் தொழுகையாக இருக்கவில்லை. "நீங்கள் (ஏகஇறைவனை) மறுத்துக் கொண்டிருந்த காரணத்தினால் வேதனையை அனுபவியுங்கள்!'' (என்று கூறப்படும்)

36. (ஏகஇறைவனை) மறுப்போர் அல்லாஹ்வின் பாதையை விட்டு (மக்களை) தடுப்பதற்காக தமது செல்வங்களைச் செலவிடுகின்றனர். இனியும் செலவிடுவர். அதுவே அவர்களுக்குக் கை சேதமாக அமையும். பின்னர், தோல்வியடைவார்கள். (ஏகஇறைவனை) மறுத்தோர் நரகத்தை நோக்கி ஒன்று திரட்டப்படுவார்கள்.

37. நல்லவரிலிருந்து கெட்டவரைப் பிரித்து, கெட்டவரில் ஒருவர் மீது மற்றவரைப் போட்டு, அனைவரையும் குவியலாக்கி நரகத்தில் போடவே (அவர்கள் திரட்டப்படுவார்கள்). அவர்களே நட்டமடைந்தவர்கள்.

38. (ஏகஇறைவனை) மறுப்போர் விலகிக் கொள்வார்களானால் முன் நடந்தவை அவர்களுக்கு மன்னிக்கப்படும். மீண்டும் தொடர்ந்தார்களானால் "முன்னோர் (விஷயத்தில் கடைப்பிடித்த) வழிமுறை ஏற்கனவே சென்று விட்டது'' என்று கூறுவீராக!

39. கலகம் இல்லாதொழிந்து அதிகாரம்54 முழுவதும் அல்லாஹ்வுக்காக ஆகும் வரை அவர்களுடன் போரிடுங்கள்!53 அவர்கள் விலகிக் கொள்வார்களானால் அல்லாஹ் அவர்கள் செய்பவற்றைப் பார்ப்பவன்.488

40. அவர்கள் புறக்கணித்தால் அல்லாஹ் உங்களின் பாதுகாவலன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! அவன் சிறந்த பாதுகாவலன். சிறந்த உதவியாளன்.

41. நீங்கள் அல்லாஹ்வை நம்பியவர்களாக இருந்தால், இரு அணிகள் சந்தித்துக் கொண்ட நாளில், வேறுபடுத்திக் காட்டிய நாளில் நமது அடியார் மீது நாம் அருளியதையும் (நம்பியவர்களாக இருந்தால்), போர்க்களத்தில் எதிரிகளிடம் கைப்பற்றும் பொருட்களில் ஐந்தில் ஒரு பாகம் அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும், (அவரது) உறவினருக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், நாடோடிகளுக்கும்206 உரியது என்பதை அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.195

42. (பத்ருப் போரின்போது மதீனாவுக்கு) அருகில் உள்ள பள்ளத்தாக்கில் நீங்களும், தூரமான பள்ளத்தாக்கில் அவர்களும், வியாபாரக் கூட்டத்தினர் உங்களுக்குக் கீழ்ப் புறமும் இருந்ததை எண்ணிப் பாருங்கள்! நீங்கள் (ஏற்கனவே) திட்டமிட்டிருந்தால் அத்திட்டத்தில் முரண்பட்டிருப்பீர்கள். செய்யப்பட வேண்டிய காரியத்தைச் செய்து முடிப்பதற்காகவும், அழிந்தவர் தக்க காரணத்துடன் அழிவதற்காகவும், வாழ்பவர் தக்க காரணத்துடன் வாழ்வதற்காகவும் (இறைவன் இந்நிலையை ஏற்படுத்தினான்). அல்லாஹ் செவியுறுபவன்;488 அறிந்தவன்.196

43. (முஹம்மதே!) உமது கனவில்122 அவர்களை அல்லாஹ் குறைந்த எண்ணிக்கையினராகக் காட்டியதை எண்ணிப் பாரும்!. அவர்களை அதிக எண்ணிக்கையினராக அல்லாஹ் உமக்குக் காட்டியிருந்தால் தைரியம் இழந்திருப்பீர்கள். இவ்விஷயத்தில் முரண்பட்டிருப்பீர்கள். எனினும் அல்லாஹ் காப்பாற்றினான். உள்ளங்களில் உள்ளவற்றை அவன் அறிந்தவன்.

44. நீங்கள் (களத்தில்) சந்தித்துக் கொண்டபோது உங்கள் கண்களுக்கு அவர்களைக் குறைந்த எண்ணிக்கையினராகவும், அவர்களின் கண்களுக்கு உங்களைக் குறைந்த எண்ணிக்கையினராகவும் காட்டியதை எண்ணிப் பாருங்கள்! செய்யப்பட வேண்டிய காரியத்தை அல்லாஹ் செய்வதற்காக (இவ்வாறு காட்டினான்).466 காரியங்கள் அல்லாஹ்விடமே கொண்டு செல்லப்படும்.

45. நம்பிக்கை கொண்டோரே! (களத்தில்) ஓர் அணியைச் சந்தித்தால் உறுதியாக நில்லுங்கள்! அல்லாஹ்வை அதிகம் நினையுங்கள்! நீங்கள் வெற்றியடைவீர்கள்.

46. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! முரண்படாதீர்கள்! (அவ்வாறு செய்தால்) கோழைகளாகி விடுவீர்கள்! உங்களின் பலம் அழிந்து விடும். சகித்துக் கொள்ளுங்கள்! சகித்துக் கொள்வோருடன் அல்லாஹ் இருக்கிறான்.

47. தமது இல்லங்களிலிருந்து பெருமைக்காகவும், மக்களுக்குக் காட்டவும் புறப்பட்டோரைப் போன்றும், அல்லாஹ்வின் பாதையை விட்டு (மக்களைத்) தடுத்தவர்களைப் போன்றும் ஆகி விடாதீர்கள்! அவர்கள் செய்பவற்றை அல்லாஹ் முழுமையாக அறிபவன்.

48. ஷைத்தான் அவர்களின் செயல்களை அவர்களுக்கு அழகானதாகக் காட்டியதை எண்ணிப் பாருங்கள்! "இன்று மனிதர்களில் உங்களை வெல்ல யாருமில்லை; நான் உங்களுக்கு அருகில் இருக்கிறேன்'' எனவும் கூறினான். இரு அணிகளும் நேருக்குநேர் சந்தித்தபோது பின்வாங்கினான். "உங்களை விட்டும் நான் விலகிக் கொண்டவன். நீங்கள் பார்க்காததை நான் பார்க்கிறேன். நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன். அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்'' என்று கூறினான். 

49. "அவர்களை அவர்களின் மார்க்கம் ஏமாற்றி விட்டது'' என்று நயவஞ்சகர்களும், உள்ளங்களில் நோய் உள்ளவர்களும் (உங்களைப் பற்றி) கூறியதை எண்ணிப் பாருங்கள்! யார் அல்லாஹ்வையே சார்ந்திருக்கிறாரோ (அவர் வெற்றி பெறுவார். ஏனெனில்) அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.

50. (ஏகஇறைவனை) மறுப்போரின் முகங்களிலும், முதுகுகளிலும் வானவர்கள் அடித்து அவர்களைக் கைப்பற்றும்போது,165 "சுட்டெரிக்கும் வேதனையை அனுபவியுங்கள்!''166 என்று கூறுவதை நீர் பார்க்க வேண்டுமே!

51. நீங்கள் செய்த வினையே இதற்குக் காரணம். அடியார்களுக்கு அல்லாஹ் அநீதி இழைப்பவன் அல்லன்.

52. ஃபிர்அவ்னின் ஆட்களுக்கும், அவர்களுக்கு முன் சென்றோருக்கும் ஏற்பட்ட கதியைப் போலவே (இவர்களுக்கும் ஏற்படும்). அவர்கள் அல்லாஹ்வின் சான்றுகளை மறுத்தனர். அவர்களது பாவங்களின் காரணமாக அவர்களை அல்லாஹ் தண்டித்தான். அல்லாஹ் வலிமை மிக்கவன்; கடுமையாகத் தண்டிப்பவன்.

53. எந்த ஒரு சமுதாயமும் தம்மிடம் உள்ளதை மாற்றிக் கொள்ளாத வரை அவர்களுக்கு வழங்கிய அருளை அல்லாஹ் மாற்றுவதில்லை என்பதே இதற்குக் காரணம். அல்லாஹ் செவியுறுபவன்;488 அறிந்தவன்.

54. ஃபிர்அவ்னின் ஆட்களுக்கும், அவர்களுக்கு முன் சென்றோருக்கும் ஏற்பட்ட கதியைப் போலவே (இவர்களுக்கும் ஏற்படும்). அவர்கள் தமது இறைவனின் சான்றுகளைப் பொய்யெனக் கருதினர். அவர்களின் பாவங்கள் காரணமாக அவர்களை அழித்தோம். ஃபிர்அவ்னுடைய ஆட்களை மூழ்கடித்தோம். அனைவரும் அநீதி இழைத்தனர்.

55. (ஏகஇறைவனை) மறுப்பவர்கள் தான் உயிரினங்களில் அல்லாஹ்விடம் மிகவும் கெட்டவர்கள். அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.

56. (முஹம்மதே!) அவர்களிடம் நீர் உடன்படிக்கை செய்தீர்! ஒவ்வொரு தடவையும் அவர்கள் தமது உடன்படிக்கையை முறிக்கின்றனர். அவர்கள் அஞ்சுவதில்லை.

57. எனவே போரில் அவர்களை நீர் வெற்றி கொண்டால் அவர்களுக்குப் பின்னால் உள்ளவர்களுடன் அவர்களையும் ஓட ஓட விரட்டுவீராக! அப்போது தான் அவர்கள் பாடம் கற்பார்கள்.

58. ஒரு சமுதாயத்தவர் மோசடி செய்வார்கள் என்று நீர் அஞ்சினால் அவர்களிடம் (செய்த உடன்படிக்கையை) நீரும் சமமாக முறிப்பீராக! மோசடி செய்வோரை அல்லாஹ் விரும்ப மாட்டான்.

59. (ஏகஇறைவனை) மறுப்போர், தாம் வென்று விட்டதாக நினைக்க வேண்டாம். அவர்கள் வெல்ல மாட்டார்கள்.

60. உங்களால் இயன்ற அளவு பலத்தையும், போர்க்குதிரைகளையும் அவர்களுக்கு எதிராகத் தயாரித்துக் கொள்ளுங்கள்!359 அதன் மூலம் அல்லாஹ்வின் எதிரிகளையும், உங்களின் எதிரிகளையும் அவர்கள் அல்லாத மற்றவர்களையும் நீங்கள் அச்சமடையச் செய்யலாம். அவர்களை நீங்கள் அறிய மாட்டீர்கள்!53 அல்லாஹ்வே அவர்களை அறிவான். அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அது உங்களுக்கு முழுமையாக வழங்கப்படும். நீங்கள் அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள்.197

61. அவர்கள் சமாதானத்தை நோக்கிச் சாய்ந்தால் நீரும் அதை நோக்கிச் சாய்வீராக! அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! அவனே செவியுறுபவன்;488 அறிந்தவன்.

62. (முஹம்மதே!) அவர்கள் உமக்குத் துரோகம் செய்ய நாடினால் அல்லாஹ்வே உமக்குப் போதுமானவன். அவனே தனது உதவியின் மூலமும், நம்பிக்கை கொண்டோர் மூலமும் உம்மைப் பலப்படுத்தினான்.

63. அவர்களின் உள்ளங்களிடையே அவன் பிணைப்பை ஏற்படுத்தினான். பூமியில் உள்ள அனைத்தையும் நீர் செலவிட்டாலும் அவர்களின் உள்ளங்களிடையே உம்மால் பிணைப்பை