22:40 வசனத்தில் மனிதன் அல்லாஹ்விற்க்கு உதவி செய்வதாக வருகிறது. மனிதன் எப்படி அல்லாஹ்விற்கு உதவி செய்ய முடியும்?

? அல்குர்ஆன் 22வது அத்தியாயம் 40வது வசனத்தில் தனக்கு உதவி செய்வோருக்கு அல்லாஹ் உதவி செய்வான் என்று கூறப்பட்டுள்ளது. மனிதன் அல்லாஹ்வுக்கு எப்படி உதவி செய்ய முடியும்?

பி.இதாயத்துல்லாஹ், மதுரவாயல்.

”எங்கள் இறைவன் அல்லாஹ்வே” என்று அவர்கள் கூறியதற்காகவே நியாயமின்றி அவர்களின் இல்லங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை அல்லாஹ் தடுத்திருக்காவிட்டால் மடங்களும், ஆலயங்களும், வழிபாட்டுத்தலங்களும், அல்லாஹ்வின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும். தனக்கு உதவி செய்வோருக்கு அல்லாஹ்வும் உதவுகிறான். அல்லாஹ் வலிமையுள்ளவன்; மிகைத்தவன்.

 அல்குர்ஆன் 22 – 40

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவினால் அவன் உங்களுக்கு உதவுவான். உங்கள் பாதங்களை அவன் உறுதிப்படுத்துவான்.

அல்குர்ஆன் 47 – 7

இந்த வசனங்களுக்கும் முந்தைய வசனங்களை நாம் எடுத்துப் பார்த்தால் அதில் போர் சம்பந்தப்பட்ட செய்திகள் இடம் பெற்றுள்ளன. இதை வைத்துப் பார்க்கும் போது,அல்லாஹ்விற்கு உதவுதல் என்பது, அவனது பாதையில் போர் செய்தல் என்ற கருத்திலேயே திருக்குர்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ளதை அறிய முடிகின்றது.

அவனது மார்க்கத்தை நிலைநாட்டுவதற்காக, நன்மையை ஏவி, தீமையைத் தடுப்பதற்காக நாம் செய்யும் முயற்சிகள் அனைத்துமே அல்லாஹ்வுக்கு உதவுதல் என்பதில் அடங்குகின்றது.

அப்படியானால் அல்லாஹ்விற்கு நமது உதவி தேவைப்படுகின்றதா? அவன் நினைத்தால் இந்த உதவி இல்லாமலேயே தனது மார்க்கத்தை மேலோங்கச் செய்ய முடியும் அல்லவா? என்ற சந்தேகம் எழுகின்றது.

மனிதனுக்கு முன்னரும், பின்னரும் தொடர்ந்து வருவோர் (வானவர்) உள்ளனர்.அல்லாஹ்வின் கட்டளைப்படி அவனைக் காப்பாற்றுகின்றனர். தம்மிடம் உள்ளதை ஒரு சமுதாயம் மாற்றிக் கொள்ளாத வரை அச்சமுதாயத்தில் உள்ளதை அல்லாஹ் மாற்றமாட்டான்.

பார்க்க ; அல்குர்ஆன் 13 – 11

 எந்த ஒரு சமுதாயமாக இருந்தாலும் அவர்கள் தாங்களாகவே தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று இறைவன் கூறுகின்றான். இந்தச் சமுதாயத்தில் ஏற்படும் தீமைகளை, நாம் தான் களைய வேண்டும். இது தான் இறைவனுடைய நியதி.

அல்லாஹ்வுடைய மார்க்கத்தை நிலைநாட்டுவதற்காக அல்லாஹ்வே நேரடியாக மலக்குகளை அனுப்பி வைத்து இந்த வேலைகளைச் செய்வதில்லை. இந்தப் பணியை நாம் செய்யும் போது அல்லாஹ் வானவர்கள் மூலமாக நமக்கு உதவி செய்கின்றான். எனவே அல்லாஹ்விற்கு உதவுதல் என்பதன் பொருள் நமக்கு நாமே உதவிக் கொள்கிறோமே தவிர அவனுக்கு நேரடியாக நாம் உதவுகின்றோம் என்பதல்ல. அவன் எந்த வித தேவையும் அற்றவன் என்பது தான் இஸ்லாத்தின் அடிப்படை என்பதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

December 21, 2014, 7:04 AM

திருக்குர்ஆன் ஒட்டுமொத்த மனித இனத்திற்கும் அருளப்பட்டதா?

? மார்ச் இதழில் கேள்வி பதில் பகுதியில் திருக்குர்ஆன் ஒட்டு மொத்த மனித இனத்திற்கும் அருளப்படவில்லை, நபி (ஸல்) அவர்களின் உம்மத்திற்கு மட்டுமே உரிய வேதம் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால் அல்லாஹ் 6:90 வசனத்தில், "இது உலக மக்கள் அனைவருக்கும் வேதம்' என்று கூறுவதற்கு இது முரணாக உள்ளதே!

ஏ. அப்துல் மஜீது, திட்டச்சேரி

நாம் ஒட்டு மொத்த மனித இனத்திற்கும் திருக்குர்ஆன் அருளப்படவில்லை என்று கூறியதன் கருத்தை நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டு இவ்வாறு கேள்வி எழுப்புகின்றீர்கள். திருக்குர்ஆன் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான வேதம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் ஒட்டு மொத்த மனித இனம் என்று நாம் குறிப்பிட்டது ஆதம் (அலை) அவர்கள் முதல் கியாமத் நாளின் கடைசி மனிதன் வரை அனைவரையும் குறிக்கும் சொற்றொடராகும். அதே இதழில் இந்தக் கருத்துக்கு முந்தைய பாராவில் படைப்பைப் பற்றி குறிப்பிட்டு விட்டு இவ்வாறு எழுதியிருப்பதில் இருந்து இதைப் புரிந்து கொள்ளலாம்.

ஆதம் (அலை) முதல் நபி (ஸல்) அவர்களுக்கு முன்னர் வரையுள்ள மக்களுக்கு அருளப்பட்ட வேதம் திருக்குர்ஆன் அல்ல! பல்வேறு நபிமார்களுக்கு பல்வேறு வேதங்கள் அருளப்பட்டன என்பதை யாரும் மறுக்க முடியாது.

நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு கியாமத் நாள் வரையுள்ள உலக மக்கள் அனைவருக்கும் தான் திருக்குர்ஆன் வேதமாகும். இதைத் தான் நபி (ஸல்) அவர்களின் உம்மத் என்று நாம் குறிப்பிட்டிருந்தோம். 6:90 வசனத்தின் கருத்தும் இதுவே! இந்த வசனத்தின் அடிப்படையில் ஆதம் நபிக்கோ, அல்லது மூஸா நபிக்கோ வேதம் திருக்குர்ஆன் என்று கூற முடியுமா?என்பதைச் சிந்தித்தால் நாம் கூறியதன் கருத்தை விளங்க முடியும்.

December 20, 2014, 6:00 AM

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top